------
நா.முத்துநிலவன் -----
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06, ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது! 37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும், இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!
கனிமொழி, பிரகாஷ்ராஜ், பெருமாள் முருகன் ஆகிய பிரபலங்கள் மூவரும் அமீரக அரசு விருந்தினர்களாக
அழைக்கப்பட்டதால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாத சூழலில், கண்காட்சி அரங்கிலேயே எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாசகர்களோடு உரையாடி மகிழ்வித்தனர்.
அரங்கினுள், அமீரக
எழுத்தாளரும், துபாயின் புகழ்பெற்ற வானொலித் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான நாகாவின் “பெருங்
கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை’ கவிதைநூல் வெளியிடப்பட்டது. சமூக ஆர்வலர் முகமது முகைதீன், வழக்கறிஞர் எழில் கரோலின், ஈமான் அமைப்பின் செயலர் யாசின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வாழ்க்கையைப் போராடி வெற்றிகண்ட வீரப்பெண் உமா பிரேமன்! இவரது
கதையை, எழுத்தாளர் கே.வி.ஷைலஜா “கதைகேட்கும்
சுவர்கள்” என மலையாளத்திலிருந்து தமிழில் தர, உமாவின் முன்னிலையிலேயே பிரகாஷ்ராஜ் வெளியிட, அமீரகத்தின் “தமிழ் இணைய நண்பர்” ஆசிப் மீரான் பெற்றுக்கொள்ள, நசீர் வலியகத்து, அய்யனார் விஸ்வநாத் ஆகியோர்
வாழ்த்துரை யாற்றினர்.
அரங்கின் வெளியில் “அமீரகத் தமிழ்மக்கள் மன்றம்” போலும் சில
தமிழ் அமைப்புகள் நடத்திய நிகழ்வுகள், ஷார்ஜா தாண்டியும் துபாய்,
அபுதாபி வரை களைகட்டின! புத்தக
விழாவை ஒட்டி அழைக்கப்பட்ட தமிழக எழுத்தாளர் பலரையும் இவற்றில் பேச அழைத்திருந்தனர். திரைப்பட
இயக்குநர் கரு.பழனியப்பன், பாடலாசிரியர்
உமாதேவி, கவிஞர் நா.முத்துநிலவன்,
எழுத்தாளர் அ.முத்துக் கிருஷ்ணன், பட்டிமன்ற மதுரை முத்து, குழுவினர்
உள்ளிட்ட பலரும் தமிழகத்திலிருந்து அழைக்கப்பட் டிருந்தனர்.
ஷார்ஜா உலகப் புத்தகவிழாவையொட்டித் தமிழ்நாட்டிலிருந்து
வந்த இலக்கிய வாதிகள் அனைவரையும் விடாமல் விரட்டிப் பிடித்து, தமிழ் வானொலி வழியாக, அமீரகம்வாழ் தமிழர்களுடன் கேள்வி பதில் மூலம் உரையாட வைத்துக்
கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார் கவிஞர் நாகா!
மற்றொரு பக்கம் “தமிழ்
எழுத்தாளர் சந்திப்பு” நிகழ்ச்சிகள், பல இடங்களில் நடந்துகொண்டே இருந்தன! தமிழகத்திலிருந்து வந்திருந்த சாருநிவேதிதா, சுப்ரபாரதி மணியன், நா.முத்துநிலவன், கே.வி ஷைலஜா, அ.முத்துக் கிருஷ்ணன் இவர்களுடன், ஆசிப்மீரான், கனவுப்பிரியன், அய்யனார்,
ஜெசிலாபானு, சோஃபிதுரைராஜ், அ.மு.நெருடா, பிரபு, கவிமதி உள்ளிட்ட அமீரகத் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும்
தீவிர வாசகர்கள், “பாரதி புத்தகாலயம்” சிராஜூதீன், “டிஸ்கவரி புக்பேலஸ்” வேடியப்பன் முதலானோரையும் அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகள், கலந்துரை யாடல்கள், பிறந்தநாள் உள்ளிட்ட தனி
நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர்
“அமீரக மக்கள் மன்ற” நிர்வாகி பாஷா, ஜலீல், பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்ட
நிகழ்ச்சிகளில் இலக்கிய சர்ச்சைகளுடன், கலகலப்புக்கும் பஞ்சமே
இல்லை! இவர்களை விதம் விதமாக சுட்டுத் தள்ளியவர்
புகைப்படக் கலைஞர் சுபான் பீர் முகமது!
ஷார்ஜா
உலகப் புத்தகக் கண்காட்சி
சென்னையிலிருந்து சுமார் 3,000 கி.மீ,!
அரபிக்கடலின் வடமேற்கு முனையில், பாரசீக வளைகுடாவில், அரேபிய
தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் உள்ளது “ஐக்கிய அரபு
அமீரகம்” UNITED ARAB EMIRATES –UAE- எனும் “எமிரேட்ஸ்” நாடு! உண்மையில்
இது ஏழுநாடுகளின் கூட்டமைப்பு!
துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன்,
உம்-அல்-குவைன், ஃபுஜாராவுடன் ஏழாவது நாடாக ரஸ்-அல்-கைமா சேர, 1972இல்தான் இன்றைய ஐக்கிய அரபு அமீரகம்
உருவானது! இந்நாடுகளுக்கு, மற்றவற்றைவிடப்
பரப்பளவில் பெரிதாக இருக்கும் அபுதாபி தலைநகரமாக உள்ளது!
இந்நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில்தான் இப்போது – அக்டோபர் 31முதல்,
நவம்பர்-10 வரை, உலகப்
புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை வெகுசிறப்பாக நடந்தது!
பாரசீக வளைகுடாவின் தென் கடற்கரையில், தென்முனையில் அபுதாபியும் வடமுனையில்
ஷார்ஜாவும் இடையில் துபாயும் உள்ளன! ஏற்கெனவே, கிரிக்கெட்டினால் புகழ்பெற்ற ஷார்ஜா, இப்போது,
37ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் உலகப் புத்தக விழாவால், ஆண்டுதோறும் உலகின் கவனத்தை வெகுவாகப்
பெற்று வருகிறது!
உலகின் மூன்றாவது பெரிய புத்தகவிழாவான இதில், முதன்முறை யாக தமிழ்நூல்
பதிப்பகங்கள் இடம்பிடித்திருப்பதே இந்த ஆண்டின் சிறப்பு!
இந்தக் கண்காட்சி, “எழுத்துகளின் கதை” (டேல் ஆஃப்
லெட்டர்ஸ்) எனும் கருப்பொருளில் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது!
கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக்சுல்தான் பின்முகம்மது அல்காஸிமி
வந்து தொடங்கிவைத்த கையோடு, ஒவ்வொரு அரங்கையும்
பார்வையிட்டார்.
இந்திய அரங்குகளைப் பார்வையிட்ட, அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப்சிங்
சூரி பதிப்பாளர்களிடமும் உரையாடினார்.
77நாடுகள்,
200க்கும் மேற்பட்ட மொழிகள்
16லட்சம் தலைப்புகள்,
1874 அரங்குகளில்
சுமார் 20லட்சம் நூல்கள்!
நவம்பர் ஆறாம் தேதி – தீபாவளி நாள்வரை, சுமார் முப்பது லட்சம் பார்வையாளர்கள்!
ஒருகோடி
மக்களுக்கும் குறைவான மக்கள் தொகைகொண்ட அமீரகத்தில், அரசு செலவில் நடக்கும் இவ்விழாவில், நூலகங்கள் நூல்களை
வாங்குவதற்காக மட்டுமே சுமார் எட்டுக் கோடி ரூபாய் தருவதாக அமீரக ஆட்சியர் சொன்னது
வியக்க வைத்தது! 1600 சதுரமீட்டரில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடந்த இந்தப்
புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை என்பது இன்னும் வியப்பு!
அந்த நாட்டு அரசர், படித்து, முனைவர் பட்டம் பெற்றவர்!
அரசரின்- அக்கறையே இதன் அடிப்படை! நமது நாட்டு அரசும் இதுபோல நூல்களுக்காக இறங்கிச் செயல்படுமா? என்று யோசிக்கவும் வைத்தது!
அழகாக அடுக்கப்பட்டு இடநெருக்கடியின்றி நூல்கள், அரங்குகளை வைத்திருந்தது மட்டுமல்ல!
மொழிவாரியாகப் பல்வேறு கலை-கலாச்சார
நிகழ்வுகள், குழந்தைகளுக்கென சிறப்புப் பகுதிகள், சமையற் பகுதிகள், சமூக வலைத்தள அரங்குகள், எழுத்தாளர் கையொப்பம் பெறும் பகுதிகள் அனைத்தும் அழகான அரங்குகளில்
தனித்தனியே நடந்துகொண்டிருந்தன!
சொந்த நாட்டவரைவிடவும் வெளிநாட்டவர் அதிக
விழுக்காடு வாழும் நாடுகளில் முக்கியமானது அமீரகம்! அதிலும் ஆண்களின் தொகை
பெண்களின் தொகையினும் இருமடங்கு உள்ள நாடு! எனினும் பெண்களை
அனைத்துப் பொறுப்புகளிலும் பார்க்க முடிவதற்குக் காரணம், கல்வியில்,
வாசிப்பில் அந்தப் பெண்கள் காட்டும் ஆர்வமே என்பது, ஷார்ஜா புத்தகக் காட்சியைப் பார்க்கும் யார்க்கும் எளிதில் புரிந்துவிடும்!
பாரம்பரிய ஒட்டகச் சவாரியோடு, அதிநவீன சொகுசுக்கார்களில்
வந்திறங்கும் அரபுக் குடும்பக் குழந்தைகள், அவ்வளவு ஆசையோடு
பெட்டி பெட்டியாக நூல்களை அள்ளிச் சென்றது கண்கொள்ளாக் காட்சி!
இந்திய
மத்திய-மாநிலஅரசுகள் செய்யக் கூடிய உதவிகள்-
பபாசி தலைவர் வைரவன், செயலாளர் வெங்கடாசலம், செயற்குழு
உறுப்பினர்கள் ராம.மெய்யப்பன், சிராஜூதீன்(பாரதி புத்தகாலயம்), ஆகியோர் ஷார்ஜா புத்தகவிழாவில்
கலந்து கொண்ட அனுபவத்தை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்கள். அதிலும்
சிராஜூதீன், “வெளியூர் களுக்கு நூல் அறிமுகம், விற்பனை, புத்தகக் கண்காட்சிகளுக்குப் போயிருக்கிறோம்.
கடல்தாண்டி, புத்தக விழாவுக்காக ஒரு வெளிநாட் டுக்கு
வருவது இதுவே முதல்முறை! நாங்கள் எதிர்பார்த்த்தை விடவும்
விற்பனை நன்றாக இருக்கிறது! புத்தகங்களைக் கொண்டு வருவதிலும்,
எழுத்தாளர்களை அழைத்து வருவதிலும் நமது அரசுகள் பபாசி.க்கு உதவினால்,
வரும் ஆண்டுகளில் அதிகப் பதிப்பகங்களைப் பங்கேற்கச் செய்யமுடியும்”என, உற்சாகமாக நம்பிக்கையோடு மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனக்குத் தோன்றியது - தமிழில் அரசுடைமை
ஆக்கப்பட்ட நூல்கள் பல நூறு உள்ளன. இவற்றைப் பல்வேறு
பதிப்பகங்களும் போட்டி போட்டு, குறைந்த விலையில்
பதிப்பித்திருக்கிறார்கள்! இவற்றோடு, தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழ் இணையக்
கல்விக்கழகம் ஆகியவற்றையும் பங்கேற்கச் செய்வதன் மூலமும், நல்ல
கழிவோடு என்னென்ன நூல்கள் கிடைக்கும் என்பதை முன்னதாக இணையவழி தெரிவிக்கும்
வகையிலும் தமிழகஅரசே உதவிசெய்யலாம். அல்லது செலவு பிடிக்கும்
போக்குவரவுச் செலவில் ஒரு பகுதியை அரசு மானியமாகத் தரலாம், புத்தகம்
கொண்டு செல்லும் விதிகளில் அரசுக்கு அரசு உதவிகள் செய்யலாமல்லவா?
தமிழக அரசு, கலை-பண்பாட்டுத் துறை மற்றும் கல்வித்துறைகள்
பங்கேற்பதன் மூலம் அமீரகத்திலுள்ள தமிழ்க்குழந்தைகள் – குறிப்பாக
மத்திய அரசின் (சிபிஎஸ்சி) கல்வி
நிலையங்களில் படிக்கும் தமிழ்க் குழந்தைகள் - மேலும் சில
நன்மைகளைப் பெறுவார்கள்! சும்மா திரைப்படவாசிகளையே பார்த்தது
போக, தத்தம் கனவு எழுத்தாளர்களைக் கண்டு உரையாடி மகிழும்
வாய்ப்புக் கிடைக்கப் பெறுவார்கள்! வாசிப்புத் தரம் உயரும்.
தமிழ்இலக்கியம் நிச்சயம் நிமிரும். மெல்லத்
தமிழ்இனி வளரும்! அடுத்தடுத்த தலைமுறைகள் அரசையும் தமிழால் வாழ்த்தும்!
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” - பாரதி
---------------------------------------------------------------------------
(கட்டுரையாளர்- “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” உள்ளிட்ட
எட்டு நூல்களின் ஆசிரியர், மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com )
வெளியிட்டமைக்கு நன்றி -
செம்மலர்
மாதஇதழ், டிச.2018
-------------------------------------------------------------------------
மிகவும் சிறப்பு ஐயா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநிகழ்வு பற்றிய சில தகவல்கள் இணையத்தில் பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குஉங்கள் பக்கத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
மிகவும் சிறப்பு ஐயா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குமுதன்முதலாக தமிழ்நூல்கள். பெருமையாக உள்ளது. மகிழ்ச்சி ஐயா.
பதிலளிநீக்கு