வெள்ளி, 8 மே, 2015

கக்கன் மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் 30வருடங்களாக இருக்கிறார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


காமராசர் ஆட்சியில் நேர்மையான அமைச்சராக இருந்தவர் என்று இன்றும் மக்களால் புகழப்பெறும் கக்கன் அவர்களின் மகனுக்கே இந்தக் கதியா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது!

எனது வாட்ஸ்-அப் குழுவொன்றில் வந்த செய்தியிது!

இந்தச் செய்தி உண்மைதானா?
உண்மையாக இருக்குமானால்,
இது நாடா, இல்லை சுயநலப் பேய்களின் சுடுகாடா?
 ------------------------ 

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

"எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத் தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச வேண்டும். அங்கு நடைபெறும் அவலங்களை நேரில்
பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அங்கு நோயாளிகளுக்கு மனநல
சிகிச்சை வழங்கப்படுவதைவிட, அவர்களை மென்மேலும் மன நோயாளி ஆக்குவதற்கான செயற்பாடுகள்தான் அதிகமாக நடை
பெறுகின்றன' எனப் படபடத்தபடி பேச ஆரம்பித்தார் ருத்ரன்.

"அவன் இவன்' உட்பட பாலாவின் சில படங்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன. "யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –
காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த
கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில
கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து
மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

என்று முடிந்திருந்த்து அந்த வாட்ஸ்-அப் செய்தி!

(வாட்ஸ்-அப் குழுவிலிருந்து கிடைத்த செய்தி
தகவல் தந்தவர் - Paradisemdu- 98437 43735                                                                                                             குழு “இலக்கியச் சுவைஞர்கள்“ Group Admin - U.Gnanavadivel - 98407 49059) 
--------------------------------
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த பி.கக்கன் 1908 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மதுரையில் உள்ள தும்பைப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். இளம் வயது முதலே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 

தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன், 1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார். நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர் அமைச்சராக இருந்தபோது மதுரை வேளாண்மைக் கல்லூரியை தோற்றுவிதத்ததோடு , வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களையும் நிறைவேற்றினார். பின்னர் காமராசரின் அமைச்சரவையில் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரிசனநலம், அறநிலையத்துறை முதலான துறைகளில் 10ஆண்டுகள் தமிழ்நாட்டு அமைச்சராக இருந்தவர். 

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக வாகனம் ஏதும் இல்லாமல் அரசுப் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததும், நோய்வாய்ப்பட்டு போது மதுரை அரசு மருத்துவ மனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததும் அவரின் தூய்மையான அரசியல் வாழ்கைக்கு, எடுத்துக்காட்டாகும். எம்.ஜி.ஆர்.பிறகு உதவியதாகச் சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட –தமிழகத்துக்குப் பெருமைசேர்த்த- நம் தலைவராகக் கொண்டாடப்பட வேண்டிய கக்கன் அவர்களின் மகனுக்கா இந்தக் கதி!!
பாலாவின் சேது படத்தில் விக்ரமின் “மனநிலை பிறழ்ந்த“ நடிப்பைப் பார்த்து உருகும் இந்த நாட்டில், உண்மையான தியாகி ஒருவரின் மகன் அப்படியான நிலையில் 30வருடமாக இருக்கிறார் எனும் செய்தி 30ஆண்டுகளாக யாருக்கும் உறைக்கவே இல்லையா?

இன்றைய ஊழல் பெருச்சாளிகள் உல்லாச வாழ்வில் திளைத்திருக்க, அன்றைய நேர்மையான அமைச்சர் கக்கன் அவர்களின் மகனின் நிலை கடந்த 30வருடங்களாக –அதாவது 1985முதலே- இப்படிப்பட்ட மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறார் என்றால், நம் நாடு எங்கே போகிறது?  இதை எதிர்த்து, பொதுவாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் நடக்கும் குளறுபடிகள் பற்றியும், குறிப்பாக திரு.கக்கன் அவர்களின் மகனை மீட்டு சரியான மருத்துவம் தரும்படியும், யாரேனும் பெரிய மனிதர்கள் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய் ஏதாவது செய்யக்கூடாதா?
அல்லது -கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையின் அவலநிலை பற்றிப் பொதுநல வழக்குப் போட முடியாதா?

--------------------------------------------------------------------------------- 

30 கருத்துகள்:

 1. மிகவும் வேதனைக்குரிய தகவல் ஐயா... கக்கன் மகன் மட்டுமல்ல... அங்குள்ள அனைவரின் நிலையும் நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது... விடிவுகாலம் வர வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயக்குநர் ருத்ரன் சொல்வது போல ஊடகங்கள்தான் இதற்கு வழிகாட்டவும், அரசுதான் இதற்கு விடிவுகாணவும் முடியும்.

   நீக்கு
 2. தம்பி! பதிவைப் படித்தேன்! தாங்கமுடியாத சோகம் கொண்டேன் ! இது நாடல்ல சுடுகாடு நம்மைப் போன்றவர்கள்! வருந்துவதை த் தவிர வேறென்ன செய்ய முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். உடலும் உள்ளமும் நலம்தானா?
   இன்னும் நம்பிக்கை வைப்போம் அய்யா எதற்கும் தீர்வு உண்டு அல்லவா? தீர்வு காணாதவற்றைத் தொகுத்து அதற்கும் தீர்வு காண வழி உண்டல்லவா? நம்புகிறேன். வணக்கம்

   நீக்கு
 3. படிக்கப் படிக்க
  வேதனைதான் மேலிடுகிறது ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அதிர்ச்சியைத்தான் பகிர்ந்து டகொண்டேன் அய்யா நன்றிகள்

   நீக்கு
 4. கவனிக்கப்பட வேண்டிய விசயம் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால்தான் பதிவாக எடுத்து இட்டு என் கருத்தையும் இட்டேன் நன்றி

   நீக்கு
 5. பதில்கள்
  1. உரிய இடத்தை அடைய முயற்சியும் செய்வோம் எட்வின். நன்றி

   நீக்கு
 6. "அறநெறி, வாழ்வு, அது, இது என்று
  பேச்சு தாளாரம் காட்டி முழுதும்
  அறநெறிப்படியே செயலாற்ற விழையும்
  மனிதன் தீமை சூழ்ந்த உலகத்தில்
  தன்னை அடியோடு அழிக்கக் கூடிய
  அனுபங்களையே சந்திப்பான்."

  - மாக்கியவெல்லி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேதைகளின் சொல் என்றும் தவறுவதில்லை அய்யா
   நன்றி

   நீக்கு

 7. மருத்துவமனை
  என்ன
  மனநோயாளர் உற்பத்திச் சாலையா?
  கடவுளே!
  கண் திறந்து பாரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளைத்தான் ஊர்ஊராய்த் தூக்கிக் கொண்டு திரிகிறார்களே!
   அவர் என்ன செய்வார் பாவம்? திருடர்களே ஆனாலும்
   பிரார்த்தனைக்குப் பலன் தருவாரா? அல்லது தவறான பிரார்த்தனை என்றால் பிரார்த்தனை செய்பவரையே தண்டிப்பாரா? எனக்கு இது புரியவே இல்லை நண்பரே!

   நீக்கு
 8. கக்கன் அவர்களின் மருமகன் ஐபிஎஸ்ஸாக பெங்களூர் காவல்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறாரே. அவருக்குக்கூடத் தெரியாத தகவலா இது? அல்லது அவர் போன்றவர்கள் முயற்சி எடுத்தால் முடிவுக்கு வரமுடியாத விஷயமா இது?
  ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? இது எனக்குப் புதிய செய்தியாக இருக்கிறதே!
   அவருக்கு இநதத் தகவல் தெரியவில்லை எனில் தெரிவிக்க முடியுமா அய்யா? (தெரியாமல் இருக்க வாய்ப்பில்லைதானே?)
   என்ன நடக்கிறது என்றே புரியவில்லையே.........

   நீக்கு
 9. மனம் கனக்கிறது. இதை என் முக நூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் பகிருங்கள் சகோ.
   நன்றி

   நீக்கு
 10. கக்கன் மகனுக்கு மட்டுமல்ல , கக்கனுக்கும் இதே மாதிரிதான் நடந்தது. அவரது கடைசி காலத்தில், மதுரை அரசு மருத்துவ மனையில் பெட் இல்லையென்று தரையில் அவரை படுக்க வைத்து இருந்தார்கள் என்ற செய்தி வந்தது.

  தங்கள் பதிவில் உள்ள விஷயங்கள் மனதை கலங்க அடிக்கின்றன. உண்மை வெளியே வரவேண்டும்.

  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா, இது ஏற்கெனவே கேள்விப்பட்ட தகவல்தான்.
   அதை எம்.ஜி.ஆர்.கேள்விப்பட்டு, உதவிகள் செய்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதுவே கொடுமையான செய்தி. இந்தச் செய்தி கொடுமையிலும் கொடுமையல்லவா? நன்றிகள்

   நீக்கு
 11. மிகவும் வேதனையான செய்தி. அவர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி அறியும்போது மனம் கனக்கிறது. இவர்களின் சோகங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் உதவ வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாமான்ய மக்களின் குரல் அரசின் கேளாக் காதுகளில் எப்போது கேட்குமோ தெரியவில்லை! அந்தக் காலத்திலாவது ஆராய்ச்சி மணி இருந்தது.. இப்பத்தான் எல்லா நிலைகளிலும் பவர் கட் !

   நீக்கு
 12. மனம் பதறுகிறது. உண்மையாக இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.மன நலக் காப்பகங்களின் நடைமுறையை நடு நிலையான மருத்துவ குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். உண்மையாக இருக்கும் பட்சத்தில் பத்திரிக்கைகள் சமூக நல அமைப்புகள் இங்கு அடைக்கப் பட்டுள்ளோரின் மனித உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தப் பத்திரிகையிலும் வராததுதான் ஐயமாகவும் அசச்மாகவும் இருக்கிறது... நன்றி முரளி..

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

   நீக்கு
 14. மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . நம் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் குழப்பமாக உள்ளது . நேர்மை , அறம், திருக்குறள் என்பவை எல்லாம் அவர்கள்ளுக்கு சொல்லி தரலாமா , அது அவர்களுக்கு எதிர் காலத்தில் துணை புரியுமா என்று தெரிய வில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அளவுக்குக் குழம்ப வேண்டாம்.
   நம் பிள்ளைகள் நல்லவர்களாக மட்டுமின்றி வல்லவர்களாகவும் வளர ஆவன செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.

   நீக்கு
 15. மனதிற்கு வேதனை ! குழந்தைகளைச் சொல்லுவதை விட நாம் இனியும் உள்ள வருடங்களில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகச் செலவழிப்பமே!

  பதிலளிநீக்கு
 16. இன்றுதான் இந்த பதிவை படித்தேன் மனம் கணத்து விட்டது நண்பரே நிச்சயமாக நம்மைப் போன்றவர்களாவது இதை வெளிக்கொண்டு வரவேண்டும்.

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...