சன் டிவி சம்பாதிக்க சமூகம் சீரழிய வேண்டுமா?

மனிதர் எதைக்கண்டு அஞ்சினரோ, அதையே வணங்கத் தொடங்கினர் என்பது வரலாறு. 
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.


“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து” என்று தேவாரம் பாடியதில் என்ன தெரிகிறது? மனிதர்கள் புலித் தோலை ஆடையாக உடுத்தியிருந்த காலத்தில் தொடங்கி, சிவன் எனும் தெய்வம் வழிபடப்படுகிறது என்று தெரிகிறது. தனது தெய்வத்திற்கு, தான் விரும்பியதையே தன்னால் முடிந்ததையே கொடுத்தான் உடுத்தினான் அதை வழிபட்ட காலத்து மனிதன்! வழிவழி வந்த வரலாறும் உலகம் முழுவதும் இப்படித்தான்.

இப்போதும் தாத்தா திவசத்திற்கு, அவருக்குப் பிடித்த பட்டைச் சாராயம், சுருட்டு வகையறாக்களை வைத்துப் படைத்து மகிழும் கிராமத்து மரபுகள் இதைத்தான் சொல்கின்றன. ஆனால், அதில் மதச்சார்பற்ற, குலசாமிகள்தான் பெரிதும் இருந்தார்கள் என்பதே சமூகவியல் ஆய்வாளர்கள் தரும் உண்மை! அதில் உயர்ந்தது, தாழ்ந்தது எனும் பேதம் கிடையாது, முன்னோர் வழிபட்டது எனும் மரபு மட்டுமே பேணப்படும் நாகரிக வரலாறு இன்றுமுண்டு!

ஆனால், இவை பற்றிய அறிவியல் விளக்கம் கிடைத்தபோது இவற்றிலிருந்து விடுபடவும் செய்தனர் ஒருபகுதி உலக மக்கள்!
உலக அளவில் சாக்ரடீஸ், இங்கர்சால், மார்க்ஸ் போன்றோரும், இந்திய அளவில் –வேதகால பிரகஸ்பதி, பழங்காலச் சாங்கியர், புத்தருடன், 20ஆம் நூற்றாண்டில் அயோத்தி தாசப்பண்டிதர், சிங்காரவேலர், அம்பேத்காரும், பூலேவும் தந்தை பெரியாரும் போன்ற சமூகவியல் அறிவுஜீவிகள் மற்றும் பொதுவுடைமை, திராவிட இயக்கத் தலைவர்களும்  சொல்லிச் சொல்லி வளர்த்த பகுத்தறிவுக்கு, திராவிடப் பாரம்பரியத்தில் வந்த சன்-டிவி இப்படி துரோகம் செய்வது ஏன்? வணிகம் என்று சொல்லிவிட்டால் அதில் எந்த நேர்மையும் இருக்கக் கூடாதா?  தமது கல்லாவை நிரப்ப, (டிஆர்பி ரேட்டை உயர்த்த) அறியாத மக்களை மீண்டும் மீண்டும் பொழுதுபோக்கு எனும் பெயரில் அறியாமையின் ஆழத்தில் தள்ளி கொஞ்சம் கூட அதிலிருந்து மீண்டுவிடாமல் மூச்சுமுட்டவைக்கும் இந்தக் கேவலத்திற்குப் பெயர் கலையா? இதுதான் வணிகமா? வெட்கம்கெட்ட இந்த வேலைக்குப் பெயர் கலைத்தொண்டா? இப்படிச் சம்பாதிக்க வேறு பொறுப்பான வழியே இல்லையா? 
அறிவியல் ரீதியாகப் பெரியம்மை ஒழிக்கபட்டு விட்டாலும்,
“நந்தினி”யில் பெரியம்மை வந்த மருத்துவர் (?)

ஆத்தாவே அந்த பெரியம்மையை ஏற்றுக் கொள்ளும்
பக்திப் பரவசமூட்டும் பகுத்தறிவுக் காட்சி

ஆத்தா மனசுவச்சு சரியான மருத்துவர்(அட அட..!)
இங்க ஆத்தா யாரு தெரியுமில்ல.. குஷ்பு சுந்தர் சி. எப்புடீ??!
ஆபாசத்தை விடவும் 
மூடநம்பிக்கை மிகவும் ஆபத்தானது!
இணையம் முழுவதும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் ஆபாசம் அதைப் படிக்கும் விடலைக் கிழங்களைத்தான் பாதிக்கிறது. அதைத் தடுக்க முடியாதா? அல்லது அதுவும் கூட ஒரு வகையில் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து இளைஞர்களை மடைமாற்றி மழுங்கடிக்கும் சூழ்ச்சி அரசியலன்றி வேறென்ன? கையாலாகாத அரசுகள் இதைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் ஓர் அரசியல்தான்!

ஆபாசம்கூட ரகசியநோயாகவே இருக்கிறது. ஆனால் இவர்களின் மூடநம்பிக்கை பரப்பும் நோய் பல தலைமுறைகளையே சிந்திக்க விடாமல், குழந்தையிலிருந்தே அச்சத்திலும் அசட்டு பக்தி எனும் பெயரிலும், மந்திர-தந்திரத்தையும் மந்திரவாதிகளையும் நம்புகிற மடத்தனத்திலும் மறைமுகமாக இந்துத்துவாவைப் பற்றவைக்கும் கேடுகெட்ட வேலையிலும் எத்தனை எத்தனை விஷ வித்துகள்!

மனிதர்கள் அச்சத்தில், குழப்பத்தில் இருந்தால் நல்லது என்று நினைத்தவர்கள் அவற்றுக்குக் கதை-புராணம்-காவியம் எனப் பலப்பல கற்பனை வடிவங்களைக் காலந்தோறும் தந்து வந்தனர்.  அல்லது கற்பனை வறட்சியாளர்க்குக் கதை பண்ணுவது எளிதாக இருந்ததால், பேய்க்கதைகள் உலகம் முழுவதும் பரவிவந்தன!

பாம்புக்கும் பேய்க்கும் சண்டைங்கோ!
(சாலையில் பாம்பை வைத்து வித்தைகாட்டும்
பரதேசி நிலைக்கு வந்தது சுந்தர் சியா?   சன் டிவியா?)
தமிழ்த் திரையுலகில் மன்னர் கதைகளுக்குப் பிறகு சமூகப் படங்கள் வந்தன. காதல் கதைகளுக்கு எந்நாளும் வரவேற்பு இருக்கும்! அதையே “பழிவாங்கும் காதல் கதை” வடிவத்தில் தொடங்கிய பேய்க்கதைகள் “திரில்லுக்குத் திரில்லும் ஆச்சு, கவர்ச்சிக்குக் கவர்ச்சியும் ஆச்சு” என்று பற்றி எரிக்கின்றன நம் பரம்பரைகளை என்பது கண்டு பதறவில்லையா மனசு?

இன்றும் உலகெங்கும் பேய்க்கதை வணிகம் உறுதிமிக்க பெரும் வருமானமாக உள்ளது. பாமரர் மீதான இரட்டைச் சுரண்டலிது! (மூளையையும், பணத்தையும் ஒரே நேரத்தில் காலி செய்வது!)

ஆங்கிலத்தில் “எக்ஸாஸிஸ்ட்”, “ஈவில் டெட்” போலப் பெரிய பட்டியலே உண்டு! ஆனால், என்ன ஒரு மாற்றம் நடந்ததெனில், அதில் கொஞ்சம் நவீனத்தைக் கலந்து “ஜாஸ்” போல, “ஸ்பைடர் மேன்” போல எடுத்தும் வெற்றிபெற்றனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் “ஈ.டி.”, ஜாஸ், போல நவீன அறிவியல் கலந்த படங்களும் நிறைய வந்தன. இவை முற்றிலும் கற்பனை என்பதையும் அவை உணர்த்தியதால் உலகெங்கும் பிரபலமாயின

அச்சும், திரையும் கருப்பு-வெள்ளையாய் இருந்தவரை பேய்கள் வெள்ளைச் சீருடையே அணிந்தன! இவற்றில் வண்ணம் வந்ததும் பேய்களுக்கும் பளப்பளா வண்ண உடைகள் கிடைத்துவிட்டன! 
அடடா! என்ன அழகான பேய்!
இது கவர்ச்சிப் பாம்புப் பெண்!
அதுவும் சன் டிவி காட்டும் (நாகினி, நந்தினி தொடர்களின்) கதா நாயகப் பேய்கள் அழகழகான வண்ண வண்ணக் கவர்ச்சி உடை அணிந்த பேய்களாகவும் பாம்பாகவும் மாறி மாறி வருவது என்ன கடைந்தெடுத்த கயமைச் சுரண்டல்! (வரலாற்றுப் படமாக எடுத்த போது வசதியாகப் பெண்களுக்கு மேலாடையே இல்லாமல் பார்த்துக் கொண்ட திரைப்படங்கள், பேயாக வந்தாலும் கவர்ச்சி குறையாமல் பார்த்துக் கொண்டதைக் கவனிக்க வேண்டும்) இவர்கள் பேயையும் கூடக் கவர்ச்சியாக்கும் உத்தி மகாகேவலம்! சாலையில் கிடக்கும் ஆனாதைப் பிணத்தைக் காட்டி “அய்யா அனாதைப் பிணம்யா! அடக்கம் பண்ணக் காசு போடுங்கய்யா” என்று வசூல் செய்து சுருட்டிக்கொண்டு கம்பிநீட்டும் நகரத்துச் சாமர்த்தியத் திருடனுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

தமிழில் மசாலப்படங்களை, நகைச்சுவைப் படங்களைக் கொடுத்துப் புகழ்பெற்ற சுந்தர்.C அரண்மனை எனும் பேய்ப்படம் தந்த பெரும் வெற்றியை அடுத்து, அரண்மனை-2 எடுத்துப் பெருமை சேர்த்தார்! இப்போது அறிவாலயத்திலிருந்து பகுத்தறிவைப் பரப்பிவரும் சன் தொலைக்காட்சியில் “அரண்மனை-3” என்று போடாமலே “நந்தினி” என்றொரு பேய்-பாம்பு இணைந்த படத்தொடரைத் தயாரித்து மிக அழகான –அருவருப்பான?- தொழில்நுட்பத்துடன் தந்துவருகிறார்.
அதிலும் இரண்டு பெண்களுக்குள் சண்டை என்றால் “அது என்ன?” என்று எட்டிப்பார்க்கும் கீழ்த்தர மனித மனோபாவத்தைத் தூண்டி விட்டு, அதையே இரண்டு அழகான இளம்பெண்கள், அவர்களே பேய்களின் பிரதிவடிவமாக இருந்து சண்டை போட்டுக் கொள்ளும் அசிங்கத்தை எவ்வளவு தொழில் நேர்த்தியோடு காட்டுகிறார்கள்!

இது எந்த லாஜிக்கும் இல்லாத கற்பனை வறட்சியன்றி வேறில்லை! இதில் இவர்களுக்கு குழந்தைகளையும், பெண்களையும் ஏமாற்றி அவர்களின் அறிவையும் நேரத்தையும் காசையும் சுரண்டுகிறோம் என்கிற உறுத்தலும் இல்லாத கொடும்பாவிகளாகி விட்டது ஏன்? 
  
இந்திரா சௌந்தராஜன் கதைகளை இயக்கிய நாகா அமானுஷ்யத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல சீரியல்களை இயக்கி வந்தார். சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த சீரியல்கள் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் கவர்ந்தன. சில வருடங்கள் பேய்கள், ஆவிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அழுகாச்சி சீரியல்களையும் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் கதைகளையும் சீரியல்களாக்கினார்கள். இப்போதோ மீண்டும் பேய்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. காரணம் பேய்களுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்புதான்” என்னும் கருத்து கவனத்திற் குரியது – (நன்றி http://tamil.filmibeat.com/television/devil-s-eyes-girls.)  எனும் இதுபற்றிய இணையக் கருத்தொன்று நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது

அம்மாவின் மருத்துவச் செலவுக்குக் கடன்வாங்கிக் கொண்டு வரும் ஏழையிடம் வழிப்பறிசெய்யும் திருடர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லையே! அது சிலநூறு! இது பலகோடி அவ்வளவே!

