+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?

 “பணம்கட்ட வருகிறவர்கள் ஆயிரம்ரூபாய் கட்டுகளாகக் கொண்டுவர வேண்டும். நூறு ரூபாய்க் கட்டுகளை வாங்க இயலாது“ – இது ஏதோ சாராயக்கடை ஏலத்திலோ, அல்லது  சவுளி மொத்தக் கொள்முதல் கடையிலோ கேட்ட குரலல்ல!
கடந்தஆண்டு, நாமக்கல் பள்ளி ஒன்றின் வாசலில் பத்தாம்வகுப்புத் தேர்வு முடிவு வெளியான அன்று காலை 10மணிக்கே - கூடிய கூட்டத்தினிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வந்த ஒலிபெருக்கிச் சத்தம்தான் இது!
அதாவது, பத்தாம் வகுப்புத் தேர்வுமுடிவு வெளிவந்த சில நிமிடங்களில் பலலட்சம் கல்லாக் கட்டிய பள்ளிகளின் வாசல் அறிவிப்புத்தான் இது! (சிலலட்ச ரூபாய் ரொக்கத்துடன், முதல் நாளே குடும்பத்துடன் போய், ரூம் எடுத்துத் தங்கி, விடிகாலையிலேயே பள்ளிமுன்பாக விண்ணப்பம் வாங்கும் வரிசையில் அம்மா இடம் பிடித்து நிற்க, அப்பாவும் பிள்ளையும் நெட் செண்டருக்குப் போய் மதிப்பெண் பட்டியலை எடுத்துக் கொண்டுவந்து வரிசையில் சேர்ந்துகொள்ளும் சாமர்த்தியம் அட! அட!! அடட!!! “தந்தை மகற்காற்றும் நன்றி “வரிசையில்“ முந்தியிருப்பச் செயல்“ என்று கிள்ளுவன் சொன்னது இதைத்தானோ?
+2 தேர்ச்சி: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்  முதல், இரண்டு இடங்களைப் பெற்றது எப்படி?
பிளஸ்2 தேர்ச்சியில் 28ஆண்டாக, மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  ஏன் தெரியுமா? எப்படித் தெரியுமா? 

மூன்றாம் இடத்திற்கு போனது விருதுநகர்,
28 ஆண்டு சாதனையை முறியடித்தது ஈரோடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 1985ல், விருதுநகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர், மாநில முதலிடம் பிடித்து தொடர்சாதனை படைத்தது. "இந்த ஆண்டும் முதலிடம் பிடிக்கும்' என கல்வித்துத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில், 96.12 சதவீதம் பெற்று, ஈரோடு, நாமக்கல்லை தொடர்ந்து, விருதுநகர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.  ----செய்திக்கு நன்றி -http://www.tnguru.com/2014/05/3-28.html
-------------------------------------------
2014 +2 தேர்வில், மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீத விவரம்:
மாவட்டம்   எழுதியோர் தேர்ச்சி      சதவீதம்

டாலர் கனவில்..
1. ஈரோடு      26,464            25,683            97.05
2. நாமக்கல் 31,527            30,453            96.59
3. விருதுநகர் 22,028            21,173           96.12
4. பெரம்பலூர் 7,548              7,248            96.03
5. தூத்துக்குடி 19,331          18,504            95.72
6. குமரி         24,336            23,153            95.14
7. கோவை    36,573            34,705            94.89
8. நெல்லை   35,303            33,317            94.37
9. திருச்சி      31,401            29,629            94.36
10. திருப்பூர் 22,481            21,158            94.12
11. சிவகங்கை15,117          14,219            94.06
12. தர்மபுரி   19,890            18,545            93.24
13. ராமநாதபுரம்14,427       13,426            93.06
14. கரூர்        10,294            9,570              92.97
15. தேனி       14,147            13,120            92.74
16. மதுரை    36,416            33,625            92.34
17. சென்னை 53,073           48,776            91.90
18. சேலம்     38,077            34,852            91.53
19. திண்டுக்கல் 21,291       19,355            90.91
20. தஞ்சாவூர் 28,824          25,877            89.77
21. புதுக்கோட்டை17,731    15,917            89.77
22. கிருஷ்ணகிரி20,474      18,297            89.37
23. திருவள்ளூர்40,032        35,320            88.23
24. காஞ்சிபுரம் 43,862        38,581            87.96
25. நாகை      17,089            15,029            87.95
இந்தியக் கனவு
26. நீலகிரி    8,189              7,055              86.15
27. விழுப்புரம் 34,612         29,481            85.18
28. வேலூர்    41,337            35,206            85.17
29. கடலூர்    29,028            24,437            84.18
30. திருவாரூர் 14,003        11,721            83.70
31. அரியலூர்   7,857           6,250            79.55
32. திருவண்ணாமலை 25,367 18,874     74.40
33.புதுச்சேரி 13,477            12,077            89.61
நன்றி - http://www.tnguru.com/2014/05/9705-744.html
------------------------------------------ 
புள்ளி விவரங்கள் பார்தாச்சா?
சரி, இப்போது விவ(கா)ரத்திற்கு வருவோம்….
2012ஆம்ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுமுடிவு வந்த அடுத்தநாள் (24-05-2012)  தினமணித் தலையங்கத்தில் எழுப்பப் பட்ட கேள்வி இது  -
தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக் கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறோமா?’ - இந்த ஆண்டு, அதை விஞ்சக்கூடிய அளவுக்கு நாமக்கல்(வி) சாதனை என்று தினமணியின் தலைப்புச் செய்தி சொல்கிறது.(10-05-2013). இரண்டும் சொல்வது ஒரே பொருள்தான் அதாவது தனியார் பள்ளிகள் சாதனை செய்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சாதிக்க முயற்சிகூடச் செய்வதில்லை. என்பதுதான்  அது. இந்தக் கருத்துச் சரிதானா? தனியார் பள்ளிகளின் இந்த சாதனைக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது? அந்த வழிகள் சரியானவையாஎன்பவையே நமது கேள்விகள்.
முயல்-ஆமை ஓட்டப்பந்தயக் கதை போல, இது தவறான கருத்தல்லவா? கடலில் நீந்தும் ஆமையைக் கரையில் ஓடவிட்டு, அதைக் கரையில் மட்டுமே ஓடக்கூடிய முயலுடன் ஓட்டப்பந்தயம்  விடுவதே தவறல்லவா? இரண்டையும் தூக்கிக் கடலில் போட்டால் எது முதலில் நீந்திக் கரைசேரும்? முயல் மூச்சுத் திணறிச் செத்தல்லவா போய்விடும்? “முயலாமை காரணமாகத் தோற்றது என்பதைச் சொல்வதற்காக, முயல் ஆமையிடம் தோற்றதாகக் கதை சொல்வது இந்த இரண்டு உயிரினங்களையுமே அவமானப்படுத்தும் கதை அல்லவா?  அதே போலத்தான் இந்த இருவகை ஆசிரியர்கள் பற்றிய பொதுவான ஒப்பீடும், தனியார் பள்ளிகளின் சாதனைகளைப் பாராட்டுவதும்.
000 கல்வியைப் பற்றிய தனியார்,மெட்ரிக்பள்ளிகளின் மதிப்பீடுதான் என்ன5முதல் 17வயது வரையான பள்ளிப்பருவம் மனித ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஆரம்பப் பருவம் அல்லவா? மதிப்பெண் எடுக்கும் பயிற்சியை மட்டுமே தருவதுதான் பள்ளிக்கூடத்தின் நோக்கமா வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியில் மதிப்பெண் எடுப்பதும் ஒன்றே அன்றி மதிப்பெண் ஒன்றே எல்லாம் என்பதான கருத்தல்லவா மேலோங்கி நிற்கிறது, ஓராண்டே படிக்கவேண்டிய பாடத்தை இரண்டாண்டுகளாக உருப்போடவைக்கும் தனியார்,மெட்ரிக்பள்ளிகள் மாணவரின் சமூகஉணர்வு, ஆளுமைவளர்ச்சி, பிறதிறன்வளர்ச்சி, பதின்பருவ உளவியல் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லையே? “ஓடி விளையாடு பாப்பா என்பது ஓரிடத்தில் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்குத்தானா? 10, 12ஆம் வகுப்பு மாணவர்க்கு ஓவியம், இசை, விளையாட்டு வகுப்புகள் எல்லாம் நேர விரயமா? அப்படியானால், 17 வயதுவரையான கல்வித்திட்டத்தை வகுத்தளித்து உலகம் முழுவதும் நடத்திக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா?  மாட்டுக்கு மருந்து திணிப்பதும், மாணவர் மண்டையில் மதிப்பெண்ணைத் திணிப்பதும் ஒன்றுதானா? இந்தக் கடுமையான பயற்சியில் சமூகத்திலிருந்தே நம் பிள்ளைகளை அந்நியப்படுத்தும் அபாயத்தை யார், எப்படி, எங்கே, எப்போது, சரிசெய்யப் போகிறோம்? இன்றைய வகுப்பறை நாளைய சமூகம் என்பது உண்மையானால், நாளைய சமூகத்தைச் சிறைச்சாலை போல மாற்றுவதற்கா பள்ளியில் பயிற்சி தருவது?
000 இந்தஆண்டு மாநிலஅளவில் முதல்10இடங்களில் வந்த மாணவ-மாணவியர் படித்த தனியார் பள்ளிகளில், கடந்தஆண்டு 11ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பத்தாம்வகுப்புச் சராசரி மதிப்பெண் என்ன? என்பதை அந்தப் பள்ளிகள் வெளியிடத் தயாரா? (450க்கும் கீழே சேர்த்திருந்தால் அவர்களுக்கு எத்தனைலட்சம் கூடுதலாகப் பெறப்பட்டது எனும் தகவல், யார்கேட்டும் கிடைக்காது)
000 தமிழ்நாடு முழுவதும், 6ஆம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில் படித்து, அரசுப்பள்ளி ஆசிரியரின் உழைப்பாலும் ஈடுபாட்டாலும் 10ஆம் வகுப்பில் 480க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவன் / மாணவி, 11ஆம் வகுப்புப்படிக்க நாமக்கல்லுக்குக் கடத்தப்பட்ட தகவல்களைப் பெற முடிந்தால், அவர்களின் எண்ணிக்கை தரும் சிந்தனையைச் சற்றே எண்ணிப்பார்க்கலாமா?   
000 490க்குமேல் இலவசம், 475க்குமேல் எடுத்தவர்க்கு மட்டுமே அனுமதிஎன எழுதப்படாத விதிகளை வைத்திருக்கும் தனியார்,மெட்ரிக்பள்ளிகள், வேறொரு பெரும்பாலும்-அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 500க்கு 475மதிப்பெண் எடுத்த மாணவரையே தமது பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்த்துக் கொண்டு, +2 வகுப்பில் 1200க்கு 1150 மதிப்பெண் பெறவைப்பது எப்படிச் சாதனையாகும்? (இரண்டும் சற்றேறக்குறைய 95 விழுக்காடு மதிப்பெண்தான் கணக்குப் போட்டுப் பாருங்கள்)  
000 பத்தாம் வகுப்பில் ஒருமுறை அல்லது சிலமுறை தோல்வியடைந்து, இரண்டு மூன்று அட்டைகளோடு வரும் மாணவரையும் ஒரே முறையில் 11மற்றும் 12ஆம் வகுப்புகளில் வெற்றிபெற வைப்பது சாதனையா? அல்லது, ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவரை மட்டுமே சேர்த்துக்கொண்டு 100 விழுக்காடு வெற்றி என்று விளம்பரம் செயது கொள்வது சாதனையா?   
000 10,11,12ஆம் வகுப்புகளைமட்டுமே மனத்துள்கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் கல்விச் சேவையா? தற்போது நெருக்கிப்பிடிக்கும் அரசு, கல்வித்துறைக்கு சமாதானம் சொல்வதற்காகவே, 1முதல் 9வகுப்புவரை பேருக்கு ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 25பேரை- சேர்த்துக்கொண்டு, 11,12ஆம் வகுப்புகளில் மட்டும் ஆயிரக்கணக்கில் மாணவரைச் சேர்த்துக்கொள்வதுதான் கல்விச் சேவையா? இதுதானே அரசுப்பள்ளிக்கும் தனியார்பள்ளிக்குமான அடிப்படை வேற்றுமை? அரசுப்பள்ளியில் அனைவரும் -1முதல்5, 6முதல்12 வகுப்புவரை- இலவசமாகப் படிக்கலாம். தனியார் பள்ளிகளுக்கு வருமானம் வரக்கூடிய 11,12வகுப்புகள்தாம் முக்கியம்! மற்றவை...  ச்சும்மா... பேருக்குத்தானே?
12ஆம் வகுப்பிற்குப் பிறகு மருத்துவம்,பொறியியல் போலும்- உயர்கல்விக்குச் செல்லவேண்டிய நிலையிருப்பதால், அது ஒரு திருப்புமுனை என்பதை மட்டுமே குறிவைத்து, அந்த வகுப்புகளுக்காக மட்டுமே பள்ளி நடத்துவது பச்சையான லாப நோக்கத்தைக் காட்டுவதாக இல்லையா?
000கடந்த மார்ச்-2013-பொதுத்தேர்வில், கல்வித்துறையின் நேர்மையான அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிபட்டுத் தேர்வுமையங்களையே மாற்றவேண்டிய அளவுக்குப் பேர்பெற்றிருந்தநாமக்கல் தனியார் பள்ளிகள், மாநிலமுதன்மை மூலமாகமட்டுமே சாதனைச்சிகரத்தில் ஏறிவிட்டதாக நம்பலாமா?
000ஒன்பதாம்வகுப்பு மாணவருக்கு, ஒன்பதாம் வகுப்பையே நடத்தாமல், பத்தாம் வகுப்புப் பாடங்களையே இரண்டுவருடம் உருப்போடவைப்பதும்,  11ஆம்வகுப்பு மாணவருக்கு அந்த வகுப்புப் பாடங்களை முடிக்காமலே, பன்னிரண்டாம் வகுப்புப் பாடநூல்களையே இரண்டு வருடம் நடத்துவதும் சரியான முறைதானாஅதுவும் விடிகாலை தொடங்கிப் பின்னிரவுவரை, நாளொன்றுக்குச் சுமார்20மணிநேரம் சிறப்பு வகுப்புகள் வைப்பதும், பிறகு 100விழுக்காடு தேர்ச்சிஎன்று தோள்கொட்டிக் கொள்வதும் சரியானதுதானா? பத்துநாளில் செய்ய வேண்டிய வேலையை இருபதுநாள் செய்வது ஒரு சாதனையா? இது நேரடியாக மாணவருக்கும், மறைமுகமாக இந்தச் சமுதாயத்திற்கும், இரண்டும் கெட்டானாய்க் கிடக்கும் பெற்றோருக்கும் செய்யும் பெரும்கேடு அல்லவா? இதைத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றால், அனைத்துப் பள்ளிகளிலும் 20மணிநேரப் படிப்பையே நடத்தலாமே? அல்லது இதையே சட்டமாக்கிவிடலாமே? முடியாதுல்ல...? உலகமுழுவதும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தை-பதின்பருவ உளவியல் ஆய்வாளர்கள் ஏற்காத ஒன்றைச் செயற்படுத்திவரும்  பள்ளிகள் சாதனைப்பட்டியலில் இடம்பெறுவது சரியானதுதானா என்று கேட்க விரும்புகிறேன்.
000 மாநிலஅளவில் மதிப்பெண் வாங்கும் நாமக்கல் பள்ளிகளில் மாணவர் ஓராண்டுக் கட்டணம் எவ்வளவு? ஓராண்டுக்கே இரண்டுலட்சத்துக்கும் அதிகமாக வாங்குகின்றனவா இல்லையா? 19-06-2011 தேதியிட்ட தினமணித் தலையங்கம் சொல்வதுபோல, தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையே? கோவிந்தராஜன் கமிட்டியோ, சிங்காரவேலு கமிட்டியோ, ரவிராஜபாண்டியன் கமிட்டியோ இந்தப்பள்ளிகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையே!“இன்ஜினியரிங் படிப்பைவிட எல்.கே.ஜி.க்கு கூடுதல்கட்டணம் வாங்கும் தனியார்பள்ளிகளின் கல்விச் சாதனையெல்லாம்  “சாதனை“-மாணவர்களைக் காட்டி நடத்தும் விளம்பர வேலையன்றி வெறென்ன?  
000 அரசுப்பள்ளியில் கட்டணமேஇல்லை என்பது மட்டுமல்ல மடிக்கணினி முதல் 14 வகையான கல்விக்கருவிகளைத் தந்து ஊக்குவிக்கும் தமிழகஅரசையே ஏமாற்றிவிட்டு, அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படுவதாகப் பெற்றோர்களையும் சொல்லவைக்கும் சாமர்த்திய-சாதனையை அரசுப்பள்ளிகள் செய்யமுடியாது தானே? இதனால்தானே தேர்வுமுடிவு வந்த நாள்களில் நடந்த- தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தப் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை வங்கிமூலமாகச் செலுத்தவேண்டும் என்று திண்டுக்கல் எம்எல்ஏ பாலபாரதி கேட்டதற்கு, இன்றும் தனியார்பள்ளிகளிடம் பதிலில்லை?
000 மதிப்பெண் குறைகிறது, பெற்றோர் பள்ளிக்கு வந்து பாட ஆசிரியரையும், பள்ளித் தலைமை ஆசிரியரையும் பார்க்கவேண்டும்என்று சொல்லியனுப்பினால் 10விழுக்காட்டு அரசுப்பள்ளிப் பெற்றோர் கூட வருவதில்லை. மாறாக, 75விழுக்காடு மதிப்பெண்ணிற்குக் குறைந்த மாணவரை உடனடியாக --ஏதாவது சாக்குச்சொல்லி-- 9மற்றும்11ஆம் வகுப்புகளில் கழற்றிவிடும்தனியார்,மெட்ரிக் பள்ளிகள்தான் நல்லபள்ளி என்று மக்களின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. இது சரிதானா?
000 பத்தாம்வகுப்பு அரசுத்தேர்வில் பள்ளியில் முதலிடம்பெற்ற கிராமப்புற அரசுப்பள்ளி மாணவரின் வீடுகளுக்குப்போய், “கல்விக்கட்டணம் இலவசம்என்று ஆசைகாட்டி, பதினொன்றாம் வகுப்புக்கு அழைத்துச் செல்லும் நகர்ப்புற மெட்ரிக்பள்ளிகள், அடுத்தஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்கு- ரூ50,000 கொடு, ஒருலட்சம் கொடுஎன்பதாலேயே மீண்டும் அரசுப்பள்ளிக்கு திரும்பும் மாணவர் ஒவ்வொரு நகரத்திலும் எத்தனைபேர் என்பதை, அரசுப்பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் புதிய சேர்க்கைகளை விசாரித்தாலே எளிதில் விளங்குமே? சாதனைக்குள் இருக்கும் இச்சோதனைக்குச்  சொந்தக்காரர்கள்  யார், யார்? என்று மாவட்ட வாரியாகப் பட்டியல் எடுக்கலாமா?
000 8,9, மற்றும் 11 வகுப்புகளில் படித்த மாணவர், அடுத்த வகுப்புக்கு வராமல் இடைநின்ற மாணவர் அல்லது இடமாற்றம் செய்யும் மாணவர் பற்றிய கேள்விகளைக் கேட்டு அரசுப் பள்ளிகளைக் குடையும் ஆர்எம்எஸ்ஏ, மற்றும் எஸ்எஸ்ஏ உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளையும் கேட்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் தரும் பதிலில்தான் உண்மை இருப்பதில்லை. அவராக டிசி வாங்கிக் கொண்டார்என்று மெட்ரிக்பள்ளிகளால் சொல்லப்படும் மாணவரை உண்மையான காரணம்பற்றிக் கேட்டறிந்தால், சாதனைக்குள் இருக்கும் வேதனை வெளிவரும்.
000 அரசுப்பள்ளி ஆசிரியர்களை கற்பித்தல் அல்லாத, வாக்காளர் கணக்கெடுப்பு, தேர்தல்பணி மற்றும் அவ்வப்போது மாறிவரும் கல்வித்திட்டத்திற்கான பயிற்சி- என்று, அரசு அனுப்புவது தவிர்க்க முடியாத தேசியப்பணிகள்தாம், தனியார்,மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் என்ன வெளிநாட்டுக் குடிமக்களா? அவர்கள்மட்டும் ஏன் இதில் பங்கேற்பதில்லை தெரியுமா? “கோடைக்காலச் சிறப்புவகுப்பு வசூல் போய்விடுமே? மதிப்பீட்டுப் பணிக்குக்கூட ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது கல்வித்துறை ஏன் கருணை காட்டுகிறது? அரசு ஏன் இதைத் தொடர்ந்து அனுமதிக்கிறது? கல்வி அலுவலர்கள் அரசின் துறைசார்ந்த பணி-முடிவுகளைப்பற்றி அறிவிக்கவும், விவாதிக்கவுமாக அவ்வப்போது நடத்தும் தலைமைஆசிரியர் கூட்டங்களில் எத்தனை த.ப.தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்?
000 அந்தப் பள்ளிகளிலேயே, பாடம்நடத்த ஒருவர், தேர்வுத் தாள்களைத் திருத்த ஒருவர், ஒரே வகுப்பின் ஒரே பாடத்துக்கு இரண்டு ஆசிரியர்கள், இரண்டுவிதமான பாடநூல்கள் என விதிகள் எதைப்பற்றியும் கவலைப்படாத தனியார்பள்ளிகளின் சாதனையை எப்படிப் பாராட்ட முடியும்? அரசுப் பள்ளிகளில் பத்தாம்வகுப்புப் படித்து, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 3மாணவர்கள்,  3 மாணவிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள்,  2மாணவிகள் என மொத்தம் 10பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் எந்தத் தனியார் பள்ளியிலும் பிளஸ் 2 படிக்க தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. இத்தகைய மாணவர் பிளஸ் 2 படிக்க ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் வீதம் தமிழகஅரசால் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதைச் செயல்படுத்துவதில் நாமக்கல் எப்படி இருக்கிறது என்று தினமணிதான் கண்டு சொல்ல வேண்டும்.
000 தனியார்/மெட்ரிக் பள்ளிகளில் படித்து, கணக்கில் 200க்கு200 எடுத்த மாணவர்பலர், பொறியியல் கல்லூரிகளில் கணக்கில் தோல்வியடைவது ஏன்?“ என, தொலைக்காட்சி விவாத்த்தில் பேசிய பேராசிரியர் ஒருவரின் ஆதங்கம் பொய்யல்லவே?  உருப்போட்டு மதிப்பெண் வாங்கிய மாணவர், வாழ்வில் உருப்படாமல் போவது பற்றி அந்த நூறுவிழுக்காட்டுக்காரர்களுக்கு என்ன கவலை? 
அப்படியெனில், அரசுப்பள்ளிகளை விட்டு, நாமக்கல் தனியார்பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் படையெடுக்கவேண்டிய அவசியம்தான்என்ன? எனுமகேள்வி எழுமானால், அதற்கானபதில் இரண்டுதான்-
முதலாவதாக வருவது, பத்தாம் வகுப்பில் அரசுப்பள்ளியில படித்து 475 மதிப்பெண் எடுத்த மகன்  பன்னிரண்டாம் வகுப்பையும் அதேபள்ளியில் படித்து, மதிப்பெண் குறைந்துவிட்டால்...எனும் சந்தேகம்.
பத்தாம்வகுப்பில் நல்ல மதிப்பெண்பெற்ற மாணவர் பன்னிரண்டாம்வகுப்பில் சாதாரண மதிப்பெண் பெறுவதில் சமூகச்சிக்கல், பதின்மப்பருவப் பாலியல் தடுமாற்றம், அதையும் தாண்டிய குழப்ப உளவியல் தரும் வாழ்வியல் தடுமாற்றம், இதற்குச் சரியாகத் தீர்வுகாண இயலாத பெற்றோரின் சங்கடம் என எல்லாம் தொழிற்படுகின்றன.
இதில், அரசு-கல்வியாளர்-பெற்றோர்ஊடகர் அனைவர்க்கும் பொறுப்புண்டு அல்லவா? இதை மறந்து அல்லது மறைத்து, “மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும்வழக்கமாய், கடுமையான பயிற்சி எனும் பெயரில் மாணவரை வதைப்பது சரியான தீர்வாகுமா?
இரண்டாவதாக, “ஒருவேளை, மதிப்பெண் குறைந்தால், மருத்துவம் படிக்கப் பலபத்து லட்சமும், பொறியியல் படிக்கச் சிலபல லட்சமும் செலவழிக்க வேண்டிய சூழலில், இப்போதே 5லட்சம் செலவழித்து விட்டால் பலலட்சம் மிச்சம்தானே?எனும் பெற்றோரின் சிக்கன உணர்வுதரும் செயற்பாடு. 
நடுத்தரவர்க்கத்தின் ஆடம்பரத்தில், கல்வியும் அகப்பட்டுத் தவிக்கிறதே!? மேல்தட்டு வர்க்கமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பும் நடுத்தர வர்க்கம், தன் பிள்ளைகள் மெட்ரிக்பள்ளியில் படிப்பதைச் சொல்லிக்கொள்வதில் குடும்ப கௌரவமே உயர்வதாக அல்லவா நினைக்கிறார்கள்? காமராசர் காலத்தில் கல்விக்கு 30%ஒதுக்கீடு செய்யப்பட்டது,  இப்போது 14%ஆக குறைந்திருப்பது மக்களுக்கு மறந்தேவிட்டதே!  
எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் தமிழருக்கு, கல்வியும், மருத்துவமும் மட்டும்தானே எட்டாக்கனியாகிவிட்டது. மற்ற எல்லா இலவசங்களையும் நிறுத்திவிட்டு, உயர்கல்வியும், நல்ல மருத்துவமும் இலவசம் என்று செயற்படுமானால், அதுவல்லவா புரட்சிகரமான அரசு? கல்விச் சேவகர்கள் அப்போதும் இருந்தால், அப்போதும் சாதித்தால் அதை உண்மையான சாதனை எனலாம்.
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்என பாரதி வருத்தப்பட்ட மனிதரை உருவாக்கும் பள்ளிகளைக் கண்டிக்காமல் தினமணியும் பாராட்டுவது சரிதானா?
இப்படியான கேள்விகளைக் கேட்பதன் மூலம், தனியார் பள்ளிகளில் உள்ள சில நல்லவற்றையும் புறந்தள்ளிவிடக் கூடிய அபாயம் இருப்பதை நான் மறுக்கவில்லை. அது எனது நோக்கமும் இல்லை.
11-05-2013-தினமணி சொல்வது போல, “மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தைக் கலைத்துவிட தமிழக அரசு பரிசீலனை என்பது நல்லசெய்திதான். அரசுதான் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரேமாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிஎடுக்க வேண்டும். இன்னமும், சமச்சீர்க்கல்விப் புத்தகங்களோடு, மெட்ரிக் புத்தகங்களையும் வாங்கச்செய்யும் பள்ளிகளைப் பெற்றோர்களும் நம்புகிறார்களே! தன் மகள்படிக்கும் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை எளிதாகச் சந்திப்பதும், ஆசிரியர்களோடு விவாதிப்பதும், பிறகு ரொம்ப மோசம்பாஎன்பதும் ஒருபக்கம்.  அதேபெற்றோரின் மகன்படிக்கும் மெட்ரிக்,தனியார்பள்ளிக்குள் நுழையக் காவலரிடம் கெஞ்சிக்கொண்டு நின்றுவிட்டு, “அவ்வளவு ஈசியா உள்ள போயிர முடியாது, ரொம்ப ஸ்ட்ரிக்டான ஸ்கூலுல்ல?  என்று சான்று தருவதும் நடக்கிறதா இல்லையா? இவர்களை, “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவே..ன் னு தனியார்மெட்ரிக் பள்ளிகள் சொல்வதை நாம் மறுக்கவா முடியும்?
என்றாலும், “கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுமியன் என்று கல்விவள்ளல் அழகப்பரை வெண்பாவில் புகழ்ந்த உண்மை இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவருக்கு அடுத்தவீட்டில், அண்ணாமலைப் பல்கலையில் அடித்த கொள்ளைகளையும், ஆடிய கூத்துகளையும் பார்த்துவிட்டுத் தமிழகஅரசு நேர்மையாகவும், துணிவாகவும் எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டி வாழ்த்தி வரவேற்றனவே?
000 நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்பட்டுவரும் தனியார்பள்ளிகளில் அனேகமாக இடஒதுக்கீடு பற்றிப் பேச்சே எழுவதில்லை. இதில் பங்காளர்களாக இருக்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பற்றியும் வெளியே வருவதில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் மந்திரியான பலர் தம் துறையையே தனது நிறுவனத்திற்குத் திருப்பிவிட்ட கதைகள் மக்களுக்குத் தெரியாதுதானே?
இவ்வளவு கேள்விகளையும் தாண்டி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெரிதாகச் சாதித்து விட்டார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. சாதிக்க வேண்டியது ஏராளமிருக்கிறது. பல்லாண்டுகளாக நூறுவிழுக்காடு வெற்றியைத் தருவோரைக் கண்டறிந்து அட நல்லாசிரியர் விருது தரவேண்டாமய்யா- சும்மா, நம் அம்மா கையால் ஒருகையெழுத்துப் போட்டு ஒரு பாராட்டுக் கடிதம் தருவது, அதை அவரவர் பணிப்பதிவேட்டில் ஒட்டுவதுபோல சாதாரணமான எதையுமே நம் அரசு செய்வதில்லையே? இன்னொருபக்கம் தேர்ச்சிதரத் தவறும் ஆசிரியர்களை நேர்மையான அலுவலர்கள் குறைந்தபட்சம் விளக்கம் கேட்கலாம். தொடர்ந்து தவறும் ஆசிரியர் பதவிஉயர்வைத் தள்ளிப்போடலாம். கடமைதவறும் ஆசிரியர்களைத் துறைநடவடிக்கை எடுத்து தண்டித்தால் சிலசங்க-அரசியல்-தலைவர்கள் அலுவலரையே பந்தாடுவதும் கல்வித்துறையில் நடக்கத்தானே செய்கிறது? கண்காணிப்பதற்கான ஏற்பாடும் இல்லையே?
எனவே, “நல்லது செய்தல் ஆற்றீ ராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்என்றுதான் நல்லோர் பலரும் நழுவுவோராய் ஆயினர்.  தொடரும்கொடுமை என்னவென்றால், தினசரி செய்தித்தாள்  படிக்கும் பழக்கம்கூட இல்லாத பலர் ஆசிரியாக இருப்பதும், “சீனியாரிடியில் தலைமை ஆசிரியர் ஆகிவிடுவதும் தான்.
படித்த ஆசிரியர்களால் மண்ணும் பயனில்லை, படிக்கின்ற ஆசிரியர்களால்தான் புதிய பாரதத்தை உருவாக்க முடியும். ஆயினும் நல்ல ஆசிரியர்களை இனங்காணத் தெரியாமல், பாட நூல்களை மாற்றுவது, அதிலும் பல்லாண்டுகளாக பழம்தின்று கொட்டை போட்டகுழுவே, அரசு மாறினாலும் ஆள்மாறாமல் தொடர்வது...எனத் தொடரும் குளறுபடிகளுக்கு அளவேது?
ஆனால், கடந்தபல ஆண்டுகளைவிட இந்தாண்டுஎவ்வளவோ குறைபாடுகள் இருந்த போதிலும்- 100அரசுப்பள்ளிகள் பன்னிரண்டாம்வகுப்பில் 100விழுக்காடு வெற்றிகண்ட செய்தியைத் தினமணி தனது தலையங்கத்தில் பாராட்டி, அதை உயர்த்தும் யோசனைகளைச் சொல்லியிருக்கவேண்டாமா? அதைவிட்டு, இவ்வளவு திருகுதாளங்கள்செய்து வெற்றிகாட்டும் தனியார்பள்ளிகளைத் தினமணியே இவ்வளவு புகழ்வது நியாயம்தானா? என்பதை யோசிக்கவேண்டுகிறேன். நான்சொன்னதில் நியாயமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். மாறாக, எனக்குத் தெரியாத உண்மைகள் ஏதேனும் இருந்து சொன்னால், தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.   
        “எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
       அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”  குறள்-355
-------------------------------------------------- 
மறுபதிப்புச் செய்த இணைய நிர்வாகியர்க்கு எனது நன்றி
இணைப்பு-http://www.tnkalvi.com/2013/06/blog-post_6963.html#more 
------------------------------------------------------------------
 இப்போது, அரசுப்பள்ளிகளில் பெருகிவரும் கல்விஉதவிகள், அறிவியல் ஆய்வக, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த நினைக்காத பெற்றோர், கெடுபிடிகளே கட்டுப்பாடு என்றும், பெரிய பெரிய கட்டடஙகளைப் பார்த்தும், மயங்கித் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும்போது, அவர்கள் இவர்களை ஒட்டக் கறந்துவிடுவதும்மாணவரும் மனிதர்தான் என்பதை மறந்துவிடுவதும்  தொடர்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது. - நா.மு. 10-05-2014 
------------------------------------------------------------  


20 கருத்துகள்:

  1. பெயரில்லாசனி, மே 10, 2014

    வணக்கம்
    ஐயா.
    தகவலை மிக விரிவாக தொகுத்துள்ளீர்கள் நன்றி ஐயா.
    எனது பக்கம் கவிதையாக.
    அன்று ஒருநாள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன். உங்கள் தளத்தில் பின்னூட்டமிடுவதில் ஏன் இத்தனை சிக்கல்? பலமுறை முயன்றும் முடியவிலலை. எனவே உங்கள் கவிதைக்கான பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு மன்னியுங்கள். காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறினாலும் அந்த நினைவு வடு நீங்காது தம்பி. அருகில் இருந்தும் எம் சொந்தங்களைக் காக்கமுடியாத கையறுநிலையில் ஆற்றாமை பெருகும் நினைவுகளில் எமது தலைமுறையே வெட்கித் தலைகுனிகிறத. எந்த வார்த்தையிலும் சொல்லித்தீராத அனுபவங்களை உங்களைப் போன்றோர் எழுதி எழுதித் தீருங்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் அவை நிச்சயமாக “செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத“ செயல்களுக்கான பாடங்களாகும். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை..மன்னியுங்கள்

      நீக்கு
  2. பெயரில்லாசனி, மே 10, 2014

    forget about other people. can you provide how many % of Govt School Teachers children studying in the GOVT Schools. i bet not more then 5%.
    95% of the parent (G.T) knows their caliber.

    for GOVT Teachers Salary should be direct link to performance of the student result. in the mean time GOVT should equip them in all means.

    Seshan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஏன் ஆங்கிலத்தில் அதுவும் “அனாமிகா“வாக எழுதுகிறீர்கள்? நான் எழுதியதற்கான நியாயங்களை விட்டுவிட்டு அத்தனை ஆசிிரியர்க்கும் வக்கீலாக்கப் பார்க்கிறீர்களே இது சரிதானா? என் மகன் நான் பணியாற்றிய அரசுப்பள்ளியில்தான் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் கணினிப்பிரிவில் படிததான். இதுசரியில்லையா?

      நீக்கு
  3. பெயரில்லாஞாயிறு, மே 11, 2014

    Good, As i mentioned exceptions 5% and can you confirm all your colleagues children did the same way.(in is not the freedom of choice, like choose the product in the super market, education is the only trump card in our life to move forward. so it should be no doubt area.

    Seshan

    பதிலளிநீக்கு
  4. நன்றி சேஷன். வலைநண்பர் “மதுரை இளைஞன்“ கேட்டிருக்கும் ஒரு நல்ல கேள்வியை உங்களிடம் கேட்கலாமா? பார்க்க - http://avargal-unmaigal.blogspot.com/2014/05/private-vs-govtment-school.html பள்ளிப்படிப்பு வரை, தனியார் பள்ளிகளை நாடுவோர், வேலைவாய்ப்புக்கு உரிய உயர்கல்வி என்று வரும்போது மட்டும் ஐஐடி,எய்ம்ஸ்,அண்ணா பல்கலை, அரசு மருத்துவக் கல்லூரிகளை நாடுவது ஏன்? அங்கு மட்டும் அரசுத்துறை இனிக்கிறதா? இனி அரசுப் பள்ளிகளில் படிப்போர்க்கே அரசு உயர்கல்விநிறுவனங்களில் முன்னுரிமை என்று கொண்டுவர வேண்டும் என்னும் நண்பர் தி.ந.முரளிதரனின் -கருத்தே இதில் சரியானதென்று நினைக்கிறேன்.இதுபற்றிய உங்கள் கருத்து?

    பதிலளிநீக்கு
  5. செழிப்பான வியாபாரம்...! வேறு என்னத்த சொல்ல... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் வியாபாரம் நாட்டையும் நமது அடுத்த தலைமுறையையும் அல்லவா சீரழிக்கிறது? அதனால்தான்... நன்றி அய்யா.12-05-14 காலை உங்களைத் தொடர்பு கொள்வேன் (அல்லது மாலை நேரில் சந்திப்பேன் -எல்லாம் நம் இணையத் தமிழ் தொடர்பாக..)

      நீக்கு
  6. அற்புதமான கட்டுரை ஐயா!
    "ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் சமைப்பது கடினமல்ல
    இருப்பதை வைத்து அறுசுவை உணவு படைப்பது சுலபமல்ல"
    என்று அரசுப்பள்ளியின் நிலையை ஒரு கவிதையில் கூறி இருந்தேன்.
    சமச்சீர் கல்வியை தனியார் பள்ளிகள் எதிர்த்தன. ஏனெனில் அது தரமில்லை என்பது அவர்கள் வாதம்.
    ஆனால் +2 பாடத்திட்டம், தமிழகத்தில் சி.பி.எஸ்.சி.பள்ளிகளைத்தவிர மற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒன்றே. ஆனால் +2 பாடத்தை மட்டும் இவை தரமற்றது என்று ஏன் ஒதுக்கவில்லை?. காரணம் சி.பி.எஸ்.சி போன்று இருந்தால் மதிப்பெண் பெறுவது கடினம்.அதனால் அவற்றை எதிர்க்கவில்லை.
    பல பள்ளிகள் சிபி எஸ்சி க்கு மாறிவிடுவோம் என்று பூச்சாண்டி காட்டின. ஆனால் எனக்குத் தெரிந்து எந்த பள்ளியும் மாறியதாகத் தெரியவில்லை. ஏனெனில் மனப்பாடப் பாச்சா அங்கு பலிக்காது.
    பெற்றோர் களுக்கும் இதில் பங்கு உண்டு .தரக் குறைவான பாடத் திட்டம் என்று சிபி எஸ். சி பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைப்போர். +2 வரும்போது மட்டும் ஸ்டேட் போர்டுக்கு மாறிவிடுவர். அப்போது தரத்தைப் பற்றி சிந்திப்பதில்லை.இது அப்பட்டமான சுயநலம் அல்லவா? இதனால் பாதிக்கப் படுபவர்கள் ஏழை மாணவர்கள்தானே!
    இதுபோன்று மாறுவதற்கு அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்பது எண் எண்ணம்.
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அருமையான கருத்தை, மதுரை இளைஞரின் தளத்தில் பார்த்து மகிழ்ந்தேன். கூட்டங்களில் எனது பேச்சில் அதைப் பயன் படுத்தி உங்கள் பேரையும் சொல்வேன் என உறுதியளிக்கிறேன். நாம் இதைச் சும்மா விடக்கூடாது அய்யா பணிதொடர்வோம்

      நீக்கு
  7. +12 மாணவர்களில் பலரும் மறுமதிப்பீடு செய்தபின் அதிக மதிப்பெண்கள் வாங்குவது இப்போதெல்லாம் இயல்பாகவே நடைபெறும் செயல். அப்படியென்றால் அதைத் திருத்திய ஆசிரியரின் கல்வித்தரம் எப்படியிருக்கும்? மேலும் இதுபோன்ற ஆசிரியர்களின் பட்டியலை எடுத்து எத்தனை பேர் தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றுபவர்கள் என்று தெரிவித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
    இதுபற்றி உங்கள் கருத்து.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாவம் அய்யா. அவர்கள் நமது பொருளாதாரச் சூழலின் அடிமைகள். அவர்களின் திறமையில் சந்தேகம் வேண்டாம். ஆனால், அவர்களைவிடவும் திறமை இருந்தும் அந்தத் திறமையை -சம்பளம் வாங்கும் பள்ளிக்குப்- பயன்படுத்தாத அரசுப் பள்ளி ஆசிரியர்களைத்தான் “கவனிக்க“ வேண்டும்.

      நீக்கு
  8. தம்பி! முத்து நிலவன் பெயருக்கேற்ப முத்தான கருத்துக்களை முறையாக விளக்கி மிக அருமையாக பதிவிட்டு தக்க பதிலும் தந்துள்ளது கண்டு வியக்கிறேன்! பெருமைப் படுகிறேன் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகள் கண்டு பூரித்தேன் அய்யா. எல்லாம் தங்கள் தலைமையில் நடந்த 1985-86, 89 காலத்து “ஜேக்டீ-ஜேக்சாட்டோ“ போராட்டம் தந்த அனுபவத் தெளிவுதான் அய்யா. 56நாள்கள் சிறையிருந்த கால அனுபவங்கள் ஆயுளுக்கும் மறக்காதே அய்யா! தாங்கள் கற்பித்த பாடங்களை என் அனுபவத்தோடு இப்போது திருப்பித் தருகிறேன் அய்யா! நன்றி தங்களுக்கே!

      நீக்கு
  9. அவசியமான அருமையான கட்டுரை ...
    ஜோர் ...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மது.. தங்களின் பலதரப்பட்ட பணிகளின் இடையில் என் தங்கையிடம் பேசியதை மகிழ்வாக உணர்ந்தேன். நமது வீதி தளத்தை முறையாக நமது வலைப்பக்க நண்பர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த வேண்டும். படித்த படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியி்ட்டால் எதிர்பார்ப்புக்கேற்ற விளைச்சல் வரும்.

      நீக்கு
  10. எவ்வளவோ இலவசங்களை அறிவிக்கும் அரசு கல்வியை கொடுத்தால் போதுமே நாடும், நாமும் பயன்பெற.
    Killergee
    www.Killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. ஆழமான கருத்துகளுடன் அருமையான கட்டுரை. படித்து முடித்ததும் -
    என்னவோ தெரியவில்லை.. நெஞ்சம் கனக்கின்றது.

    நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க!..
    அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  12. மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களையே இன்றைய கல்விச்சாலைகள் உருவாக்குகின்றன. 9 ஆம் வகுப்பிலேயே 10வது பாடத்தையும், 11ஆம் வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புப் பாடத்தையும் படித்த மாணவர்கள் நிறைய மதிப்பெண் எடுப்பது வியப்பா என்ன?

    இன்றைய கல்வி குறித்த பல்வேறு பரிணாமங்களையும் அழகா எடுத்துரைத்தீர்கள் நண்பரே..

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தால் தான் அரசுவேலை!
    என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் தான் இந்த நிலை மாறும் என்ற எண்ணமே மனதில் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாவெள்ளி, மே 16, 2014

    Well Said,
    இனி அரசுப் பள்ளிகளில் படிப்போர்க்கே அரசு உயர்கல்விநிறுவனங்களில் முன்னுரிமை என்று கொண்டுவர வேண்டும் என்னும்

    in this case did the Govt Teacher Groups have any plan to implement or fight the above (in general only for salary hike / transfer they will open their mouth and needs to lower the marks for skill level tests.

    Seshan

    பதிலளிநீக்கு