மீரா.செல்வக்குமார் கவிதைத் தொகுப்பு - எனது முன்னுரை

கவிஞர் மீரா.செல்வக்குமார்
கவிஞனைக் கண்டுகொண்டேன்!
அண்மையில் வெளிவந்த கவிஞர் மீரா.செல்வக்குமாரின்,
இரண்டாவது நூலான 
“ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்” 
கவிதைத் தொகுப்புக்கான எனது
முன்னுரை – நா.முத்துநிலவன்
ரு பெரும் இயக்கம் நடத்தும்போது, அரியவர் சிலரின் அறிமுகம் கிடைக்கும். அதுவே, அந்தப் பெரிய இயக்கத்தின் ஆகப்பெரிய பலனாகவும் அமைந்துவிடும். இது அறிவொளி இயக்கத்திலும் “ஜேக்டீ”, “ஜாக்சாட்டோ” போலும் அரசு-ஊழியர் ஆசிரியர் இயக்கப் போராட்டங்களின் போதும் நடந்ததை நடத்தியவர் மட்டுமே அறிவோம். தொடர் பலனை ஊரறியும்! 


அறிவொளி இயக்கத்தில் நான் கண்ட அற்புதப் படைப்பாளி ஆர்.நீலா! சிறுகதை,கவிதை,கட்டுரை, களப்பணிகள் என்று இன்று தமுஎகசவின் மாநிலத் துணைத்தலைவராக உயர்ந்து நிற்கிறார் –படைப்பு, பணிகளால்!  இதை அவரது கவிதைத் தொகுப்புக்கான எனது முன்னுரையும் கூறும்!

அறிவொளி நாடகங்களில் அசத்திய நான்குபேரை, அறிவொளிக்குப்பின் என் வீட்டுக்கழைத்து, “பூபாளம் கலைக்குழு”என்று பெயர்சூட்டி, இப்போது அக்கலைக்குழு அமெரிக்கா வரை சென்று இங்கும் சாதனை தொடர்கிறது! சுய கலை-இலக்கியத்திறம் மிக்கவர்கள் என்பதாலேயே அவர்கள் உயர்ந்து வளர்ந்து நிற்கிறார்களே யன்றி என் வழிகாட்டுதலால் அல்ல! இதை நானும் சொல்கிறேன், அவர்களும் சொல்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி!
இன்னும் நிறையச் சொல்லலாம் – விரிவுக்கு அஞ்சி விட்டுவிடுகிறேன்!

இப்படி எனது 40ஆண்டுக் கலை-இலக்கியப் பயணத்தில் நான் கண்ட ஒருசில முத்துக்களில் அண்மைக்கால முத்து இந்த செல்வக்குமார்!

கொஞ்சம் பின்னால் போவோமா? வாருங்கள் என்னோடு-
புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய “தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்வினால் எங்களுக்குக் கிடைத்த நுட்பமான கவிஞர்  மீரா.செல்வக்குமார். கலை-இலக்கியப் பெருமன்றத்தின் நகரத் தலைவராக ஏற்கெனவே செயல்பட்டு வந்திருந்தாலும், இணையத்தின் வழியாக “யார் இந்த மீரா.செல்வக்குமார்?” என உலகமே திரும்பிப் பார்த்து, தேடப்பட்ட கவிஞராக மாறிப்போனார் இந்த மெல்லுணர்வு மிக்க கவிஞர்!

அந்த நேரத்தில் வலைப்பதிவர் விழாவின் போது சுமார் ஒருமாதகாலமாக எங்களுடனே ஓடி-ஆடி வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்தான் இவர். ஆனாலும் அவர் கவிதைப்போட்டிக்குக் கவிதை எழுதியதே எனக்குப் பிறகுதான் தெரியவந்தது! நான் விழாவின் ஒருங்கிணைப்பாளர் பணியில் இருந்ததால், படைப்புகளைப் படிக்கவில்லை. படைப்புகள் இணையவழி வரவர, அவற்றை வகைவாரியாகப் பிரித்து, நடுவர்களுக்கு அனுப்பும் வேலை எனது நேரத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததே காரணம்!

எங்கள் விழாக்குழுவில் கடுமையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த வெகுசிலரில் இவரும் ஒருவராக இருந்ததோடு, என் இனிய நண்பராகவும் இருந்ததாலேயே இவர் கவிதைக்கு முதல்பரிசு கிடைத்திருப்பதாகச் சிலர் நினைத்திருப்பார்கள் (தற்காலத்தில் பெரும்பாலான போட்டிகளில் இப்படி நடப்பதும் உண்டுதானே? அதனால் அதற்கெல்லாம் நானாகப் போய் எந்த விளக்கமும் தரவில்லை. எனது நேர்மை பற்றிச் சந்தேகப்பட்டு என்னிடம் யாரும் கேட்கவும் இல்லை என்பதால் விளக்கம் தர நேரவுமில்லை)

நடுவர்களிடமிருந்து வந்த போட்டி முடிவுகளைத் தொகுத்து அப்படியே வெளியிடும் பணியில் என்னோடு –எங்கள் வீட்டுக்கே வந்து- பார்த்துக் கொண்டிருந்த “வலைச்சித்தர்” திண்டுக்கல் தனபாலன் தான் முதலில் இதைப் பார்த்துவிட்டு, “அய்யா! இங்க பாருங்க..நம்ப செல்வா தான் புதுக் கவிதைப் போட்டியில் முதல்பரிசு.. மூன்று நடுவர்களுமே ஒன்னுபோல மார்க் போட்டிருக்காங்க..”என்றபோது எனக்கு வியப்புக்கலந்த மகிழ்ச்சி!

வலைப்பதிவர் திருவிழாவில் நடத்தப்பட்ட புதுக்கவிதைப் போட்டியில் 22நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 92 தமிழ்க்கவிதைகளில் முதலிடம் பெற்றிருந்தது மீரா.செல்வக்குமாரின் “சின்னவள் சிரிக்கிறாள்” கவிதை!
எங்கிருந்து யார்யார் எழுதிய கவிதைகள்? இப்போதும் படிக்கலாம் - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

ஐயாயிரம் ரூபாய் முதற்பரிசு பெற்றது பெரிதல்ல… விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், இணையத்தில் பார்த்த ஒரு நல்ல கவிதை என்னும் முன்னுரையோடு முழுக்கவிதையையும் வாசித்து முடிக்க, கையொலி அடங்க வெகுநேரமாயிற்று. கேட்டுக்கொண்டிருந்த நான், அவரருகில் போய், அந்தக் கவிதைதான் விழாக்குழு நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை, இவர்தான் அந்தக் கவிஞர்  என்று மீரா.செல்வக்குமாரை அவருக்கு அறிமுகப்படுத்த, அவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை! செல்வாவை மேடையிலேயே கட்டிக்கொண்டுவிட்டார்! (செல்வா வெட்கம் கலந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்!) பிறகு கவிதைக்குரிய சின்னவளோடு மேடையேறி அவரிடம், பரிசுக்குரிய தொகையைப் பெற்றுச் சென்றதெல்லாம் மறக்கமுடியாத தருணங்கள்!

இப்படி ஒரு கவிதைத்தொகுப்பு வெளியீடு நடந்திருக்குமா?கவிஞரின் பிறந்தநாளன்று, நம் வீட்டில் நடந்ததே!
நட்பும் உறவும் சூழ...!   03-04-2017 மாலை 6.30
எனக்கு முன்னால், என் அம்மாவும், என் துணைவியாரும்.
என்னருகில் மீரா.செல்வக்குமார், பாவலர் பொன்.க., தமிழ்அமிர்தா, கவிஞர்.மு.கீதா, பின்னணியில் மது கஸ்தூரி, படம் எடுத்தவர் ஸ்ரீமலை!

அதன்பிறகான பெரும்பாலான எனது கலை-இலக்கிய நிகழ்வுகளில் கவிஞர் செல்வாவும் தொடர்ந்து வருவது எங்கள் தனிநட்பின் வளர்ச்சி!
வலையில் தொடர் கவிதை மழைப் பொழிவுதான்! வலைப்பக்கக் கவிதைகள் வழியாக, உலகமுழுவதும் இப்போது நண்பர்களைப் பெற்று விட்டார்! சின்னவளுக்காகவே எழுதியவற்றைத் தொகுத்து, சின்னதாக ஒரு கவிதைத் தொகுப்பை “சின்னவள்” என்றே அவரது சின்னமகளின் பிறந்தநாள் பரிசாகத் தந்தார்! இந்நூல் இவரது இரண்டாவது படைப்பு!
அடுத்து, சின்னவளையும் தாண்டி எழுதப்பட்ட பெரியபெரிய கவிதைகள் இதோ உங்கள் முன் …
ண்மைக்காலமாகத் தமிழ்க்கவிதை நூல்கள் அதிகம் விற்பதில்லை என்பது பதிப்பகத்தார் பலரின் வாக்குமூலம். இதற்குள், வெளிவரும் கவிதை நூல்களில் எத்தனை கவிதைகள் தேரும் என்பதும் உள்ளது!
சில நூல்களில் சில கவிதைகள் அகப்பட்டாலே ஆச்சரியம்தான்!
சில நூல்கள் ஒரே கவிதையோடு ஏமாற்றிவிடும். சில..அதுவுமின்றி நம்மை அசடாக்கிவிட்டுப் போகும்! இதுதான் இப்போது அதிகம்!
தலைப்பைக் கவிதையாக வைத்துவிட்டு, உள்ளீடற்றவையும் உண்டு! (“கனவின் விலை ஒரு ரூபாய்” எனத் தலைப்பிட்டு இப்படி ஏமாற்றிய தொகுப்பொன்று நினைவில் உள்ளது. லாட்டரிச் சீட்டுக் காலமது!)

வெகுசில கவிதைத் தொகுப்புகளில்தான் பெரும்பாலான கவிதைகள் கவிதைகளாக வந்திருக்கும்! அப்படியானதொரு நல்ல தொகுப்பைத் தந்த மீரா.செல்வக்குமாருக்கு எனது நட்புக்கடந்த வாழ்த்துகள்! நீ கவிஞன்தான்!

ஒரு நாற்காலியைச் செய்வதற்குத் தொழில்நுட்பம் தெரிய வேண்டும். அட, தோசையை ஊற்றி, கருகாமல், பிய்ந்து போகாமல், பதமாகச் சுட்டு எடுக்கவும் ஒரு சமையல் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்தானே?  கவிதை எழுத மட்டும் எதுவும் தேவையில்லையா? அதுவும் ஈராயிரம் வருடக் கிழவியிடம் அகப்பட்ட இளைஞன் எவ்வளவு நொம்பலப் பட நேரிடுகிறது! அட மடக்கி மடக்கி எழுதி மூன்று முறை படித்துவிட்டால் அதுதான் கவிதை என்கிற இலக்கணத்தைப் பலர் படித்திருக்கிறார்களோ?
“வைகல் எண்தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த கால்அன்னோன்” எனும் ஔவையின் வரிகளுக்குள்தான் எவ்வளவு நுட்பமான கணக்கு!
முதலிரவு அறைக்குள், கண்ணகியை வர்ணிக்கும் கோவலனின் சொற்கள் வெறும் அடுக்குகளா? நுட்பமாகப் பார்த்தால், இசையொழுங்கு மட்டுமல்ல ஐம்பொறி நுகர்வு, ஐந்நில அடுக்கு, நாடகப் போக்கு என எத்தனை நயம்! திருக்குறள் காமத்துப் பாலின் சிலகுறள்கள் நயமிகு சிறுகதைகளல்லவா?
அதனால்தானே அவர்கள் இத்தனையாண்டும் இளமையாயிருக்கிறார்கள்!

இந்த நுட்பம் அறியாமல் பக்கம் பக்கமாக கூகுள் அருள்பெற்ற படங்கள் சேர்த்துவிட்டால் அது நிற்கும் தொகுப்பாகிவிடுமா என்ன?

ஆனால், நமது பழந்தமிழின் செறிவும், நவீன தமிழின் கவிதை நுட்பமும் மீரா.செல்வக்குமாருக்குக் கைவந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!
பாருங்களேன்…
“மழையின் வரிகளை மொழிபெயர்க்கும்” கவிநுட்பம் மயக்குகிறது! இடையில், “ஆயிரம் கை போதாது” கவிதையின் தொடக்கவரிகளான
“ஒற்றை நாள்
தற்செயல் விடுப்பவளுக்கு,
ஆசைகளடுக்கி
முன்னிரவு செய்கிறாள்“ என்னும் வரிகளிலேயே நிற்கவைத்து நெடுநேரம் நம்மை, வேலைக்குப் போகும் பெண்களைப்பற்றி யோசிக்க வைக்கிறார் எனில், இன்னொரு கவிதையில் “பட்டிமன்றப் பெண்கள்” பற்றி நம்மிடம் வேறொரு கோணத்தில் யோசிக்கப் பரிந்துரை செய்கிறார்!
அரதப்பழசான இவரது “போர்வை”கூட ஆயிரம் கதை சொல்கிறது!
“சாறும் சக்கையுமாய்..” பழம் விற்கும் வண்டிக்காரியிடம் கூட, “தாகத்துக்காகச் சிலரும் மோகத்துக்காகச் சிலரும்” பழம் வாங்கும்போது இவர் அவளின் வெயர்வையைக் கவிதையாக்கும் தனித்துவம் தெரிகிறது!
“செம்புலப் பெயல்நீர்” , “கொங்குதேர் வாழ்க்கை” எனும் பழைய தொடர் தரும் உச்சம் மட்டுமல்ல, “விசில் பொங்கல்” எனும் நவீன வாழ்வின் எச்சமும் – கிண்டலுடன் இணைந்து- வருவது அபூர்வ சேர்க்கை தானே?
“மூத்தகுடி”இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்திய கீழடியை நினைவூட்டினால், “பணமில்லாத ஏடிஎம்”இல் இரவுக் காவலாளியை எழுப்பிய பாவம் இவர்கணக்கில் சேர்ந்துவிட்ட கவிதை, இன்றைய மோடியின் “டிஜிடல் இண்டியா“வைக் கிண்டலடித்து, சிரித்துவிட்டுச் சிந்திக்கவும் வைக்கிறது!
“இறையனார் கேட்டவரம்” கவிதை இப்படித் தொடங்குகிறது –
“கடவுள் என்வீட்டுக்குக் காலையிலேயே வந்துவிட்டார்..” பிறகு…? “தேநீர்க்கடையில்
புதிய முகமாயிருப்பதால்
சர்க்கரை அளவுக்காய்
தயங்கிய மாஸ்டருக்கு
திருநீறு வழங்கினான்
நானதை ட்வீட் செய்தேன்” என்று தொடர்கிறது..

“எதற்கும் இருக்கட்டுமென
கடவுளுடன் ஒரு செல்ஃபி எடுத்து
வைத்துக்கொண்டேன்…
வரமொன்று தா என்றான்
அலைபேசி வேண்டுமென்றான்
அவனை வெறுங்கையோடே
அனுப்பிவிட்டேன்” கிண்டல் கொப்பளிக்கும் நவீன கவிதையிது!
மூன்றாம் பாலினம் பற்றிய கவிதையில்கூட, நான்காம்தரமாகிவிட்ட இன்றைய ஆணாதிக்கச் சிந்தனைகளை வெளுத்துப் போடுகிறார்!
சொன்னால் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.. ஆனால், தோட்டத்தில் பாதி கிணறு கதையாகி, தொகுப்பில் பாதி முன்னுரை என்றாகிவிடக் கூடாதென்னும் எச்சரிக்கையில் நிறுத்திக் கொள்கிறேன்.
தெளிவு குறைவான சில கவிதைகளை எடுத்திருக்கலாம், இளங்கோவையும், கம்பனையும் கேட்டிருக்கும் கேள்விகள் அவ்வளவு ஆழமுள்ளவையாகப் படவில்லை. சில கவிதைகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது, வீதிக்காக எழுதியதை அப்படியே போட வேண்டுமா என்ன? மாற்றியிருக்கலாம்..லாம்தான்
எனினும், கவித்துவம் மிகுந்த, வித்தியாசமான கருக்களோடு, அழகியல் ததும்ப எழுதப்பட்ட கவிதைகள் நிரம்பிய தொகுப்பு இது என்பதில் மிக்க மகிழ்ச்சி செல்வா! என் இனிய வாழ்த்துகள்!
அடுத்த தொகுப்பு இன்னும் கவனமாக, எல்லாத் தலைப்புகளுமே பொருந்தும்படியாக எழுத வேண்டிய கட்டாயத்தை இந்தத் தொகுப்பு உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது! நிறைய எழுத ஆசைப்படாமல் நிற்கும்படியாக எழுதுவதில் கவனம் செலுத்தி நிலைக்க வாழ்த்துகள்!
தோழமையுடன் கைகுலுக்கி,
நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை 31-03-2017
---------------------------------------------------------------------------------------------------
கவிஞர் மீரா.செல்வக்குமாரின் 
வலைத்தளம் - http://naanselva.blogspot.com/
-------------------------------------------------------------------------------------- 

14 கருத்துகள்:

 1. அன்பும்..நெகிழ்வும்...

  மனம் நிறைந்த நன்றிகள் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “காலம் அறிந்து கூவும் சேவலை
   கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
   கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்
   கணக்காய் கூவும் தவறாது”

   நீக்கு
 2. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...

  பதிலளிநீக்கு
 3. ஆஹா. அருமை..நாங்களும் நடுவர்களில் இருந்தோமே!!!.செல்வாவின் கவிதை எங்கள் மனத்தைத் தொட்டு...யார் இந்த மீரா என்று பெண்ணோ...என்று நினைத்து தோழி மைதிலியிடம் கேட்டால்...ஆண்.. என...தெரிந்தும் கொண்டோம்....அவர் கவிதை முதல் பரிசு வென்றதும் மகிழ்ச்சி....இப்போது புத்தகமாய்....வாழ்த்துகள்....செல்வா...உரை அருமை...

  பதிலளிநீக்கு
 4. உள்ளது உள்ளபடி மிகைப்படுத்தாமலும் குறைத்தும் மதிப்பீடு செய்யாமல் மிக நேர்த்தியான நூல் கருத்தளிப்பு. எங்கள் அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  கவிஞர் அவர்கள் மேலும் பல படைப்புகள் இந்த பாருக்கு வழங்கிட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நட்பின் வழியில்
  சோலச்சி
  புதுக்கோட்டை

  பதிலளிநீக்கு

 5. இவரது கவிதைகள் மனதை தொட்டு செல்வதோடு சிந்திக்கவும் வைக்கும்... நல்ல திறமையான ஆள் இன்னும் வெளியுலகத்திற்கு அறியப்படாமல் இன்னும் புதுக்கோட்டையிலும் பேஸ்புக்கிலும் அடைபட்டு கிடக்கிறார்....அவர் அதை தாண்டி வெளிவரவேண்டும்

  பதிலளிநீக்கு
 6. ஆழமான உள்ளார்ந்த அன்பு நிறைந்த சிறப்பான முன்னுரை அண்ணா...மேலு் பல தொகுப்புகள் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 7. என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர்.
  நண்பரது நூலினைப் படித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது ஐயா
  பதிப்பகத்தின் பெயரினைத் தெரிவித்திருந்தால் வாங்குவதற்கு வசதியாக இருக்கும் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 8. அண்ணனின் கவிதைத் தொகுப்புக்கு அழகான உரை...
  மிகச் சிறந்த கவிஞர்.... இன்னும் ஜொலிப்பார்...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 9. ஆழமான அற்புதமான விமர்சனம்
  நிறைகளை மனம் திறந்து விரிவாகப் பாராட்டி
  இன்னும் சரியாக இருந்திருக்கலாம் என்பனவற்றை
  தொட்டுக்காட்டி சென்றவிதம் அருமை

  பதிலளிநீக்கு
 10. புதுக்கோட்டை மாநாட்டில் பார்த்த கவிஞர். நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு. வாழ்த்துக்கள்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

  பதிலளிநீக்கு
 11. ஒரு பொற்கிரீடத்தில் வைரக்கற்கள் பதித்தாற்போலுள்ளது கவிஞர் செல்வக்குமாரின் “ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்“ என்ற கவிதை நூலுக்குத் தாங்கள் அளித்துள்ள முன்னுரை.
  ஒப்புக்கு அளித்த பாராட்டாக இல்லாமல் தவிர்க்க வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டியும், தக்கனவற்றை வியந்து போற்றியும் கருத்தளித்துள்ள பாங்கு அவரின் கவித்திறமையை இன்னும் கூர்ப்படுத்திக் கொள்ளச் செய்யும். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. அருமை தங்களின் நூல் விமர்சனம் அருமை அப்பா.நான் செல்வா அப்பாவின் கவிதைகளுக்கு இரசிகை.காரணம் நான் வலையுலகிற்குள் வந்து வாசித்த முதல் கவிதைத் தொகுப்பு இவருடையதே ஆகும்.

  அருமை இருவரின் தோழமைக்கும் நான் தலை வணங்குகிறேன் எனது தந்தைகளே.

  பதிலளிநீக்கு
 13. சிறந்த பதிவு. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு