இந்தித் திணிப்பு எந்தவகையிலும் நல்லதல்ல! - இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை

 

மொழித் திணிப்பு - எந்த வகையிலும் நல்லதல்ல!

--நா.முத்துநிலவன்

இந்தியா விடுதலை பெற்றவுடன், மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. ஆட்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்தி ஆதரவாளர்களால் நிரம்பி இருந்ததால், இதை ஏற்கவில்லை.

ஒரிய மொழி பேசும் மக்கள், தனி மாநிலக் கோரிக்கையை ஆங்கிலேயரிடம் எழுப்ப, முதல் மொழிவழி மாநிலமாக 1935ஆம் ஆண்டே ஒரிசா  பிறந்துவிட்டது. ஆங்கிலேயர் புரிந்து கொண்டதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை

ஆங்கிலேயர் காலத்திய மதராஸ், பம்பாய், டெல்லி, வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை நிர்வாக எளிமைக்காக மட்டுமின்றி, மாநிலம் கடந்தும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்திலேயே திட்டமிட்டனர். ஆங்கிலேயர் காலத்திலேயே மொழிவழிபிரதேசக் காங்கிரஸ் கமிட்டிவைத்து மக்களைத் திரட்டிய கட்சி, ஆட்சிக்கு வந்ததும் இதை ஏற்காமல் இந்தித் திணிப்பில் இறங்கியது.

பிரிந்த மாநிலங்கள் - நேரு அமைத்த தார்’ கமிஷனும், ‘ஜே.வி.பி.’ கமிஷனும் மொழிவழி மாநிலப் பிரிவுகளை எதிர்த்து அறிக்கை தந்தன. (ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரின் முதல் எழுத்துகளே ஜே.வி.பி.) இதனிடையே இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டில், உருவாக்கப்பட்டு விட்டது.     

அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழி பேசுவோரை தட்சிணப் பிரதேசம்என ஒரே மாநிலத்தில் அடக்க நினைத்ததை நான்கு மொழியினரும்  எதிர்த்தனர்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் தந்து ஸ்ரீராமுலு அவர்கள் பற்ற வைத்த நெருப்பு, தென்னகமெங்கும் பரவியது. தன் விருப்பத்தை விடவும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, 1953இல் ஆந்திராவைத்  தனிமாநிலமாக  அறிவித்தார்.   

தெலுங்கு மொழிக்குத் தனி மாநிலம் கிடைத்ததைத் தொடர்ந்து, மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் வலுத்தன. காங்கிரஸ் அல்லாத கட்சிகளே இதை முன்னெடுத்தன. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1956 நவம்பர் 1ஆம் தேதி, இன்றைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்கள் உருவாயின.

தொடர்ந்து, 1957இல் அஸ்ஸாமிலிருந்து நாகாலாந்தும், 1960இல் பம்பாயிலிருந்து மராட்டிய, குஜராத் மாநிலங்களும், 1966இல் அரியானாவிலிருந்து பஞ்சாபும் தனித்தனி மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்தன.

1965இல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்  விளைவாக, 1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சிக்கு வந்தது. விடுதலைக்குப் போராடிய ஒரு கட்சி, இருபதே ஆண்டுகளில் ஒன்பது மாநிலங்களில் தோற்றதும், தமிழகத்தில் அதன்பின் ஆட்சிக்கு வரவே முடியாத நிலையும் இந்தித் திணிப்பால்தான் என்பதைதிணிப்போர்மறந்துவிடக் கூடாது!

இதன் பின்னரும் அந்தந்த மொழி-பண்பாட்டு உணர்வின் அடிப்படையில், மதராஸ்-சென்னை ஆனது, திருவேந்த்ரம்-திருவனந்தபுரம் ஆனது, மைசூர்- மைசூரு ஆனது, பெங்களுர்-பெங்களுரு ஆனது, பம்பாய்-மும்பை ஆனது, கல்கத்தா-கொல்கத்தா ஆனது, பாண்டிச்சேரி- புதுச்சேரி ஆனது,  இந்தத் திருத்தங்களும் தாய்மொழி உணர்வின் வெளிப்பாடே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

தாய்மொழியின் முக்கியத்துவம் - தாய்மொழியை அடிப்படையாக வைத்துப் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டி, குஜராத், வங்கம், பஞ்சாப் முதலான மாநிலங்களே இந்திய முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சரி. மூன்றாவது மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ இந்தியை ஏற்றுக் கொண்டால் என்ன? எனும் முக்கியமான கேள்விக்கு வருவோம்.

இந்தியை ஏற்ற வட இந்திய மாநிலங்களின் இன்றைய நிலை என்ன?

இந்திப் பாடத்தில் பத்துலட்சம் மாணவர்கள் தோல்வி” – இது 2019ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில மாணவர் நிலை!  இதே நிலைதான் பீகாரிலும்!! இந்தியை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களிலும் இது நடக்கிறது. ஏன் தெரியுமா? அந்த மாநில மாணவர்களின் -பூர்வீக- தாய்மொழிகள் வேறு! வேறு மொழி பேசிய தாய்-தந்தையின் பிள்ளை இந்தியில் படிக்கும்போது இந்த நிலை வராதா? குண்டுப் பையனுக்கு இடம் கொடுத்தவன், தன் சொந்த இடத்தையும் இழந்து விடுவானே?

மராட்டி, குஜராத்தி, வங்கம், பஞ்சாபி, ராஜஸ்தானி என, பெரிய மாநில மொழிகளே புறந்தள்ளப் படும்போது, மைதிலி, போஜ்புரி, -புத்தர் பேசிய- பாலி, மகதி, இன்றைய குடியரசுத் தலைவரின் சந்தாளி போலும் ‘சிறுமொழிகள் என்னாகும்? உலகிலேயே அழிந்துவரும் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என ஐ.நா. குறிப்பிடும் காரணம் புரிகிறதா?

 ரெண்டுவீட்டு விருந்தாளி கெண்டை வீங்கிச் செத்தானாம்என்பது, தமிழ்ச் சொலவடை! சொந்த மொழியிலும் படிக்க முடியாமல், வந்த மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் கல்வி, வாழ்வை இழந்த பரிதாபம், இன்று லட்சக் கணக்கான வட இந்தியரை, ”ஏதாவது வேலை கிடைக்கும்என, தமிழ்நாட்டை நம்பி ஓடி வரச் செய்கிறது!

இருமொழிக் கொள்கை - மொழிவழிச் சிந்தனையில் முன்னின்ற அண்ணாவின்இருமொழிக் கொள்கைதான் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் ஏற்றது என்பதுதான், ஒன்றியத் தலைவர்களுக்கு வரலாறு கற்றுத்தரும் பாடம்!

நவீன சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ, இருமொழிக் கொள்கையே ஏற்றது என்பதை உணர்ந்து செயல்படுத்தினார். 70விழுக்காட்டுக்கும் மேல் சீன மொழி பேசுவோர் இருந்த போதும், சீனம்,, மலாய், தமிழ் என, முதலில் அவரவர் தாய்மொழியையும், இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் படிக்கச் செய்தார். நான்கு மொழிக்கும் சமஉரிமை தந்ததால் அனைத்துத் துறையிலும் சிங்கப்பூர் முன்னேறியது.

ஆங்கிலத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் இந்தி எதற்கு? அதுவே கூடுதல் சுமையாவதோடு, உலகத் தொடர்பும் கிடைக்காது. இன்றைய வடஇந்திய மாநிலங்கள் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்க மும்மொழித் திட்டமே காரணம்.

தமிழ்நாட்டில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து வழங்குகிறது! மூன்றாவது மொழிகற்கும் வட இந்திய மாநிலங்கள் எதிலாவது தமிழ் சொல்லித் தரப்படுகிறதா? சில ஆயிரம் பேரே புழங்கும் சமஸ்கிருதத்திற்கு அறுநூறு கோடியாம், உலகெங்கும் எட்டுக் கோடிப்பேர் பேசும் தமிழுக்கு வெறும் இருபது கோடியாம்!  ஒருகண்ணில் பஞ்சு, மறுகண்ணில் நஞ்சா?

நிற்க

மொழிவழி நாட்டு முன்னேற்றம் பற்றி ஒரு சிறு ஒப்பீடு பார்ப்போம்-

(1) நிதி ஆணைய (NITI-Ayog’s Multy Dimentional Poverty Index MPI)அறிக்கைப் படி இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தில்தான் வறுமை அதிகமாக உள்ளது (59.91%)  

(2)கல்வி  நிலையிலும் பீகார் மாநிலமே கடைசி நிலயில் உள்ளது

(3) பெருவாரி மக்கள் பேசிய உருது மொழிக்கு மாற்றாக, 1881ஆம் ஆண்டே இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிய முதல் மாநிலமும் பீகார் தான்.

மாறாக, இன்றுவரை இந்தியை ஏற்காமல், இருமொழிக் கொள்கையில்  உறுதியோடு இருக்கும் தமிழ்நாடுதான் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர் விகிதத்தில்  இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. வறுமையற்ற மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம்!   

  பண்பாட்டில் மட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பு- வேளாண்மை, தொழில் வளர்ச்சி- சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தவிர்க்க முடியாததாகத் தாய்மொழிக் கல்வியே உள்ளது. தாய்மொழியுடன் ஆங்கிலம் எனும்  இருமொழித் திட்டமே முன்னேறிய உலக நாடுகளில் உள்ளது. இதைத்தான் தமிழ்நாடும் சொல்கிறது, செய்கிறது. இதைப் புரிந்து கொள்ள மறுத்தால், இந்தித் திணிப்பு, வடஇந்தியாவை முன்னேற விடாது என்பதே கசப்பான உண்மை. இதுவே மொழிவழி மாநிலங்கள் உருவான நாளில் முன்னிற்கும் சிந்தனையாகும்.        

இமய மலை போலுயர்ந்த ஒரு நாடும், 

தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்” – பாரதிதாசன்.

------------------------------------------------

(செய்தித் தாளின் பக்க அளவு கருதி, 

சிறிதளவு சுருக்கியிருந்தாலும், 

கட்டுரையின் சாரமும் காரமும் குறையாமல் 

2022, நவ.1ஆம் தேதியிலேயே வெளியிட்ட 

இந்து-தமிழ் நாளிதழ் நடுப்பக்கக் கட்டுரை 

ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றியும் வணக்கமும்)

---------------------------------- 

இந்து-தமிழ் நாளிதழில் 01-11-2022 அன்று வந்த

இந்தக் கட்டுரையை அடுத்தநாளே (02-11-2022) 

மறுபதிப்புச் செய்து வெளியிட்ட

முரசொலி நாளிதழுக்கு எனது நன்றி

--------------------------------

தந்தை பெரியாரின் குடியரசு எழுத்துகள் – மின்தொகுப்பு

 தந்தை பெரியாரின் குடியரசு எழுத்துகள் – மின்தொகுப்பு

(1925 முதல் 1938 வரை – 14 ஆண்டுகள் - 10,562 பக்கங்கள்)

பத்தாயிரம் பக்கங்களுக்கும் அதிகமான 

(1925முதல் 1938வரையான)

குடியரசு இதழ்த் தொகுப்புகளை, 

ஈடுபாடு மிக்க உழைப்பைத் தந்து  

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்                        

மின்-தொகுப்பாக்கித் தந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நமது விழிப்புறும் தமிழகம் 

பெரும் கடன் பட்டுள்ளது.

தந்தை பெரியாரை இளைய சமூதாயத்திற்கு எளிதாக அறிமுகப்படுத்தும் மிகப் பெரிய பணியைச் செய்திருக்கும் அவர்களுக்கு நமது இதயம் கனிந்த வாழ்த்துகளும் நன்றியும் பாராட்டுகளும் வணக்கமும்.

இதை

திருச்சி தோழர் அரசெழிலன் அவர்கள்,

“நூல்வெளி” புலனக் குழுவில் பகிர்ந்திருந்தார்.

இவ்விருவரின் அனுமதியோடு 

இதன் 1926 ஆம் ஆண்டுத் தொகுதி

அட்டையை மட்டும் இங்குப் பகிர்கிறேன்.

விரும்புவோர் 
எனது செல்பேசிக்கோ 
இந்த வலைப்பக்கத்தின் பின்னூட்டம் பகுதியிலோ 
தெரிவித்து மின்னஞ்சல் தந்தால் 
மின்தொகுப்பை அனுப்பி மகிழ்வேன். 
இது என்னாலான சிறு பணி.

மூடநம்பிக்கை-சடங்குள்-சாதி-மதங்களைப் பரப்பி, மக்களின் எழுச்சியை மடைமாற்றும் சுயநல அரசியல் வாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்கும் தந்தை பெரியாரின் அறிவாயுதங்களை நாடெங்கும் வழங்குவோம். குறிப்பாக இளைய சமூகம் எழுச்சியடைய இது நல்ல வாய்ப்பு

நன்றி,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

செல்பேசி + 91 94431 93293

இலவசத் திட்டங்கள் - தமிழ்மரபு சொல்வது என்ன? - இன்றைய இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை

--நா.முத்துநிலவன் -- 

நாடு முழுவதும் இப்போது ஒரு பெரும் விவாதம் நடந்து வருகிறது. இது தமிழ்நாட்டு அரசியலைப் பற்றியும் பேசுவதால் நாமும் தமிழ் மரபோடு இந்த விவாதத்தை இணைத்து பார்த்துப் பேச வேண்டி உள்ளது.

இலவசங்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கும் கட்சிகளுக்கு எதிராக பா...வின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்  பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறது.

இலவசங்கள் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. நாட்டின் நலன் கருதி, இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவைஎன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தரப்பும் இடையூட்டு மனுவைத் தாக்கல் செய்து எழுத்துப் பூவர்மான தனது வாதத்தை முன்வைத்து எங்களின் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. . மாறாக அவை சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான கருவி. . தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதில், சமூக நலத் திட்டங்களை அறிமுகப் படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறதுஎன்று வாதிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினை குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், “நாட்டின் நலன் கருதி இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் தேவைஎன்று நமது நீதியரசரே சொல்லியிருப்பதால் தமிழ்நாட்டின் மக்கள் நலம் சார்ந்த மரபு பற்றிய சில குறிப்புகளை இங்கே வைப்பது சரியாக இருக்கும்

தமிழ்நாட்டில் கடந்த 100ஆண்டாக இலவசத் திட்டங்கள் செயல் பாட்டில் உள்ளன. அது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் கடந்த 50ஆண்டுதேர்தல் கால இலவச அறிவிப்புகள்பற்றிய விவாதங்களே  இப்போது பேசப்படுகின்றன என்றாலும், இதற்கொரு தமிழ்மரபு உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்மரபு இலவச சமூக நலத் திட்டங்கள்பற்றி என்ன சொல்கிறது? 

      உலகம் முழுவதும் பசி பற்றியும் அதைப் போக்க வேண்டிய சமூகக் கடமைகள் பற்றியும் கருத்துகள் உள்ளன. ஆனால், பசியின் கொடுமையை இலக்கியமாகவும் எதார்த்தமான முறையிலும்பசி என்னும் தீப்பிணிஎன்கிறது திருக்குறள்! இந்நோய் தீர்ப்பவர் யாராயினும் அவரைப்பசிப்பிணி மருத்துவர்என்று கொண்டாடச் சொல்கிறது புறநானூறு(173)

      ஒருவன் பிச்சையெடுத்துத்தான் வாழ வேண்டும் எனும் நிலைமை வந்தால் ஆண்டவனோ, ஆள்பவனோ, அவன் அழிந்து போகட்டும்எனும் குறளின் குரலும்(1062),  “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎனும் மணிமேகலையின் குரலும், பசிக்கு எதிரான சமூக அறைகூவல் அல்லோ! இது பற்றிய பெரும் இலக்கியச் சான்றுகள் தமிழில் ஏராளமுள்ளன.

      இது ஏதோ இரண்டாயிரம் ஆண்டுப் பழங்கதை என்பீராகில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும் இதன் தொடர்ச்சியாகதனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்என்று கொந்தளிக்கிறார்!

      ஏறத்தாழ பாரதி இந்தப் பாடலை எழுதிய ஆண்டிலேயே (1920இல்) மதராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசு, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதியஉணவுத் திட்டம் கொண்டு வந்தது! (“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” இந்து தமிழ் திசை வெளியீடு பக்கம்-11). 

இதே வழியிலேயே பின்னர் முதல்வராக வந்த காமராசர், மதிய உணவுத் திட்டத்தை (1955இல்) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவு படுத்தியபோது, முதன் முதலாக பாரதி பிறந்த எட்டயபுரத்தில் போய்த் தொடங்கி வைத்தது தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?!

மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராசர், “அன்ன தானம் நமக்குப் புதிதல்ல, இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச் சென்று சோறு போடும் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட எனக்கு முக்கியமான  வேலை வேறு இல்லை! எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல்உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்என்று பேசினார்! இதுவும்கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்ற தமிழ் மரபின் தொடர்ச்சிதானே?

1920இல் மாநகராட்சிப் பள்ளியில், 1955இல் மாநிலம் முழுதுமுள்ள பள்ளிகளில், என்று தொடர்ந்த இலவச மதிய உணவுத்திட்டம், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் காலத்தில்இலவச சத்துணவுத் திட்டம்என்றானது. அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் மு.கருணாநிதி சத்துணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா அம்மையார் பயிறு, பருப்பு என சத்துப் பொருள்களைச் சேர்த்து வழங்கினார்கள்.

காமராசர் மதிய உணவு தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சமாகஇரு மடங்காகஉயர்ந்தது ஒன்றும் சாதாரண விஷயமல்ல!

அவருக்குப் பிறகும் பள்ளிப் பிள்ளைகளுக்கான இலவசங்கள் தொடர்ந்து இப்போது பாடநூல்கள் மட்டுமின்றி, மாணவர் சீருடை, எழுதுபொருள், புத்தகப் பை, மடிக்கணினி, மிதிவண்டி இலவசப் பேருந்துப் பயணம் என 14விதப் பொருளாகத் தொடர்வதால் என்ன லாபம் தெரியுமா?

தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்தும் ஒன்றிய அரசின் நோக்கம்பள்ளிப் படிப்பைத் முடிப்போர் சதவீதத்தை இன்னும் பத்தாண்டுகளில் 50ஆக உயர்த்துவதுஎன்கிறது. அதை இப்போதே எட்டிவிட்டது தமிழ்நாடு! இதுதான் தமிழ்ச் சமுதாயம் பெற்ற லாபம்!

கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு, 1972இல் பொது விநியோக கழகம் (சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்) தொடங்கப்பட்டது. 1975இல் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டன. அரசின் நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப் படுகின்றன . மேலும் வருவாய்த்துறையின் அனைத்து சான்றுகளும் இந்த குடும்ப அடையாள அட்டையைக் கொண்டே பெற முடிகிறது. அரசு மானியத்தால் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அரிசி எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குவதும் ஒருவகையில் இலவசம் சார்ந்த மக்கள் நலத்திட்டமன்றி வேறென்ன?

இந்த இடத்தில், நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிடுவதை ஒப்பிடலாம் – “தமிழ்நாடு துணிச்சலான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தது. தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு, சுகாதார மையங்கள், சாலைவசதிகள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறைய திட்டங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் பலவற்றையும் பெரும்பாலான பொருளாதார மேதைகள் விரும்பவில்லை! ஆனால், அவர்களின் எதிர் பார்ப்புக்கு மாறாக, தமிழகம் இந்தத் திட்டங்களில் பெருவெற்றி பெற்றது. என்றவர், தொடர்ந்து- பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானமும் அதிகம், வறுமை நிலையும் ஒப்பீட்டளவில் குறைவு. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது சமூகநலத் திட்டங்களைச் சாத்தியப் படுத்தி உள்ளது என்கிறார்!  இது ஒரு பாராட்டுச் சான்றிதழ் அல்ல! தமிழ்நாட்டின் சமூகநல மரபை, பிற மாநிலங்கள் எடுத்துப் பின்பற்றிக் கொள்வதற்கான வேண்டுகோள்!

மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அத்தகைய மானியங்கள், உற்பத்தியைப் பாதித்து, மறைமுக செலவை அதிகரிக்கின்றனஎன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பனர் அசிமா கோயல் பேசியிருக்கிறார் (21-08-2022 செய்தி)

இவர், ஒரு நிமிடம், இந்தியாவின் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு சில ஆண்டுகளில் தள்ளுபடி செய்து உதவிய பெரும் தொகையை விட இந்த மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகை குறைவுதான் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது. இதற்குப் பெரும் விளக்கம் தேவையில்லை

இலவச சத்துணவுத் திட்டத்தால் அடுத்த தலைமுறையினரின் கல்வியை எடுத்துச் செல்வது போலவே, இலவச வேட்டி,சேலை அடிப்படையானதும் உணவுக்கடுத்து அவசியமானதுமாகும் இதையும் தமிழ்மரபு சொல்கிறது-

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலித்தொகை-18)

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே (புறநானூறு-189)

      இதேபோல, யுகம்யுகமாக அடுப்பங்கரையில் கிடக்கும் சரிபாதி மனித இனமான பெண்களை முன்னேற்ற, இங்கிலாந்துக்கும் முன்பாகவே வாக்குரிமை வழங்கியது(1921)அன்றைய மதராஸ் மாகாணம்தான். அதன் நீட்சியாகவே இன்றைய அரசின்பெண்களுக்கு இலவசப பேருந்துப் பயண சலுகை. இதனை 1990-91இல் புதுக்கோட்டையில் நடந்த அறிவொளி இயக்கத்தில்வேறெந்த மாவட்டத்திலும் சேர்க்காத நிலையிலும்- சேர்த்தபெண்கள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போது நான் எழுதியசைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சிஎனும் பாடல் வெறும் சைக்கிள் ஓட்டுவதோடு முடிவதில்லை, அது பெண்களின் சுயமாக இயங்கி சமூகத் தொடர்போடு முன்னேறுவது என்று புரிந்துதான் இயங்கினோம். அது தான் பேருந்துப் பயண நீட்சி! 8ஆம் வகுப்பு முடித்தால் திருமண உதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி வந்தால் மாதம் ஆயிரம் என்பதும் இதுதானே? “பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்என்ற நமது பாரதியின் தமிழ்க்கனவு நிறைவேற இது உதவும் தானே?

இந்தியாவிலேயே முன்னோடியாக விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் என்பதன் கூட்டுப் பலனை இந்த ஆண்டுஎந்த ஆண்டையும் விட- அதிக விளைச்சல் எனும் செய்தியில் பார்க்கிறோமே? மற்ற மாநிலங்கள் நீர்,இடுபொருள்,மின்வசதி அற்ற நிலையில் விவசாயிகள் வெளியேற்றம் என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படி தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களின் பின்புலத்தை விளக்கிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொன்றும் தமிழ்மரபின் நீட்சி என்பதும் வளமான மாநிலத்தில் மகாராட்டிரத்திற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்தாலும் அங்குள்ள பணக்காரர் ஏழை இடைவெளியை விடவும் தமிழ்நாட்டில் குறைவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இதன் சமூக வளர்ச்சி புரியும்.

 வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைஎன்னும் திருக்குறளைப் புரிந்து கொண்டால், இட ஒதுக்கீடும் புரியும்! மக்கள் நலத்திட்டங்களும் புரியும்! இந்தத் தமிழ்மரபுதான் தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறது என்பதும் புரியும். தமிழ் மரபு சொல்வதைத்தான் தந்தை பெரியாரும், அம்பேத்காரும், கார்ல் மார்க்சும் சொல்லியிருக்கிறார்கள் எனும் சமத்துவ சமூக நீதியும் புரியும்.

-------------------------------------------------------------

கட்டுரை ஆசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்.

------------------------------------------------------------------ 

வெளியீட்டுக்கு நன்றி - இந்து தமிழ் நாளிதழ் -08-09-2022

செய்தி இதழில் கட்டுரைக்கான இடம் குறித்து, எனது அனுமதி பெற்று சுருக்கப்பட்ட கட்டுரையின் நீட்சி இது.

-----------------------------------------------------------------