தமிழ்இனிது-32, நன்றி: இந்துதமிழ்-30-01-2024

முகம் 'சுழிக்க' வைக்கலாமா?

சுளித்தல் – சுழித்தல்

தமிழாசிரியர் முனைவர் மகா.சுந்தர், ‘முகம் சுளித்தல்’ என்பதை, பலரும் ‘சுழித்தல்’ என்றே எழுதுவதாக வருத்தப்பட்டார், உண்மைதான்! 

‘மனநிறைவு இன்மை’யை முகத்தில் காட்டுவதை, ‘முகம் சுளித்தல்’ என்பார்கள். கோவக் குறிப்பை, ‘முகம் கறுத்தான் / கண் சிவந்தான்’ என்பர். எனினும், ‘சுழித்தல்’ - தவறான வழக்கு, ‘சுளித்தல்’ என்பதே சரி.  ‘ளி-ழி’ குழம்பியது எப்படி?! நம் தமிழர்களின் உச்சரிப்புச் சிறப்பு, ‘உலகப்புகழ்’ பெற்றதாயிற்றே! பழம்-பலமாகும், உளுந்து-உழுந்தாகும்! அதுவே நாளடைவில் எழுத்திலும் வந்து குழப்பும்! பொருளில் தெளிவாக கவனமாக இருந்தால், எழுத்துப் பிழையும் குறையும்.  

 உதடு ‘சுழிப்பது’ என்றால், நெருங்கியவரிடம் ‘பொய்க்குறிப்பு’ காட்டுவது! ‘சுழி’ என்பது ‘இன்மை’(0-ZERO) என்பதற்கான அழகு தமிழ்ச் சொல்! இதை, ‘பூஜ்ஜியம்’ என்று சொல்வது,  ‘முகம்சுளிக்க’ வைக்காதோ?  

தொடர்ப் பிழை கவனிக்க..

            11-01-2024 - காலை 6.45 மணி - கோடைப் பண்பலை- வானொலிச் செய்தியாளர், “அனைத்து மத்திய அரசின் துறைகளும்..” என்னும் தொடரைச் சிலமுறை சொன்னார். மத்திய அரசு எத்தனை இருக்கிறது? ஒன்றுதானே? செய்தி வாசித்தவர், இந்தத் தொடரை, “மத்திய அரசின் அனைத்துத் துறைகளும்”என அமைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஊடகச் செய்தியாளரும், வாசிப்போரும், அச்சிடுவோரும், இவை போலும் தொடர்களின் நுட்பம் அறிந்து, தொடர்களை அமைத்தால், இளந்தமிழர் அறிந்து வளர்வார்கள்.  மேலும், ‘ஒன்றிய அரசு’ என்பதே, பொருள் நிறைந்த -அரசியல் சட்டப்படியான- சரியான சொல் (AptWord) எனினும் அவரவர் சார்பைக் காட்டுவதாக அமைந்து விட்டதும் உண்மை.    

சீண்டுதல் – சீந்துதல் 

  2017ஆம் ஆண்டு, பொங்கலை ஒட்டிய நாள்களில், சென்னை மெரினாவை மையமிட்டு, உலகமே வியந்து பார்த்த, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், தீயாய்ப் பற்றித் தெறித்த முழக்கம் -  “சீண்டாதே! சீண்டாதே! தமிழர்களைச் சீண்டாதே!”  சீண்டுதல் – வெறுப்பேற்றுதல்.    

லட்சக் கணக்கான இளைஞர் முழக்கங்களின் பக்க விளைவாக அதே மணல்வெளியில் ‘சீந்து’வாரற்றுக் கிடந்தன பன்னாட்டுக் குளிர்பானக் குப்பிகள்!  சீந்துதல் – மதித்தல். இவ்விரு சொற்களையும் இவற்றின் வேறுபாடறிந்து பயன்படுத்த வேண்டும்.   

ஐந்நூறா? ஐநூறா?  

பாரதி சொல்வது போல, “ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள” எளிய மக்களை மறந்த எந்த மொழியும் வளர முடியாது! மக்கள் மொழி, கொஞ்சம் ‘கலப்பட’மாகத்தான் இருக்கும். மொழிக்கு முதலிடம் தரும் ‘தூய புலவர்மொழி’ வேறு! இரண்டுக்கும் பயனுண்டு! இவற்றை, இடமறிந்து பயன்படுத்தி மொழி வளர்க்கும் இலக்கணமே நமது தேவை.       

ஐநூறு, செய்நன்றி, பொய்மை, கைமாறு என்பன மக்கள் தமிழ். ஐந்நூறு, செய்ந்நன்றி, பொய்ம்மை, கைம்மாறு  - இலக்கியத் தமிழ்.  

‘கைம்மாறு’ திருவாசகம் -திருச்சதகம்-5, ‘செய்ந்நன்றி’ –குறள்-110, ‘பொய்ம்மை’-கம்பராமாயணம்-9106(TVU) என, இலக்கியங்கள் சொல்ல,  ‘தனிக் குற்றெழுத்தை அடுத்தய’ முன்னும், தனிஐ’ முன்னும் வரும் மெல்லினம் மிகும்’(158) என்று, இலக்கணமும் சொன்னார் நன்னூலார்.

தமிழ்வளர்ச்சித் துறையின் ‘சொற்குவை’யிலும் ‘ஐநூறு’ உள்ளது. பொய்மை, செய்நன்றி, கைமாறு என, ‘மெய் மிகா’ச் சொற்கள், அச்சு நூல்களிலும் வந்துவிட்டன. இவற்றை ஏற்கலாம் என்பதே என் கருத்து. மக்கள் வளர்ச்சிக்கான மொழிக்கு, நாம் செய்யும் ‘கைமாறு’ இதுதான்!  

--------------------------------------------------   

மைதிலி கவிதை நூலறிமுக விழா - காணொலி இணைப்பு


 இதில்.

நிறைவுரையாகப் பேசிய எனது

தலைமை உரையை

பொள்ளாச்சியிலிருந்து

கவிஞர் பூபாலனுடன் வந்ததோடு

தனது செல்பேசியில் எடுத்து

முகநூலில் பதிவிட்ட

கவிஞர் சோலை மாயவனுக்கு நன்றி

உரையின் காணொலி இணைப்பு

https://www.facebook.com/share/v/9sHfPJFH5y4QTw4m/?mibextid=qi2Omg 

13-நிமிடம்தான்

அச்சமின்றிப் பாருங்கள்

(அடுத்தவர் நேரத்தை எடுத்துக் கொள்ளும்

வழக்கம் எனக்கில்லை!)

தமிழ்இனிது-31 (நன்றி- 23-01-2024- இந்து தமிழ் நாளிதழ்)

  

சிறகு வேறு,  இறகு வேறு!  

கெடிகாரமா? கடிகாரமா?  

          கவிஞர் நேசன்மகதி, செய்தித்தாள் ஒன்றைப் புலனத்தில் அனுப்பி, “கெடிகாரமா? கடிகாரமா?” என்று கேட்டார். “விநாயகர் வடிவ கெடிகார விற்பனை“-விளம்பரமும் அந்த செய்தித் தாளில் இருந்தது!  உமறுப் புலவரின் ஆசிரியர் கடிகை முத்துப் புலவர் வந்து நமது மண்டையில் தட்ட, “கடிகை, கடிகாரம் தான் சரி“ என்றேன் (நன்றி-தமிழ்-தமிழ் அகர முதலி –த.நா.பாடநூல் கழகம்-பக்கம்-247/1985) வெண்கல மணி ஓசையில் காலம் அறிந்ததால், கடிகை - கடிகாரம் ஆனது.  கையில் கட்டுவதால் அல்ல, அளவில் சிறியதால் ‘கைக்கடிகாரம்’ ஆனது,!

 ‘கடிகா’ – பாலி, வடமொழி வழி ‘கடிகை’ எனும் கருத்து, தவறானது.

“மலர்ந்தும் மலராத” -பாசமலர்- பாடலில் “தங்க கடியாரம்“ என்று சுசிலாம்மா பாட, கண்ணதாசன் ‘கடிகாரம்’ என்றே எழுதியிருக்கிறார்.  

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’ பொ.ஆ.,4ஆம் நூற்றாண்டினது! “கடிகை வெண்பா“- அரசனுக்கு நேரம் சொல்லும் ஒரு சிற்றிலக்கியம்! கடிகை -நேரம் அளவிடு கருவி.  மதுரைக் காஞ்சி-532, நெடுநல் வாடை-142, கலித்தொகை-96/10, அகநானூறு35/3 எனசங்கநூல்களில் வரும்.          “பாலையில் செல்வோர் கடிகை கொண்டு செல்வர்"கடிகை  நாழிகையே" - சூடாமணி நிகண்டு. 

பிறகு கடிகை-கடிகாரம் என்பது ‘கெடிகாரம்’ ஆனது எப்படி? கங்கை –கெங்கை என்றும் (குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்), கரகம் – கெரகம் என்றும் (கரகாட்டக் காரன் - கோவை சரளா) பேச்சு வழக்கில்     க, கெ ஆக,  கடிகாரம் கெடிகாரம் ஆகியிருக்கலாம்.  ஆனால் பெருவழக்கிலும் எழுத்திலும் கடிகாரம் என்பதே தமிழ்ச்சொல்.  என்ன செய்ய? கடிகாரத்திற்கே ‘நேரம்’ சரியில்லை  போல!  ‘கெரகம்’தான்!  

எம்பளது – நுப்பது

எண்பதை ‘எம்பளது’, என்றும் முப்பதை ‘நுப்பது’ என்றும் சொல்வது, பழைய  தஞ்சை மாவட்ட மக்கள் வழக்கு. எழுதும்போது, சரியாக எழுதுவர். இது எப்படி வந்ததென்று சொல்லாய்வரே சொல்ல வேண்டும்! தப்பான  உச்சரிப்போடு நெடுங்காலமாக வழக்கில் இருப்பது மட்டும் உண்மை!

அரைவை – அறைவை

           சென்னையிலிருந்து பள்ளி  மாணவி ஜூலியானா, “அரைவை எந்திரமா? அறைவை எந்திரமா?” என்று கேட்டார். நல்ல கேள்வி!  அறவை, அறைவை என்பன தவறானவை.  மாவு அரைக்குமிடம் – மாவு அரவை ஆலை. புடைவையைப் புடவை என்றும், உடைமையை உடமை என்றும் வழங்குவது போல, அரைக்கும் அரைவையை அரவை என்றே ஏற்கலாம். மரம் அறுக்கும் மர அறுவை ஆலை என்பது வேறு.

இறக்கை – றெக்கை – ரெக்கை

இறக்கை – wings- இறகு, பெரியது. 

றெக்கை - பேச்சு வழக்கு. 

சிறகு –feather- இறக்கையின் சிறுபகுதி- சிறியது. 

“காதல் சிறகை காற்றினில் விரித்து” –கண்ணதாசன் பாடல்.   

“சிறகுக்குள் வானம்” – ஆர்.பாலகிருஷ்ணன் கட்டுரைகள் - பாரதி புத்தகாலயம். ‘சிறகு’ என்றே  மின்னிதழ் ஒன்றும் வருகிறது!

இறகிலிருந்து பிரிவதே சிறகு, ஆனால், பெரும்பாலும் --வழக்கை முன்வைத்து—சிறகை, இறகு-இறக்கை எனும் பொருளில்  எழுதுகின்றனர். இதை இலக்கணத்தில் (சிறகு எனும் உறுப்பு, இறகு-இறக்கை எனும் முதலுக்கு ஆகிவருவதால்)  சினையாகுபெயர் என்பர். ரெக்கை என்பது பிழை வழக்கு.  சிறகு விரிக்கட்டும் புதிய சிந்தனைகள்!   

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 23-1-2024 செவ்வாய்)

நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து,
“என்ன இந்த வாரம் இப்படி வடிவமைத்து விட்டீர்கள்?” என்று
என்னைக் கேட்டார்கள்! கோப்பாகச் சேர்ப்போர், பள்ளி கல்லூரி, பயிலகங்களின் சுற்றறிக்கைப் பலகையில் இதை
ஒட்டிவைப்பது சிரமம் என்றார்கள்!  
( மதுரை உலகத் தமிழ்ச் சங்கச் சுற்றறிக்கைப் பலகையில் 
“தமிழ் இனிது” கட்டுரைகளை ஒட்டுகிறார்களாம்! 
அந்த நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கம் கலந்த நன்றி )


                                     -------------------------------------------------------------------- 

தாராபுரம் புத்தக விழா - எனது உரை காணொலியின் சிறு பகுதி!




நிகழ்வில் 27-12-2024  அன்று

நான் பேசியதை

இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்கள்

(எனக்கே நண்பர் ஒருவர்தான் தெரிவித்தார்!)

விருப்பமுள்ள நண்பர்கள் கேட்க-பார்க்கலாம்.

உரைத் தலைப்பு

 “உண்டால் அம்ம, இவ்வுலகம்”

(உரை - நிகழ்வில் நான் 50நிமிடம் பேசியிருந்தாலும்..)

வெறும் 6நிமிட உரை மட்டுமே

இதில் உள்ளது.

எனவே துணிந்து பார்க்க, கேட்கலாம்!

கேட்டவர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்தால் 

மகிழ்வேன். “இன்ஸ்டா“ இணைப்பு :

https://www.instagram.com/reel/C2UnlDbM2yl/?igsh=MXZoY2VtcnJhY2p6Nw== 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த

தமுஎகச தாராபுரம் கிளைத்தலைவர்கள்

சீரங்கராயன், தங்கவேல் 

மற்றும் சுழற்சங்க நிர்வாகிகள்,

தீக்கதிர் நாளிதழ் (இன்ஸ்டா) ஆகியோர்க்கு 

எனது  நன்றி. 

----------------------------

தமிழ்இனிது-30 (நன்றி-இந்து தமிழ் 09-01-2024)

       


       
வரலாறு மாறி வரலார் ஆகலாமா?

ஒன்று – ஒண்ணு? ஒன்னு?

         வி.சேகர் இயக்கிய திரைப்படம், ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும். இந்த வரியில் தொடங்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றும் உள்ளது.    

மாறாக, கன்றுக்குட்டி - பேச்சு வழக்கில் - ‘கன்னு’க்குட்டி ஆகிறது. “கன்னுக்குட்டி கன்னுக்குட்டி“- திரைக்கலைஞர் சிவகுமார் நடித்த பாடல்!  கொன்று, தின்று - ‘கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு!”-  பழமொழி!

இப்படி, ‘று’ எழுத்து, இனவழியில், ‘னு’ ஆவதுண்டு!  எண்ணுப் பெயர்களில்,  ஒன்று-ஒண்ணு, மூன்று- மூணு என, ‘ணு’ ஆவது எப்படி?       

         தமிழறிஞர் இராம.கி., தனது “வளவு“ வலைப்பக்கத்தில் “ஒண்ணு சரியா? ஒன்னு சரியா? என்றால், ‘ஒண்ணு’ என்பது முதலில் வந்திருக்க வேண்டும், ‘ஒன்னு’ என்பது பின்னால் வந்திருக்க வேண்டும்” என்கிறார். (https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html)

இதை, இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்: ‘ஒண்ணா’  எனில் ‘இயலா’ என்பது பொருள். ‘சொல்லொ(ண்)ணாத் துயரம்’,  ‘காண ஒண்ணாக் கொடுமை’  என, ‘ஒண்ணா’ - எதிர்ச் சொல்லாகவே உள்ளது!  

ஆக; ஒன்று, மூன்று என்பன எழுத்து வழக்கு; ஒன்னு, மூனு என்பன பேச்சு வழக்கு,  ஒண்ணு, மூணு  என்பன தவறான வழக்கு எனலாம்.                   

ஆர்ந்த - ஆழ்ந்த இரங்கல்?

அன்பிற்குரியவர்களின் மரணத்தில், “மனமார்ந்த அஞ்சலி / இரங்கல்” என்கிறார்கள்!  நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். ஆனால், “ஆழ்ந்த இரங்கல்” என்பதே சரி.  ‘உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து’ என்பது உட்பொருள். நன்றி சொல்ல, “மனமார்ந்த நன்றி” என்பதே சரி.

‘நன்றியை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சொல்லக் கூடாதா?’ எனில், “நல்லதுக்கு, அழைச்சாத்தான் போகணும், கெட்டதுக்கு அழைக்க மறந்தாக் கூட, கேள்விப் பட்டாலே போகணும்” என்பார்கள்! ஆளில்லாத பூக்கடையில், இரவிலும் சில மாலைகள் தொங்குவதைப் பார்க்கலாம்! பணத்தை மீறிய தமிழர்மரபு!  நல்ல மரபுதானே இலக்கணமாகிறது?!   

ஒருக்காலும் ஒருகாலும் – 

நக்கீரரின் முருகாற்றுப் படைக்குப் பின்னுள்ள – ‘கடைச் செருகல் - வெண்பாக்கள் ஒன்றில், “ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்” என்னும் தொடர் உள்ளது. 

ஆள்பவனையும், ஆண்டவனையும் கேள்விகேட்ட திருவிளையாடல் படத்தில், முக்கண்ணன் சிவனிடமே, இருகண் சிவந்து “...ஒருக்காலும் இருக்க முடியாது!” என்று சீறுவார் நக்கீரர்!

“ஒருக்கா வந்துட்டுப் போப்பா?” இது, சிற்றூர்த் தாயின் தவிப்பு! மலை(ST)மக்கள் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி, ‘ஒருக்கால்’ ‘இருக்கால்’ என்றே பாடும் (கு.கு: 353ஆம் பாடல்).  

  ஆக, ‘ஒருமுறை’ எனப் பொருள்படும் ‘ஒருகால்’ எனும்  சொல் பேச்சுவழக்கில் ‘ஒருக்கால்’ என்றாகிறது. ‘ஒருக்காலும்’ என ‘உம்’ சேரும்போது எதிர்ச் சொல்லாகிறது எனக் கருதலாம்.

அடையார்? பெரியார்?  – வரலார்?

காஞ்சிபுரத்துத் திருப்பெரும்புதூர் அருகில் பிறந்து, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைக் கடந்து, மொத்தம் 43கி.மீ., நடந்து, வங்கக் கடலை அடையும் ஆறு அடையாறு! இதை, ‘அடையார்’ என்பது அடுக்குமா? சொல்லின் இறுதியில் வரும் ‘று’ (குற்றியலுகரம்) ஆங்கிலேயர்க்கு வராததால் ‘ர்’ போட்டு அடையார் என்றனர்! 

இவ்வாறே, ‘முல்லைப் பெரியாறு’ (பேரியாறு-பதிற்றுப் பத்து : 28), ‘பரளியாறு’ (பஃறுளியாறு –சிலம்பு:11:காடு:19) என்பனவும் மருவின.  

தமிழக ஆறுகளின் ‘வரலாறு’ மாறி,  ’வரலார்’ ஆவது நல்லதா?!  

----------------------------------------------------------------

(வலையேற்றப்பட்ட நேரம் :

09-01-2024 செவ்வாய் பிற்பகல்-2-30)

இந்து தமிழ் இயர்புக்-2024 ( அரசுப்பணித் தேர்வுக் குறிப்புகள்)

 
(நமது 21பக்கக் கட்டுரை வந்துள்ளது)

IAS, IPS.  GROUP-1, 2, 2A, 4 மற்றும் பேராசிரியர்,  ஆசிரியர்களுக்கான TRB தேர்வுகள், தமிழ்இலக்கியம், எம்ஏ., பி.ஏ., தேர்வுகள் எழுதுவோர்க்குப் பயன்படும் வகையில்

தமிழ்த் தேர்வுகளுக்கான பகுதியை 

இந்த ஆண்டு நான் எழுதியிருக்கிறேன்.

“தமிழ் இலக்கியமும் வரலாறும்” 

(21பக்கம்)

பழங்கால-இடைக்கால-இக்காலத்

தமிழ்இலக்கியங்கள் பற்றிய 

முக்கியமான குறிப்புகளுடன், 

தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகளும் 

இதில் வருகின்றன.

------------------------------------- 

                            (இப்படியாகபக்கம் 299முதல் 319முடிய

21பக்கக் கட்டுரை)

-----------------------------

 சிறு தலைப்புகள்-

தொல்பழங்காலம்

தொல்லியல் சான்றுகள்

தமிழின் தொன்மை

பிராமி-தமிழி, வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள்

தமிழ்ச் சங்கங்கள்

சங்க இலக்கியம்

பத்துப் பாட்டு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

எட்டுத் தொகை நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

திருக்குறள்

“செம்மொழிநூல்கள்

தமிழ்- செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்

தமிழ் இலக்கணம்

களப்பிரர்

பல்லவர்

முற்கால, பிற்காலச் சோழர்கள்

ஐம்பெருங்காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

சைவ, வைணவ - இலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

சித்தர்கள்

தமிழ்ப்பண்பாடு

புகழ்பெற்ற வரிகள் – எழுதியவர்

பௌத்தம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ்

இஸ்லாம் வளர்த்த தமிழ்

கிறித்தவம் வளர்த்த தமிழ்

தற்காலத் தமிழ்

பொதுவான இலக்கியச் செய்திகள், இதழ்கள்

தமிழ் இலக்கிய விருதுகள், பெற்ற எழுத்தாளர்கள்

நாவல்

சிறுகதைகள்

மரபுக்கவிதை

புதுக்கவிதை,  வரிகளை எழுதியவர்

அய்க்கூ

சிறார் இலக்கியம், சூழலியல் நூல்கள்

திறனாய்வு மற்றும் நூல் –நூலாசிரியர்

இசைத்தமிழ், நாடகத் தமிழ்

ஆக 38 தலைப்புகளில் 21பக்கங்கள்!

------------------------ 

சிறுதலைப்புகளின் கீழ், 

படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக, 

குறிப்புகளாகவே (புல்லட் பாயிண்ட்ஸ்)  தரப்பட்டுள்ளது.

தலைப்பில் வரும் குறிப்புகளை இணைத்தால் 

கட்டுரையாக எழுதிக்கொள்ளவும் 

ஏற்றபடி அமைந்துள்ளது.

----------------------

முன் அட்டையில் உள்ளபடி

சிறப்புக் கட்டுரையாளர்கள்-

டாக்டர் கு.கணேசன், த.வி.வெங்கடேஸ்வரன், ஜி.கோபாலகிருஷ்ணன், நாராயணி சுப்ரமணியன், நா.முத்துநிலவன்.

மற்றும் 

துறை வகையான அறிஞர் பலரும்

முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

------------------

பக்கங்கள் -800  விலை ரூ.275

தற்போது சென்னையில் 

 புத்தக விழா “இந்துதமிழ்”  

அரங்க எண்கள்-56,57 / 540,541 ஆகியவற்றிலும்

          அந்தந்த ஊர்களின்  புத்தகக் கடைகளிலும்               

விற்பனைக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் கிடைக்குமிடம்

மேல ராஜ வீதி - சக்சஸ் புத்தகக் கடை

தொடர்புக்கு திரு அஜ்மீர் - 98420 18544 

------------------

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்

 மாணவர் மட்டுமின்றி,

பொது அறிவுத் தாகம் உள்ளவர்களும்,

தமிழ்ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும்

வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

-------------------

இப்படியான

கட்டுரையை எழுத அழைத்த 

“இந்து தமிழ் இயர்புக்-2024“ தொகுப்பாளர்களுக்கு,

குறிப்பாக, தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கு

எனது நெஞ்சார்ந்த நன்றி.

----------------------- 

ஏற்கெனவே,

“விகடன் இயர்புக்-2021”இல் வந்த

“இணையத் தமிழுக்கு 25வயது”

கட்டுரையைப் படிக்க விரும்பும் நண்பர்கள்

பின் வரும் இணைப்பைச் சொடுக்குக

https://valarumkavithai.blogspot.com/2021/01/blog-post.html

-------------------------------- 

வாங்கிப் படித்தோர்

தங்கள் கருத்துகளை எழுதினால் மகிழ்வேன்.

நன்றி நன்றி நன்றி

-------------- 

(இப்பதிவு, வலையேற்றப் பட்ட விவரம்-

07-01-2024 மாலை 7-15)