தமிழ்இனிது-39 - (நன்றி -இந்துதமிழ்-19-03-2024 )

 


அயற்சி – அயர்ச்சி

அயர் - அயர்வு – அயர்ச்சி,  தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல்.  ‘அயர்ந்த’ என்பதே, ‘அசந்த’ எனப் புழங்குகிறது. அயர்தி –அசதி. இதில், அயர்ச்சி என்பதே சரியான சொல். அயற்சி என்பது தவறானது.

அது என்ன கால்நடை?

            காலால் நடக்கும் ஆடு மாடுகளைத்தான் கால்நடை என்கிறோம். ‘மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள்?’ எனில், “மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்!“ என்கிறார் கவிஞர் நந்தலாலா!  

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்“ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை! “அடுத்த நூற்றாண்டில் சோதனைக் குழாய்க் குழந்தை பிறக்கும்” என்று பெரியார் சொன்னபோது பலர் அதை நம்பவில்லை!  சிந்தனையாளர், மனத்தால் காலம் கடந்து, நடந்து விட்டார்கள் அல்லவா? ஆடு, மாடுகள் அப்படி அல்லவே! காலால் மட்டும் நடப்பதால் அவை கால்நடை ஆயின!

உடம்பு- உடலம் – சடலம்   

‘உடம்பு’ என்பதே, பழந்தமிழ்ச் சொல் (குறள்-1122, நன்னூல்-59) “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமந்திரம். உடல், உடலம் என்பன, இருந்தாலும் இறந்தாலும் சொல்லப்படும் சொற்களே. ஆனால், ‘சடலம்’ அப்படியல்ல. அது உயிரற்ற உடல்,  பிணம் என்பதையே குறிக்கும். தமிழில் உயிர், மெய் எனும் சொற்கள் எழுத்து இலக்கணத்தை மீறி, ஆய்வுக்குரிய ஒரு தத்துவ மரபில் அமைந்துள்ளன.

மெய் என்பது உருவம், உயிர் என்பது உள்ளடக்கம். உயிரும் மெய்யும் சேர்வதே உயிர்மெய் என்பது தமிழர்களின் மொழியும் வாழ்வும் இணைந்த கருத்து! ‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர, ‘க’ எனும் உயிர்மெய் எழுத்தின் உருவம் மெய்யிலிருந்தும், ஓசை உயிரிலிருந்தும் வருகிறது அல்லவா!

அழுகணிச் சித்தர், “ஊத்தைச் சடலம்” என்று பாடியிருந்தாலும், உடலுக்கும் உரிய மதிப்பைத் தந்திருப்பதே தமிழ் மரபு!  

பெரிய பதவியிலோ, பெரும் பணக்காரனாகவோ இருந்தாலும், இறந்தபின் ‘பிணம்’ என்ற அஃறிணைப் பெயர்தானே சூட்டப் படுகிறது! உயிரற்ற உடம்பு மட்டுமல்ல, அறிவற்ற குழந்தையும் அஃறிணைதான் என்கிறது தொல்காப்பியம்(540). உயிருடன், அறிவும் இருந்தால்தான் உயர்திணை! இது வெறும் இலக்கணமா? வாழ்வியல் நுட்பமல்லவா?!    

“பேரினை நீக்கிப் ‘பிண’மென்று பேரிட்டு“ (திருமந்திரம்-145) நிலையாமை சொல்லி, அறவழிப் படுத்தினர் முன்னோர். மெய் என்றால், ‘உடம்பு’ என்றும், ‘உண்மை’ என்றும் இரு பொருள் உண்டு! ‘உடம்பு உண்மையானது’ என்பதை அறியாத பலர், இந்த ‘உண்மை’ /’மெய்’யை  ‘நிஜம்’ /’சத்யம்’ என்கிறார்கள்,  தமிழ் நுட்பம் அறியாதவரே!

“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!“ என்ற கருத்திற்கு எதிராக, “காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா!” என்ற பட்டுக்கோட்டையார் கருத்தே தமிழ் மரபுக் கருத்து. இதையே “உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள்” என்னும் வள்ளலார் அகவலிலும் (368)  காணலாம்.  

            எனவேதான் “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்“ என்று, ஆள்(மெய்) வளர சத்துணவும், அறிவு(உயிர்) வளரக் கல்வியும் கொடுத்து, மனிதரை உயர் திணையாகவே  வளர்க்கிறது தமிழ்ச் சமூகநீதி மரபு!  

---------------------------------------------------------

16 கருத்துகள்:

  1. இன்றைய கட்டுரையில்சிறப்புமிகுதி.அ.இருளப்பன்

    பதிலளிநீக்கு
  2. அருமை தமிழ் மரபை பற்றி அருமையான‌விளக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 19, 2024

      நன்றி நண்பரே, கொஞ்சம் முயன்றால் உங்கள் பெயரை நான் அறியத் தரலாமே?

      நீக்கு
  3. ஆகா! மிக மிக அருமை ஐயா! தமிழின் எழுத்து, சொல், பொருள், இலக்கணம் ஆகியவை தாண்டி இப்பொழுது தொடரில் தமிழ்ப் பண்பாடு, மரபு, மெய்யியல் ஆகியவற்றையும் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்! மிக்க மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 19, 2024

      கற்பிப்பது பெரிய வார்த்தை நண்பா. கொஞ்சம் யோசிக்கும் போது தோன்றுவதைப் பகிர்ந்து கொள்கிறேன். தவறாக இருந்தால் சொல்லத் தயங்காதீர்கள். இது பெரும் பேரறிஞர்கள் களமாடிய கடல்! தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் முதல் கவனம். எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கவனம்.. இதுவே என் நோக்கம்

      நீக்கு
    2. மகிழ்ச்சி ஐயா! எப்பொழுதும் உங்களுடன்!

      நீக்கு
  4. ஆழமான சிந்தனை. மெய், அயர்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 19, 2024

      நன்றி நண்பரே. அன்று சிலம்புப் பட்டிமன்றத்தில் நிறைவு வரை இருந்தீர்கள். மகிழ்ச்சி.. ஒன்றும் சொல்லவில்லையே!

      நீக்கு
  5. அயர்ச்சி நீக்கி அழகிய தமிழை நலமுறப் பேச அவ்வப்போது கட்டுரை வெளியிடும் ஐயாவிற்கு அன்பின் வாழ்த்துகள் 💐

    பதிலளிநீக்கு
  6. கால்நடை விளக்கம் தெரிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், மார்ச் 19, 2024

      நன்றி. ஆனால் உங்கள் பெயர் விளக்கம் தெரியவில்லையே!

      நீக்கு
  7. எளிமையான தெளிவான அருமையான விளக்கம்,குறிப்பாக நீங்கள் பயன்படுத்திய மேற்கோள்கள் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள பகிர்வு ஐயா நன்றி.
    ஐயா, ஒரு ஐயம்
    மக்கள் நீதி மய்யம்.
    மய்யம் என்றால் உயிரற்ற உடல், சடலம் என்று பொருள் என தமிழாசிரியர் உரைத்த காணொலியினைக் கண்டேன்.
    மய்யம் - சடலம்
    உண்மையா?

    பதிலளிநீக்கு
  9. உயிர், மெய் விளக்கம் புதிய கோணத்தில் இருந்தது. அனைத்து விளக்கங்களும் மிக அருமை. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு