வலைப்பதிவர்களுக்கு வருமானம் வரப்போகிறது!தமிழ் இணைய எழுத்தாளர்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ்வருமானம் தருமா?

தமிழ் வலைப்பதிவர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதுகூகுள்நிறுவனம். ஆட்சென்ஸ்’ (AdSense) விளம்பர சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக கூகுள் அறிவித்திருக்கிறது. இது இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக அமைந்திருக்கிறது.
இணைய உலகில் புழங்குபவர்களுக்கு கூகுளின் ஆட்சென்ஸ்விளம்பரத் திட்டம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். 2003-ல் கூகுள் இந்த சேவை அறிமுகமானது.ஆட்சென்ஸ்மூலம் கூகுள் இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் பொருத்தமான விளம்பரங்களை இடம்பெறச்செய்கிறது. இதற்கான கட்டணத்தை வர்த்தக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கிறது.
ஒரு தேடியந்திரமாக கூகுள் முன்னிலை பெற்ற காலத்தில், வருவாய்க்கான வழி என்பது சிக்கலாகவே இருந்தது. அப்போது பயன்பாட்டில் இருந்த விளம்பரத் திட்டங்கள் அத்தனை வெற்றிகரமாக இல்லை. பயனாளிகளைப் பொறுத்தவரை விளம்பரங்கள் இடைஞ்சலாகவும், கவனச்சிதறலாகவும் பார்க்கப்பட்டன. இந்த சிக்கலுக்குத் தீர்வாக ஆட்சென்ஸ்பார்க்கப்படுகிறது. இணையவாசிகள் வாசித்துக்கொண்டிருக்கும் இணைய பக்கத்தின் உள்ளடக்கத்தின் தன்மைக்கேற்ற விளம்பரங்களை அது தோன்றச்செய்தது. உதாரணத்துக்கு ஒருவர் புத்தகம் தொடர்பான பக்கத்தை படித்துக்கொண்டிருந்தால் அருகே புத்தக விற்பனை அல்லது விமர்சன தளத்தின் விளம்பரம் தோன்றும். இதன் பயனாக இணையவாசிகள் அந்த விளம்பரத்தை கிளிக் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவை கிளிக் செய்யப்படும் தன்மைக்கேற்பவே வசூலிப்பதால் வர்த்தக நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தான் ஆட்சென்ஸ்சேவையை வெற்றிகரமாக ஆக்கி கூகுளுக்கு வருவாயை அள்ளித்தரச்செய்கிறது.
எல்லாம் சரி, இதில் வலைப்பதிவாளர்களுக்கு என்ன லாபம் என கேட்கலாம். ஆட்சென்ஸ்ஒரு கூட்டு வருவாய் திட்டம் என்பதுதான் விஷயம். விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியை கூகுள் இணையதள மற்றும் வலைப்பதிவு உரிமையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. விளம்பரங்கள் கிளிக் செய்யப்படும் அளவுக்கு ஏற்ப வருவாய் அமையும்.
ஆனால், தமிழ் மொழியில் வலைப்பதிவு எழுதுபவர்கள் இதற்கு முன்னர் இதன் பலனை அறுவடைசெய்ய முடிந்ததில்லை. அதற்கு காரணம்ஆட்சென்ஸ்சேவை ஆதரவு தமிழுக்கு கிடைக்காமல் இருந்ததுதான். ஆட்சென்ஸ்விளம்பரங்கள் தேவை எனில் அதன் பிரிமியம் திட்டத்தின் கீழ் இணைய வேண்டும். இதில் பங்கேற்கும் இணையதளங்கள் மாதம் இத்தனை லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்க வேண்டும் எனும் நிபந்தனையும் உண்டு. ஆர்வம் காரணமாக வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு இது சாத்தியமில்லை.
ஆட்சென்ஸ்இணையதளத்துக்குச் சென்று அதில் உள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் வலைப்பதிவாளர்கள், மற்றும் இணையதள உரிமையாளர்கள் இதில் பங்கேற்கலாம். இணையத்தில் வருவாய் ஈட்ட ஆங்கிலம் மட்டுமே வழி எனும் நிலையை இது மாற்றும். மேலும் ஆட்சென்சிற்காக, ஆங்கிலத்திலும் உள்ளடக்கத்தை இடைச்செருகலாகச் சேர்க்கும் குறுக்கு வழிகளிலும் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது.
ஆட்சென்ஸ்ஆதரவு சாத்தியமாகி இருப்பதாலேயே பணம் கொட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இது, வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வழி மட்டுமே. மற்றபடி இதன் மூலம் வருவாய் கிடைப்பது என்பது பல்வேறு அம்சங்களை பொறுத்தே அமையும். முதலில், விளம்பர வருவாய் கிளிக் விகிதம் படி செயல்படுவதால், அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை இருந்தாலே வருமானம் வரும். இதில் கவனம் செலுத்தினால், வருவாய்க்காக உள்ளடக்கத்தை மாற்ற வேண்டியிருக்கலாம். அதோடு, இந்தத் திட்டத்தில் இணைவதற்கு, கூகுள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். தளத்தின் உள்ளடக்கமும் அதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.
இணையதளத்தில் இடம்பெறும் விளம்பரங்களை எந்தவிதத்திலும் உரிமையாளர்களால் கட்டுப்படுத்த முடியாது. இவற்றை கூகுளே தீர்மானிக்கும். ஆட்சென்ஸ்சேவையில் இணையும் வழிமுறை எளிதானது என்றாலும், இதற்கான நடைமுறை பல நேரங்களில் சிக்கலை உண்டாக்கலாம்.
இவற்றை எல்லாம் மீறி இந்த வாய்ப்பு வரவேற்கக் கூடியதாகவே அமைகிறது. இணையத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகவும் இதை கருதலாம். இந்திய பிராந்திய மொழிகளில் தமிழுக்கே இந்த வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது. தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் இந்த வாய்ப்பு தேவை என கோரிக்கை எழுந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்பது பலரது ஆதங்கம். இருந்தாலும், இணையத்தில் அடுத்த கட்ட வளர்ச்சி உள்ளூர் மொழிகள் சார்ந்தே அமையும் என கூறப்படும் காலகட்டத்தில் இது சாத்தியமாகி இருப்பது பொருத்தமானதே என்று தோன்றுகிறது. நடைமுறையில் இது என்னவிதமான பலன்களை அளிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்கள் வலைப்பூக்கள், இணையதளங்களை இந்த திட்டத்தில் ஆர்வத்துடன் சமர்ப்பித்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னமும் ஆட்சென்ஸ் அங்கீகாரப்பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை எனும் பதில் அவர்களை ஏமாற்றமளித்திருக்கிறது. ஆட்சென்ஸ்அறிவிப்பு செயலாக்கம் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் இதற்குக் காரணமாக இருக்கலாம். வரும் நாட்களில் இது சரி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்!
---------------------------------------------------------------- 
கட்டுரையை எழுதியவர் - சைபர்சிம்மன்,
பத்திரிகையாளர், வலைப்பதிவர்,  டிஜிட்டல் இதழியல்
தொடர்புக்கு: enarasimhan@gmail.com
நன்றி - http://tamil.thehindu.com/opinion/columns/article22803983.ece மேலும் தகவல்கள் அறிய …
http://www.bloggernanban.com/2018/02/adsense-for-tamil-blogs-sites.html

மேற்காணும் கட்டுரையை எழுதிய நண்பர்க்கு நன்றி.

இனி, பலரும் அதிகமான பதிவுகளைத் தொடர்ந்து எழுத 
இதுவும் ஓர் உந்துசக்தியாக இருக்குமென நம்புகிறேன்!
(நாம இதுல பெரிசா எதுவும் சம்பாதிக்கலன்னாக் கூட சம்பாதிக்கணும்னும் நினைக்கிறவங்க வந்து தொடர இது நல்ல வாய்ப்புத்தானே?)
இணையத் தமிழ் சம்பாதிக்க உதவினா நல்லதுதானே?
                    நன்றி கூகுளாரே!
         ------------------------------------------------------

8 கருத்துகள்:

 1. நல்ல செய்தி தான். விரைவில் செயல்படும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. பதிவர்கள் அட்சென்ஸ் இணைப்பை ஏற்றுத் தளத்தைப் பேணலாம்.
  தளத்தின் பக்கப்பார்வை (Page Visits) எண்ணிக்கையில் தான்
  அட்சென்ஸ் இணைப்பின் வெற்றி, தோல்வி அமைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. நல்லது நடந்தால் மகிழ்ச்சிதானே

  பதிலளிநீக்கு
 4. எங்களை போன்ற புதிய வலைப்பதிவர்களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது அப்பா.

  நன்றி.(பார்த்துவிட்டேன் படித்துவிட்டேன் பா)

  பதிலளிநீக்கு
 5. தமிழ் வலைப்பதிவர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தி. ஆங்கில வலைதளங்களைப் போல பலனளிக்குமா?

  பதிலளிநீக்கு
 6. நல்ல செய்தி ஐயா .இணையப் பயன்பாட்டில் இந்தியை பின்தள்ளியுள்ளது தமிழ் அதன் விளைவே கூகுளின் இந்த அறிவிப்பு இது சார்ந்த பதிவு ஒன்றை விரைவில் எழுதுவேன். இந்த அறிவிப்பு வலைதளங்களின் மறு எழுச்சிக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளது. இதன் பின்னணியில் வியாபார நோக்கம் இருப்பினும் தமிழ் வலைஞர்களுக்கு நன்மை தரும் என்பதில் ஐயமில்லை

  பதிலளிநீக்கு
 7. ஆஹா ...இனி காசு - பணம் - துட்டு - மணி - மணி ...
  எது எப்படியோ இது தமிழுக்கும் தமிழ் பதிவர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம்...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு