தமிழ் இனிது-40---- நன்றி - இந்து தமிழ்26-03-2024

 


தடியடியும் அடிதடியும்

            “மக்களிடையே அடிதடி! காவல்துறை தடியடி” என்னும் செய்தியை ஊடகங்களில் பார்க்கிறோம். ஒன்று போலவே இருந்தாலும் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு! தடியடி (Lathi Charge) கூட்டத்தைக் கலைக்க, அரசால் திட்டமிட்டு நடத்தப் படுவது. இதற்குக் காவல்துறை உயர் அலுவலரின் முன்அனுமதி தேவைப்படும். அடிதடி என்பது வேண்டாதவரை திட்டமிடாமலே தாக்குவது அல்லது அந்தக் குழுத் தலைவரால் திட்டமிட்டு நடத்தப் படுவது. அடிதடி, கலவரம்  நடக்கும் இடத்தின் நிலவரம் அறிந்து காவல் துறை நடத்துவது தடியடி! 

செல்வர் சரி, அது என்ன செல்வந்தர்?

செல்வம் உடையவர் செல்வர். எனவேதான் தமிழர் பெயர்களில் செல்வன், செல்வி, தமிழ்ச்செல்வன், கலைச்செல்வியர் பலர் உள்ளனர். செல்வர் என்பதை, வடமொழியில் ‘தன்வந்தர்’ என்பர். அது, தனவந்தர்- செல்வந்தர்- எனும் பொருளற்ற சொல்லாகி, நூறாண்டுக்கு முந்திய “மணிப் பிரவாள நடை” காலத்தில், கலப்புத் தமிழாக நுழைந்து விட்டது.

 செல்வம் என்பதற்குத் தமிழில் வேறு பொருளும் உள்ளது. “பொருட் செல்வம், பண்புகள் இல்லாதவரிடமும் சேரும். அருள் என்னும் செல்வமே சிறந்த செல்வம்”என்பது குறள்(241). அருட்செல்வர், கருணைச் செல்வி, குழந்தைச் செல்வம், போதும் செல்வம் (கடைசிக் குழந்தையாக இருக்கட்டும் என்று வைக்க, அதன் பிறகும் குழந்தை பிறப்பதுண்டு!) இப்படியான பொருள் விளக்கம் தனவந்தர், தன்வந்தர், செல்வந்தர் எனும் சொற்களில் இல்லையே! எனவே, செல்வர் என்பதே நுட்பமான பொருள் கொண்ட இனிய தமிழ்ச் சொல். செல்வந்தர் எனும் கலப்படம் வேண்டாம். 

குறிப்பாக – சிறப்பாக

            எதிர்ச் சொற்களைக் கையாளும் போது, நம்மை அறியாமலே சில தவறுகளைச் செய்கிறோம். காலை-மாலை, ஒளி-இருள் என்பது போல, ஆண்-பெண் சொற்களை எதிர்-எதிர்ச் சொல்லாகக் கருதுவது, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் இக்காலக் கருத்திற்கு எதிரான தவறல்லவா?  

            இதுபோலவே, ‘பொதுவாக’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லாக ‘குறிப்பாக’ என்னும் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். “அவர் பொதுவாக எல்லாரிடமும் அன்பு காட்டுவார், குறிப்பாக என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார்” என இரங்கல் தெரிவிக்கிறார்கள். இது தவறு. “வெளிப்படையாகச் சொல்ல  முடியாத பலவற்றை, குறிப்பாக எனக்கு உணர்த்துவார்“ என்பதுதான் சரி.  ‘குறிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் ‘வெளிப்படை’ என்பதே. அதேபோல, ‘பொதுவாக’ என்பதன் எதிர்ச்சொல் ‘சிறப்பாக’ என்பதே. இதை உணர்ந்து, பொதுவாக அல்லாமல் சிறப்பாகப் பயன்படுத்துவது, வெளிப்படையாக எல்லார்க்கும் குறிப்பாகத் தமிழுக்கு நல்லது!

மன்னன் - நிலைபெற்றவனா?

            மன்னன்’ எனில் ‘நிலையானவன்’ என்பது பொருள். இதனால்தான் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்றது புறநானூறு(186). எனினும், ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல் ஆவர்’ என்பதை உணர்ந்து, ‘மக்களே உயிர், மன்னன் உடல்தான்’ என்று மன்னராட்சிக் காலத்திலேயே மக்களாட்சிக் கோலத்திற்கு புள்ளியிட்டார் கம்பர்! உலகில் யாரும் ‘நிரந்தரமானவர்‘ இல்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆக, தமிழ் மன்னன் உடலால் அல்ல, புகழால் நிலைத்தவன் என்றே புரிந்துகொள்ள வேண்டும்! “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”(புறநா-165)

--------------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. அருமை..அடிதடி கலவரத்தை காவலர் தடியடி கொடுத்து கலைத்தனர்.செல்வர் தான் செல்வந்தர் அல்ல! அறியாத விளக்கம் ..அனேகர் செல்வந்தர் என்றே பயன்படுத்துகின்றனர் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், மார்ச் 27, 2024

      நன்றி நண்பர் பார்த்தா

      நீக்கு
  2. வணக்கம் தோழர். கடந்த காலம் முழுவதும் எங்களுக்கு ஊட்டிய தமிழ்அமுது புரிதலை புத்தகமாக வெளியிட்டால் மிகப்பயனுள்ளதாகும்.
    எங்கள் விருப்பமும் நிறைவேறும் தோழர்.
    நன்றி
    பூபதி திண்டுக்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், மார்ச் 27, 2024

      நன்றி தோழர் பூபதி. நலம்தானே? அதுசரி.. “கடந்த காலம் முழுவதும்“என்றால் இனி இதைத் தொடர வேண்டாமா? உங்களைப் போன்றோர் தொடர்ந்து படிக்கும்வரை தொடர்ந்து எழுதுவேன், முடிந்த பிறகு உறுதியாக நூல் வடிவில் வெளியிடுவேன்

      நீக்கு
  3. இந்த வாரம் அனைத்துமே நுட்பமான, அறியாத தகவல்கள் ஐயா!

    ‘செல்வந்தர்’ என்பது கலப்புச்சொல் என இப்பொழுதுதான் அறிகிறேன். தமிழின் ஒவ்வொரு சொல்லுக்கும் வேர்ப்பொருள் சிந்தித்து / அறிந்து முடிக்கும் வரை இப்படியான சுவை நறுக்குகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

    "குறிப்பாக" எனும் சொல்லை இப்படி ஆள்வது தவறு என்பதை அறிந்து அதிர்ந்தேன்! இப்படி எத்தனை இடங்களில் எழுதித் தொலைத்திருக்கிறேனே!! இனி திருத்திக் கொள்வேன். நீங்கள் சொல்வது போல் எதிர்மறைச் சொற்றொடர்களில் இப்படிப்பட்ட பிழைகள் மலிந்து கிடக்கின்றன. "டெட்டால்" நிறுவனத்தின் அண்மைய விளம்பரம் பார்த்திருப்பீர்கள்; "இதனால் என்ன ஆகும்?" என்று சிறுவன் அம்மாவைக் கேட்பான். "ஒண்ணும் ஆகாது" என்பார் அம்மா. "ஒண்ணும் ஆகாதுன்னா ஏன் டெட்டால் போடறீங்க?" என்று கேட்பான். "டெட்டால் நுண்ணுயிரிகளை அழித்து, நோய் வராமல் தடுக்கும். அதனால் நமக்கு ஒண்ணும் ஆகாது" என்று அம்மா விளக்கமளிப்பார். அப்படியானால் அந்தம்மா சொன்னதே தவறு, "ஒண்ணும் ஆகாமல் இருக்கும்" என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். இவர் தவறாகச் சொல்லிவிட்டுப் பையன் தவறாகப் புரிந்து கொண்டது போல் விளக்கமளித்துக் கொண்டிருப்பார்.

    இதே போலத் "தயவு செய்து" எனும் சொல்லையும் இப்படிப்பட்ட எதிர்மறைச் சொற்றொடர்களில் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் நம் மக்கள். "தயவு செய்து அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டா", "தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்" என்றெல்லாம் எழுதுவதையும் பேசுவதையும் பார்க்கிறோம். "தயவு செய்து அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதைத் தவிருங்கள்", "தயவு செய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருங்கள்" என்பதே சரியான சொல்லாடல். இதைப் பற்றியும் நீங்கள் இத்தொடரில் உரிய விளக்கத்துடன் எழுதினால் மகிழ்வேன்.

    "மன்னன்" எனும் சொல் பற்றிய விளக்கம் மிகவும் வியப்பை அளித்தது! அரசன் எனும் பொருளை விட நிலையானவன் என வேரிலிருந்து இந்தச் சொல்லின் பொருளைப் புரிந்து கொள்ளும்பொழுது நீங்கள் மேற்கோளிட்ட புறநானூற்று வரிகள் இன்னும் நுட்பமான பொருளில் புரிபடுகின்றன.

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. குறிப்பாக அடிதடி தடியடி சிறப்பு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. குறிப்பு என்பதற்கு எதிர்சொல் வெளிப்படை என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். அனைத்து விளக்கங்களும் மிகவும் சிறப்பு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு