பெண்கவி இருவர், முன்னுரை இரண்டு – ஓர் ஒப்பீடு!

“இருவேறு உலகத்து இயற்கை”  
(எனது முன்னுரையோடு மற்றொரு முன்னுரையை ஒப்பிட்டு கணையாழி வெளியிட்ட கட்டுரை)
                   எழுதியவர் த.பழமலய்
கவிஞர் த.பழமலய்
அண்மையில் (மே,2003) இளம்பிறையின்முதல் மனுசி’ வெளிவந்திருக்கிறது. 112 பக்கங்கள். பக்கங்கள் பலவற்றிலும் கறுப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படங்கள். வழுவழுப்புத்தாள். விலை ரூ.75.00. இது சென்னை ஸ்நேகா வெளியீடு. சென்னை வர்த்தகர் சங்க அரங்கில் ஏக தடபுடலாக வெளியிடப்பட்டது. கடந்த நான்கைந்து மாதங்களில் கணிசமாக விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கேள்வி. மகிழ்ச்சிக்கு உரிய செய்திதான்.

எனது முன்னுரை இடம்பெற்றஹேராம் கவிதைத்தொகுப்பை எழுதிய
கவிஞர் புதியமாதவி

கவிஞர் இளம்பிறை

கவிஞர் இன்குலாப்

இதே மே,2003 இல் புதிய மாதவியின் ஹேராம் வெளியாகி இருக்கிறது. இதுவும் 112 பக்கங்கள். பக்கங்களில் படங்கள். வழுவழுப்புத்தாள். ரூபாய் எழுபது. மும்பை தமிழ் எழுத்தாளர் மன்றம் வெளியிட்டிருக்கிறது.
இரண்டும் கவிதைத் தொகுதிகள். இருவரும் பெண்கள். இரண்டு தொகுதிகளுமே கவனம் ஈர்க்கும் தயாரிப்புகள் என்பதுடன் இரு கவிஞர்களுமே வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறார்கள்.
இதில் இளம்பிறை திரைப்படத்துறைக்குப் பாடல் எழுதவும் துவங்கியுள்ளாராம் இதே நேரத்தில் புதிய மாதவியோ பன்முகம் காட்டும் தன்கவிதைகள் தன் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
இரு தொகுதிகளையும் அடுத்து அடுத்துப் படிக்க நேர்ந்தது. இரு தொகுதிகளும் இருவேறு உலகங்கள் என்றே சொல்ல வேண்டும.
முதல் மனுசிக்கு ராஜமார்த்தாண்டன்  நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார் என்றால் ஹேராம் நூலுக்கு இன்குலாப்பும் நா.முத்துநிலவனும் எழுதி இருக்கிறார்கள். முத்துநிலவன் முன்னுரை பல பக்கங்களுக்கு நீண்டது.
ராஜமார்த்தாண்டன் பெண் எழுத்து பெண்மொழி என்கிற போக்கில் அணுகியுள்ளார்.
முத்துநிலவன் சமூகம், அரசியல், கலை இலக்கியம் என்று பார்த்துள்ளார்.
இந்தப் பார்வைகள், உறுதியாக ஒன்றை முன்மொழிவதாக நாம் கொள்ளலாம்.
ராஜமார்த்தாண்டன் எழுதுகிறார், “ ஒருவர் மிகவும் முக்கியமான கவிஞராக
கருதுகிறவர், இன்னொருவருக்குச் சாதாரணமான கவி ஆகிவிடுகிறார்.”
முத்துநிலவன் இந்தக் கேள்வியை இன்னும் விரிவாக எதிர்கொள்கிறார்:
“தனது பிரச்சனைகளையே சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பெண்கள் நம் சமூகத்தில் மிகவும் குறைவு!. அதிலும் சமூகத்தின் பிரச்சனைகளை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பெண்கள் மிக மிகவும் குறைவு!. சமூகத்தின் பிரச்சனைகளை அரசியலாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய பெண்கள் மிக மிக மிகவும் குறைவு. அதையும் கலை இலக்கியத்தில் சரியாகக் கொண்டுதரக்கூடிய பெண்கள் மிக மிக மிக மிகவும் குறைவு!”
இளம்பிறை திரைப்படப் பாடலாசிரியர் ஆகிறார் என்றால் , புதியமாதவி தன்னைப் போராளியாக அடையாளம் காட்டிக்கொள்கிறார்.
இன்றைக்கு எழுத வருகிறவர்களில் ஒரு சிலர் ஓரளவு அறிமுகத்திற்குப் பிறகு அல்லது ஓரிரு தொகுதிகள் வெளியிட்ட பிறகு திரைப்படத் துறையில் குதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறார்கள். பிறகு இதன் நீட்சியாக தேர்தல் களத்திலும் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த அரைநூற்றாண்டில் இதுதானே நடந்து வந்திருக்கிறது. இதற்கு பாரதிதாசன், புதுமைப்பித்தன் நல்ல முன்னுதாரங்கள். அவர்கள் கண்ட கனவை கவியரசு வைரமுத்து மிகப்பெரிய அளவில் நனவாக்கி வருகிறார்.
இதனால் நேர்வது என்ன? அல்லது நேரக்கூடியது என்ன? கலை இலக்கிய
வெற்றி என்பதே சினிமா வெற்றி என்பதாக சீரழிவது தான்.  சினிமா, கலைஞர்களை வேலை வாங்குகிறது.கலைஞர்கள் தங்கள் ஆன்மாவையும் அனைத்தையும் விற்றுப்பிழைத்து வாழும் அளவுக்கு உறிஞ்சிவிடுகிறது. படைப்பாற்றல் தொழிலாகிறது. படைப்பு பண்டமாகிறது. இவர் தான் செய்தார் என்பது இல்லாமல் இவற்றை இவர்கள் சேர்ந்து செய்தார்கள் என்றாகிவிடுகிறது. இதில் இழப்பு என்னவென்றால் ஒருவர் முகத்தை தொலைப்பதும் தனிப்பட்ட ஆளுமையை இழப்பதும் தான்.
இளம்பிறையின் படைப்புலகம் அகவயப்பட்டதாகவும் தன்னுணர்ச்சியாகவும் இருக்கிறது. இவ்வளவுக்கு இவை வேண்டுமா என்பது வேறு கேள்வி. இவற்றை இவர் இழந்துவிடும் ஆபத்துக்கு ஆளாகப்போகிறார்!
“கிராமத்து உணர்வுகளைத் தொடர்ந்து எழுதும்மா” என எப்பவும் கூறி ……. … எழுத ஊக்கம் தந்துவரும் மதிப்பிற்குறிய கவிஞர் அறிவுமதிக்கு நேர்ந்தது தான் இவருக்கும் நேரப்போகிறது.
அதாவது உருப்படியாக ஒன்றையும் செய்யமுடியாமல் போவது. இது யாருக்குத்தான்.. எனக்கும் தான்.! தேங்காய் இரண்டாக உடையலாம். எண்ணற்றவகையாக உடையலாமா?
இளம்பிறை நடிக்கவும் நடிக்கலாம். பேராசிரியர் சித்தார்த்தன் (பெரியார்தாசன்) நடிக்கையில் ஆசிரியை நடிக்க கூடாதா என்ன?
புதியமாதவி ஹேராமில் தான் ஒரு பெண்கவிஞர் என்ற பாலியல் அடையாளத்தை இழந்து பெண்களின் அகவய உணர்வுகளை மறந்து- தற்காலிகமாக மறந்து – கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஹேராம் பிரச்சனையை ஒரு பிரச்சார நோக்கிலேயே உரத்துப் பேசி இருக்கிறார். பிரசவ வலிகளைகளையும் காதல் பிரிவுகளையும் கவிதைகளாக்கும் கவிஞர்களின் தடத்திலிருந்து இவர் தனித்து நிற்கிறார்.
வயலில் வேலைபார்த்துவிட்டு, வரப்பில் பிள்ளையைப் பெற்றுவிட்டு, மீண்டும் அதே வயலில் இறங்கி வேலைப் பார்க்கும் தன் பெண்களின் வலி, தன் உறவுகளின் காலம் காலமாய் அமுக்கிவைக்கப்பட்ட வேதனை- தன் அகவய , பெண்ணிய சார்ந்த வேதனையை சிறியதாக்கிவிடுகிறது.
வடநாட்டில் வாழ்ந்து கொண்டு , ஹேராம் பிரச்சனைகளை எழுதவும்,  அவர்களின் ஆதிக்கம் நிறைந்த தமிழ்ச் சங்கத்தில் நின்று கொண்டு, “மதங்களுக்கு வைப்போம் மலர்வளையம்” என்று சொல்லவும் கவிஞர் அறிவுமதியை அழைத்து நூல் வெளியிடவும்… ……இவற்றுக்கு எல்லாம் படுகின்ற கஷ்டங்கள், மீடியாக்களின் தவறான பிரச்சாரங்கள், அரசியல் சாயங்கள், இதற்கிடையில் இருக்கும் குடும்ப பொறுப்புகள்…….. ---- மூச்சுத்திணற வைக்கும் முமபை வாழக்கை--- என எதிர்கொண்டு இயங்குபவர் புதியமாதவி.
இளம்பிறையோ மாநகர் (சென்னை ) வந்து தன் கிராமத்து மார்கழிகளை இழந்துக் கொண்டிருப்பவர். “எழுதிவிட்டுத்தான் படுக்க வேண்டும்” என்று தீர்மானிக்கும் கவிஞருக்கு இன்றும் வந்து விடுகிறது “கவிதைக்கு முன் தூக்கம்”. தூங்கப்போகும் முன் கவிதை, கவிதைமனம் ! இதுவும் இன்றும் இளம்பிறைக்கு அவர் உலகம்.
இன்குலாப் தன் முன்னுரையில் ஒருவர் கவிதை சிறக்கும் இடமும் பொருளும் பற்றி குறிப்பிடுகிறார். இவற்றைக் கண்டடைவதே கவிஞரின் வெற்றியாக இருக்கிறது.
இளம்பிறை  கிராமப்பிரச்சனையை எழுதுகிறார் என்றால் புதியமாதவியும்  குஜராத்து பூகம்பம் பற்றி சுட்டுகிறார். ஆனால் புதியமாதவிக்கு ‘ ச்சோ.. இப்பிரியம்‘ என்றெல்லாம் எழுத வரவில்லை. “ஹேராம் “என்றுதான் எழுத தெரிகிறது     
புதியமாதவியிடம் செவிகளை மட்டுமே குறியாகக் கொண்டு எழுதப்பட்ட கவியரங்க கவிதைகள் உண்டு. இளம்பிறையும் பேச்சுமொழியிலும் ஒப்பாரி நடையிலும் எழுதி இருக்கிறார். மீண்டும் ராஜமார்த்தாண்டம் தான் நினைவுக்கு வருகிறார். “ஒருவர் மிகவும் முக்கியமான கவிஞராக கருதுகிறவர் இன்னொருவருக்கு சாதாரணமான கவியாகிவிடுகிறார். இன்றைய தமிழ்க் கவிதைச் சூழலில் இதனை நாம் தெளிவாகக் காண முடியும் .”
இங்கு முக்கியம், சாதாரணம் என்பதைக் கவனிப்பதைப் போலவே ஒருவர் இன்னொருவர் என்பதையும் கவனிக்க வேண்டும். பிடித்தது, பிடிக்காதது என்பதெல்லாம் அகவயமானது. பலவகைச் சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன என்பதுதான் புறவயமானது. இன்றைய சூழலில் என்றில்லை, என்றைய சூழலிலுமே ஒற்றைப் பார்வை அல்ல, பன்மைப் பார்வையே எதிலும் போல இலக்கியத்திலும் ஆரோக்கியமானது.
இரு கவிகளையும் ராஜமார்த்தாண்டமும் சரி, முத்துநிலவனும் சரி அவ்வையாருடன்  சேர்த்து நினைக்கிறார்கள். இளம்பிறை கவிதை மொழி தனிப்பட்ட பெண்மொழியாக இல்லாமல் (அப்படி ஒன்று சாத்தியம் தானா?) அவ்வையாரின் மொழியைப் போல பொதுவாக இருக்கிறது என்கிறார் ராஜமார்த்தாண்டம். அதாவது இளம்பிறை எழுதுவதை ஓர் ஆணாலும் எழுதிவிட முடியும் என்கிறார்.
முத்துநிலவன், அவ்வையார் தூது போனது போன்றவற்றை புதியமாதவியின் போர்க்குணத்துடன் சேர்த்து நினைக்கிறார்.
இரு கவிகளுமே பெண்ணியத்தை – தலித்தியத்தை – அறிந்தவர்கள் என்பது இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளுள் ஒன்று.

