மறக்க
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்
அவரை
வணங்கி,
ஒரு
மறு
விமர்சனம்!
எழுத்தாளனின்
பிறந்த நாளில்
அவரை
வணங்கி,
ஒரு
மறு
விமர்சனம்!
---------------------------------------
ஒரு ஜெயகாந்தனும்
சில ஜெயகாந்தன்களும் -
-- நா.முத்து நிலவன் --
-- நா.முத்து நிலவன் --
----------------------------------------------------------------------------
மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மா, இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
“இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!” ஹக்கா…ங்”
“அட ! நம்ம முனிம்மா!” வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
“சேச்சே ! என்ன முனியம்மா ? நா பாக்கல.. ஹவ் ஆர்யூ? செமினார்க்கு வந்திருந்தியா?
“வந்திருந்தி…யாவா? மீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
“அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்க” கங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
“அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்? இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே ? அக்கட சூடு! நம்ப ‘சித்தாளு’கம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்தி, மாரியம்மா, அந்தா ‘ஓவர் டைமு’ ஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம், இந்தா ‘பாசஞ்சர் வண்டியில’ வந்து ‘பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன், நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதான? ரிக்சாக்கார கவாலி, அம்மாந் தூரம் ஏன்? நேத்தக்கி வந்தவ… அந்த ‘ரிசிபத்தினி’ பொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
கொஞ்சம் தள்ளித்தள்ளி, மரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடு, முனியம்மா சொல்லாவிட்டாலும் - ‘நூறு பேர்’களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன், ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் ‘ சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
“ரியலி? எல்லாருமா வந்திருந்தீங்க? நா பாக்கலியே. ‘லாஸ்ட் ரோ’ல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபு, கௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும், ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பால…மகுடேசம்பிள்ளை, முத்துவேலர், கணபதி சாஸ்திரிகள், சீதா, சங்கர சர்மா, சாரதா மாமி, தங்கம், ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
“ந்தா இந்த டஸ்ஸ_ புஸ்ஸி_ இங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்க…நாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்…இன்னா பண்றது? பாயாப்போன மன்சு கேக்லியே?
அது செரீ…அல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்து…அது இன்னாதது? ஏற்புரையா? ஆங்…அதான்…சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரே? ஆமா…அது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
“ஸீ!முனிம்மா, அட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவது…ஸீ…வாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும் தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்து, தனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்தி, நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
போதும்,
கங்காவும், மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும், சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம், அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.