14-6-2015 “நீயா நானா“ விவாதம், ஏன் கோபி இப்படீ?

யானையை மரமேறச் சொல்வது சரியா?

“இன்றைய கல்வி – பலமா பலவீனமா?” 
எனும் இன்றைய 
விஜய் தொ.கா.
“நீயா நானா“ விவாதம் முழுமையடையாதது ஏன்?

எழுத்தாளரும் முன்னாள் ஆட்சியருமான சிவகாமி, பொருளியல் நிபுணர் சொக்கன், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா, எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி நாடகவியலாளர் அ.இராமசாமி உள்ளிட்ட பிரபல அறிஞர் பலருடன் ஆசிரியர்களும் மாணவர் பலரும் கலந்து கொண்டதால் விவாதம் கனமாகவும் உருப்படியாகவும் இருந்தது. சமச்சீர் கல்வி, அருகமை கல்வி, சுயசிந்தனைக் கல்வி, கற்பனை வளர்க்கும் கல்வி பற்றியெல்லாம் பேசியது மகிழ்வளித்தது. 

ஆனாலும் ஏதோ ஒரு போதாமை –முழுமை பெறாமை- தெரிந்தது.
அது என்ன? “கல்வி“ என வந்தால் அது மூன்றுவகையில் அடங்கும்.
1.பாடத்திட்டம் (Subject / syllabus))
2.பயிற்றுமுறை (Teaching Methodology)
3.தேர்வுமுறை (Exam System / Evoluation)
இந்த மூன்றில், பாடத்திட்டம் பெரும்பாலும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. பயிற்றுமுறை புதிய பாடப்புத்தகம் வரும்போதெல்லாம் மாற்றப்படுகிறது. ஆனால், நமது தேர்வு முறை தலைமுறைகள் பலகடந்தும் மாற்றப்படவே இல்லையே!

1978இல் தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, மற்ற மாநிலப் பள்ளிக் கல்விமுறை மாற்றத்திற்கேற்ப, அதுவரை தமிழ்நாட்டிலிருந்த 11+1+3 எனும் கல்வித்திட்டத்தை, 10+2+3 என மாற்றினார். அதாவது 11ஆம் வகுப்புவரை பள்ளிக்கல்வி, அதன்பிறகு ஓராண்டு கல்லூரியில் புகுமுக வகுப்பு (அதற்குப் பெயர் ப்ரி யுனிவர்சிடி கோர்ஸ் பி.யூசி.) அதன்பிறகு 3ஆண்டுக் கல்லூரிவகுப்பு என்றிருந்ததை மாற்றி, 10வகுப்பு வரை உயர்நிலைக் கல்வி, அதன்பிறகு இரண்டாண்டுகள் மேல்நிலைக் கல்வி இரண்டையும் பள்ளிக்கூடத்திலேயே வைத்துக்கொண்டு, அதுவரை கல்லூரியில் இருந்த புகுமுக வகுப்பைக் கல்லூரியிலிருந்து எடுத்து பள்ளியில் வைத்தார். இதனால், கல்லூரிக்குப் போகாவிட்டாலும் பள்ளியில் அதிக பட்சமாக 12வகுப்புவரை படிக்கும் வாய்ப்பு நமது மாணவர்க்கும் கிடைத்தது. (இதுவே மற்ற நாடுகளில் வந்து சில ஆண்டுகள் தாமதமாகவே வந்தாலும் கூட, வந்தவரை இது நல்லதுதான்)

இதுவே இன்றும் கர்நாடக மாநிலத்தில் 11,12ஆம் வகுப்புகளை மட்டும் பிரித்து இளையோர் கல்லூரி (ஜூனியர் காலேஜ்) என்று உள்ளது.
ஆனாலும் தேர்வு முறை மட்டும் எந்தவிதத்திலும் மாற்றமடையாமல் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் என ஐந்து பாட எண்ணும் மாறாமல் புதிய பல பாடப்புத்தகங்கள் வருவதில் என்ன பெரிய முன்னேற்றத்தைக் கண்டுவிட்டோம்?

பாடம் மாறினாலும் மாறாத தேர்வு முறையால், பொதுஅறிவற்ற முட்டாள் தேர்ச்சி பெறுவதும், சுய சிந்தனையுள்ள மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், ஒருபாடத்தில் மீத்திறன் உள்ள மாணவர், மற்ற பாடங்களில் சாதாரண மதிப்பெண் எடுக்கும்போது, பாராட்டை இழப்பதும் நடக்கிறதே ஏன்? இது நமது தேர்வு முறையின் தோல்வி! இது ஏன் நம் கல்வியாளர் பலர்க்கும் இன்றுவரை உறைக்கவில்லை?

யானைக்கு அதன் பலத்தை உணர்த்தி மேலும் பலம்பெற கற்பிக்க வேண்டும் அழகாக ஆடும் மயிலை மேலும் அழகாக ஆடப் பயிற்சி தரவேண்டும். அருமையாய்ப் பாடும் குயிலை அற்புதமாகப் பாட சொல்லித்தர வேண்டும். அதுதானே கற்பித்தலுக்கான வெற்றி?

ஆனால், நம் கல்விமுறையில் 
மாணவர்களை என்ன செய்கிறோம் தெரியுமா?

ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு மயிலைப் பாடச் சொல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம் முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின் தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!

இதைப் பற்றி அங்குப் பேசிய யாருமே பேசாதது எனக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்தது. தேர்வு முறையை மாற்றாமல் கல்விமுறை பற்றிய விவாதம் எப்படி முழுமை பெறும்? 

நல்ல விவாதங்களை நடத்தும் கோபிநாத் நமது இன்றைய கல்விமுறை பற்றிய தேவையான விவாதத்தை நடத்தும்போது, அடிப்படை விஷயத்தை மறந்தது ஏன்? அதனாலேயே விவாதம் முழுமையடையாமல் ஏதோ நேரம் முடிந்தது என்பதால் முடித்துக் கொண்டதாகவே பட்டது. 
ஏன் கோபி இப்படீ?

------------------------------------------------------------- 

33 கருத்துகள்:

  1. ஒருவேளை தேர்வுமுறை பற்றி ஒரு "நீயா...? நானா...?" வருமோ...? வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தால் நல்லது. மக்களுக்கு -பெற்றோருக்கு- இதுபற்றிய விழிப்புணர்வு தேவை. நன்றி வலைச்சித்தரே!

      நீக்கு
  2. கல்வி வியாபாரம் ஆன நிலையில் தொடர்பான விவாதங்களும் அவ்வகையிலேயே அமைகின்றன போலுள்ளது. அதற்கு இந்நிகழ்ச்சியும் விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை..விதிவிலக்கான நிகழ்ச்சிதான்.. இன்னும் சரியாக வந்திருக்கலாமே என்னும் ஆதங்கத்தில் சொன்னதுதான் அய்யா

      நீக்கு
  3. உடற்சூட்டை அறிய தெர்மா மீட்பர் என்னும் கருவியைப் பயன்படுத்துவதைப் போல ஒரு பாடத்தில் தான் கற்றவற்றை மாணவர் ஒருவர் எந்த அளவிற்கு புரிந்து கொண்டு இருக்கிறார் என .அறிய உதவும் ஒரு கருவியே தேர்வு என்பதனை மறந்து அதுவே கல்வியின் அடையாளம் என எண்ணத் தொடங்கியதன் விளைவு மனப்பாடக் கிளிகள் அறிஞர்களாகவும் சுயசிந்தனையுடைய குழந்தைகள் மக்குகளாகவும் கருப்படுதல் ஆகும்.கல்வியில் மாற்றம் குறித்துப் பேசுபவர்களில் பலர் இதனைப் பெற்றிப் பேசுவது இல்லை. மாணவர்களின் அடைவுகளை மதிப்பிட தேர்வு ஒன்றே வழி யெனக் கருதுவதே இதற்குக் காரணம். முறைசாரா கல்வி முறையில் மாணவர்களின் அடைவினை அறியும் மதிப்பீட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை எங்ஙனம் முறை சார்ந்த கல்வியில் பயன்படுத்துவது எனச் சிந்திக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது “மதிப்பீட்டுத் தொகுப்புமுறை“ 9ஆம் வகுப்பு வரை வந்திருக்கிறது. அதிலும் சில குறைபாடுகள் என்றாலும், அந்த முறையின் குறைகளைக் களைந்து மேலும் சீர்படுத்தினால் இம்முறை சற்று மேம்பட்டதாக அமையக் கூடும். அதிலும் கணினி வழி -ஆன்லைன்- தேர்வுமுறையையும் செயல்படுத்த வேண்டுமென்பதே எனது நீண்டநாள் கோரிக்கை.

      நீக்கு
  4. அருமை அருமை அருமை! ஐயா தாங்கள் ஒரு நல்லதொரு கல்வி பற்றிய சிந்தனையாளர் என்பது இதிலிருந்தே தெரிகின்றது. உங்கள் கேள்விகள் மிகவும் நியாயமானது.....

    //பாடம் மாறினாலும் மாறாத தேர்வு முறையால், பொதுஅறிவற்ற முட்டாள் தேர்ச்சி பெறுவதும், சுய சிந்தனையுள்ள மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், ஒருபாடத்தில் மீத்திறன் உள்ள மாணவர், மற்ற பாடங்களில் சாதாரண மதிப்பெண் எடுக்கும்போது, பாராட்டை இழப்பதும் நடக்கிறதே ஏன்? இது நமது தேர்வு முறையின் தோல்வி! இது ஏன் நம் கல்வியாளர் பலர்க்கும் இன்றுவரை உறைக்கவில்லை?// அருமை நாங்களும் இது பற்றி பாதி எழுதி வைத்துள்ளோம் ஐயா...அரசிற்கு ஒரு கடிதமாக.....

    //ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு மயிலைப் பாடச் சொல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம் முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின் தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!//

    மிக மிக அருமையான கருத்து..இதையும் எங்கள் பாணியில் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்...தங்களது இந்த எடுத்துக்காட்டு அருமை ஐயா! சுய சிந்தனைகளையும், சுய அலசலையும் கற்பிக்காத கல்வி நல்ல கல்வியே அல்ல என்பது எங்களது தாழ்மையான கருத்து. இதனை அரசிற்கு எழுதுவதாக நாங்கள் எழுதி வைத்திருந்தாலும், ஆசிரியர்களும் முனையலாம்.. பாடத்திட்டத்தை எதிர்பார்க்காமல். நாங்கள் ஆசிரியர்கள் கஸ்தூரி, மைதிலியுடன் தொடர்பில் இருப்பதால் அவர்கள் இதை அழகாகப் பின்பற்றுகின்றார்கள் என்பது தெரிந்து மிகவும் மகிழ்ந்தோம். அதே போன்று விஜு ஆசானின் பதிவுகளில் இருந்தும், நண்பர்கள் மணவை ஜேம்ஸ், கரந்தையார் அவர்களின் பதிவுகளிலிருந்தும் அவர்களும் இவ்வழி என தெரிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது ஐயா.

    நல்லதொரு பதிவு ஐயா....இந்த பரிதாபமான நிலை மாற வேண்டும்...அப்போதுதான் நமது நாடும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.....எங்கள் பதிவையும் விரைவில் பதிகின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இந்த பரிதாபமான நிலை மாற வேண்டும்...அப்போதுதான் நமது நாடும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.....எங்கள் பதிவையும் விரைவில் பதிகின்றோம்” - ஆம் அய்யா.
      வேடனின் வலையில் சிக்கிய சிறுகுருவிகளால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், அனைத்தும் ஒன்றுசேர்ந்து, ஒரே நேரத்தில் சிறகசைத்தால் விடுதலை நிச்சயம் என்பது மட்டுமல்லாமல் “வலை“யும் குருவிகள் வசமாகுமல்லவா?

      நீக்கு
  5. உண்மை அண்ணா..நானும் பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்தேன்...ஒண்ணும் முடிவுக்கு வரல.....இறுதியா அந்த வாதத்தின் முடிவினை கூறியிருக்கலாம்...பார்த்தவர்களே திரும்ப திரும்ப.....புதியவர்கள் விஜய் டிவிக்கு கிடைக்கல போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு “லெவல்“ தாண்டிப் போயிட்டா மக்கள் கருத்திலிருந்து விலகித்தான் இருப்பார்கள் போல...அருகில் இருப்பவர்கள் சொல்வதையே சரியென்று நம்பும் நிலை கோபிநாத்துக்கும் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. பார்க்கலாம்...

      நீக்கு
  6. உருப்படியான கருத்துக்களை ஊடகம் எதிர்பார்க்கும் சுருக்கமான நேரத்தில் விளக்கி விட முடியாது. மேலும் இப்படி இருந்தாலும் எப்போதும் நல்லது என்ற எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கத்தினர் மீது எவரும் குறை சொல்லவும் மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. தேர்வு முறை மாற்றம் என்பது கல்விமுறை மாற்றத்திற்கே நல்லதல்லவா? ஒன்றை மாற்றி மற்றொன்றை மாற்றாமல் விடுவது பாதிக்கிணறாகிவிடும் அல்லவா? இப்போது 9வகுப்புவரை வந்திருக்கும் தொகுப்பு மதிப்பீட்டு முறையில் உள்ள சிற்சில குறைகளையும் களைந்து அதை 10,12வகுப்புகளுக்கும் கொண்டுவந்து ஆன்லைன் தேர்வையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தால் பெரிய மாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே

      நீக்கு
  7. கல்விமுறையில் இருக்கின்ற குறைபாடுகள் பற்றிய உங்கள் அக்கறையை இதனூடாகப் புரிந்துகொள்வதனால் கேட்கின்றேன் இது பற்றி சற்று விரிவாக நீங்கள் எழுதவேண்டும். ஆசிரியர் மாணவர்க்கு கல்வியை கொடுப்பவர் என்கிற நிலையில் இருந்து ஆசிரியர் என்பவர் தான் அறிந்த விடயங்களைப் பற்றி மாணவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துபவர் என்கிற இடத்துக்கு நகரவேண்டும் என்பது எனது கரிசனை. இது பற்றி உங்கள் நோக்கில் இருந்து நீங்கள் எழுதவேண்டும் என்று விரும்புகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றி சற்று விரிவாக நீங்கள் எழுதவேண்டும். ஆசிரியர் மாணவர்க்கு கல்வியை கொடுப்பவர் என்கிற நிலையில் இருந்து 'ஆசிரியர் என்பவர் தான் அறிந்த விடயங்களைப் பற்றி மாணவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துபவர் என்கிற இடத்துக்கு நகரவேண்டும் என்பது எனது கரிசனை' - ஆம் நண்பரே எழுதவேண்டும்.எழுதுவேன். நன்றி

      நீக்கு
    2. நான் நினைத்ததை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.
      அவசியம் எழுத வேண்டும்...விரைவில் எழுதுவேன். சென்னையில் ஒரு நல்ல கல்விக் கருத்தரங்கம் நடக்கவுள்ளது. அதற்காகத் தயாரிக்கும்போது இந்த உங்கள் யோசனையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தக் கருத்தரங்கு பற்றி அடுத்த எனது பதிவில் பார்க்க. நன்றி

      நீக்கு
  8. //ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு மயிலைப் பாடச் சொம் நாம் ல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம் முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின் தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!


    கசக்கும் உண்மைகள்...இப்படி தான் நடந்து வருகிறது... எதற்கெடுத்தாலும் மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றும் நாம் , ஏன் கல்வி முறையில் மட்டும் விட்டுவிட்டோம் என தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதற்குப் பின்பற்றியிருந்தால் நாடு முன்னேறிவிடுமே?
      சொல்லவேண்டியதைச் சொல்லிவைப்போம். சுரணை வராலா போகும்? வரும் வரவேண்டும். வரும்வரை ஏதாவது செய்வோம்

      நீக்கு
  9. நம் தேர்வு முறைகள் குறித்த வருத்தம் எனக்கும் உண்டு. நீயா- நானா விவாதங்களை தற்சமயம் பார்ப்பது இல்லை! பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்வு முறைகளை மாற்றாமல் கல்விமுறை மாற்றத்தினால் ஒருமண்ணும் பயனில்லை். தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா
    விரிவான விளக்கம் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே... வளமான இலட்சிய வாதிகளை உருவாக்கமுடியும் .... இல்லாவிட்டால் கடினம் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. தாங்களே அடிக்கடி தொலைகாட்சிப் பட்டிமன்ற விவாதங்களில் கலந்துகொள்ளும் (எனக்குப் பிடித்தமான) மிகச் சிறந்ததோர் பேச்சாளர் என்பதால், தங்களின் இந்தப்பதிவும், அதில் கூறியுள்ள அனைவரும் யோசிக்க வேண்டிய பல நல்ல கருத்துக்களும், உதாரணங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. விவாதிக்க இன்னும் நிறைய உள்ளது. பள்ளிப்பாடத் திட்டங்களில் மொழிகளுக்கு இன்னும் முக்கிய இடம் வேண்டும். தாய்மொழிப் பயிற்றல் பற்றியும் பேசலாம்.

    பேச நிறைய இருக்கிறது. செயல் படுத்த ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேச நிறைய இருக்கிறது. செயல் படுத்தவும் நிறையப் பேச வேண்டியிருக்கிறது அய்யா. விவாதமாக... நன்றி

      நீக்கு
  13. வாழ்க்கைக்கான கல்வியாக இல்லாமல்
    தேர்வுக்கான கல்வியாக இருக்கும் வரை
    இந்த அவலம் மாற நிச்சயம் வாய்ப்பில்லைதான்
    பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்வுக்கான கல்வியாக இருந்தும், அந்தத் தேர்வுமுறையும் சரியாக இல்லாததுதான் சிக்கலின் மையம். அதை மாற்றத்தான் எதுவும் யாரும் பேசுவதிலலை என்பதே என் ஆதங்கம்!
      தங்களின் கருத்துக்கு நன்றி ரமணி அய்யா.

      நீக்கு
  14. மாணவர்களின் சுயசிந்தனை, திறன் வெளிப்பாடு ஆகியவற்றிற்கு வாய்ப்பளிக்காத,தேர்வுமுறையில் மாற்றம் ஏற்படாதவரை,வெறும் மதிப்பெண்களைத் துரத்தும் கல்வி முறையால் சமூக மாற்றம் என்பது குதிரைக் கொம்பே. பல நீயா?நானா? நிகழ்ச்சிகள் வெறும் அரட்டைக் கச்சேரிகளாக அமைவதில் வருத்தமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண்களைத் துரத்தும் கல்வி முறையால் சமூக மாற்றம் என்பது குதிரைக் கொம்பே. அதனால்தான், “மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை“ என்பதாலும்தான் நாம் எப்படியாவது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது அய்யா. தங்களின் கருத்து வெளிப்பாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது அய்யா. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

      நீக்கு
  15. விவாதம் சரியான பாதையில் போக வில்லையோ என்ற ஐயம் எனக்கும் தோன்றியது. பள்ளிக் கல்வித் துறையை சார்ந்தவர்களை அழைக்காமல் எப்போதும் வழக்கமான நபர்களையே அழைத்து விவாதம் செய்ததன் விளைவே அது என்று கருதுகிறேன். மதிப்பீட்டு முறைக்கும் தேர்வு முறைக்கும் உள்ள வேறுபாட்டை கொஞ்சோம் விவாதித்திருக்கலாம் தேர்வின் பலரும் பள்ளிக் கல்விப் புத்தகங்களையோ பள்ளிகளையோ பார்த்தறியாதவர்கள் என்றே நினைக்கிறேன்.
    இந்தக் கல்வி முறையில்தான் நீங்களும் நானும் இன்று விவாதம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று ஒருவர் கூறியதை நினைத்து சிரிப்புத்தான் வந்தது
    இந்த நீயா நானா பற்றி எழுத ஆசைதான் .முடிந்தால் என் கருத்தையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இந்த நீயா நானா பற்றி எழுத ஆசைதான் .முடிந்தால் என் கருத்தையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்“ அவசியம் எழுதுங்கள் முரளி நல்ல கருத்துகள் பதிவுசெய்யப் படாமல் போகும்போதுதான் தவறான கருத்துகள் நிலைகொள்கின்றன.

      நீக்கு
  16. //ஆனையை மரமேறச் சொல்கிறோம்! அழகு மயிலைப் பாடச் சொல்கிறோம்! பாடும் குயிலை ஆடச் சொல்கிறோம்! அவற்றால் இவையெல்லாம் முடியாது என்றதும், அவை தேர்வில் தோற்றுவிட்ட தாகச் சொல்லி விரட்டுகிறோம்! இவை அனைத்தும் நம் அரதப்பழைய தேர்வுமுறையின் தோல்வியாக உணரவே இல்லையே ஏன்?!//

    எனக்கும் இப்படிதான் தோன்றுகிறது. இங்கு மனப்பாடம் செய்யும் திறமை இருந்தால் போதும், அவன் முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்ற நிலைதான் உள்ளது. கல்வி பற்றி தெளிவான பதிவுக்கு நன்றி!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை உள்வாங்கி நீங்களிட்ட பின்னூட்டம் மகிழ்வளித்தது நண்பரே தொடர்ந்து தொடர்பில் இருப்போம். நன்றிகள்..

      நீக்கு