இதுதான் கவிதை, இவர்தான் கவிஞர் என்று என்றுமே இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. ஏனேன்றால் சார்பு இல்லாத கவிதையும் இல்லை, கவிஞரும் இல்லை.
இளம்பிறையை சிலருக்குப் பிடிக்கிறது என்றால், புதியமாதவியை சிலருக்குப் பிடிக்கிறது. இளம்பிறையின் பள்ளி வேறு. புதியமாதவியின் பள்ளி வேறு. இருவருமே தேவையானவர்கள். இரு பள்ளிகளுமே தேவையானவை.
இதுதான் , “ நூறு பூக்கள் மலரட்டும், நூறு எண்ணங்கள் பிறக்கட்டும் “ என்பது மாவோ சொன்னது.

(கணையாழி டிசம்பர்-2003 இதழில் வெளியான கட்டுரை. பக் 41 & 42)
 ---------------------------------------------- 

கவிஞர் புதியமாதவியின் ஹேராம் தொகுப்புக்கு

நான் எழுதிய முன்னுரை எனது வலையில்

  http://valarumkavithai.blogspot.com/2016/01/blog-post_11.html

6 கருத்துகள்:

  1. ஒவ்வொருவர் நோக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் என்பதற்கு இவை போன்ற நிகழ்வுகளும், பதிவுகளுமே சான்று ஐயா.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறந்த பதிவு சகோதர்ரே.
    நிறைய பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுத
    வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நா.மு. சார். ஹேராம் கவிதை தொகுப்புக்கு தாங்கள் கொடுத்த அறிமுகம், பெண்பால் கவிஞர்கள் அனைவரைப் பற்றிய தோரணவாயிலாக இருந்ததும் அதை அப்படியே எடுத்துக்கொண்டு பலர் தங்கள் தங்கள் கட்டுரைகளில் தோரணங்களாகி தொங்கவிட்டதும் .. இன்றும் அது தொடர்வதும்.. மிகவும் சுவராஷ்யமானவை.

    பதிலளிநீக்கு
  4. புதிய பார்வையை உருவாக்கும் படைப்பு

    பதிலளிநீக்கு
  5. இருவேறு அறிஞர்களின் பார்வை
    ஒரு மணித் துளி நேர வாசிப்பில்
    இரு நூல்களை
    அடையாளப்படுத்தி உள்ளதே!
    நூலாசிரியர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு