“தமிழக அரசியல்“ வாரமிருமுறை இதழில் நமது பதிவர்விழாச் செய்தி!


நமது “வலைப்பதிவர் திருவிழா-2015”  பற்றிய செய்தி தமிழின் பிரபல இருவார இதழான “தமிழக அரசியல்“ இதழில் வந்துள்ளது. நமது செய்தியை அறிந்து அதனை வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய இதழ்ஆசிரியர் திரு ஆரா அவர்களுக்கும், இங்குவந்து, விழாக்குழுக் கூட்டம் நடக்கும்போதே விவாதங்களைக் கவனித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அடுத்தநாள் என்வீட்டுக்கு வந்து செய்திகளையும் அறிந்துகொண்டு, இரண்டுபக்கச் செய்தியாக எழுதியிருக்கும் புதுக்கோட்டைச் செய்தியாளர் திரு கண்ணன் கணினி அவர்களுக்கும் நமது நன்றி. நன்றி.

நண்பர்கள் இதழை வாங்கிப் படித்தும், நண்பர்களிடம் தெரிவித்தும் உதவ வேண்டுகிறேன்.
இதழில் வந்துள்ள செய்தியில் சில திருத்தங்கள்

அழைப்பிதழ் வேண்டுவோர் முகவரி தருக!

நமது விழா அழைப்பிதழ், இருபக்க பலவண்ண அட்டையில் அச்சாகி வருகிறது. அனேகமாக 01-10-2015 அன்று கிடைக்கக் கூடும். 

வந்தவுடன் வலைத்தளத்தில் வெளியிடுவோம்.

அச்சு அழைப்பிதழ், பதிவர் நண்பர்களுக்கு நூல்அஞ்சலில் அனுப்ப விழாக்குழு விரும்புகிறது. (ரூ.5அஞ்சல்தலை ஒட்டி, உறையை ஒட்டாமல் சான்றஞ்சலில் இட்டு வரும்)

எனவே, அழைப்பிதழை அஞ்சலில் பெற விருப்பமுள்ளவர் மட்டும் உடனடியாகத் தமது அஞ்சல் முகவரியை நமது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். மின்னஞ்சல்subject பகுதியில் முகவரிஎன்று தமிழிலோ அல்லது Blogger Address  என்று ஆங்கிலத்திலோ குறிப்பிடவும். 

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் முகவரி இடவேண்டாம். அதிலும்  பெண் பதிவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டுகிறோம். (நமது பதிவர்கள் நல்லவர்கள், ஆனால் பதிவர் மட்டுமா இந்தப் பதிவுகளைப் பார்க்கிறார்? எல்லாரும்தானே பார்க்கிறார்கள்? .... ஆகவேதான்..)

வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க. உங்களின் ஆத்மார்த்தமான உதவியால் தான்இந்த விழா சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது. அதனால், உங்கள் தமிழக முகவரியைத் தந்தால் அவசியம் இந்தியாவுக்குள் எங்காயினும் அனுப்பி வைப்போம். ஏற்கெனவே சொன்ன பழமொழிதான் – “செத்தாடு காப்பணம் செமகூலி முக்காப் பணம்ங்கிற மாதிரிதான் வெளிநாட்டு அஞ்சல் செலவு அள்ளிவிடும். எனவே பதிவர் சந்திப்புகளின் வழக்கப்படி நமது தளத்தில் போடுகிறோம். (ஆமா..போங்க நீங்கதான் வரப்போறதில்லல்ல..? அப்பறம் தளத்திலயே பார்த்துக் கோங்க... வேற என்ன பண்ண?)

இன்னொரு வேண்டுகோள் படைப்பு அனுப்புவோர், அந்தப் படைப்பை தமது வலைப்பக்கத்தில் உரிய உறுதிமொழிகளோடு இட்டு, இணைப்பை மட்டும் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பும்போதுsubject பகுதியில் போட்டிக்கான படைப்பு என்று குறிப்பிடுவது வகைபிரிக்க எளிதாகும்.

அதுபோலவேநன்கொடை மற்றும் விளம்பரம் அனுப்புவோர் அதுபற்றி உடனடியாகத் தமது தளத்தை க்குறிப்பிட்டு மின்னஞ்சல் தந்தால்தான் தளத்தில் ஏற்ற முடியும். ஒரு நல்ல தொகை வந்து மூன்று நாளாகிறது...! யாரென்ற விவரம் இன்னும் வரவில்லை!! தேதி, பெயர், ஊர் தெரிவித்தால்தான் அந்த விவரத்தைப் பதிவேற்ற முடியும்.

முகவரி அனுப்ப வேண்டிய நமது தள மின்னஞ்சல் -
(கவனியுங்கள் வளரும் கவிதைப் பின்னூட்டத்தில் அல்ல், வேறு கருத்துகள் இருந்தால் அதைமட்டும் இந்தப் பின்னூட்டத்தில் தாருங்கள். ஆனால் அழைப்பிதழ் அனுப்ப வேண்டிய முகவரியைப் பின்வரும் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்புங்கள்-நா.மு.)

அன்புடன் விழாக்குழு
27-09-2015

 ---------------------------------------------------------------------------

வலைப்பதிவர் கையேட்டிற்கு விளம்பரம் தருக!


வரும் 11-10-2015 அன்று புதுக்கோட்டையில நிகழவிருக்கும் நமது “வலைப்பதிவர் திருவிழா-2015இல் வெளியிடவுள்ள “தமிழ்வலைப் பதிவர் கையேடு2015நூலில் தொடர்ந்து எழுதி-இயங்கிக் கொண்டு இருக்கும் சுமார் 300பதிவர்கள் தமது வலைப்பக்கம் பற்றிய குறிப்புகளை அனுப்பியிருக் கிறார்கள் (மிகப்பலரும் நாம் தந்துள்ள கூகுள் படிவத்திலும், வேறுசிலர் நேரடியாக நமது மின்னஞ்சலுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்) அதோடு... 
மேலும் படிக்க -
http://bloggersmeet2015.blogspot.com/ வலைப்பக்கம் வருக!

த.இ.க. தளத்தில் நமதுவிழாப் போட்டிகள் அறிவிப்பு!




“தமிழ் இணையக் கல்விக் கழகம்“ (த.இ.க.),  (http://www.tamilvu.org/) நமது “வலைப்பதிவர் திருவிழா”வில்  இணைந்து நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்“ பற்றிய அறிவிப்பை, தனது தளத்தில் வெளியிட்டு உள்ளது. உள்ளே போய் “வாம்மா மின்னல்“ என்று சொலவதற்குள் அது மாறி விடும்! பல அறிவிப்புகளில் ஒன்றாக நமது போட்டி பற்றிய செய்தியும் உருண்டு கொண்டே வருகின்றது. நண்பர்கள் சென்று உருள்வதைப் பிடித்துநிறுத்திப் பார்க்க வேண்டுகிறேன்.
    
அப்படியே தமிழிணையக் கல்விக் கழகத்தின் நூலகம் மற்றும் இதர கணினி-தமிழ்-அறிவுத் தளங்களிலும் உலவி வாருங்கள் நண்பர்களே!

     தேடுதலுக்கு அலுப்படிப்பவர்க்கு, நமது நண்பர் “மதுரைத் தமிழன்“, த.இ.க. தளத்தில் என்னென்ன எங்கே இருக்கிறது என, லட்டு-லட்டான குறிப்புகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். பாருங்க..

நிற்க.
      நம் விழாப்பற்றி –போட்டி அறிவிப்பு வருமுன்பே- “இப்போது“ இணைய இதழ், தனது தளத்தில் என்னிடம் நேர்காணல் எடுத்து எழுதியதை நண்பர்கள் அறிவார்கள். அதைப்பார்க்காதவர்கள், பார்க்கச் சொடுக்குக -

              அப்புறம்...
     நமது விழாப்பற்றி அறிந்து, நமது விழாக்குழுக் கூட்டத்திற்கே வந்து பார்த்து, நேர்காணல் எடுத்துச் சென்றிருக்கும் “தமிழக அரசியல்“ வாரஇதழ் செய்தியாளர் திரு கண்ணன் அவர்களுக்கும், செய்திகளை அறிந்து, அவரை அனுப்பி நேரில் பார்த்து எழுதச்சொன்ன ஆசிரியர் திரு ஆரா அவர்களுக்கும் நமது நன்றி. விரைவில் அந்த இதழில் நமது விழாச்செய்தி வரும் பார்க்க!

அப்புறம்...
ஒரு சிற்றலை வானொலியில்...

சரிசரி எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா அப்பறம் எதிர்பார்ப்புச் சுவை இல்லாமல் போய்விடும்.. அதனால வந்ததும் சொல்றேன்.

     சற்றே பொறுத்திருங்கள்... ஒவ்வொன்றாக வரும்.

    ஆமா, நம்ம போட்டிகளில் கலந்துகொண்டு படைப்புகளை எழுதி உங்க தளத்துல போட்டுட்டீங்க தானே? அட என்னங்க நீங்க? ஒருவரே மற்ற பிற தலைப்புகளிலும் படைப்புகளை எழுதலாமில்ல.. என்ன? எழுதி, அதையும் உங்க தளத்தில போட்டு, அந்த இணைப்பை மட்டும் மின்னஞ்சல் பண்ணுங்க
     மின்னஞ்சல் முகவரி தெரியுமில்ல..?
     மறந்துறாதிங்க.. இதோ அந்த மின்னஞ்சல் –

அப்பறம்.. “நாளொரு அறிவிப்பும், பொழுதொரு ஃபாலோயரும், நிமிடத்திற்கொரு போட்டிப் படைப்பும், நொடிக்கொரு பதிவர் வருகைப் பதிவும்“ என வளர்ந்து வரும் நம்ம விழாத்தளத்தை தினமும் பாக்குறீங்க தானே?

பார்க்க வருக - http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

ஆகா! அருமையான போட்டி!

உண்மையாகச் சொன்னால் பழைய வஞ்சிக்கோட்டை வாலிபன்படத்தில் வரும் புகழ்பெற்ற வீரப்பாவின் வசனத்தைத்தான் சொல்ல வேண்டும்
சாபாஷ்! சரியான போட்டி! என்பதுதான் சரியான தலைப்பு! ஆனால், அந்த அற்புதக் கலைஞர் வீரப்பாவின் காலத்திற்குப்பின் தமிழும் தமிழ்ச் சமூகமும் பலவழி களில் வளர்ந்திருக்கிறது..அதில் ஒன்று கணித்தமிழ்!
எனவே, வள்ளுவர் சொன்னது முதல் வீரப்பா சொன்னதுவரை இப்போது நம் பாணியில் சொல்வதுதான் சரி என்பதால் தலைப்பைச் சிறிதே மாற்றி இருக்கிறேன்.

சரி என்ன போட்டி?
நம் விழாவில் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் மட்டுமல்ல.. அதில் கடுமையான போட்டி நடந்துகொண்டிருப்பதை நண்பர்கள் பார்த்துக் கொண்டும், படைத்துக் கொண்டும் இருப்பீர்கள் அதுபற்றி நான் சொல்லவில்லை!
பார்க்காதவர்கள்இதுவரை வந்துள்ள படைப்புகளைப் படிக்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html 

விழாப்பற்றிய பதிவுகளை எழுதும் போட்டி! 
இந்தப் போட்டி ஒருபக்கமிருக்க, இன்னொரு வியப்பான போட்டி அறிவிக்கப்படாமலே நடந்துகொண்டிருக்கிறது! அது நமது விழாவைப் பற்றித் தமது தளங்களில் எழுதி, விழாவுக்கு அவரவர் பாணியில் அழைக்கும் போட்டி(?) இதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, நமது விழா நம் புதுக்கோட்டை மட்டுமல்ல உலகத் தமிழ்ப்பதிவர்கள் நடத்தும் விழா என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்? பார்க்காதவர்கள்இதுவரை வந்துள்ள  பதிவுகளைப் படிக்க  http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

நிதி தரும் போட்டி! 
அடுத்து, “நீங்கதான் குடுப்பீங்களா? நாங்க குடுக்க மாட்டமா? என்று நிதிஉதவி செய்வோரின் கரங்கள் நீண்ண்ண்ண்டு வரும் போட்டி!
அதை விழாக்குழு இரண்டாகப் பிரித்திருக்கிறது. ஒன்று அன்புடன் தொகை தந்தவர் பெயர்கள் மட்டும் இரண்டாவது ரூ.5,000க்கு மேல் அள்ளித்தந்த வள்ளல்கள் விழாப் புரவலர்கள் - பட்டியல்!
இதையும் பார்த்து, இதுவரை தராத நண்பர்கள் இப்போதும் தரலாம்

வருகைப் பதிவுப் போட்டி! 
இன்னொரு போட்டி, பதிவுப்போட்டி! அதையும் பாருங்கள்-
(இதற்கு நன்றி நம்ம வலைச்சித்தர் திரு பொன்.தனபாலன் அண்ணாச்சிக்குத்தான்! மாவட்ட வாரியா நம்ம பதிவர்உலகத்தைப் பிரித்து சமர்த்தா இணைத்திருக்கிறார் பாருங்கள்!)
(இது மாவட்டங்களுக்கிடையே மறைமுகமாக நடக்கிற போட்டியாக்கும்!)
உங்க மாவட்டத்தில 36 பேரா.. அப்ப நாங்க என்ன இளைச்சவங்களா?“ என்று கேட்டு, சென்னைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே நடக்கும் இனிய நட்புடன் கூடிய ஆரோக்கியமான அழகான வருகைப் பதிவுப் போட்டி!" (சென்னை-36, புதுக்கோட்டை-39! இது 23-09-2015மதியம் வரை!)  
(இதுல நடந்த “அரசியல்“ என்னன்னா.. எங்க மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பதிவர் ஒருவரை அவுங்க மாவட்டத்துக்குக் கடத்திட்டாங்க பா..!  அட என்னாங்க நீங்க?... இது சும்மா தமாசுக்கு! உண்மையில் விழாவைப்பற்றிய அறிவிப்புத் தந்தபோது இங்கிருந்த கவிஞர் சுவாதி இப்போது குழந்தைகள் படிப்புக்காக சென்னை வாசியாகிவிட்டார் அதனால் இயற்கையாக நடந்தது இது! நீங்க உடனே ராஜ்ய சபைத் தேர்தல் நேரத்தில் எம்எல்ஏ கடத்தல்”  மாதிரி இதையும் நினைச்சுக்காதீங்க... நம்ம சென்னை நண்பர்கள் நம் விழாவுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறார்கள் சாமீ! இந்தப் பதிவுப்போட்டியை நான் மகிழ்ச்சியோடு வரவேற்று எழுதிக்கொண்டிருக்கிறேன் வேறொன்றுமில்லை!)

ஆக இந்தப் போட்டிகள் அனைத்தும் 
நம் விழாவைச் சிறப்பிக்கவே என்பதால் 
உரக்கச் சொல்லுவோம்....
ஆகா! இதுவல்லவா 
அருமையான பதிவுசெய்யும் போட்டி! (இதுக்கு யாராச்சும் ஏதாச்சும் பரிசு தரலாமில்லப்பா?   “மாவட்ட அளவில் அதிகமாகப் பதிவு செய்தபதிவர்கள்”னு?)
ஏன்னா, இதுல அனேகமா இறுதிப்போட்டி புதுக்கோட்டைக்கும் சென்னைக்கும்தான் நடக்கும் போல..!  (அதுலயும் எங்க புதுக்கோட்டை இளைஞர் படை, கச்சை கட்டி இறங்கி, ரோட்டுல போற வர்ரவங்களை எல்லாம் விசாரிச்சு.. நீங்க இன்னும் பதிவு பண்ணலயா?” ன்னு கேட்டு, அங்கயே புடிச்சி லேப்டாப் சகிதமா பதிவு போடுறதா ஒரு தகவல்! சரி விடுங்க அப்படியாவது புதிய பதிவர்கள் வரட்டுமே! விழாவின் நோக்கமே அதுதானே?)

போட்டிகள் தொடரட்டும் 
நண்பர்களே! தோழர்களே! பதிவர்களே! உறவுகளே!
புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமெனச் சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!...

இனிய பதிவர்களே! எழுந்து வாருங்கள்!
இணையத் தமிழால் இணைவோம்! 
என்று அன்பால் அழைக்கிறோம்!

11-10-2015 காலை 8மணிக்கு, 
புதுக்கோட்டையில் சந்திப்போம்!

நன்றி வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்,
வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும்
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை

 ------------------------------------------------------ 

தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநருடன் சந்திப்பு

(இயக்குநர்  திரு  த.உதயச்சந்திரன் IAS,  விழா ஒருங்கைிணப்பாளர்  நா.முத்துநிலவன், பதிவர் மதுமதி,     இணை இயக்குநர் திரு தமிழ்ப்பரிதி,   பதிவர் ஆதிரை. 
பின்னணியில்... பதிவர்கள் திரு இராய.செல்லப்பா,  திரு தி.ந.முரளிதரன்)
----------------------------------------------------------------------------- 




19-9-2015 மாலை சென்னையில் உள்ள மிழ் ணையக் ல்விக் ழக (TAMIL VIRTUAL ACADEMY- Formerly Tamil Virtual University) அலுவலகத்தில் அதன் இயக்குநர் திரு த.உதயச்சந்திரன் IAS அவர்களை நமது நண்பர்களுடன் சந்தித்து நமது புதுக்கோட்டைப் பதிவர் திருவிழா பற்றிப் பேசி வந்தது மகிழ்ச்சியும் தெளிவும் தருவதாக உள்ளது.

இயக்குநர் அவர்களிடம் பேசி, முன்வைத்த கருத்துகள் –
1. இயக்குநர் அவர்களும் இணை இயக்குநர் திரு தமிழ்ப்பரிதி அவர்களும் 11-10-2015 புதுக்கோட்டை விழாவில் கலந்துகொள்ள வருகை தருதல்

2. ஐந்து போட்டிளுக்குமான 15பரிசுகளோடு, மேலும் தகுதியான படைப்புகள் வந்தால், அவற்றைத் தொகுத்து மின்னூலா வெளியிடுதல்.

3. தேர்வுபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப்பரிசு, கேடயத்துடன் த.இ.க. சான்றிதழ்களை இயக்குநர் அவர்களே வந்து வழங்கிட ஏற்பாடு செய்தல்.

3. த.இ.க.வின் இணையத்தில் நமது பதிவர் விழாப் போட்டிகள் பற்றிய செய்தி இணைப்புத் தருதல், பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் மாணவர்கள் போட்டிகளை அறிய த.இ.க.விலிருந்து செய்தி அனுப்புதல்

5.வாய்ப்பிருந்தால், விழாவுக்கு முந்திய வாரம் (அ) விழாவுக்குப் பின்) எழுத்தாளர் –எழுத்தாளராக முயல்வோர் என 100பேர் கலந்துகொள்ளும் “வலைப்பக்கப் பயிற்சிப் பட்டறை“யை, த.இ.க. நடத்தித்தருதல்

- ஆகிய பொருள்களைப் பற்றி பதிவர்-நண்பர்கள் சொல்லச்சொல்ல, அமைதியாக்க் கேட்டுக் கொண்ட இயக்குநர் அவர்கள், “பெரும்பாலும் இவை தேவையானவைதான்“ என்று ஏற்றுக்கொண்டதோடு, தம்மால் இயலும்வரை இவற்றை செய்துதர முயல்வதாக இயல்பாகப் பேசியது மகிழ்வளித்தது. எதிரில் வந்தமர்ந்த பதிவர்களிடம் இயக்குநர் முதலில், “உங்கள் வலைப்பக்கங்களுக்கு எத்தனை ஃபாலோயர் இருக்கிறார்கள்?“ என்று கேட்டது, அவரது வலைப்பக்க ஆர்வத்தை நாமறியச் செய்தது.

இயக்குநர் அவர்களிடம் பேசியதிலிருந்து நாங்கள் தெரிந்து கொண்டது – 
தொடர்ந்து படிக்க வருக - 
http://bloggersmeet2015.blogspot.com/

வலைப்பதிவர் திருவிழா - பத்திரிகைச் செய்தி

கணினியில் இலக்கியப் போட்டிகள், பரிசு ரூ.50,000!
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக்குழு அறிவிப்பு!
புதுக்கோட்டை-செப்.16.    கணினியில் தமிழ்க் கட்டுரை, கவிதை, எழுதிவரும் எழுத்தாளர்களுக்கான போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000எனவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

  கணினியில் தமிழில்  எழுதிவரும் எழுத்தாளர்கள் தமக்கென இணைய “வலைப்பூ“ எனும் பக்கங்களை உருவாக்கி எழுதி வருகிறார்கள். இதில் அரசியல், சமூகம், நகைச்சுவை, அறிவியல், ஆன்மீகம் என, தமக்குப் பிடித்த துறைகளில் கட்டுரை,கதை,கவிதை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களும் பரிமாறப் படுகின்றன. இவர்கள் தம்மை “வலைப்பதிவர்“ என்று அழைத்துக் கொள்கிறார்கள். உலகமுழுவதும் உள்ள இவ்வகைத் தமிழ் வலைப்பதிவர்கள் ஆண்டு தோறும் ஏதாவது ஓர் ஊரில் 5ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறார்கள்.

 2011இல் ஈரோட்டில் சிறிய அளவில்  தொடங்கிய இந்தச் சந்திப்பு, அடுத்தடுத்து மாநில அளவிலும் உலகஅளவிலும் தொடர்பு கொள்வதாகவும் ஆண்டுதோறும் ஓரிடத்தில் சந்திப்பதாகவும் மாறிவருகிறது. இதன் தொடர்ச்சியாக 2012,13இல் சென்னையிலும் கடந்த 2014இல் மதுரையிலும் இந்த “வலைப்பதிவர் சந்திப்பு“ நடந்துள்ளது. தற்போது 2015ஆம் ஆண்டுச் சந்திப்பு புதுக்கோட்டை நகரில், அக்டோபர் 11ஆம்தேதி நடைபெறவுள்ளது.

 புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாப் பற்றி அந்த விழாக்குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் தலைமையில் கூடி பல புதிய முடிவுகளை அறிவித்தனர். இது தொடர்பாக நா.முத்துநிலவன் கூறியதாவது-

 “உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக கணினி இணையத்தில் பயன்படுத்தப் படும் மொழி தமிழே என்று பத்தாண்டுக்கு முன்னரே மறைந்த எழுத்தாளர் சுஜாதா பெருமிதத்தோடு தெரிவித்தார். புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இரண்டு முறை வலைப்பதிவர் பயிற்சி வகுப்புகளை நடத்தினோம், அதன் நீட்சியாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி- ஞாயிற்றுக் கிழமை, புதுக்கோட்டை ஆலங்குடிச் சாலையில் உள்ள ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் “தமிழ்-வலைப்பதிவர் திருவிழா ஒருநாள் முழுவதும் காலை 9மணி தொடங்கி மாலை 5மணிவரை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சங்களாவன-

தொடர்ந்து படிக்க வருக -
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_18.html
-----------------------------------------------------

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!





“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு

போட்டி விதிகளை அறிய இந்த வலைப்பக்கம் வருக http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html
-------------------------------
இது எனது வலைப்பக்கத்தின் 500ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும். 

----------------------------------

வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
பிரபல  வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன். 
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.