இந்தியர்களைப் பலவெளிநாடுகளிலும் “பாம்புப் பிடாரன்கள் உள்ள பகுத்தறிவற்ற” மக்களின் காடு என்றே நினைப்பதை இவர்கள் உறுதிப்படுத்தவே உதவுகிறார்கள்! வெளிநாடுகளில் உள்ள தமிழர் வீடுகளுக்கு வரும் வேற்று மொழி நண்பர்கள் இந்தப் பேய்-பாம்புக் கதைத் தொடர்களைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்? இன்னமும் பாம்புக்கும், பேய்க்கும் பயப்படும் சிறுபிள்ளைகளாகத்தான் இந்தியர் இருக்கிறார்கள் என்று மட்டமாக எடைபோட மாட்டார்கள்?

ஸ்டார் விஜய்க்கு பிக்-பாஸ், சன் டிவிக்கு நந்தினி! நாடுவிளங்கிடும்!
ஆமா, கர்நாடக மாநிலத்தில் “மூடநம்பிக்கைத் தடைச்சட்டம்” ஒன்று போட்டதாகச் சொன்னார்களே! தமிழ்நாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் தம் கட்சி முன்னோடியாகச் சொல்லிக்கொள்ளும் தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் இவற்றைத் தடைசெய்ய ஏதும் சட்டம் போட மாட்டார்களா? (அட நீங்க வேற, ”அடிச்ச கொள்ளையைக் கண்டுபிடித்து, கமிஷன் வாங்கிக் கொண்டும் மாட்டிவிட்டு விடுவார்களோ?” என்கிற அச்சத்திலேயே சதாசர்வ காலமும் நடுங்கிக் கிடக்கும் தமிழகத்தில் இப்போதைக்கு இப்படி ஒரு சட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்கிறீர்களா? அதுவும் நியாயம்தான்!)

“திருடனாய்ப் பார்த்து, திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது“ மக்கள் தானாய் உணர்ந்து திருந்தினால் தலைமுறைகள் பிழைத்துக் கொள்ளும், இல்லையேல் பாம்பும் பேயும் நம் குழந்தை களை மட்டுமல்ல, சமூகத்தையே ஆளும் காலம் வருவது உறுதி!

ஆட்சியில் இருக்கும் பேய்பாம்புகளை விரட்டினால் இந்தப் பாம்பு, பேய்களை விரட்டலாம், இல்லன்னா இதுகளோட மந்திரவாதியை வைத்துக்கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்! வேறவழி!
 -----------------------------------------------------

கட்டுரையை வெளியிட்ட “மேன்மை”-இலக்கிய மாதஇதழ்
(ஆகஸ்டு-2017) மற்றும்

எனது பெயரோடும், வலைப்பக்க முகவரியோடும்
எடுத்து வெளியிட்ட “தீக்கதிர்” (21-7-2017) 
நாளிதழ் தோழர்களுக்கு நன்றி
----------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா ..எனக்கும் இவையெல்லாம் பார்க்கும் பொழுது கோவம் .வரும் ....மனதில் நஞ்சை விதைக்கின்றன ....காசு தான் ,பதவி தான் முக்கியம் என்ற நிலையில் நியாயம் ,தர்மம் ,பகுத்தறிவு எல்லாம் அழிந்து வருகின்றன என்பது வருத்தப்பட மட்டுமே இல்லை ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றுகின்றது ..அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தே ஆகவேண்டும்மா...
      கயவாளிகளின் உழைப்பை நம்போன்றவர்களின் உழைப்பு வெல்லவேண்டும்..அதுதான் வெற்றி!

      நீக்கு
  2. இவ்வாறான நிகழ்ச்சிகளை காண்பதே தவறு ஐயா... அதைவிட இதைப்பற்றிய விமர்சனம், அலசல் எல்லாம் முகநூலில்... முகநூல் பேயை திறப்பதற்கே இப்போது பயமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் தெரிந்து வைத்துக்கொள்ள முயல்வது தவறல்ல நண்பரே! “தெரிந்தும் தெரியாதது போல்” இருப்பதுதான் தவறு! நல்லோர் இப்படிக் கண்டு கொள்ளாமல் இருப்பது யாருக்கு லாபம்? கொஞ்சம் யோசித்தால் என் கருத்து புரியும். நம் வீட்டுக்குள் யாரோ ஒருவன் நரகலைக் கொண்டு வந்து போடுகிறான். அடச் சே என்று மூக்கைப் பொத்திக்கொண்டு இருந்துவிடுவீர்களா? இல்லை போட்டவனை ரெண்டு போடு போடுவீர்களா?

