கனவில் கலந்த கலாம் (கவிதை)

கனவில் கலந்த கலாம்!

இளைஞர்களைக்
கனவு காணச் சொன்னவர்,
இளைஞர்களின் கனவில்
இரண்டறக் கலந்துவிட்டார்.

குழந்தைகளை நேசிப்பதில்,
நேருவும் இவரும் நிகராவர்.
இளைஞர்களைக் கவர்ந்ததில்
இவருக்கு நிகர் இவரே ஆவார்.

“கடைசி மூச்சுவரை நாட்டுக்குப் பாடுபடுவேன்“
என்று கூறிக்கொண்ட யாரும்
அப்படி வாழ்ந்ததாக நினைவில்லை,
கலாம் அதை நிஜமாக்கினார்.
மாணவரிடையே பேச்சினிடையே
இறுதி மூச்சையும் கலந்துவிட்டார்!

இந்தியாவின்
தென்கோடியில் பிறந்து,
வடகோடிவரை உயர்ந்த இவர், கோடீஸ்வரனல்லர்!
ஆனால், கோடீஸ்வரன்களும்
பெறமுடியாத அன்பை,
குழந்தைகளிடம் பெற்றவர்.

உள்ளுரிலேயே தமிழ் மறந்தவரிடையே,
உலக அரங்குகளில் தமிழ்பேசியவர் இவர்!

தாய்மொழிவழிக் கல்வியின் பெருமைக்கு,
வாழ்ந்து காட்டிய உதாரணம் இவர்தான்!

உறவினரை அண்டவிடாமல்,
அரசு வீட்டில் வாழ்ந்ததில்,
உறவினர் வருந்தியிருக்கலாம்!
ஓய்வுபெற்ற பின்னரும்,
ஓயாமல் பயணித்ததில்,
மருத்துவர்கள் வருந்தியிருக்கலாம்!
உயர்பொறுப்பில் இருந்தபோதும்
சிபாரிசு செய்யாதமைக்கு
சிலரேனும் வருந்தியிருக்கலாம்!
தொகையேதும் சேர்க்காமலே
தொண்டராய் வாழ்ந்ததையே
அரசியல் சூதாடிகள்
ஆச்சரியமாய்ப் பார்த்திருக்கலாம்!

அந்தக் “...கலாம்“ களால்
வித்தியாசப்பட்டவர்தான் நம்
அப்துல் கலாம்!

மனிதர்களை அழிக்க வந்த
விஞ்ஞானிகளிடையே
மனிதநேய விஞ்ஞானி இவர்தான்!

“ஏவுகணை ஆபத்தானதுதானே
என்ற கேள்விக்கு,
“அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,
ஆயுதத்தை மட்டுமல்ல,
பூக்களை அனுப்பினாலும்
வீசிவரும் விஞ்ஞானமிதுஎன
பொக்ரான் சோதனைக்கு
புதிய உரை சொன்னவர் இவர்!

இவர்கண்ட கனவை
இந்தியா தொடரட்டும்!
இந்தியா வல்லரசாக மட்டுமல்ல,
நல்லரசாகவும் உழைப்போம்!
       --கண்களில் நீரோடும்,
        கலாம் அய்யா தந்த
        நம்பிக்கைகளோடும்,
        ----நா.முத்துநிலவன்,
        புதுக்கோட்டை-622 004
       muthunilavanpdk@gmail.com
------------------------------------------------------

------------------------------- 
படத்துக்கு நன்றி - www.abdulkalam.com

23 கருத்துகள்:

  1. அற்புதமான இரங்கற்பா
    அவர் ஆன்மா
    சாந்தியடைய பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமையான கவிதை சாந்தியடையட்டும் அவர் ஆன்மா பிரார்த்திப்போம் நன்றி ! நலம் தானே சகோ !

    பதிலளிநீக்கு
  3. அற்புதமனிதரைப் போற்றும் கவிதை அருமை.
    அவர் மறந்திருக்கலாம் . என்றேன்றும் மக்களின் மனதில் வாழ்வார்

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான நினைவஞ்சலி அண்ணா! அதிலும்
    ** அந்தக் “...கலாம்“ களால்
    வித்தியாசப்பட்டவர்தான் நம்
    அப்துல் கலாம்!**
    அதற்கு அடுத்த வரி போகவே வெகு நேரம் ஆனது! மனம் கனக்கிறது!:(

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை ஐயா...
    அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்னாருக்கான தங்களின் அஞ்சலியில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. அப்துல் கலாம் அவர்களுக்கு நீங்கள் அளித்த கவிதாஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அவரது புகழ் வாழ்க!

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    உள்ளுரிலேயே தமிழ் மறந்தவரிடையே,
    உலக அரங்குகளில் தமிழ்பேசியவர் இவர்!

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  9. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை. கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்!

    பதிலளிநீக்கு
  10. கவிதை பூச்சர இரங்கற்பா அருமை

    பதிலளிநீக்கு
  11. தன் உடல் நலத்தைக் கூட கவனிக்காமல் நாட்டுக்காக உழைத்த நல்ல மனிதரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் :(

    பதிலளிநீக்கு
  12. இரங்கல் கவிதை அருமை ஐயா! இன்னும் மனதை விட்டு அகலவில்லை அவரது மறைவு என்பதே அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார் என்று சொல்லுகின்றது. அவரது உடல்தான் மறைந்துள்ளது. அவரது கனவுகள் நம்முள்ளும் கலந்துவிட்டது. அதை நனவாக்க நாம் சிறிதேனும் முயன்றால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை!

    பதிலளிநீக்கு
  13. இன்னும் ஏற்கமுடியாத இழப்பு..
    // அந்தக் “...கலாம்“ களால்
    வித்தியாசப்பட்டவர்தான் நம்
    அப்துல் கலாம்!
    // உண்மையிலும் உண்மை!

    பதிலளிநீக்கு
  14. பிரமாதமான கவிதை.

    “அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,
    ஆயுதத்தை மட்டுமல்ல,
    பூக்களை அனுப்பினாலும்
    வீசிவரும் விஞ்ஞானமிது” என
    பொக்ரான் சோதனைக்கு
    புதிய உரை சொன்னவர் இவர்!


    இந்த வரிகள் உண்மையில் அற்புதமானவை . விஞ்ஞான வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட கலாம் அவர்கள் ஒருபோதும் அதைக் கொண்டு அழிவை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கும் முழங்கியதில்லை. அணு விஞ்ஞானி என்பதை விட அன்பின் விஞ்ஞானி என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  15. அருமை ஐயா..உண்மை தான் இவரை போன்ற ஒரு உன்னத மனிதனை இனி வரும் தலைமுறையினர் காண இயலாது என்பது உண்மை.நாம் இலர் வாழ்ந்த காலத்தில் இருந்தோம் என்பது சிறப்பு தான் அதை விடச் சிறந்தது அவரின் கனவு மட்டும் அல்ல இலட்சியமும் கூட இந்தியா 2020 நினைவேற்றும் வரை சிறப்பு ஆகாது ஐயா.நான் கலாம் ஐயாவின் தீவிரதான சீடன் என்பது உண்மை.எனவே தான் நான் சமூகத்தில் மாற்ற வேண்டிய பிரச்சனை அல்லது இந்திய வல்லரசு அடைய ஏற்படும் தடைகளைக் குறித்து ஆய்வு செய்கிறேன் இது வரை நான் சில பதில்களை பெற்றுள்ளேன் ஐயா.நான் கேள்விகளுக்கு விடைத்தேடும் பணத்தை தொடங்கி உள்ளேன்.இதற்கு முக்கியக் காரணம் எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.உரா.குணசீலன் ஐயா தான்.அவரே எனக்கு தனது கருத்துகளை எவ்வாறு தமிழில் எழுதுவது குறித்து கற்றுத்தந்த நான் கண்டும் காணும் முதல் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா.உங்கள் பதிவு என்னை இன்னும் தூண்டுவிட்டது.

    நன்றி..

    பதிலளிநீக்கு
  16. ஐயா மன்னிக்கவும் நான் எழுத்து பிழையாக எழுதியதை இப்போது தான் கவனித்தேன்..முனைவர்.இரா.குணசீலன் என்பது சரி.பிழைகளுக்கு மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  17. ஜனனிஜெயச்சந்திரன்திங்கள், அக்டோபர் 17, 2016

    அருமை ஐயா தங்களது சொர்க்களை இளய தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு.

    பதிலளிநீக்கு