ஆடை களைந்தனர் தந்தையரே! அம்மண மாயினம் இந்தியரே!!

ஆடை களைந்தனர் தந்தையரே!
      அம்மண மாயினம் இந்தியரே!!
கோடை வெயிலினும் கொள்ளியடா
      கொளுத்திப் போட்டது டெல்லியடா!எத்தனை எத்தனை போர்முறைகள்!
      இம்மியும் அசையாக் கல்நெஞ்சா?
அத்தனைக் கும்,இனித் தாக்கமெழும்
      அமைதிப் போரின் நோக்கமிதே


நாடுகள் பலவாய்ச் சுற்றியதும்
      நாளொரு வேடம் போட்டதுவும்
கேடுகள் பலவாய்ச் செய்ததுவும்
           கேட்டும் பார்த்தும் அயர்ந்தவர்யாம்!


 உச்சக் கொடுமை இதுதானே!
      உட்பொருளென்ன? அகம்பாவம்!
மிச்சம் மீதியைச் சொல்லிவிடு!
      மீந்த உழவரைக் கொள்ளியிடு!


பார்த்துப் பேசினால் பழிவருமா?
      பாவம் அவர்க்கொரு வழிவருமா?
நீர்த்துப் போகவே நினைத்தாயா?
         நினைவும் பிழையாய் வளர்ந்தாயா?


     மானம் பெரிதென வளர்ந்த இனம்
      மானம் களைந்தது யாராலே?
ஈனப் பிறவிகள் எனக்கண்டும்
         எங்கோ பெய்யும் சலுகைமழை!

     
வாங்கிய கடனை ஏமாற்றி
      வக்கணையாக வாழ்வோரே
     வீங்கிய ஆட்சியின் அடையாளம்!
         வீசிய எலும்புகள் சான்றாகும்!


காந்திய வழியில் போராடி
              கடைசியில் இழந்தது ஆடைகளே!
       ஓந்தியி டம்போய்ப் பல்லிளிக்கும்
       ஓநாய்க் கூட்டம் உதவாது!


இங்கே வேலைகள் பலவுண்டு!
      இளைஞர் படைகள் மிகவுண்டு!
அங்கே இருந்து மானமிழந்து
      அறிவைப் பெற்றது போதுமினி!

சோட்டால் அடித்தும் திருந்தாத
      சொத்தைத் தலைவர் பலபேரை
ஓட்டால் அடிப்போம் வாருங்கள்!
      ஊர்திரும்புங்கள் உழவர்களே!

22 கருத்துகள்:

 1. வாசிக்கும் போது உருக்கமும்...எடுத்தாண்டிருக்கும் படங்களும் பொருத்தம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி செல்வா (ஆமா என்ன உங்கள் வலைப்பக்கத்திற்குக் கோடை விடுமுறையா? சிறப்பு வகுப்புகள் கிடையாதா?)

   நீக்கு
 2. இனியும் அங்கே போராடுவது சரியல்ல.ஓட்டால் அடிப்போம் ஊர் திரும்புங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! மன்னிக்க வேண்டும், இரண்டு பின்னூட்டங்களில் ஒன்றை நீக்கிவிட்டேன்.

   நீக்கு
 3. நெஞ்சைச் சுடும் கவிதை. இனியும் இந்த அரசுடன் சேர்ந்துதான் போகவேண்டுமா?

  பதிலளிநீக்கு
 4. முடிவில் தநத வரிகளே முடிவாகும்.

  பதிலளிநீக்கு
 5. விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்க எந்த அரசியல் கட்சியும் இன்று தயாரில்லை. தனி மனிதர்களாக இவர்கள் எத்தனை நாள் போராட முடியும்? திரும்பிவருதலே நன்று. தேர்தல் மூலமே மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். உங்கள் கவிதை உருக்கமானது.

  - இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
 6. அவர்கள் மிதிபடும் நேரம் விரைவில் வரும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வலைச்சித்தரே
   (அடுத்த வலைப்பதிவர் விழாப்பற்றிப் பேசுவது எப்போது?)

   நீக்கு
 7. வணக்கம் ஐயா!

  தங்களின் எழுத்தும் அதற்குத் தெரிவு செய்திட்டிருக்கும் படங்களும் நெஞ்சு தொடுகின்றன.

  ஓட்டைப் பானை தலைசுமக்க
  ஒழுகிச் சிரிக்கும் ஏளனங்கள்!
  வேட்டை நடுவே இரையுடலாய்
  வீழ்ந்து கதறிடுந் தமிழரினம்!

  அணிகள் பூண்ட மேனியென
  அள்ளிச் செல்ல வருங்கைகள்
  பிணிகள் பார்த்துச் செல்வதில்லை
  பேய்கள் நெஞ்சில் ஈரமில்லை!

  நரிகள் ஆடும் விளையாட்டில்
  நியாய தர்மம் ஏற்பதில்லை!
  எரிக்கச் சுரணை திரிகொளுத்த
  எழுத்துப் பொறிகள் தோற்பதில்லை!

  தங்களின் பதிவு காணத் தோன்றியதை எழுதிப்போனேன். இன்னும் இன்னும் எழுதத் தோன்றுகிறது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இதுபோலும் சமகாலச் சமூக நிகழ்வுகளை என்னிலும் கூர்மையாகவும் அழகாகவும் எழுத வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் விஜூ
   விரைவில் தொடங்கித் தொடர வருக வருக!

   நீக்கு
 8. நிஜங்களைக் கவிதையில் வடித்த விதம் அருமை ஐயா.
  அவர்கள் அங்கே போராட,
  நாம் இங்கே கதற...
  எப்போது விடிவு?
  ஒன்றுபடுவோம்.
  போராடுவோம்.

  தங்களின் இறுதி வரித் தீர்வு
  நமது ஆயுதமாகட்டும்.
  வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. "ஆடை களைந்தனர் தந்தையரே
  அம்மண மாயினம் இந்தியரே" என்பதை
  உணராத இந்தியப் பிரதமரும் உள்ளாரே!

  பதிலளிநீக்கு
 10. "மீந்த உழவரைக் கொள்ளியிடு!", "மானம் பெரிதென வளர்ந்த இனம் மானம் களைந்தது யாராலே?" துடிக்கச் செய்யும் வரிகள்! கேள்விகள் ஒவ்வொன்றும் கவிச் சாட்டையின் சொடுக்குகள்! ஆனால் இது உரைக்க வேண்டுமானால் தொடர்புடையவர்களுக்குக் கொஞ்சமாவது மானம் வேண்டுமே ஐயா!

  கவிதையின் கடைசி வரிதான் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நண்பர் ஒருவர் கூட இதையேதான் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். தமிழர் அனைவர் மனதிலும் இதே எண்ணம்தான் போலும். மிக மிக மிக அருமையான கவிதை! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லாசனி, ஏப்ரல் 22, 2017

  போராட்டம் தவறல்ல.ஆனாலும் மோடி போன்ற கல்லுளிமங்கன்களிடமிருந்து கருணையை எதிர்பாரக்க முடியாது.தமிழக ஆட்சியாளர்களும் கொள்ளையடிக்கவும்அடித்த கொள்ளையைப் பங்கிடுவதிலும் மும்முரமாக இருக்கிறார்கள்.இந்நிலையில் தொடர்ந்து போராடுவது சாத்தியமல்ல.எனவே தற்போது போராட்டத்தைக் கைவிடுவதே சாத்தியமானதாகும்.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லாசனி, ஏப்ரல் 22, 2017

  மோடி போன்றவரகளிடமிருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது.போராட்டத்தைத் தற்போதைக்குத் தள்ளிவைப்பதே விவேகமான முடிவாகும்.

  பதிலளிநீக்கு