'தமக்காகவும் பொதுக்கோரிக்கை களுக்காகவும் போராட பெண்கள் முன்வர வேண்டும்'

   பெண் ஊழியர்கள் பேரவையில்
   கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு
மேடையில் (இடமிருந்து) அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்கள்
மா.ஜோஷி, கி.ஜெயபாலன், சி.கோவிந்தசாமியுடன்
மாவட்ட சமூக நல அலுவலர் வி.லலிதா எம்.வேலுமணி
மற்றும் பெண்ஊழியர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் உள்ளனர்.

----------------------------------------------------

பெண்களுக்கான உரிமைகள் தானாக வந்து சேராது அவர்கள். தடைகளை உடைத்தெறிந்து  போராடுவதால் மட்டுமே  தமக்கான கோரிக்கைகளை மட்டுமல்ல சமூகத்தின் பொதுவான கோரிக்கைகளையும்  வென்றெடுக்க முடியும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
                தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மகளிர் குழுவின் மாவட்டப் பேரவை சனிக்கிழமையன்று நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார் மகளிர்குழு மாநில அமைப்பாளர் என்.கண்ணம்மாள் தொடக்கவுரையாற்றினார். மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் எம்.வேலுமணி வேலை அறிக்கை வாசித்தார். 
                   மாவட்ட சமூக நல அலுவலர் வி.லலிதா, அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.ஜோஷி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலப் பொதுச்செயலர் குமரேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் கவிஞர் புதுகை பூவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
        புதிய அமைப்புக்குழு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலர் சி.கோவிந்தசாமி பேசினார். மாவட்ட அமைப்பாளராக எம்.வேலுமணி, உறுப்பினர் ஜாய்ரூபலாநித்யாஅன்னபூரணம், உமா மகேஸ்வரி, ஆகியோரும் இணை அமைப்பாளர்களாக செல்வமீனாள், பி.மலர்விழி, பழனி, சித்ரா, ராஜாத்தி இந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடந்த சிறப்புக் கருத்தரங்கில் பெண்களே நீங்கள் யார்?” என்ற தலைப்பில் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். 
               அவர் மேலும் பேசும் போது -
       பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவது தவறென்றால், அந்தத் தவற்றை மீண்டும், மீண்டும் செய்ய வேண்டும். நமதுசமூகம் முன்னேறிய சமூகமாகத்தோன்றும். ஆனால்இன்னும் எவ்வளவோ முன்னேறவேண்டியுள்ளது. நமது மாவட்ட அறிவொளி இயக்கத்தில் எண்ணறிவு, எழுத்தறிவுடன், மற்ற மாவட்டங்களில் இல்லாத “பெண்கள் சுயமாக இயங்குதல் திறனறிவு” என்பதை நமது மாவட்டத்தில் சேர்த்த அன்றைய நமது மாவட்ட ஆட்சியரும் அறிவொளி இயக்கத் தலைவருமான திருமதி ஷீலாராணிசுங்கத் அவர்களின் வழிகாட்டுதலில், “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி- வாழ்க்கைச் சக்கரத்தைச் சுத்திவிடு தங்கச்சி” என்னும் பாடலை எழுதினேன். அந்தப் பாடல் நமது மாவட்டம் தாண்டியும், மாநிலம் தாண்டியும் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராட்டி, குஜராத்தி முதலான இந்தியமொழிகள் பலவற்றில் பாடப்பட்டுப் புகழ்பெற்றது. 
   நமது மாவட்டத்தின் கிராம அறிவொளி மையங்களுக்கு எழுத்தறிவு கற்க வந்து, இந்தப் பாடலைப் பாடியவாறு, ஆயிரக்கணக்கான பெண்கள் அப்போது சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொண்டனர். திருவரங்குளம் ஒன்றியம் வம்பன் நால்ரோடு அம்பேத்கர் காலனியில் நள்ளிரவிலும் பெண்கள் சைக்கிள் ஓட்டிக் காட்டியதைப் பார்த்த பின்னர் பாடலை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. எனவே, மீண்டும் நான் “சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டோம் அண்ணாச்சி -வாழ்க்கைச் சக்கரத்தைச் சுத்திவிட்டோம் அண்ணாச்சி” என்று மகிழ்ச்சியாக எழுதினேன். அறிவொளித் தொண்டர்கள் எல்லாம் மகிழ்ந்தோம்.  
     ஆனால் அப்படிச் சைக்கிள் ஓட்ட்க் கற்றுக்கொண்ட பெண்கள், சில ஆண்டுகளில் கூடுதல் வேலைப்பளுவுக்கு ஆளானதை நான் நேரிலேயே கண்டேன். “இப்பத்தான் உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமில்ல, நீயே போய் பிள்ளைகளைப் பள்ளிக்ககூடத்துல விட்டுடு” “இப்பத்தான் உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுதில்ல நீயே அடுத்த கிராமத்துக்குப் போயி தண்ணிக்குடத்த ஏத்திக்கிட்டு வந்துரு” என்னும் புருஷர்களின் புதிய குரல்களைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன். “நமக்கு இன்னும் வேலை இருக்கு“ என்று உணர்ந்தேன்!
     இந்தச் சமூகத்தின் பெண்ணடிமைத்தன உணர்வு போகும்வரை பெண்கள் புதிதாகக் கறறுக்கொள்வதும் அவர்களை மேலும் அடிமைப்படுத்தவே உதவும் என்பது எனக்குமட்டுமல்ல... பெண்ணுரிமையாளர் பலருக்கும் புரிந்தது. இந்தச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனமும் புதிய, புதிய வடிவங்களில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்பது தெளிவானது. பெண்கள் விடுதலை பெற வேண்டுமானல் நிறையப் படிக்க வேண்டும். நிறைய சிந்திக்கவும் வேண்டும், 
     தலைமைப் பொறுப்பு கிடைக்கும் போது ஏற்பதற்குத் தயங்கக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அன்றாட உலகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்காணித்து எதிர்வினையாற்ற வேண்டும் 
    பெண்கள், தங்கள் பிரச்சினைகளோடு பொதுப் பிரச்சினைகளிலும் தலையிட்டு போராட வரும்போதுதான் ஆண்களும் உறுப்பினராக உள்ள பொதுஅமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளும் கிடைக்கும். “தற்காத்து தற்கொண்டான் பேணி“ என வள்ளுவர் சொன்னதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் பெண்ணுக்கு மட்டுமல் ஆணுக்கும் நல்லது.
        இவ்வாறு கவிஞர் முத்துநிலவன் பேசினார்.
          முன்னதாக பி.மலர்வழி வரவேற்க, வி.அன்னபூரணம் நன்றி கூறினார். பேரவையில் ஏராளமான பெண் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

----
செய்தியும் புகைப்படமும் - சு.மதியழகன், தீக்கதிர் செய்தியாளர்
(இது கடந்தாண்டு நடந்தது, மார்ச்-8 சர்வதேசப் பெண்கள்தினம் வருதிலல..) -----------------------------------------------------------

16 கருத்துகள்:

  1. பெண்களுக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஆண்களின் நலமும் அடங்கியிருக்கிறது தோழரே!
      “ஆண்களெலலாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
      ......... அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?” - பாரதி

      நீக்கு
  2. உரை அருமையாக உள்ளது ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அற்புதமான சொற்பொழிவு! பெண்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு பாராட்டுக்கள்!

    வாழ்த்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஐயாவிற்கு வணக்கம்
    பெண்களுக்கு குரல் கொடுக்கும் உங்கள் பதிவு கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அற்புதமான பேச்சு அய்யா. மேலும் இதை பெண்கள் நடைமுறை படுத்த வேண்டும் எனும் வேண்டுகோளையும் வைக்கிறேன். பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் பல பதிவுகளைத் தங்கள் தளத்தில் பார்ப்பது கூடுதலான மகிழ்வு ஐயா. தொடருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணும் பெண்ணும் அனைத்து வகையிலும் சமம் என்னும் நினைப்பில், செயலில் எவரிடம் குறையிருந்தாலும் இந்தச் சமூகம் சிக்கலாகும். எனவே தான் நண்பா...

      நீக்கு
  5. “தற்காத்து தற்கொண்டான் பேணி“ என வள்ளுவர் சொன்னதை எடுத்துக் காட்டினீர்கள். தன்னைக் காத்துக்கொண்ட பிறகுதான், தன்னைக் கொண்டவனைக் காக்கவேண்டும் என்ற சுயமரியாதை கொள்கையை வள்ளுவர் எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார்! தனது உரிமை பறிக்கப்படுகிறது என்றால், அதைப் பறிப்பவன் கணவனே ஆனாலும் அவனை மீறவேண்டும் என்ற வள்ளுவரின் அறிவுரையை நீங்கள் இன்னும் தெளிவாகப் பெண்கள் மத்தியில் உரைக்கவேண்டிய நேரம் இது!

    பதிலளிநீக்கு
  6. சரியாக சொன்னீர்கள் !பெண்களே ,எத்தனை நாள்தான் கட்டியவனோடு மட்டுமே,அதுவும் வீட்டில் மட்டுமே போராடிக் கொண்டிருப்பீர்கள் ?

    பதிலளிநீக்கு
  7. அருமையான உரை ஐயா..உண்மைதான் பெண்கள் ஒன்றைக் கற்றுக்கொண்டால் அது அவர்களுக்கு வேலைப்பளுவை ஏற்றுகிறது..இதற்காகவே கார் ஓட்டக் கற்றுக்கொள்ளாமல் இருக்கும் பெண்ணை நான் அறிவேன்.
    அறிவொளி இயக்கத்திற்கு நீங்கள் எழுதிய பாடல் மிக அருமை..வாழ்த்துகள் ஐயா!
    //பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவது தவறென்றால், அந்தத் தவற்றை மீண்டும், மீண்டும் செய்ய வேண்டும். // உண்மைதான்...ஆனால் திமிர் பிடித்தவள் என்று பட்டம் கட்டிவிடுகின்றனர்.
    அருமையான உங்கள் பேச்சைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. உங்கள் கருத்துத் தந்த தூண்டுதலில்,
      மார்ச் எட்டாம் தேதி அந்தப் பாடலை முழுமையாகப் பதிவேற்றுவேன்.

      நீக்கு
  8. 'தமக்காகவும் பொதுக்கோரிக்கை களுக்காகவும் பெண்கள் போராட முன்வர வேண்டும்' என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. உரைவீச்சு அருமை...
    வாழ்த்துக்கள்
    தளங்கள் கிடைத்தால் சரியாக செயல்படுவார்கள்..
    தளங்கள் தரும் நெடும் தேடல் உங்கள் உரை..

    பதிலளிநீக்கு