ஜெயபாஸ்கரன் கவிதையில் ‘கெட்ட’ வார்த்தை!


ஜெயபாஸ்கரன் கவிதையில் ‘கெட்ட’ வார்த்தை!
--நா. முத்துநிலவன் --

                     சென்னையில் நடந்த ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுவையான விவாதம் ஒன்று நடந்தது.
                     ‘நந்தன்’ ஆசிரியர் நா.அருணாசலம் தலைமையில், கவிஞர் கனிமொழி புத்தகத்தை வெளியிட்டுப் பேச, வீ.கே.டி.பாலன் முதல்படி பெற்று உரையாற்றினார்.சு.ப.அறவாணன், திலகவதி, ‘தென்கச்சி’ கோ.சுவாமிநாதன், வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மணிமுடிநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

                     நானும் திருப்பூர் கிருஷ்ணனும் நூல் திறனாய்வு செய்து பேசினோம்.
                    முதலில் பேசிய நான் - கவிதையெனில் முதலில் புரியவேண்டும். பாரதி அப்படித்தான் ‘எளிய பதம். எளிய சொற்கள். பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு -இவற்றால் ஆகிய காவியம் ஒன்றை செய்து தருகிறவன் தமிழன்னைக்குப்புதிய அணிகலன் சூட்டியவனாகிறான்’, என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே பிரகடனப்படுத்திவிடுகிறான்.
ஜெயபாஸ்கரன் கவிதைகளின் வலிமையே அதன் எளிமைதான்.. என்று பேசியதோடு சில கவிஞர்கள் ‘எந்த அளவிற்குப் புரியவில்லையோ அந்த அளவிற்கு உயர்ந்த கவிதை’ என்பதாக நினைத்துக் கொண்டுவிடுகிறார்கள், என்றும் கூறினேன்.
கவிஞர் மகுடேசுவரன் இப்படித்தான்.
…அது அதுவாகவும்
            இது இதுவாகவும் இருந்தது
            பிறகு –
           அது இதுவாகவும்
           இது அதுவாகவும் மாறின.
           இப்போது
           அதது அததுவாக
           இதிது இதிதுவாக.. என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார் என்று சொன்னேன். எனது பேச்சின் ஒரு பகுதிதான் இது.

ஆனால்,  அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் - ‘தனக்குப் புரியவில்லை என்பதற்காக கவிதையில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடக்கூடாது. புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்’ என்று பேசிவிட்டு ஜெயபாஸ்கரனின் கவிதைகளைப் பாராட்டிய கையோடு தொகுப்பில் உள்ள ‘மயில்’ என்னும் கவிதையின் இறுதியாக –
                   ‘மயில்களைப் பார்க்கும் போது மட்டுமின்றி
                    போய்ப்பார்க்கும் போதும்
                    சொல்லியாக வேண்டியிருக்கிறது.
                    மயிலே…மயிலே….நீ
                    எந்த மயிரானுக்கும்
                    இறகு போடாதே’
 --என்றுவரும் வரிகளை இன்னும் கொஞ்சம் மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம். கவிதையில் இது போன்ற சொற்களைக் கையாளும் போது இன்னும் யோசிக்கவேண்டும் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவடுவது நல்லதல்ல… என்று பேசினார். ‘பகா ஈகாரம்-பவ்வீ’ என்றெல்லாம் ஓரெழுத்து வார்த்ததையைச் சொல்வதுமாதிரி இலைமறை காயாகச் சொல்ல வேண்டும்..என்றார்.

                       பிறகு பேசியவர்கள் இதுபற்றி நிறையப் பேசினார்கள் அப்போது இதுபற்றி நான் சொல்ல நினைத்ததை அங்கேயே சொல்ல முடியாதவாறு நான் முதலிலேயே பேசி விட்டதால், இப்போது அந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
  இது பற்றிக்கவிஞர்கள்மட்டுமல்லஅனைவருமே கருத்துக்கூறலாம்.

                              சொல்லில் வழக்குச்சொல்லே முக்கியத்துவம் மிகுந்தது. தொல்காப்பியரும்…          
‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’த்தான் இலக்கணம் படைத்தார்.
அப்படித்தான் தமிழ் இலக்கணத்தில் அதே வழக்கை ‘இயல்பு வழக்கு. தகுதி வழக்கு’ என இரண்டு பிரிவாக்கினர் பின்வந்த நன்னூல் இலக்கணத்தார்.
அதற்கு என்ன பொருளெனில். ‘இயல்பு வழக்கு’ அப்படியே இயல்பான (உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றவாறு) உயர்வான வழக்கு.
  தகுதி வழக்குத்தான் கொஞ்சம் தகராறு. சபையில் - இலக்கியத்திலும் கூட-“சொல்லத்தகாத” சொற்களை தகுதிப்படுத்தி
(அல்லது மறைத்து-பூசி மெழுகி) சொல்வது.

  ‘பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது மருவாதிஇல்லாம பேசப்படாது’ எனும் உள்ளடக்கம் தான் இது.இதனைச் சிலவகையாகப் பிரித்தனர் ‘பெரியோர்’ –

அதாவது – ‘இடக்கர்அடக்கல்’ (இடக்கான தகுதியற்ற சொற்களை மாற்றிப்பேசுவது). ‘ஆய் வருதும்மா’- ன்னு சொல்லக்கூடாது. ஆனா -டூ பாத்ரூம் வருது-ன்னு சொல்லலாம்.

 ‘மங்கலம்’ (அமங்கலமான சொற்களை மங்கலமாக மாற்றிப்பேசுவது)
 ஆடிப்பெருக்கில் தாலி சுருக்குவதை ‘தாலி பெருக்கிப்போடுவது’ என்பது.

 அடிப்படையில் பார்த்தால் ‘தகுதியற்ற’ சொற்களை ‘நீர்தெளித்து’ தகுதிப்படுத்துவதுதான் இதன் உள்ளடக்கமும்

அது-தகுதிப்படுத்துவல்ல. இருக்கும் வேற்றுமைக்கு எதிரான கோபத்தை –சமாதானப்படுத்துவது- ஏற்கச்செய்வது – வேற்றுமையைப் பாதுகாப்பாதேதான்!

தகுதியற்ற சொல்என்றோ தகுதியற்ற மனிதன்என்றோ இயல்பில் யாரும் எதுவுமில்லை. சொல்லப்படும் சூழல்-நோக்கம்தான் சொல்லின் பொருளை ஆழமாக வெளிப்படுத்தும்.

 ‘மயிர்’ எனும் சொல்லை வள்ளுவரும் உவமையாக்கியிருக்கிறார்
(குறள் 969). அது அசிங்கமாயில்லை.

  கவிஞர் அறிவுமதியும்.-
‘பறையர், படையாட்சி, தேவர், செட்டியார்,              
  நாடார், பிள்ளை….மசுரு
  ஒரே முருகன், ---எனும் போது ஒரே சாமியக் கும்பிட்டும் இன்னும் சாதிச்சனியன் ஒழியலையே எனும் எரிச்சல் நமக்குள் ஏற்படுவதைச் சரியாகத்தானே வார்த்தைப் படுத்தியிருக்கிறார் கவிஞர்?

               கவிஞர் இன்குலாப் அதையே எரிச்சலாக அல்ல ஆவேசமாகவே பயன்படுத்துகிறார்.
          ‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே-உங்க                            சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணைய ஊத்துதே       எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க                   எரியும்போது எவன் மசுரப் புடுங்கப்போனீங்க’
  ----எனும்போது. முனைவர் கரு.அழ.குணசேகரனின் கம்பீரக் குரலில் தெறிக்கும் கோபம். தலித்துகளின் தர்மாவேசமன்றி அசிங்கமாஅது?

  ‘பறையருக்கும் இங்கு தீயப்
                     புலையருக்கும் விடுதலை’
  ---- எனும் பாரதி வரிகளைக் கேட்டு மிரண்டு, “சாதிப் பெயரா இருக்கே கொஞ்சம் மாத்திக்க முடியுமா?”  என்று கேட்ட வானொலி அதிகாரிகளிடம் பாரதியைக் கூட்டி வந்தா மாற்றமுடியும்? அவன் வந்தாலும் இந்த வரிகளை மாற்றித்தருவானா?  

பறைச்சி யாவ தேதடா பார்ப்  
             பனத்தி யாவ தேதடா  
இறைச்சி தோல் எலும்பிலே  
           இலக்க மிட்டு இருக்குதோ’
--- எனும் சித்தர் பாடலில் கூட சாதிப்பெயர்கள் வரத்தான் செய்கின்றன.
அது இழிவுபடுத்தும்நோக்கில் அல்ல-இடித்துரைக்க.

                 அசிங்கத்துக்கும் ஆபாசத்துக்கும் வேறுபாடு நிறைய உண்டு ‘முன்னது அருவெறுப்பூட்டுவது’ பின்னது - இன்னது என்றறியாமலே தவறு செய்யத தூண்டுவது ‘திரைப்பட வணிக படைப்பாளிகள் இரண்டையும் குழப்புவதில் தெளிவானவர்கள்’ அதனால்தான் உடல்உறுப்புகூட ஆபாசமாக நமது சமூகத்தில் அறியப்பட்டுள்ளது.

                    இரண்டு பொருள்பட (சிலேடை) எழுதிய நரைப்புலவர்களாவது தேவலாம் எனும் அளவில் இன்றைய திரைப்புலவர்கள் ஒரே பொருளில்தான் உறுப்புகளைப் பற்றியும் பொறுப்பின்றி எழுதுகிறார்கள்.
 
                    மறை உறுப்புகளின் பெயர்களைக் கூட ஒடுக்கப்பட்டவர்களின் ஆவேசத்தைத் தூண்டும் வகையில் பாட முடியுமா?
  முடியும் என்றெழுதிய கவிகளும் உண்டு.
  வேதம் படிக்க –
        கண்வேண்டும் வாய்வேண்டும்
        ஆண்குறி எதற்கு?
  -----எனும் நீலமணியின் கேள்வியில் தெறிப்பது ஆபாசமா ஆவேசமா?

                              பெண்ணிய வளர்ச்சியில் பாடவந்தபெண் கவிஞர்கள் இந்த உறுப்பு சமாச்சாரங்களையெல்லாம் நொறுக்கியெறிகிறார்கள் --

                அச்சமும் நாணூம் மடனும் முந்துறுத்த
                நிச்சமும் பெண்பாற்கு உரிய. -எனும் பழம்பஞ்சாங்கத்தை கிழித்தெறிந்து --  
                 ‘மரப்பாச்சி பொம்மைக்கும்
                  மாராப்பு போட்டுவைத்த
                  பண்பட்ட தேசமிது,
                  இன்று –அரைகுறைதான் அழகாம்!          
                  இடையைக்கூர்ந்து
                 தொடையை ஆய்ந்து
                 கசாப்புக் கடைகட்டும்
                 ஐஎம்எப்  கலாச்சாரம் !
                 எல்லா நாயும்
                 காலைத் தூக்க    
                 எம் தேசமென்ன  
                 தெருவோர நடுகல்லா?’
 --எனும் ஆர்.நீலாவின் கோபத்தில்- - ‘ஆபாசம்’ ஆவேசமாகிறதே!

  இதையெல்லாம்விடவும், ‘பெண்கள் இப்படிப்பாடலாமா’ என்று சிலர் அதிர்ச்சியடையும் விதத்தில் பாடுகிறார்கள் இன்றைய தமிழ்பெண்கவிகள் (க்ருஷாங்கினி-மாலதிமைத்ரி தொகுத்த 20ஆம் நூற்றாண்டுப் பெண் கவிகளின் - ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ – காவ்யா வெளியீடு பார்க்க)

                          பெண்பார்க்கும் படலத்தில் பெண்ணின் சம்மதம் கேட்கப்படுவதில்லை யெனும் புலம்பல் ஒருபக்கம் தொடரும்போதே திருமணம் பற்றிய மாற்றுப் பார்வையுடன்
                  ‘…உன்னிடமிருந்து                        
                    கலங்கலானதே எனினும்            
                    சிறிதளவு அன்பைப் பெற  
                    எல்லா அறிதல்களுடனும்  
                   விரிகிறதென் யோனி’
  ----எனும் சல்மாவின் கவிதைகளில்தான் எத்தனை யுக ஆதங்கம்.
குட்டி ரேவதியின்
              .. ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
                  சிசுகண்ட அதிர்வில்    
                 குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன
   -----எனும் ‘முலை’ கவிதை, எந்த உறுத்தலும் இன்றி இயல்பாகவே உள்ளதே!.

                     அதைச்செய்யாதே இதைச்செய்யாதே எனும் பழைய கட்டுப்பாடுகள் கவிஞர் - கலைஞர்களிடம் வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

                      சொல்லின் வலிமை தெரிந்தவர்தானே கவிஞராக முடியும்?
  புண்ணைக்கீறும் போது நிணமும் சீழும் வரத்தான் செய்யும். மருந்து போட்டு ஆற்றுவதே நோக்கமெனில் அது தவறாகப்படாது.
நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் இதை அறிவாராக.

                      வாய்மொழிவழக்கு – சொலவடை – பழமொழிகளில் இந்த உழைக்கும் மக்களின் இயல்பான ‘கெட்ட வார்த்தைகள் ஏராளமாக வருவதையும் பார்த்தால் அதிலதான் நமது மக்களின் ஆசை-கோபம்-எரிச்சல்-ஆற்றாமை-மகிழ்ச்சி உட்பட வாழ்க்கை வரலாறே தெரியும்.

                       அந்த பாணியிலான சொலவடையோடு இந்த விவாதத்தை முடிப்போமா…அயோத்தி வழியாக கோத்ராவிலோ குஜராத்திலோ காட்டுமிராண்டித்தனம் செய்யும் ஒருவனை எந்த மதம் என்றா கேட்பீர்?
 அவன் மனிதனே கிடையாது !
அப்புறம் அவனை எந்த மதத்தில் சேர்ப்பது?
 “நக்குற நாய்க்கு
செக்கு என்ன சிவலிங்கம் என்ன ”
என்றுதான் சொல்ல முடியும். என்ன நாஞ் சொல்றது சரிதானுங்களே-?
-------------------------------------------------------------------------------------  
 (ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது-25.03.2002. பின்னர் “நந்தன் வழி” மாதஇதழில் வெளிவந்தது)

‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!


‘சாதிச் சார்பற்ற’ தலைவர்கள் தேவை!

                   அறிஞரும் சீர்திருத்தச் சிந்தனையாளருமான வா.செ.குழந்தைசாமியின், காலத்தின் தேவையுணர்ந்த கட்டுரைகள் கண்டேன்.
தமிழகத்தின் எரியும் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வும் இக்கட்டுரைகளில் புதைந்துள்ளது. இந்த அரிய யோசனைகளைத் தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் வைத்து உடனடியாகச் சட்டமாக்கவும் முன்வர வேண்டும்.

                 பூங்குன்றனில் துவங்கி திருவள்ளுவா,; சித்தர்கள், வள்ளலார், பெரியார், பாரதி பாரதிதாசன் என நீளும் மேதைகளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் முழுவதையும் உறவினராப் பார்த்த தமிழன் எங்கே…உள்ளுர்க்காரனையே ஒடஒட விரட்டி வெட்டும் இன்றைய சாதிய மோதல்கள் எங்கே?

              ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும’ என்ற திருவள்ளுவரையும் சாதி பேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ’ என்ற சிவவாக்கியரையும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’என்ற வள்ளலாரையும் எடுத்தெடுத்துப் பேசிப்பேசித் ‘தலைமுறைகள் பல கழிந்தோம் குறை களைந்தோமில்லை!’
              கணியன் பூங்குன்றனின் வாசகத்தை ஐ.நா.வாசலில் எழுதியதிருக்கட்டும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் எழுத வேண்டி வந்துவிட்டதே!

              இந்த நிலையை மாற்ற கலப்புமணத் தம்பதியரின் குழந்தைகளை ‘சாதி-மறுப்பாளர்’ என்று எதிர்மறையாகவோ ‘இந்தியர்-தமிழர்’ என உடன்பாடாகவோ எழுத உடனடிச் சட்டம் தேவை. அதோடு பிற்;பட்டவர்க்கான ஒதுக்கீடும் நிரந்தரமானதல்ல என்பதை உணர்த்துவதோடு முதல் தலைமுறைக்குக் கிடைக்கும் சதவீதத்தில் பாதியே அடுத்த தலைமுறைக்கு என அறிவிக்க வேண்டும். பொருளாதாரப் பின்னணி சிறிதளவு கவனத்துக்காவது வருவது நிரந்தரப் பயன்பாட்டுக்கு உதவும்.

               அரசியல்வாதி தேர்தலில் நிற்கவும் அரசு ஊழியர்-ஆசிரியர் பணியிற் சேரும்போது ‘எந்தச் சாதிச் சங்கத்திலும் உறுப்பினர் இல்லை’ என உறுதி மொழி பெற்று அவ்வாறே தொடர்கிறாரா எனக் கண்காணிக்கவும் வேண்டும்.

                 சாதி மத எதிர்ப்புப் பிரசாரத்தை அரசே திட்டமிட்டு நடத்த வேண்டும். ‘மதச்சார்பற்ற’ மட்டுமல்ல ‘சாதிச் சார்பற்ற’ தலைவர்களாகவும் மனிதர்களாகவும் உருவாக கல்வி பொருளாதார அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்.
--- தினமணியில் வெளிவந்த எனது கடிதம்
     03.06.1997

தினமணி - கட்டுரை


                   பட்டுக்கோட்டையின் பாட்டுக் கனவுகள்…
                                    -- நா.முத்துநிலவன்--


                       “ எளிய பதங்கள் எளியநடை அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினுடைய காவியமென்று செய்து தருவோம் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடத்து நூல் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.” என்று மகாகவி பாரதி தனது ‘பாஞ்சாலி சபதம் ‘முன்னுரiயில் பிரகடனம் செய்வார்.

                           மகாகவியின் எளிமையும் புராட்சிக் கவியின் கூர்மையும் இணைந்துவரத் தமிழ்ப் பாடல் உலகில் தனிப்பாதை போட்டவர் ‘மக்கள் கவிஞர் ‘ பட்டக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டையின்  அருகில் உள்ள செங்கப்படத்தான் காடு எனும் ஊரில் சிற்றூரில் பிறந்து 29 வயதுவரை வாழ்ந்து அதற்குள் படாக சிரமங்களையெல்லாம் பட்டு தற்காலக்கவிஞர்கள்  எவரும் தொடாத சிகரங்களையெல்லாம் தொட்டவர்.

                          கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (டாஸ்கேபிடல்) எனும் நூலின் சாராம்சமே வர்க்கப் போர்தான். இதை எளிமைப்படுத்திய பலரும் ‘முழிபெயர்த்து’நின்றபோது ‘வர்க்கப் போர்’ என்பது வேறொன்றுமில்லை… என்பது வழிகாட்டுவதுபோல-
‘வசதி இருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’
என்று எழுதியவர் பட்டுக்கோட்டை .

                          ‘உலகத் தொழிலாளர்களே! ஓன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்க்கு எதுவும்மில்லை அடிமைச் சங்கிலிகளைத் தவிர!’ எனும் மார்க்ஸ் ஏங்கெல்ஸின் உலகப் புகழ்பெற்ற தொழிற்சங்க அறைகூவலைக்கூட
‘காடு வெளைஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்!’ என்று எளிமைப்படுத்தி எழுதிய கவிஞர் வேறு எவர் இருக்கிறார்கள்?

                                இன்றும் இந்தியாவில் உழைக்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் கிடக்கும் கூலி விவசாயிக்கு’ இழப்பதற்கு எதுவுமில்லை-உழுபடைக் கருவிகள் கூட அவனுக்குச் சொந்தமில்லை.

பாரதி வழிவரும் சிந்தனைப் பரிணாமத்தை பட்டுக்கோட்டையின் பாடல்களில் நிறையப் பார்க்க முடியும்.

                             இரண்டு வேறுவேறு நிலைகளை-முரண்பாட்டை-ஒப்பிட்டு பாரதி காட்டிய சிந்தனை ஒன்றுண்டு:
‘இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
                  என்னரும் திரு நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
                   கணக்கின்றித் தரும் நாடு’ என்று பாடிவிட்டு இந்த நாட்டில்தான்
‘கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ என்று வருந்துவார்.

                             இதையே தனது பாணியில் பாடிய பட்டுக்கோட்டையார்
 'தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயிது!’ என்று பாமரத் திருக்குறள் போலப் பாடிவிட்டு அதற்கும் மேலே போய்க் காரணத்தையும் பாட்டிலேயே போட்டுடைக்கிறார்:
‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே-பசி
                   வந்திடக் காரணம் என்ன மச்சான்? -அவன்
தேடிய செல்வங்கள் சீமான் வீட்டிலே
                    சேர்ந்தனால் வரும் தொல்லையடி!’ அதிலும் “சீமான் வுpட” என்பது மிகச்சரியான குறி என்பதை உணர்ந்தே திரைப்படம் எடுத்தவர்கள் அந்த வார்த்தைகளை சந்தம் மாறாமல்(!) “வேறே இடம்” என்று திருத்திவிட்டார்கள்!

                           விடுதலை பெறுவதற்கு 30 வருடமுன்பே
'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று பாரதி போல எதிர்கால மாற்றம் பற்றி உறுதியோடிருந்தார் பட்டுக்கோட்டையார். அந்த மாற்றமும் 'தானாக ஒன்றும் நடந்து விடாது' எனும் எதார்த்தத் தெளிவோடு நாம்தான் முன்கை எடுக்க வேண்டும் என முடுக்கிவிட்டு
‘தனி உடமைக் கொடுமைகள் தீர
             தொண்டு செய்யடா!
தானா எல்லாம் என்புத
            பழைய பொய்யடா!’ என்பது தமிழின் புதிய குரல்!

'பொதுநலம் பேசும் புண்ணியவாங்களின்
                போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
               புவியை மயக்கும் வெளிவேசம் ‘என்று அவர் பாடியது இன்றைக்கும் பொருந்துகிறதே!

                 இறுதியாக முக்கியமான ஒன்று:
                 எளிமைப்படுத்துவது வேறு மலிகப்படுத்துவது வேறு!

                 ‘போட்டுக்கிட்டா-தாலி போட்டுக்கிட்டா
                  ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் - என்று ‘டப்பாங்குத்துப் பாடல் இசையில்கூட பெண் சமத்துவக் கருத்தைப் பேசியவர் பட்டுக்கோட்டை!

‘காளை மாட்டுக்குக் காம்பெதுக்கு
கன்னி கழிக்கப் படிப்பெதுக்கு’ எனும் உழுத்த எழுத்தே ஓங்கிவரும் இன்றைய சூழலில்  ‘படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை‘ என்று சமூகப் பொறுப்பைச் சரியாக இலக்கியமாக்கிய பட்டுக்கோட்டையாரை மறக்க முடியுமா?

‘ஆசை வைக்கிற இடம் தெரியணும்  மறந்துவிடதே!
 அதுக்கு மேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே’ என்று எழுதியதும் பருவக் கிளர்ச்சிக்கும் ஒரு வரம்பு நெறிமுறை உண்டு என்பதையே இலக்கியமாக்கி
‘மாலை வெயில் மயக்கத்திலே
            மறந்திடலாமோ?-நான்
மனைவியென்றே ஆகுமுன்னே
           நெருங்கிடலாமோ?' என்றும் எழுதிய பாடல் வரிகள் கமூக ஒழுக்கத்துக்கும் சரியான வழிகாட்டியாக இருப்பதை மறந்துவிட முடியுமா?

            மக்கள் ஒற்றுமையின் மகத்துவத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாடத் தவறாத பட்டுக்கோட்டையார்,
'உச்சி மலையில் ஊறும் அருவிகள்
            ஒரே வழியில் கலக்குது!
ஓற்றுமையில்லா மனித குலம்
             உயர்வும் தாழ்வும் வளர்க்குது!’ என்று வருந்தும் பட்டுக்கோட்டையார்,
‘யாருமேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே?
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம்தானே? - என்று கேட்பது இன்றும் பொருந்துகிறதே!

பட்டுக்கோட்டையாரின் மறைவைப்பற்றி
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழும் காலம்வரை வாழ்ந்துவரும் நின்பெயரே’என்று எழுதிய கவிஞர் கண்ணதாசனை விட வேறு என்ன சொல்வது?

ஆனாலும் ஒன்றுண்டு:
கவிஞரின் பெயரால் பட்டுக்கோட்டையில் ஒரு நினைவு மண்டபம் கட்டுவதற்காக எடுக்கப்பட்டுவரும் தமிழக அரசின் முயற்சிகள் ஆண்டுக்கணக்கில் தாமதமாவதைத் தவிர்த்து இன்றைய அரசு துரிதப்படுத்தி கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த உதவுவதே பட்டுக்கோட்டையாருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்! அதுவே அவர் கனவுகளை நினைவாக்கும்!
----------------------------------------------------------------------------------------------------------
(ஏப்ரல்-13 மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்
கட்டுரையாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயல்ர். -------- தினமணி 13.04.1998 )

புதுக்கவிதை வரலாற்று ஆய்வுக் கட்டுரை


புதுக்கவிதை -- வரவும் செலவும் 
-- நா.முத்துநிலவன் --

புதுக்கவிதை தோன்றிய சமூகப் பின்னணி:
‘அளவு மாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும்’ எனும் மார்க்சிய விஞ்ஞானம் கலை இலக்கியத்திலும் மெய்ப்பிக்கப்பட்டது.
‘கல்வியும் புலனெறி வழக்க- கலைஇலக்கியமும். ஒரு சிலருக்கு என்றிருந்த நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் விளைச்சல் முதலாளியத்தின் வரவால் நெகிழ்ச்சியுற்றது. 17.18 ஆம் நூற்றாண்டுகளில் சமூக உறவுகளில் பெருத்த மாற்றங்கள் நிகழவே அதன் தவிர்க்க முடியாத விளைவாக-கல்வி கலாசார விளைச்சல் வெகு ஜனங்களைப் பாதிக்கத் தொடங்கியது-அதில் அச்சு இயந்திர வரவு குறிப்பிடத்தக்கது. வெகுஜனப் படிப்பிலும் கலை இலக்கிய அரசியல் தொடர்புகளிலும் அளவு மாற்றம் நிகழவே கலை இலக்கியத்திலும் குணமாற்றம் நிகழ்வது இயல்பானதே.

இதுவே கடந்த நூற்றபண்டின் ஆரம்ப முதல் நாவல் சிறுகதை கவிதை பற்றிய திறனாய்வு இலக்கியங்களையும் புதுக்கவிதைகளையும் விளையச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தின் குறுகிய எல்லைகளோடிருந்த கலை இலக்கிய மரபுகள் முதலாளியத்துக்குரிய விரிந்த களத்துக்கேற்றவாறு மாறின.

இந்தக் காலத்தில் வேதகால (குழுமக்கள் சமுதாய நிலையில்) படிப்பாளிகள் காதே கருவியாய்த் தத்துவ விளக்கம் தந்து பெற்றுக் கொண்டமைக்கு ‘சுருதிகள்’ (காதால் கேட்கப்பட்டவை என்பது பொருள்) எனும் சொல் வழக்கு சான்றாகும். அன்றைய இந்தச் சமுதாய நிலையில் வெகு சிலரே படிப்பாளிகள் என்பதும் தவிர்க்க முடியாமலிருந்தது
          பின்னர் குறுமன்னர்-பெருமன்னர் காலத்தில்-(நிலப்பிரபுத்துவ சமுதாய நிலையில்) ஏடுகளும் எழுத்தாணிகளுமே கருவிகளாய்க் கற்று வந்தனர். இப்போது வட்டம் சிறிதே வரிவடைந்து நின்றது. என்றாலும் அது வெகு ஜனங்களைப் பாதிக்கவில்லை. 
           வெகு அண்மையில் -ஒரிரு நூற்றாண்டுக்குள் குடியரசுகள் தோன்றிய (முதலாளி சமுதாய நிலையில்) அச்சும் நுணுக்கான எழுதுபொருள் கண்டுபிடிப்புகளும் பெருகிவிட்ட நிலையில் சந்தைக்காக வேணும் படிப்பைப் பரவலாக்குவது வெகுஜனங்களையும் படிப்பையும் தவிர்க்க முடியாமல் இணையச் செய்துவிட்டது இது கலை இலக்கியப் புதுமைகளுக்கு அடிப்படையில் சமூக மாறுதல்கள் இருப்பதை வலியுறுத்துவதாகும்.

புதுக்கவிதை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பின்னணி
            1910 களில் மேலைநாடுகளில் நிகழ்ந்த இலக்கிய மாற்றங்களை 'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ்மொழியில் பெயர்க்க'ச் சொன்ன-பாரதிதான் தமிழில்சிக்கெனப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.
          ஆனால் தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுதியை வழங்கிய பெருமைக்குரிய (புதுக்குரல்கள் -1962 சி.சு.செல்லப்பா அவர்கள் பண்டிதர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஃபிராய்டித்தில் சிக்கி புதுக்கவிதையை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லவும் தலைப்பட்டார்.
           தமிழில் புதுக்கவிதைக்காகவும் விமரிசன இலக்கியத்திற்காகவும் என ‘எழுத்து’ இதழைத் தொடங்கிப் பெரும்பங்காற்றிய பெரியவர் சி.சு.செல்லப்பா அவர்கள் ‘அகவுலகம்’ ஃபிராய்டிசத்தினால் விசாலமடைந்து உள்ளததைத் துழாவி இந்தக் கவிஞர்கள் ஏதோ புதிய உண்மையைக் கொணர்ந்தவர்கள் என்பதாக முன்னுரையில் கூறுவது புதுக்கவிதைக் குழந்தையைப் பாதுகாத்து வேறு எங்கோ அழைத்துச் செல்ல முனைவதைத்தானே காட்டுகிறது?
         இதனால்தான்-
         “புதிய தடம் காணுதற்கு
         பொழுதில்லை ஆதவினால்
         விதிவழியே செய்த
      வினைவழியே போகின்றேன் -- ஞா.மாணிக்கவாசகம்) என்பன போன்ற விரக்திக் கவிதைகளைப் புதுக்கவிதை வடிவத்தில் அறிமுகப் படுத்துகிறார்.
       புpறந்தது முதல் பேசாதிருந்த ஒரு பிள்ளை பெரும்பாடுபட்டு மருத்துவம் செய்த பிறகு முதல்முதலாகப் பேசத் தொடங்கியதுமே பெற்றவனைப் பார்த்து எப்போது தாலியறுப்பாய்? என்று கேட்டதாகச சொல்லும் கதையை நிறைவுறுத்துகிறது இப்புதுக்கவிதை முதல் தொகுதியின் சில கவிதைகள்.
    இது போன்ற பழங்கருத்தை-உலுத்துப்போன ஒப்பாரிகளை சொல்வதற்கு எதற்கு இந்தப் புதிய வடிவம்? விலங்கை உடைத்த கைகள் விரக்தியில் துவள்வதா?
       அசைநிலையும் சீர்-தளையும் இயல்பான உணர்ச்சிகளை மக்களின் அன்றாடச் சுமை-சுவையுணர்வுகளை இயல்பாகக் கூறத்தடையாக இருப்பதாகக் கருதியே சுவை குறையாமல் அதே நேரம் தளைச் சுமையை உதறிவிட்டு வசன கவிதையும் புதுக்கவிதையும் பிறந்தன. மீண்டும் பழைய குருடி நிலை ஏன்?
       இது மாறிவரும் உலகத்தின் புதிய வெளிச்சங்களைக் காண முடியாத கருத்துக் குருடர்களின் நிலையேயன்றி வேறென்ன? இதற்கு ‘அக உலக மதிப்பீடு’ பிராய்டிசத் உன்னதம்’ எனும் தத்துவப் பிகற்றல் வேறு!
இதுபற்றி சொறிந்து சுகம் காணுகிற சொறிசிரங்கு நோயாளி பிறருக்கு அச்சகம் இல்லையே என்று கர்வம் கொண்டு கூறுவது போல இருக்கிறது இவர்களின் அக உலக மதிப்பீடுகள்….இவர்கள் போராட்டங்களைக் கண்டு வெருளுவதால் தாங்கள் அக ஒட்டங்களையே கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று போராசிரியர் நா.வானமாமலை அவர்கள் கூறுவது மிகப் பொருத்தமே.
        மரபுக் கவிதையாகட்டும் புதுக்கவிதையாகட்டும் இந்த ‘உன்னதத்’ தத்துவங்க சிக்கிக் கொள்ளாமல் நமது வர்க்கக் கவிஞர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிரார்கள் கவிஞர் கந்தர்வன் பிரகடனப்படுத்துவது போல. “சாராம்சத்தில் அந்தத் தத்துவங்கள் என்பவை விவரம் தெரிந்தவனே வீட்டிற்குள்ளேயே இரு என்பது தானே?..... அது எங்கள் வாழ்க்கை முறையில்லை. அதனால் அது பாடுபொருளும் இல்லை….விரக்தியை விதைக்க வேண்டியவர்க்கு கஞசா விற்கட்டும். எதற்குப் பேனாவை எடுக்கவேண்டும்? “(2) என்று நாம் உரக்கவே சொல்லிக் கொண்டுதான் ஒரு போராளிக்குரிய கம்பீரத்தோடு பேனாவை ஏந்துகிறோம்.
       புதிய உள்ளடக்கத்திற்கான போராட்டத்தில் பிறந்த புதுக்கவிதையின் வடிவத்தில் பழையகள் புதிய மொந்தை போல- சிலர் கவிதைகளை வழங்கிய கொண்டிருக்க 'கணையாழி' ‘ழ’ முதலிய (புதுக்கவிதைக்கு முக்கியத்துவ தந்துவந்த) இதழ்களோ உளறுவாயனைவிட ஊமையனே தேலாம் என்றாக்கி விடடன.
      ஆம் சிலநேரம் இவர்கள் இருண்மை படிவம் குறியீடு இவற்றின் பின்னணியில் தரும் கவிதா உத்திகள் சிலரது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியதன்றி வேறு வெகுஜனப் பயன் விளைவித்தாகத் தெரியவில்லை.
           “விக்கா வுக்கா வித்தா விப்போய் 
                விட்டா னட்டூர்; சுட்டூர் புக்கார் 
           இக்கா யத்தா சைப்பா டுற்றே 
                இற்றோ டிப்போய் வைப்பீர் நிற்பீர்” - பழைய ஒட்டத்தரின் மரபுப்பாட்டாவது விளங்கிலிடும் போலுள்ளது. புதுக்கவிதையின் ‘ஆத்மா நாம்’ தருகின்ற-
         ‘நிஜம் நிஜத்தை நிஜமாக 
         நிஜமாக நிஜம் நிஜத்தை
         நிஜத்தை நிஜமாக நிஜம் 
         நிஜமும் நிஜமும் நிஜமாக
         நிஜமோ நிஜமே நிஜம் 
        நிஜம் நிஜம் நிஜம்”- என்னும் கவிதையின் தத்துவ விளக்கத்தை எந்த அறிவு ஜீவியிடம் போய்க் கேட்பதோ தெரியவில்லை. ஆனால் எதுவும் புரியவில்லை என்பது மட்டும் நிஜம்.
         இவ்வாறு புதுக்கவிதையின் தோற்றமும் அவசியமும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும் தவறாக வழி நடத்தப்பட்டும் வந்ததால் மரபுக் கவிதைகளின் மீது மக்களின் நம்பிக்கை 1970 களிலும் கூட நீடித்து நிற்க முடிந்தது.
     அதே நேரத்தில் 70களில் கோவை வானம்பாடிகளின் வெளிச்சங்களாலும் பாப்லோ நெருடா மாயகாவ்ஸ்கி பாரதி ஆகியோரின் அடியொற்றிய முற்போக் கவிஞர்களின் கருத்தாழமும் உருவ எளிமையும் கொண்ட தமிழ்க் கவிதா முயற்சிகளாலும் மக்களின் நம்பிக்கை புதுக்கவிதைகளின் மீது வலிமையடைந்து வந்தது. ஆனாலும் இது பழம்பண்டிதர்களுக்கு அதிர்ச்சிய+ட்டுவதாகவே நீடித்தது. 
          எனவேதான்.
      “புதுக்கவிஞர்கள் சிலர் கூடி இலக்கணக் கட்டுக் கோப்பை உடைத்தெறி என்கிறார்கள். இந்தப் போக்கு நீடித்து மரபுகள் கெட்டு ஒரு தாறுமாறான நிலை ஏற்படும் இதைத்தடுப்பது புலவர் குழுவின் பொறுப்பு” என்று 1977 ஆம் ஆண்டி கூட அவர்கள் பும்பிக் கொண்டிருந்தார்கள்

புதுக்கவிதையின் பலமும்-பலவீனமும்
      “இந்தச்சீருக்கு அடுத்த சீரும் அடியும் இப்படித்தான் அமையவேண்டும். என மரபுக்கவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் என்ன ஒட்டத்திற்கு இடைய+று எனினும் படிப்போர் நினைவு நிறுத்தற்கு எளிது. ‘எந்தச் சீரும் எந்த அடியும் மிகுந்தும் குறைந்தும் வரலாம்’ என்பது புதுகவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு எளிது எனினும் படிப்போரின் நினைவில் நிற்காமல் வார்த்தைகள் மாறிப்போகும்.
         எனினும் சுமார் மூவாயிரம் ஆண்டுக்கால மரபுக்கவிதைகள் தராத தாக்கத்தையும் சமூக மாற்றத்துக்ககான கருத்து மோதல்களையும் சுமார் முப்பது நாற்பது ஆண்டுக்கால புதுக்கவிதைகள் தந்துவிட்டன என்றால் மிகையில்லை.
கவிஞரின் பலவீனமல்ல கட்டமைப்பின் பலவீனம் .
        “பாரதி கம்பன் வள்ளுவர் போன்ற சிறந்த கவிகளும் கூட இலக்கணத்திற்கு வளைந்து கொடுப்பதற்காகக் ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். ‘செல்வத்துள் செல்வம் செவிச்வெல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற குறளைப் பாருங்கள். முதல் முன்று சொர்களிலேயே கவிதையின் அர்த்தம் புலப்பட்டுவிடுகிறது. வெண்பா இலக்கண நிறைவிற்காக கடைசி நான்கு சொற்களைக் கவிஞர் பிடித்து இழுக்க வேண்டியுள்ளது. யாப்பு இலக்கண மரபுப்படி எழுதும்போது எவ்வளவு பெரிய கவிஞனுக்கும் இந்த இடைஞ்சல் வந்து விடுகிறது. (4) என்கிற விமரிசகர் பாலா அவர்களின் கூற்று மரபின் பலவீனத்தையும் புதுக்கவிதையின் பலத்தையும் எடையிடுவதாக உள்ளது.

        இதனால்தான் ஆசிரியப்பாவுக்குரிய நாற்சீர் ஓசையில் பாரதிதாசன் எழுதிய “இரவில் வாங்கும் இந்திய விடுதலை 
      என்று விடியுமோ யார் அறிகுவரே” (5)  எனும் மரபுக்கவிதை பறாத வெற்றியை. அதே கருத்தை எடுத்தாண்ட ஏ.அரங்கநாதனின்
“இரவில் வாங்கினோம் விடியவே இல்லை” –எனும் புதுக்கவிதை பெற்று  பிரபலமாகிவிட்டது.

புதுக்கவிதை வெற்றியும் தத்துவத் தோல்விகளும்:
        வடிவபலத்தோடு புதுக்கவிதை எழுதியவர்களும்கூட தத்துவ பலவீனங்களால் வெற்றி பெறாமல் போனதுதான் விபரீதம் 
பாரதிக்குப் பின்னால் புதுக்கவிதை முயற்சிகளில் வெற்றிபெற்ற வந்தவராகிய ந.பிச்சைமூர்த்தி அவர்கள்.
“பகுத்தறிவுச் சந்தையில்
ஓவ்வொருவரும் கையில்
முற்றுப் புள்ளிகளை
மூர்க்கமாய் வைத்துக்கொண்டு
மனத்தில் பட்ட துறையில்
முளையடித்துக் கொண்டிருந்தார்
சிலர்-சுருதியுடன்
சிலர் வருணாசிரமத்துடன்
சிலர் சங்க இலக்கியத்துடன்
சிலர் மார்க்ஸ் என்கல்சுடன்
வேறுசிலர் எதனுடனோ…
கமாத்தான் இருந்தது”
(6) என்று எழுதி ‘எதிலும் சேர்ந்துவிடாதே! நீ நீயாகவே இரு! என்பது போல உபதேசிக்கிறார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான யுத்தத்தில் நீ நியாயத்தைச் சாராமலே 'நடுநிலைமை'க் காப்பாற்று தனியாக இரு! ஸ்தாபனமாகி விடாதே நான் அப்படித்தான் இருக்கிறேன். –என்பதாக எழுதுவது யாரை பலப்படுத்த? நியாயத்தைச் சாராத நடுநிலை அநியாயத்திற்கான ஆதரவல்லவா? அரசியல் பேசாவே என்பதற்குள் ளிருக்கும் அரசியல் சார்பு போன்றதல்லவா இது? கவிஞா நீ எந்தக் கருத்தையும் பிராச்சாரம் செய்யாதே! எதையும் சார்ந்து நிற்காதே –என்கிற 'தூய்மை வாதம்' யாருக்குச் சார்பானது? பிரச்சினைகளில் ஈடுபடாதே! தீர்க்கத் தூண்டிவிடாதே பேசாமலிரு! எனும் கருத்து காட்டுமிராண்டி காலத்து ‘தவம்’ அல்லவா? 'துட்டரைக்கண்டால் தூரவிலகு' எனும் பழங்கருத்தைக் தூக்கி எறிந்துவிட்டு.
 ” பாதகம் செய்பவரைக் கண்டால்-நீ
   பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
   மோதி மிதித்துவிடு பாப்பா! -அவர்
  முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” என்ற பாரதியின் பிரிணாமம் பாரதிக்குப் பிறகு நம் காலத்திலேயே- இதுபோன்ற புதுக்கவிதைகளால் பின்னோக்கி இழுக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
இதுபோலவே புதுக்கவிதையிலும் புதுப்புது உத்தித அழகியல் சோதனைகளில் ஈடுபட்ட
“காதிக வீதியிலே
கருட வாகனத்தில்
உலோகப் பறவைகள்
ஒலி மலர் தூவ
வெண்புறாச் சிறகு
தோரண மாட
சுமாதான தேவதை
ஊர்வலம் வருகிறாள்”
என்பது போன்றும் “விளக்கு விசாரிக்கப்படுகிறது” என்னும் ஆசிரியப்போராட்டத்தில் சிறைக்குள்ளிருந்தும் சிறந்த கவிதைகளை எழுதிய அப்துல் ரகுமான் அவர்கள் - 
“தத்துவ சித்தாந்தம் லட்சியம் என்று ஒவ்வொருவனுக்கு ஓவ்வொரு சிறை” (7) என்று எழுதி எந்த சுதந்திரத்திற்காக கவிதாயுதம் ஏந்தி நிற்கிறோம் என்பதை மறைத்துவிடுகிறார்.

         ஆனால் இன்னொரு பக்கம் கூர்மையான சொற்ளோடும்  தொலைநோக்கு விஞ்ஞானப் பார்வையோடும் வரும் கவிதைகளை வெறும் கோஷம் என்று உதட்டைப் பிதுக்குவோர் இருப்பதும் கவனித்தற்குரியது. 
பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் கண்ணனையோ வர்ணணையோ பாடினால் ‘ஆகா’ இதுவன்றோ உயர்ந்த கவிதை ‘என்பதும்’ எதார்த்தமாகவும் கலையழவோடும் இருந்தால்கூட உள்ளடக்கம் பிரச்சனைகளையோ தீர்வுகளையோ கொண்டருந்தால் ‘அது வெறும் கோஷம்’ என்பதும் ஏமாற்றல்லாமல் வேறென்ன? 
இந்தவகை தூய இலக்கியவாதிகள் கபடவேடத்தையும் இனங்கண்டு.
“ஓம்சக்தி ஒம்சக்தி என்றேன்-இது
     உயர்ந்த கவிவார்த்தை என்றார்!
ஒங்குக புரட்சியெனச் சொன்னேன்-இது
     உளறல் வெறுங்கோலும் என்றார்” என்று. கவிதையாலேயே தோலுரித்துக் காட்டுகிறார் நமது வர்க்கக் கவிஞர் நவகவி

எளிமைப்படுத்துவது வேறு மலினப்படுத்துவது வேறு:-
       இளமைக்கு உரிய எள்ளலும் துள்ளலும் புதுக்கவிதைக்கும் பொருந்தி வருவது கண்டு வெம்பி போகின்றனர் வேடதாரி விமரிசகர்கள்.
பேருந்தின் ஒரு பக்கத்தில் ‘அடுத்த குழந்தை தாமதப்படுத்துங்கள்’ என்றும் எதிர்பக்கத்தில் ‘கால தாமதம் ஊழலை வளர்க்கும்’ என்றும் எழுதியிருப்பதைச் சொல்லி ‘இரண்டு வரிகளையும் அடுத்தடுத்ப்படியுங்கள் என்ன? சிரிக்கிறீர்களா? இதுதான் புதுக்கவிதை ‘ என்றுமேடையில்கிண்டல் செய்து காலட்சேபம் நடத்தும் புலவர் கீரன்கள் இன்றும் இருக்கிறார்கள்.
       இந்த வெறும் கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். ஆனால் ‘புதுக்கவிதையே இப்படித்தான் என்று கிண்டல் செய்வது எந்தநோக்கத்தில்?

கிண்டலுக்குப் பெயர் பெற்ற நமது கவிஞர் கந்தர்வன் 
“எம்.ஏல்.ஏ.சட்டையில்
சில பைகள் தைத்தார்
எம்.பி.சட்டையில்
ஏராளம் பை தைத்தார்
மந்திரி-
பையையே சட்iயாய்
மாட்டிக் கொண்டார்” என்று மேடையில் முழங்கும்போது சிரிப்பும் வருகிறது. சிந்தனையும் வருகிறது. இந்த வெற்றியைப் புதுக்கவிதையின் வெற்றியாக அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

ஆனால் பெரிய விஷயங்களைக்கூட கிண்டலாகச் சொல்வதாக எண்ணித் தடுமாறிப் போகும் பெரிய கவிஞர்களும் உண்டு.
“புதுக்கவிதை-
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா”  (திருத்தி எழுதிய தீர்ப்புகள்) என்று நறுக்காகச் சொல்லிப் புதுக்கவிதையிலும் வெற்றி பெற்ற மரபுக்கவிஞர் ரைமுத்து அவர்கள் நல்ல பல கவிதைகளைத் தந்தவர்கள்தான் ஆனானலும் இலங்கைப் பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு சொல்வதாக எண்ணி.
“அவன் தீர்க்க தரிசி தான்!
இந்திய தேசப்படத்தில்
இலங்கையையும் சேர்த்து
எழுதினானே!”(9) என்று எழுதி இலங்கையை இந்தியாவோடு இணைத்துவிடுவதுதான் பிரச்சனைக்குத் தீர்வு என்றும் எழுதி விடுகிறாh. இது என்ன? இந்தியாவில் ஏற்கனவே எத்தனை பிரச்சினைகள்? இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டது போலவும் இலங்கையை இணைத்துக் கொண்டால் அதன் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்பது போலவும்…. சரிதானா தீர்வு?

       கிண்டல் செய்யும்போதும் பிரச்சினைகளைப் பாடும்போதும் தத்துவத்தெளிவோடும் இலக்கியப் பயன்பாட்டோடும் பாடுகிற கவிஞர்களால்தான் மொழிக்கும் அதைப் பேசுகிற மக்களுக்கும் பயன் தர முடியும்.

போலிக் கவிஞர்கள்:- 
எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரவர் சமூகத்தின் விளைவு ஆவர். அவர்கள் மனிதர்களிடம் பேசுகிற மனிதர்கள். அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு சிற்ப்பம்சம் என்னவென்றால் அவர்களிடம் எழுச்சி கொள்கிற  உணர்ச்சி வேகத்தில் மக்களிடம் அவர்கள் கஷ்டங்களையும் அறியாமையையும் துன்பங்களையும் எடுத்துச் சொல்வதனால் மக்களுக்கு அவர்கள்ச் சுற்றியுள்ள அசிங்கம் எது.அழகு எது என்று புரிந்து கொள்ள உதவுகிறார்கள்” (10) என்பதற்கிணங்க அழகையும் அசிங்கத்தையும் அடையாளம் காட்டவந்த கவிஞர்களை தன்னைப் பற்றிய கர்வம் மீது எழுதி அழகைப்பாடும் அசிங்கங்களாகிப் போன சோகமும் புதுக்கவிதையில் உண்டு!

          காதல் தோல்விப் பொருளில் புத்தகம் புத்தகமாகப் புலம்பித் தீர்த்து மாணவக்கவிகளில் ‘கதாநாயகக் கவிஞராயிருப்பவர் மேத்தா அவர்கள். ஆரம்பத்தில் இவர் ‘கண்ணீர் பூக்களையே’ அதிகமாகச் சிந்திப் பிரபலமான “என்னுடைய பேனாவே என்மீது பெறாமைப்பட்டது” (ஊர்வலம்) என்ற கூறி மக்களைவிட உயரமாகப் போய்விடுகிறார். இப்போது புதுக்கவிதை எழுதாதே என்று கறுப்புச்ச சட்டங்களை இயற்றி வருகிறார்.
இப்பொதெல்லாம் புதுக்கவிதை எழுதுவது-மாலை நேர உலாப் போல இளைஞர்களின் பொழுது போக்காக மாறிவிட்டது. என்றாலும் ‘எழுதாதே’ என்று கூறுவதற்கு கவிதைச் சுரங்கம் யாருக்கும் குத்தகைக்கு விடப்படவில்லையே!
         ‘சுட்டியில் வெளிவந்த ஒரு கவிதையை தினமலர்-வாரமலரில் ஒரு பெண் திருடிப்போட்டு விட்டாள் என்று அங்கலாய்த்துக்கு கொண்டது-அந்தப்பத்திகை. உண்மை என்னவென்றால் சுட்டியில் வெளி வந்ததே திருட்டுக்கவிதைதான். திருப்பூர் நடராஜன் அவர்களின் 'விழிப்பு" இதழில் கவிஞர் டி.என்.துரை அவர்கள் எழுதிய
“எம்ப்ளாய்மெண்ட நிய+ஸ்” எனும் தலைப்பிட்ட
“வாராவாரம் வாங்கிச்சலித்த
அப்பாவி எம்.ஏ..கேட்டான்
அயுள் சந்தா எவ்வளவு? “ எனும் கவிதைதான் ஒரிஜினல்! இந்த மூளைத் திருடர்களைத்தான் தடை செய்ய வேண்டுமே யன்றி முளைக்குருத்துகளையல்ல 9 நூறு பூக்கள் மலரட்டும் என்பதுதானே நமது விருப்பம்!

‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்-
ஆடை வாங்குவதற்காக" -  என்று விலை மாதர்களின் நிலையை எதார்த்தகவிதையில் காட்டி ‘கறுப்பு மலர்களில் வெற்றி பெற்ற நா.காமராசன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களில் அனுபவ முத்திரைகளோடு ‘வளர்ந்த பிறகு திரைப்படப் பாடல்களிலேயே திருப்பங்களைத் தந்து மக்கள்கவியாக மலர்ந்திருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே 'கொச்சைக் கவிஞன்……அவன் பாடியது இலக்கியமே யாகாது" என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துவிட்டு இப்போது இவர் சினிமாவில் வரும்.’கிளப்பு’ டான்ஸ்களில் தத்துவம் படைத்து வருகிறார்.
       
முற்போக்குக் கவிஞர்களின் முன்னிற்கும் பணிகள்:-
        மேற்கண்டவாறு எளிமையிலும் ஆழத்திலும் இலக்கியப் பயன்பாட்டிலும் தெளிவோடு ருக்கும் முற்போக்குக் கலை இலக்கியவாதிகளின் முன் ஏராளமான கடமை காத்து நிற்கிறது.

        நமது முற்போக்குக் கவிஞர்களிடம் மட்டுமே பாரம்பரியமிக்க தமிழின் பரிணாமக் கருத்தான புதுக்கவிதை நமக்கே உரித்தான -- சொல் ஜாலமில்லாத எளிமை--  வரக்தியில்லாத வீரம் -- கிண்டல் நயம் -- தத்துவத் தெளிவு ஆகிய அனைத்தும் இணைந்து சொற்புனை நலத்தாலும் கற்பனை வளத்தாலும் சிறந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. 

      சுஜாதா போன்ற சுக இலக்கியவாதிகள் வேண்டுமானால் புதுக்கவிதையை நெல்லை கோவை வாணியம்பாடி சிவகங்கை எனும் நாலே திசைகளில் அளவிட்டு (12) நிறுத்திக் கொள்ளட்டும். அது நாம் போகும் திசையெல்லாம் வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே போவதை சுஜாதா அல்ல…சூரியனே நினைத்தாலும் தடுக்க முடியாது.

       முதலாளித்துவ ஜனநாயகத்தின் விளை;சலான புதுக்கவிதை அதன் உச்சகட்ட வளர்ச்சியில் அரசியல்-சமூக விடுதலை இயக்கங்களோடு இணைந்து சமத்துவ சமூகத்தை அமைப்பதை முதலாளித்துவத்தாலேயே தடுத்துவிட முடியாது.

         இவ்விடம்-நாம் நினைவிலிருந்த வேண்டிய கருத்து ஒன்று நம் இளைய கவிஞர்கள் ‘எழுது’ எழுது என எழுச்சியுறச் செய்யும் போதே ‘எழு’ உட்கார் என்பன போன்ற ஆணை கவிதைகள் அல்ல இன்றைய தேவை போர்க்குணமிகுந்த கருத்தும் பூக்களைப் போன்ற அழகும் இணைந்து வரும் எழுத்துகளே என்பதை உணர வைத்து இயக்கமாக-எழுச்சியுறச் செய்வதே அது!

கவிஞர் மீரா சொல்வது போல-
“ஆம்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது என் காலத்தில் ஒரு பாப்லோ நெருடாவை நான் இங்கும் பார்க்கத்தான் போகிறேன்.” (12)

விழப்போகும் சுவர் வண்ண மேல் பூச்சால் நிலைக்காது!
அழப்போகும் பசிக்குழந்தை அம்புலியைச் சுவைக்காது
தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்துவிட்டு;
எழப்போகும் புரட்சி இனி எவன் தடுத்தும் நிற்காது! (14)
--------------------------------------------------------------------------------------------------------------------------------- 




தினமணியில் வெளிவந்தது


'பெண்கள் இன்னும் சமத்துவம் பெறவில்லை"

கவிஞர் முத்துநிலவன் பேச்சு

(நன்றி: தினமணி- நாளிதழ்) 

           பெண்கள் கல்வி மற்றும் உழைப்பில் முன்னேறினாலும் வாழ்க்கையில் சமத்துவம் பெறவில்லை என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:
          
 ‘தாய்க்குலமே’ என்று தொடங்கி தாய் ‘மண்ணே வணக்கம்’ என்பது வரை பெண்களை பெருமைப்படுத்தும் நாடு நம் நாடு.
ஆனால் நீண்ட நெடுங்காலமாகவே பெண்களை பெருமைப்படுத்தும் படியான வாழ்க் கையை இந்த சமூகம் தந்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் இன்றைய நிலை.
            மேலும் புராண அதிகாசங்களில் சீதையும்  பாஞ்சாலியும் தங்கள் கண்ணீரிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டனர். வரலாறு முழுவதும் பெண்களின் வாழ்வில் வற்றாத கண்ணீரே வழிந்து ஒடக் கண்டோம்.
            இன்றைய பெண்கள் படிப்பாலும் உழைப்பாலும் உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும் அவர்கள் வாழ்வில் சமத்துவம் வந்து விடடதாக கூற முடியவில்லை
வேலைக்குச் செல்லும் பெண்களின் உழைப்பை ஆணாதிக்க உலகம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஆணுக்கு நிகராக வருமானம் பெனும் பெண்ணாக இருந்தாலும் அவள் வீட்டிலும் கூடுலகவே உழைக்க வேண்டி நினலயில் இருக்கிறாள்;;; .
           இது கண்ணுக்குத் தெரியாத நெருப்பு. இதை ஆணாதிக்க உலகம் கவனத்தில் கொண்டு ஏற்கவில்லை என்றால் இந்த சமத்துவ மில்லாத உலகத்தை ஒரு நாள் அந்த நெருப்பு எரித்துவிடும் என்பதை ஆணாதிக்க சமூகம் உணர வேண்டும் என்றார் கவிஞர் முத்துநிலவன்.
            நகர் மன்ற உறுப்பினர் சுப.சரவணன் தலைமை வகித்தார்.
            வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் ஏ.ரெஜினா முன்னிலை வகித்தார்.உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வாசுகி கவிஞர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மாரியப்பன் களப் பணியாளர் மலர்வேந்தன் ஒவியர் புகழேந்தி சகாயராணி மற்றும் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.



தினமணியில் வெளிவந்த எனது கடிதம்


‘சாதி ரீதியான தேசிய இனம்’: புதிய ஆபத்து!
(தினமணி -- 06.12.2000)

‘யாதவர்கள் தேசிய இனம்’ எனும் ஒரு புதிய ஆபத்தான கருத்தைத் தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் மா.கோபாலகிருஷ்ணனின் கடிதத்தில்  (தினமணி-22-11-2000) பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

அவரது கருத்தில் மூன்று வகையான தவறுகள் உள்ளன. முதல்தவறு: ‘சாதி ரீதியாக தேசிய இனம்’ என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் உலகின் எந்த நாட்டிலும் இல்லை.

தாய்மொழிவாரி தேசிய இனங்கள்தான் இருக்க முடியம்  தாய்மொழி வாழும்  இடம் பொருளியல்  தொடர்புகள் பண்பாட்டு நிகழ்வுகள் மன இயல்புகளில் பொதுப்பண்பைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகத்தையே ஒரு தேசிய இனமாக வரையறுக்க முடியும்.

இதில் விதிவிலக்குகளும் உண்டு – விதிவிலக்குள்தான். விதியல்ல. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு முன்னேறும் ஜனநாயகப் பண்பு உதாரணத்துக்கு ஒரு மாநிலத்தில் ஒரு தேசிய இனத்தவர் மட்டுமே வாழவேண்டும் என்று கூற முடியாது. அப்படிக் கூறுவது தேசிய இனவெறி! அதேபோல் ஒரு தேசிய இனத்தவர் ஒரு மாநிலத்தில் மட்டுமே  வாழமுடியும்  என்றும் கூற இயலாது-அது அறியாமை.

ஒரே தேசிய இனத்தைக் கொண்ட ஒரே ‘தூயதேசம்’ என்பது உலகின் எந்த நாட்டிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது.

தேசிய இன வரையறைகள் இப்படியிருக்க இந்தியா முழுவதும் பரவியரும் தேசிய இனமாக’ இவர் சொல்லும் சாதியினரை மட்டுமல்ல இந்தியாவின் எந்தச் சாதியினரையும் அடையாளப்படுத்த முடியாது.

இரண்டாவது தவறு: இரசியல் ரீதியாக வடநாட்டுத் தலைவர்களைத்  தமிழ்நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே ‘சாதி ரீதியாக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றானவர்கள் (?) ஏன் ஒரு தேசிய இனமாகக் கூடாது?’ என்பது. ஆரசியல் ரீதியாக வடஇந்தியத் தலைவர்கள் பலரைத் தென்னிந்தியர் ஏற்பதும் தென்னிந்தியர் சிலரை வட இந்திய மக்கள் ஏற்பதும் புதியதல்ல கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதும் கருத்துகளைக் கடைப்பிடிப்பதும் உலகமயமானது. வாழ்ந்தபோது நாடு கடத்தப்பட்ட தலைவர்களை இறந்தபிறகு நாடு நாடாக ஏற்று முன்னேறுவது தான் எல்லாம். இத்தாலிக்கோ ஜெர்மனிக்கோ இந்தியாவின் ‘தேசிய இன உறவு’ ஏற்பட்டுவிடாது.

மூன்றாவது தவறு: தொல்காப்பியர் காட்டும் ‘மாயோன்’ பற்றியது. தொல்காப்பியர் முல்லைநிலத்து ஆயர்களைப் பற்றி மட்டுமா முன்மொழிந்தார்? குறிஞ்சி நிலத்துக் குறவர்களையும் மருத நிலத்து உழவர்களையும் நெய்தல் நிலத்துப் பரதவர்களையும் பற்றியும்தான் பாடியிருக்கிறார்.

மேலும் சாதிப்பெயர்கள் அனைத்தின் மூலக்கூறுகளும் அன்றைய வேலைக் கூறுகளே அதை விடாமல் பிடித்துக்கொண்டு இன்றும் பெருமையோ சிறுமையோ பேசுவது உள்நோக்கமுடையதன்றி வேறில்லை என்பதுதான் வெளிப்படை.

‘நாம் எப்பேர்ப்பட்ட பெருமையுடையவர்! எத்தகைய பரம்பரை! என்று சாதிப்பெருமை பேசுவதும் ‘அத்தகைய எங்களை மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்களே? ‘என்பதும் எவ்வளவு முரண்பாடு!

இட ஒதுக்கீடு என்பது நின்று இளைப்பாற உதவும் நிழலாகத்தான் இருக்க முடியுமே தவிர அங்கேயே குடியிருக்க நினைப்பது ஆபத்தில்தான் முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------ 

இராம. கோபாலனுக்கு பாரதி சொன்ன பதில்!


இராம. கோபாலனுக்கு பாரதி சொன்ன பதில்! - நா.முத்துநிலவன்
தீக்கதிர் -- 22.09.1997


(டிசம்பர்-24. இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள்.
இன்னும் தலைவிரித்து ஆடிவரும் சாதியத்தின் அடையாளமாக ‘பரமக்குடி துப்பாக்கிச் சூடு’ நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஆயினும், ஆறுதலாக, அதுபற்றிய மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் நேற்று ஆணையிட்டடிருப்பதாகச்  செய்தி வந்திருக்கும் பின்னணியில், எனது முந்திய படைப்பு ஒன்றினை இன்று நம் தளத்தில் இடுகிறேன்…  --நா.முத்து நிலவன், 24-12-2011)


                        விநாயகர் சதுர்த்தி வந்தாலே முற்போக்குவாதிகள் ‘சாமியாட’  ஆரம்பித்து விடுவதாக இராம கோபாலன் கூறியுள்ளார்.
பேயோட்ட வருபவர்கள் சாமியாடுவது இவர்கள் வளர்த்த சம்பிரதாயம் தானே? இதற்கு வருத்தப்பட்டு எi;ன செய்;வது?
                       ‘இந்துக்கள் ஒன்று பட்டால் மற்றவர்களுக்கு ஏன் பதற்றம் ஏற்பட வேண்டும்? என்றும் கேட்கிறார். சரியான வழியில் ஒன்று பட்டால் சங்கடம் ஏதமில்லை. வெறியான. வகையில் வெகுண்டெழுந்தால்..? குழந்தையின் கையில் பொம்மைத் துப்பாக்கியிருந்தால் பயப்படுவது போல நடித்து மகிழ்வோம். அதுவே வீச்சரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்தால்…? அதற்கு ஆபத்து தானே என்று அஞ்சமாட்டோமா? அஞ்சுவது அஞ்சாமை பேதைமையல்லோ?
                      “சும்மா கூடுகிறார்கள்… திரட்டப்படவில்லை… அவர்களாகவே திரள்கிறார்கள்” என்று சொல்லித்தானே ‘டிசம்பர்-ஆறு’  நம் பாரதத்தாயின் நெஞ்சில் ஆறாத புண்ணாகிவிட்டது? இப்போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச வருவோரை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.
                    ‘இந்து இயக்கங்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்ற வாதம் அவர் சொல்வதுபோல வேடிக்கையானதல்ல. அயோத்தி சம்பவத்திற்குப் பிறகு இந்துக்களின் மத உணர்வை வெறியாக தூண்டிவிட்டு இவர்களின் கூட்டாளிகள் அரசியல் வாபம் அடைந்தார்களா இல்லையா?
                       இராவணனும் சீதையும் ஒரே கட்சியில் சேர்ந்ததும் ஜெயித்ததும். ருhமன் - பாவம்-தோற்றப்போனதும் இவர்களின் அரசியல் கூனித்தனமன்றி வேறென்ன? ‘டெல்லி செங்கோட்டையின் -வழி அயோத்தி’ என்பதுதானே இவர்களின் ‘மத்திய ‘ நோக்கம்?
அகில இந்திய அளவில அம்பேத்காரும். வேறு பல தேசபக்த இயக்கங்களும். தமிழக அளவில் பெரியாரும். பி. ராமமூர்த்தியும் ஜீவாவும் போட்டு வளர்த்த சமத்துவ சமூக விதைகளை அழித்து குழிபறிக்கும் வேலையைச் செய்யவரும் குள்ள நரிகளுக்கு இப்போது ‘செயின்ட்-ஜார்ஜ் கோட்டை தான் மாநில நோக்கம் - வழி விநாயகர் வெறி என்பது புரியாதா என்ன?
                       விநாயகர் ஊர்வலம் நடத்துவது இரண்டு காரணங்களுக்காக என்கிறார்.
                       ஓன்று – தெய்வ பக்தியை வளர்ப்பதாம்.
                       இதை வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் பச்சைக் குழந்தைகளும் விரும்பம் ‘பால விநாயகக் கடவுளை சூல விநாயக’மாகவும் வீர விநாயக ராகவும் ஆயதமேந்திவரச் செய்வது-ஒரு புகைப்படத்தில் வந்தது போல – ஏ.கே.47 ஏந்திவரச் செய்வது கூட ‘மாடர்னைஸேஷனா’ சுவாமிகளே! என்ன பிதற்றலிது!
                     இன்னொன்று – தேச பக்தியை வளர்க்கவாம்! 90 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதி உடைத்து நொறுக்கிவிட்டபிறகும் வைக்கப்படும் உளுத்துப் போன வாதமிது!
                     இராம. கோபாலன் சொல்வது போல விநாயகர் ஊர்வலத்தைப் பயன்படுத்தி இந்துக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் திலகர்தான்.
                    அதுபற்றி மட்டுமல்ல துர்க்கா ப+ஜையை பாரதமாதா வீர வழிபாடாகவும் சிவாஜி மகோத் சவத்தை சுதந்திர உணர்வைச் சுண்டியெழுப்பும் விதமாவும் வடமாநிலங்களில் நடத்திய போது இதன் ஒரு பகுதி எழுச்சியை வரவேற்ற பாரதி மறுபகுதியில் வீர சுந்திரம் வேட்கையோடியிருந்த முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் தனிமைப்பட்டுவிட்ட அபாயத்தை அடையாளம் கண்டு எழுதியதை ஏன் மறைக்கிறீர்கள்!
                  பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை தலையங்க வரிகளைப் பாருங்கள்:
“பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த சகோதரர் என நமக்குள் சிறு சச்சரவுகளை கிஞ்சித்தேனும் நினையாமல் நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை  எல்லாரும் ஒன்று  சேர்ந்து ப+ஜிப்பதே நமது கடமை இதை நாமெல்லாரும் நமது மகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்’’ – (இந்தியா – 23.6.1906)
                       “இந்திய ஹிந்துவுக்கு  மட்டும் சொந்தமில்லை. மகமதியருக்கும் சொந்தமே. பொது மாதவாகிய பாரததேவியின்  பொது நன்மையையே கவனிக்க வேண்டுமெயல்லாமல் ஜாதி மத குல பேதங்களைப் பாராட்டி தேசத்தை மறக்கும் மனிதனை பாரததேவி சர்வ சண்டாளராகவே கருதுவாள்” – (இந்தியா-11.8.1906)
                         அவ்வளவுதான் வேறென்ன சொல்ல?
                          பாரதியே பதில் சொல்லிவிட்டுப் போன பழைய கேள்வியை எழுப்பி – மதங்களில் பேரால் அடித்துக் கொண்டு நானும் அக்கம் பக்கத்து நாடுகளைப் பார்த்து தெளிவடையாமல்- நூறாண்டுக்குப் பின்னுக்கு இழுக்கும் வேலையை பிற்போக்கு மதவாதிகள் இனியாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
                        கலைஞரின் பராசக்தி வசனம் இன்றும் பொருந்துகிறது கோயில் கூடாது என்பதல்ல கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.                        
                         சமுதாய மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் சொல்லிவந்தது போல – ஆன்மீகமும் தேசபக்தியும் மோதுமிடம் வருமானால் தேசபக்தியின் பக்கம் நிற்பவனே இன்றைய இந்தியாவுக்குத் தேவை.
                         தெய்வ பக்தியின் பேரால் தேசபக்திக்கு ஊறுவிளைவிப்போர் அவர்கள் வணங்கும் தெய்வத்துக்கும் ஊறுவிளைவிப்பவரே என்பதை மத அடிப்படைவாதிகள் உணரவேண்டும். அவர்கள் உணராதது போல நடித்து அப்பாவி மக்களை ஏமாற்றும் வரை – முற்போக்கு வாதிகள் சாமியாடிக் கொண்டுதான் இருப்போம்.

எனது புதிய அரசியல் கட்டுரை


கேரளாவில் தேசியக் கட்சிகள் இல்லையோ?
--நா.முத்து நிலவன்--

           இந்தியா ஒரேநாடு, இந்திய மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மையானால், முல்லைப் பெரியாறு தொடர்பாகத் தமிழர்களுக்கு எதிராகவே இவர்கள் தொடர்ந்து செயல்படுவது ஏன்? – எனும் நியாயமான கேள்வியை திரு பழ.நெடுமாறன் அவர்கள் எழுப்பியள்ளார்கள் (தினமணி-14-12-2011)

           ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இன்றைய கேரளாவும் தமிழ்நாடும் ஒரே மொழிபேசும் ஒரே தேசிய இனமக்கள் வாழும் பகுதியாகத்தான் இருந்தன என்பதை நம் கேரளச் சகோதரர்களும் ஒப்புக்கொள்வார்கள். நம் சங்க இலக்கியத்தில் வரும் சேர-சோழ-பாண்டிய ‘மூவேந்தர்’களில் சேரமன்னர் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரள மாநிலம் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

           ஆனாலும் 1956இல் மொழிவழி மாநிலங்கள் பிரிந்த பிறகு, அந்தச் சகோதர உணர்வை இருவரும் மறந்து, இன்றைய ‘முல்லைப் பெரியாறு’ பிரச்சினை இருநாட்டுப் பகைபோல ஆகி, ‘நாம் இருவரும் முரண்பட்டால் நட்டம் இருவருக்கும்தான்’ எனும் நினைப்பே இல்லாமல் ‘சுயநல அரசியல்’ எனும் சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை என்ன சொல்ல?

           ஆங்கிலேய ஆட்சியில் இராணுவப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்த கர்னல் பென்னி குக் எனும் நன்மனத்தார், தான்வந்த -இந்தியமக்களைச்சுரண்டும்- வேலையை மறந்து, ‘தென்னிந்தியாவின் அந்தப்பக்கம் பெய்யும் பெருமழைநீர் பெரியாறு எனும் ஆறாக ஓடி வீணாகக் கடலில் கலப்பதையும், இந்தப் பக்கம் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் நீரின்றித் தரிசாகித் தவிப்பதையும் கவனித்தார்.

          ஏற்கெனவே --1798இல்-- ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு மற்றும் பெரியாறு நதிகளை இணைத்து அணைகட்டுவதன் மூலம் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்குத் தண்ணீர் கொண்டுவர முயன்று, பின்னர் கைவிட்ட திட்டத்தைத் தான்எடுத்துச் செயல்படுத்திட முன்வந்து, ஆங்கில அரசின் அனுமதியையும் பெற்றுவிட்டார் பென்னி.

          1887இல் எழுபத்தைந்து லட்ச ரூபாய்த் திட்டமதிப்பீட்டில் வேலையைத் தொடங்கி.  அடர்ந்த காடு, பெருவெள்ளம், காட்டு விலங்குகள் தந்த அச்சம் இவற்றுடன் போராடி, மூன்றாண்டுகள் கட்டிய அணை பெருமழை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது! அதன் பின்னரும் அசராத பென்னி, அரசின் உதவியும் கிட்டாத நிலையில் இங்கிலாந்து சென்று தன் சொத்துகளையெல்லாம் விற்றுக் கொண்டுவந்த பணத்தில் அணையை மீண்டும் கட்டி முடித்தார் என்பது ஏடறிந்த வரலாறு

          ஆங்கிலேயரான பென்னி குக் எனும் அந்தப் புண்ணியவான் கட்டிய ‘முல்லைப் பெரியாறு’ அணையை 1895டிசம்பர் மாதம் சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் என்பவர்தான் திறந்து வைத்தார் எனும்செய்தி இன்றைய ‘சுயநல அரசியல்வாதி’களுக்குத் தெரியுமா?

           152அடிவரை -முழுக்கொள்ளளவும்- நீரைத் தேக்கிவந்த அணையில் மாநிலப் பிரிவினைக்குப் பின், பல்வேறு காரணங்களைக் கூறி தற்போது 120 அடியிலேயே நீரளவை நிறுத்திவிட்டது கேரள அரசு. இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் 142 அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்று 2006இல் வழங்கிய தீர்ப்பை இன்றுவரை நடைமுறைப்படுத்தவிடாமல் இழுத்தடித்து நம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருவதை அங்குள்ள எந்தத் தேசியக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.

           இந்தப் பிரச்சினை இப்போது திடீரென்று புயலாக எழுந்து வீசக் காரணம் என்ன?
           ஆளும்கட்சி அமைச்சராக இருந்த ஜேக்கப்பின் மறைவால் வரப்போகும் இடைத்தேர்தல்தான்!
           ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலால் இவ்வளவு பெரிய பிரச்சினையை அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து அரசியலாக்கிடக் காரணம் இருக்கிறது!

           ‘சரி, இடைத்தேர்தல் என்றால் ஓரே ஒரு தொகுதிதானே? அதற்கா இவ்வளவு கலவரம்!’ என்று கேட்கலாம்… ஆனால் அந்தத் தொகுதியால் ஆட்சியே மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதுதான் சுயநல அரசியல் சுழலின் மையம்.