      நீக்கு
  3. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டுதான் ஐயா இவர்கள் வியாபாரம் செய்கின்றார்கள். இவ்வாறாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள் சமூகத்தைப் பற்றி எவ்வாறு சிந்திப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்..அவர்கள் பிழைக்கிறார்கள்! இதைத்தான் பாரதி, “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்றான். நாம் வாழ்வதற்காகப் போராடுகிறோம் பிழைப்பது வேறு, வாழ்வது வேறல்லவா அய்யா! இதுவும் ஒரு கருத்துநிலைப் போராட்டம்தான் நாமெல்லாம் அதில் போராளிகள்தானே அய்யா?

      நீக்கு
  4. இன்று மூட நம்பிக்கை அதிகம் வளப்ர்பது சன் டி வியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகவே, எங்களின் மூத்த முன்னோடி நடுவர் அவர்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா! நன்றி

      நீக்கு
  5. Sir,

    do not get emotional . more than cinema - TV is a slow poison but it trash all minds. pl use remote.....watch only animal planets....else swtich off to protect ourself. there is no ethics/ logic behind all the dramas. even they are copying western concept, 50% only covered by them. remaining 50% very cruel so better avoid we cannot correct this morons......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னளவில் ரிமோட்டைப் பயன்படுத்தி விட்டால் போதுமா சகோ? அறிவியலை இவர்கள் மக்கள் விரோதமாகப் பயன்படுத்தும்போது பார்த்துக் கொண்டு நான் மட்டும் ரிமோட்ட பயன்படுத்தி ஒளிந்துகொள்ளவா என்னைக் காமராசரும் பெரியாரும் படிக்க வைத்தார்கள்? என்னளவில் அது என் படிப்புக்கே செய்யும் துரோகமய்யா!

      நீக்கு
  6. பேய்களை நம்பும் அதே மனம்தான் ஜோதிடத்தையும் கடவுளையும் நம்புகிறது. இதைப்பரப்பவே பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் விரும்புகின்றன.தன்னம்பிக்கையை வளர்த்து, இந்த மூடத்தனங்களை விட்டுவிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் பொதுப்புத்தி என்பனவற்றை இவர்கள்தானே வடிவமைக்கிறார்கள்... இவர்கள் நச்சைக் கலந்து தருகிறார்கள்... நாம் முறித்து விட்டு பாலைத்தர போராட வேண்டுமய்யா!

      நீக்கு
  7. ஐயா! எழுத்துச்சாட்டையால் விளாசி விட்டீர்கள்! ஏற்கெனவே சன் தொலைக்காட்சியின் இந்த மூடநம்பிக்கைத் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி வருந்தி எழுதியிருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் நீங்கள் இதை எழுதியிருப்பது, சமூக அக்கறையாளராக இது எந்தளவுக்கு உங்களைச் சீற்றம் கொள்ள வைக்கிறது என்பதை உணர்த்துகிறது.

    இதில் மூடநம்பிக்கையையும் அதைப் பரப்புவதையும் கண்டிக்கும் வரிகளை விடச் சமயம், வழிபாடு போன்றவற்றின் தொடக்கம், வரலாறு பற்றிய உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்கின்றன. இதே துறை பற்றிக் கட்டுரைப் போட்டி ஒன்றுக்கு எழுதி, ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களிடமிருந்தும் மாம்பலம் வள்ளல் சந்திரசேகர் ஐயா அவர்களிடமிருந்தும் அந்தக் கட்டுரைக்காக நான் பரிசும் பெற்றுள்ளேன். விரைவில் வெளியிடுகிறேன்.

    சிறந்த கட்டுரைக்காக நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே. அந்தக் கட்டுரை வந்த உங்கள் வலைப்பக்க இணைப்பைத் தந்தால் நாங்களும் படிப்போமல்லவா? அவசியம் தருக!

      நீக்கு
  8. அருமையான கண்ணோட்டம்
    சுவைஞர்களின் முடிவில் மாற்றம் வரணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” நம் பாட்டுப் பாட்டனின் கல்வியால்தான் இதை மாற்றப் போராட வேண்டியுள்ளது நண்பரே! உங்கள் மின்னூல் பதிப்பு முயற்சி என்னானது?

      நீக்கு