தமிழ்ச்சொற்கள் காட்டும் பெண்ணடிமை வரலாறு!

     சொல்லின் பயன் என்ன?
     ஒருவரை அல்லது ஒன்றை அடையாளப்படுத்துவதுதான் சொல் எனில், தமிழில் இன்றும் புழங்கிவரும் சில சொற்களுக்கு ஆண்பால்சொல் இல்லையே ஏன்?, சில சொற்களுக்குப் பெண்பால்சொல் இல்லையே! ஏன்?
     இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில் ஒன்றுதான் –
     அது, 
பெண்களைக் கேவலப்படுத்துவதுதான்.
(கேவலம் என்பதன் விளக்கத்தைக் கடைசியில் சொல்வேன்..)

பெண்களின் வயதை ஏழுவகையாகப் பிரிக்கும் பழந்தமிழ் இலக்கியம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், எனச் சொல்லும். இவற்றோடு, பத்தினி,  கன்னி, பரத்தை, விதவை, மலடி, குச்சுக்காரி, தேவடியாள், முதலான பற்பல சொற்களுக்கான ஆண்பாற்சொற்கள் இல்லை! தெரியுமா?  
(பயக வயசுக்கு வர்ரத யாரும் விழா எடுத்துக் கொண்டாடுறது இல்லனு ரொம்ப்ப் பயகளுக்கு வருத்தம்! நான் அவங்களுக்குச் சொல்றது, அந்தக் காலத்துல மீடியா கிடையாதுடா, “எங்க வீட்டுல வயசுக்கு வந்து, திருமணத்துக்குத் தகுதியான பொண்ணு ஒருத்தி இருக்கா“னு சொல்ற சடங்குதான் இப்ப நடக்குற “சடங்கு“ உங்களுக்கு எதுக்குடா அது? பெண்களுக்கே தேவையில்லாத அளவுக்கு தகவல் தொடர்புள்ள இக்காலத்தில் சடங்கு என்பதே பெண்களைக் கேவலப்படுத்துகிறது)
பரத்தை - பொருளுக்காக உடலை தருபவள்,
விதவை - கணவனை இழந்தவள் (இச்சொல்“கம்மனாட்டி“எனப் பேச்சு வழக்கிலும் “கைம்மனையாட்டி“ (அ) “கைம்பெண்(டாட்டி)என எழுத்து வழக்கிலும் புழங்கப் பட்டாலும் இவை எவற்றிற்கும் ஆண்பால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது )  
மலடி  குழந்தை பெற இயலாத (உடற்குறைபாடுள்ள) பெண்.
குச்சுக்காரி – ஏழ்மை காரணமாக உடலை விற்பவள்
தேவடியாள் – தெய்வ சேவைக்காக (எனும் பெயரில்) கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு, நாளடைவில் பொதுமகளிராக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட்டவள். மாடுகளில் இவ்வாறான “கோவில்காளை“ இன்றும் உண்டு. (பசு அப்படியில்லை)
இன்னும் -
கலைஞன், கவிஞன், எழுத்தாளன், ஓவியன், வீரன், சோதிடன், அமைச்சன், இன்னும் இவைபோலும் ஏராளமான சமூகப் பயன்பாடுள்ள தொழில்புரிவோர் அனைவரையும் ஆண்பாலாகவே கொண்டுள்ளது தமிழ்ச்சமூகம். இது ஏன்
சிந்தித்துப் பார்த்தால் –
“சொல்லின் வரலாறு சொல்லும் வரலாற்றில்
வல்லார் அடிமைசெய்த வரலாறும் புலனாகும்“
(“எனது காதல் கடிதம்“ – பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_30.html)
 இது கிடக்கட்டும், ஆணொருவனைக் கெட்டவார்த்தை கொண்டு திட்டும்போது கூட, பெண்ணை இழிவுபடுத்தும் சொற்களைக் கையாளும் வழக்கம் இருப்பதைச் சில “கெட்ட  வார்த்தைகள்“ காட்டிக்கொடுக்கின்றன –
“தேவுடியா மவனே”, 
ஒக்கா...“, “ஙொம்மா..“ எனத்தொடரும் சொற்கள் ஆணைத்திட்டப் பயன்படும் சொற்களே, இதில் எதற்காக அவனது அக்காளை, அம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும். (போர்க்காலங்களில் அந்தப் போருக்குத் தொடர்பே இல்லாத பெண்களைப் பாலியல் வல்லுறவு கொள்வதுதான்
ஒன்று தெரியுமா?
கேவலம் என்றால் பழந்தமிழில் “மிகச்சிறப்பு“ என்று பொருள்!
இன்றைய வழக்கில் அது நேர்எதிரான பொருளில் “மிகவும்தாழ்ந்த“ எனும் அர்த்தத்திலேயே புழங்கப்படுகிறது.(நாற்றம் எனும் சொல்லைப்போலவே! நேர் எதிரான பொருள். முன்னர் நாற்றம் எனில் நறுமணம் என்பது பொருள்!)
நிறைவாக ஒன்று – 
குடிமகன் எனும் சொல்!
CITIZEN OF INDIA எனும் ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது, “இந்தியக் குடிமகன்“ என்றே சொன்னதைப் பார்த்து, பெண்ணுரிமை இயக்க ஆர்வலர் பலரும் பெண்களை இந்தச் சொல் குறிக்கவில்லை என்று முறையிட, நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சொன்ன தீர்வு இப்போது அரசுப்பள்ளிகள் பலவற்றில் செயற்படுத்தப்படுகிறது. அஃதென்ன வெனில் –
உறுதிமொழி சொல்பவர் ஆண் எனில் குடிமகன் என்றும் பெண்எனில் குடிமகள் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அவ்வாறே ஆண் பெண் இருவரும் தமக்கேற்பச் சொல்லிக்கொள்ளலாம் என்பதுதான் அது! ஒரு சொல்லில் எவ்வளவு சிக்கல்! இது இன்றைய சிக்கலல்ல... யுகம் யுகமான சிக்கல்.. நம் தலைமுறையில் தீர்ப்போம்!

நல்ல வேளையாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்த்து வைத்திருந்த CHAIRMAN எனும் சொல்லுக்கான “தலைவர்“ என்பதை, தலைவி என்றும் வைத்துக் கொள்ளும் வழக்கம் தமிழில் இருக்கிறது. ஆங்கில நாடுகளில் பெண்கள் இந்தப் பதவிகளுக்கு வந்தபோது “சேர் பர்சன்“ என்று மாற்றினார்கள்!
ஆனாலும், “ஆசிரியர்“ எனும் பொதுப்பால் சொல்லைப் பாற்படுத்துவதாக நினைத்து. சிலர் “ஆசிரியை“ என்று போடுகிறார்கள். அது தேவையில்லை. ஏனெனில் ஆசிரியன் என ஆண்கள் யாரும் போடுவதில்லை. ஆசிரியன் எனில் அதன் பெண்பால் ஆசிரியை ஆகலாம். ஆயினும் மதிப்பிற்குரிய பதவி என்பதால் இருபாலாரும் “ஆசிரியர்“ என்று போட்டுக் கொள்வதே சரி.

இது தொடர்பான சிந்தனைகளை வரவேற்கிறேன் ... ஏனெனில், நானும் ஓர் ஆணல்லவா? என்னை அறியாமல் தவறு நிகழ்ந்திருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக்கொண்டு இணைந்து முன்னேறுவோம்... 

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
 அறிவில் ஓங்கிஇவ் வையம் தழைக்குமாம்“ - பாரதி.

நிறைவாக ஒன்று -
பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானது அல்ல. சமமானது! இதை இரண்டுபாலினரும் புரிந்துகொண்டால் இருவருக்குமே நல்லது. 
----------------------------------------------------------- 

29 கருத்துகள்:

  1. நல்ல அனலிசிஸ் ....வித்தியாசாமாக சிந்திக்க தூண்டுகிறீர்கள். ஆனால் ஹிந்தி யில் அனைத்திற்கும் உயர்திணைக்கும் மற்றும் அனைத்திற்கும் ஆண்பால்/பெண்பால் உண்டு. நாம் சொல்லும் பஸ் ரயில் இதெல்லாம் பெண்பால் ....என்ன கன்றாவியோ. எ காடி கப் ஆயீகி?இது பெண்பால் . இதையே ஆன் பாலில் சொன்னால் மிக சரியாக இவன் "மதராசி" என்று அடையாளம் கண்டுகொள்ளுகிறார்கள்.மேலும் மனசுக்குள் கிறுக்கன் என்றும் நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேதைகளை இந்த “லௌகீக“ உலகம் கிறுக்கென்றுதான் சொல்லும். பாரதியே அந்தப் பெயர் பெற்றான் நாம் எம்மாத்திரம்

      நீக்கு
  2. உணர்வைத் தொட்டுச் செல்லும் உன்னத பகிர்வு கண்டு உள்ளம் வியந்து நின்றது
    ஐயா ! ஆணாகப் பிறந்தும் ஒளிவு மறைவு இன்றித் தாங்கள் உரக்கச் சொன்ன உண்மைக்கு முன்னால் பெண்மை தலை நிமிர்ந்து நிற்கின்றது ஐயா .பகிர்வுக்கு மிக்க நன்றி தந்தையர் தினமான இந்நாளில் தங்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமை கொள்கின்றேன் வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரியின் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. ஐயா என்மனதில் பட்டதை எழுதுகிறேன் தவறெனில் மன்னிக்க, சிலவார்த்தைகள் தவிர்த்திருக்கலாமோ ? என படிக்கும்போது நினைத்தேன், ஆனால் முடிக்கும்போது இது அவசியம் என்பதை உணர்ந்தேன் உம்மை பாராட்டுமளவுக்கு எமக்கு போதாதென்று கருதி முடித்துக்கொள்கிறேன் நன்றி.

    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தைகளில் தவறிருந்தால் திருத்திக் கொள்ளலாம், ஒட்டுமொத்த நோக்கில் தவறின்றி இருப்பது முக்கியம். இன்னும் கோபமான சொற்களில் எழுதி, பின்னர் மாற்றியவையே இவை. சுயதணிக்கை! வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  4. அலசல் அருமை... சில சொற்கள் எப்படித்தான் மாறிப் போல் உள்ளன...!!! நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேவலம் என்னும் சொல்லைத் தலைப்பில் சேர்த்திருந்தபோது அந்தக் கடைசி விளக்கத்தில் கேவலத்தைச் சேர்த்திருந்தேன். தலைப்பை மாற்றியபிறகு, அந்தக் கடைசி விளக்கம் தனியாய் நிற்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். சில் சொற்கள் எப்படி மாறிவி்ட்டன பார்த்தீர்களா அ்யயா? நன்றி

      நீக்கு
  5. பெண்களை இழிவுபடுத்தும் சொற்கள் ஒழிந்துபோகட்டும்.
    //பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானது அ்ல்ல. சமமானது! இதை இரண்டுபாலினரும் புரிந்துகொண்டால் இருவருக்குமே நல்லது. // மிகவும் சரி ஐயா. பெண்ணுரிமை பற்றி லேசாக ஏதாவது சொன்னாலே "ஓ, நீங்க அப்டியா.?" என்று ஏதோ திமிர் பிடித்தவளாக, தப்பு செய்பவளாக, ஆண்களை எதிர்ப்பவளாகப் பார்க்கின்றனர்.

    உங்களுக்கு என் அன்பான தந்தையர் தின வாழ்த்துக்களும் வணக்கமும் ஐயா.

    http://thaenmaduratamil.blogspot.com/2012/11/tholaithodarbumuravugalinthodarbum.html, நேரமிருக்கும்பொழுது பாருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. “மாதர் தம்மை (தாமே) இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்“ என்று இதைத்தான் சொன்னானோ சகோதரி. காலையில் என் இளைய மகள் வாழ்த்தினாள், மாலையில் என் தமிழ்மகள் வாழ்த்துவதைப் பார்த்து மகிழ்கிறேன்மா. சுட்டியைத் தொடர்ந்து பார்த்து எழுதுவேன். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மகள் என்று சொன்னது மகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி.

      நீக்கு
    2. உன் மகன் வயதும் என் பேரன் வயதும் ஒன்றென்னும் உரிமையில் எழுதினேன் நீ என் தமிழால் வந்த மகள் என்றும் சொல்லலாம். என் தொடர்பே இல்லாவி்ட்டாலும் நீ நம் தமிழ் பெற்ற மகள்தான் என்னும் பொருளிலும் சொல்லலாம்.

      நீக்கு
  7. வணக்கம் ஐயா
    ஒரு இலக்கியத்தைப் படிக்கும் போது அது எப்படிப்பட்ட சமூகப் பின்னணி கொண்டது என்பதை உணர்த்தி விடும். அது போலவே நம் சமூகமும் ஆணாதிக்கம் கொண்டதாகவே இருந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கி விட்டீர்கள் ஐயா. பொருளாதார தேவை காரணமாகவே இன்று பெண்கள் அடுப்பங்கரை தாண்டி பொது வெளிகளில் உலாவுகிறார்கள், பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை ஐயா. ஆழமாக சிந்திக்க வைக்கும் பதிவு ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாண்டியன், பெண்ணடிமை என்பது மனித சமூகம் தோன்றிய காலத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் சில உரிமைகளைச் சலுகையாகப் பெற்றிருந்தாலும், இன்னும் அவர்கள் முன்னேற வேண்டிய தூரம் பாரதூரம்! நம்மால் முடிந்ததைச் சொல்லிவைப்போம். அவர்களாகப் போராடிப் பெறுவதுதான் இறுதி... நன்றி நண்பா.

      நீக்கு
  8. நல்ல சொல்லாராய்ச்சி. மாற்று சிந்தனை கட்டுரை. தமிழர் பண்பாடு என்பதே பெண்ணடிமைதான். சில தமிழ் சொற்களும் அவ்வாறு இருப்பதில் வியப்பில்லைதான்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. மாறுவது மரபு இல்லையேல் மாற்றுவது மரபு நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்தானே? இருப்போம். நன்றி.

      நீக்கு
  9. அய்யா,பெண்களுக்கான வார்த்தைகளையும் ஆண்கள் உருவாக்கிய சமூகம்.... இனியாவது மாற்றம் வர வேண்டும்...எப்போது வரும்?...பெண்களை தன் இணையாக கருதும் போதுதான் வரும்... இன்னமும் அடிமையாய்த் தான் எண்ணும் எண்ணத்திலிருந்து முதலில் பெண்கள் வெளியில் வர வேண்டும்... நல்ல ஆரோக்யமான பதிவு...அதில் சில வார்த்தைகளைத் தவிர்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க வேண்டும் சகோதரி. இனி இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு பதிவிடுவேன்.

      நீக்கு
  10. //பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானது அ்ல்ல. சமமானது! இதை இரண்டுபாலினரும் புரிந்துகொண்டால் இருவருக்குமே நல்லது. //
    மிகவும் சரி ஐயா. உணர்வுபூர்வமான பதிவு. காலங்காலமாக நடந்து வருவது. பார்ப்பொம் நம் தலைமுறையிலாவது மாறுமா என்று. மாற்ற்ம் ஒன்றுதானே மாறாதது!!!

    நீண்ட இடைவெளி ஐயா. இனி வழக்கம் போல் தொடருவேன் ஐயா. வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  11. ”உணர்வுபூர்வமான பதிவு. காலங்காலமாக நடந்து வருவது. பார்ப்பொம்
    நம் தலைமுறையிலாவது மாறுமா என்று” - நன்றி ஜெயசீலன்.
    இந்த உணர்வுதான் என் எதிர்பார்ப்பு. அதுவும் ஆண்களிடம் கூடுதலாக.. பெண்களிடம் எதார்த்தமாக... நன்றி நன்றி. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்.. தங்களின் பகிர்வில் இடம்பெற்றுள்ள வார்த்தகள் ஒவ்வொன்றும் பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்ப்பவர்களுக்கும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைப்பவர்களுக்கும் சாட்டையடி.. உரிமை என்பது யாரும் கொடுத்து பெற வேண்டியது அல்ல. அது அவர்களிடமே இருக்கக்கூடியது. இதை அனைவருமே உணர்ந்து கொண்டால் நலமே. ஆணாதிக்கத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சார் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் பங்கு உண்டு. ஆனால் அக்குழந்தையின் முதலெழுத்தாக (initial)தந்தையின் பெயரை மட்டும் பயன்படுத்துவது எவ்விதத்தில் நியாயாம். இருவரின் பெயரையும் பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்பது எனது ஆதங்கம்.. எனக்கு நிறைய தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றஆர்வம் இருக்கிறது. இருப்பினும் தங்களுடன் இணையாக பகிர்ந்து கொள்ள எனது அறிவிற்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்று கருதுகிறேன்..கண்டிப்பாக என்னை மேம்படுத்துக்கொள்ள தங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன் சார்.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ரேவதி. (என் மகளைவிடவும் குறைந்த வயதுதான் உனக்கு. எனவே உரிமையில் ஒருமையில் சொல்கிறேன்) உனது சொற்களில் உள்ள முதிர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. உனக்கு இன்னும் இரண்டு தகவல் - தாய் தந்தை இருவரின் முதலெழுத்துகளையும் குழந்தைகளின் முன்னெழுத்துகளாகப் போடவேண்டும் என்று நான் பல பத்தாண்டுகளாகப் பேசி வருகிறேன். இதை இன்றைய தமிழக முதல்வர் முந்திய ஆட்சியின்போதே நடைமுறைப் படுத்த சட்டமியற்றிவிட்டார்கள். ஆனாலும் பலரும் செய்வதிலலை, பெண்களும் இதை வலியுறுத்துவதிலலை. ஆனால், என் பிள்ளைகள் இருவருக்கும் (1979, 1982) பெயர் வைக்கும் போதே அவர்களின் அம்மா பெயரின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்ததாக என் பெயரின் முதல் எழுத்தையும் இரண்டு முன்னெழுத்துகளாகப் போட்டுத்தான் பிறப்புச் சான்றிதழ் வாங்கினேன். பள்ளி, கல்லூரிகளில் மட்டுமின்றி, வேலைக்குப் போனபிறகும் அவ்வாறே இன்றுவரை புழங்கிவருகிறார்கள். தொடர்ந்து வா மகளே! உன்னிடமிருந்து இன்றைய புதியவற்றை நானும், என்னிடமிருந்து அனுபவக் கருத்துகளை நீயும் கற்றுக்கொள்வோம். தொடர்ந்து பயணிப்போம். நன்றி.

      நீக்கு
    2. தாராளமாக என்னை நீங்கள் உரிமையாக ஒருமையில் அழைக்கலாம் சார்(அ்ப்பா)..மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் உரிமையான மகளாக எண்ணியதை எண்ணி.. நன்றி

      நீக்கு
  13. சொல்லாராய்ச்சி செய்பவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு. ஒவ்வொரு கூறாக, தாங்கள் விவாதித்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. இவ்வாறான ஆதிக்க நிலை மாற எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்பது தெரியவில்லை. Chairwoman என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. அதற்கான பொருள் a woman who serves as chairman மேலும் இவ்வாறான விளக்கமும் உள்ளது: a woman who leads a meeting, organization, committee, or event என்பதாகும். இவ்வாறே வேறு சில சொற்களும் ஆங்கிலத்தில் உள்ளன. வித்தியாசமான சிந்தனையைத் தூண்டிவிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சொல்லின் வரலாறு சொல்லும் வரலாற்றில்
      வல்லார் அடிமைசெய்த வரலாறும் புலனாகும்“ எனவரும் எனது “காதல் கடிதம்“ நீள்கவிதையின் விளக்கமாகவே இதனை எழுதினேன் அய்யா. ஆங்கிலத்தில் சேர்உமன் என்னும் பெண்பாற் சொல்லைவிட இப்போதெல்லாம் சேர்பர்சன் எனும் இருவருக்கும் பொதுவான பலர்பாற் சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்துவி்ட்டார்கள். ஆயினும் ஆங்கில வழக்கம் வேறு தமிழ் வழக்கு வேறுதானே? ஓர் உதாரணத்திற்காகவே அந்தச் சொல்லைக் காட்டினேன். இந்தச் சிந்தனைகள் யாவும் இலங்கைப் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் “இலக்கணமும் சமூக உறவுகளும்“ நூல் தந்த சிந்தனைத் தொடர்ச்சிதான்...தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.

      நீக்கு
    2. 1980களின் நடுவில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் Literary History in Tamil என்ற ஆங்கில நூலை அவர் அருகே இருக்க தட்டச்சு செய்யும் வாய்ப்பினை நான் பெற்றபெருமை எனக்கு. அவருடன் பணியாற்றிய நாள்களை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. பெரும் அறிஞர். தங்களுடைய மறுமொழி அந்த நாள் நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது. நன்றி.

      நீக்கு
  14. ஐயா வணக்கம். தமிழ்ச் சொற்கள் பலவற்றில் தமிழினப் பண்பாடு புதைந்து கிடக்கின்றன. ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசப்படும் வசவுகளில் எவ்வளவு ஆபாசம். இதிலும் பெண்களையும் பெண் வழி உறவுகளையும் அசுத்தப்படுத்துவனவே. இது தமிழ் மொழி மட்டுமன்று. எல்லா மொழிகளிலும் உள்ளன. தொல்காப்பியர் காலத்திலும் பெண்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. "கிழவி கூறின் அவளறி கிளவி". இங்கு சுயமாக யோசித்துப் பெண் முடிவெடுக்கக் கூடாதாம்... அம்மா உணவு ஊட்டினாள்.... அதே போல அப்பா உணவு ஊட்டினான் என்று கூறுவதில்லை. அப்படியே சொன்னால் அது வழு. என்ன கொடும சார் இது? நீதி நூல்கள் கூட தாம் கூறும் நீதிகளை " ஒருவற்கு" என்று ஆண்பாலை மையப் படுத்தித் தான் கூறுகின்றன... ஐயா தாங்கள் இந்தக் கட்டுரையில் பெண்களின் ஏழு பருவ நிலைகள் கூறியுள்ளீர்கள். இந்த ஏழு பருவ நிலைகளை முதலில் விவரிப்பவர் பொய்கையார் எனும் பெண்பால் புலவரே... இதே போல ஆண்பாளுக்கும் ஏழு பருவ நிலைகள் உள்ளன.
    "காட்டிய முறையே நாட்டிய ஆண்பாலுக்கு
    எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
    சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே"
    என்று அவிநயனார் கூறியுள்ளார்... அவை, பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என்பன.
    இவை மட்டுமல்ல... உரையாசிரியர்கள் கூட ஆண்களை மிகுதிப் படுத்தியே எழுதியுள்ளனர். " சாத்தான் கை எழுதுமாறு வல்லன். சாத்தி சாந்து அரைக்குமாறு வல்லள்" . இப்படி ஏராளம் ஐயா. சாத்தி அரைத்த சாந்து சமூகப் பால் பாகுபாட்டைப் பூசி மறைக்கட்டும். காலம் வரும் வரை பொறுக்க வேண்டாம். பொங்கி எழுவோம்... நன்றி ஐயா பகிர்வுக்கு.... கொ.சுப. கோபிநாத், இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம்.

    பதிலளிநீக்கு
  15. அன்பு கோபி, உங்களால்தான் -உங்களால் மட்டுமேதான்- இதுபோலும் இலக்கண இலக்கிய மேற்கோள்களைத் தரமுடியும். நான் கல்லூரியில் கற்ற காலத்தில் திவேகோ அய்யா இப்படித்தான் எதார்த்தமான வாழ்வியல் நிகழ்வுகளுக்கான தமிழ் இலக்கிய-இலக்கண மேற்கோள் பலவற்றை அள்ளி வீசுவார். அவை அத்தனையும் ஆண்சார்பாக இருக்கின்றனவே என்று நான் வாதிடுவேன். என் வாதத்தை ரசிப்பார். ஆனாலும் அதுதான்டா இலக்கியம் என்று என் வாயை அடைத்துவிடுவார். “குறள் முற்போக்கானதுதான் என்றாலும்“ என்னும் தலைப்பில் “வள்ளுவர் ஆண் என்பதால் பெண்ணடிமைக் கருத்தில் அவரும் விதிவிலக்கல்ல அது அன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பு என்றாலும் சங்க இலக்கியத்தில் காணப்படும் பெண்ணடிமைக் கருத்துகள் பலவற்றை அவர் ஏற்கவில்லை என்பதால் அவர் முற்போக்கானவர்தான்“ என்று நான் தினமணியில்( தமிழ்மணி-ஏப்ரல்-13,1991) எழுதியிருந்தேன். நீங்கள் அதைவிடவும் கூடுதலான மேற்கோள்களைக் காட்டியுள்ளீர். இந்த உணர்வின் அடுத்த கட்டமாக, இன்றைய உலகிற்குத் தேவையான சமத்துவக் கருத்துகளைப் பரவலாக்க வேண்டும். என்னை விடவும் உங்களால் இந்தக் கருத்துகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகமுடியும். செய்ய வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா கோபி

    பதிலளிநீக்கு
  16. ஐயா,

    சிந்திக் வைத்த பதிவு.

    மேலும் பட்டிமன்றங்களின் உங்கள் பேச்சை விரும்பி ரசிப்பேன். இன்றுதான் தாங்கள் blogல் இருப்பதை பார்த்தேன். இவ்வளவு நாளும் கிணற்று தவளையாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். விரைவில் தங்கள் அனைத்து பதிவுகளையும் வாசித்து முடித்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு