மேலாண்மை காலமானார்!


நான் எழுதிய முதல்சிறுகதை கல்கியில் இரண்டாம் பரிசுபெற்றது! அந்தப் போட்டியில் “சிபிகள்”எனும் அற்புதக் கதைக்காக முதல்பரிசு பெற்றவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி! அதற்கு முன்னரே நானும் அவரும் தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வந்ததால் நல்ல அறிமுகம் உண்டு! அதற்குப் பின்னர் நல்ல நெருக்கமான தோழர்களும் ஆனோம்!  
பின்னர் இவரது சிபிகள் தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்க்குப் பாடநூலான போது, எனது கவிதைத்தொகுப்பு “புதியமரபுகள்” அதே பல்கலையில் பாடநூலானதும் வாழ்த்துரைத்தார்!
கிட்டத்தட்ட 40ஆண்டுக்காலப் பழக்கம்!
அவரது படைப்புகளைப் போலவே எளியவராகவும் கொள்கையில் வலியவராகவும் திகழ்ந்த பெருமை அவருக்கு உண்டு!
பலமுறை புதுக்கோட்டைக்கு அவரை அழைத்து சிறுகதைமுகாம், இலக்கியக் கூட்டங்கள் நடத்திய நினைவுகளை மறக்க இயலாது!
------------------------------------------------------------------------------------------------------- 
இவரது மறைவுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கலைஞர்கள் சங்கம், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதில், ”உழைப்பாளி மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் தன் படைப்புகளின் வழியே உலகத்துக்கு எடுத்துச்சென்ற மகத்தான படைப்பாளி, கரிசல் மண்ணில் கம்பீரமாக எழுந்துநின்று மணம் பரப்பிய எங்கள் வாடாமலர், மேலாண்மை பொன்னுச்சாமியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய 32 எழுத்தாளர்களில் ஒருவரான  இவர், விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்கிற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, தந்தையை இழந்தார். இளம் வயதிலேயே தாயையும் இழந்து, அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி, வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர்கள்
வறிய பொருளாதாரச் சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்புக்கு மேல்  இவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குழந்தை உழைப்பாளியாக வாழ்வை எதிர்கொண்ட  இவர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கடலைமிட்டாய் விற்பனை செய்பவராகத் தொடங்கி, சிறுசிறு தொழில்கள் செய்து பின்னர் உள்ளூரிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை ஆரம்பித்து, தம்பியுடன் இணைந்து வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த  இவருக்கு, புத்தகங்களின்மீது தீராக் காதல் இருந்தது. அப்போது  இவர், கதைகளும் எழுதத் தொடங்கினார். அதன் வழியாக செம்மலரோடும்  கே.முத்தையா, எஸ்..பெருமாள், அருணன், தி.வரதராசன் ஆகியோரோடு அறிமுகமும் தோழமையும் கிடைத்தது. எஸ்..பெருமாள், இவர்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு, ஏராளமான புத்தகங்களை  இவருக்கு அளித்துஇவரது வாசிப்பு வேட்கைக்கு உணவளித்து வளர்த்தெடுத்தார். 'செம்மலர்இவரை அரவணைத்ததுஇவருடைய கதை இல்லாத ஒரு செம்மலர் இதழும் வராது என்கிற அளவுக்கு தொடர்ந்து  இவர் செம்மலரில் எழுதினார். பின்னர், செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இணைந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
செம்மலர் எழுத்தாளர்கள் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1975-ல் உருவாக்கியபோது, அதன் முன்னணிப் படைவீரராக நின்று இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, மாவட்டந்தோறும் பயணம் செய்து, அவர்களைச் சந்தித்து உரையாடி சங்கத்தில் இணைத்தார். .மு..-வை ஒரு மாநிலம்தழுவிய அமைப்பாக வளர்த்தெடுத்ததில்  இவரது பங்கு மகத்தானது. .மு..-வின் மாநிலத் துணைச்செயலாளராகப் பணியாற்றத் தொடங்கிய  இவர் பின்னர், .மு..-வின் மாநிலத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னையும் தன் வாழ்வையும் இரண்டறக் கரைத்துக்கொண்ட  இவர், உழைக்கும் மக்களுக்கான நேரடிப் போராட்டங்களில் பங்கேற்றுப் பல முறை சிறைசென்றார். பொது வெளியிலும் இலக்கிய உலகிலும் புறக்கணிப்புகளை முற்போக்காளர்கள் சந்தித்த காலங்களில், சங்கத்தின் முகமாக இருந்து சவால்களை எதிர்கொண்டவர் மேலாண்மை. பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டிருந்தாலும் தன் சொந்த உழைப்பாலும் வாசிப்பாலும் தன் தத்துவப்பார்வையையும் படைப்புத் திறனையும் வளர்த்துக்கொண்டு எழுந்து நின்ற படைப்பாளி  இவர்.
.மு.. படைப்பாளிகளுக்கு விருதுகள் என்கிற அத்தியாயத்தைத் துவக்கி வைத்தவரும்  இவரே. ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும் 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். கல்கி, ஆனந்த விகடன் போன்ற வெகுசன இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதிய முதல் .மு.. படைப்பாளியும்  இவர்தான்
இவருடைய படைப்புகள் எல்லாமே எளிய கரிசல்காட்டு உழைப்பாளி மக்களின் வாழ்வையும் வறுமையையும், அதன் அழகுகளையும் நுட்பங்களையும் பற்றிப் பேசியவையே. வியர்வையின் வாசம் மணக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் மேலாண்மை பொன்னுச்சாமி.
அவருடைய மகன் வெண்மணிச்செல்வனும் இலக்கியத் தாகம்கொண்ட ஒரு வளரும் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் குன்றியபின், தன் மகனுடன் சென்னை- மணலியில் வாழ்ந்துவந்தார்இவர் மறைந்த செய்தி, தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. .மு...-வுக்கு  இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  
இவரது இழப்பால் துயருற்றிருக்கும்  இவரின் இணையருக்கும் மகன், இரண்டு மகள்களுக்கும், முற்போக்கு இலக்கிய உலகுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். .மு... கொடிதாழ்த்தி, அவருக்கு அஞ்சலிசெலுத்துகிறதுஎனக் கூறப்பட்டுள்ளது.

நன்றி - தமுஎகச – இரங்கல் அறிக்கை -30-10-2017 
-----------------------------------------------------------------
விக்கிப்பீடியாவிலிருந்து - 
https://ta.wikipedia.org/wiki
சிறுகதைத் தொகுப்புகள்
 • சிபிகள்
 • பூக்காத மாலை
 • பூச்சுமை
 • மானுடப் பிரவாகம்
 • காகிதம்
 • கணக்கு
 • மனப் பூ
 • தழும்பு
 • தாய்மதி
 • உயிர்க்காற்று
 • என்கனா
 • மனப்பூ
 • ஒருமாலைப் பூத்து வரும்
 • அன்பூவலம்
 • வெண்பூமனம்
 • மானாவாரிப்பூ
 • இராசாத்தி

குறுநாவல்

 • ஈஸ்வர...
 • பாசத்தீ
 • தழும்பு
 • மரம்
 • கோடுகள்

நாவல்

 • முற்றுகை
 • அச்சமே நரகம்
 • ஆகாய சிறகுகள்
 • மின்சாரப்பூ
 • ஊர்மண்
 • முழுநிலா

பரிசுகள்

விருதுகள்

 • மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
 • வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" 
 • உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத டேட் வங்கியின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள்.

சிறப்புகள்

 • சிபிகள் தொகுப்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது.
 • பாட்டையா சிறுகதை +2வகுப்பில்  பாடமாக இடம்பெற்றது.
 • 10க்கும் மேற்பட்டோர் இவரது படைப்புகளை ஆய்வு செய்து 10க்கும் மேற்பட்டோர் எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். 
 • நான்கு பேர் பி.எச்டி பட்டம் பெற்றுள்ளனர்.
---------------------------------------------------------------------
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இரங்கல் கட்டுரை -http://www.vikatan.com/news/tamilnadu/106336-melanmai-ponnusamy-was-the-progressive-face-of-literature.html
----------------------------------------------------------------------
இவரது ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு நான் நமது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரை “ஒருசிறுகதை ஓர் ஆய்வு - https://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_28.html  
------------------------------------------------------------------ 
முகப்புப் படத்திற்கு நன்றி
வழக்கறிஞர் கவிஞர் மு.ஆனந்தன், கோவை
------------------------------------------------------------------------------------------------------ 

10 கருத்துகள்:

 1. சமூகப் பிரக்ஞையுள்ள ஓர் எழுத்தாளரைப் பற்றியும், அவருடனான தொடர்பைப் பற்றியும் பகிர்ந்துள்ள விதம் அவருடைய பெருமையை நன்கு வெளிப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.அண்ணா

  பதிலளிநீக்கு
 3. மிகச்சிறந்த எழுத்தாளர்...
  தமிழுக்கு இழப்பு.
  அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. கரிசல் மண் மணம் மாறாது,அடித்தட்டு மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை எளிய வழங்கு மொழியில் சிறுகதைகளாக, குறும் புதினங்களாக படைத்தளித்த ஒரு சமூகப் படைப்புப் போராளி உடலால் மறைந்தாலும் படைப்புகளால் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
  எளிய எழுத்துகளால் என்னைக் கவர்ந்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தார்க்கு எனது இரங்கலும் ஆறுதல்களும்.

  பதிலளிநீக்கு
 5. வறுமை காரணமாக பள்ளிக் கல்வியைத் தொடரமுடியாமல் போனதை எப்படி கல்வி மறுக்கப்பட்டது என்று சொல்கிறார் த.மு.எ.க. இருமுறை அப்படி எழுதியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப் பட்டவர் என்று சொல்லும்போது, தாழ்த்தியவர், பிற்படுத்தியவர் யார் என்று கேள்வி வருமல்லவா? அப்படியே கல்விமறுக்கப்பட்டவர் எனில் கேட்டுப்பாருங்கள் பதில் கிடைக்கும். “எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே!”-தொல்காப்பியம் சொன்னதும், “ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது” என மார்க்சியம் சொன்னதும் என ஆழமான அர்த்தம் கிடைக்கும்.

   நீக்கு
 6. மேலாண்மை பொன்னுச்சாமி ஐயாவின் சிறுகதைகள் பலவற்றை நான் விகடனிலும் கல்கியிலும் படித்ததுண்டு. பொதுவாக, பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் என் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை. முழுக் கதையையும் படித்த முடித்த பிறகும் "சரி, என்ன சொல்ல வருகிறார்கள்?" என்கிற கேள்வியும் குழப்பமுமே எஞ்சி நிற்பது வழக்கம். ஆனால், மேலாண்மை பொன்னுச்சாமி ஐயாவின் கதைகள் மனதில் தைக்கும். வெகு நாட்களுக்கு நினைவில் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், முற்போக்கு எழுத்து என்றாலே வெகு மக்கள் புரிதலுக்கு எட்டாத நவீன ஓவியம் போன்றது என்கிற போக்கில் சிக்காமல் படிக்காதவர்கள் முதல் இலக்கியவாதிகள் வரை யார் வேண்டுமானாலும் ரசிக்கக்கூடிய செவ்வியல் ஓவியமாய்ப் படைப்புகளை வழங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஐயா! அவர் மறைவு கண்டிப்பாகத் தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாப் பேரிழப்பு! :-(

  பதிலளிநீக்கு
 7. மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் எழுத்துக்கள் உண்மையொளி கொண்டவை. அவர் சந்தித்த அன்றாட மனிதர்களின் வாழக்கையைப் புனைவுகள் அதிகமின்றி வெளிக்காட்டுபவை. இவ்வளவு சீக்கிரம் அவர் மறைந்திருக்க வேண்டியதில்லை, அவரின் கதைகள் என்றும் மறையப்போவதில்லை என்றாலும். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

  பதிலளிநீக்கு
 8. அய்யாவின் பாட்டையா கதையினை என் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்..... இன்றளவும் கதை எனக்கு மறக்கவில்லை..... கதையின் நிறைய காட்சிகளை என்னால் ஒப்புவிக்க முடியும்..... மிகச்சிறந்த படைப்பாளி. என் தாத்தாவிடம் என் கல்லூரிப் பருவம் வரை கதை கேட்ட என் வாழ்க்கையயும் இக்கதையில் என்னால் பார்க்க முடிந்தது...

  பதிலளிநீக்கு