இன்றைய தமிழக அரசியல் குறித்த கமல் கவிதை!



சிங்கமில்லாக் காடு
****************************


செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!


வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே
!
                         ---------------------------  (நன்றி – காண்செவிக்குழு நண்பர்கள்)
இயல்பான எதுகை மோனையுடன்
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும்
நுட்பமான நேர்த்தியான பொருளுடன் 
எதார்த்தமாக வந்திருக்கும் இக்கவிதையில்,  
அவரது சார்பு பற்றிய விமர்சனம் எனக்கும் இருக்கிறது, 
என்றாலும் 
நம்மை நேரடியாகப் பாதிக்கின்ற  
சமகால அரசியல் பற்றிப் பேச 
இந்தியக் குடிமக்கள் அனைவர்க்கும் உரிமை உண்டு! 
ஆனால் அவரை விமர்சனம் செய்யும் அனைவரும் 
இந்தக் “குடிமக்கள் உரிமை”யைப் 
பயன்படுத்துவதில்லை எனும்வகையில் 
நான் பன்முகக் கலைஞர் கமல் அவர்களைப் 
பாராட்டுகிறேன்!
----------------------------------------------------------------------------------------
கமல் எழுதிய இந்தக் கவிதை மட்டுமல்ல
இவர் ஏற்கெனவே எழுதிய சில கவிதைகளைப் பற்றியும்
எனது வலைப்பக்கத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.
பார்க்கச் சொடுக்குக –

நீங்க 
அப்பப்ப 
எழுதிக்கிட்டே இருங்க 
கமல்!
---------------------------------------------

11 கருத்துகள்:

  1. கவிதை அருமை... ஆனால் தான் எழுதவில்லை என்று கூறிவிட்டதாக தினமலரில் கடைசி பக்கத்தில் அலறல்...!

    பதிலளிநீக்கு
  2. ஆனால் இதை அவர் எழுதவில்லை என மறுத்திருக்கிறார்..

    யார் எழுதினால் என்ன கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  3. இதை அவர் எழுதவில்லை என மறுத்து அறிவித்துள்ளார். அவரது தைரியம் பாராட்டதக்கது.

    பதிலளிநீக்கு
  4. அவர் twitter தளத்தில் வெளியிட்டுள்ள மறுப்புச்செய்தி...

    https://twitter.com/ikamalhaasan/status/833728908977639425

    பதிலளிநீக்கு
  5. கவிதை மிகவும் அருமை. யார் எழுதினார்களோ, அவர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  6. எது எப்படியோ....கவிதை மிகச் சிறப்பாய் உள்ளது

    பதிலளிநீக்கு
  7. சென்னை வெள்ளபெருக்கு அவலத்திற்காக, தமிழக அரசை லேசாக கமல்ஹாஸன் கண்டித்துவிட்டு, பின்பு தான் அப்படியான அர்த்தத்தில் எல்லாம் சொல்லவில்லை என்றார். ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் கமல்ஹாஸன் நல்ல பிள்ளை மாதிரி அமைதியாக இருந்திருப்பார். மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்ட வேண்டும் என்கின்ற தமிழக புரட்ச்சியாளர் தான் இவர்.
    இரும்பு தலைவி, ஆளுமை கொண்ட தலைவி என்று சிலரால் எழுதி புகழ்பாடப்பட்ட ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் கிடைத்த ஜனநாயக சுதந்திரத்தை அனுபவித்து மகிந்து இன்புறும் ஜல்லிக்கட்டு புரடச்சியாளர்களில் ஒருவர் தான் இவரும்.

    பதிலளிநீக்கு