உலகளவில் முதற்பரிசு பெற்ற எனது கவிதை


பாரதிதாசன் வைய விரி அவை 

எனும் இணையம் வழியாக

பொ.ஆ.2002இல் நடத்தப்பட்ட

உலகளாவிய கவிதைப்போட்டியில் 

பரிசுபெற்றோர் விவரத்தை

முதலில் சொல்லிவிடுகிறேன் -

முதற்பரிசு - 

நா.முத்துநிலவன், தமிழ்நாடு இந்தியா 

இரண்டாம் பரிசு -  புகாரிஅசன், கனடா. 

மூன்றாம் பரிசு - ஜோசப் சேவியர், அமெரிக்கா.

----------------------------- 

நடத்தியவர் போலும் விவரங்களை, 

இணைந்துள்ள 

செய்திகளில் காண்க

நன்றி - இணையச் சான்றோர்க்கு

------------------------------

பொ.ஆ.2000 நான் மேசைக்கணினி (டெஸ்க்டாப்) வாங்கிய ஆண்டு (அதாகப்பட்டது 25ஆண்டுக்கு முன்! அப்படின்னா எனது கணினிஅறிவு(?)க்கு வெள்ளி விழா!) அப்போது, இணைய இணைப்பை அவ்வப்போது குறுவட்டு (சிடி)களில்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். விலையும் அதிகம். எனவே தொடர்ந்து இணையத் தொடர்புகளில் எழுதுவதில்லை. பேனா நட்பு போல இணைய மடற்குழுக்கள் அப்போது இருந்தன.  அதில் நண்பர்களைத் தேடித் தேடிச் சென்று இணைந்து பேசி, எழுதுவதே வழக்கமாக இருந்தது.

அப்போதைய எழுத்துரு மலேசிய இணையத் தமிழறிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் கண்டு தந்த ‘டிஸ்கி”தான். அதை ‘முரசு அஞ்சல்” எனும் செயலியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்வோம்! ஆனால், செய்தித் தாள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்துருவில் எழுதின! எனவே, பதிவிறக்கம் செய்வதும் பதிவைக் காப்பதும் குழப்பம்தான்.

2010ஆம் ஆண்டின் பின் தமிழ்நாடு அரசு ‘ஒருங்குறி” என்னும் (யுனிகோடு) எழுத்துருவை ஏற்றபின்தான் எல்லாம் எளிதானது! (இதற்குத் தமது குழு பட்ட சிரமங்களை அய்யா த.உதயசந்திரன் எழுதியதைப் படித்த பிறகே இதெல்லாம் புரிந்தது)  இதன் பின் 2011ஆம் ஆண்டில் நமது வலைப்பக்கம் தொடங்கப்பட்டது. அப்போது, புதுக்கோட்டைக்கு முதன்மைக் கல்வி அலுவலராக வந்த அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தொடர் தூண்டுதலால், கணினித் தமிழ்ச்சங்கம், வீதி கலை-இலக்கியக் களம் தொடங்கியதும் கவிஞர்கள் மு.கீதா, இரா.ஜெயலட்சுமி, மைதிலி கஸ்தூரிரங்கன், கும.திருப்பதி, மகா.சுந்தர் மணப்பாறை அ.பாண்டியன், சுவாதி, செல்வா என  ஏராளமான ஆசிரியப் படைப்பாளிகள் வலைப்பக்கம் தொடங்க அதையே ஒரு பெரும் இயக்கமாக செய்தோம். (கஸ்தூரிரங்கனும் ரேவதியும் முன்னரே வலைப்பக்கம் வைத்திருந்தனர்) இதில் பலரும் தொடரவில்லை என்பது பெரிய சோகம்! தங்கை மு.கீதா தொடர்கிறார் என்பதறிந்து மகிழ்கிறேன்.  https://velunatchiyar.blogspot.com/ நண்பர்கள் தொடர்க! 

அப்போதைய எனது இணைய மடற்குழு நண்பர்களில் ஒருவர் - எனக்கு வலைப்பக்கம் அமைத்துத் தந்த மேலைச்சிவபுரி முனைவர் மு.பழனியப்பன் என்பதை என்றும் மறவேன்! இவரோடு புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன், கவிஞர் திலகபாமா, கவிஞர் புதியமாதவி இப்போதும்  தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சி.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்த போது  வடக்கு ராச வீதியிலிருந்த ‘வாசவி தட்டெழுத்துப் பயிலகத்தில்’ தட்டச்சுப் படித்திருந்த நினைவில், 25ஆண்டுக் கழித்து, இப்போது வாங்கிய கணினியில் தட்டிப்பார்த்தேன். என்ன வியப்பு! ‘தட்டச்சு நினைவிருக்காது புதிதாகத்தான் பயில வேண்டும்’ என்று நினைத்ததற்கு மாறாக, ஒரே வாரத்தில் தட்டச்சுவதில் தேவையான வேகம் வந்துவிட்டது. 

மூளைதான் நினைவகம் என்றாலும், விரல்களுக்கும்  நினைவாற்றல் சக்தி உண்டு போல!! என்று மகிழ்ந்து போனேன். இது நடந்து 25ஆண்டுகள் ஆகிறது! வாழ்க விரல்நுட்ப அறிவு!

அதிலிருந்து கையெழுத்துக் குறைந்து தட்டச்சே வழக்கமானது.

அப்போது இணைய மடற் குழுக்களில் கவிதை, தமிழிலக்கியம்  பற்றிய உரையாடலும் காரசாரமாக நடக்கும். உலகளவில் தொடர்பிலிருந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விவாதிப்பார்கள். அப்போது கிடைத்த செய்தி – ‘பாரதிதாசன் வைய விரி அவை” எனும் மடற்குழுவினர் நடத்திய கவிதைப் போட்டி! அதில் நானும் கலந்து கொண்டு முதற்பரிசு பெற்றேன்!

இணையம் அதிகமில்லாத காரணத்தாலும், முகநூல், வலைப்பக்கம் ஏதும்  அப்போது இல்லாத காரணத்தாலும், எனது கவனக் குறைவாலும் இந்தக் கவிதையையே தொலைத்துவிட்டேன் – நம்வீட்டுப் புத்தகக் குவியல் இடையே எங்கோ சிக்கிவிட்டது என்று நானும் இதை மறந்துவிட்டேன்! என் ‘புதியமரபுகள்’ நூலின் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிட எவ்வளவோ தேடிப் பார்த்தும் கிடைக்காத புதையல் இன்று கிடைத்தது!

எதையோ தேட எதையோ கண்டுபிடிப்போம் அல்லவா?

அப்படிக் கிடைத்த மகிழ்ச்சியை 

உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-

இதோ அந்தக் கவிதை:

(கவிதையின் சரியான வடிவத்தைக் காண, செல்பேசியைக் கிடை மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் கவிதை உடைந்து உடைந்து வடிவம் சிதைந்தே காணப்படும்!)

திசைகளைத் தின்போம்!

(பாரதிதாசன் நினைவுக் கவிதைப்போட்டி)

பிறந்ததும் சிறந்ததும் ஒருமாதம் –உன்

       பேச்சிலும் எழுத்திலும் ஒருமொழிதான்

சிறந்ததும் இறந்ததும் ஒருநாடே –இன்று

       சிங்கைமுதல் தமிழுலகமெலாம்

நிறைந்ததும் சிறந்ததும் தமிழாலே –உன்

       நினைவினில் இணையத் தமிழ்வளரும்

இறந்ததும் பொய்!உனக்(கு) இறப்பில்லை –

       நிரந்தரம், சரித்திர வரம்தருமே!          ----------------(1)

 

“தணிப்பரிதாம் துன்பமிது 

    தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

       தமிழ்தான் இல்லை”

எனப்பெரிதாய்க் கவலையுற்ற 

    எம்கவிஞ! பார்த்தாயா,

       எந்நா டெல்லாம்

மணித்தமிழர் வாழ்கின்றார், 

    அங்கெல்லாம் நல்லதமிழ்

       மணப்ப தைப்பார்!

இனித்தமிழர் நாட்டினிலும் 

    இந்தநிலை வந்துவிடும்

       ‘இணைய’ச் செய்வோம்!                   ----------------(2)

 

‘பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்

       பட்டுத் தெறித்தது ஆணின் விழி

ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் –இவன்

       ஆயிரம் ஏடு புரட்டுகின்றான்’ –எனப்

பாடிய உன்கவிக் காதல்மொழி – என்றும்

       பைந்தமிழர் நெஞ்சில் வாழும்மொழி- கவி

சூடிய கவிஞ!நீ மறைந்து விட்டாய் – தமிழ்க்

       காதலர் நெஞ்சில் நிறைந்து விட்டாய்! ----------------(3)

 

‘இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி

       இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே?

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே?

       வாயடியும் கையடியும்’ மறையும் என்றே

விரட்டிய நீ ‘போய்விட்டாய்’ எனும் நினைப்பால்

       விரைந்துவந்தார் நாட்டைக்கா(டு) ஆக்கப் பார்ப்பார்!

உரக்கஉன்றன் தமிழ்ப்பாட்டைப் பாடிப் பாடி

       உலகம்ஒரே சாதிஎன்போம், திசையைத் தின்போம்! –(4)


-------------------------------------------------

இதற்கெனத் தரப்பட்ட சான்றிதழ் :


இந்தச் செய்தி வந்த அப்போதைய செய்தித்தாள்கள்-


 

 எந்தப் புதையல்

யாருக்கு

எப்போது கிடைக்குமோ

தெரியாது!

சில பழைய செய்திகள் கிடைக்கும்போது

மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறது!

அடுத்த நமது கவிதைத் தொகுப்புக்கு 

ஒரு கவிதை சேர்ந்தாச்சு! 

 --------------------------------------------------

எட்டாம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - 2025

எட்டாவது ஆண்டாக நடக்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நான் இந்த ஆண்டு முழுஈடுபாட்டோடு இல்லை. (உடல்/மன நிலை ஒரு காரணம், தமுஎகச மாவட்ட மாநாடுகள், மாநில மாநாட்டு - மலர் பணிகள் மறு காரணம்)  இதை அறிவியல் இயக்க நண்பர்களிடமும் தெரிவித்து விட்டேன்.

நான் பொறுப்பெடுத்து நடத்திய முந்திய ஆண்டுகளில் மற்ற பேச்சாளர்களை, தமிழறிஞர்களை, அறிவியல் அறிஞர்களை அழைத்துப் பேச வைத்தேன். விருதுநகர், முகவை, சிவகங்கை புத்தக விழாக்களில் என் தலைமையில் நடத்திய இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தைப் புதுக்கோட்டை புத்தகவிழாவில் இதுவரை நான் நடத்த முன்வைத்ததில்லை.

இந்த ஆண்டு அந்தப் பொறுப்பில் இல்லாததால், எனது தலைமையில் பட்டிமன்றம் நடத்தித்தரக் கேட்டபோது தட்ட முடியவில்லை! 

விழாவின் இறுதி  நாளில் - 12-10-2025 - அன்று நமது 

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் நடக்கிறது : 

பேச்சாளர்களை இறுதிப் படுத்தி அழைப்பிதழ் அச்சிடுவது எனும் எனது பொறுப்பை இந்த ஆண்டு ஏற்று, என்னைவிடவும் பல சிரமங்களைச் சந்தித்து, என்னை விடவும் சிறப்பாகச் செய்து வருகின்ற, எழுத்தாளரும் தமுஎகச மாவட்டத் தலைவரும் புத்தகவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தோழர் ராசி.பன்னீர் செல்வம் கேட்டபோது தயக்கத்தோடுதான் ஒப்புக் கொண்டேன்

இதோ அந்த நிகழ்வு - 

(இந்தப் பதாகை உள்ளிட்ட உதவிகளை உடனுக்குடன் செய்துதரும்
ஆலங்குடி தோழர் அறிவொளி கருப்பையா போலும் 
ஈடுபாட்டை எப்படிப் பாராட்டுவது? நன்றி தோழா
)

அடுத்து நம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் நடக்க உள்ள சுழலும் கவியரங்கம் எனும் புதுமையான நிகழ்வையும் 

நீங்கள் அவசியம் கண்டு கேட்டு மகிழ வேண்டும்! 

வருக! வருக!!

எல்லாருமே நம்ம ஊர்ப் பேச்சாளர்கள்தாம்!

நம்ம ஊர்க் கவிஞர்கள்தாம்! என்பதே 

புதுக்கோட்டையின் பெருமை! 

பத்துநாளும் பல்வேறு அறிஞர்கள், கலைஞர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் கலந்து கொண்டாலும் இது எனக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது – வாய்ப்போர் வாருங்கள்!

------------------------------------- 

விழாக்களின் இடையில்  நேற்று நடந்த

தங்கை மைதிலிகஸ்தூரிரங்கன்  எழுதிய 

"அன்பே அலெக்ஸா"

கவிதைநூல் அறிமுகமும் சிறப்பு!


இடையில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு:  

அய்யா ஆர்.பாலகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் 

------------------------------------------------------------

அழைப்பிதழ் 

முதல்நாள் முதல்பக்கம் இது:

 

நிறைவு நாள் 

நிறைவு நிகழ்ச்சியின் பக்கம் இங்கே -


(இடையில் நடந்த தம்பி சோலச்சியின் நூல்வெளியீட்டுக்கு 

நான் இருக்க முடியாமல் சிவகங்கை மாவட்ட 

தமுஎகச மாநாட்டுக்குச் 

செல்ல வேண்டிய நிலை மாதிரி நிறைய..)

----------------------------

நேற்று, (3ஆவது நாள்) 

அறிவியல் இயக்கத் தலைவர் 

தோழர் சுப்பிரமணியன் அவர்கள் 

காலை நிகழ்விலும், 

அய்யா ரெ.பாலகிருஷ்ணன் இஆப., 

சிறார் இலக்கியச் சிற்பி விஷ்ணுபுரம் சரவணன், 

தோழர் ஸ்டாலின் சரவணன் 

ஆகிய மூவரும் பேசிய 

மாலை நிகழ்வுகளின் ஒளிப்பதிவு –

நன்றி – புதுகை வரலாறு நாளிதழ் – திரு சிவா

https://www.youtube.com/live/wDTCylYLTWE?si=9uL_lyzd6HRrP3pe 

கண்டு கேட்டு கருத்துகளைப் பகிருங்கள்

-----------------------------

பாரதி தம்பியின் அருமையான வலையொளி - வாருங்கள், பாருங்கள் நண்பர்களே!

தனது சமூக உணர்வுமிக்க எழுத்துகளால் 

ஏற்கெனவே பத்திரிகையாளராகவும் 

அறியப்பட்ட திரு பாரதி தம்பி தற்போது 

தொடங்கியிருக்கும் வலையொளி (யூட்யூப்) காண வருக!

எடுத்த எடுப்பிலேயே –முதல் பதிவிலேயே– 

இந்திய மக்களை வஞ்சிக்கும் ஒரு பெரும் 

ஊழலைப் பற்றிக் 

கார சாரமாகப் பேசியிருக்கிறார்

நண்பர்கள் அனைவரும் பார்ப்பதோடு,

வலையொளியைப் பின்தொடரவும் 

அன்புடன் அழைக்கிறேன்

வலையொளி இணைப்புக்குச் சொடுக்குக – 

https://youtu.be/GIE4axStuRY?si=3DMcRCF0N8k1n_4p  

-------------

இவரது நூல்கள் சிலவற்றை 

நண்பர்கள் படித்திருக்கக் கூடும்

படிக்காதவர்கள் இவற்றை வாங்கிப் 

படித்துவிடுங்கள்! 






-------------------------------- 

அச்சு ஊடகப்பயணத்தில்

நேர்மையும் கூர்மையுமாகப் பணியாற்றிய

திரு பாரதி தம்பி

தனது புதிய வலையொளிப் பயணத்தில் 

ஊடகச் சிகரங்களைத் தொடர

உளமார வாழ்த்துகிறேன்.

---------------------

நண்பர்கள் பார்ப்பதுடன்

பணிகள் தொடர வாழ்த்துவதுடன்

நண்பர்களுக்கும் அனுப்பித் தொடர

வாழ்த்துவோம்!

இவர் எங்கள் புதுக்கோட்டை மாப்பிள்ளை

என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி!

----------------------------- 

நாமக்கல் புத்தகத் திருவிழாவில் எனது உரை

தலைப்பு 

 "நான் வீழ்வேன் என நினைத்தாயோ? -

-இப்படிக்கு, தமிழ்"


இணைய இணைப்பில் இணைய, சொடுக்குக:

https://www.youtube.com/watch?v=6n5EWjhPEWQ

காணொலிக்கு நன்றி:

மாவட்ட நிருவாகம், பள்ளிக் கல்வித்துறை, 

பொது நூலக இயக்கம், புத்தகத் திருவிழாக்குழு

நண்பர்கள் - நாமக்கல்

மற்றும்

"தென்றல் தமிழ் வலைக்காட்சி"  

முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை

-----------------------------------------------------------------------

வெங்கடேஸ்வரா பள்ளியில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன்

அரசுப் பள்ளியோடு போட்டியிடும் அளவுக்கு,  மாணவர் மையமாகவே பள்ளியை நடத்தும் தங்கம் மூர்த்தி, எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்பவர் என்று பல்லாண்டுகளாகப் பெயர்பெற்றவர். 

எந்தப் பள்ளி அரசு – ஆசிரியர் – மாணவர் என்னும் முக்கோணக் கல்வி முறையில் மாணவரை மையமாகக் கொண்டு நடக்கிறதோ அந்தப் பள்ளி தான் சிறந்த பள்ளி என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

மாநில, ஒன்றிய அரசுகளின் சிறந்த ஆசிரியருக்கான விருதையும், டெல்லியில், ஒரு சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றவர் மூர்த்தி.

ஏற்கெனவே 15ஆண்டு முன்பே  “மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் - புத்தகமில்லா நாள் கொண்டாடும் ஒரு நல்ல பள்ளியின் தாளாளர் என் நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி”  என்று எனது தினமணிக் கட்டுரையில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். எனது ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலிலும் குறிப்பிட்டதோடு, அவரிடமே அந்த நூலுக்கு முன்னுரையும் வாங்கி வெளியிட்டதை எனது வாசகர்கள் அறிவார்கள்.

இப்போது, பள்ளியிலேயே ஒரு புத்தக விழாவை நடத்தியிருக்கிறார்.

பாருங்கள் – படங்களே இந்த வரலாற்றைக் குறித்துப் பேசும்:

















            கல்வியாளரும் படைப்பாளியும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் 

கல்வி சிறப்பாகப் பயன்படும் என்பது என் கருத்து.

கல்வியாளரே படைப்பாளியாக இருந்தால்..

அந்தச் சிறப்புக்குரியவர்தான்

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் 

மேனிலைப்பள்ளியை நடத்திவரும்

என் அருமை 

கவிஞர் தங்கம் மூர்த்தி
_________________________________________________