தமிழ்மரபு உயிர்ப்போடு உள்ளதா?
சிந்தாமல் சிதறாமல்..
இது
தேர்தல் நேரம். “தமிழனுக்கு வாயெல்லாம் பல், பல்லெல்லாம் சொத்தை“ என்ற கந்தர்வன் கவிதைதான்
நினைவுக்கு வருகிறது. வாக்குக் கேட்போர், “உங்கள் வாக்குகளை, சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே
போடுங்கள்” என்கிறார்கள். நீர்மப் பொருள்தான் வழிந்து சிந்தும் (எண்ணெய் தரையில் சிந்தும்),
திடப்பொருள் உடைந்து சிதறும் (கண்ணாடி உடைந்து சிதறிவிட்டது). எனில், சிந்தவும் சிதறவும்
நமது வாக்கு என்ன, திரவப் பொருளா? திடப்பொருளா? அப்படிப் பேசிப் பழகிவிட்டார்கள்! வாக்களிப்பது
ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கடமை! வாய்ச்சொல்லில் உண்மை தேர்வது வாழ்க்கைக் கடன்!
மக்கள் தமிழ் கொச்சையல்ல!
பேச்சுத் தமிழைக் கொச்சை(vulgar)
என்று சொல்வது தவறு. உலக மொழி அனைத்திலும் பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டும் உண்டு.
எழுத்து இல்லாத மொழிகள் பேச்சுமொழியால் மட்டுமே
வாழ்வதுண்டு. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், ஆங்கில
எழுத்துகளைக் கொண்டே எழுதப்படுகின்றன! எழுத்திலக்கியம் வந்த பின்னரே இலக்கணம் உருவாகும்.
‘எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல, இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் உருவாக்கப்படும்‘
இலக்கணத்தின்
முன்னோடி பேச்சுவழக்கே என்பதால்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (அணிந்துரை) தந்த
பனம்பாரனார் “வழக்கும் செய்யுளும்” என்று வழக்கை முன்னே வைத்தார்! இப்போது, பன்னாட்டுப்
பண்பாட்டுக் கலப்பாலும் பிறமொழியாளர் வாழ்வியல் தொடர்பாலும் நுழையும் வேற்றுமொழிச்
சொற்களை ‘இழுத்துப் பிடித்து’ தமிழ் இலக்கண மரபைக் காப்பதும் பேச்சுமொழி வழக்கே! “உயிர் மெய்யல்லன மொழிமுதல் ஆகா” என்னும் இலக்கணம்
அறியாத படிக்காத கிராமத்துக் கிழவி, ப்ரியா(Priya) என்பதை பிரியா என்பது எப்படி? அப்படி, தமிழ் எழுத்துகளில்
மொத்தம் 24எழுத்துகள்தான் மொழியிறுதியில் வரும் என்னும் நன்னூல் படிக்காத பாமரர் ஒருவர்
Road என்பதை ரோடு என்பதும், Nut-என்பதை நட்டு என்பதும் எப்படியெனில் அதுதான் தமிழரின்
வாழ்வு, பண்பாடு, உச்சரிப்பு முறையின் மரபு! இதுபோல, படித்தவர்கள் கலப்பதும், படிக்காதவர்கள்
தவிர்ப்பதுமான நுட்பத்தால் தான் தமிழ்மரபு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!
ஆனால்,
வரம்பின்றிப் பேச்சுமொழியை ஏற்றால் அதுவே புதிய மொழி தோன்றவும் காரணமாகிவிடும். இன்னும்
சில நூற்றாண்டுகளில் சென்னைத் தமிழ் வேறொரு கிளை மொழியாக உருவெடுப்பது உறுதி! கொங்குத்தமிழ்,
நெல்லைத்தமிழ் சற்றே தாமதமாகலாம். எனவே, இலக்கணமாக அச்சுறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு
வாழ்வியல் மொழிநடையைக் கற்பிக்கும் தேவை உள்ளது.
எழுத்துப் பேணும் தமிழ்
உறவுகள்!
ஔவையின்
ஆத்திசூடியில் “ஙப்போல் வளை“ என்றொரு தொடர் வரும். இதற்கு, “வாழ்க்கையில் முன்னேற ஏற்றம்,
இறக்கம், வளைவு உயர்வு அனைத்தையும் கற்க வேண்டும்“ என்று, ங எழுத்தின் அமைப்பைக் கொண்டு
விளக்குவதுண்டு. மாற்றிச் சிந்தித்தால், தமிழின்
நுட்பத்தைப் புரிந்து சொல்லலாம்!
ங
வருக்கத்தில் 12எழுத்துகள் உள்ளன. அதில், இந்த ங என்னும் எழுத்தைத் தவிர மற்ற 11எழுத்தும்
பயன்படுவதில்லை! ங என்னும் ஓர் எழுத்து, மற்ற 11எழுத்துகளையும் காப்பாற்றி வருவது போல,
“உடல் நலமற்ற, மூத்த, குறையுள்ள மனிதரை, நாம்தான் காப்பாற்ற வேண்டும்” என, எழுத்தின்
வழி வாழ்வியல் கற்பிக்கலாமே! தமிழ் இனிது!
------------------------------------
(வெளியீட்டுக்கு நன்றி-09-04-2024 இந்து தமிழ் நாளிதழ்)











