இந்து தமிழ் நாளிதழில் இன்றைய எனது கட்டுரை

 

தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படலாமா?

--நா.முத்துநிலவன்

புதிய கல்வியாண்டு பிறந்ததும், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பாடவேளைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மொழிப்பாடத்திற்கான பாடவேளைகள், வாரத்திற்கு ஏழாக இருந்ததை மாற்றி ஆறு பாடவேளை போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வந்தபோது, “தமிழ்ப்பாடத் தேர்வில் நாற்பத்தேழாயிரம் மாணவர்கள் தோல்விஎன்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நேரத்தில் --இதற்கு மாற்றாக, அரசு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில்-- இப்படி ஒரு தீர்வு!

பொதுவாக, பத்தாம் வகுப்பு முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் அவர்கள் தமிழ்ப் பெரும் கவிஞர்களாக வந்து விடுவார்கள் எனும் எதிர்பார்ப்பு யாருக்கும் இருப்பதில்லை, பிழையின்றி எழுதும் திறனும், தெளிவான உச்சரிப்புடன் பேசும் திறனும் இருந்தாலே போதும் என்றுதான் நினைக்கிறோம். அதற்கு மொழிப்பாடத்தில் கூடுதலான எழுத்துப் பயிற்சியும், பேச்சுஉச்சரிப்பு - பயிற்சியும் தேவைப்படும். இதற்கு, நான் மாணவனாகப் படித்த காலத்திலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்திலும், வகுப்பில் நடத்தி முடித்த பாடத்தை ஒவ்வொருவராகச் சத்தம் போட்டு வாய்விட்டுப் படிக்கச் செய்து பயிற்சி டுக்கச் சொல்வது வழக்கம். அல்லது மாணவர்களுக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு உரிய பதில்களைச் சொல்லச் சொல்வோம். இதற்கு நல்ல வரவேற்பும் உரிய பயனும் கிடைத்ததை, அறிந்தவர் அறிவார்!

தனியார்- உரைநூல்களை மாணவர் வைத்திருந்தால் அதை வகுப்பிலேயே கிழித்துப்போடுவது என் வழக்கம். கொஞ்சம் முரட்டுத் தனமாகத் தெரிந்தாலும் சிலநேரம் அதுவும் தேவைப்படுகிறது என்பதைகடிதோச்சி மெல்ல எறிகஎன்று வள்ளுவரும் சொல்கிறாரே! மாறாக உரைநடை மற்றும் செய்யுள் பகுதிக்கு, வகுப்பிலேயே கேள்வி-பதில் பாணியில், ஆசிரியர்களே சொல்லி மாணவரை எழுதச் செய்வோம் (டிக்டேஷன்). இப்படி என் பேராசிரியர் தி.வே.கோபாலர் கற்றுத் தந்ததையே நான் பின்பற்றி வந்தேன். திரை விளையாட்டு நாயகரின் படம்போட்ட மாணவர் குறிப்பு ஏடுகள், மற்றும் தனியார் உரைநூல்களைத் தடை செய்து, தேவையெனில் அரசே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் உதவியோடு குறிப்பேடுகளை வழங்க வேண்டும்

தமிழைப் பிழையின்றியும் அழகாகவும் எழுதிவரும் மாணவர் ஏடுகளில்நன்றுஎன்று போட்டுக் கையொப்பமிட்டால் போதும். அது மாணவர் படிப்பில் மிகப்பெரிய உற்சாகத்தை நிகழ்த்துவதைக் கண்கூடாக அறியலாம். அதன் பிறகு அந்த ஒன்றை-நன்றைக் காப்பாற்றிக் கொள்ள, தேவையான பயிற்சியை அவர்களே மேற்கொள்வார்கள்! அவர்களே, இன்னும் சிறப்பாக எழுதிவரும்போதுமிக நன்றுஎனும் ஊக்கமாத்திரை போதும்! வாழ்நாள் முழுவதும் அவர்கள் தமிழைப் பிழையின்றி எழுத வைத்துவிடும் என்பது எனது 34ஆண்டுத் தமிழாசிரியப் பணி அனுபவம்!

இப்படிப் பாடம் நடத்தி, கேள்வி-பதில், உரையும் தந்து, மாணவர்க்கு எழுத்துப் பயிற்சியும் தர, ஆசிரியர்க்கு ஆர்வம் மட்டுமல்ல நேரமும் அதிகம் தேவைப்படும்.கட்டுரை ஏடுகள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் சுமையன்று, அதுதான் எழுத்துக் களம்! மாணவரின் சொல்,பொருள் ஆற்றல் வளரவும் சிந்தனைக்கு வித்திடும் மொழிக் களமாக இருப்பதும் அதுதான்! ஏராளமான எழுத்தாளர்கள், தலைவர்கள் வளர்ச்சியை இதற்கு உதாரணம் காட்ட முடியும். இதற்கு மொழிப்பாட வேளைகள் சற்று அதிகம் தேவைப்படும்போது கட்டுரைகளைக் குறைப்பதும் பாட வேளையைக் குறைப்பதும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

இலக்கணப் பகுதி சொல்லவே வேண்டியதில்லை! எட்டிக்காயாகவே இன்னும் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இலக்கணம் மாறக்கூடாது என்னும் கெட்டி தட்டிப்போனநினைப்பே! நன்னூல் இலக்கணத்தின் கடைசி நூற்பாவே, “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலஎன்று தெளிவாகச் சொல்லியும், இந்தப்போக்கு மாறவே இல்லை!  இப்படியெல்லாம் நமது மொழி கட்டுக் கோப்பாக இருந்தது என்பதை உணர்த்தி, இனி இப்படியும் இருக்கலாம் எனச் சொல்வதுதான் இலக்கணம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, உதாரணச் சொல்லுக்குத் தமிழில்போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபேஎன்பது நன்னூல் இலக்கணம் (நூற்பா-367) இந்தப் பன்னிரண்டு சொற்களில் ஒரு சொல் கூட இப்போது வழக்கில் இல்லை! மட்டுமல்ல, இப்போது புழங்கிவரும்மாதிரி, ஆட்டம், கணக்குமுதலான சொற்களை மாணவர்க்கு அறிமுகப்படுத்த முதலில் ஆசிரியர்க்குப் பயிற்சி வேண்டுமே! இப்படி, இலக்கணத்தைக் கற்பிக்க ஆசிரியர்க்கே புதிய பயிற்சி தேவைப் படும்போது, மாணவர்க்கு அறிமுகப் படுத்த எவ்வளவு உழைப்பும் மாணவரோடு செலவிடும் நேரமும் தேவைப்படும் எனச் சொல்ல வேண்டியதில்லை! எழுத்துப் பிழைகளைக் களையும் பயிற்சியை இலக்கண வகுப்புப் பயிற்சியாக நினைக்காமல் உரைநடை இடையிலேயே வருமாறு செய்யலாம் என்று பாடநூல் எழுதும் குழுவிலிருந்த போது முயற்சி செய்தும் அது நடைமுறைக்கு வரவில்லை. இதற்குத்தான் அதிக நேரம் தேவைப்படும், ஆனால் இதற்குத்தான் நேரம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது! எந்திர கதியாகப் பாடத்தை நடத்தி முடிக்க, நேரத்தில் சிக்கல் வரும்போது எழுத்துப் பிழை களையும் முயற்சி எப்படி நடக்கும்?

மற்ற பாடங்கள் எல்லாம் வேலைவாய்ப்புக்கானது என்று சொன்னால், தமிழ் மொழிப் பாட வகுப்பு அதையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் - “வையகம் காப்பவரேனும், சிறு வாழைப்பழக் கடை வைப்பவ ரேனும்பாரதி- வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும், பிழைப்பைத் தாண்டிய சமூக உணர்வோடு இருக்க வழிகாட்டுவதும் பண்பாட்டுப் படிப்பு என்று புரிந்துகொண்டால் மொழிப்பாடத்தின் அருமை புரியும்.

எழுத்துப் பிழை மட்டுமல்ல, அதைக்கூட சரிசெய்து கொள்ளலாம், அதையும் தாண்டிய வாழ்க்கை பற்றிய கருத்துப் பிழைகளோடு மாணவர் வெளிவந்தால் அது படிப்பில் நேர்ந்த பண்பாட்டில் நேர்ந்த பிழையன்றி வேறென்ன? சொல்வளமும் சிந்தனை வளமும் தாய்மொழிப் பாடத்தின் வழியாக மட்டுமே சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும். இதனை நன்கு புரிந்துகொண்டால் தாய்மொழிப் பாடம் வெற்றுப் பெருமைக்காக அல்ல, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமானது என்பதும் புரியும். அதற்குத் திட்டமிடுவதே  இப்போதைய பள்ளிக் கல்விக்கு அவசியமாகும்.

----------------------------------------------------------------------------------------------------------

(கட்டுரை ஆசிரியர், 34ஆண்டுத் தமிழாசிரியப் பணி நிறைவு செய்தவர்முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” உள்ளிட்ட நூல்களை எழுதியவர். தொடர்புக்கு muthunilavanpdk@gmail.com)

---------------------------------------------------------------------------------------------------------------

நடுப்பக்கக் கட்டுரையாக

வெளியிட்டமைக்கு நன்றி

இந்து தமிழ் திசை நாளிதழ் – 13-07-2022


 

 

 

 

 

5 கருத்துகள்:

 1. அர்த்தமிக்க நல்ல கட்டுரை. பள்ளிக் கல்வித்து விரைந்து
  நடடிக்கை எடுத்து, மொழிப்பாடவேளையைக் குறைக்காமலிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  - மு.முருகேஷ்

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கட்டுரை. தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. கற்றல் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக சொல்லி உள்ளீர்கள்...

  அருமையான கட்டுரை ஐயா...

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான வழிகாட்டல்.  அது நிறைய பேர்களை சென்றடையும் வகையில் செய்தித்தாளில் வந்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு