சூப்பர் சிங்கர் ஜூனியர் – குழந்தைகள் எங்கே?

“தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்“-எனும் விளம்பரத்துடன் விஜய் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பல்லாயிரம்பேர் ரசித்துப் பார்க்கிறார்கள். நானும் விரும்பிப் பார்க்கத்தான் செய்கிறேன். அதனாலேயே அவ்வப்போது எனக்குத் தோன்றும் சந்தேகத்தை இங்குப் பதிவிடுகிறேன்.
     அற்புதமாகப் படுகிறார்கள், அளவற்ற மகிழ்ச்சியுடன் பாடுகிறார்கள், பாடும் குழந்தைகளுக்கு உறவினர்-நண்பர்களிடம் மட்டுமின்றி தொலைக்காட்சி ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது, வெற்றி பெறும் குழந்தைகளுக்குப் பெருந்தொகையுடன் நல்ல விளம்பரமும் கிடைக்கிறது, தொடர்ந்து திரைப்படத்தில் பாடகராகும் வாய்ப்பும் அதற்கும் முன்பே வெளிநாடுகள் உள்ளிட்ட மேடை வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்பதெல்லாம் உண்மைதாம்.
நடுவர்களாக வரும் பிரபல பாடகர் மனோவும், சின்னக்குயில் சித்ராவும்  அனந்துசாரும் கூட (இவர்மட்டும் வேடிக்கையான அணி-உடைகளில் வருகிறார்!) மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார்கள், தமக்குத் தரப்பட்ட பணியைக் குறையின்றிச் செய்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. அதுவும் சில நேரங்களில் அவர்கள் சொல்லும் இசைக்குறிப்புகள் மிகச்சரியாகவே இருக்கின்றன என்ற அளவிலும் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தமிழ்த்திரையுலகம் சூட்டிய புகழ் மகுடத்தைக் கழற்றி வைத்துவிட்டு நன்றாகப் பாடும் குழந்தைகளுடன் இவர்களும் குழந்தைகளாகிக் கொஞ்சுவதைப் பார்க்கும்போது, “மேதைகள் மேதைகள்தான், மேதைகளும் சிலநேரம் குழந்தைகள்தான் போல“ என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால், எனக்கு அவ்வப்போது தோன்றும் சந்தேகம் இதுதான்..
பாடும் “ஜூனியர்“களிடம் குழந்தைமை இருக்கிறதா என்பதே? அது அந்தக் குழந்தைகளின் வயது சார்ந்ததல்ல. 10வயதுக் குழந்தைகள் கூட இப்போது 15வயதுக் குழந்தைகள் போலத் தோன்றுவது பற்றியல்ல எனது சந்தேகம். அந்தக் குழந்தைகள் பாடும் பாடல் சார்ந்தது. நாமும் இதை ரசிக்கிறோமே அல்லது அந்தக் குழந்தைகளின் குழந்தைமையை நம்மை அறியாமலே கொன்றுவிடுகிறோமா? இது சரிதானா என்பதுதான்., அதைவிடவும் அப்படிப்பட்ட “குழந்தைமையை இழந்து, பெரிய மனுசி போல (அ) பெரிய மனுசன் போலப் பாடுவது சரிதானா என்பதுதான்!
     குழந்தைகளைக் குழந்தைகளாகவே பாவிக்காமல், பெரியவர்களைப் போல நினைத்து ரசிப்பது அல்லது குழந்தைகளின் “பெரியமனிதத் தனங்களை“ ரசிப்பது என்பது வேறு! அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டும் கூட. அப்பாவின் செருப்பை அணிந்து நடப்பது, அம்மாவின் சேலையை அள்ளி இழுத்து செருகிக் கட்டிக்கொண்டு வந்துநிற்பது எல்லாக் குழந்தைக்கும் பிடித்த விளையாட்டுத்தான், அதை நாமும் ரசிக்கவே செய்வோம். ஆனால், இது அதுவல்லவே!
இன்று 12-06-2014 இரவு -
                                                என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே  - என்று ஒரு குழந்தை உயிரைக் கொடுத்துப் பாடியது! பாடுனா குரலும் பாவமும் அப்படி, அப்படி அருமை! நமக்கே அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சணும் போல அப்படி ஒரு அசாத்தியத் திறமை! மிக அருமை! ஆனாலும் இந்தப்பாடலைப் புரிந்து பாடும் வயதா இது? எனும் உறுத்தல்!!!
என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை – என அந்தக் குழந்தை பாடும்போது அய்யோ என்று நானே கத்திவிட்டேன் அப்படி ஓர் அழகும் குழைவும் கம்பீரமும்! ஆனால் அந்தக் குழந்தையின் பெயர் தெரியவில்லை (பிறகு தபஸ்வி என்று சொல்லியது இதைத்தானா என்றும் தெரியவில்லை!)

என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே  – என்று அந்தக் குழந்தை பாடி முடித்தவுடன் நாமே பறந்ததை உணர்ந்தது உண்மை! ஆனாலும்...
     முன்னர் ஒருமுறை இதே நிகழ்ச்சியில் “கட்டை கட்டை நாட்டுக்கட்டை“எனும் பாடலை ஒரு குழந்தை பாட எல்லாரும் ரசித்தார்கள் என்னால் முடியவில்லை.
     இதே நிகழ்ச்சியில் அடுத்துவந்த சிறுவன் “உயிரேஎனப் பாடி, காதலில் உருகி, சாக்லெட் மழையில் நனைந்து வெளியேறினான். என்னால் ரசிக்க முடியவில்லை! குழந்தைமையைத் திசை திருப்பிவிட்டு, பிறகு யாரை வளர்க்கப் போகிறோம் அதே நிகழ்ச்சியின் அதே நாளில் குண்டாக வந்த ஒரு சிறுவனிடம் தொகுப்பாளர் “யாரை உன் கேர்ள்-பிரண்டாகத் தேர்ந்தெடுப்பாய்“ என, அவன் சற்றுமுன் பாடிய -ஜூனியர்-3இல் பாடிய- பெண்ணைக் காட்டி அவளிடம் கால்மடங்கி உட்கார்ந்து (தமிழ்த்திரைப்படங்களில் வரும் லவ் ப்ரொபோஸ்) அவளிடம் பூங்கொத்து நீட்டுகிறான்..  அவனது அப்பா அம்மா உள்பட அரங்கமே ஒரே சிரிப்பு.. இதையும் என்னால் ரசிக்க முடியவில்லை
                இந்நிகழ்ச்சியின் உருக்கமான பகுதி பற்றி நண்பர் பாண்டியன் எழுதியிருந்தார், http://tnmurali.blogspot.com/2014/06/pettikadai-puzzle-supersinger-chitra.html  பாடகர் சித்ராவின் நியாயமான கோபம் பற்றி நண்பர் முரளிதரன் எழுதினார். http://tnmurali.blogspot.com/2014/06/pettikadai-puzzle-supersinger-chitra.html  இன்னும் நிறைய பாலிடிக்ஸ பற்றியும் சொல்கிறார்கள். நான் ரசித்த குழந்தைக்குக் கூட தமிழ் தெரியாமல், சித்ரா அதனுடன் தெலுங்கில்தான் பேசினார். இவற்றைக் கடந்து, இதற்குள் இருக்கும் குழந்தை உளவியல் பற்றியே நான் கவலைப்படுகிறேன்.
     தமிழில் குழந்தைப்பாடல்கள் எனும் பெயரில் பெரியவர்களுக்கான அறிவுரை தரும் பாடல்களே அதிகம். இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில், சொல்லித்தரப்படும் “அறஞ்செய விரும்புஎனும் ஔவையின் ஆத்திசூடியே குழந்தைகளுக்கானதாக நான் நம்பவில்லை! குழந்தைக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏனெனில் சூதுவாது இல்லாததே குழந்தை! பெரியவர்களுக்கான அறம் பற்றிய விளக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் பள்ளிக்கூடங்கள் மாதிரி, பெரியவர்களுக்கான பாடல்களையே  குழந்தைகளைப் பாடச்சொல்லி நாம் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோமே! இது சரிதானா என்று சந்தேகம் வருகிறது. 
     இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும், எதிர்கால கலை பண்பாட்டு, நாட்டு முன்னேற்றத்திற்கும்,  நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்.
               -------------------------------------

49 கருத்துகள்:

  1. இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும், எதிர்கால கலை பண்பாட்டு, நாட்டு முன்னேற்றத்திற்கும், நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்.//இதுதான் என் கருத்தும் சார் ஆனால் நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்காக ஒரு முறை பார்த்து, பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்துச் சொல்லுங்களேன்? நன்றி அய்யா

      நீக்கு
  2. இது இராக தாள பாவ ஞானம் குறித்து
    நடத்துகிற போட்டியில் அதற்கான வாய்ப்புள்ள
    பாடல்களைப் பாடுவதும் அதில் அவர்களின்
    திறனை மதிப்பிடுதலும் தானே சரியாக
    இருக்க முடியும்
    இருப்பினும் தங்கள் வித்தியாசமான பார்வையும்
    கருத்தும் கவனிக்கத் தக்கதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசமான வரிகளை நல்ல இசைகொண்டு கவனிக்க வைக்கிற திரைஉததியின் விளைவுதான் அச்சம் தருகிறது அய்யா.. குழந்தைகளின் மனத்தில் ஆழப்பதிந்தால் எது சரி எது தவறு என்னும் சிந்தனையே அற்றுப்போய்விடுமல்லவா அதுதான் என் அச்சம். கலந்துகொள்வோரை மட்டுமன்றி, லட்சக்கணக்கான பார்வையாளரான குழந்தைகளையும் அந்த மனநிலைக்கு மாற்றுவது பெரிய ஆபத்தில்லையா நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவை படித்த போதுஒன்று புரிந்தது. காலம் மாறிவருகிறது... கட்டை கட்டை நாட்டுக்கட்டை என்ற பாடலை விட

    என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என்றபாடல் மிக அருமையான பாடல் பாடிய இந்த சிறுவனும்நன்றாக படினான் அதற்கு நடுவர்கள் தீர்ப்பு வித்தியாசமாக இருந்து. என்றால் இதற்கு காரணம்... என்னவாக இருக்கு.. பரியாத புதிராக உள்ள எனக்கு.
    குறைகளையும் நிறைகளையும் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை முழுமையாகப் படிக்கவில்லை, அல்லது நீங்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு நான் சரியாக எழுதவில்லை என்றே எனக்குப் படுகிறது. திரும்பவும் பார்க்க வேண்டுகிறேன். நன்றி ரூபன்

      நீக்கு
  4. உங்கள் கவலை எனக்கும் உண்டு. குழந்தைகளை சிறுவயதிலேயே மன முதிர்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இதைப் பற்றி நானும் எழுத நினைப்பதுண்டு.
    இதில் நடுவர்கள் தேவையான feel இல்லை என்று சொல்வது கொடுமை. சிந்தனையில் கொள்ளவேண்டிய பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா, என் பதிவில் விடுபட்ட முக்கியமான இடத்தை நீங்கள் சுட்டிக்காட்டிவிட்டீர்கள் மிக்க நன்றி முரளி அய்யா.

      நீக்கு
  5. அய்யா,
    வணக்கம். அரிதாக நேரம் கிடைக்கப் பார்க்கும் மிகமிகச் சில நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று தான். ஆனால் உங்களின் பார்வையில் இதுவரை சிந்தித்ததில்லை. மலைகளைத்தூக்கி எட்டி உதைத்து கைகளைத் தட்டி, ம்ம், அடுத்த வேலை என்ன? என்று அநாயாசமாகக் கேட்கும் பிரமிப்பை அந்நேரங்களில் அக்குழந்தைகள் உண்டாக்கி இருக்கிறார்கள்.
    பனங்காய் தலையில் வைக்கப்பட்ட குருவிகள் கூடுதல் உயரத்திற்குப் பறக்கவில்லை என வெளித்துரத்தப்படுவதை விட, பலநேரங்களில் எப்படியேனும் அந்தக் குழந்தையை அழவைத்துப் பதிவுசெய்ய அத்தனை சாமர்த்தியங்களையும் காட்டும் வர்ணனையாளர்கள் கண்டே மிக வெறுப்புற்றிருக்கிறேன். தோற்று வெளியேறும் குழந்தைகளை நினைந்து என்மனம் கசிந்திருக்கிறது.
    போட்டி என்று வந்து விட்டால் அதையெல்லாம் பார்க்க முடியுமா எனும் சமாதானக்குரல்கள் கேட்கக் கூடும். இதெல்லாம் வாழ்க்கையில் அனுபவம், அதைத் தாண்டித் தான் வளரவேண்டும் எனச்சிலர் சொல்லலாம். ஆனாலும் பலர்பார்க்க இடிந்து போகுந்தருணம் அந்த குழந்தைகளின் மனத்தில் இழப்பின் வழியை விட அவமானத்தின் வலி
    தரும் துயரம் நேர்ந்திடக் கூடாதே எனப் பதறியிருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் படும் துயரம் ஒரு துளி என்றால், அதுபோலும் வலியை அதைப் பார்க்கும் குழந்தைகள் மேலெல்லாம் ஏற்றுவது வெளியில் தெரியாத சீழ் அல்லவா? கருத்திற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  6. தங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது சகோதரா! குழந்தை தன்மையை அனுபவிக்காமல் போய் விடுவார்களோ என்று அஞ்சுகிறீர்கள், இருந்தாலும் கலைஞானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? இதை பெரியவர்களாகிய எம்மால் (எல்லோராலும்) புரிந்து பாட முடியுமா? இல்லையே. இது ஒரு வரப் பிரசாதம்அல்லவா இந்த வயதில். ஒவ்வொரு குழந்தைகளும் விரும்பி வருகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. நீ படித்தே ஆகவேண்டும் என்று பெற்றோர் கண்டிப்பது போல். இதையும் கையாண்டால் நிச்சயம் கொடுமை தான். அவர்களுக்கு இயல்பாக கஷ்டமின்றி வருவது போல் தான் தெரிகிறது. பெற்றோருக்கோ மற்றவர்களுக்கோ பயந்து படுவது போல் இல்லை நன்றாக என்ஜாய் பண்ணித் தான் பாடுகிறார்கள். தெரிவு செய்யமாட்டர்களோ என்னும் பயம் மட்டும் தான் இருப்பது போல் தெரிகிறது. ஆகையால் கவலை வேண்டாம். அவர்களுக்காக கவலை கொள்ளும் தங்கள் இளகிய மனம் கண்டு மிக்க மகிழ்ச்சியே. நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது அச்சத்திற்குரிய பகுதி அவ்ர்களின் திறன் அ்ல்ல, உளவியல் நியூட்டனின் மூன்றாம் விதி இதிலும் செயல்படுமல்லவா? கடத்த்ல் தகவல் வந்த ஒரு சோதனைச் சாவடியில் பற்பல கெடுபிடிகளுக்கும் பிறகு வெறும் மண், கல், விறகுதானே போகிறது என்று கண்டுபிடித்தார்களாம். கடைசியிலதான் தெரிந்தது இவற்றை ஏற்றிக்கொண்டு சென்ற மிதிவண்டிகள்தாம் கடத்தப்பட்டன என்று! இது தவறில்லை என்று குழந்தைகளை நம்பவைக்கிற உளவியல்தான் என் அச்சத்தின் மையம் சகோதரி. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    2. எவ்வளவு நியாயமான தகவல்களை முன் வைத்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சியே. எளிமையாக எனக்கும் புரிய வைத்துள்ளீர்கள். இது வரை அவர்கள் ஆற்றல் கண்டு பிரமித்து போயிருக்கிறேன். இப்[பொழுது எனக்கும் கவலை தொற்றிக் கொண்டு விட்டது, நன்றி சகோதரா.

      நீக்கு
  7. தங்களது இந்தப் பதிவு மிகவும் வேண்டிய பதிவு! அதே எண்ணங்கள்தான் எங்களுக்கும் உண்டு! குழந்தைகள் குழந்தைகளாகவே வளரவேண்டும், வளைய வரவேண்டும்! அதாவது குழந்தை மனதுடன்!. அவர்கள் வயதுக் கேற்ற விளையாட்டுக்களை விளையாடி, அந்தந்த வயதுக் கேற்ற இன்பங்களை அனுபவித்து வளர்வதை விட்டு பெற்றோர்களும் இந்தச் சிறு வயதிலேயே இந்த உலகையே வென்று விட வேண்டும் தங்கள் பிள்ளைகள் என்று நினைத்து அந்தக் குழந்தைகளின் மனதிலும் அந்த எண்ணங்களை விதைத்து, ஒருநாள் சரியாக பாடவில்லை என்றால் அன்று அந்தக் குழந்தை அழுது அதை தொலைக்காட்சியில் காட்டி, இந்த வயது அழும் வயதா ஐயா?! இப்படி பெற்றோர் அந்தக் குழந்தைகளின் பெர்சனாலிட்டி டெவெலப்மென்டையே, மன வளர்ச்சியையே கெடுத்து விடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது!

