கனவில் கலந்த கலாம் (கவிதை)

கனவில் கலந்த கலாம்!

இளைஞர்களைக்
கனவு காணச் சொன்னவர்,
இளைஞர்களின் கனவில்
இரண்டறக் கலந்துவிட்டார்.

குழந்தைகளை நேசிப்பதில்,
நேருவும் இவரும் நிகராவர்.
இளைஞர்களைக் கவர்ந்ததில்
இவருக்கு நிகர் இவரே ஆவார்.

“கடைசி மூச்சுவரை நாட்டுக்குப் பாடுபடுவேன்“
என்று கூறிக்கொண்ட யாரும்
அப்படி வாழ்ந்ததாக நினைவில்லை,
கலாம் அதை நிஜமாக்கினார்.
மாணவரிடையே பேச்சினிடையே
இறுதி மூச்சையும் கலந்துவிட்டார்!

இந்தியாவின்
தென்கோடியில் பிறந்து,
வடகோடிவரை உயர்ந்த இவர், கோடீஸ்வரனல்லர்!
ஆனால், கோடீஸ்வரன்களும்
பெறமுடியாத அன்பை,
குழந்தைகளிடம் பெற்றவர்.

உள்ளுரிலேயே தமிழ் மறந்தவரிடையே,
உலக அரங்குகளில் தமிழ்பேசியவர் இவர்!

தாய்மொழிவழிக் கல்வியின் பெருமைக்கு,
வாழ்ந்து காட்டிய உதாரணம் இவர்தான்!

உறவினரை அண்டவிடாமல்,
அரசு வீட்டில் வாழ்ந்ததில்,
உறவினர் வருந்தியிருக்கலாம்!
ஓய்வுபெற்ற பின்னரும்,
ஓயாமல் பயணித்ததில்,
மருத்துவர்கள் வருந்தியிருக்கலாம்!
உயர்பொறுப்பில் இருந்தபோதும்
சிபாரிசு செய்யாதமைக்கு
சிலரேனும் வருந்தியிருக்கலாம்!
தொகையேதும் சேர்க்காமலே
தொண்டராய் வாழ்ந்ததையே
அரசியல் சூதாடிகள்
ஆச்சரியமாய்ப் பார்த்திருக்கலாம்!

அந்தக் “...கலாம்“ களால்
வித்தியாசப்பட்டவர்தான் நம்
அப்துல் கலாம்!

மனிதர்களை அழிக்க வந்த
விஞ்ஞானிகளிடையே
மனிதநேய விஞ்ஞானி இவர்தான்!

“ஏவுகணை ஆபத்தானதுதானே
என்ற கேள்விக்கு,
“அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,
ஆயுதத்தை மட்டுமல்ல,
பூக்களை அனுப்பினாலும்
வீசிவரும் விஞ்ஞானமிதுஎன
பொக்ரான் சோதனைக்கு
புதிய உரை சொன்னவர் இவர்!

இவர்கண்ட கனவை
இந்தியா தொடரட்டும்!
இந்தியா வல்லரசாக மட்டுமல்ல,
நல்லரசாகவும் உழைப்போம்!
       --கண்களில் நீரோடும்,
        கலாம் அய்யா தந்த
        நம்பிக்கைகளோடும்,
        ----நா.முத்துநிலவன்,
        புதுக்கோட்டை-622 004
       muthunilavanpdk@gmail.com
------------------------------------------------------

------------------------------- 
படத்துக்கு நன்றி - www.abdulkalam.com

வியாபம் - இந்தியாவின் ஆபத்தான ஊழல்!

3ஆம் வகுப்பே 
படித்த ஒருவர் மருத்துவராகி(?) 
கடந்த 13ஆண்டுகளாக 
மக்கள் சேவை செய்கிறார் என்றால்? 
இப்படி...ஒருவர்  இருவரல்லர்!  பலஆயிரம்பேர்!

இப்படி போலி மருத்துவர்களை மட்டுமல்ல தகுதியற்ற போலீஸ் டிஎஸ்பிக்களாகப் பத்தாண்டுக்கு முன் பணியேற்ற பலநூறுபேர் இப்ப எஸ்பி ஆகிவிட்டார்களாம்!
தமிழ்நாட்டு ஊழல் எல்லாம் “ச்சும்மா...ஜூஜூபி“ என்பது போல இந்த மத்தியப்பிரதேச அரசியல்-அதிகாரிகள் கூட்டு நாட்டையே புரட்டிப்போடுகிறது!
(VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) நம் TNPSC போல-நா.மு)
நமது இந்தியத் தலைவர்கள் நமக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள நம் தலையில் நெருப்புவைக்கிறார்களே என்பதைப் பற்றி இந்த வியாபம் ஊழல் நினைக்க வைக்கிறது!
வியாபம் ஊழல்
இதுவரை நடந்தது என்ன?
(நமக்கு கூகுள் பொறியில நூறுரூபா கட்டுதான்
கிடைச்சுது! இப்பத்தான் ஒருலட்சரூபா நோட்டு
வந்திருச்சாமே? இல்லன்னா இந்த அவதார
புருஷர்கள் பெட்டிக்கு எங்கே போவார்கள்?)
--------------------------------------------------- 
1982ம் ஆண்டு வியவசாயிக் பரீக்சா மண்டல் (வியாபம்) அமைக்கப்பட்டது. (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL ) 
மத்தியப் பிரதேச மாநில தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே இது நடத்தியது.
2008ம் ஆண்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
2009 ஜூலை 5 அன்று வியாபம் நபர்களை தேர்வு செய்ததில் விரிவான அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
2009ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது. இது தொடர்பாக முதல் புகார் பதிவு செய்யப்பட்டது.
2009 டிசம்பரில் இந்த ஊழலை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்தார்.
2013 ஜூலை 7 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 20 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக கைது செய்தனர்.
2013 ஜூலை 16 அன்று இந்த ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டார். 2013 ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை விசாரணையை எடுத்துக்கொண்டது. 55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
2013 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிய 345 பேரின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.
2013 டிசம்பர் 18 அன்று உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா (பாஜக) வழக்கில் பதிவு செய்யப்பட்டார்.
2014 நவம்பர் 5 அன்று ம.பி., உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை சிறப்பு அதிரடிப்படையின் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக நியமித்தது.
2015 ஜூன் 29 அன்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட 23 பேர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான காரணங்களால்’’ மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினர்.
2015 ஜூலை 7 அன்று முதல்வர் சவுகான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
இவ்வூழலில் இதுவரை--
140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
3800 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்
800 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்
2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; 68 தேர்வுகளை வியாபம் நடத்தி இருக்கிறது
1,087 மாணவர்களுடைய அனுமதி ரத்து;   
76 லட்சத்து 76ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;
ஒருகோடியே 40லட்சம்பேர் வியாபம் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் ; ‘வியாபம்மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

---------தகவலுக்கு நன்றி தீக்கதிர்-15-07-2015-நாளிதழ் ------------ 

நாட்டை உலுக்கி வரும் மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபம் முறைகேடு தொடர்பாக சிபிஐ 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.  2012-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவி நம்ரதா டேமர் வழக்கு உட்பட 3 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

இதன் மூலம் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேச பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் மற்றும் அவரது மகன் தொடர்பான வழக்கு உட்பட முன்னதாக 5 வழக்குகளை தொடுத்துள்ளது சிபிஐ.ஆனால் மருத்துவ மாணவி  விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கொலை செய்யப்பட்டதாக அறிவுறுத்திய நிலையில், ம.பி.காவல்துறையோ அவர் மன அமைதி குலைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறிவருகிறது.  சட்டவிரோதமான முறையில் நம்ரதா மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததால் அவர் இதில் ஒரு முக்கிய சாட்சி. அதனால் அவரது மரணமும் கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் சிபிஐ அதையும் புதிய வழக்கில் சேர்த்துள்ளது.
2010-ம் ஆண்டு மருத்துவ முன் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டது இரண்டாவது வழக்காகும்.

மூன்றாவது வழக்கு 2010-ஆம் ஆண்டு வியாபம் நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பானது, இதில் 4 பேரை குற்றம்சாட்டியுள்ளது மத்திய பிரதேச போலீஸ். இதில் 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ந்த 5 மர்ம மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. -- நன்றி- http://tamil.thehindu.com/india/ july 17, 2015

இதில் தொடர்புடையவர்கள் ம.பியில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் மருத்துவர், காவல்துறை அதிகாரி, பொறியாளர், என பெரிய பெரிய அரசுப் பொறுப்புகளில் இருக்கின்றனர், இது மற்ற மாநிலங்களையும் பாதிக்காதா என்ன? இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இன்னும் எத்தனையாண்டுகள் இவர்கள் இந்திய மண்ணில் ஊடுருவி யிருக்கப் போகிறார்களோ இது எத்தனை பெரிய ஆபத்து?

------------- வேறென்ன சொல்ல?
காங்கிரஸ் ஊழல் செய்ததை அம்பலப்படுத்தி, அதை 30விழுக்காடு மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடியார் இதுபற்றி இன்றுவரை வாய்திறக்க வில்லை! ஏனெனில், கடந்த 13ஆண்டாக  மத்தியப் பிரதேசத்திலும் தற்போது மத்தியிலும் ஆளும் கட்சியாக இருப்பது இவரது பாரதிய ஜனதாக் கட்சியே!
ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை! ------
வேறென்ன சொல்ல?-------
நல்லது செய்தல் ஆற்றீர்; ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே
என்னும் புறநானூற்றுப் பாடலைத்தான் சொல்லத் தோன்றுகிறது!
நல்லவழி ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். நல்லதைச் செய்ய இயலவில்லை என்றாலும், நல்லது அல்லாததைச் (தீயதை) செய்யாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் புகழ் பெறலாம். மற்றவர்களை நல்ல வழியில் செலுத்தலாம் நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் சொன்ன பொன்மொழிகள் இவை. (நன்றி-தமிழ் இணையக் கல்விக்கழகம் - http://www.tamilvu.org/ )

வலைநண்பர்கள் மன்னிக்க...


நமக்குத்தான் வலைப்பக்கத் தொழில்நுட்பம் அடிக்கடி சிக்கலாகுதே! சில நட்பு-வட்டப் பதிவுகளை, ஏற்கெனவே இருந்த பட்டியலோடு இணைக்க நினைத்து, “உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா“ கதையா, ஏற்கெனவே இருந்த பட்டியலும் காணாமல் போய்விட்டது...

அதைத் திரும்பவும் கொண்டுவரத் தாமதமாகி விட்டது...
நண்பர்கள் மன்னிக்க...


நண்பர்களை இழந்தால் நான் அவ்ளோதான்...! 
அதுபோல வலைநண்பர்களையும் நான் இழக்கத் துணியமாட்டேன். எனவே இணைப்பிலிருந்த நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மீண்டும் தொடர்கிறேன்... நன்றி.
--------------------------------

முனைவர் பா.ஜம்புலிங்கம், பதிவர் கில்லர்ஜியைக் கௌரவித்து மகிழ்ந்தோம்

08-07-2015 புதன் மாலை நம் வீட்டில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது. அபுதாபியிலிருந்து வந்த தேவகோட்டைப் பதிவர் திரு கில்லர்ஜி புதுக்கோட்டை வருவதாகச் சொன்னதும் நம் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களையெல்லாம் அழைத்து அவரோடு பேசலாம் என்று திட்டமிட்டோம்.

மிகுந்த அன்போடு, தஞ்சைப் பதிவர்கள் கரந்தை ஜெயக்குமார் அய்யாவும், முனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யாவும், திருச்சி தமிழ்இளங்கோ அய்யாவும் வந்து சேர்ந்து கொள்ள, அந்தச் சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்தது.

(கடிகாரச் சுற்றில்.. நண்பர்கள் மகா.சுந்தர், வைகறை, மது(கஸ்தூரி),நான், கரந்தைஜெயக்குமார்(நடுவில்),முனைவர் ஜம்புலிங்கம், கில்லர்ஜி, தமிழ்இளங்கோ, செல்வா, ஜலீல்,மு.கீதா,ஏஇஓஜெயா,மாலதி,ஆர்.நீலா,மற்றும் மீனாட்சி
-------------------------------------------------------------------- 
இதில் கலந்து கொண்ட புதுக்கோட்டை நண்பர்கள் சார்பாக, அண்மையில் தமிழ்-விக்கிப்பீடியாவில் தனது 200ஆவது பதிவை முடித்திருக்கும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைப் பாராட்டி “இந்திய அரசியல் சட்டம்” எனும் நூலைப் பரிசாக வழங்கினோம்.

வெளிநாட்டில் இருந்துகொண்டே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பதிவர் கில்லர்ஜி அவர்களுக்கு எனது நூல்களை அன்புடன் வழங்கினேன்.

இதில் கலந்து கொண்ட புதுக்கோட்டை நண்பர்கள்-

தேவகோட்டை கில்லர்ஜி  http://killergee.blogspot.com
முனைவர்  B. ஜம்புலிங்கம் http://www.ponnibuddha.blogspot.com
கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com
தி.தமிழ் இளங்கோ http://tthamizhelango.blogspot.com
கவிஞர்  முத்துநிலவன்  http://valarumkavithai.blogspot.com
ஜெயலட்சுமி, கல்வி அதிகாரி http://jayalakshmiaeo.blogspot.in
ஆசிரியை மு.கீதா http://velunatchiyar.blogspot.com
ஆசிரியர்  மது  ( கஸ்தூரிரங்கன்  http://www.malartharu.org
கவிஞர் வைகறை  http://kavi-vaikarai.blogspot.in
கவிஞர் . ஆசிரியர் மகா.சுந்தர்  http://mahaasundar.blogspot.in
ஆசிரியை மாலதி   http://malathik886.blogspot.in
மீனா என்கிற மீனாட்சி சுந்தரம்
கவிஞர் ஆர். நீலா
கவிஞர் செல்வா என்ற செல்வகுமார்
(வலைப்பதிவர் செ.சுவாதி அவர்களது கணவர்)
ஆசிரியர் அப்துல்ஜலீல்,
கவிஞர் சோலச்சி
மற்றும் என் துணைவியார் மல்லிகா, மகள்கள் அ.மு.வால்கா, மு.லட்சியா. (துபையில் இருக்கும் என் மகள் வால்கா, தன் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம்தான் -15நாள் விடுமுறையில்- புதுக்கோட்டை வந்திருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி)

இது பற்றிய விரிவான தகவல்களை  
அருமையான படங்களுடன் பின்வரும் தளங்களில் பார்க்க-
திரு தமிழ் இளங்கோ - (படச்சித்தர் என்று பட்டம் தரலாமோ?)
http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_9.html

திருமிகு மு.கீதா -
http://velunatchiyar.blogspot.com/2015/07/bloggers-meet.html

வந்திருந்த அனைவரும் 
மாநில அளவிலான 4ஆவது வலைப்பதிவர் சந்திப்பை, 
நமது மூத்த பதிவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, 
வரும் அக்டோபர் மாதம் 10ஆம்தேதி
(அதாவது 10-10-2015 சனிக்கிழமை) 
புதுக்கோட்டையில் நடத்தலாமா என்பது பற்றிப் பேசினோம்..
அதுபற்றிய இறுதி முடிவை மூத்த பதிவர்களிடம் கலந்து செயல்படுவது என்று முடிவெடுத்தோம்... விரைவில் பேசுவோம்.

இதில், எனது நோக்கமறிந்து செயல்பட்ட 
எனது அன்பான குடும்பத்தினர்-
(என் மூத்த மகள் அ.மு.வால்கா BA.BL.,MBA , என் துணைவியார் மு.மல்லிகா BSc PGDCA,  என் இளைய மகள் மு.லட்சியா BE ,உடன் நான்
படங்களுக்கு நன்றி  “புகைப்படச் சித்தர்” தி.தமிழ் இளங்கோ)
-----------------------------------

எழுத்தாளர் எஸ்.ரா., பேராசிரியர் ச.மாடசாமியுடனான நிகழ்ச்சியின் ஒளிப்பதிவுகள்...

இரண்டாம்நாள் -20-6-2015- கருத்தரங்கத்தில்-
நான் நெறியாளராகப் பேசியபின்

பேராசிரியரும் கல்வியாளருமான திரு ச.மாடசாமி
அவர்கள் பேசிய பேச்சுகளைக் கேட்கவும் பார்க்கவும் -

இரண்டாம்நாள் முழுப்பேச்சுகளின் ஒளிப்பதிவு-
---------------------

21-06-2015 மூன்றாம்-நிறைவு-நாளின் 
நிறைவு அமர்வு
அமர்வு நெறியாளராக வந்த ஆனந்தவிகடன் உதவிப் பொறுப்பாசிரியர் கற்க கசடற” தொடர் எழுதிய திரு பாரதிதம்பி முதலில் உரையாற்றினார்.

பின்னர் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் பேச,
நிறைவுப் பேச்சாளராக நான் பேசுகிறேன். பார்க்க
----------------------------------------------------- 
சென்னை அண்ணா நகர் 
SBOA - CBSE பள்ளியில் நடந்த
கல்விசார் கருத்தரங்கின்
மூன்றுநாள் முழுநிகழ்வில் 
எழுத்தாளர்கள் ஞாநி, சல்மா, ச.தமிழ்ச்செல்வன், திருநங்கையும் எழுத்தாளருமான பிரியா பாபு, கல்வியாளர் திரு ச.சீ.ரா. உள்ளிட்ட அனைவர் பேச்சின் முழு ஒளிப்பதிவு-

மூன்றுநாள் கருத்தரங்கில் பேசியவர்கள் மற்றும்
தலைப்புகள் பற்றிய முழுவிவரம் காண-
----பார்த்தும், கேட்டும் கருத்துரைக்க வேண்டுகிறேன்-
---------------------------------------
SBOA பள்ளிகள் இரண்டின் மொத்த மாணவர் எண்ணிக்கை சுமாராக 15,000 ஆசிரியர்கள் மட்டும் சுமாராக 600 எனினும் இந்தக் கருத்தரங்கிற்கு ஆர்வமுள்ள 11ஆம்வகுப்பு மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மட்டுமே அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மாற்றுக் கல்விக்கான கருத்து சுதந்திரமாகப் பேசப்பட்ட பள்ளிக்கூடம் என்பதே என்போன்ற நண்பர்களுக்குப் பெருமகிழ்வு தந்தது. அந்தப்பக்கம் ஆங்கிலக் கருத்தரங்கு, இன்னொரு பக்கம் கீழ்த்தளம் முழுவதும் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை அரங்குகள், இயற்கை உணவு ஏற்பாடு என வித்தியாசமான விழா... நல்ல கல்விக்கான தாகம் நிறைந்த கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை இப்படி அழைத்துப் பேசவைத்ததோடு,
பேச்சுகள் அனைத்தையும் அவ்வப்போதே வலையேற்றம் செய்து நிரந்தர ஆவணமாக உலகெங்கும் உள்ளோரைப் பார்க்க ஏற்பாடு செய்த நிர்வாகம் பாராட்டுக்குரியது.  தாளாளர் திரு தாமஸ் ஃபிராங்கோ, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத்தலைவரும், பாரத ஸ்டேட்வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவருமாக இருப்பது இந்த நிகழ்வைச் சாத்தியப் படுத்தியது என்பது முக்கியம். பள்ளி  முதல்வர் வழிகாட்டுதலில்,  விழா ஒருங்கிணைப்பாளரும் மூத்த தமிழாசிரியருமான திரு நலங்கிள்ளி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபாட்டோடு -ஞாயிறு அன்றும் வந்திருந்து- அயராது பணியாற்றியது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. நல்ல கல்வியின் வழியாக நல்ல சமுதாயம் அமையும் எனும் நம்பிக்கையை இந்தக் கருத்தரங்கம் தந்திருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. இது தமிழகமெங்கும் நிகழவேண்டும்.
அப்படி நிகழ்ந்தால்...
கல்விவழியாக சமூகமாற்றம் 
சாத்தியமே என்பது சத்தியமே!
------------------------------------------------------