ச உச்சரிப்பு CHA வா? SA வா? என்பது குறித்து...


மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்தது மொழியின் பயன்பாடுதான். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வாழ்முறைக்கேற்ப மொழிகள் உருவாகி தேவைக்கேற்பவே வளர்ந்தும் தேய்ந்தும் வருகின்றன. நம் தமிழர் ஆர்வக்கோளாறில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி“ என்று சொல்வது “உலகிலேயே சிறந்த தாய் என் தாய்தான்“ எனும் “செண்டிமெண்ட்“ சார்ந்த மிகை என்பதால் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் உலகின் மிகச்சிறந்த மொழிகள் சிலவற்றில் நம் தமிழும் ஒன்று என்பதற்கு யாரிடமும் போய்ச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமும் இல்லை.
இதுபோல சில“செண்ட்டிமெண்ட்“களைத்தாண்டி யோசித்தால், தமிழின் உயர்வு தமிழர்களின் உயர்வுக்கானதே என்பது –மொழிவெறி தாண்டியும்- புரியும். இதில் இந்த மொழி உயர்ந்ததா? அந்த மொழி உயர்ந்ததா என்னும் கேள்விக்கே இடமில்லை. இந்தி எதிர்ப்பின் போது, “தமிழ்த்தாயை அழிக்க வரும் இந்திப்பேய்“ என்ற முழக்கம் உணர்ச்சிவசப் பட்டவர்களின் வாயில் உதிர்ந்த தவறான முழக்கம்தான். அப்போதைய திராவிட அரசியலுக்கு அது தேவைப்பட்டது. ஆனால், எதார்த்தம் என்ன வெனில்... இந்தி எதிர்ப்புப் போரின்போது நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி –
வங்கி ஒன்றின் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார் பூசி அழிக்க வந்த மொழிப்போர் வீரன் ஒருவன், பெயர்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று வரி இருப்பதைப் பார்த்துத் திகைத்து, “இதுல இந்தி எது? சொல்லு அதை நா அழிக்கணும்“னானாம்! அவனுக்குத் தமிழும் தெரியாது, இந்தி, ஆங்கிலமும் தெரியாது. இப்படித்தான் வெறியேற்றப்பட்ட தமிழர்கள் இன்றுவரை தமிழையே சரியாகப் படிக்காமல் இப்போது ஆங்கிலத்திற்குத் தாவிவிட்டார்கள்!
இதனால், இந்தி எதிர்ப்புப் போரையே நான் கொச்சைப் படுத்த விரும்பவில்லை அப்போது நிகழ்ந்த வடமொழிக் கலப்போடு ஒப்பிட்டால், தனித்தமிழியக்கம் என்று ஒன்று தோன்றியிராவிட்டால் தமிழை வடமொழியின் க்க்கத்தில் வைத்துக் கட்டிக் கடலில் போட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பின்னால் தமிழ்வளர்ச்சிக் குரிய திட்டங்களைத் தீட்டத்தவறியதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (இது தொடர்பாக “இருமுனைத் தவறுகள்“ எனும் தலைப்பில் தினமணியில் வந்த எனது கட்டுரையைப் படிக்க விரும்புவோர்க்கு http://valarumkavithai.blogspot.com/ சனவரி,19,2014 பார்க்க )
“ஆரியத்தால் வீழ்ந்தோம்“ என நடந்த “போர்“ முடிந்த(?)பின், “ஆங்கிலத்தால் வீழ்ந்தோம்“ என்றாகி, “தமிழால் எதுவும் முடியாது“ என்று தமிழனே  முடிவுசெய்து விட்ட காலமிது. தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழையே சரியாகச் சொல்லித்தராத கல்வித் திட்டத்தால், தமிழ்க் குழந்தைகள் ரெண்டும் கெட்டானாய்த் திரிவது உலகில் எந்த மொழிக்காரனுக்கும் நேரக் கூடாத பேரிழிவு! பழம்பெருமை பேசிய அளவிற்கு, அல்லது பழம்பெருமையைச் சொல்லி அரசியலில் வெறியேற்றப்பட்ட அளவிற்குத் தமிழகத்தில், இன்றும் நடைமுறையில் தமிழ் வளர்ச்சிக்கான எவ்விதத் திட்டமும் இல்லை! “தலைமுறைகள் பலகழிந்தோம் குறைகளைந்தோமில்லை“ ஆனால், இப்போது இதுபற்றிய விழிப்புணர்வு எழுந்து வருவது வரவேற்கத் தக்கதே!
எத்தனை எத்தனை தமிழ் (?) மாநாடுகள்! எந்த மாநாட்டிலாவது “குழந்தைகள் எளிதாகத் தமிழ் கற்க, சரியான உச்சரிப்பைப் பழக, பிழையின்றி எழுத, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்“ என ஏதாவது பேசப்பட்டதா? திட்டமிடப்பட்டதா? அப்படி நடந்திருந்தால் அதன் நல்ல விளைவுகள் இப்போது நம் குழந்தைகளிடம் தெரிந்திருக்க வேண்டுமே... அப்படி கண்ணுக்கெட்டிய தூரம் ஏதும் தெரியவில்லையே! 
இந்தச் சூழலில் --  
சரியான உச்சரிப்புப் பற்றிய விவாதம் மிகமிக அவசியம்தான்.
நானும் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ? உணர்ச்சியின்றி மனிதரில்லை அது, அறிவைக் கெடுக்காமல் இருக்கவேண்டும். சரி செய்திக்கு வருவோம்.
நாம் எழுத்துக்களை இன்று சீர்திருத்தம் செய்யாவிட்டால், பேச்சின் மெய்யொலிகளை இழக்க நேரிடும், இதன் மூலம் தமிழின் தனித்துவமான ஒலிப்புக்கள் அழிந்தே விடும். அவற்றில் முதன்மையானது சகர ஒலி என்பதை நாம் அறிய வேண்டும்  எனும் திரு மாநகரன் அவர்களின் கவலை நியாயமானதுதான்.  பார்க்க -              
தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா? 
நண்பர் திரு மாநகரன் எடுத்துக் காட்டுவது போல ச எனும் தமிழ் எழுத்தையே ச்ச(CHA)எனவும், ஸ(SA) எனவும் சொல்லித் தரும் குழப்பம் உள்ளது உண்மைதான்!
தமிழின் எழுத்துகள் பலவும் –குறிப்பாக ச வர்க்க எழுத்துகள்- வெவ்வேறு வகையில் உச்சரிக்கப் படுகின்றன. இதற்கெல்லாம் சரியாக வழிகாட்டக் கூடிய எந்தப் பாடத்திட்டமும் இல்லை. இளைய தலைமுறையைத் தவறாக வழிநடத்தித் திரை-ஊடகங்களும் கவலையின்றிக் காசு பார்ப்பதே குறியாகிக் கொழுக்கின்றன.
“மாவட்டச் செயலாளர்“ என்பதில் ச் (வல்லினஒற்று) மிகுந்து வந்தால் தவறாமல் “மாவட்டச் CHEயலாளர்“ என்றுதான் உச்சரிக்கிறோம். மாறாக, வல்லொற்று இடாமல் உச்சரிக்கும்போது “மாவட்ட SEயலாளர்“ என்றே உச்சரிக்கப் படுவதைக் கவனித்தால் இதன் இலக்கணக் குழப்பம் தெளியும். (வல்லின ஒற்று மிக வேண்டிய இடங்கள் என்பன பள்ளி இலக்கண வகுப்பில் படித்து மறந்துபோன பகுதி. அதை –அதாவது க் எங்கே வரும், ச் எங்கே மிகும் என்பதை இலக்கண ரீதியாகப் படிப்பதை விட உரைநடைத் தொடர் படிப்பில் உள்வாங்குவதே சிறந்தது. அதிலும், பொருள் மாறுபடக் கூடிய ஒருசில இடங்கள் தவிர மற்றவற்றுக்கு அவ்வளவு பெரிய முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. இன்னும் சொல்லப்போனால் பொருள்-சிந்தனைக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை விடவும் க், ச் ஒற்றுப் பிழைக்கான முக்கியத்துவம் தமிழில் அதிகம் தரப்படுவது, “உனக்கு இதுகூடத் தெரியலயே?“ எனும் “தமிழ்வாத்தியார்“ மன நிலைக்கும், தப்புக் கண்டு பிடிக்கும் பெரிய மனித மனோபாவத்துக்கும் தான் பெரும்பாலும் உதவுகிறது)
