விகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை

 விகடன் இயர் புக்-2021இல்
எனது கட்டுரை


இணையத் தமிழுக்கு 25 வயது!
 ( முழுமையான கட்டுரை )
-- நா.முத்துநிலவன் --

ஐந்து திணைகளில் கிடந்த தமிழ் இப்போது ஆறு கண்டங்களிலும்.  ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலத்தில் கிடந்த தமிழ், இப்போது ஐந்து கண்டங்களில், ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஏசுபேசிய ஈபுரு மொழியும், புத்தர் பேசிய பாலி மொழியும், சாக்ரடீசின் கிரேக்க மொழியும், காளிதாசனின் சமஸ்கிருதமும் வழக்கிழந்து மறைந்து அல்லது அருகி விட்ட நிலையில், “என்று பிறந்தனள் என்றுணராததமிழ் அறிவியலின் நுனிமுனைக் கொழுந்தான கணினியிலும் வளர்ந்து வர, இணையத்தமிழுக்கு இப்போது 25வயது!

தொல்காப்பியரின் சங்கப் பலகையில் இருந்த பழந்தமிழ் என்பதைவிடவும், பில்கேட்சின் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் வளரும் இளந்தமிழ் என்பதே தமிழின் உண்மையான பெருமையாகும்!

------------------------------------------------------

2020இல் பலமாதங்கள் கரோனாதீநுண்மி- உலகையே அச்சுறுத்திய போதும், இணையத் தமிழால் இயல்புநிலை கெடாமல் இருந்தவர் பலலட்சம்பேர்! பல்வேறு துறைசார் குறிப்புகள், முகநூல், புலனம், ஜூம் செயலிகளில் தினமும் பகிரவும் வலையரங்கம் (webinar) வழியாகப் பார்க்கவுமாக, கரோனாவே கலங்கி நிற்கிறது!

தகவல் களஞ்சியம் (https://ta.wikipedia.org./),    மின்இதழ்கள் (E-Zines), வலைப் பக்கம்(TamilBlogs), முகநூல்(FaceBook), சுட்டுரை(Twitter), காணொலி (Video) முதலானவை, நாளொரு  வலையொளியும் (YouTube) பொழுதொரு  மின்னூலுமாக (E-Book), என்பதையும் தாண்டி ஒவ்வொருநாளும் ஆயிரம் புதுமைகளுடன் இணையத்தமிழ் வளர்ந்து வருகிறது. மற்றும் செயலிகள் (Apps) வழியாக நமது   செல்பேசி (CellPhone)களிலும் புலனம்(Whatsaap)  மற்றும் கிண்டில்போலும் புதிய இணையத்தமிழ்க் கதவுகள் புதிதுபுதிதாய்த் திறந்து கொண்டே இருக்கின்றன.

இணைய வளர்ச்சிக் குறிப்புகள் - தகவல் தொடர்புக்காக, 1957-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம், ஸ்புட்னிக்என்னும் செயற்கைக்கோளை ஏவியது. அமெரிக்கா, அர்பா’ (ARPA) என்னும் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கியது. 1969-இல் இங்கிலாந்தின்அர்பாநெட்’ (ARPANET)இல் சில பல்கலைக் கழகங்கள் இணைந்தன. 1975-இல் தனிமனிதக் கணினி (Personal Computer) கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகனான சிவா அய்யாத்துரை (படம்-1) 


https://vashiva.com/ -1978இல்-  மின்னஞ்சல் (E-Mail) கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்று, பிறகு முதல் மின்னஞ்சல் நிறுவனத்தைத் தொடங்கினார்! ‘டிம் நெர்னர்ஸ்-லீ’ (Tim Nerners—Lee) எனும் ஜெனிவா-ஆங்கிலேயர் 1991இல் முதல் இணையத்தை (‘www – world wide web’) அறிமுகப்படுத்தினார். இந்தியாவில், 1995இல் VSNL எனும் அரசு நிறுவனத்தின் வழி,  ஆறு நகரங்களில் அறிமுகமான இணையம், 1998இல் தனியாருக்கும் வழங்கப்பட, 2000இல் யாகூ (Yahoo) எம்.எஸ்.என் (MSN) நிறுவனங்கள் இணையச் சேவையைத் தொடங்கின. இதன்பிறகு இணையம் கிடுகிடுவென வளர்ந்துநிற்கிறது

 இணையத் தமிழ் வளர்ச்சிக் குறிப்புகள் –  

சிங்கப்பூர் அரசு, தமது நாட்டைப் பற்றிய தகவல்களை உலகமுழுவதும் கொண்டு சேர்க்க எண்ணி, தமிழிலும் இதனைச் செய்துதரும் பணியை அன்றைய சிங்கப்பூரின் கணினி அறிஞர் நா.கோவிந்த சாமியிடம் (படம்-2) ஒப்படைத்தது.


இவரது
சிங்கப்பூர் தமிழ் வெப் என்பது தான்,  உலகளாவிய அளவில்  வெளிவந்த முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும். 1995-இல் கணியன்எனும் பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளமாகும் (https://ta.wikipedia.org/s/17hb)  

தமிழும் கணிப்பொறியும்என்ற தலைப்பில் கணினித்தமிழுக்கான முதல் கருத்தரங்கு, 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5,6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ்ணன் தலைமையில், கணிப்பொறிப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தி முன் முயற்சியில் நடத்தப்பட்டது. தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினிக் கலைச் சொற்கள், விசைப் பலகை தரப்படுத்துதலை நோக்கமாகக் கொண்ட இக்கருத்தரங்கில் சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, தமிழ் எழுத்தாளர் சுஜாதா முதலானோர் பங்கேற்றனர். இதுவே இணையத் தமிழ் வளர்ச்சியின் திருப்புமுனை நிகழ்வாகும்!

தமிழ் இணைய மாநாடுகள்- 2000-ஆம் ஆண்டு மலேசியாவில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்” (‘உத்தமம்-https://www.infitt.org/), சார்பாக தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன
(1) 1997 –
சிங்கப்பூர், 

(2) 1999 - சென்னை

(3) 2000 – சிங்கப்பூர் 

(4) 2001 –மலேசியா,

(5) 2002 – அமெரிக்கா, 

(6) 2003 - சென்னை

(7) 2004 - சிங்கப்பூர்

2005-2008 ஆண்டுகளில் நடைபெறவில்லை  

(8) 2009 –ஜெர்மனி, 

(9) 2010 – கோயம் புத்தூர்,  

(10) 2011- அமெரிக்கா 

(11) 2012- சிதம்பரம்

(12) 2013  மலேசியா. 

(13) 2014  புதுச்சேரி

(14) 2015  -சிங்கப்பூர்

(15) 2016  திண்டுக்கல்,  

(16) 2017-கனடா, 

(17) 2018- கோவை

(18) 2019சென்னை என இம்மாநாடுகள் தொடர்கின்றன. டாக்டர் அருள்.வீரப்பன் 2020-21ஆம் ஆண்டுக்கான மாநாட்டுக் குழுவின் தலைவராவார்.

முரசு அஞ்சல்- – 80களின் இறுதியில், முரசு அஞ்சல் எனும் தமிழ் மென்பொருளை, மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் (படம்-3) வழங்கினார். 


இதில் எழுத்துரு
(font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பன இருந்தன. இது ட்ரான்ஸ் லிட்டரேஷன் முறை! அம்மா என்று எழுத Ammaa  என்று தட்டச்சு செய்ய வேண்டும். “யுனிகோடுஎனும் ஒருங்குறி எழுத்து வரும்வரை முரசு அஞ்சல்தான் கணினித் தமிழ் வளர்த்தது! பாமினி, செந்தமிழ் எழுத்துருக்களும் பரவலான புழக்கத்தில் பலஆண்டு இருந்தன. 2010-கோவை மாநாட்டின்போது, தமிழ் ஒருங்குறி (Unicode) அரசின் அதிகாரப் பூர்வ இணையத் தமிழ் எழுத்துரு ஆனது, இப்போதைய தமிழக அரசு கல்வித்துறையின் பாடநூல் அச்சில், பெரும்பாலும் ஒருங்குறியே பயன்படுத்தப் படுவதாக பாடநூல்கழக இணைஇயக்குநர் முனைவர் சங்கரசரவணன் தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆறாம்திணை இணைய இதழ் அது 1998! இன்றுள்ள இணைய வேகத்தை விட 2,000 மடங்கு வேகம் குறைவு! கட்டணமோ பல மடங்கு அதிகம்! ஆனாலும் தமிழ் மக்கள் இணைய மையம் சென்று கட்டணம் செலுத்தி ஆறாம்திண இணைய இதழை வாசித்தனர்.  உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயங்கள் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் அறிந்தனர். என்கிறார் அன்றைய ஆறாம்திணை எனும் முதல் தமிழ் இணைய இதழின் ஆசிரியர் அப்பணசாமி. “1999ஆம் ஆண்டே ஆறாம் திணை மாதந்தோறும் 10லட்சம் முறை (hits) வாசிக்கப் பட்டதுன்கிறார் ஜெர்மனி நா.கண்ணன் (“இணையத் தமிழ்ஆறாம்திணை மலர்-1999-பக்-22)

தமிழ் மரபு அறக்கட்டளை(https://www.tamilheritage.org/) ஜெர்மனி நா. கண்ணன் (படம்-4) முன்னெடுப்பில் தொடங்கப்பட்டது


உலகளவிலான தமிழர்களின் மரபார்ந்த சேமிப்பாகவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்ப தாகவுமான இணையத் தமிழ்ப் பணி
இன்றும் .சுபாஷினி (படம்-5) தலைமையில் சிறப்பாகத் தொடர்கிறது

தமிழ் இணையக் கல்விக் கழகம் http://www.tamilvu.org/) தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், 2001முதல் இணையத் தமிழ் வளர்க்கும் பணிகளைத்  .. செய்து வருகிறது. சான்றிதழ்க்கல்வி, மின்னூலகம், தகவல்தொகுத்தல், கணித்தமிழ் மன்றங்களைத் தொடங்குதல் முதலான திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன.

பாடநூல்களில் இணையத் தமிழ்மாணவர் இளைஞர் களை இணையத் தமிழில் ஈர்க்க, அரசுப் பாடநூல்களில் இணையத் தமிழ் இணைக்கப்பட்டது. முனைவர் பொன்னவைக்கோ (படம்-6)


கணிமொழி-C, தமிழ்-ஜாவா, HTML-அறிமுகம், பாடநூல் எழுதினார். பாடத்திட்டத்தில் இணைந்த கணினி, தமிழிலும் பரவலாகிவருகிறது. மதுரை மின்தொகுப்புத் திட்டம் (https://www.projectmadurai.org/ ) அரசு நிறுவன உதவி ஏதுமின்றித் தமிழார்வலர் களால் முனைவர் கே.கலியாண சுந்தரம் (படம்-7)

தலைமையில் 1998இல் தொடங்கப்பட்ட மதுரைத் திட்டம், இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது. வணிக நோக்கற்ற யாரும் பங்களிக்கலாம், பயன்பெறலாம்!

மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் உள்ளுர் முதல் உலகம் முழுவதும்  இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், பற்றிய விவரங்களை ஒரு குடைக்கீழ் தொகுத்து வரும் இச்சங்கம், தமிழக அரசு நிதியில் நடந்து வருகிறது. “உலகத்தமிழ்” (http://ulagatamil.in/) எனும் மின்னிதழ்களை வெளியிடுகிறது.

தமிழில் தகவல் களஞ்சியம் (https://ta.wikipedia.org./)  எதைப் பற்றிய தகவலையும் எளிதில் தரும் விக்கிப்பீடியா, தமிழில் 1,30,293குறுங்கட்டுரைகளுடன் உள்ளது. இது, கூகுளுடன் இணைந்து 2019இல் நடத்திய போட்டியில் தமிழர்கள் 2,959 கட்டுரைகள் எழுதி இந்திய மொழிகளில் தமிழை முதலிடம் பெறச் செய்துள்ளனர். இதற்கு, முக்கிய காரணமாக அமைந்தவர்கள் பாலசுப்ரமணியன்-வசந்தலட்சுமி தம்பதியர் (படம்-8).


இவர்கள் இருவரும் 899 கட்டுரைகளும் தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம் 250 கட்டுரைகளும் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. எனினும் ஆங்கில விக்கிப்பீடியா அறுபதுலட்சம் கட்டுரைகளுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. (https://en.wikipedia.org/wiki/Category:Stub_categories) எனவே, விக்கி மாணவர்களிடம் சென்றால் இணையத்தமிழ் வளரும் என்கிறார் இந்த ஒருங்கிணைப்பாளர் ராசாராமன் () நீச்சல்காரன் இவரே இணையத் தமிழுக்கு,வாணி(http://vaani.neechalkaran.com/) எழுத்துப்         பிழைதிருத்தியைக் கண்டு தந்தவர்.  

சங்க இலக்கியத்தில் ஒரு சொல்லைப் பற்றிய சந்தேகம் வருகிறது, அல்லது அதே சொல் வேறு எங்கெங்கே வருகிறது என்று ஆய்வு செய்வோர்க்கு உதவ ஒரு செயலி உள்ளது. http://play.google.com/store/apps/details?id=jeyapalasingham.SangamSearch  இணையத்தமிழ் ஆய்வுக்கு இணையமே உதவுகிறது எனில் வேறென்ன வேண்டும்?

இணைய இதழ்கள் (E-Zines) சுமார் 190 தமிழ் இதழ்கள் இணையத்தில் உள்ளன. இதில் சுமார் 50 இணையத்தில் மட்டும் வெளிவருபவை. இவை எளிதாக நாடுகளை இணைக்கின்றன. “இணைய எழுத்தாளர்எனும் ஒரு புதிய வரவு கிடைத்துள்ளது. தமிழம்https://thamizham.net/,  பதிவுகள்https://www.geotamil.com/,திண்ணை-http://thinnai.com/,  ஊடறு-http://www.oodaru.com/, கீற்று-http://www.keetru.com/ வல்லினம்-http://vallinam.com.my/ என, பற்பல மின்னிதழ்கள் தமிழ்மரபின் தற்கால அடையாளங்களாக உள்ளன.

அமேசான் கிண்டில் சுமார் 30,000 தமிழ்-நூல்கள் உள்ளன. கையடக்கக் கிண்டில்கள் பல்லாயிரம் நூல்களை நம் கையடக்கப் பயணத்தில் சுமந்துவருகின்றன!. இப்போது மின்-கதைசொல்லி எனும் புதிய வரவும் உள்ளதால், பொன்னியின் செல்வன், வேள்பாரி போலும் பெரிய நாவல்களும் கேட்க” கிடைக்கின்றன, குழந்தை களுக்கான பாடல்களும் கிடைக்கின்றன. பிடிஎஃப் எனும் கோப்புவடிவத் தமிழ்நூல்கள் பெரிய நூலகத்துக்கு மாற்றாக வருகின்றன!

    குரலெழுதி (Voice Writer) – தட்டச்சில் தடுமாறினால் (அல்லது சோம்பற்பட்டால்) குரல்வழி அச்சிடும் வேலையைச் செய்கிறது https://www.speechtexter.com/ செயலிவழி, செல்பேசிக் குறுந்தகவல், புலனப் பதிவுகள் மற்றும் கணினிப் படைப்புகள் என அனைத்தும் எளிதாக நடப்பதால் இதன்வழியும் இணையத் தமிழ் வளர்கிறது!

 முகநூல்(FaceBook), இளைஞர்களைக் கவரும் இணைப்பாக உள்ள இதன் பயன்பாடு தமிழிலும் வளர்ந்து வருகிறது. பல லட்சம் பக்கங்கள் தினமும் பகிரப் படுவதோடு, அரசியல், சமூக மாற்றத்தில், சத்தமில்லாச் சாதனைகளும் நடக்கின்றன. 2015-சென்னைப் பெருவெள்ளம், 2017-மெரினாப் புரட்சி, 2018-கஜாப்புயல் ஆகிய தமிழக நிகழ்வுகளில் முகநூலின் பயன்பாடு அளப்பரிது. ஆயினும் இதன் கட்டற்ற தன்மையைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்தும் இதிலுள்ளதை மறுக்கவியலாது.

    சுட்டுரை(Twitter) தமிழர்கள் தமிழில் எழுதும் சுட்டுரைக் கணக்குகள் 2 லட்சத்தைத் தாண்டும் என்பதோடு, அரசியல் தலைவர்களின் அறிக்கை வெளியாகும் இடமாக கிட்டத்தட்ட ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் பொது ஊடகமாகி வருகிறது.

  வலையொளி (YouTube) தமிழில் ஏராளமான வலைக்காட்சிகள் உள்ளன. குழந்தை முதல் பெரியவர் வரை, தனித்திறன் வளர்க்கும் ஊடகமேடையாக வளர்ந்துள்ளது  கரோனாவில் முடங்கிய சிலலட்சம் தமிழர்கள் விளம்பர வருவாய் வருவதைப் பயன்படுத்த, வலையொளி தொடங்கி யிருப்பதும் உண்மை! இதன் கட்டுப்பாடற்ற தன்மையால் குப்பைகளும், சாக்கடைகளும் சேர்ந்திருப்பது அதனினும் பேருண்மை நம் குழந்தைகளை இக்குப்பை நஞ்சிலிருந்து காப்பது நமது அரசுகளின் கடமை.  

      மின்னூல்(E-Book) freetamilebooks.com, http://www.ulakaththamizh.in/book_all, http://dvkperiyar.com/?page_id=17537,http://community.ebooklibrary.org     

அரிதான நூல்களைத் தொகுக்கும் தளங்கள்  

http://tamildigitallibrary.in,   http://www.noolaham.org/, https://archive.org முதலான பல உள.

   புலனம்(Whatsaap) கணக்கிட முடியாத அளவில், அமைப்புகள் சார்ந்தும், நண்பர்கள் இணைந்தும் புலனக்குழு, கிராமியக்குழு(டெலிகிராம்) போன்றவை நடத்துகின்றனர் இதில் நல்லநூல் அறிமுகம், இலக்கிய-சமூக-அரசியல் விவாதங்கள் ஜனநாயகத் தன்மையுடன் நடப்பது அரசியலையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை எனினும் அதிகமாகப் புரளி(FakeNews)கிளப்பும் பணியும் இதில் நடப்பதை மறுப்பதற்கில்லை!

    இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ் இணையக் கல்விக் கழகம், கல்லூரி தோறும் கணித்தமிழ்ப் பேரவை அமைத்து வருகிறது.‘புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம்’ 


மற்றும் தேனி தமிழ்ச்சங்கம் போன்ற தன்னார்வ அமைப்புகளும் இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன. இதுபோலும் பயிற்சிகளில் முனைவர் நா.அருள்முருகன், முனைவர் தமிழ்ப்பருதி, சிவ.தினகரன், என்னாரெசுப் பெரியார், முனைவர்.மு.பழனியப்பன், முனைவர்மு.இளங்கோவன், திண்டுக்கல் தனபாலன் முதலான தமிழார்வலர்களின் தன்னார்வப் பணி பாராட்டுக்கு உரியது

பள்ளி கல்லூரிகளில் இணையத் தமிழ்ப் பயிற்சியை இலவசமாகத் தருவதோடு, மாணவர் கணினியில் தமிழ் மென்பொருள்களை இணைத்துத் தருவதும் அவசியமாகும்.

    வலைத்தளம்-(www.com) எஸ்.இராமகிருஷ்ணன் முதலான பிரபல எழுத்தாளர்கள் இன்றும் இணைய வலைத் தளத்தில் எழுதி, பலலட்சம் வாசகர்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

     வலைப்பூ எனும் வலைப்பக்கம்-(TamilBlogs), கணினியில் ஜி.மெயில் மின்னஞ்சல் வைத்திருப்போர் அனைவர்க்கும் ஓர்      -அளவற்ற- பக்கத்தை கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதை எழுத்தாளர்கள் தன் சொந்தப் பத்திரிகை போலவே பயன்படுத்தலாம். இந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 15,000பேர் தமிழில் வலைப்பூக்கள் எழுதிவருவது குறிப்பிடத் தக்கது. இந்த வலைப்பூவின் வயதோ இருபதுக்குள்தான்! கடந்த ஐந்தாண்டுகளாகஆண்ட்ராய்டு- செல்பேசியில் ஒருங்குறி கிடைப்பதால், இது இப்போது இன்னும் வேகமாகப் பரவி வருகிறது.  தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா என, பிரபல எழுத்தாளர்களும் வலைப்பக்க எழுத்தாளராக வளர்ந்தவர்களே என்பது வளரும் எழுத்தாளர்க்கு உற்சாகம் தரும்.

 லினக்ஸ் - பொதுவாக  மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.  விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. 1991 செப்டம்பர் முதல்கட்டற்ற மென்பொருள்லினக்ஸ்  இணையத் தமிழ் ஆர்வமுள்ள அனைவரின் பங்களிப்போடு வளர்கிறது.

    இணையத் தமிழ் பெரும்பாலும் தனித்தமிழாக வளர்வது தமிழ், இணையத்தில் முன் எப்போதையும் விட ஜனநாயகமாகியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்!  யார் வேண்டுமானாலும் என்ன வேண்டு மானாலும் எழுதலாம் என்பது முன்எப்போதும் கிடைத்திராத சுதந்திரம்! இதுதான் இதில் முக்கியமான செய்தி! இதைப் புரளிகிளப்பும் இடமாக்குவதை தடுக்க முடிந்தால் வளர்ச்சி பெருகுவதுறுதி

   எதிர்காலத்தில் இணையத்தமிழ் இந்திய மொழிகளுள் முன்னோடியாக இருக்கும். இணையத் தமிழ் குறித்து மட்டும் பல தமிழ் ஆய்வு மாணவர்கள் உருவாகப் போவது உறுதி. தமிழ் எழுத்தாளர்கள் எண்ணிக்கை  பலமடங்கு உயரும்.  தமிழ் எழுத்தில்லாமல் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதும் பெரும் கூட்டம் உருவாகும். சந்தி  இலக்கணம் அறவே வழக்கொழிந்து போகும் அச்சமுள்ளது  இதுபற்றி அரசும் தமிழார்வலர்களும் திட்டமிடுவது மிகவும் அவசியமாகும். தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் நடத்தும்  https://www.sorkuvai.com/ தளத்தின் வழி இதனைத் தொடரலாம். இணைய மாநாடுகளில் (படம்-10) திட்டமிட்டு, இளைஞர்கள் துணையோடு இது நடக்கட்டும்.

                             https://www.unicodeconference.org/bios.htm 

இதுதான் எதிர்காலத் தமிழ்வளர்க்கும் பணி.

  இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்குமான வித்தியாசம், கணினி தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்குமான வித்தியாசமாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை இதை நமது அரசும் சமூகஆர்வலர்களும் கவனத்தில் கொண்டு அதற்கேற்பத் திட்டமிடுவது காலத்தின் கடன். நம்கடன் பணி செய்வதே!      

------------------------------------------------------------------------------------- 

----------------------------------- 

(கட்டுரை சுருக்கி வெளியிடப்பட்டுள்ளது)

 விகடன் பதிப்பகத்தார்க்கும், 

இயர்புக்-2021  ஆலோசகர் 

முனைவர் சங்கர சரவணன் 

அவர்களுக்கும்  

கரோனாக் கால வலையரங்க நிகழ்வில்,

இந்தத் தலைப்பில் என்னைப் பேச வைத்து, குறிப்பெடுக்கத் தூண்டிய 

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தினர்க்கும்

எனது நன்றி

----------------------------------------- 

    விகடன் இயர் புக் – பற்றி விகடன் வெளியிட்ட         

இணைய விளம்பரம்

ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர் புக் போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் தாய்மார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகிறது.

2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் விகடன் இயர் புக்அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்து.

அந்த வரிசையில், இந்த ஆண்டும் அறிவை மெருகூட்டும் அனைத்துத் தகவல்களின் தொகுப்பாக தரமுடன் விகடன் இயர் புக்-2021 தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-ல் நூற்றாண்டு கண்ட ஆளுமைகளான சுரதா, மருதகாசி, ஜெமினி கணேசன், கு.மா.பாலசுப்ரமணியம், தி.ஜானகிராமன் ஆகியோர் குறித்த சிறப்புக் கட்டுரைகள்.

இந்தியச் சட்டங்கள்-2020, நோபல் பரிசுகள்-2020 குறித்த விளக்கமான கட்டுரைகள், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அதிபர் தேர்தல், லெபனான் வெடிவிபத்து, சங்கச் சுரங்கம், வள்ளுவத்தில் நடையழகு, இணையத் தமிழுக்கு வயது-25, இந்திய பாதுகாப்பு அதிகாரி பதவி, இந்தியா பட்ஜெட்-2020, எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி., இந்திய-தமிழக முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... என அரிய செய்திகளின் தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது.                                    (சிவப்பு மை என் கட்டுரை என்பதால் நான் இட்ட சிவப்பு – நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காக மற்றபடி எல்லாக் குறிப்புகளுமே கருப்பில்தான் உள்ளன! – நா.மு.)

மேலும், இந்திய விளையாட்டு ரத்தினங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை, யு.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, யு.பி.எஸ்.சி தேர்வு வினா-விடை, யு.பி.எஸ்.சி தேர்வு நான்காம் தாளுக்கு நச்சென்று நான்கு செய்திகள், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு... இப்படி போட்டித் தேர்வர்களுக்குத் துணைபுரியும் அனைத்துத் தகவல்களும் இதில் அணிவகுத்துள்ளன. மொத்தத்தில் உங்கள் அறிவுத் தேடலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் இது! படித்தறிந்து உங்கள் அறிவுப் பார்வையை விசாலமாக்குங்கள். இயர் புக் பற்றிய உங்கள் கருத்துகளை ‘books@vikatan.com’ என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இணைய இணைப்பு - https://books.vikatan.com/index.php?bid=2541

---------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

 1. தொகுப்பு மிகவும் சிறப்பு...

  அடியேனை குறிப்பிட்டது மிக்க நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான தகவல்கள். மிக்க நன்றி. 

  பதிலளிநீக்கு
 3. மிக ஆழமான கட்டுரை..ஒவ்வொரு பத்தியும் ஒரு வரலாற்றின் விதை..தேர்ந்தெடுத்த தகவல்கள்...

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள தோழருக்கு, வாழ்க வளமுடன். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழுக்காகவும், சமூகத்திற்காகவும் தங்களின் அர்ப்பணிப்பு அளவிடமுடியாதது. தங்களின் புதிய புத்தகம் இன்னும் வெளிச்சமாய் அமையும். மிகுந்த பெருமையுடன் கணேஷ்.

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள தோழருக்கு, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தங்களின் புதிய புத்தகம் இன்னும் வெளிச்சம் பாய்ச்சும். மெல்ல தமிழ் இனி ஓங்கும் பல மேற்கு மொழிகள் நம் திசை நோக்கும். வாழ்க வளமுடன். உங்கள் அர்ப்பணிப்பு அளவிடமுடியாதது. கணேஷ்.

  பதிலளிநீக்கு
 6. krishnamoorthyganesan9@gmail.comவெள்ளி, ஜனவரி 22, 2021

  மெல்ல தமிழ் இனி ஓங்கும். மேற்கு மொழிகள் நம் திசை நோக்கும். கலைச் செல்வங்கள் யாவும் ஒளி வீசும் எட்டு திக்கும்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஐயா. இப்பொங்கலுக்கு வெளியான செல்லினம் சொல்வன் text to speech ஐயும் இங்கே பதிகிறேன்.

  https://sellinam.com/archives/2734

  பதிலளிநீக்கு
 8. மெல்ல தமிழ் இனி ஓங்கும். மேற்கு மொழிகள் நம் திசை நோக்கும். விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு உழவிட்டுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 9. என்னைப் பற்றிக் கூறியதறிந்து மகிழ்கின்றேன். இவ்வாறான ஊக்கமே என்னை மென்மேலும் எழுத வைக்கிறது. நன்றி.
  இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்குரிய தரவுகளைக் கொண்டமைந்துள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 10. தகவல்கள் அனைத்தும் வியக்க வைக்கின்றன..நன்றி! நன்றி!!

  பதிலளிநீக்கு
 11. மிகச் சிறப்பான கட்டுரை ஐயா! நீங்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க இணைய மாநாட்டில் ஏறக்குறைய இதையே ஒரு நேரலைப் பொழிவாக வழங்கியிருந்தீர்கள். அப்பொழுதே நான் கேட்டு அசந்தது இது! ஒரே வீச்சில் நான்காம் தமிழின் வரலாற்றைத் தொடக்கம் முதல் இற்றை நாள் வரை மணிச்சுருக்கமாக எடுத்துரைக்கும் ஆக்கம் இது. இப்பொழுது விகடன் ஆண்டு நூலும் இதை வெளியிட்டிருப்பதால் இது சரியான இடத்துக்குச் சென்று சேரும். இணையம், கைப்பேசி ஆகியவற்றின் வழி நம் மொழியை இன்று தமிழ் உலகமே பயன்படுத்தி வருகிறது. ஆனால் தங்கள் மொழியின் இத்தனை பெருமண்ட வளர்ச்சிக்கு வித்தூன்றிய, உழைத்த பெருமக்களின் பெயராவது இத்தனை கோடித் தமிழர்களில் 10% பேருக்காவது தெரியுமா என்பது கேள்விக்குறியே! அந்தக் குறையைத் தீர்க்கும் இப்படைப்புக்காக உங்களுக்கும் இதை ஆண்டு நூலில் சேர்க்க முன்வந்த விகடனுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. இணையத் தமிழுக்கு 25 வயது

  இது கட்டுரையா?
  இணையத் தமிழின் காவியமா?
  என்ற சந்தேகமே எழுகிறது.
  அந்த அளவிற்கு
  இந்தக் கட்டுரையில்
  இணையத் தமிழின் செய்திகள்
  எண்ணற்றவை உள்ளன.
  நாம் தமிழனாய் மட்டும்
  இருந்தால் போதும்
  நம் கண்முன்னே
  மிக அதிகமான
  இணையவழியில்
  இணையதளமும் வலைப்பக்கமும் மின்னிதழும் காணக்கிடைக்கின்றன.
  இன்றைய இளம் தளம் தலைமுறையினர் எழுத்துலகில் வருவதற்கு வலைப்பக்கம் இருந்தாலே போதும் எனவும் அதற்கு உதாரணமாக தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களை சொன்னதும் சிறப்புங்க ஐயா.
  தமிழ் இணையத்தில் வருவதற்கு பலரின் தமிழ் ஆர்வம், தமிழ்ப்பற்று மற்றும் அவர்களின் கடின உழைப்பேக் காரணம் என சொன்னவிதம் சிறப்பு ஐயா.
  முகநூல், புலனம், சுட்டுரை, வலையொளி போன்ற சமூக ஊடகங்களிலும் நம் தமிழ்மொழி வளர்ந்து வருவதை எடுத்துரைத்ததும் சிறப்பு ஐயா.
  இந்தக் கட்டுரை வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னுள் ஊன்றிவிட்டது.
  அறிவார்ந்த நம் தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டிய கட்டுரை.
  தொடர்ந்து பல கட்டுரைகளை
  இந்த தமிழ்ச்சமூகத்திற்கு வழங்குங்கள் வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 13. தமிழ் கணினி வரலாறு குறித்த நல்ல, விரிவான கட்டுரை. பாரட்டுகள். கட்டுரை முழுமையாய் இருக்கும் பொருட்டு, எனது ஆரம்ப கால செயல்பாடுகள் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.1) 1994 ஆம் ஆண்டில் நான் எனது Mylai Tamil font தமிழ் எழுத்துருவை விண்டோஸ், மக்கிண்டாஷ் மற்றும் லைனக்ஸ் கணினிகளில் சகமுறையில் இயங்கும் வழி உருவாக்கி, அதனை உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கத் தொடங்கினேன் (முத்து நெடுமாறன் இதே முறையில் அவரது இணைமதி எழுத்துருவினை இலவசமாக வினியோகிக்க ஆரம்பித்தார்); 2) எனது தமிழ் மின் நூலக வலைத்தலம் (https://www.tamilelibrary.org) 1995ல் தொடங்கப்பட்டு இன்றும் இயங்கிவருகின்றது. இதன்வழி இலவசமாக தமிழ் மின்புத்தகங்களை முதன்முறையாக இணையம் வழி விநியோகிக்கப் பட்டது. இதுவே பின் மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் ஆரம்பிக்க அடித்தளமாக அமைந்தது; 3)1995 ஆம் ஆண்டில் நான் தமிழ் பத்திரிகைகளான கணையாழி மற்றும் நக்கீரன் ஆகியோரை இணையவழி மின்பதிப்புகளாக வர உதவினேன். முத்து நெடுமாறன் குமுதம் மற்றும் ஆனந்தவிகடன் இணைய வழி வர வழிசெய்தார். கு. கல்யாணசுந்தரம், ஸ்விட்சர்லாந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம். தங்கள் பணிகள் பற்றி நிறைய செவிவழித் தகவல் அறிவேன். தாங்களே முன்வந்து தந்த தகவல்களை இனி வரும்கால எனது படைப்புகளில பயன்படுத்துவேன். தங்கள் பணிகள் தமிழ்வளர்க்கும் பெரும்பணிகள் தொடர்க. வணக்கம்

   நீக்கு
 14. வணக்கம் ஐயா. நல்ல கட்டுரை. முரசு அஞ்சல் 1985ஆம் ஆண்டு முதன் முதலில் வெளிவந்தது. 80களின் மத்தியில் என்பதே சரியானதாகும். யூனிகோடு குறியீட்டைக் கொண்ட எமது எழுத்துருகள் 1999ஆம் ஆண்டு வெளிவந்த விண்டோசு 2000 இயங்குதளத்திற்காக முரசு அஞ்சலில் சேர்க்கப்பட்டன. நன்றி.

  பதிலளிநீக்கு
 15. இதில் முக்கியமான சில விட்டுப்போன விடயங்கள்:
  1. தமிழைக் கணினித்திரையில் கண்டு பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்தன. அதில் மிக முக்கியமானது எம்.எஸ்.டாஸ் இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டு பின் மைக்ரோசாஃப்ட் ஜன்னல் (விண்டோஸ்) தளத்தில் இயங்கிய ஆதமி எனும் எழுதி. இதை உருவாக்கியவர் கனாடா குயூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர். அதே காலத்தில் கு.கல்யாணசுந்தரம் மயிலை எனும் முறையில் தமிழை கண்ணியில் கண்டார். ஒரு நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து விண்டோஸ் தளத்தில் செயல்பட்டனர். ஐரோப்பாவில் செயல்பட்ட இருவர் கு.கல்யாணசுந்தரம், நா.கண்ணன். கனடாவில் சிநிவாசன்.
  சிங்கையில் நா.கோவிந்தசாமி. மலேசியாவில் முத்துநெடுமாறன். சென்னையில் விகடன், கல்வி, போன்ற நிறுவனங்கள் மெக்கிண்டாஸ் கணினி உருவாக்கிய பல தமிழ் எழுத்துக்களை வெவ்வேறு குறியீடுகளில் கணினிக்குள் அச்சிட்டனர். தமிழ்க் கணினி வரலாறு இன்னும் முறையாக எழுதப்பட வேண்டும். இக்கட்டுரை அத்திசையில் முக்கிய மைல்கல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைவெள்ளி, ஜூன் 16, 2023

   அய்யா வணக்கம். தங்கள் கருத்துகளுக்கு நன்றி. உண்மையில் தாங்கள் இணையத் தமிழோடு வளர்ந்தவர், இணையத் தமிழை வளர்த்தவர்களில் ஒருவர் என்பதால்தான் இவ்வளவு தகவல் தருகிறீர்கள். நான் 2000ஆம் ஆண்டில்தான் கணினிக்குள் வந்து, நானே கற்று, எங்கள் கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள் முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் வைத்து, இணையத் தமிழ்ப்பயிற்சியை 4ஆண்டுகள் தந்தோம். இணையத் தமிழ் வரலாற்றை எழுத, தாங்கள்தான் தகுதியானவர், எழுத வேண்டுகிறேன். தங்கள் தகவலுக்கும், பாராட்டுக்கும் எனது நன்றியும் வணக்கமும் அய்யா.

   நீக்கு
  2. தாங்கள் இவ்வளவு ஈடுபாட்டோடு இருப்பதால்தான் பதிலளிக்கத் தோன்றுகிறது. முத்து நெடுமாறன் அளித்த இணைமதி எனும் எழுத்துருவின் உதவியால்தான் தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ்.நெட் இயங்கியது. அதுவே பின்னால் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகக் காரணமாயிருந்தது. இணைமதிக்கு முன்பு நளினம் என்றொரு எழுத்துரு இன்னொரு மலேசியரால் உருவாக்கப்பட்டது (பெயர் மறந்துவிட்டது). நானும் மெக்கிண்டாஸ் கணினிக்கு பிட்மேப் வடிவில் ஒரு எழுத்துரு உருவாக்கி முத்து நெடுமாறன், கு.கல்யாணசுத்தரத்துடன் இணைந்து கேட்போருக்கெல்லாம் வழங்கினோம். புதிய பார்வை ஆசிரியர் பாவைச் சந்திரனை சந்தித்த போது அவர் மல்லிகை போன்ற பல எழுத்துருக்கள் மெக்கிண்டாஷ் இயங்கு தளத்தில் பத்திரிக்கை அச்சிடு தொழிலில் இருப்பதாகச் சொன்னது ஆச்சர்யமளித்தது. எனினும் விகடன், கல்கி போன்ற வணிக இதழ்கள் ஆளுக்கொரு தட்டச்சு குறியீட்டு முறையில் தமிழை பதிப்பித்துக் கொண்டிருந்தனர். மேனாள் முதல்வர் கருணாநிதியின் ஈடுபாட்டால் 1990 ஒருங்குறி தட்டச்சு முறை இருந்த சில வழமையான முறைகளோடு செந்தரமாகியது. இப்போது எல்லோரும் ஒருங்குறிக்கு வந்துவிட்டோம். அது தமிழ் கணினி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதுபோல் இன்னும் நிறையச் சொல்வதற்குள்ளது!

   நீக்கு