ஈஸ்வர அல்லா தேரே நாம்
---நா.முத்துநிலவன்---
சனவரி 30ஆம் தேதி, 1948ஆம் ஆண்டு, டெல்லி பிர்லாமந்திர் வழிபாட்டுக் கூட்டத்தில் நேருக்கு நேராக வந்து, கைகூப்பி வணங்கி விட்டு, நெஞ்சுக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிச் சுட்டதும் “ஏ! ராம்!“ என மரண ஓலமிட்டுத் தரையில் சரிந்த அந்த மாமனிதரின்
152ஆம் பிறந்த நாள்
இன்று!
கோட்சே, காந்தியைப் படுகொலை செய்ததை நியாயப் படுத்தி வழக்காடினான். ஆனால், கோடி கோடி மக்களின் கண்ணீரே வரலாறானது!
“இத்தனை ஆண்டுகளாக எங்களிடம் பத்திரமாக இருந்த காந்தியை,
ஆறுமாதம் கூட உங்களால் பாதுகாக்க முடிய வில்லையே?” என்று
ஆங்கிலேயர் ஒருவர், இந்திய நண்பரிடம் கிண்டலாகச் சொன்னாராம். சுருக்கென்று தைக்கக்கூடிய
அம்புதான்! ஆனாலும் ஏன் இழந்தோம், எப்படி இழந்தோம் என்னும்
சிந்தனை இப்போது மிகவும்தேவை
இந்திய ஒன்றியத்தைச்
சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, பர்மா,
வங்கதேசம் முதலான நாடுகளில் அவ்வப்போது ராணுவம் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து அதிகாரம் செய்ததுண்டு!
இந்தியா
விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் ஒருநாள் கூட ராணுவம்
ஆட்சிக் கட்டிலில் ஏறாத ரகசியம், மற்றவர் கண்டு மயங்கும்
அதிசயம், மக்களின் மத-சகிப்புத் தன்மையும்,
மதப்பற்றுக் கடந்த நாட்டுப் பற்றும், ஜனநாயக நம்பிக்கையும்
தானே? இந்த மகத்தான உணர்வுப் பெருக்கை மக்கள் மனத்தில் ஊற்றெடுக்க
வைத்ததில் அந்த மாமனிதர் காந்திக்கு நிகர் யாருண்டு?
“நான் ஒரு சனாதன இந்து” என்று
அறிவித்துக் கொண்டவர்தான் அவர். “சமூக அமைதிக்குச் சாதிப் பிரிவுகள் தேவை,
ஆனால் தீண்டாமை இருக்கக் கூடாது” என்றதற்கொரு
நீண்ட மரபு உண்டு!
அதன் வெளிப்பாடே காந்தி!
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர்க்கும் சமய நம்பிக்கை உண்டு!
ஆனால் எச்சமயத்தையும் அவர் சிபாரிசு செய்யவில்லை! அந்தத் திருக்குறளின்
அறன்வலியுறுத்தல் அதிகாரத்தை தனது நண்பர் டால்ஸ்டாய் வழியறிந்து, அதன் மூலத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்மொழியைக் கற்று, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழில் காந்தியைக் கையொப்பமிட வைத்தது
இந்த அறக்கருத்துகள்தான்!! மதுரையில்தான் அவரது உலகப்
புகழ்பெற்ற அரையாற்றம் மாற்றம் நிகழ்ந்தது. அதன் நூற்றாண்டை
இந்த செப்-22ஆம் தேதி வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடி
நெகிழ்ந்தனர் காந்தி அன்பர்கள்.
“கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்…
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே” என்றார் பாரதி! அடுத்த வந்த பாரதிதாசன்-
“இமயம் வாழும் ஒருவன் இருமினால்,
குமரி வாழ்வோன் மருந்து கொண்டு ஓடுவான்” என்றார்.
அடுத்து வந்த
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,
இன்னும் எளிமையாக-
“ஆருமேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்,
ஆகமொத்தம் எல்லாருமே பத்தாம் மாசந்தான்” என்பது
நெத்தியடி!
இவையெல்லாம் நமது நீண்ட நெடிய சங்கஇலக்கியம் தொட்டு, பக்தி இலக்கிய காலத்திலும், சித்தர் இலக்கியத்திலும் தொடர்ந்த உயர்பண்பாடு! இராமாவதாரம்
பாடிய கம்பர், சிவனைப் பற்றிய புகழுரைகளை நூறு இடங்களுக்கு
மேல் வைத்த நுட்ப வெளிப்பாடும் அந்த மரபுதான்!
“ஒன்றே குலமும் ஒருவனே
தேவனும்” எனும் திருமூலரின் வரிகள் அப்படியே “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்பதன் பொழிப்புரைதானே?
இந்த
மரபுதான்
தமிழ்மரபு, குறள்மரபு, சித்தர் மரபு, இந்திய
ஒன்றியத்தின் உலகப் புகழ்பெற்ற மதச் சசகிப்புத் தன்மையின் உயர் மரபு! இதுவே காந்தியின் மரபு!
தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள், வேளாங்கண்ணி மாதாவுக்கு “நேர்ந்து” கொண்டு, மண்டிபோட்டு ஊர்ந்து போய் மெழுகுவத்தி ஏற்றுவது சர்வசாதாரணம்! நாகூர் தர்காவில் சர்க்கரை வாங்கி பாத்தியா ஓதி வணங்கிப் படுத்துறங்கும் இந்துக்கள் ஏராளம்! அல்லாபாண்டி என இந்துக்கள் நடத்தும் இஸ்லாமியத் திருவிழாவும் உண்டு! பிள்ளையார் கோவில் கட்ட நிதிஉதவும் இஸ்லாமியரும் உண்டு! புதுக்கோட்டை-மதுரைச்
சாலையில் இஸ்லாமிய
மன்னருக்கு
இந்து மக்கள் கட்டிய “காட்டுபாவா பள்ளிவாசல்” போன்ற வரலாறு தெரியாதோர்தான் மதக் கலவரங்களை நடத்துகிறார்கள்! பல்வேறு சாதி-மதம் சார்ந்த மக்கள் வாழும் இந்திய
ஒன்றியத்தில் மக்களைப் பிரித்து, அரசியல் அதிகாரத்தை ருசிக்கின்ற, ருசிக்கத் துடிக்கின்ற
சுயநலத் தலைவர்கள் உள்ள வரை, “அரசியலில் மதம் கலவாத, எளிய, காந்தி போலும் தலைவர் இல்லையே?” எனும் ஏக்கம் தொலையுமா என்ன?
ரகுபதிராகவ
ராஜாராம் பதீத பாவன சீதாராம் – பாடல், காந்தியின் வழிபாட்டுப் பாடலில் இஸ்லாமியர்கள்
தனிமைப் படுகிறார்கள் என்பதால், “ஈஸ்வர
அல்லா தேரே நாம்” எனும் வரிகளைக் காந்தி சேர்த்தார்.
ஈஸ்வரனும் அல்லாவும் ஒருவரே என்பதை இருமதத் தலைவர்களுமே ஏற்கவில்லை. ஆனால், இந்த
வரிகள் என்றென்றும் காந்தியை நினைவு படுத்துவதாக வரலாற்றில் நிற்கின்றன. மக்கள், சாதி-மதங்களின்
பெயரால் கலவரப்படும் போதெல்லாம் நினைவில் எழும் வரிகளிவை!
ராமராஜ்யம்
அமைப்பதுதான் தமது லட்சியம் என்று கூறினார் காந்தி. கோட்சேயின் வாரிசுகளும் ராமனின்
ஆட்சியை அமைப்பதுதான் தமது நோக்கம் என்கிறார்கள். ராமனை ஏற்காதவர்கள் இந்த
நாட்டில் வாழத் தகுதியற்றோர் என்றும் சிலர் பேசுகிறார்கள்! இப்படி ஒருபோதும் காந்தி பேசியதில்லை! அவரது நவகாளி யாத்திரையே இதற்குப் பதில் கூறும்.
காந்தியிடம் அம்பேத்கர், நேதாஜி, ஜோஷி,
நேரு, பெரியாரும் கூட முரண்பட்டு நின்றதுண்டு! நூறு விழுக்காடும்
பின்பற்றத்தக்க மனிதர் யாருண்டு? ஒவ்வொருவரிடமும் அறிவைப்
பெறுவதுதானே அனுபவம்? இந்திய வரலாற்றில் “ஒற்றை ஆள் ராணுவமாய்”
நின்ற காந்தியின் மக்கள் ஒற்றுமைப் பணிகளை மறக்க முடியுமா? அவர் இறந்தபின், இந்த நாட்டைக் காந்திநாடு
என்றழைக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார். அது அந்த
நேரத்து உணர்வல்ல சிந்தித்து வெளிப்பட்ட சொற்கள்! அர்த்தம்
பெரிது!
காந்தியைப் பொறுத்தவரையில்
ராம், ரஹீம் இருவரும் ஒன்றுதான், “வாய்மை மற்றும்
நியாயம் என்ற கடவுளைத் தவிரவேறு கடவுளை நான் அங்கீகரிக்கவில்லை” என்றார் காந்தி.
கோட்சே தனது
வாக்கு மூலத்தில் “பகவத்கீதை தந்த உத்வேகம்தான் காந்தியைக் கொல்லத் தூண்டியது. கடமையைச்
செய்தேன், பலனை எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லியிருந்தான். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும்
இன்றைய சூழலில்தான் காந்தியின்
“ஈஸ்வர்-அல்லா”வுக்கான தேவை இன்னும் இன்னும் அதிக அவசியமாகிறது!
கோட்சேவை நாயகனாக,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். நாடு முழுவதும்
சிலை வைக்கப் போவதாகவும் சொன்னார். எனில், கதை நாயகன்
யார், எதிர் நாயகன் யார்?
மதச்சார்பற்ற
அரசியலில், மக்கள் ஒற்றுமை பேணுவதில் மிகப் பெரிய தியாக வரலாறுகளைக் கொண்டது நமது
இந்திய ஒன்றியம்.
காந்தி உயிர்தந்து
காப்பாற்றிய மதநல்லிணக்கம், மக்கள்ஒற்றுமை, ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச்
செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அண்ணல் காந்தி
எம்மதம் ஆயினும்,
அவர்தான் எங்கள் தாத்தா!
அன்னை தெரசா எம்மதம் ஆயினும்,
அவர்தான்
எங்கள் அன்னை!
அப்துல் கலாம் எம்மதம் ஆயினும்,
அவர்தான்
எங்கள் வழிகாட்டி!
--------------------------------------------------------------------------------------
நா.முத்துநிலவன், எழுத்தாளர், தமிழாசிரியர்(ப.நி), புதுக்கோட்டை
தொடர்புக்கு – muthunilavanpdk@gmail.com
--------------------------------------------------------------------------------------
30.1.48 டெல்லிபிர்லாமந்திர்
பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்து மத்தியில் காந்தியின் நேருக்கு நேராக வந்துநின்று, கரம்கூப்பி அவரை வணங்கிய பிறகு, துப்பாக்கியை அவரது நெஞ்சுக்கு நேராக நீட்டி கோட்சே சுட்டதும் அந்தமனிதர், “ஏ!ராம்!“ என மரண ஓலமிட்டு தரையில் சரிந்த நாள்!