சரி, இப்போது ச உச்சரிப்புக்கு நேரடியாக வருவோம்.
பழந்தமிழ் வழக்கில் ச எனும்எழுத்து “ச்ச“(CHA) என்றே உச்சரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஸ(SA)எனவும், ஷ(SHA)எனவும் மாறிப்போனது எப்படி?
உச்சரிப்பு மாற்றம்தானே புதிய மொழித் தோற்றத்தின் அடிப்படை? சென்னையில் இன்னும் சிலநூறு ஆண்டுகளில் தனித்தறியக் கூடிய ஒரு புதியமொழி உருவாகி வருவதைத்தான் இப்போதே நாம் பார்க்கிறோமே?
திராவிடக்குடும்பத் தாய்எனும் தமிழிலிருந்து, ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் கிளைத்து வளர்ந்த மொழிகளில் தெலுங்கும் ஒன்று.  எனக்குத் தெலுங்கு தெரியாது ஆனால் “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி“ எனும் எனது அறிவொளி இயக்கப் பாடல் ஒன்றைத் தெலுங்கில் மொழிபெயர்த்தவர்கள், “சைக்கிள் தொக்கா நேச்சுக்கோ நீ செல்லெம்மா“ என்று பாடியபோது செ என்னும் உச்சரிப்பை, CHEஎன்றே அழுத்தமாக உச்சரிக்கக் கேட்டேன். (ஆய்...செல்லம் எனும் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜின் உச்சரிப்பும் இப்படித்தானே இருக்கிறது?)
ஆனால், சென்னை எனும்போது மட்டும் எப்படி இது SEன்னை ஆகிறது? இப்போது SEன்னை, CHEன்னை இரண்டு வித உச்சரிப்பும் சென்னையில் இருக்கிறது. இந்த இரண்டுவித உச்சரிப்புக்கும் தெளிவான பின்னணியைப் பார்த்தால் இதன் வேறுபாடு புரியும்.  ஆங்கிலத்தில் இதைச் சொல்லிப் பழகியவர்கள் (CHENNAI) தெளிவாக CHEன்னை என்கிறோம். படிக்காதவர்கள் இன்றைய கலப்பு-இயல்புப்படி SEன்னை என்கிறார்கள். அவர்கள் மேல் தவறில்லை.
“செப்புமொழி பதினெட்டுடையாள்–எனில் -சிந்தனை ஒன்றுடையாள்“ (பாரதி) என்று பாடும்போது, செப்பு என்பதை CHEப்பு என்றே உச்சரிக்கிறோம். ஆனால், சிந்தனை எனும் சொல்லை, SIந்தனை என்றே சொல்கிறோம். இது ஏன்? என்பதுதான் நண்பர் திரு மாநகரன் அவர்களின் தெளிவான கேள்வி.
பழங்காலத்திலிருந்து,  ச எனும் தமிழ் எழுத்து, ச்ச (CHA) என்றே வல்லினத்திற்குரிய அழுத்தத்துடனே உச்சரிக்கப்பட்டுள்ளது என்பது பழந்தமிழ்ச் சொற்களைக் கொண்டு அறிய முடிகிறது.  வடமொழி போல பிறமொழி கலந்து பேசும் வழக்கு நம் தமிழில் அதிகமாக வரவர வடமொழிக்குரிய ஸ,ஷ ஓசைகள் தமிழின் ச எழுத்திற்கு (கலந்து) வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.
பிறமொழிச் சொற்களைத் தமிழில்தர இலக்கணம் படைத்தவர்கள், ஜ,ஸ,ஷ எழுத்துகளுக்கு மாற்றாக ச என உச்சரிக்கும் வழக்கும் இருந்ததை ஏற்றுக்கொண்டு தான், தற்பவம் தற்சமம் எனப் பிற்கால இலக்கணத்தை எழுதியிருக்கிறார்கள். (உ-ம்) நிஸப்தம் – நிசப்தம், ஸம்பூர்ணம் – சம்பூர்ணம், ரோஜா-ரோசா., ராஜா-ராசா. “ராக்ஷஸன்“ என்பதைத் தமிழில் சொல்லும்போது, இராட்சசன், இராச்சசன் எனவும், இராக்கதன் (கம்பன்) எனவும் சொல்லும் வழக்கு உள்ளதை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
இதில் வேடிக்கை என்னவெனில், தமிழுக்கு இயல்பான ச்ச உச்சரிப்பைப் படிக்காதவர்களின் உச்சரிப்பு என்று அரைகுறைப் படிப்பாளிகள் சொல்லிக் கொண்டதுதான்! படிக்காத பாமரன்தான் தமிழின் இயல்பில் ராசா என்று சொல்வான், படித்தவர் ராஜா என்பர். இன்னொரு கூத்து, சீனத்திலிருந்து வந்த இனிப்பைச் சீனி என்று படிக்காதவர் சரியாகச் சொல்ல, படித்த மேதைகள்தான் ஜீனி என்கிறோம். இதேபோலத்தான் வெப்பம் காரணமாக வரும் நோயான சுரத்தைப் படிக்காத தமிழன் மிகச்சரியாக சுரம் (சுர் எனும் வெப்ப அடிப்படையிலான நோய்) எனச் சொல்ல, அர்த்த மில்லாமல் படித்தவர்கள் ஜூரம் என்று சொல்லித் திரிகிறோம்!
ச எனும் தமிழ் எழுத்து, ஸ, ஷ ஆன கதை (வரலாறு?)
சண்பகம் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு பூவின் பெயர். பழந்தமிழ் இலக்கியமாம் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பட்டியலிடும் 99பூக்களில் இதுவும் ஒன்று. தருமிக்குப் பொற்கிழி அளித்த கதையின் (திருவிளையாடல் புராணம்) பாண்டிய மன்ன்ன் பெயர் ஷண்பகப் பாண்டியன்.. இதனை வடமொழி ஷம்பக் என்று சொல்ல, அதைத் தமிழ்ப்படுத்திய படித்த தமிழர்கள் “ஷெண்பகம்“ என்றுதான் சொல்கிறார்கள். ஷெண்பகமே ஷெண்பகமே எனும் திரைப்படப் பாடல் தமிழில் பிரபலமானது! இந்த வழக்கு இன்றைக்கும் உள்ளது. (ஆறு இதழ்கள் உள்ள பூ சண்பகம், ஆறு முகங்கள் உள்ள தமிழ்கடவுள் முருகனின் வடமொழிப்பெயர் சண்முகம்)  அப்பன் முருகன் சண்முகம் இப்ப ஷண்முகமாயிட்டான், அழகான பூ சண்பகம் இப்ப ஷெண்பகமாயிருச்சி! என்ன பண்ண?
இந்த வடமொழிக் கலப்பில், பக்தியின் பெயரில் நடந்த வடமொழி வழக்குக்குப் பெரும் பங்கு உண்டு. பழந்தமிழரின் வழிபாட்டுக் கடவுளான முருகனுக்குப் பழந்தமிழ் முறைப்படி வள்ளி மட்டுமே மனைவி. அதுவும் களவு-கற்பு எனும் தமிழ் மரபில் வந்த காதல் மனைவி. (அங்கு சீதா உழுத பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டாள். அதாவது உழவு கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்த கதைஅது. இங்கு கிழங்கு தோண்டிய பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் என்பதால் சீதைக்கும் முந்தியவள் நம்ம வள்ளி! (அதாவது உழவுக்கும் முந்திய பழமை தமிழ் வள்ளிக்கு உண்டு, இன்னும் தெளிவாகச் சொல்வதெனில், வடமொழி ராமனைக் காட்டிலும் தமிழகத்து முருக வழிபாடு பழமையானது) பின்னர் வந்த – வாதாபி வெற்றியின் போது நரசிம்மவர்ம பல்லவன் கொண்டுவந்த “வாதாபி கணபதி“, இங்கு முன்பே இருந்த முருகனுக்கு அண்ணனாக்கப் பட்டார்!(கி.பி.636?)! (முன்இருந்தவன் தம்பி, பின்வந்தவன் அண்ணன்! இது எப்படி இருக்கு?) தமிழ் முருகன் வடமொழிக் கடவுளாகி சுப்ரமண்யன் ஆனான். தேவயானை இரண்டாம் மனைவியானதும் அப்படியே! அவனது அண்ணன் விக்னேஷ்வரன், தாய் –தமிழ்நாட்டுக் கொற்றவை-பார்வதியானாள், தந்தை பழைய பரமசிவன், வடமொழியின் புதிய பரமேஷ்வர் ஆனார். சுப்ரமண்யனை அப்படியே தமிழில் சொன்னவர்கள் “ஸூப்ராமண்யன்“ என்று எழுதவும், அது தமிழ் வழக்கில் சுப்பிரமணியன் ஆனது. ஆகவே,  CHUப்பிரமணியன்“ என்று சொல்லப்பட வேண்டியவர்  SUப்ரமணியன்“ எனும் உச்சரிப்பில் புழங்கலானார். ச மெல்ல மெல்ல ஸ ஆகி, ஷ வும் ஆகிவிட்டது!
இடையில்.. துக்ளக் ஆசிரியர் சோ வுக்கு, நல்ல தமிழும் பிடிக்காது, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும் பிடிக்காது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த கே.கே.ஷா. அவர்களை கலைஞர் எப்படி வரவேற்பாராம் தெரியுமா? சோ சொல்கிறார். (கலைஞரின் கரகரத்த குரலில் படிக்க வேண்டுமாம்) “ஷா என்பது வடமொழி, எனவே, தூய தமிழில், வந்திருக்கும் ஆளுநரைச் செந்தமிழில் வரவேற்கிறேன்  சாவே வருக! கே.கே.சாவே வருக“ எப்புடீ? அதுதான் சோ பெருமகனார்!
சாதியும் கல்லாமையும் உச்சரிப்பும்
உச்சரிப்பு வழக்குகளில் சாதிக்கட்டுப்பாட்டுக்கும் பெரும் பங்குண்டு. படிக்காதவர்கள் –அதாவது உழைப்பாளி மக்கள்- வேத மந்திரம் அறியாத பாமரர்கள்(!)- உச்சரிப்பு எப்படிச் சுத்தமாக இருக்கும்(?) எனவே, “ஸ்பஷ்டமாக“ உச்சரிக்கத் தெரிந்த பெருமக்கள், தமிழின் ச எழுத்தை ஸ என்றோ, ஷ என்றோ மாற்றிச் சொன்னால் அது வடமொழி உயர்வழக்கு என்றாகிப்போனது! அதாவது “வேதம் படிச்சவா சுத்தமா இல்லஇல்ல ஸூத்தமா உச்சரிக்க வேணும்னா? ண்முகம், ண்முகமானது இப்படித்தான். (எல்லாம் நம்ம ஆறுமுகம் தான். சட்பாகின் என்பது ஆறிலொரு பங்கு வரிவாங்கிய மன்னனுக்கான இந்திய வழக்கு என்பதை அர்த்த சாத்திரம் சொல்லும். முருகனும் அப்படி ஒரு வகைதான்)
இன்னும் சொல்லப் போனால், சம்முவம் தான் இன்றைக்கும் பாமர மக்கள் வழக்கு. இதிலும் வேதனையான வேடிக்கை என்னவெனில், இன்றைக்கும் சுப்பிரமணியன் என சாமி பெயரை ஒரு தாழ்த்தப் பட்டவர் வைத்தால் அது “சுப்பா“ என்று சுருக்கப் படுவதும், அதையே  உயர்சாதி இந்து வைத்துக் கொண்டால் அவரை (சுப்பிரமணியன் சுவாமி) “மிஸ்டர் சுவாமி“என்பது ஊடக வழக்குத் தானே? சாமி, சுவாமி யாகிவிட்டார்! (அட என்னங்க சாமி நீங்க? இதையெல்லாம் போயி எங்கிட்ட சொல்லிக்கிட்டு? நீங்க படிச்சவுக நாலும் தெரிஞ்சவுக படிக்காத முட்டாப்பய எனக்கென்னங்க சாமி தெரியும்?) இதையே உயர்சாதி இந்து மதத்தலைவரை ஸாமி ஸ்வாமி என்பதும் உண்டுதானே?
திரைப்பட நடிகர்களின் பெயர்களை வைக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தப்படும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் பெயர்களில் ஒரு மாற்று அரசியல் இருப்பதைப் பார்க்கலாம்.(ஆறுமுகம் சண்முகம் என்பதன் வடமொழிப் பெயர்ப்பு எப்படி சாதி-மத-கடவுள் நம்பிக்கையோடு இறுகிக்கிடக்கிறது பாருங்கள்)
வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த ஸ பயன்படுத்தலாம். என்ற ஒலி தமிழில் இல்லாதிருந்த சமயத்தில்  சொல்லை பயன்படுதியிருக்கக்கூடும். பிற்காலத்தில்  வையும்  என்றே கூறுகிறோம்’ – என்று இதுபற்றிச் சொல்லும் திரு சுரேந்தர் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். (https://rsuren.wordpress.com/2012/11/11/%E0%AE%9A%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/)
இதுபற்றி, நம் வலைநண்பர் (ஆஸ்திரேலியா?) திரு சொக்கன் அவர்கள் சொன்ன கருத்தையும்  பார்க்க வேண்டுகிறேன். https://nchokkan.wordpress.com/2012/11/08/sacha/
ஆக -
நண்பர் மாநகரத்தான் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த மொழிக்கலப்பின் காரணமாகவே உச்சரிப்புக் குழப்பம் வந்த்தே அன்றி தமிழ் எழுத்து ஒவ்வொன்றிற்கும் உரிய உச்சரிப்பை நல்ல தமிழறிந்தாரிடம் கேட்டறிவதன்றி வேறு வழி இல்லை.
இதை இன்னும் விளக்க வேண்டும் எனில், இடையில் வரும் ச எப்படி மாறியது என்பதற்கு மாற்றொலி (இனஎழுத்துக்கு உரிய ஓசை மயக்கம்) தான் பதிலாக இருக்க முடியும். இது ச எழுத்துக்கு மட்டுமின்றி க, ட, த, ப முதலான வல்லின எழுத்துகள் அனைத்துக்கும் மற்ற எழுத்துகளை அடுத்து வரும்போது அந்த எழுத்துக்கு உரிய ஓசையின் தாக்கம் வரத்தான் செய்யும்.
க எனும் எழுத்து சொல்லின் முதலில் வரும்போது  ஓசையே பெற்று வந்தாலும், சொல்லின் இடையில் வரும்போது மாற்றொலி பெற்றே வரும்.
காக்கை – காKகை  -K  ஓசை
காம் – காHAம் -  H ஓசை
தங்ம் – தங்GAம்  - GA ஓசை.
இது என்ன ஒரே எழுத்துக்குப் பல உச்சரிப்பு என்று நினைக்க வேண்டியதில்லை. சர்க்கரை ஒன்றுதான் அதில் செய்யும் இனிப்புகள் அனைத்தும் ஒன்றல்லவே? சேரும் பொருளால் அதன் சுவையும் பெயரும் மாறுகிறதல்லவா? அது போலத்தான்..
நான் ஒருவன்தான், என் மனைவிக்குக் கணவன், மகளுக்குத் தந்தை, பேத்திக்குத் தாத்தா, சமூகத்திற்கு “ஒன்னுக்கும் ஆகாத“ ஒரு மனிதன் என்பது போலத்தான்.
இது தொடர்பான விட்டுப் போனவற்றைப் பின்னூட்டத்தில் இட்டால் நானும் எனக்குத் தெரிந்த விளக்கங்களைத் தருவேன். தெரியவில்லை என்றாலும் நல்லறிஞர் பலரிடம் கேட்டும் தெரிவிப்பேன் – நாம ஒன்றும் தமிழுக்கு அதாரிடி அல்லவே?
    “எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
     செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு”  
என்பது தமிழ் இலக்கணம் எனில்,
    “மாறுவது மரபு இல்லையேல்,
    மாற்றுவது மரபு“ என்பது தமிழின் புதுக்கவிதை.
-------------------------------------------------------  

35 கருத்துகள்:

  1. அருமையான அலசல். நன்றி அய்யா.

    M. செய்யது
    Dubai

    tha.ma + 1

    பதிலளிநீக்கு
  2. அன்புமிகு முத்துநிலவன் அவர்களுக்கு, தங்களின் பதிவிற்கு நன்றி. இதே கருத்தினை வேறொரு பார்வையில் எனது அகழ்வு வலைப்பூவில் (akazhvu.blogspot.com), காலவகையினானே(1) & (2) எனும் தலைப்பில் இரண்டு பதிவுகள் செய்திருக்கிறேன். தாங்கள் அதனைப் படிக்க வேண்டுகிறேன். தமிழ் தன் அழகு கெடாமல் காலந்தோரும் மாற்றம் அடையவேண்டும். மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.

    அன்புடன்-
    நிமித்திகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. அவசியம் படிப்பேன். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
    2. படித்து மகிழ்ந்தேன் நண்பரே, அருமையான ஆய்வுக்குரிய கருத்துகளை அனாயாசமாக அள்ளிவீசிக்கொண்டே போகிறீர்கள்... அருமை நண்பரே. “காய்தல் உவத்தல் அகற்றி“ - அதாவது, “பழந்தமிழில் எல்லாமிருக்கின்றன“ எனும் அலட்சியக் குரலுக்கும், “தமிழில் புதியன ஏதுமில்லை“ எனும் அலட்டல் குரலுக்கும் இடையில் நின்று, கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி இன்றைய தேவைக்கேற்ப சிந்தித்திருப்பது பாராட்டத்தக்கது. தங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும். நன்றி.

      நீக்கு
    3. அன்பு நண்பருக்கு, வேண்டுகோளை ஏற்று பதிவினைப் படித்தமைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

    இந்த செயலியை பயன்படுத்திப் பாருங்கள்.
    http://dev.neechalkaran.com/p/naavi.html#.Unt7k_mnqs0

    தாங்கள் எழுதிய பின்பு இதில் போட்டு ஆய்வு செய் என்ற பொத்தானை அமுக்கினால் பிழைகளை சுட்டிக் காட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தகவலுக்கு நன்றி ஜோதிஜி.
      கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி சூழலைக்கொடுத்து, சொற்களையும் கொடுத்தால் பாட்டு எழுதும் கணினி மென்பொருள் இருப்பதாகச் சொன்னாராம். அழகும் கற்பனையும் இயற்கையுமான தொடர்அமைப்பு கணினிக்குத் தெரியாதில்லையா? எனினும் இதுபோலும் புதிய வரவுகளைப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் எனும் வகையில் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், அதில் முதல்பக்கமே நகரவிலலை..மீண்டும் முயற்சி செய்து பார்த்துவிடுகிறேன். நன்றி நண்பரே.
      (பிப்.1அன்று உங்கள் ஊர் புத்தகக் காட்சிக்குப் பேச வந்திருந்தேன். அடுத்த முறை வரும்போது -பற்பல துறைசார் புத்தகங்கள் எழுதிப் பலதுறை அறிவுடைய உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். உங்கள் தனி jமின்னஞ்சல் தேவை , எனது-muthunilavanpdk@gmail.com

      நீக்கு
  4. அருமையான பதிவு ஐயா !! ச, ச்ச வேறுபாடும், ஜீ,சீ வேறுபாடும், விளக்கிய விதம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நிறைய இருக்கிறது நண்பரே..
      “காரிகை கற்றுக் கவிபாடுவதினும்
      பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே“ இதெல்லாம் இலக்கணம் படித்து வருவதல்ல, தொடர் படிப்பால் வருவது. அவ்வப்போது எழுதுவேன். நன்றி.

      நீக்கு
  5. நல்ல விளக்கம். மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
    ச என்ற எழுத்தை அது இருக்கும் இடத்தை (சொல்லை) வைத்துதான் இயல்பாக உச்சரிப்பது வழக்கம். ஆனால் இப்போதோ பலர் ஆங்கில எழுத்துக்களை நினைவில் வைத்துக் கொண்டு தமிழை கொலை செய்கின்றனர். (உதாரணம்: ”சென்னை” என்ற ஊர்ப் பெயரை ”ச்சென்னை” (CHENNAI) என்று உச்சரிக்கும் டீவியில் செய்தி வாசிக்கும் அம்மணிகள்)
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, அன்பு கூர்ந்து எனது பதிவை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படிக்கவேண்டுமாய் அனபுடன் வேண்டுகிறேன்.

      நீக்கு
  6. இதற்கு மேல் விளக்கம் வேண்டுமா...?

    அற்புதம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஏராளம் இருக்கிறது வலைச்சித்தரே! தமிழ்க்கடலின் ஓரத்தில் அமர்ந்து ஒருசில சிப்பிகளைத்தான் எடுத்திருக்கிறேன் இன்னும் ஆழ்கடலுக்குள் ஆயிரக்கணக்ககான முத்துகள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது தொட்டுவிட ஆசை..நன்றி. (நீங்கள் செய்த உதவியால் மீண்டும் என்பதிவில் தமிழ்மணம் ஜொலிக்கிறது.. நன்றி அய்யா. மிக்க நன்றி)

      நீக்கு
    2. பதிவின் கீழே "தொடர்புடைய பதிவுகள்" என்பதையும் இணைத்து விட்டேன்...

      நீக்கு
    3. மீண்டும் மீண்டும் நன்றி வலைச்சித்தரே.

      நீக்கு
  7. அருமையான பகிர்வு ஐயா...
    அனைவரும் அறிந்து கொள்ள விளக்கமாய் தந்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. பலஆயிரம் பக்கமுள்ள தமிழ்நூலில் நான் ஒரு சில சொற்களையே தந்திருக்கிறேன்...நன்றி.

      நீக்கு
  8. அருமையான பகிர்வு அண்ணா ,(ஜுரம் )சுரம் போல (ரஜம்)ரசம்
    தங்களின் இந்தப்பதிவினுதவியால் நிமித்திகன், அகழ்வு பொன்றபதிவுகளையும் சென்று கண்டு வந்தேன் கருத்திட
    நேரம் ஒதுக்கி பிறகு செல்லலாம் என்று வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - வலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”
      (பாரதி நம்மை மன்னிப்பான், நம்ப பாரதியில்ல?)

      நீக்கு
  9. மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துக் கூறினீர்கள். தமிழின் மெய்யெழுத்துக்களில் வல்லின எழுத்துக்களான க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறுக்கும் மாற்றொலிக்கள் உள்ளன. க ( Ka, Ga, Ha ) ச ( Cha, Sa, Ja ), ட ( Da, Dta, Ta, ) த ( Tha, Dha ) ப ( Pa, Ba ) ற ( Ra, Ta ). அவற்றை இடத்துக்கு தக்கவாறு மாற்றி ஒலிக்கின்றோம். தொல் தமிழில் மாற்றொலிகள் இருந்தனவா என்பது ஐயமே? இருந்திருந்தால், அவற்றுக்கு இலக்கணம் வகுத்திருப்பார்கள். சங்கத் தமிழ், இடைத்தமிழ், தற்காலத் தமிழ் என பிறமொழிச் சொற்களை ஏற்று வந்தமையால மாற்றொலிகள் உருவாகின. ஆனால் கடன் வாங்கியச் சொற்களுக்காக மாற்றொலிகளை தமிழ் எழுத்தில் எழுதி, அதுவே இன்று சொந்த ஒலிகளையே அழிக்கும் நிலைக்கு வந்ததே வருத்தமாக உள்ளது.

    இன்று நாம் தொல் தமிழின் சகர ( Cha ) ஒலியை இழந்து வருகின்றோம், காரணம் மற்ற வல்லின எழுத்துக்களில் மாற்றொலிகள் மெய்யொலிகளை அழிக்கவில்லை, ஆனால் சகரம் இதில் விதிவிலக்காக அழிந்து வருகின்றது.

    இன்று நாம் எது Sa , எது Cha என்பதையே குழம்பி நிற்கின்றோம். பள்ளி ஆசிரியர்கள் முதல் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைவருமே குழப்பியே ஒலிக்கின்றோம்.

    தாங்கள் சொன்னது போல தென்மொழியின் சகர ( cha ) ஒலிகளை தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேடி ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு சென்று விட்டோம்.

    செப்பு, செல்லு ( Cheppu, Chellu ) என தெலுங்கிலும் சோறு, சொல் ( Choru, Chol ) என மலையாளத்திலும் பிழையின்றி ஒலித்து வரும் வேளையில் தமிழில் மட்டும் இவை Seppu, Sellu, Soru, Sollu என மாறிவருவது வேதனையானது.

    நல்லவேளையாக திருநெல்வேலி மற்றும் யாழ்ப்பாண வட்டார மொழிகளில் இவை நிலைத்திருக்கின்றன என்ற போதும் ஊடகம், சினிமா போன்றவையின் பரவலால் Sa என சொல்வதே சரி என்ற மனோபாவம் பெருகி அங்கும் அழிந்து வருகின்றன.

    பொதுவாக பெரும்பாலான வடமொழிச் சொற்களே Sa என உச்சரிப்போடு வர வேண்டும், சில தென் மொழிச் சொற்களும் Sa என்ற உச்சரிப்பில் வருகின்றன. அதே போல சில வட மொழிச் சொற்களும் Cha எனவும், பெரும்பாலான தென் மொழிச் சொற்கள் Cha எனவும் வரும்.

    தென்மொழிச் சொற்கள்:

    சோழன், சேரன், சோறு, சோம்பல், சோளம், செல், சொல், செம்மை, சிவப்பு என்பவைகள் முறையே Chol'an, Cheran, Choru, Chombal, Cholam, Chel, Chol, Chemmai, Chivappu என்பதே சரி.

    சில வடச் சொற்களான சந்திரன், சந்தனம் போன்றவைகளும் முறையே Chandiran, Chandanam என்பதே சரி.

    பெரும்பாலான வடச் சொற்களான சொந்தம், சொப்பணம், சங்கதி, சந்தோசம், சந்தேகம் போன்றவைகள் முறைய Sondham, Soppanam, Sangathi, Sandhosam, Sandhegam என்பதே சரி.

    ஆனால் இன்னும் பல சொற்களான செலவு, செருப்பு, சேமி, சோர்வு போன்ற ஆயிரக் கணக்கானச் சொற்களில் Cha வருமா? Sa வருமா? என்பதை முனைவர் பட்டம் பெற்றோருக்கே தெரியவில்லை.

    இதனை கற்பிக்கவும் தமிழில் சகர எழுத்தை ஒலிப்பு முறைக்கு ஏற்றவாறு அகராதி, மற்றும் பாடநூல்களில் வேறுபடுத்திக் காட்ட சகர எழுத்தின் கீழ் குறியிட்டு எழுதும் முறையை பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம், குறைந்தது அகராதி, சொல்களஞ்சியங்களில் ஆவது இந்த முறையை பயன்படுத்தலாம், இதன் மூலம் எதை எவ்வாறு ஒலிப்பது என்ற மயக்கம் எழாது.

    மாற்றொலிகள் ஒரே எழுத்தின் மற்ற வடிவம் என்பதே தமிழ் இலக்கணத்தின் வழிகாட்டல், அறிவியல் பூர்வமாகவும் அதுவே சரி என்பதால், மாற்றொலிகளுக்கு தனி வரிவடிவம் அவசியம் இல்லை என்பது எனது எண்ணம். தனி வரிவடிவத்தை உருவாக்கி புழக்கத்தில் கொண்டு வருவது அதிக சுமையான காரியமாகும், இது கற்பவம், வாசிப்பவர் என எல்லோருக்கும் கூடுதல் தடங்கலை உண்டு பண்ணும், ஆகையால் ஏற்கனவே இருக்கும் தமிழ் எழுத்துக்களுக்கு துணைக்குறி கொண்டு குறைந்தது அகராதி, கையேடுகளில் ஆவது பயன்படுத்துவது கற்பிப்போருக்கும், கற்பவருக்கும் துணை புரியுமல்லவா?

    இது குறித்த பரந்துபட்ட ஒரு விவாதத்தை நாம் முன்னெடுக்க வேண்டுகின்றேன், கற்றறிந்தோரும், பொது மக்களும் இது குறித்து அலசுவது சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேயப்பா... உங்கள் பின்னூட்டமே ஒரு சிறந்த பதிவாக, தங்கள் பதிவின் தொடர்ச்சியாக இருக்கிறது நண்பரே! உண்மையான கருத்து- இதுபோன்ற மொழி கற்பித்தலில் மொழியாசிரியர் மட்டுமல்லாமல் கல்வியாளர் பெற்றோர் பொதுமக்கள் அனைவருமே பங்கேற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன். (இப்போது அது அரசியல் வாதிகள் கையில் அல்லவா அகப்பட்டு விழிக்கிறது?)

      நீக்கு
  10. அந்தந்த மொழியில் சொல்லினையோ, சொற்றொடரையோ பயன்படுத்துவது நலம். உதாரணமாக ழ, ள, ல, ர, ற, ன, ண, ந என்பனவற்றிற்கு மொழியியலாளர்கள், வரலாற்றறிஞர்கள் ஒவ்வொரு முறையைக் கடைபிடிக்கின்றனர். பொதுமக்கள் அவற்றை கடைபிடிக்கின்றனரா என்பது ஐயமே. தாய்மொழியோடு (குறிப்பாக தமிழ்) ஆங்கிலத்தை ஒப்புநோக்கி எழுதுவதைத் தவிர்த்து, அந்தந்த மொழிக்கு உள்ள அழகு மாறாமல் அவ்வாறே பயன்படுத்தலாம். saவாக இருந்தாலும் சரி, chaவாக இருந்தாலும சரி. இதற்கான வரையறைகளை அமைத்துக்கொள்வது மிகவும் கடினம். அவரவர்க்கு எளிதாக எது வருகிறதோ அவ்வாறே பயன்படுத்தலாம். குறிப்பாக ஆங்கிலத்தோடு இவற்றை ஒப்புநோக்கத் தேவையில்லை.அவ்வாறு ஒப்புநோக்கும்போது ஆங்கிலம் முதன்மைப்படுத்தப்படுவதோடு தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுவதை நாம் காணமுடியும். பல நிலைகளில் ஆங்கிலத்தோடு ஒப்புநோக்கி நம் தமிழினை இரண்டாம் தரத்திற்கு (secondary stage) அனாவசியமாகக் கொண்டுசெல்கின்றோமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது தவறை எளிதாகக் கண்டுபிடித்து திருத்திக்கொள்ளும் அளவு தமிழில் எது சரி எது தவறு (பத்திரிக்கை, பத்திரிகை; பொருத்துக்கொள்க, பொறுத்துக்கொள்க; மதுரை காமராசர் பல்கைலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்; முன்னூறு ரூபாய், முந்நூறு ரூபாய்; ) என்று தெளிவான முடிவுக்கு வர முடிவதில்லை. நாங்கள் இவ்வாறான சிக்கல்களை பல முறை எதிர்கொண்டு இன்னும் மென்மேலும் பல முடிச்சுகள் போட்டுக்கொண்டு வெளிவராமல் இருக்கிறோம். இவ்வாறான பயன்பாட்டின்போது ஒரு ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சொல்லின் பயன்பாட்டை சரி என்பார், மற்றொரு ஆசிரியர் இலக்கண விதிகளின்படி சரியில்லை என்பார், மூன்றாமவர் எப்படிவேண்டுமானாலும் போடலாம் என்று கூறி மற்றொரு இலக்கண விதியை எடுத்துக்கூறுவார். மூன்று நிலையில் உள்ளோருக்கும் இடையே மாட்டிக்கொண்டு நாங்கள் தவித்ததுண்டு. துணைவேந்தரிடம் (அமரர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள்) நேர்முக உதவியாளராகப் பணியாற்றியபோது ஒரு முறை அவர், 'அதிகமாக இலக்கணம் பார்க்காதே. எழுதப்படுபவனுக்கும் வாசிக்கப்படுபவனுக்கும் புரிந்தால் சரி. ஆழமாக இலக்கணத்திற்குள் சென்று குழப்பத்தை உண்டாக்கவேண்டிய அவசியமில்லை'. பணி நிலையில் இவ்வாறான பல சூழல்களை எதிர்கொள்ளும்போது புரிதலுக்கே நான் முக்கியத்துவம் தருகின்றேன். அவ்வாறான நிலையில் தமிழ்ப்பற்று குறைந்துவிடுகின்றது என்று பொருள் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. ஒரு நல்ல அலசல் பகிர்வினைத் தந்தமைக்கு நன்றி. இன்னும் பல கருத்துக்கள் உள்ளன. இடத்தின் அருமை கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா ! சோழவளநாட்டில் - தங்களது கருத்துக்கு மிக்க நன்றிகள்.. ஆனால் எதுவும் சரி எனக் கூறிவிட முடியாது, சகரத்தை ( Cha ) என்றாலும் சரி ( Sa ) என்றாலும் சரி என்பது கற்போரை குழப்பத்திற்கு ஆழ்த்தும் பணியே, அல்லது நம் தவறுகளை நாம் திருத்த விரும்பாமல் சப்பைக்கட்டும் நிலையாகும். உதாரணத்துக்கு பகரம் ( ப )-வை நாளை பலரும் Fa என பேச முற்பட்டாலும், Pa-வும் சரி, Fa-வும் சரி என்று சொன்னால், அது சரியாகுமா?

      இல்லை என்றால் வழி என்பதை பலரும் வளி, வலி எனக் கூறுவதை, எப்படிச் சொன்னாலும் சரி என்றால் தகுமா? அதன் பொருளே மாறிவிடுகின்றது. வழி விடு என்பதை வலி விடு எனக் கூறினால், எல்லாம் சரி தான் எனச் சொல்லிவிடுவது, மொழிச் சிதைவின் அறிகுறி.

      ஆங்கிலத்தை கற்கும் நாம், Button என்பதை Putton எனச் சொல்ல மாட்டோம், ஏனெனில் ஆங்கிலத்தை கசடறக் கற்க விரும்புகின்றோம், கூடுதல் Coaching Tuition எல்லாம் வைத்து முறையாக கற்க முயல்கின்றோம்,

      ஆனால் சொந்த மொழி தமிழ் என வரும் போது, அக்கறைக் காட்டுவதில்லை. இன்று தமிழ் ஊடகங்கள் ழகரத்தை கொலை செய்து வருகின்றன, சகரத்தைக் கொலை செய்து வருகின்றன, நாளை மற்ற தமிழ் எழுத்துக்களும் அழிந்து போகலாம், பகரத்தை Fa என்று கூட ஒலிப்பார்கள். இதனை எல்லாம் சகஜமப்பா என ஏற்கச் சொல்வது மொழியை ஆறடி ஆழத்துக்குள் புதைத்து மண்போட்டு மூடும் போது முதல் கைமண் போடுவது போன்றதே.

      தமிழில் இருந்து விலகிய, கொச்சைத் தமிழ் என நம்மால் பரிகாசம் செய்யப்படும் மலையாளத்தில் தொல் தமிழ் ஒலிகளான சகரம் ( Cha ), ழகரம் எல்லாம் செவ்வியல் தன்மையோடு இருந்து வரும் போது, தமிழகத்தில் அழிவதைக் கண்டு நாம் எல்லாம் சரி தான், என சொல்லுவது முறையல்ல.. !

      பேச்சு மொழியே முதன்மையானது, பேசினால் மட்டுமே மொழி வாழும், ஆனால் பேச்சை கட்டுக் கோப்புக்குள் வழி நடத்த எழுத்து பயன்படப் படுகின்றது, அந்த வகையில் வாகனம் ஓட்டுவது போன்றது பேச்சு, சாலை விதிகள் போன்றவை எழுத்து, சாலை விதிகளை நாம் சற்றே மாற்றிக் கொள்ளலாம், ஆனால் வாகனத்தை எப்படியும் ஒட்டிவிடலாம் எனச் சொல்லிவிட முடியாது, ஏனெனில் எப்படியும் வாகனத்தை ஓட்டலாம் என்றால் அது உயிர்ப் பலியில் முடியும், அதே போல எப்படியும் பேசலாம் என்பது மொழிப் பலியில் முடியும்.

      ஆகையால், சில ஒலிகளை இப்படித் தான் ஒலிக்க வேண்டும் என்றிருக்கின்றது, குறிப்பாக வேர்ச் சொற்களை நாம் மாற்ற இயலாது.

      விகுதிகள், இலக்கண உருபுகள் மாறலாம், ஆனால் வேர்ச்சொல்கள் மாறுவது அதன் Originality -ஐ இழப்பது போன்றது.

      இல்லாத ஒன்றை மொழிக்குள் கொண்டு வருவது என்பது மொழியைச் செம்மைப் படுத்தலாம், ஆனால் இருப்பதை அழிப்பது மொழியை ஒரு போதும் செம்மைப் படுத்தாது.

      ஆகையால் வல்லின எழுத்துக்களை பிழையின்றி ஒலிக்கக் கற்றுக் கொள்வதோடு, வல்லின ஒலிகளின் மாற்றொலிகளையும் நாம் பிரித்தறிந்து கற்றுக் கொள்ளவும், பேசவும், எழுதவும் வேண்டும்.

      ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள், சொற்கள் ஒரே விடயத்துக்கு இருக்குமானால் அதில் எதாவது ஒன்றையே நாம் முதன்மையானதாக கொள்ள இயலும், அதனை தரப்படுத்துதல் ( Standardization ) என்பார்கள். அதனையும் நாம் செய்ய வேண்டும், அவ்வாறான நிலையிலேயே மொழியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இல்லையேல் திசைக்கொன்றாக விலகிச் சென்று பிரிந்துவிடும்.

      முந்நூறு முன்னூறு எது சரி என்பதை இலக்கணத்தைக் கொண்டே நாம் தீர்மானிக்க முடியும். ஒருவேளை இரண்டும் சரி என்றால் எதாவது ஒன்றையே முதன்மையாகக் கொள்ள இயலும், ஆனால் சகர ஒலியில் cha என்பதே சரி என்றிருக்க, நாம் ஏன் அதனை மாற்ற வேண்டும்?

      நீக்கு
  11. அய்யா தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. ஆனால், 'ஆங்கிலத்தில் எழுதும்போது தவறை எளிதாகக் கண்டுபிடித்து திருத்திக்கொள்ளும் அளவு தமிழில் எது சரி எது தவறு (பத்திரிக்கை, பத்திரிகை; பொருத்துக்கொள்க, பொறுத்துக்கொள்க; மதுரை காமராசர் பல்கைலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்; முன்னூறு ரூபாய், முந்நூறு ரூபாய்; ) என்று தெளிவான முடிவுக்கு வர முடிவதில்லை' என்னும் தங்களின் கருத்து எனக்குச் சரியாகப் படவில்லை. ஆயினும், தங்களின் - பணி நிலையில் இவ்வாறான பல சூழல்களை எதிர்கொள்ளும்போது புரிதலுக்கே நான் முக்கியத்துவம் தருகின்றேன்“ எனும் கருத்தில் உடன்படுகிறேன். இது பற்றி விளக்க நான் ஒரு தனிப்பதிவுதான் போடவேண்டும். போடுவேன் தங்களின் விரிவான கருத்துரைக்கு மீண்டும் எனது நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு. விரிவாக ஆராய்ந்துள்ளீர்கள். என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டில் தேவைக்கதிகமாக, சிலர் வேண்டுமென்றே தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பை மெதுவாக (soft) உச்சரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி உச்சரிப்பதை நாகரீகமாக, மேல்மட்டத்தினரின் அடையாளமாக நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது என்று நான் எண்ணிக் கொண்டேன். அல்லது தமிழரல்லாத தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகளின் உச்சரிப்பின் தாக்கமாகக் கூட இருக்கலாம்.

    உதரணமாக, இலங்கையில் பயம் (payam) என்பதைத் தமிழ்நாட்டில் bhayam என்பார்கள். “bhayaம்மா இருக்கு. அதே போல் நாங்கள் வீடு (Weedu) என்று அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பதை, தமிழ்நாட்டில் Veeடு என்பார்கள். தமிழை, மென்மையான THA வுடன் தமில் என்பதையும் தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன். இதுவெல்லாம் சென்னையில் தான் அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தின் வழக்குக்கும் ஈழத்தின் வழக்குக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன, அதனால் எதோ ஒன்று எல்லா இடத்திலும் சரி என்றாகிவிடாது.

      தமிழகத்தில் மொழி முதல் சகரம் காற்றொலிகளாக மாற்றப்படுவது பிழை தான். ஆனால் அதனால் எல்லா இடத்திலும் அது தவறுவதில்லை. உதாரணத்துக்கு. தென் மொழிச் சொல்லான சிவப்பு என்பதை Chivappu என்பதே சரி, ஆனால் தமிழகத்தில் பல வட்டாரங்களில் Sivappu என்பது பிழை. காரணம் அதன் வேர்ச்சொல்லான செம் Chem என்பதில் இருந்து வருகின்றது.

      அதே சமயம் சந்தோசம் என்பதை Sandhosam என்பதே சரி, ஏனெனில் அதன் வேர் வடமொழியில் இருந்து வருகின்றது, அதனை கடன் வாங்கி பயன்படுத்துவதால் அதனை போலியாக Chandhosam என சொல்லக் கூடாது.

      ஈழத்தில் பயம் என்பதை Payam என்பது போலி, ஏனெனில் அது வடச் சொல்லின் திரிபு. வடச் சொல்லில் Bhayam என்ற உள்ளது, அதனைக் கடன் வாங்கியதால் அதனை தமிழகத்தில் Bhayam என்றே ஒலிக்கின்றனர். பயத்திற்கான சரியான தமிழ்ச் சொல் அச்சம்.

      ஈழத்து தமிழ் வழக்கில் பேச்சொலிகளில் Ba இல்லாமையால் அங்கு அது Payam என திரிந்துள்ளது. இதனைத் தவறு என்று சொல்ல முடியாது, மக்களின் நாவில் வரும் போக்கில் கடன் வாங்கியச் சொற்கள் திரிபது இயல்பே. அதே சமயம் Payam தான் சரி, Bhayam தவறு எனக் கூறுவது சரியல்ல.

      தமிழகத்தில் தகரத்தை மென்மையாக ஒலிப்பதில்லை, ஒருவேளை தொலைக்காட்சி தொகுப்பாளர்களைப் பார்த்துச் சொல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். தமிழகத்தின் வழக்குகள் சொல்லிடையில் குறிப்பாக வடமொழிச் சொற்களை பயன்படுத்தும் போதும் தகரம் அழுத்தத்துடன் Dha என உச்சரிக்கப்படுகின்றது. உதாரணத்துக்கு : பந்தம், சொந்தம், காந்தம் போன்ற சொற்களில் தகரம் Dha என மாறுகின்றது, இது தாவின் மாற்றொலி, அதே சமயம், மொழி முதலில் வருகின்ற தென்மொழிச் சொற்களில் தகரம் மாற்றமின்றியே ஒலிக்கப்படுகின்றது தரு, தன், தாண்டு, தடி, தண்டல், தகரம், தகடு போன்றைவைகள்.

      ழகரம்- லகரமாக மாற்றபடுவது தொலைக்காட்சிகளின் செயற்கையான உச்சரிப்பு, வட்டார வழக்குகளில் ழகரம் பெரும்பாலும் ளகரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது பாமரத்தன்மையால் எழுந்த ஒரு போக்கு, ழகரத்தை முறையாக உச்சரிக்க பெரும்பாலான தமிழர்கள் தவறி இருக்கின்றனர். இது தமிழகத்தின் பெரும்பாலான வட்டாரங்களிலும், ஈழத்தின் அனைத்து வட்டாரங்களிலும், கேரளத்தின் ஒரு சில வட்டாரங்களிலும் நிகழ்கின்றன.

      நீக்கு
    2. நன்றி மாநகரன், சரியாகச் சொன்னீர்கள்.
      தமிழ் உச்சரிப்பில் வடமொழித்தாக்கம் மிகவும் அதிகம். இது சகரத்தையே அதிகம் பாதித்திருப்பதாக நினைக்கிறேன். அத்தோடு, கோவிந்தன் - Goவிந்தன், கோகிலா - Koகிலாவாக வருவதும் அப்படியே.
      வடமொழி ஸ்கந்தன் தமிழில் வரும்போது ஸ் விட்டு கந்தன் ஆகும்போது Kaந்தனாகவும், தமிழ்ச்சொற்களாகவே இருக்கும்போது கண், கணக்கு, எனச் சரியாகவே வருவதையும் Gaவனிக்கலாம்.
      உச்சரிப்பு அளவில் ழ அனேகமாக அழிந்தே வருகிறது கோவை செம்மொழி மாநாட்டின்போது “ழ“வைக் காப்பாற்றுங்கள் என்று ஓரியக்கமே நடந்தது நினைவுக்கு வருகிறது...
      ழ அழிந்துவருவதன் காரணம், தமிழர்களின் அலட்சியமன்றி வேறில்லை.
      வடமொழிக்கெதிராகத் தனித்தமிழியக்கம் கண்ட மறைமலையடிகளாரின் நூல்களில் ஆங்கில முன்னுரைகள் பல பக்கங்களுக்கு நீளும்..
      எனக்கென்னவோ ழ எழுத்தில்லாமலே இங்கிலாந்து ,மற்றும் அமெரிக்காவில் அந்த உச்சரிப்பு இருப்பதாகவே படுகிறது. நாம்தான் அமொிக்கா என்கிறோம்.. அவர்கள் “அமேழிக“ என்றுதானே சொல்கிறார்கள்? அதேபோல் பிபிசி...“காபொழேஷன்“தானே?

      Delete

      நீக்கு
    3. மிகவும் சரியாக சொன்னீர்கள். கேரளாவிற்கு போன போது அங்கு பல பெயர் பலகைகளில் குறிப்பாக பள்ளிப் பெயர் பலகைகளில் மெற்ழிக் என எழுதி இருந்தார்கள், அதே போல Flirt என சொல்லும் போது அது ஃப்லேழ்ற் என்றே அமெரிக்கர்கள் சொல்லுகிறார்கள். Retroflex எனப்படும் நாவளைந்து ழகரம் உருவாகும் ஒலிகள் அமெரிக்க ஆங்கிலத்தில் பல இடங்களில் வருகின்றது. அதனை R என எழுதினாலும் உச்சரிக்கும் போது ழ் என்றே உச்சரிப்பர், இங்கிலாந்து ஆங்கிலத்தில் இது மிகவும் குறைவே.

      இன்று நம் ழகரத்தை மறந்த தமிழர்கள் நுனி நா ஆங்கிலம் பேசுகிறேன் பேர்வழி என அவர்களை அறியாமலேயே கால் செண்டர்களில் அமெரிக்கன் ஆங்கிலம் என்ற போர்வையில் ழகரம் பயின்று வருவதை எண்ணி சிரிப்புத் தான் வந்தது.

      ழகரத்தை சென்னையின் குப்பத்து வாசிகளும், நடுநாடு, தஞ்சாவூரின் சில பகுதிகள், ஈரோட்டின் சில பகுதிகள், ஆற்காடு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்குகளில் சரளமாக வருவதை கவனித்து இருக்கின்றேன். நடுக்கேரளத்து மலையாள வட்டாரங்களில் ழகரம் செவ்வியல் தன்மையோடு உச்சரிக்கப்படுகின்றது.

      ழகரம் அழியுமானால் தமிழும் அழியும் என்பதே எனது எண்ணம், தமிழர்கள் எப்போது ழகரத்தை பேச்சில் இருந்து அகற்றுகின்றார்களோ, அன்றே அவர்கள் பேசுவது முழுமையற்ற தமிழே. ஆனால், காலப் போக்கில் சில வட்டாரங்களில் ழகரம் முற்றாக மறைந்து போயுள்ளது. திருநெல்வேலி, யாழ்ப்பாணம் ஆகிய வட்டாரங்களில் ழகரம் சுத்தமாக இல்லை, திருநெல்வேலி வட்டாரத்தில் சொல்லிடை றகரமும் தகரமாக மாறுகின்றது.

      தாங்கள் சொன்னது போல என்னை அதிகம் கவர்ந்தது அமெரிக்க ஆங்கிலத்தில் காணப்படும் ழகரமே. அந்த ழகர ஒலியை சரியாக உச்சரிக்க பள்ளிகள், கல்லூரிகளில் தனி வகுப்புக்களே உள்ளன என்பதைப் பார்த்தாவது தமிழர்கள் அமெரிக்கரிடம் இருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்கட்டும்..

      நீக்கு
  13. ச பற்றி இவ்வளவு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள். குழப்பம் இன்னும் தீரவில்லை இன்னும் இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும்
    இந்தக் கட்டுரையில் மேலோட்டமாக நான் தெரிந்து கொண்டது cha என்ற உச்சரிப்பே சரி என்பது. ஆனால் செந்தமிழ் cheந்தமிழ் என்று உச்சரிக்கலாமா? சங்கத் தமிழ் இதையும் chaங்கத் தமிழ் என்றுதான் உச்சரிக்க வேண்டுமா?
    பெரும்பாலும் வாக்கியம் தொடங்கும்போது ச என்ற உச்சரிப்பும் இடையில் இணையும்போது cha உச்சரிப்பும் இருப்பது இயல்பாக இருப்பது போல் தோன்றுகிறது .cha என்று தொடங்கினால் என்று தொடங்கினால் மெய் எழுத்தில் தொடங்குவது போல அல்லவா உள்ளது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முரளி, வல்லினமெய் எழுத்துகள(கசடதபற) எல்லாமே வன்மையாக உச்சரிக்கப் படுபவையே.
      க்+அ=க, ச்+அ=ச என வரும்போது அழுத்தமாக க்+அ=(க்அ)க என்று தானே வரும்? எனவே ச மட்டுமல்லாமல் வல்லெழுத்து எல்லாமே நீங்கள் சொல்வதுபோல மெ்ய்யெழுத்தில் தொடங்குவது போல் ஒரு தோற்றம்கொண்டவைதான். ஆனால், நடுவில் வரும்போது மாற்றொலிகள் வருவதும் இவற்றுக்கு உண்டு.
      உ-ம் ஏற்கெனவே சொன்னதுதான். வடமொழியில் இவை தனித்தனியே 4 எழுத்தாகவே வரும். தமிழில் ஒரே எழுத்து, காலப்போக்கில் -வடமொழிக் கலப்பும் ஒரு முக்கியக் காரணமாகி- நால்வகை உச்சரிப்பும் வந்திருக்கலாம். இவை வடசொல்லிற்கே அன்றி, புழக்கத்தில் -நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்து- பழந்தமிழ்ச் சொல்லுக்கான எழுத்துகளையும் பாதிப்பது இயல்புதானே? ழ இப்போது என்ன பாடுபடுகிறது? இதற்கும் வடமொழியைப் பழி சொல்ல முடியாதல்லவா? அப்படித்தான் பள்ளிப் பாடத்தில் சரியான உச்சரிப்புக்கான திட்டம் இல்லாதது முக்கியக் காரணமாகிவிட்டது. சரியா?

      நீக்கு
  14. மாநகரன்,
    பயம் வடமொழிச் சொல் தான். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் வடமொழியிலிருந்து இரவல் வாங்கிய சொற்களும் ஈழத்துப் பேச்சுவழக்கில் தமிழாக்கப்பட்டு விடுவதால் உச்சரிப்பு பிழைகள் குறைவு. தமிழில் bha கிடையாது. ஆகவே Payam என்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் பயம் என்ற சொல் அப்படி தமிழாக்கப் படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஈழத்துப் பேச்சுவழக்கில் உச்சரிப்பு பிழைகள் குறைவு.“ என்பதை நான் ஏற்கவில்லை நண்பரே. கலப்புவழக்குக் குறைவு என்பதை ஏற்பேன். உச்சரிப்பு முறை பெருத்த மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதே என் கருத்து. ழ அங்கும் காணாமல் போய்ப் பல்லாண்டுகளாகிவிட்டன. என்னுடைய - எங்கட, பிள்ளைகள்-பெடியள், பெண்பிள்ளை- பெட்டைகள். சரியா? நான் யாழில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது, “வேலி பாஞ்சால் மண்ட துறப்புத் தான்“ என்றொரு குரல் கேட்டது.. “வேலியைத் தாண்டினால் மண்டையை உடைத்து விடுவேன்” என்பது அதன் பொருள். இதனைப் பின்னர் அறிந்தேன்...ஈழத்தில் சில நல்ல தமழ் வழக்குகள் உண்டு, பிறமொழிக் கலப்பு மிகவும் குறைவு, நல்ல தமிழ்ச் சொற்கள் இன்றும் புழக்கத்தில் இருப்பது மிகவும் மகிழ்வுக்குரியது. அதே நேரத்தில் தமிழ்நாட்டை விடவும் உச்சரிப்பு மாற்றம் ஈழத்தில் அதிகம் என்பதே என் கருத்து. பயம் இருக்கட்டும். விஷயம் என்பதை அழகாக மாற்றி விடயம் என்பது அழகுதான். ஆனால் விடயம் என்பதை விDAயம் என்றுதான் உச்சரிக்கிறார்களே அன்றி --PAயம் போல- விTAயம் என்று சொல்கிறார்களா என்ன? (அய்யா இது எனது ஈழ நண்பர்களின் பேச்சுவழக்கை அவதானித்த விடயம்தான் மற்றபடி, “இவன் என்னடா புதுசாக் கதைக்கிறவன்“ என்று நீங்கள் நினைத்தால் அன்புகூர்ந்து மன்னியுங்கள்.என் கருத்துத்தான் சரியென்னும் வறட்டுப் பிடிவாதம் எனக்கில்லை. என் கருத்துத் தவறென்று தெரிந்தால் சரியான கருத்தை ஏற்க திறந்த மனத்துடன் காத்திருப்பவன்தான். ந்ன்றி.

      நீக்கு
  15. ஆகா! 'ச' எனும் ஒற்றை எழுத்தை எடுத்துக் கொண்டு வரலாறு, சமயம், அரசியல் என எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள் ஐயா! அருமையான பதிவு என இதை நான் கூறுவது முழுநிலா மிகவும் அழகாக இருக்கிறது எனப் புதிதாகக் கூற முனைவதாய் அமைந்துவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.

    முன்பெல்லாம் 'மக்கள்' தொலைக்காட்சியில், ஞாயிறுதோறும் 'தமிழ் முற்றம்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள். தமிழ் பற்றிய ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். அதில் நான் ஓரிரண்டு ஐயங்களைக் கேட்டதுண்டு. அவ்வகையில் இந்தப் பலுக்கல் குழப்பத்தையும் கேட்டேன். அதற்குத் தமிழ் ஐயா அவர்கள் (அவர் பெயர் ஞானசுந்தரம் என நினைக்கிறேன்) இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காகப் என்னைப் பெரிதும் பாராட்டினார்.

    அவர் கூறியது, நீங்கள் மேலே கூறியிருப்பது, என் சிற்றறிவுக்குத் தோன்றியது என எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்பொழுது "சொல்லின் தொடக்கத்தில் வரும்பொழுது 'ச'வைச் 'ச' என்றும், சொல்லின் இடையில் வரும்பொழுது ஒற்று மிகுந்து வரும் என்பதால் 'ஸ' என்றும் பலுக்கலாம் என்பது சிறியேனின் புரிதல். இது சரியா ஐயா?

    பதிலளிநீக்கு
  16. சரியான உச்சரிப்பு...
    எது சரி?

    அடிச்சுவடுகளை
    a) adichchuvaduka'lai
    b) adichsuvaduka'lai

    ஆசாரங்களையும்
    a) aasaarangka'laiyum
    b) aachaarangka'laiyum

    ஆசாரியர்
    a) aasaariyar
    b) aachaariyar

    உபசார
    a) upasaara
    b) upachaara

    உபசாரஞ்செய்து
    a) upasaaragnseythu
    b) upachaaragnseythu

    கப்பற்சேதத்தில்
    a) kappa'rseathaththil
    b) kappa'rcheathaththil

    கற்சாடிகள்
    a) ka'rsaadika'l
    b) ka'rchaadika'l

    குற்றஞ்சாட்டப்படாதவன்
    a) kut'ragnsaattappadaathavan
    b) kut'ragnchaattappadaathavan

    கோட்சொல்லுதல்
    a) koadsolluthal
    b) koadcholluthal

    சாமான்
    a) saamaan

    சிரச்சேதம்
    a) sirachseatham
    b) sirachcheatham

    சிறைச்சாலை
    a) si'raichsaalai
    b) si'raichchaalai

    சேதப்படுத்தமாட்டாது
    a) seathappaduththamaattaathu

    தலைச்சீராவையும்
    a) thalaichseeraavaiyum
    b) thalaichcheeraavaiyum

    தள்ளுதற்சீட்டை
    a) tha'l'lutha'rseettai
    b) tha'l'lutha'rcheettai

    தற்சுரூபமும்
    a) tha'rsuroopamum
    b) tha'rchuroopamum

    திரைச்சீலை
    a) thiraichseelai
    b) thiraichcheelai

    தோற்சுருள்களையும்
    a) thoa'rsuru'lka'laiyum
    b) thoa'rchuru'lka'laiyum

    நடுச்சுவரைத்
    a) naduchsuvaraith
    b) naduchchuvaraith

    நற்சமயம்
    a) na'rsamayam
    b) na'rchamayam

    நற்சீர்
    a) na'rseer
    b) na'rcheer

    நற்செய்தியை
    a) na'rseythiyai
    b) na'rcheythiyai

    பதிற்செய்வேன்
    a) pathi'rseyvean
    b) pathi'rcheyvean

    பரிச்சேதம்
    a) parichseatham
    b) parichcheatham

    பாரஞ்சுமத்தாதபடிக்கு
    a) paaragnsumaththaathapadikku
    b) paaragnchumaththaathapadikku

    பிராணச்சேதம்
    a) piraa'nachseatham
    b) piraa'nachcheatham

    புதேஞ்சும்
    a) putheagnsum
    b) putheagnchum

    பெருஞ்சூளையின்
    a) perugnsoo'laiyin
    b) perugnchoo'laiyin

    போர்ச்சேவகரோடுகூட
    a) poarchseavakaroadukooda
    b) poarchcheavakaroadukooda

    முட்செடி
    a) mudsedi
    b) mudchedi

    மேற்சட்டையைக்
    a) mea'rsattaiyaik
    b) mea'rchattaiyaik

    விபசாரம்
    a) vipasaaram
    b) vipachaaram

    விருத்தசேதனம்
    a) viruththaseathanam
    b) viruththacheathanam

    Thank you!

    பதிலளிநீக்கு