    நல்ல பதிவு ஐயா! எல்லோரும் தெரிந்து யோசிக்க வேண்டிய பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  8. சினிம பாடல்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்தம் எடுத்தால், நம் மனம் மயக்கிய எந்த ஒருபாடலையும் குழந்தைகளால் பாட இயலாமல் போகும். அனாலும் நாட்டுக்கட்டை போன்ற பாடல்களை தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடவேண்டும் நண்பரே தேடினால்தானே கிடைக்கும்? எத்தனையோ நல்ல பாடல்களையும் சில குழந்தைகள் தேடி எடுத்துவந்து திறமையாகப் பாடவும் செய்கிறார்கள். சிலரின் அலட்சியத்தாலும், ஆசையாலும் வரும் உளவியல் ஆபத்தைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  9. ஐயா. ரொம்ப உணர்ச்சி வசபடவேண்டாம். இதெல்லாம் பொழுதுபோக்கு. குழந்தைகள் முதிர்ச்சி அடைந்ததைப்போல பாடுவது எல்லாம் சாதரணம். ஆனால் இதற்க்கு கரணம் யார்? அந்த தொலைக்காட்சியும் பெற்றோரும்தான். எந்தம்பியின் பெண் அருமையாக பாடுவாள் (என் தாய் போலவே ) அனால் என் தம்பி இந்த தொலைகாட்சியில் பாட அனுமதிக்கவில்லை.அவன் மனிதன்.தவறு நம் மேல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தமாஷா வரி“ தரும் திரைப்படங்களின் தாக்கம் வெறும் தமாஷா? இல்லையே ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் ஆட்டிப் படைக்கும் ஊடகமாக அல்லவா இருக்கிறது! அதுபோலத்தான் என்னால் இதை வெறும் பொழுது போக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை நண்பரே! தங்கள் தம்பிக்கு என் வணக்கம், தங்களுக்கு எனது நன்றி.

      நீக்கு
  10. இதே தான் ஐயா என் சிந்தனையும்...சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் ஒன்றிலிருந்தே எனக்கு இந்த விசயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நன்றாக பாடுகிறார்கள் என்று திறமையைப் பாராட்டுவதா அல்லது எப்படிப்பட்ட பாடல்களைப் பாடுகின்றனர் என்று ஆராய்வதா என்று புரியவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்களை விடவும் குழந்தைகள் பாடத் தகாதன என்று நான் நினைக்கும் பாடல்கள் பலவற்றைப் பாடுகின்றனர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அமமா... குழந்தைகளுக்கு வாழ்ந்து நடந்து காட்டவேண்டியவர்களே தவறாக நடந்தால் அவர்கள் வேறு என்ன செய்வார்கள் அவர்களைக் குற்றம் சொல்லமுடியுமா என்ன நான் பார்த்தபோது வந்த பாடல்களை விடவும் மோசமான பாடல்களை உடல்மொழியுடன்பாடியதை நண்பர்களின் பின்னூட்டத்தில் அறிந்தபோது வருத்தம் அதிகரித்தது. நன்றி மா.

      நீக்கு
  11. பள்ளிக்கூடத்தில், சொல்லித்தரப்படும் “அறஞ்செய விரும்பு” எனும் ஔவையின் ஆத்திசூடியே குழந்தைகளுக்கானதாக நான் நம்பவில்லை! குழந்தைக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏனெனில் சூதுவாது இல்லாததே குழந்தை! பெரியவர்களுக்கான அறம் பற்றிய விளக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் பள்ளிக்கூடங்கள் மாதிரி, பெரியவர்களுக்கான பாடல்களையே குழந்தைகளைப் பாடச்சொல்லி நாம் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோமே! இது சரிதானா என்று சந்தேகம் வருகிறது.
    இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும், எதிர்கால கலை பண்பாட்டு, நாட்டு முன்னேற்றத்திற்கும், நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்.

    அருமையான கருத்து! தங்கள் சிந்தனையின் செழுமை ,கண்டு
    மனம் மகிழ பாராட்டுகிறேன்! ஆரம்ப காலம் முதற் கொண்டே இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பார்க்கவிலலை என்றாலும் நம் பிள்ளைகள் (மாணவர்கள்) பார்ப்பதைத் தவிர்க்க வைக்க என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பியதுதான் இந்தப் பதிவுங்க அய்யா. கருத்திற்கு நன்றியும் தங்களின் அசராத உழைப்புக்கு வணக்கமும் அ்யயா.

      நீக்கு
  12. உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை
    மழைநீர் சேகரிப்பு என்ற தலைப்பை கட்டுரை எழுத கொடுப்பதே தவறு என்று சொல்கிறார்கள் கல்வி உளவியல் நிபுணர்கள்.
    அவர்களின் குழந்தமையின் மீது வன்முறை இது என்று வாதிடுகிறார்கள்.

    நீங்கள் பிடித்திருக்கும் பாய்ன்ட் வாலிட் பாய்ன்ட்.
    வழக்கம்போல உங்கள் சமூக பொறுப்பு வெளிப்பட்டதில் ரொம்ப பெருமை அண்ணாத்தே.

    நல்ல பதிவு .
    உங்கள் குரல் ஓயாது ஒலிக்கட்டும்.
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைமையைக் களவாடிக்கொண்டு, பெரியவர்கள்போல நடிக்க இப்படிக் கற்றுக்கொடுப்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதுமே நடித்துக்கொண்டுதான் திரிகிறார்கள்... நன்றி மது.

      நீக்கு
  13. குழந்தைகளுக்கான வெளி இங்கு வெகு குறைவு .குழந்தைகள் பாடல், படம்,கதை புத்தகம் , விளையாட்டு என்று எதுவுமே தனியாக இல்லை . பெரியவர்களுக்கு எதுவோ அதுவே சிறியவர்களுக்கும் .

    போன வருடம் வரை சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் குரலில் தான் குழைவு காட்டினார்கள் . இந்தவருடம் முதல் உடல் மொழிகளிலும் - காரணம் VERY SIMPLE . சன் சிங்கரில் - பாடும் குழந்தைகளுக்கு நடனப்பயிற்சியும் கெ(கொ)டுக்கப்படுகிறது . மேற்படி நிகழ்ச்சியில் ஒரு ரெண்டு வயது குழந்தையின் உடல் மொழியை பார்த்தீர்களேயானால் நீங்கள் பேரதிர்ச்சி அடைந்திருப்பீர்கள் .

    இதே விஜயில் சமீபத்தில் ஒரு நீயா நானா - தலைப்பு - ஏன் தமிழர்கள் VOCALS க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை INSTRUMENTS க்கு கொடுப்பதில்லை என்று . ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “மேற்படி நிகழ்ச்சியில் ஒரு ரெண்டு வயது குழந்தையின் உடல் மொழியை பார்த்தீர்களேயானால் நீங்கள் பேரதிர்ச்சி அடைந்திருப்பீர்கள் .“ - அதுதான் பார்வையாளர் பகுதியிலிருந்து அவ்வப்போது வரும் சேட்டைகளிலேயே தெரிகிறதே! எல்லாம் குழந்தைகளை மையப்படுத்திவரும் உளவியல் கேடுகள்!

      நீக்கு
  14. என் பிள்ளைகளை இந்த நிகழ்ச்சி பார்க்க நான் அனுமதிப்பதே இல்ல. நானும் பார்ப்பதில்ல. குழந்தை தோல்வியில் அழுவதை காசாக்குவது எனக்கு பிடிக்கல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. ஆனால், அதைவிட இதுபற்றிய கருத்தைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களிடமே பகிர்ந்து கொள்ள வே்ண்டும் என்பதே என் கருத்து. (இல்ல்ாவிடில், அடுத்தவர் வழியாகக் கேள்விப்படும் குழந்தை, நமக்குத் தெரியாமல் பார்க்க ஆவல்கொள்வது நடக்கும்)

      நீக்கு
  15. தங்களின் ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். இதனாலேயே இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை. முன்பெல்லாம். பள்ளி ஆண்டு விழாவில் சினிமா பாடல்களைப் பாடவே மாட்டார்கள். ஆனால் இப்போதோ பள்ளி பிளைகளை பள்ளி நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போட வைக்கிறார்கள். அதன் எதிரொலிதான் இவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி மற்றும் பொது நிகழ்வுகளில் இதுபோல “ரிக்கார்டு“ போட்டு ஆடக்கூடாது, என்று அரசு ஆணையே இருக்கிறது அய்யா! ஆனால் முன்னால் முதல்வரே எதிரில் உட்கார்ந்து பார்த்த நிகழ்வுகளும் அலைவரிசைகளில் வந்தன... பிறகு என்ன செய்வது?

      நீக்கு
  16. ஆசை ஆசை... பேபேபேபேராசை - பெற்றோர்களுக்கு...!

    பதிலளிநீக்கு
  17. ஆஹா! வெகு நாள் கழித்து அண்ணாவின் பதிவு. வரவேண்டும், வரவேண்டும்...
    நானும் ஒரு காலத்தில் அந்த நிகழ்ச்சி பார்த்தேன் அண்ணா. ஆனால் இப்போ பார்க்கிறது இல்லை. சில பாடல்கள் அவர்கள் பாடும்போது நமக்கு நெருடலாய் இருக்கும். அந்த நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு அந்த பாடல்களை நிறையோ, மகியோ பாடினால் பாடதே என நாம சொல்ல முடியாது. ஏன் அவங்க பாடினால் மட்டும் தப்பில்லையா என கேட்டே விடுவார்கள். SO என் குழந்தைகளின் குழந்தைமையை காப்பாற்ற நான் அதனை பார்ப்பத்தில்லை அண்ணா. அவர்கள் சில விதிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமோ குழந்தைகளோ பார்ப்பதைத் தவிர்ப்பதை விடவும், அவர்களுக்கு இந்த விவகாரத்தை -என்ன கேவலமான பாட்டு என்றும் இதைப்போய் இந்தக்குழந்தையைப் பாடவைக்கிறார்களே என்றும்- குழந்தைகளிடமே பேசி விவாதிப்பது நல்லது என்று தோன்றுகிறது. அவர்களின் நிலையில் இதை அவ்வளவு எளிதில் புரியவைக்க முடியாது என்பதுதான் நம் முன் உள்ள சிக்கல். பார்க்கலாம்.. நன்றிப்பா..

      நீக்கு
  18. சுவையான கருத்துக் கண்ணோட்டம்

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
  19. நன்றி நண்பரே!
    (மலர்த்தரு மது வின் அண்மைப் பதிவின் பாதிப்புத் தெரிகிறது!)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஐயா , தங்களின் பதிவில் குறிப்பிட்டிருப்பது போன்று உண்மையில் குழந்தைகள் தங்களின் குழந்தைமையை இழந்து கொண்டுதான் வருகிறார்கள் . ஆனால் இதை பலர் உணர மறுக்கின்றனர். தொலைக்காட்சிகளில் இடம்பெறும் அனைத்து நிகழ்ச்சிகளுமே சமுதாயத்திற்கும் வாழ்க்கைக்கும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு பிணைப்பை அவசியம் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இதை வெறும் பொழுது போக்காக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது... அனைவரும் இதை யோசித்தால் நல்லது என்பது எனது பணிவானக் கருத்து. நன்றி ஐயா..தங்களின் அடுத்த பகிர்விற்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. ஐயா! குழந்தமைத் தன்மை காணாமல் போகிறது..மட்டுமல்ல.நன்கு பாடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. பாட்டின் தன்மைக்கு ஏற்ப ஆடவும் தெரியவேண்டும் என்ற எழுதப் படாத விதி ஒன்று கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது பார்த்தீர்களா..?!. பாடத்தெரிந்தவர்கள் எல்லாம் கட்டாயம் ஆடவும் வேண்டும் என்பது இயற்க்கைக்கு முரணானது தானே..! இதுவும் ஒரு கட்டாயத் திணிப்பு தானே..!
    மற்றபடி..'அறம் செய விரும்பு' என குழைந்தைகளுக்குச் சொன்னது சரி தானோ என்று தோன்றுகிறது.பெரியவங்க சொன்ன கேட்க மாட்டாங்க..! சின்னப் புளைங்களுக்கு இப்ப புரியாவிட்டாலும் பிற்காலத்துல புரியும்போதவது பின்பற்றுவாங்கல்ல..வேர்லையே நல்ல விஷயங்களப் போட்டுவைப்போம்னு சொல்லியிருப்பாங்க. ஆனா இப்போ வேர்லையே வெந்நீர் ஊற்றுகிற வேலையை டிவி செய்யுது. எப்படி நம்ம குழந்தைகளை இந்த மாயத்திலிருந்து காப்பாற்றப்போறோம்...?!

    பதிலளிநீக்கு
  22. " சொல்லித்தரப்படும் “அறஞ்செய விரும்பு” எனும் ஔவையின் ஆத்திசூடியே குழந்தைகளுக்கானதாக நான் நம்பவில்லை! குழந்தைக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏனெனில் சூதுவாது இல்லாததே குழந்தை! பெரியவர்களுக்கான அறம் பற்றிய விளக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் பள்ளிக்கூடங்கள் மாதிரி, பெரியவர்களுக்கான பாடல்களையே குழந்தைகளைப் பாடச்சொல்லி நாம் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோமே! இது சரிதானா என்று சந்தேகம் வருகிறது. "

    மிக அருமையாக, முறையான சந்தேகம் ஐயா !

    ஆமாம்,பெரிய மனிதர்களின் பல " நல்ல " குணங்களை அவர்கள் அறியா வயதில் நாமே அவர்களிடம் திணித்துவிடுகிறோம் !

    தமிழின் பல பாடல்கள் காதல் என்ற போர்வைகூட இல்லாத " கலவி " பாடல்கள்தான் ( வார்த்தை பிரயோகத்துக்கு மன்னிக்கவும் ) இவற்றை அறியா வயதில் குழந்தைகளிடம் பாட பழக்குவது...

    அவர்களின் கள்ளங்கபடமற்ற குழந்தை பருவத்தை நிச்சயமாய் திருடுகிறோம்தான் !

    இதனை படிக்கும்போது எனக்கு தோன்றிய மற்றொரு சந்தேகம்...

    இந்த குழந்தைகளுக்கு பல்வேறு துறைகளில் வளரும் ஆசை இருக்கும் ( அவர்களுக்கு புரிந்த வரையில் ! ) இப்படிபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களின் ஒற்றை திறமையை மட்டுமே முன்னிறுத்தி, முக்கியமாய் அவர்களின் பெற்றோர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்து விடுகிறோம் ! இதன் காரணமாய் இந்த குழந்தைகள் அடுத்தடுத்த போட்டிகள், அதற்கான தயாரிப்புகள் என்ற கடுமையான பயிற்சி வாழ்க்கைக்கு, போட்டி வாழ்க்கைக்கு மிக இளம் வயதிலேயே நுழைந்துவிடகூடிய ஆபத்து இருக்கிறது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  23. தங்களின் ஆதங்கத்தின் நானும் பங்கு கொள்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  24. உளவியல் நோக்கில் தாங்கள் அக்குழந்தைகளை நோக்கும் விதம் நியாயமானதே. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் செயல்பாடுகள் வயதுக்கு மீறியதாக இருப்பதைக் காண முடிகிறது. பெற்றோர்களும், அமைப்பாளர்களும் தாங்கள் கூறிய நோக்கில் இதனை நோக்கவேண்டிய சூழல் தற்போது எழுகிறது. பெரிய அளவில் பிரச்னைகள் தோன்றுவதற்கு முன்பாக இதற்கு ஒரு நல்ல தீர்வு காணவேண்டும். இல்லாவிடில் நம் குழந்தைகளை நாமே தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற தவறைச் செய்தவர்கள் ஆவோம்.

    பதிலளிநீக்கு
  25. நல்ல அலசல்..... பல குழந்தைகள் பாடும் பாடலுக்கும் அவர்களது வயதுக்கும் சம்பந்தமே இல்லை. பாடும் பாடலை அவர்கள் அதன் அர்த்தம் உணர்ந்து பாடுகிறார்களா என்பது தெரியவில்லை......

    அவர்கள் பாடல் தேர்ந்தெடுப்பதில் தாய் தந்தையரும் உதவி செய்கிறார்களே.... அவர்களாவது இதைப் பற்றி யோசிக்கலாம்....

    பதிலளிநீக்கு
  26. காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் "கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" மாலையில் விளையாட்டு என்று வழக்கம் சொல்லுதடி பாப்பா!. இந்த பொன்னான வரிகளை மறந்தோமே... மறைத்தோமே!

    பதிலளிநீக்கு
  27. முதலில் பாடத் தெரிந்த குழந்தைகளுக்கு தமிழிலில் நல்ல உச்சரிப்போடு வார்த்தைகளை வாசிக்கத் தெரிகின்றதா என்பதை கவனித்துப் பாருங்கள். இவர்களின் (நடுவர்களின் நிகழ்ச்சி நடத்துபவர்களின்)விபச்சாரத்தனம் நன்றாக நமக்குப் புரியும்.

    பதிலளிநீக்கு