தமிழில் மாணவர் தோல்விக்குக் காரணமென்ன?



கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடிஎன்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

10ஆம் வகுப்பு மாணவர்தோல்வியில் முதலிரண்டு இடங்களில் கணிதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் தான் எப்போதும் போட்டி எனினும்,  அடுத்த இடத்தில் தமிழ்ப்பாடம் தொடரவே செய்கிறது. இந்த ஆண்டும் இப்படித்தான் தெரிகிறது. இது ஏன்?
இதை நண்பர்கள் பலரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால், கடந்த 34 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றியதாலும், தமிழனாக இருக்கும் உரிமையாலும், இதற்கான பதிலைத் தேட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் பணியாற்றிய அரசுப் பள்ளியில், என் வகுப்புகளில், பெரும்பாலும் 100 விழுக்காடு தேர்ச்சியே இதுவரை பெற்றிருந்தாலும், கடைசி ஆண்டு என்வகுப்பில்  படித்த 34 மாணவரில், மனோஜ்குமார் என்னும் மாணவர் 500க்கு 490 (தமிழில்99%)மதிப்பெண்களுடன், பத்துக்கும் மேற்பட்டோர் 90க்கு மேல் பெற்றிருந்தும், 34இல்ஒருவர் என்வகுப்பில் -தமிழில்- தோல்வி யடைந்திருப்பதை ஆற்றாமையுடன் தெரிவித்து, இந்தக் கேள்விக்கு விடைகாண முயல்கிறேன்.
காரணங்கள் பல இருந்தாலும் 
முக்கியமானவற்றைப் பட்டியலிடுவோம் –
1. மேல்நிலைக் கல்விக்குத் தமிழ்மதிப்பெண் தேவையில்லை எனும் மாணவர் உணர்வு -  பத்தாம் வகுப்பை அடுத்து, மாணவர் செல்லும் மேல்நிலைக் கல்வியிலும், தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்வியிலும் தமிழ்ப்பாடம் வெறும் உப்புக்குச் சப்பாணிதான் 11ஆம் வகுப்புச் சேர்க்கையின்போதே, தமிழை ஒதுக்கும் நிலை உருவாகிவிட்டது. தொழில்நுட்பக் கல்வியில் கணித-அறிவியல் பாடங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. எனவே, மொழிப்பாடம் வெறும் மனப்பாடச் சுமை என்பதாகவே மாணவர்கள் புரிந்து கொள்வதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

2.      தமிழ் உயர்கல்விக்கும் தேவையில்லை எனும் தெளிவு- தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்  அதற்குமேல் போகும் –தொழிற்கல்வி வகுப்புகளுக்கு -எந்தப் பயனையும் தரப் போவதில்லை. கணக்கில் கொள்ளப்படுவதும் இல்லை. “கட்-ஆஃப்“ எனும் உயர்கல்விக்கான அடிப்படை-மதிப்பெண் தகுதி தமிழுக்கில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்கும், இயற்பியல், வேதியியல், கணித மதிப்பெண்கள் மட்டுமே பொறியியற் கல்விக்கும் கணக்கில் கொள்ளப்படும் நடைமுறையை நமது அரசுகள் கொண்டுள்ளன. பிறகு தமிழ் எதற்கு? சும்மா தேர்ச்சிபெற்றால் போதுமல்லவா? “தமிழைப் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதே!“ எனும் குரல்கள் “தமிழே வேஸ்ட்“எனும் மனநிலைக்கு மாணவரைத் தள்ளாதா? 

3. தமிழ்ப்பாட நூல்களின் தரம்,  நம் சமகாலத்திய வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கிறதா? எனும் கேள்வி மிகப்பெரிய ஆய்வை உள்ளடக்கியது. “அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழந்திருக்கும் கவியுளம் காண்கிலார்“-என பாரதி சொன்னது போல, இலக்கியச் சுவையை மாணவர் உணர்ந்து  படிக்கும் விதமாகவோ, இலக்கணத்தைச் சுமையாகக் கருதாமல் அது நம் வாழ்நாள் முழுவதும் தேவை என மாணவர் விரும்பிக்கற்கும்படியோ, வாழ்க்கை விழுமியங்களை உணரச்செய்து, மனித வாழ்வைப் பொருளுடையதாக்க வேண்டும் எனும் தேடலைத் தூண்டுவதாகவோ நமது தமிழ்ப் பாடநூல்கள் –பாடத்திட்டங்கள்- தற்போது இல்லை என்பதும் முக்கியம்.

4. தமிழகப் பண்பாட்டுச் சூழல்.  நல்ல தமிழ்ச் சொல் எதுவும் மாணவர்களின் கண்கள் காதுகளில் விழாதவாறு நமது தமிழ்நாட்டுச் சூழல் வளர்ந்துள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி, கணினி, செல்பேசி முதலான ஊடகங்களில் நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலம் பேசுவோரை விவரமானவராகவும், நல்ல தமிழில் பேசுவோரை காட்டுவிலங்காண்டிகள் போலவும் பார்க்கும் பார்வை. இதை ஆங்கிலேயர் போனபின்னும் ஆங்கில மோகம் போகவில்ல என்றே சொன்னாலும், ஊடகங்களின் அலட்சியம் அடுத்த தலைமுறையில் தமிழ் என்னாகுமோ  என்னும் அச்சத்தை வளர்க்கிறது. தமிழால் என்ன பயன்? என்று கேட்பதும், “தாயால் என்ன பயன்? என்று கேட்பதும் ஒன்றல்லவா? இது நம் தமிழர்க்கு எப்போது புரியப்போகிறது? இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து?  

5.    உலகமயச் சூழல் கூரையேறிக் கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம் என்பார்கள். என்னவோ தமிழ்நாட்டில் படிக்கின்ற அவ்வளவு பிள்ளைகளும் அமெரிக்காவுக்கோ ஐரோப்பிய நாடுகளுக்கோ போய்விடப்போவது போல “எம்என்சி.கம்பெனிகள்“தான் வாழ்க்கையின் உச்சபட்ச வேலைவாய்ப்பு என்பதான எண்ணம் பெரும்பாலான தமிழ்நாட்டுப் பெற்றோர் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது. அதிலும் 9 (அ) 11ஆம் வகுப்பில் நாமக்கல், ஈரோட்டில் தம் பிள்ளைகளைச் சேர்க்க, லட்சங்களோடு கிளம்பும் போதே, பெற்றோரின் கண்களில் டாலர் கனவுகள்! இது நம் நாட்டின் நாளைய இறையாண்மைக்கே சிக்கலாகும் என்பது பற்றிக் கவலைப்படாத இன்றைய தமிழ்நாட்டின் அரசியல்-சமூகச் சூழல்தான் இதன் அடிப்படை.

6. கடைசியாக ஆனால் முக்கியத்துவம் மிகுந்த காரணங்கள் இரண்டு.  முதலாவது - 26-05-2014தேதியிட்ட மதுரைப் பதிப்புத் தினமலரில் வந்த செய்தி. மதுரை ஒத்தக்கடை அரசுப்பள்ளியில் பத்தாம்வகுப்பில் 400 மாணவர்க்கு, தமிழாசிரியர் ஒருவர்தான் இருக்கிறார் என்பதோடு மதுரையில் பெரும்பாலான பள்ளிகளில் இதுதான் நிலையெனில் தமிழ்ப்பாடத்திற்கு அரசுதரும் முக்கியத்துவம் கேள்விக்கு உள்ளாவதையும் அது சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடக் கேள்வித் தாள்களைவிடவும் தமிழ்ப்பாடக் கேள்வித்தாளின் தெளிவின்மை இது, என்போலும் தமிழாசிரியர் பலரும் தொடர்ந்து சொல்லிவரும் குறைபாடு. கண்டு கொள்வோர்தான் இல்லை.

இவையெல்லாவற்றையும் கடந்து, தமிழாசிரியர்களின் புரிதல், அர்ப்பணிப்பு, ஊதியத்திற்கேற்ற உழைப்பு இவற்றிலும் குறையிருக்கலாம். அதுபற்றியும் பேசவேண்டும். ஆனால், அவர்களை மட்டும் குற்றம் சொல்வது, நல்ல விளைவுகளைத் தராது என்பதால்தான் இவ்வளவும் பேசவேண்டியுள்ளது.
           (படங்களுக்கு நன்றி - “கல்விச்சோலை“ மற்றும் கூகுள் )

பின் குறிப்பு – இதுதொடர்பான வேறு சில கட்டுரைகள் படிக்க -
(1)தமிழாசிரியர் கழகப் புதுகை மாவட்டச்செயலர் சி.குருநாதசுந்தரம் http://gurunathans.blogspot.in/2014/05/blog-post_28.html


(2)
தமிழாசிரியர், வலைப்பதிவர் மகா.சுந்தர் -http://mahaasundar.blogspot.in/2014/05/blog-post_29.html#more

இவைபோலும் சிந்தனைப் பெருக்கம் நல்ல தீர்வைத் தரட்டும்.

(இக்கட்டுரை மீள்பதிவே எனினும், இந்த ஆண்டும் இதேபோல் மாணவர் நிலை தொடர்வதால் இதற்கான தேவை உள்ளது) ------------------------------------------------ 

24 கருத்துகள்:

  1. டாலர் கனவுகள் உட்பட உங்களால் பலவற்றை அறிய முடிகிறது... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில் வந்த பதிவு அய்யா !. குறைகளை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தி ,விடை காணவேண்டிய சரியான நேரம் இது .தொடர்ந்து சிந்திப்போம்!!!

    பதிலளிநீக்கு
  3. வெகு துல்லியமான புள்ளிவிவரங்களுடன் அருமையான அசத்தலான பதிவு..
    வெகு முக்கியமான காரணம் தமிழாசிரியர்களின் மனப்பாங்கு...

    உங்களுக்கு தெரிந்ததுதான் ஒரு மாணவர் தெரிந்துகொண்டுள்ள வார்த்தைகள்தான் அவரது அறிவின் அளவுகோல் எனில் எத்துணைத் தமிழ் வார்த்தைகளை அவர்கள் நேசித்து அறிந்துகொள்கிறார்கள்.

    தமிழில் தொடங்கினால் தான் அடுத்த பாடங்களுக்கும் இது தொடரும்..

    இதை எத்துணைத் தமிழ் ஆசிரியர்கள் உணர்ந்துள்ளனர்? த.ம. ஒன்று

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாதிங்கள், மே 26, 2014

    Tamil Teachers are main concern for this results. i studied in Govt School until +2, in Tamil medium, unfortunately i started love the Tamil in my Engg. college only through private library tamil books. until my school days none of the teachers thought the language in that sweet (likely)manner.

    i have quoted this to my tamil teachers later, but they are not agree.

    Seshan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேஷன்!
      உங்கள் அனுபவம் விதி விலக்கு என்றுதான் நினைக்கிறேன்.
      தமிழில் படித்தவரை அதன் அருமை உங்களுக்கு தெரியவில்லை. புரியாத ஆங்கிலத்தில் படிக்கும் நிலையின் போதுதான் தமிழின் அருமை உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.மிக சிறந்த தமிழாசிரியாரால் அரசு பள்ளிளில்தான் இருக்கிறார்கள்
      பெரும்பாலும் அரசு பள்ளிகளில் நினைவு கொள்ளத் தக்கவர்களாக இருப்பவர்கள் தமிழாசிரியர்களே!
      தற்போதைய சூழ்நிலையில் தமிழாசிரியர்களை மதிக்கும் மனப்பாங்கு குறைந்து வருகிறது.கவிஞர் ஐயா சொன்னது போல அவர் பெற்றுத் தரும் மதிப்பெண் உயர் படிப்புக்கு உதவாது என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம்.
      தமிழ் படிப்பதற்கு அறிவுத் திறன் தேவையில்லை என்ற மனப்பான்மையை பெற்றோர் நினைக்கிறார்கள். சமூகமும் அதே எண்ணத்தைக் கொண்டிருக்கிறது.
      "எல்லா பாடமும் நல படிக்கிறான். ஆனா என் மகனுக்கு தமிழே வாராது என்று பெற்றோர்" பெருமையாக பீற்றிக் கொள்வது மாணவனின் அறிவுத் திறனுக்கு மொழியறிவின்மை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணம் வேரூன்றிக் கிடப்பதை காட்டுகிறது. உண்மையில் இது கவலைக்குரியது .

      நீக்கு
  5. சிறந்த ஆய்வுப் பதிவு
    மிக்க பயனுள்ள தேடல்
    நம்மாளுகள்
    புரிந்துகொண்டு வெற்றி பெற
    வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  6. காலம் தாழ்த்தாது வந்த அருமையான பதிவு ஐயா.
    தமிழ் மொழியை மையமாய வைத்துப் பேசி ஓட்டு வாங்கத்தான் அரசியல் வாதிகள் முயல்கிறார்களே தவிர, தமிழ் மொழிக்கு உரிய இடததினைக் கொடுக்க முன்வருவதில்லை. கட் ஆப் என்பதே அனைத்துப் பாடங்களுக்கும்தான் என்ற நிலை தோன்ற வேண்டுமய்யா, தமிழ் நாட்டிலே, தமிழே படிக்காமல், பள்ளிக் கல்வியை முடிக்கலாம் என்ற நிலையினை மாற்ற வேண்டும் ஐயா,
    தங்களுக்குத்தெரிந்து வேறு எந்த மாநிலத்திலாவது, அவர்களுடைய தாய் மொழியினைப் பயிலாமல், பள்ளிப் படிப்பைப் படிக்க இயலுமா.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான ஆய்வு.
    அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான தமிழாசிரியர்கள் திறமையானார்கள். பாடத்திற்கு அப்பாற்பட்டு பல்வேறு செய்திகளை சுவையாக சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எப்போது தமிழ் வகுப்பு வரும் என்று காத்திருப்போம். இப்போது அப்படியல்ல கேள்வித்தாளில் இடம் பெறாத பகுதிகளில் ஆர்வம் காட்டுவதில்லை.
    மெட்ரிக் பள்ளிகளில் எனக்குத் தெரிந்து உணர்வின்றி பாடம் நடத்தி எந்த பகுதியில் எப்படி கேள்வி வரும் எப்படி விடை எழுதவேண்டும் என்று பயிற்சி அளிப்பவர்களாகவே உள்ளனர்.. ஆனால் 99 மதிப்பெண்களை பெறுகின்றனர். அவர்களை சொந்தமாக ஒரு கட்டுரை எழுத சொன்னால் போதும் அவர்களின் தமிழறிவு தெரிந்து விடும்
    அதனால்தான் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் அரசுபள்ளிகளில் படித்தவர்களாகவே உள்ளனர் . இதில் விதிவிலக்குகளும் உண்டு .
    மற்ற ஆசிரியர்களை விட எனது +2 தமிழ் ஆசிரியர் கோ. பெரியண்ணன் அவர்கள்தான் நினைவில் நிற்கிறார். மற்ற ஆசிரியர்களின் பேர்கள் கூட நினிவுக்கு வரவில்லை.

    தமிழில் தேர்ச்சி பெறாமல் போவதற்கு இன்னொரு காரணம் சரளமாக வாசிக்க அறியாமலேயே 10 வகுப்பு வரை வந்து விடுவதுதான்.இதற்கு பெற்றோர் ஆசிரியர்,சமூகம், அரசு அனைத்திற்கும் பங்கு உண்டு. ஆரம்பக் காலையில் பள்ளிக்கு வரவைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில் அவர்கள் படிக்க வைப்பது மிகப் பெரிய சவால்தான்.
    ஒரு வகுப்பில் தமிழில் ஒரு மாணவன் 99 மதிப்பெண் வாங்கினாலும் அதே வகுப்பில் இன்னொரு மாணவன் தேர்ச்சி பெறாமல் போனால், அதிக மதிப்பெண் பெற வைத்ததற்காக பாராடுபவர்களை விட தேர்ச்சி பெர்தவனை குறிப்பிட்டு ஆசிரியரை குறை கூறுபவர்களே அதிகம்.

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்க வேண்டிய விஷயம். அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. பல்துறைச் சான்றீர்,
    தாங்கள் கூறிய கருத்துக்கள் உடன்பாடே!
    தேவையும் ஆர்வமும் தான் எதைக் கற்கவும் துணைபுரியும் இரு தூண்டுகோல்கள். தமிழ் கற்க வாழ்வியல் தேவை குறைவுதான்!
    ஆனால் ஆர்வம்? அதை ஆசிரியர் அல்லரோ ஏற்படுத்த வேண்டும்.
    மாணவரின் இந்த வளரிளம் பருவம் தங்கள் கதாநாயகனை/கதாநாயகியைத் தேடி, அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவர்களைப் போல் ஆக விழையும் வெறிகொண்ட பருவம்! ஒரு காலம் வரை மாணவர்களின் இக் கதாநாயகர்களாகத் தமிழாசிரியர்கள் இருந்தனர். மாணவரின் ஆர்வம் தமிழ் மேல் திரும்ப இதுவும் ஒரு காரணம், ஆசிரியரைப் பிடித்தால் பாடமும் பிடிக்குமே!
    அடுத்து, பத்தாம் வகுப்பிற்கான நுழைவுத்திறனற்று [ Entry Skills] வரும் மாணவர்கள்.. “பத்தாம் வகுப்பில் தான் அவனுக்கு எழுதப் படிக்கவே சொல்லித் தர வேண்டியிருக்கு. எப்படி பத்தாம் வகுப்பு பாடத்தை நான் முடிக்கிறது“, என ஒலிக்கும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் குரல். இத்தகு மாணவர்களை நீங்களும் எதிர்கொண்டிருக்கக் கூடும். இப் பழியை ஏற்க வேண்டியவர்களும் ஆசிரியர்களே!
    மாணவரின் ஆர்வத்தைத் தூண்டுதல் மற்றும் பாட அறிவுடன் கூடிய கேட்டார் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் நுவல்திறம் இருந்திடல் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் என நம்புகிறேன்.அதையும் மீறித் தோல்வியுறுவோர் இருக்கலாம்.
    விதிவிலக்குகளை விதிகளாகக் கொள்ள வெண்டுவதில்லையே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஐயா, காட்டுவிலங்காண்டிகள் என்ற வாா்த்தை புதுமையாக இருக்கிறது. தங்களின் ஆய்வை தமிழாசிாியா்கள் மட்டுமல்ல அனைவரும் சிந்திக்க வேண்டிய விசயம் ஐயா. ஆனால் சிந்திக்கதான் மற்றவா்களுக்கு நேரம் இல்லை போலும். மிகவும் வருத்தத்திற்குாிய நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்காக போராடுவது.. உண்மையில் இன்றைக்குள்ள பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலவழிக்கல்வியைக் கற்கதான் விரும்புகிறாா்கள்.. சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது தமிழாசிாியா்கள் கூட தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதையே பெருமையாகக் கருதுவது. ஆங்கிலம் கற்றுக் கொள்வது தவறில்லை. அதற்காகத் தாய்மொழியை உதாசினப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்..இந்நிலை விரைவில் மாறும் என்று எதிா்பாா்ப்போம்.

    பதிலளிநீக்கு
  11. தமிழை பாடமாக நினைத்து பாடம் நடத்துபவர்களும், படிப்பவர்களும் இருக்கும் வரை இந்த நிலை மாறாது. எப்போது நம் தாய்மொழியாம் தமிழை அதிக அக்கறையுடன் கற்க முயல்கிறார்களே அப்போது தான் இந்த நிலை மாறும். நிறைய பேர் மதிப்பெண் காரணத்திற்காகவாவது முழுமூச்சுடன் படிக்க ஆரம்பித்து விட்ட காலம் இது. விரைவில் நிலை மாறும். பதிவிற்கும், பகிர்விற்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. தமிழ் மொழி சார்ந்தும், பத்தாவது வகுப்பில் தமிழை தாய் மொழியை எப்படிப்பார்க்கிறார்கள் என்பதும் உலகமயச்சூழலில் குறைந்தகாலப்பயிராகக்குழந்தைகளைப்பார்க்கத்தூண்டும் மனித நெறியும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். என்ன ஆனாலும் சரி நான் வென்றே ஆக வேண்டும் என்பது போன்ற பக்குவங்கள் மாணவ மனங்களினின்ற்ய்ம் மாற்றப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா
    மிக நேர்த்தியாக நடைமுறைகளைச் சொல்லி விட்டீர்கள். மொழிப்பாடம் குறிப்பாக தாய்மொழிப் பாடம் மதிப்பெண்ணுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கே உதவக்கூடியது உணராததன் விளைவு ஐயா. பெரும்பாலான அறிஞர்கள் தங்கள் சிந்தனைகளை எல்லாம் தன் தாய்மொழியில் தான் வெளியிட்டு இருக்கிறார்கள். தாய் மொழியைத் தவிர்த்து விட்டு அல்லது அலட்சியப்படுத்தி விட்டு சிறந்த மனநிலையில் ஒருவன் வளர முடியாது என்பதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட படி பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு தான் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. மற்ற பாடங்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு எளிதாக அமைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழறிஞர்கள் தங்கள் புலமையை வினாத்தாள் வடிவமைப்பில் காட்டியதன் விளைவு மாணவனுக்கு சுமையாக இருப்பது போல் உணருகிறான். (உண்மையில் அப்படி இல்லை என்பது வேறு விசயம்.). அடுத்து விடைத்திருத்தும் முறையில் மற்ற பாடங்களில் எல்லாம் முழு மதிப்பெண் நூற்றுக்கு நூறு போடும் போது தமிழாசிரியர்கள் மட்டும் போடத் தயங்குவதன் காரணம் என்ன! மாணவன் நன்றாக எழுதியிருக்கும் போதும் அதாவது குறிப்பில் குறிப்பிட்டுள்ள வார்த்தையில் பிழையில்லாமல் இருந்தும் சந்திப்பிழை, ஒற்றுப்பிழை என்று வேறு எங்கேயாவது கண்டுபிடித்து மதிப்பெண்ணை குறைப்பது மற்ற பாடங்களில் நடப்பது இல்லை. தமிழில் மட்டும் நடக்க வேண்டும் எனும் விதி பொருத்தமானதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது ஐயா. கருத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான அலசல்! தமிழாசிரியர்களை குறைச்சொல்லி பலனில்லை! அவர்களது பணிச்சூழல் அப்படி! உண்மையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழியில் படிக்க வைக்க ஆசைப்பட்டு தமிழை மறக்கடிக்கிறார்கள். அம்மா என்று அழகிய தமிழில் சிறுவயதில் பழக்குவதை கைவிட்டு மம்மி என்று பழக்கினால் தமிழ் தள்ளிப்போகிறது. தமிழ்பாடம் இப்போது மிகவும் சுருக்கப்பட்டுவிட்டது. நிறைய ஒருமதிப்பெண் வினாக்கள்! இருந்தும் தோல்வி என்றால் அது மாணவரின் அக்கறையின்மையையே காட்டுகிறது. தமிழை கட்டாய பாடமாக மேல்கல்வியில் ஆக்கினால்தான் ஓரளவு திருந்துவர் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல அலசல்...பாராட்டுக்கள் ஆனால் இந்த அலசலும் ஆதங்கமும் இங்கேயே தேங்கிவிடுகின்றன. அதனை கவனித்து செயல்படுத்த விளையும் அரசாங்கத்தின் , அதிகாரிகளின் காதில் மட்டும் இது விழுவதில்லை என்பது மிகவும் வருந்த தக்கது

    பதிலளிநீக்கு
  16. திரு பாண்டியன் அவர்கள் கூறிய கருத்துப்பதிவில் ஒருபாதி உண்மை. ஆனால் மறுபதியை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை ஐயா. ஏனெனில் அவரின் கருத்து மதிப்பெண்களை நோக்கி செல்வதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு மாணவன் நூற்றுக்கு நூறு எடுத்துவிடுவதால் மட்டும் அவன் வாழ்வை திறமையுடன் எதிர்கொள்வான் என்று கூறிவிட முடியாது. எந்த ஒரு மொழியாக இருந்தாலும் வாழ்வின் எதார்த்தத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும். அப்படியிருக்க அவன் மொழியைக் கற்க விரும்பினாலே போதுமானது . மதிப்பெண்கள் மிகவும் முக்கியமல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. ஏதேனும் பிழை எனது கருத்தில் இருந்தால் (பாண்டியன் சார்) மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு
  17. ஐயா மொழிப்பாடத்‌தில் எப்படி 100 மதிப்பெண் வழங்க முடியும்?அப்படி செய்தால் அந்த மொழிக்கு அதற்கு மேல் வளர்ச்சி இல்லை அது செத்து விட்டது என்பதுதானே அர்த்தம்?நீங்கள்தான் சொல்ல வேண்டும்.மற்ற பாடங்களுக்கும் மொழிப்பாடத்‌திற்கும் வித்தியாசம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  18. தமிழகத்தை 2 தரம் தரிசித்தவன், செய்தித்தாள்,சஞ்சிகை, திரைப்படம், தொலைக்காட்சி,இணையமென நாளும் அணுகுபவன்- அதனால் இச் செய்தியில் எனக்கு எந்த ஆச்சரியமோ,அனுதாபமோ எழவில்லை.
    மாணவர்கள் அனைவரும் சித்தியெய்தியிருந்தால், நான் மயக்கமடைந்திருப்பேன். அந்த அளவுக்கு தமிழை அலட்சியம் செய்கிறார்கள்.
    "தமிழகம் - பண்ணு தமிழிலே காலத்தை ஓட்டுகிறது. நான் தமிழகம் வந்த போது, என் தமிழ் புரியவில்லை, நீங்கள் மலயாளியா? என கேட்டோர் அதிகம்.
    என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல ஆய்வு. நீங்கள் பல விஷயங்களைச் சொன்னாலும் எனக்கு முக்கியமான ஒன்றாக படுவது பெற்றோர்களின் போக்கு தான் - தமிழ் படித்து நேரத்தினை வீணாக்காதே என்பதே பலரின் அறிவுரையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம்.தமிழ்ப்பாடத்தில் தோல்வி கேட்கவே மிகக் கவலையாக உள்ளது .எனக்குத் தெரிந்த சில காரணங்கள் .1.தமிழாசிரியர்களைப் பள்ளியின் அனைத்துப் பணிகளுக்கும் (போதிப்பதைத் தவிர )பயன்படுத்துவது.அதாவது சம்பளப்பணி,அரசின் இலவசத்திட்டங்கள் ,அலுவலகப் பணி என ....2.மிக மிகக் கேவலமான முறையில் பிற பாடங்களை மதிப்பீடு செய்வது.பிழைகளைப் பார்ப்பதே இல்லை.அறிவியல்,சமூக அறிவியல் பாடங்களில் அதிக ஒரு மதிப்பெண் வினாக்கள் .தேர்வு நேரத்தில் சில ஆசிரியர்களின் அராஜகத்தின் மூலம் பார்த்து எழுத விடுவது.குறிப்பாக தமிழ் தவிர .முதலில் வரும் தேர்வு என்பதால் மாணவனுக்கு பயம் .இரண்டு நாள் செல்ல பார்த்து எழுத ,கேட்டு எழுதப்பழகி விடுகிறான்.தமிழ் தானே என்ற எண்ணம் .பிற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்குச் சுத்தமாகக் கொடுப்பதே இல்லை.கேட்டால் கேவலமாகப் பேசுகிறார்கள் .அறிவியலில் இலவசமாகப் பள்ளிக்கே வராத மாணவனுக்கும் 25 மதிப்பெண்கள்.மற்றவை ஒரு மதிப்பெண்கள் .எங்கே செல்கிறோம் என்று புரியவில்லை..........................

    பதிலளிநீக்கு
  21. இதில் தவறு முழுக்க முழுக்க அரசின் மீது தான். ஐந்து பாடம் படிக்க வைத்து அதில் மூன்று மட்டும் தான் மேல் படிப்புக்கு கணக்கு வைத்துக் கொள்ளப் படும் என்றால் இயற்கையாகவே யாருக்கும் மற்ற இரண்டில் எந்த ஈடுபாடும் இருக்காது. ஒருவர் முழு மனிதனாக்க மற்ற இரண்டும் கட்டாயம் தேவை.

    அமெரிக்க பல்கலை கழகங்களில் பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு அவர் படிக்க வேண்டிய பிரிவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பல படிப்புகள் படிக்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி இ படிப்பவருக்கு சைக்காலஜி பிரிவில் ஒரு பேப்பர் படித்தே ஆக வேண்டும். இது ஒருவரை முழு மனிதராக்கும் என்பது இதற்க்கு அடிப்படை.

    அதே போல் நாமும் தமிழை கட்டாயம் எல்லா மேற்படிப்புக்கும் அடிப்படையாக வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. பத்தாம் வகுப்பில், தமிழ்ப் பாடத்தில் அதிகத் தோல்விக்குக் காரணமென்ன? = திரு நா.முத்துநிலவன் = அவர்களின் அருமையான, விரிவான பதிவு. அற்புதமான பின்னூட்டங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு
  23. உணமை விரிவான அலசல்.ஆமா செயலில் எப்போது ?பேசுனா மட்டும் போதாதே

    பதிலளிநீக்கு