           140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், இப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு 72இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு 68இடங்களும் உள்ளன. அமைச்சர் ஜேக்கப்மறைவு, சபாநாயகர்ஒருவர்  எனும்நிலையில்; காங்கிரஸ்கட்சி; 70இடங்களுடனும், எதிர்க் கட்சிகள் 68இடங்களுடனும் உள்ளன. ‘வெறும் 174வாக்குகளில் இழந்த இந்த ஒரு தொகுதியையும் எதிர்க்கட்சி பிடித்துவிட்டால்?’ 70–69 எனும் நிலையில் ஆளும்கட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரும். அந்தத் தொகுதி இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியையும் உள்ளடக்கிய ‘பிரவம்’ தொகுதி. அந்த இடைத்தேர்தல் அனேகமாக வரும் ஜனவரி மாதம் நடக்கலாம். அதற்குள் ‘களத்தை’த் தயாரிக்கும் ‘அரசியல் பணி’தான் இப்போது நடக்கிறது!

          இப்போது புரிகிறதா –
         முல்லைப் பெரியாறு அணையின்
         ‘அரசியல் முக்கியத்துவம்’?

          கேரளாவின் இன்றைய ஆளும் கட்சி, தனது ஆட்சி அதிகாரத்தைத் தொடரவும், எதிர்க்கட்சி  தான் இழந்திருக்கும் அதிகாரத்தைப் பிடிக்கவும் நடத்தும் போட்டியில் பலியாவது தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாடும்தான் என்பது புரிகிறதா? இவர்களின் ‘சுயநல அரசியல் போதை’க்கு நாம் என்ன ஊறுகாயா?  இவர்கள் தங்களை ‘தேசிய மற்றும் சர்வதேசியக் கட்சிகள்’ என்று சொல்லிக் கொள்வது நியாயம்தானா?

         இவர்கள் தமது கட்சிகளின் முன்னோடிகளிடமாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
         காங்கிரஸ்காரர்களான காமராஜர், ராஜாஜி ஆகியோரும், கம்ய+னிஸ்ட்களான இ.எம்.எஸ்., பி.ராமமூர்த்தி ஆகியோரும் இணைந்து, இரு மாநில மக்களும் பயன்படத்தக்க ‘பரம்பிக்குளம் ஆழியாறு’ திட்டத்தை 1958இல் கொண்டுவந்தது இன்றைய கேரளத் தலைவர்களுக்குத் தெரியாதா?

         தமிழ்நாட்டின் ‘மூத்த பொறியாளர் சங்கம்’ தயாரித்துள்ள ‘முல்லைப் பெரியாறு- பிரச்சினையும் தீர்வும்’ எனும் அருமையானதொரு 42நிமிட ஆவணப் படத்தை இணையத்தில்கூடப் பார்க்கலாமே (http://player.vimeo.com/video/18283950?autoplay=1) இதையாவது அந்தத் தலைவர்கள் போட்டுப் பார்த்தார்களா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை, நமது தமிழக மக்களே சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறபோது, ‘டேம்-999’ எனும் ‘மாயாஜால-விட்டலாச்சாரியார்’ படத்தைச் செலவு செய்து எடுத்து மக்களைக் குழப்பும் வேலையில் கேரளா வெற்றிபெற்று வருகிறதே! இதற்குத் தடைவிதித்ததை விடவும், நமது ஆவணப்படத்தைக் கிராமம் கிராமமாகக் கொண்டுபோய்த் தமிழக அரசு காட்டியிருந்தால் குறைந்த பட்சம் தமிழர்களையாவது தெளிவுபடுத்தியிருக்கலாமே?

           சரி ‘டேம்-999’படத்தில் வருவது போல, அணையே உடைந்தாலும் கூட, ‘முல்லைப் பெரியாறு அணையில் தேக்கிவைக்கக் கூடிய நீர் அளவைவிட 7மடங்கு தாங்கக் கூடியதாக அதன் கீழிருக்கும் இடுக்கி அணை உள்ளது உண்மைதான்’ என்று கேரள அரசின் அட்வகேட் ஜெனரலே  கேரள உயர்நீதிமன்றத்தில் --ஒப்புதல் வாக்குமூலம் போல-- சொன்னதைக் கூட அவர்கள் ஏற்கவில்லையே?

          அணை உடைந்தாலும், அந்த வெள்ளம் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து கீழே உள்ள இடுக்கி அணையைத்தான் வந்தடையப் போகிறது. இடையில் எந்த நாடும் நகரமும் இல்லை 35லட்சம் மக்கள் அழிந்துபோவாரகள் என்பதும் மிகைப்பட்ட கதை! உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி நீர்மட்டத்தைக் குறைத்த காரணத்தால் ஏற்பட்ட ஆற்றுப் படுகைகளில் அத்துமீறி வீடுகட்டி வாடகைக்கு விட்டிருக்கும் 450 ‘ஆக்கிரமிப்பு’கள்தாம் பாதிப்படையும்! அதையும்கூட எளிதாகக் காப்பாற்றிவிட முடியும். இந்த உண்மையைச் சொன்னதற்காக கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் மேல் பாய்ந்து அவரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று  குரல்கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தனார்தானே?

          கேரள அரசின் இன்றைய பிரச்சாரங்களில் முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவு 136அடிதான் என்றே திரும்பத்திரும்பச் சொல்லி வருவது பச்சைப்பொய் அல்லவா? ‘152அடிக் கொள்ளளவில் 142அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம்’ என்னும் 2006 உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் கேரளத் தலைவர்களில் ‘தேசியவாதிகள்’ யாருமே இல்லையா?

          புதிய அணை கட்டுவதற்கான மசோதாவிற்கு கேரள அரசின் அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரவு! ஆளும் கட்சிக்கு ஒருபடி முன்னே போய் அதற்கான நிதிவசூலில் இறங்கப் போவதாகவும், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் முழங்குகிறார்!

          ‘தமது ‘தேசியஉணர்வும் ஒன்றும் குறைந்ததல்ல’ என்று காட்டிக்கொள்ள முனைந்த கேரள பா.ஜ.க. இளைஞரணியினர் இதுவரை யாருமே போகாத அடர்காட்டுப் பின்வழியில்  சென்று அணையைச் சேதப்படுத்தும் ‘கரசேவை’யை கடந்த வாரம் மேற்கொண்டார்கள். அவர்களும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பற்பல தொகுதிகளில் 50,000வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறார்களே! அவர்களுக்கு இடைத்தேர்தலிலாவது வெற்றிபெற வேண்டும் எனும் வேட்கை இருக்காதா என்ன?

          ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் கூட, புதிய அணை கட்டக் குறைந்தது 5ஆண்டுகளாவது ஆகும்;. அதுவரை 120அடிக்கு மேலே முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்காமலிருக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிக் கொடுத்த மனுவை உச்சநீதிமன்றம் நல்;லவேளையாகத் தள்ளுபடி செய்துவிட்டது. இல்லையென்றால், அந்த 5ஆண்டுகளும் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி வாழும் 2லட்சம் விவசாயிகளின் வாழ்க்கைக்கு யார் உத்தரவாதம் தருவது? சுமார் 5லட்சம் மக்கள் குடிநீருக்கு எங்கே போவார்கள்?

          ‘புதிய அணையின் மூலம், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் நீரளவில் ஒருசொட்டுக்கூடக் குறையாமல் பார்த்துக்கொள்வோம்’என்று கேரளஅரசு சொல்வதையும், இதற்காக 700கோடி ரூபாய் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக அவர்கள் சொல்வதையும் எப்படி நம்புவது? ‘தமிழகத்திற்கு நீர், கேரளாவிற்குப் பாதுகாப்பு’ என்று முழங்குகிறார் கேரள முதல்வர். ஏற்கெனவே தரவேண்டிய நீரளவையே தராதவர்கள் புதிய அணைகட்டியா தந்துவிடப்போகிறார்கள்? பகலிலேயே பசுமாடு தெரியவில்லை என்பவர்கள் இருட்டில்போய் எருமை மாட்டைத் தேடித் தருவார்களா என்ன?

           2006ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்த மசோதாவின்படி, ‘கேரள நதிநீர்ஆணையத்தின் நடவடிக்கை இந்தியாவின் எந்த நீதிமன்றச் சட்ட வரம்புக்கும் உட்பட்டதல்ல’ என்று சொல்லியிருப்பது, ‘கேரளா தனி நாடு’ என்று கேரளத் தலைவர்கள் நினைப்பதாகத்தானே படுகிறது? கேரளா இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லையா? அங்குள்ளவர்கள் இந்தியர்கள் அல்லரா? கேரளாவில் தேசியக் கட்சிகளே இல்லையா? என்று கேட்கத் தோன்றுவது நியாயம் தானே?

          புதியஅணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த மத்தியஅரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்பதும், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் அரசியல் அமைப்பு பெஞ்ச் விசாரணை நடத்திவந்தாலும், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்பதும், மிகுந்த அரசியல் தொடர்புள்ளது அல்லவா? மாநில அரசு ‘பிள்ளையைக் கிள்ளி விடுகிறது’ மத்திய அரசு ‘தொட்டிலை ஆட்டிவிடுகிறது’ என்பது, அரசியலில் அரிச்சுவடி படித்துவரும் ‘கைப்புள்ளைக்கு’க் கூடப் புரியாதா என்ன?

         கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பிரதமரைச் சந்தித்துவிட்டார்கள்! ‘ஆகா! என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!’ என்று ‘டூயட்’பாடாத குறைதான் போங்கள்!

          தமிழக முதல்வரின் அறிக்கைக்கு அடுத்த நாளே கேரள முதல்வரின் பதில்! அடடடா! கேரள முதல்வரின் ‘இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே தீர்வேன்’ எனும் சுறுசுறுப்புத்தான் என்னே!

          இங்கே தேனி கம்பம் உள்ளிட்ட தமிழகத்தின் கேரள எல்லையில் உள்ள மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு பல ஆயிரம் பேர் -தமிழ்நாட்டின் எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் --தாமாக ஊர்வலம் போவது தொடருமானால், இது ‘சேர – பாண்டிய’ நாடுகளின் போர்போல் ஆகிவிடக்கூடிய அபாயத்தை கேரள அரசியல்வாதிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!

          அங்கே அவர் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதியஅணை கட்டியே தீர்வேன் என்பது, ‘அடைந்தால் மகாதேவி… இல்லையேல் மரணதேவி… உறா உறா உறா’ என்ற பழம்பெரும் நடிகர் வீரப்பாவின் வீரவசனத்தை நினைவூட்டுகிறது என்றால், நம் தமிழ்நாட்டில் அவரது கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ‘புதிய அணைக்கு எதிரான போராட்டத்தைத் தேனியில் இருந்து துவங்கி வைப்பது’ என்பது ஒருபடி மேலே போய், ‘அடிப்பியோ… ஙொப்பன் மவனே.. சிங்கம்’டா’ எனும் புகழ்பெற்ற நகைச்சுவை வசனத்தையே நினைவூட்டுகிறது…

            நல்லவேளையாகக் கடந்த 50ஆண்டுகளாகத் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கருத்தே மேலோங்கி இருந்து வந்த போதிலும், தமிழர்களிடம் என்றென்றும் ‘தேசிய - சர்வதேசிய உணர்வு’ மங்கியதே இல்லை. இன்றும் தமிழ்நாட்டில் இருக்கும் கேரளக்காரர்களின் வணிக வளாகங்களில, ; சில இடங்களில் சிலர்-பலர் கலவரத்தில் ஈடுபட்டாலும் அதைப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்கவில்லை என்பதுதானே உண்மை?
         இதுதான் தமிழ்நாடு!

          ஆனால், ‘திராவிட ‘இனவெறிக் கட்சி’ ஏதும் இல்லாத கேரளாவில்(?)’ தேசியக் கட்சிகளே அந்தக் குறையை நிவர்த்திசெய்து வருகின்றன என்பதுதான் சோகச்சுவைமிக்க முரண்பாடு!

          இதற்கிடையில் நாம்…
                 ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே
                       சேரநன் னாட்டிளம் பெண்களுடனே – எனும் பாரதி பாடலையும்,
              ‘இமயம் வாழும் ஒருவன் இருமினால்
         குமரி வாழ்வோன் மருந்துகொண்டு ஓடுவான்’ – எனும் பாரதிதாசன் பாடலையும் விடாமல் பாடுவோம். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை ஏனெனில் கேரளாவில் மாத்திரமல்ல, நம் தமிழ்நாட்டிலும் தேசியக் கவிகள் மட்டுமல்ல, தேசியக்கட்சிகளும், தலைவர்களும் இருக்கிறார்களே!

தினமணிக் கதிர் இதழில் நேர்காணல்


கவிதையின் பொற்காலம் எது? 
தினமணிக் கதிர் இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்

முகாம்களாவும் முகங்களாவும் திரண்டு முரண்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தமிழ்க் கவிதை உலகம் முரண்படுவது என்பது மனிதகுல வாழ்க்கையின் ஒர் அங்கம்தான். எனினும் முரண்படுவதே வாழ்க்கையாகிவிட்டது நமது தமிழ்க் கவிஞர்களுக்கு. எல்லோரையும் ஏற்றுக் கொள்ள முடியாதவராகி விடுகிறார்கள். இலக்கியத்தால் முரண்படுவது என்கிற நமது முன்னோர்களின் மரபு தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வளர்ந்து வளர்ந்து இன்றைக்குக் குடுமிப்பிடிச் சண்டையாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது.’எது கவிதை என்று காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைவதுதான் ஒரே வழி என்கிற முடிவுக்கு இன்றைய பல கவிஞர்கள் வலுக்கட்டாயமாத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலைலையில் நேற்றைய தமிழ்க் சங்க காலம் தொடங்கி இன்றைய சாதிச் சங்க காலம் வரையிலான தமிழ்க் கவிதையின் வரலாற்றை ஆய்வு செய்து தொகுத்து வழங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன். தான் மேற்கொண்டிருக்கும் ‘கவிதையின் கதை’ என்கிற ஆய்வுத் திட்டப் பணிகளைப் பற்றி நீண்ட நேரம் நம்மிடம் மிகத் தெளிவாக விளக்கினார் அவர்.
இப்படியொரு முயற்சியில் நீங்கள் இறங்கக் காரணம் என்ன?
தமிழ்க் கவிதையின் வரலாறு நெடுகிலும் ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளாத போக்கு பரவலாகக் காணப்படுகிறது. தனக்குப் பிடிக்காத ஒரு வடிவத்தில் பொதிந்து மிளிரும் கவிதையைப் பார்க்கவோ பாராட்டவோ தவறிவிடுகிறார்கள். மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைகூ ஆகிய மூன்றிலும் கவிதை இருக்கிறது. அல்லது இல்லாமலும் இருக்கிறது. பண்டிதர்கள் புதுக்கவிதையை ஒதுக்குவது அநியாயம். அது கவிதையே அல்ல என்பது அதைவிட அநியாயம். தமிழ்ச் செய்யுள் தொடங்கிய காலம் முதல் இன்று வரை தமிழ்க் கவிதையின் பரிணாம வளர்ச்சிப் போக்குகளை ஒருசேரத் திரட்டித் தர வேண்டியது இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. மூன்றையும் சேர்த்து எழுதினால்தான் நியாயம் கிடைக்கும் என்பதால் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன் இப்படித் தமிழ்க் கவிதைகள் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எழுதப்படவில்லையா?
உ.வே.சா.. தொ.பொ.மீ.. மு.வ.. தமிழண்ணல் சி.பாலசுப்பிரமணியம் போலும்  தமிழறிஞர் பலரும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளனர். இந்த ஆய்வுகளில் அவ்வளவாகப் புதுக்கவிதை இடம்பெறவில்லை. ஹைகூ இல்லவே இல்லை.
வல்லிக்கண்ணன் பாலா தமிழவன் போன்றவர்கள் புதுக்கவிதைப் போக்குகள் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கின்றனர். அப்துல்ரகுமான். நிர்மலா சுரேஷ் அறிவுமதி சுஜாதா ஆகியோர் ஹைகூ கவிதைகளைப் பற்றிநிறைய எழுதியிருக்கின்றனர். இப்படியாகக் கவிதையின் தனித்தனி வடிவங்கள் தனித் தனியாகத் தாலாட்டப் பட்டிருக்கின்றன.
மூன்றையும்சேர்த்துத் தாலாட்டுவதுதான் முழுமையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
எத்தகைய கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் உங்கள் ஆய்வில் இடமளித்திருக்கிறீர்கள்?
எந்த வடித்தில் எவர் எழுதியிருந்தாலும் அந்த வடிவத்தில் கவிதையும் புதியதொரு சிந்தனையும் இருந்தால் தயங்காமல் எனது ஆய்வில் அவற்றை இணைத்துக் கொள்கிறேன். பத்தரைக்கம்பன். நாலரைக்கம்பன் என்றெல்லாம் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு கவிதையென்பது வரிக்கணக்கு என்று புரிந்து கொண்டு எழுதித் தள்ளுகிறவர்களை என் ஆய்வில் வருத்தமுடன் தவிர்க்கிறேன். அதே நேரத்தில் ‘கல்லானால் ரோட்டுக்கு. புல்லானால் மாட்டுக்கு’ என்று புதியதொரு புருஷ இலக்கணத்தை வகுத்திருக்கும் முகம் தெரியாத ஒரு கல்லூரி மாணவிணையும் ‘மாமனார் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார். மருமகன் உலகச் சந்தையில் இந்தியாவை விற்கிறார். என்று எழுதிய அறியப்படாத ஓர் இளைஞனையும் ‘இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்த கஷ்டப்படுவதே காதல்’ என்று ஒரு நேர்காணலின்போது சொன்ன நடிகை அர்ச்சனாவையும் நான் விட்டுவிடவில்லை.
இது கவிதைகளின் தொகுப்பல்ல அறிஞர் ரா.பி.சேதுபிள்ளை 1960-ஆம் ஆண்டு ‘தமிழ்க்கவிதை களஞ்சியம்;;’ எனும் நூலைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கும் வேலையைச் செய்து விட்டார். அதுவும் நியாயமான பங்கீட்டில் தொகுக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.
கவிதையின் பொற்காலம் எது?
கவிதை வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளைவிடக் கடந்த முப்பது ஆண்டுகளின் வீச்சு அதிகமாக இருக்கிறது. ‘திருக்குவளை இருந்தென்ன இரு குவளை இருக்கிதே’ என்கிற மா.காளிதாஸ் கவிதை கலைஞரையே கலங்கச் செய்யும் என்பதுதானே உண்மை.
புதுக்கவிதை வரலாற்றில் அதன் வீச்சை எப்படி உணர்கிறீர்கள்?
புதுக்கவிதை அறிமுகமான (1930) ‘மணிக்கொடி’ காலத்தில் கவிதைகள் தூவானம் போலச் சிதறியது. ‘எழுத்து’க்காலம் என்றழைக்கப்படுகிற 1950-களில் கவிதை மழை போலப் பொழிந்தது. ஆயினும அது மக்களிடம் போய்ச் சேரவில்லை 1970-களில் வந்த ‘வானம்பாடி’களின் கவிதைகள் மக்கள் இயக்கமாகிப் ‘புயல்’ போல வீசியடித்து ஓர் இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தன. 1980-களில் இந்தக் கவிதைச் சுதந்திரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஏராளமான கவிதைகள் ‘உற்பத்தி’ செய்யப்பட்டன. அதன் விளைவாக நீர்த்துப்போய்க் காணப்பட்ட கவிதை 1990-களில் மீண்டும் ‘புயலாக’ வடிவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது. வானம்பாடிகளின் எழுச்சி வீண்போகாமல் தமிழ்க் கவிதைகளில் இப்போது அதிசயிக்கத்தக்க அருமையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்க் கவிதைகளின் பொற்காலம் 1990-களில் தொடங்கித் தொடர்கிறது என்பதுதான் என் ஆய்வுகள் சொல்லும் உண்மையாக இருக்கிறது.
புரியாத கவிதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாம் புரிந்த பின்னாலும் சிந்தனையைத் தொட்டுச் சிலிர்ப்பதுதான் கவிதை. ஆனால் ‘எதுவுமே புரியாமல் இருப்பதுதான் கவிதை’ ‘எந்த அளவுக்குப் புரியவில்லையோ அது அந்த அளவுக்கு நல்ல கவிதை’ என்பது போன்ற புரிதல் வியாக்கியானங்களும் இங்கே  தாப்படுகின்றன. இது ஏதோ புதுக்கவிஞ்ர்களின் புலம்பல் அல்ல. மாபுக்கு இந்த மரபு உண்டு. புரியாத கவிதைகள் குறித்து அதிகம் பேசப்படுவதால் அதில் மயங்கிப் பல கவிஞர்கள் இப்படி எழுதத் தொடங்கி விட்டார்களோ என்று எண்ணத் கோன்றுகிறது. மரபில் புரியாமல் எழுதும் வழக்கம் இருந்தது புதுக்கவிதையிலும் அதுநீடிக்கறது. இதில்ஏதாவது அர்த்தம்இருக்குமோஎன்று குழம்ப  வைக்கிறார்கள்.
நீங்கள் ஒரு முகாம் சார்ந்த படைப்பாளியாக இருக்கிறீர்கள. இந்த நிலையில் ‘பாரபட்சமற்ற முறையில்’ என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?
நான் ஒரு முகாமைச் சார்ந்தவன் என்பது உண்மைதான். ஆனால் ‘கற்றுணை பூட்டியோர் கடலுள் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிலாயமே’ என்று திருநாவுக்கரசர் பாடும்போது தமிழ்க் கவிதைதான் திருநாவுக்கரசரை முந்திக்கொண்டு கடலுக்கு மேலே வந்து கம்பீரமாக நிற்பதாக நான் உணர்கிறேன். முகாம் நோக்கத்தோடு இந்தப் பணியைச் செய்தால் அது நிறைவானதாகவும் முறையானதாகவும் இருக்காது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்தவன் என்று தெரிந்தேதான் அனைத்து முகாம்களில் இருந்தும் எனது முயற்சிக்கு மிக உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கவிதை நூல்களை அனுப்பபிக் கொண்டிருக்கிறார்கள் பல கவிஞர்கள். வெளி முகாம்களில் இருந்து இதுவரை 250-க்கும் மேற்ப்பட்ட கவிதைத் தொகுதிகள் எனக்கு வந்திருக்கின்றன.
பல அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய பெரும்பணி இது. தனியொருவராக நீங்கள் சரியாகச் செய்து விட முடியும் என்று நம்புகிறீர்கள்?
எனது முன்னோடிகள் பலர் எழுதியதை முக்கியமான இடங்களில் தொட்டு. நான் தொடர்கிறேன் என்;பதுதான் எனது பலம் தமிழ்க் கவிதை ஆய்வில் தவிர்க்க முடியாத வல்லிக்கண்ணன். பாலா தி.க.சி.. அப்துல்ரகுமான் வைரமுத்து ஞானி வா.செ.கு.. செந்தில்நாதன் பொன்னீலன் போன்ற கவிஞர்கள் இலக்கிய ஆய்வாளர்களிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டிருக்கிறேன் சேரன் சிவத்தம்பி ‘சிங்கைச்சுடர்’ஆசிரியர் இளங்கோ மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா போன்றவர்களைப் படைப்புகளில் சந்திக்க விருக்கிறேன்.
தமிழ்நாடு தாண்டியும் நல்ல தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்களே அவர்களையும் சேர்த்துதான் எழுதப்போகிறேன். வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்க்கவிதைத் தொகுப்புகளை அனுப்பியும். அனுப்புவதாகக் கூறியும் பல தொடர்புகள் கிடைத்திருப்பதால்தான் நூல வெளியீட்டைத் தள்ளி வைக்க நேர்ந்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------
‘கவிதையின் கதை’யை எழுதி வரும் நா.முத்துநிலவன் இந்த முயற்சிக்கு முன்னோடியாகச் சில ஆய்வு நூல்களை எழுதிய அனுபவம் பெற்றவர். க.நா.சு.ஜெயகாந்தன் இருவரைப் பற்றி இவர் எழுதிய’இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’ என்னும் ஆய்வு நூல் தமிழ் இலக்கிய உலகின் நல்ல ஆதரவைப் பெற்றது.; ‘கவிதையின் கதை’ நூல் உருவாக்கத்திற்கு அலுவலகப் பொறுப்பாளராக இருந்து செயல்படுகிறவர் இவரது துணைவியர் மல்லிகா
புதுக்கோட்டை இலக்கிய ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பும் முத்துநிலவனுக்கு உண்டு.
-------------------------------------------------------------------------------------------------------
நேர்காணல் : கவிஞர் ஜெயபாஸ்கரன் - தினமணி கதிர் - 29.04.2001