Pages

http://www.valarumkavithai.blogspot.com/

Thursday, May 17, 2012

காலத்தை மீறிய கவிதைகள் - நா.முத்து நிலவன்


பிறந்தவுடன் தாலாட்டுப் பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை. பாடல்வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை.
 பாமரர் பாடல்கள் படித்தவர்களையும் கவர்ந்ததில் ஹோமர், இளங்கோவடிகள், தாந்தே, கம்பன், ஷேக்ஸ்பியர், பாரத் போன்ற மகாகவிகளும் விலக்கல்ல. ஒரு வித்தியாசம் படித்தவர்கள் இலக்கணம் செய்து வைத்துக் கொண்டு மீறினார்கள்.
  வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர், உணரக் கூடியதை ‘அகழ்’ என்றும் உணர்த்தக் கூடிய ‘புறம்’ என்றும் அவர் கூறினார். இதை இவ்வாறு இப்படித்தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.
கவிதை வடிவ மாற்றங்களின் பின்னணியில் சமூக மாற்றங்கள்
 யார் யார் படிப்பது, எதை எந்த அளவில் பாடுவது எனும் விவாதம் தமிழில் தொல்காப்பியத்தில் இருந்து தொடங்கியது. பரிபாடல் பன்னத்தி எனும் இசை வடிவில் இருந்து வெண்பா முதலிய பா வகைகள் தோன்றிய பிறகு அதற்கும் இலக்கண வரையறை செய்யப்பட்டது.
 ஆரம்ப காலக் கவிதை வடிவம், இனக்குழு மக்கள் காலத்திலும், சிறு மன்னர் ஆட்சி தோன்றிய போதும் சிறுசிறு செய்யுளாக(4-12 அடிகளில்) இருந்தது – (குறுந்தொகை நற்றிணை போல) – ஆசிரியப்பா வடிவத்தில்.
 குறுமன்னர்களை விழுங்கி பெருமன்னர்கள் எழுந்தபோது இந்த அடியளவு 40 அடி வரை போய் நெடுங்கவிதையானது) புறம் அகம் கலித்தொகை போல) ஆசிரியப்பாவும், வெண்பாவுமாக. பெருமன்னர்களின் உச்சக்காலத்தில் இந்த அடியளவும் உயர்ந்து பல்வேறு பா வகைகளையும் அடங்கிய காவிய நிலையை அடைந்தது. (சிலப்பதிகாரம், சிந்தாமணி, கம்பராமாயணம் போல).
 இதே காலங்களில் சிறு சிறு செய்யுள் பாவடிவமும் தொடர்ந்தது. குரங்கிலிருந்து மனிதப் பரிணாமம் நிகழ்ந்த பிறகும் குரங்குகள் தொடர்வது போல.
 பேரரசுகள் சிதைந்து ஆங்காங்கே குறுநில மன்னர், நிலக்கிழார்கள், மற்றும் படிப்படியாக ஜமீன்தாரர்கள், துரைசான்களின் ஆதிக்கம் வந்த பிறகு இவற்றை மையப்படுத்திய ஆங்கில அரசு கறையான் கோட்டையாய் நிமிர்ந்து உயர்ந்தது. அதுவரையும் காவிய நிலையில் இருந்த கவிதா வடிவமும், இந்த பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் பிறகு நெகிழ்ந்து சிறு பிரபந்தங்கள் சிந்து, ககல்லி முதலிய கிராமியம் கலந்த செய்யுள் வடிவமாய் பரவியது.
 இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிய தொழில் உறவுகளோடும், மேலை நாடுகளின் கலாசாரப் பின்னணியிலும், உரைநடை வசன கவிதை, புதுக்கவிதையாகவும் பரிணமித்தது.
 அரசியல், சமூக மாற்றங்களாலும், கலாச்சாரம், பரிமாற்றங்களாலும் நால்வகைப் பாக்களும் - நால்வகை வருமை போலவே இறுகிய நிலையில் இருந்து நெகிழ்ந்தன.
 ‘எளியபதம், எளிய சொற்கள் பொதுமக்கள், விரும்பக்கூடிய மெட்டு’ இவற்றாலான எளிய பாவகைகளும், புதிய வடிவங்களும் தோன்றின. எனவே சமூகம் சார்ந்த உள்ளடக்கம் (பாடுபொருள்) மாற்றத்துடன், உருவ (பா வழவ) மீறல்களும் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்தன.
 இக்குழு மக்கள் காலத்தில் சாதி வேறுபாடுகள் இறுக்கம் பெற்றிருக்கவில்லை என்பதை “யாயும் ஞாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகை (40) பாடலில் காணலாம். ஆனால் இதற்குப்பின் வந்த குறுமன்னர்கள் காலத்தில் ‘சாதியும்’ தோன்றியதை தொல்காப்பியம் காட்டுகிறது. சங்க காலம் என்று தற்போது சொல்லப்படும் இக்காலத்திலும் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இப்போதும் புகழ் பெற்ற தமிழ் வரிகளில் ஒன்று. இந்த முதல்வரி கொண்ட புறநானூறு உண்மையில் நாம் இப்போது நினைக்கும் கருத்தில் எழுதப்படவில்லை என்பது அச்செய்யுளின் ஏனைய பன்னிரண்டு வரிகளில் தெரிகிறது. சமண சமய விதிக்கொள்கைகளை வலியுறுத்திய முனிவர்களுக்கான பாடல் அது. சாதி மத உணர்வு கடந்த சமத்துவக் கருத்துக் கொண்டதாக அதன் முதல்வரியை மட்டும் கொள்வது அக்கால உணர்வுகளுக்கு பொருந்தாது.
 உண்மையில் குறு மன்னர் பெரு மன்னர் காலத்து சித்தர் பாடல்களில் தான் சாதிமுறை எதிர்ப்பும், மூட நம்பிக்கை எதிர்ப்பும், சம்பிரதாய மீறல்களும் வெகுசில வரிகளில் அழுத்தமாக காணப்படுகின்றது.
 “சாதியாவது ஏதடா?”
 “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” – திருமூலர்
 “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ” சிவவாக்கியர்
 “சாதி வகையில்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரக்கிரியார்
 என்பன போன்ற வரிகள் கவனத்திற்குரியன. இதற்கும் மேலே ‘உணர்ச்சிகளை அடக்கு’ – புலனடக்கம் எனும் சமய போதனைகளையும் ‘முனிவர்களுக்கே’ என ஒதுக்கிவிட்டு –
 “அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்
 அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
(திருமூலர்) எனும் மனிதர்களுக்கான வரிகளும் சமய வாதத்தை மீறிய ஒரு சமய வாதியின் குரல்தான். எல்லாரும் முனிவராக வேண்டாம். மனிதனாக இருந்தால் போதுமே!
 அறியாத நிலையில் சூரியனையும், நெருப்பையும், மரத்தையும் வழிபட்டுக் கொண்டிருந்த போக்கு சமூக மாற்றத்தின் காரணமாக அரசர்களுக்கு ஆதரவான புரோகித யாக, சாஸ்திர வளர்ச்சியில் கொண்டு நிறுத்தியது. அரசர்களின் பேராசைகளுக்குத் துணையாக போர்க் களத்தில் வீரம் காட்டி மாண்டு போனவைகளைப் பாராட்டும் வீர வழிபாட்டில் கொண்டு செலுத்தியது. கல் பொறிப்பதும், வழிபடுவதும் தொல்காப்பியத்தில் தொடங்கியது – குறளில் தொடர்ந்தது (எண்.771) இன்றைய மதுரைவீரன் சுவாமி வரை தொடர்கிறது.
 இந்த வழிபாட்டு முறைகளையும் சித்தர்களின் சிலவரிகள் சாடுகின்றன. இதன்படி
 “நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
 சுற்றிவந்து முணுமுணு என்று சொல்லும் மந்திரம் ஏதடா?
 நட்ட கல்லும் பேசுமோ நாதன் உன்னிருக்கையில்
 சுட்ட சட்டி சத்துவம் கறிச்சுவையும் அறியுமோ?” என்பதும்
 அதுதான். இது கடவுளை ஏற்றுக் கொண்டு சம்பிரதாயங்களை மறுதலித்த நிலை. சித்ததர்களின் இயற்கை அறிவியல் சார்ந்த மருத்துவத் தேர்ச்சி இப்படிப் பாட வைக்கிறது.
 ஆனாலும் கடவுளே இல்லை என்ற புத்தரையே உட்கார வைத்துக் கடவுளாக்கிய நாடல்லவா நம்முடையது. சித்தர்களை விடுவோமா? ஏராளமான கற்பனைக் கதைகளை புனைந்து அவர்கள் பாடலுக்கு நேர் எதிரான மிகையான வரலாறுகளையும் சேர்த்து எழுதிவிட்டோம்.
காலத்தை மீறிய குறலின் குரல்
சிறு மன்னர் காலத்தில் அரசியல் பொருளாதார சமய தத்துவங்களையே பாடிய வள்ளுவர் சில இடங்களில் அந்தக் கால ஓட்டத்தை மீறினார்.
 ‘கொஞ்சம் கள் கிடைத்தால் எனக்கே கொடுத்துவிடுவான்
 நிரம்பக் கிடைத்தாலோ எனக்கும் கொடுத்து நான் பாடத்
 தானும் குடித்து மகிழ்விப்பான்” (புறம் : 235) -- என்று பாடும் ஓளவையார் வழக்கத்தை வள்ளுவர் தனது “கள்ளுண்ணாமை” எனும் பத்துப் பாடல்களில் மீறுகிறார்.
 ஆண் ஒருவனுக்கு காதற்பரத்தை, காமப்பரத்தை, இன்பப்பரத்தை, சேரிப்பரத்தை முதலியோர் இருப்பது இயல்பே எனும் தொல் காப்பியர் கால வழக்கத்தையும் ‘வரைவின் மகளிர்’ எனும் அதிகாரத்தில் மீறுகிறார்.
 ‘கற்பு’ நிலையை பெண்களுக்காவே கட்டிக் காப்பாற்றிவரும் தமிழ்ச் சமூகத்தில் ‘பரத்தை’ எனும் சொல் உண்டு. பரத்தன் என அதற்கு ஆண்பால் இல்லை. பத்தினி, கன்னி, கைம்மனை யாட்டி (விதவை) முதலிய தமிழ்ச் சொற்களுக்கு ஆண் சோடி கிடையாது. ஏன் இல்லையெனில் அப்படி ஒரு வழக்கமில்லை.
 ஆனால், வள்ளுவர் தமது சிறப்பு மிகுந்த காமத்துப் பாலில் ‘பரத்தன்’ எனும் வார்த்தையைப் போட்டு (குறள் 1311) கற்புக்கேடு ஆண்களுக்கும் உரித்தானதே என்கிறார்.
இப்படி பிறரை மீறிய வள்ளுவர், பிச்சை எடுப்பது இருக்கத்தான் வேண்டும் எனும் தனது குறள் (1058) கருத்தையே பிச்சை எடுப்பது இருக்குமானால் உலகைப் படைத்த இறைவன் அழிந்து ஒழியட்டும் எனும் குறளை (1062) எழுதியதின் மூலம் தன்னைத்தானே மீறிக்கொள்கிறார்.
காலத்தை மீறிய கண்ணகியின் பரல்கள்:
 அனைவரையும் ஆண்டவனில் அடங்கி முனிவர்களும், ஆண்டவனுக்கு அடங்கி மனிதர்களும் செய்யுள் எழுதி வந்தனர். ஆண்டவனுக்கு மரியாதையைக் கொடுத்துவிட்டு அரசர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர். எனவே மக்கள் மனத்தில் பண்பாட்டு ரீதியான அச்சம் ஆண்டவனிடத்தும் தன் வாழ்வைப் பாதிக்கும் அரசியல் ரீதியான அச்சம் அரசர்களிடத்தும் வளர்ந்திருந்தது. இந்த நிலையில் சிலப்பதிகாரம் எழுதப்பட்டது.
  சிலப்பதிகாரம் காலம் பொருளாதார ரீதியாக அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பெரும் போட்டி நிலவிய காலம்.
 சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி, ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு முற்பகுதியிலும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிற்பகுதியிலும் உதாரணமாகத் திகழ்ந்தவன். பெரு வணிககுலத்தின் பிரதிநிதி.
 பெண், ஆண்களின் போகப் பொருளில் ஒன்று தான் என அனைவரையும் இருந்த வழக்கத்திற்கு மாறாக அரசனை எதிர்த்து அரச சபைக்கே சென்று “தேராமன்னா” என்று ஒரு பெண் அழைத்தது. இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியலிலும் பெருத்த அதிர்ச்சி இன்று, ஒரு எம்.எல்.ஏ.விடம் கூட எதிர்த்து நின்று பேச முடியாத வார்த்ததையல்லவா இது.
 “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் வேந்தன்” என்ற நிலைமை மாறி, ‘யானோ அரசன் யானே கள்வன்’ என்று சுயவிமரிசனமும், ‘அறிவு அறைபோகிய பொறியனு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்’ என பிறர் விமர்சனமும் எழுந்த நிலையில் அரசாட்சிக்கு விழுந்த ஜனநாயக அடிகள் தான் சிலம்பில் தெரிந்த பரல்கள்.
ஆண்டவன், அரசன், மக்கள் யார் முக்கியமானவர்?
  ‘மன்னன் உயரத்தே மலர்தலை உலகம்’ எனும் புறநானூறு (186) காலத்துக் கருத்தில் மன்னனே உயிர் போன்றவனாயிருந்தான். பின் வந்த கம்பர், தனது இராமாயணத்தில் ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பு’ என கருதி மக்களே உயிர் என மாற்றுகிறார்.
 மன்னன் - மக்கள் எனும் கருத்தில் இப்படி எழுதியவர் கம்பர்தான். தனது முதல் பாடலில் ‘அவர் தலைவர்;, அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று கடவுளின் முக்கியத்துவத்தை விடாமல் எழுதுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
 பெருமன்னர்களின் அதிகாரம் சரியத் தொடங்கி, ஜனநாயகக் குரல்கள் எழுவதற்கு முந்திய காலம் கம்பர் காலம். அந்தக் காலத்தின் எதிரொலிதான் கம்பரின் கருத்து மாற்றம் என்பது கவனத்திற்குரியது.
 அரசன் ஆண்டவனின் பிரதிநிதியே எனும் கருத்துடைய ‘திருவுடை மன்னனைக் காணின் திருமலைக்கண்டன் எனும் திருவாய் மொழி (4:8) வரிகளின் அர்த்தம். அரசன் தனது முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருந்த போது ஆண்டவனுக்கும் பொருந்துவதாயிற்று.
 சமய வாதத்தில் வென்று, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார் திருஞானசம்பந்தர். (பெரிய புராணம் ஞான : 835) பிறமதப் பெருமைகளும் அவ்வாறே.
 எனவே சமயத்தொண்டுதான் சமுதாயத் தொண்டு எனும் கருத்து நெதிழ்வடைந்து
 “படமாடக்கோயில் பகவற்கொன்றீயின்
 நடமாடக் கோயில் நம்பர்க்கங்காகா
 நடமாடக் கோயில் நம்பர்க்கொன்றீயின்
 படமாடக் கோயில் பகவற்கதாமே” – என
 முதலில் கடவுளையே பாடினர். பின்னர் கடவுளை மையப்படுத்தி மக்களை பாடினர். அதற்குப் பிற மக்களை மையப்படுத்தி கடவுளையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றைய சமயச் சார்பற்ற சமூகத்திற்கு இட்டு வந்தது.
 இதே போலத்தான் -          முதலில் அரசனையே பாடினார்.         பின்னர் அரசனை மையப்படுத்தி மக்களைப் பாடினார்
 அதற்குப் பிறகு மக்களை மையப்படுத்தி அரசனையும் பாடிய கருத்தோட்டங்களின் வளர்ச்சியே இன்றை ஜனநாயக அரசியலுக்கு இட்டு வந்தது.
 பழம் பாடல்களிலும், இடைக்காலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அதிருப்தி முனகல்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் எதிர்ப்பு முழக்கங்களாகவும் திசைகாட்டும் தத்துவங்களோடும் வளர முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே புதுக்கவிதை தோன்றிப் புதுவெள்ளமாகப் பொங்கிப் பெருகி வருகிறது. 
---------------------------------------- நன்றி - http://www.keetru.com-18-05-2012------------------ 

Wednesday, May 2, 2012

மே தினக் கவிதை -மே-தை மாதமே!


மே-தை மாதமே!

(மே தினக்கவிதை - பழசுதான் என்றாலும் மேதினம் தனது கோரிக்கைகளை வென்று புது உலகம் காணும் வரை அதுவும் நம் இந்தியாவில்-தமிழ்நாட்டில் இன்றும் புதுசுதானே?)

எட்டுமணி நேரவேலை எட்டுமணி நேர ஓய்வு
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே தருகஎனக்
கேட்டெழுந்த போரின் தொடக்கம்!

வேர்வையில் நனைந்த உடல் வேதனை சுமந்த மனம்
வீதியில் வெடித்த முழக்கம் - அந்த
ஊர்வலம் உழைக்கும் வர்க்கம் கேவலக் கடல்கடக்க
ஓங்கு கலங்கரை விளக்கம்!

மேதினி முழுதுமந்த மேதின நினைவில் எழும்
மெய்சிலிர்த்துக் கை உயர்த்துமே! தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்திங்கள் நினைவில் எழும்
மாதமுண்டு தை மாதமே!

சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
காற்றிலே உயிர்வளர்த்தவன் - புதிய
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன் கருத்தில்
என்று, தையை மாற்றிவரும்மே!

'ரெண்டு காலிலே' நடந்து சென்று நாம் சமர்புரிந்து
வென்றுமீள மே உணர்த்துமே! அன்று
குண்டு போட்டழிக்கவந்த கூட்டமே நடுங்க ரத்தக்
கொடியெடுத்த தைஉணர்த்துமே!

முன்புபோல அல்ல இன்று மூண்டெழுந்த போர்கள் வென்று
முன்நடக்கும் மே முழங்குமே! அந்த
நன்மையை உணர்ந்து மே தை ரெண்டையும் இணைத்தெழுப்ப
நமது வர்க்கப் போர் தொடங்குமே!

பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவரும்
படைவியூகமேதை மாதமே! - இந்த
ஈரெழுத்து நமது நாட்டுப் போரெழுத்து என்ற ஞானம்
ஈந்த மாதம்.: மேதைமாதம் மே”!
---------------------------------------------------------- 

Tuesday, April 24, 2012

முத்துநிலவன் பேச்சு


சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும்
-- கவிஞர் நா. முத்துநிலவன்  பேச்சு

First Published : 24 Apr 2012 10:39:19 AM IST –
  
 புதுக்கோட்டை, ஏப். 22: சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
                                புதுகை மாமன்னர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
                                மாற்றத்தை விரும்புவதும், அதை நோக்கி தனது பயணத்தை தொடர்வதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கடமையாக இருக்க வேண்டும். உலக அறிவுக்கும், சமகால நடைமுறை வாழ்க்கைக்கும் தொடர்பில்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சிக்கல் நிறைந்த கட்டத்துக்குள் சமூகத்தை நிறுத்தி விடும் ஆபத்து உள்ளது. தான் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்ற தெளிவு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.
                                நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்த மாமேதை லெனினிடம், ஒரு கவிதை எழுதித் தருமாறு ஒருவர் கேட்ட போது, என் உடம்பில் ஓடுகின்ற ரத்தம் முழுவதும் உறிஞ்சி எடுத்தாலும் என்னால் கவிதை எழுத முடியாது என்றார். தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்படுகின்ற சாலமன் பாப்பையா, தான் எழுத்திய புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் தன் வீட்டிலேயே இருக்கிறது. ஒன்றுகூட விற்பனையாகவில்லை என்று மனம் திறந்து கூறினார்.
                                மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்தவர்களை உலகின் மிகச்சிறந்த ஆளுமையாளர்ளாக கொண்டு வந்து நிறுத்தியது புத்தகங்கள்தான்.
                                பல்கலைக் கழக நூலகத்தில் சாதாரண ஊழியராக இருந்த மாவோவை மக்கள் சீனத்தின் நாயகனாக பரிணமிக்கச் செய்தது புத்தகங்களே. அர்ஜென்டீனாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சேகுவேராவை புரட்சியாளராக அடையாளப்படுத்தியதற்கு, அவரது மனைவி வீட்டில் அமைத்திருந்த சிறிய நூலகமே முக்கிய காரணமாகும்.
                                தகவல் தொழில் நுட்பப் புரட்சியில புத்தகங்களெல்லாம் குறுந்தகடுகளாக மாறி வருகின்றன. காலத்திற்கேற்றார் போல புத்தக வடிவம் மாறுவது இயல்பு. ஆனால், புத்தகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் வல்லமையுடைவையாக ஆக்குவது எழுத்தாளர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

 தமுஎசக மாநில துணைப்பொதுச்செயலர் கவிஞர் ஜீவி பேசியது:
 எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்துவது புத்தக தினம் போன்ற விழாக்கள்தான். பிற நிகழ்ச்சிகளுக்கு கூடுவதைப் போல புத்தக தின விழாக்களுக்கு மக்கள் கூடுவதில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள். பீடிக்கட்டு எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். குங்குமப்பூவை தேடி அலைந்துதான் பெற வேண்டும். நாம் குங்குமப்பூவைப் போல இருக்கிறோம். நேருவிடம் நீங்கள் விரும்பாதது எது எனக் கேட்ட போது, எப்போதுமே மனிதர்களுடனேயே இருப்பது எனக்கூறினார். விரும்புவது எதுவெனக் கேட்டபோது, போதுமான புத்தகங்களுடன் தனிமைத் தீவுக்குள் சில காலம் வாழ்வது எனக்குறிப்பிட்டுள்ளார். முத்தையா என்கிற மனிதன் மரணமுற்று கண்ணதாசன் என்கிற கவிஞன் நிலைபெற்றிருப்பதற்கு புத்தகங்களே காரணம். எனவே, அனைவரும் புத்தகத்தை நேசிப்போம், வாசிப்போம் என்றார் அவர்.
 விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல்.பிரபாகரன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஆர். நீலா, கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன், அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் பொன். கருப்பையா, ராசி. பன்னீர்செல்வன், சி.கோவிந்தசாமி, ஏ.மணிகண்டன், தமுஎகச மாவட்டச் செயலர் ரமா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜனநேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, திருக்குறள் கழகம் ராமையா, கவிஞர்கள் சுவாதி, பீர்முகமது, ஈழபாரதி, கவிபாலா, முத்துப்பாண்டியன், கஸ்தூரிநாதன், சதாசிவம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 42 படைப்பாளிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
------------------------------நன்றி –தினமணி திருச்சி பதிப்பு – 24-04-2012-------------------

Monday, April 16, 2012

தினமணிக் கட்டுரை


விண்ணப்பம் பற்றி ஒரு விண்ணப்பம்



பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தவுடனே அடுத்து என்ன என்று யோசிக்கும் இளைஞர் - பெற்றோர்களுக்கு எந்த மேற்படிப்பாக இருந்தாலும் முதல் அச்சம் தருவது, விண்ணப்பக் கட்டணம்தான். அதிலும், இந்தப் படிப்பு - இந்தக் கல்லூரியில் - கிடைக்கிறதோ இல்லையோ எனும் அச்சத்தில் நடுவாந்தரமாக அதாவது, 60 முதல் 80 விழுக்காடு வரை - மதிப்பெண் பெற்ற - மற்றும் பெறக்கூடிய மாணவர்களின் விண்ணப்பச் செலவே சில ஆயிரம் ஆவதும் உண்டு.

 சில லட்சம் குடும்பங்களின் இந்தச் சில ஆயிரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சில பல கோடிகள் நமது அப்பாவி இந்தியக் குடிமக்களுக்குத்தான் விரயம். இதுபற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இதுதான்.
 விண்ணப்பிக்கும் 2, 3 படிப்பையும் மாணவர்கள் தொடர முடியாது. ஆயினும், ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் அப்பாவி ஏழைப் பெற்றோர்கள் ஒவ்வோராண்டும் இப்படி விண்ணப்பத்துக்காக விரயம் செய்யும் தொகை எங்கேதான் போகிறது? தனியாருக்கு மட்டும் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள், நமது அரசுகளின் அலட்சியத்துக்கும் இந்த விலையுண்டு.
 இதில் இந்தப் படிப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ எனும் குழப்பத்தில் எதற்கும் இந்தப் படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கட்டும் என்று வேறு ஒரு படிப்பையும் தேர்வு செய்து படிக்கச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், வழக்குரைஞர் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதியிருந்தார் ஒருவர். இடம் கிடைக்காவிட்டால் இந்த ஆண்டு வீணாகி விடுமே எனும் அச்சத்தில் அரசுக் கலைக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டு மாதம் கழித்துத்தான் பி.எல். கிடைத்தது. பின்னர் கலைக்கல்லூரியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தச் செலவைத் தவிர்க்க அன்றைய சூழலில் அவரது தந்தையால் இயலவில்லை. இங்கு அவரது தந்தை என்பது, தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ஆண்டுதோறும் சேரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோருக்கும் பொருந்தும். ஆனால், இதுவே தனியார் கல்லூரி எனில் விண்ணப்பம், கல்லூரிக் கல்விக் கட்டணம் என்று கணக்குப் போட்டால், சில பல ஆயிரமாவது விரயமாகியிருக்காது? இது ஒரு சோற்றுப் பதம்தான்.
 தனியார் கல்லூரிகளில் அந்த வசதி இருக்கிறது, இந்த வசதி இருக்கிறது என்று கவர்ச்சியாக விளம்பரம் செய்யும் உத்திகளைப் பார்க்கும்போது, அடேயப்பா! அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிப்பது போன்ற பிரமை ஏற்படும். ஏற்பட வேண்டும் என்பதுதானே அவர்களின் நோக்கமும். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதன் முதல் லாபம்தான் விண்ணப்ப வியாபாரம் சூடுபிடிப்பது. இவர்களாக வழவழ அட்டையில் பளபள பக்கங்களில் பலப்பல வண்ணங்களில் விவரக்குறிப்புகள் தயாரிப்பார்களாம். பின்னர் இந்தச் செலவுகளையெல்லாம் சேர்த்து விண்ணப்பத்தின் விலை ரூ 700, ரூ. 1,000 என்பார்களாம்.
 சில உயர்நுட்ப விண்ணப்பங்களோடு குறுந்தகடுகளும் உண்டு. இந்த உயர்வகை விண்ணப்பங்களைக் குறிப்பிட்ட வங்கியில் சென்று பணம்கட்டித்தான் வாங்க முடியும். என்ன நாடகமிது? விண்ணப்பத்துக்கு விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம். அலைச்சல் புரிகிறதா? நாக்குத் தள்ளிப் போகும். ஒரு நாலாந்தரக் குடிமகனின் "கல்வி - அடிப்படை உரிமைச் சட்டம்' பற்றிக் கேட்க உச்ச நீதிமன்றத்துக்கா ஓட முடியும்?
 "அனைவருக்கும் கல்வி - அனைவருக்கும் சம உரிமைக்கான உத்தரவாதம்' என்று முழக்கமிடும் அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணப்ப வணிகத்தில் ஏழைப் பெற்றோர்களைக் கசக்கிப் பிழிவதுதான் பெருங்கொடுமை. இதில் அரசுக் கலைக்கல்லூரிகளில் மட்டும்தான் 25 ரூபாய் அல்லது அதிகபட்சம் 50 ரூபாயில் விண்ணப்பம் கிடைக்கும். அதிலும் ஒரே விண்ணப்பத்தில் இரண்டு பிரிவுகளுக்குக்கூட விண்ணப்பித்து விடலாம்.
 இயற்பியல் கிடைக்கவில்லை என்றால், வேதியியல் படிக்கலாம் எனும் மாணவர்க்கு அரசுக் கல்லூரிகளில் மட்டுமே இந்த ஆதரவு.
 இதிலும் சில தனியார் கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி விண்ணப்பம், தனித்தனி செலவு, தனித்தனி அலைச்சல், தனித்தனி சிபாரிசு. ஆனால், இதன் தனித்தனி லாபம் மட்டும் கல்விக்காவலரான அந்த ஒருவருக்கே!
 ஒவ்வொரு விண்ணப்பத்தோடும் இணைப்பாக வைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள் ஒரு பத்தாவது தேறும். இதனால், எதற்கும் இருக்கட்டுமே என்று மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், தேர்வு நுழைவுச்சீட்டு நகல், பிறப்புச் சான்றிதழ், வருகைச் சான்றிதழ். அப்புறம் தனித்திறன் சான்றுகள் என சுமார் பத்துச் சான்றிதழ்களிலும் பத்துப் பத்து நகல் எடுத்து அனைத்துக்கும் மேலொப்பம் பெற்று - கையில் வைத்துக்கொண்டு சீட்டு வேட்டைக்குக் கிளம்பும் மாணவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
 மேம்போக்காகப் பார்த்தால் இப்படி அலையும் இவர்கள் பொழுதுபோக்காகச் சுற்றுவதுபோலத் தெரியும். தனித்தனியே கூப்பிட்டு விசாரித்துப் பார்த்தால், அவர்கள் அலையும் அலைச்சலைக் கேட்டால், உயர்கல்வி நிறுவனம் அனைத்தின் மீதும் எரிச்சலாய் வரும்.
 இந்த ஆண்டு சீசன் ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு பல்கலைக்கழகமாக விளம்பரங்கள் வந்தவண்ணமுள்ளன. ஒன்றிலாவது ரூ. 300-க்குக் குறைவாக விண்ணப்பப் படிவம் வழங்குவதாகத் தெரியவில்லையே. பி.ஏ. படிப்பு முதல் பி.எல் படிப்பு வரை எல்லாவற்றுக்கும் விண்ணப்பித்து வைப்போம். எது கிடைக்கிறதோ அதைப்பிடித்து முன்னேறப் பார்ப்போம் என்று குறைந்தது 2, 3 படிப்புக்காவது விண்ணப்பிக்கவும் வேண்டித்தான் இருக்கிறது. தென் மாநிலங்களிலேயே அதிகமான பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இருப்பதால் விண்ணப்பமும் அதிக அளவில் விநியோகமாவது ஒன்றும் வியப்பல்லவே!
 விண்ணப்பம் என்பதென்ன? பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த ஒருவர் உயர் படிப்பு அல்லது துறைசார் படிப்புப் படிக்க இடம் வேண்டும் என்று கேட்பதுதானே? இதற்கு ஏன் இவ்வளவு கட்டணம்? 95 விழுக்காட்டினருக்கு இல்லை என்று சொல்லப்போவது உறுதி.
 சில ஆயிரம் பேர் தேர்வாகப் போகும் தேர்வுக்குப் பல லட்சம் விண்ணப்ப விநியோகம் என்பது வியாபாரமில்லையா? ஒரு தாளை அச்சடித்துத் தர 50 ரூபாய் என்பது அதிகமில்லையா? இதன்வழியாக மட்டும் ஒரு விண்ணப்பம் ரூ.50 வீதம் 16 லட்சம் விண்ணப்பம் விற்றால் லாபம் எட்டு கோடி ரூபாய் அல்லவா! இது ஆட்டுக்கு மருத்துவம் செய்ய அதன் வாலையே வெட்டி சூப் வைத்துத் தருவதுபோல உள்ளது.
 விண்ணப்பம் தவிர தேர்வுக்கட்டணம் வேறு 500 ரூபாய், அதற்கான வங்கிக் கட்டணம் 50 ரூபாய் என ஏற்கெனவே நொந்து கிடக்கும் அந்தப் பாவப்பட்ட மக்களிடமே மேலும் பணம் பார்ப்பது ஜனநாயக அரசுக்கு அழகுதானா?
 எனவே, பல நூறு கோடி ரூபாய்களை மக்களுக்கு இலவசங்களாக வாரி வழங்கிப் புகழ்பெற்ற நமது தமிழக முதல்வரிடம் வைக்கும் விண்ணப்பம் இதுதான்: வேலைக்கோ உயர் படிப்புக்கோ விண்ணப்பிக்கும் எந்த ஒரு விண்ணப்பமும் இனி 10 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என முதல்வர் ஆணையிட வேண்டும் அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சமீபத்திய அறிவிப்புப்போல, இலவசமாக இணைய தளத்தில் கிடைக்குமாறு செய்துவிட வேண்டும். அந்தச் செலவுகளை, வேலைதேடும் அல்லது உயர்கல்வி படிக்க ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்காக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ரூ. 800, ரூ. 1,000 என எகிறும் கல்லூரிகளின் விண்ணப்ப விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக வேண்டும்.
 இதுதான் லட்சோப லட்சம் தமிழக இளைஞர்களின் இன்றைய எதிர்பார்ப்பு. கல்லூரி-பல்கலைக்கழகங்களின் அடுத்த - 2012-2013-கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு தொடங்கியிருக்கும் நேரம். இந்த நேரத்தில் முதல்வரின் அறிவிப்பு பசித்த வயிற்றுக்கு முதலில் பால் வார்த்ததாக இருக்கட்டும்.
 தம் பிள்ளைகளின் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தும் பெற்றோர் அதைச் செலவு என்ற பட்டியலிலா வைப்பார்கள்? குடும்பத்தின் எதிர்கால நன்மைக்கான முதலீடு என்றுதானே நினைப்பார்கள். இதேபோல ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர்க்கு தமிழக முதல்வர் ஒவ்வொரு பிரிவினர்க்கும் - ஏதாவது சில இலவசங்களைத் தந்துகொண்டே இருக்கிறார்.
 நமது முதல்வர், அடுத்து உதவ வேண்டிய பிரிவு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம்தான். அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. தேர்வுக் கட்டணங்களைக் குறைப்பதும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பத்தை இலவசமாக வழங்குவதும்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------- 
First Published : 17 Apr 2012 01:03:40 AM IST- நன்றி - தினமணி - நாளிதழ் - 17-04-2012

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து


தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவ ரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கென வெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே
---------------------------------------------------------------------------(1993)

Tuesday, April 10, 2012

குஞ்சானியின் டாட்டா - சிறுகதை - நா.முத்து நிலவன்



     பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாதைரியமாப் போஎன்னநா வரட்டுமா?
     கடைக்காரத் தாத்தா கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போன சமயம் டாட்டா சொல்லப் போய் விழுந்த அடியை நினைத்துக் கொண்டான். முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
     பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.
     சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சின்ன ஓட்டைதான். கடைக்காரத் தாத்தா குடுத்திருந்த ரெண்டு ரூபாய் நோட்டு கையில் நெருடியது. கொஞ்சம் பழைய நோட்டுத்தான். கசங்கி வேறு இருந்தது. வேறே நோட்டுக் குடுன்னு கண்டக்டர் கேட்டால் எறக்கி விட்டுடுவானோ?
     தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் தெரியவில்லை. நாலு முழ வேட்டியின் முனையில் உருட்டுத் தையலைத் தாண்டிக் கொஞ்சம் கிழிந்திருந்தது. வேட்டி முனையைக் காலுக்குள் இடுக்கிக் கொண்டான்.
     பஸ் நடுக்கடையைத் தாண்டிக் கொண்டிருந்தது.
     இந்த ஊர்ப் பக்கத்தில்தான் இவன் பிறந்தானாம். அம்மா சொல்லும். இவன் பிறந்த வருசமே அப்பன் கஞ்சி ஊத்தாது என்று ஆனதும் இவனைத் தூக்கிக் கொண்டு அம்மா திருவையாற்றுக்கே வந்துவிட்டதாம்.
     ஐயாறப்பன் கோவில் தெற்கு வாசலருகில் தான் இவர்கள் இருந்தார்கள். நேர்ந்த மாதிரி மூணு வீடு வீதியிலிருந்து செங்குத்தாய்ப் பிரிந்து அடுத்தடுத்து இருந்தது. முகப்பில் வாசலுக்குக் கொஞ்சம் தள்ளிப் பதினைந்து ரூபாயில் இவர்களின் குச்சு வீடு முன்புறம் கேட்டருகில் கடைக்காரத் தாத்தாவின் பெட்டிக் கடை.
     இவன் எப்பவும் தாத்தாவுடன் தான் நேரத்தைக் கழிப்பான். அம்மா நாலைந்து வீடுகளில் வேலையை முடித்துக் கொண்டு அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இவனுக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சாய்ந்தரம் ஏழு ஏழரை மணிக்குத்தான் வரும். இவன் அதுவரையும் தாத்தாவுடன் தான் இருப்பான்.
     ன்னாம் வகுப்பில் இவன் சேர்ந்த புதிதில் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் சிலேட்டுப் பலகையைக் கடாசிவிட்டுக் கோவில் தெற்கு வாசல் விளக்குக்கருகில் விளையாட்டுப் பயல்களைப் போய்ப் பார்த்துக் கொண்டு நிற்பான். அந்தப் பயல்கள் இவனைச் சேர்ந்துக் கொள்வதில்லை. இவனைத் தூரத்தில் கண்டதுமே குசுகுசுவென்று பேசிக் கொண்டு விளையாட்டை நிறுத்திவிடுவார்கள். இவனும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டுப் பழிப்புக் காட்டிக் கொண்டே திரும்பி விடுவான். வாச்சாங்கோலிப் பயலுக பெரிய்ய இது பண்ணிக்கிறாங்கெ…’ இவன் போவதைப் பார்த்ததும் மூணாம் வகுப்பு கிச்சாமிப் பயல் இவனுக்குக் கேட்பது போல டேய்? குஞ்சானியோட அப்பா ரொம்ப கெட்டவராம்டா ஜெயிலுக்கெல்லாம் போனவராம்…” என்று சொல்லிக் கொண்டிருப்பான. இவனும் காதில் வாங்காதது மாதிரி வந்து தாத்தாவுடன் உட்கார்ந்து கொள்வான்.
     அப்பன் எப்போதாவதுதான் வீட்டுக்கு வரும். அது வந்துவிட்டுப்போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குருக்கள் வீட்டிலிருந்து குஞ்சானிக்குச் சோறு கொண்டு வந்திருந்த தூக்கு வாளியைக் காணோமென்று அம்மா கத்திக் கொண்டிருக்கும்.
     யார் சார் திருவையாத்துல ஏறினது இன்னம் ஒரு டிக்கெட் வாங்கல…” கண்டக்டர் சத்தம் அருகில் வந்ததும்தான் இவனுக்கு உறைத்தது. சார் இங்க தஞ்சாவூர் ஒண்ணு அவசரமாக நோட்டை எடுத்து நீட்டினான்.
     என்னய்யா நீ! எவ்வளவு நேரமாக் கத்திட்டிருக்கேன்! சில்லறையா இல்லையா? வாங்கிய நோட்டை வெளிச்சத்தில் பிடித்துப் பார்த்துவிட்டு இவனை முறைத்துக் கொண்டே டிக்கெட்டையும் மீதிச் சில்லறையையும் திணித்துவிட்டுக் கூட்டத்தில் நகர்ந்தார் கண்டக்டர்.
     நல்லவேளை வேறே நோட்டுக் கேக்கல…”
     டிக்கெட்டோடு சில்லறையை வாங்கி கவனமாக அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு வேட்டியைப் பிரித்து அண்டராயரில் போட்டுக் கொண்டான்.
     அப்போதுதான் பஸ்ஸில் கொஞ்ச தூரம் தள்ளி ஐயர் வீட்டுப் பாட்டியம்மா நிற்பதைப் பார்த்தான். அவர்கள் இப்போது கண்டிய+ருக்கே வந்துவிட்டார்களாம். குடத்தையும் ஒரு பெரிய பையையும் காலில் வைத்து இடுக்கிக் கொண்டு சங்கடத்துடன் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தது.
     திருவையாற்றுக்கு வந்த புதிதில் இவர்கள் வீட்டில்தான் அம்மா பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தது. நோஞ்சலாகவும் அழகாகவும் இருந்த இவனை இந்தப் பாட்டிதான் குஞ்சானிகுஞ்சானி என்று கூப்பிட்டுப் பழக்கிவிட்டது.
     அப்பனை நினைத்து இவன் பயந்து கொண்டான். என்ன சொல்லுவாரோ?
     அப்பனோடு பேசிப் பத்துப் பன்னண்டு வருசம் இருக்குமா?
     அப்போதெல்லாம் இவன். நான் பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன் தாத்தாவ் என்று கடைக்காரத் தாத்தாவிடம்தான் சொல்லிக் கொண்டு போவான். ஒருநாள் அவர் டாட்டானனு சொல்லணும்டா பயலே என்று கூறி வைத்தார். சாயந்தரம் வந்ததும் டாட்டா சொல்வது பற்றித் தொணத்தி எடுத்துவிட்டான். அவரும் வியாபாரத்தைப் பார்த்துக்;கொண்டே வெளியே போகும் போது எப்படிக் கையை ஆட்டி டாட்டா சொல்ல வேண்டுமென்று விளக்கமாகச் சொன்னார்.
     அடுத்த நாள் விடியற்காலையில் அம்மா கிளம்பும்போது ஞாபகமாக எழுந்து டாட்டாம்மோவ் என்றான். அம்மாவுக்கு ரொம்பப் பெருமை. அடி எங்கண்ணு டாட்டாச் ;சொல்லுதே எம்புள்ளே! எப்படா முளிச்சே! என்று கேட்டுவிட்டு அந்த அஞ்சு மணிக்கே இவன் எழுந்து கொண்டதற்கும் சேர்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டு குஞ்சானிக்கு முகத்தைக் கழுவிவிட்டு நீச்சத் தண்ணியை ஒரு குவளை நெறைய எடுத்துக் கொடுத்துவிட்டு இவன் டாட்டா சொன்னதைப் பெருமையோடு நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்டே போனது.
     ரொம்ப நாளைக்கப்புறம் அன்றுதான் குஞ்சானியின் அப்பன் காலையிலேயே வந்திருந்தது. அப்பனைக் கண்டதும் இவனுக்கு ரொம்ப சந்தோஷம். கணக்குப் புஸ்தகம் வாங்காததுக்காகக் கையை நீட்டச் சொல்லித் தருமு டீச்சர் இவனைப் பிரம்பால் அடித்ததையும் பிறகு ரெண்டாம் வாய்ப்பாட்டைச் சீனிப் பயல் மாதிரி உம் கொட்டி உம் கொட்டி நிறுத்தாமல் கடகடவென்று இவன் சொன்னதுக்கு வெரிகுட் சொல்லிவிட்டு அடுத்த நாள் ஒரு பழைய புஸ்தகத்தை ரெண்டாம் வகுப்பு கோவிந்தன்கிட்டேயிருந்து வாங்கிக் குடுத்ததையும் அதுக்கு இவன் காசு குடுக்க விட்டதையும் சொன்னான். குஞ்சானியின் அப்பன் - செல்லத்துரை எல்லாத்துக்கும் உம் கொட்டியதோடு சரி இவன் பள்ளிக்கூடம் போகும்போது அப்பனுக்கு டாட்டா சொல்லிவிட்டுப் போனான். அதுக்கும் அப்பன் உம் உம் என்றுதான் சொன்னது.
     சாயந்தரம் வந்து பார்த்தால் நடு வீட்டில் புழக்கம் தெரிந்தது. வீட்டுக்காரவுக வந்திருக்காக போல. வீட்டுக்காரருக்குத் திருவையாற்றிலேயே எட்டு பத்து வீடு இருக்குதாம். மாசம் ஒரு தரம் வந்து இருந்து எல்லாரிடமும் வாடகை வாங்கிக் கொண்டு போவார். அவர் வீட்டுப் பிள்ளைகள் திருச்சியில் கான்வென்டுல படிக்குதுகளாம். இப்ப அதுகளுக்கு லீவுன்னு புள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.
     கொஞ்ச நேரம் கழித்து அப்பன் திரும்பவும் வீட்டுக்கு வந்தது ஆச்சரியமாயிருந்தது. நடு வீட்டு வாசலில் நாலைந்து சோடிச் செருப்புகளையும் ரேடியோச் சத்தத்தையும் கவனித்துவிட்டு உள்ளே வந்து மெதுவாகக் குஞ்சானியிடம் விசாரித்தது அப்பன்.
     வீட்டுக்காரவுக வந்திருக்காகப் போவ்.
     சட்டென்று குஞ்சானியின் வாயைப் பொத்திவிட்டுக் கழற்றிய சட்டையை உடனே மாட்டிக் கொண்டடு அப்பன் வெளியே கிளம்பியதும் எங்கப்பா போறே என்று கேட்க வந்த குஞ்சானி அதைக் கேட்காமலேயே டாட்டாப்போவ் என்றான். அதற்குள் அப்பன் கேட்டைத் தாண்டிவிட்டதைப் பார்த்து வாசல் படலைத் திறந்து கொண்டு அப்பாவ் டாட்டா என்று கத்தினான்.
     நடு வீட்டில் வந்திருக்கும் கான்வெண்டுப் பிள்ளைகளுக்குக் காதில் விழுந்திருக்காதோ என்ற சந்தேகம் வந்தது. அப்பனும் ஒண்ணும் சொல்லவில்லையே! ரெண்டு மூணு வீட்டுக்கும் கேட்கிறாற்போல் நடு வாசலில் நின்று கொண்டு அப்பா டாட்டாப்போவ் என்று மீண்டும் சத்தம் போட்டுக் கத்தினான்.
     அதற்குள் வீட்டுக்காரரே வெளியே வந்து அப்பனைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு நிறுத்திவிட்டார். அந்தப் புள்ளைகளும் எட்டி வெளியே பார்த்தன.
     இப்போதுதான் குஞ்சானிக்குத் திருப்தியாயிருந்தது.
     ஆனால் வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு உள்ளே திரும்பிய அப்பன்தான் இவனை உள்ளே இழுத்துப் படலைச் சாத்திக் கொண்டு என்னடா டாட்டா மோரக்கட்டை…” என்றவாறே விறகுக் குச்சியை எடுத்தது.
     குஞ்சானி அன்று ராப்புராத் தேம்பித் தேம்பி அழுது கொண்டேயிருந்தான் முதுகிலும் பின்னந்தொடையிலும் வரிவரியாகச் சிவந்திருந்தது. கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து கிடந்தது. அம்மா அழுது கொண்டே அப்பனைத் திட்டிக் கொண்டு கிடந்தது.
     துப்புக் கெட்டவங் கையை ஒடிச்சி அடுப்புல வைக்.. புள்ளக்கி என்ன தெரியும்? வாடகை குடுக்கப் பயந்துகிட்டு இவுக வீட்டுகாரவுகளைப் பாக்காதது மாதிரி ஓடுவாகன்னு புள்ளைக்குத் தெரியுமா? இது டாட்டா சொன்னதுலதான் இவுகளைக் கண்டுக்கிட்டாகளாம்! அதுக்குன்னு புள்ளையைப் போட்டு இந்த அடியா அடிப்பான் ஒரு மனுசன் பெத்த கடனுக்கு ஒரு பிஸ்கோத்தாவது வாங்கியாந்து குடுத்திருப்பியா நீ? இப்ப அடிக்க வந்துட்டே. எங்கிட்டோ தஞ்சாவூர்ல பஸ் ஸ்டாண்டுல சும்மாத் திரிவே இல்லையினா செயிலுக்குப் போவே ஒனக்கு என்னா தெரியும் எம்புள்ளையைப் பத்தி…” என்று எப்பவோ வெளியே போய்விட்ட செல்லத்துரையை மனசார எதுக்க நிறுத்தித் தனக்குத்தானே வழக்காடிக் கொண்டாள் பொட்டு.
     கருந்தட்டாங்குடியை நெருங்கிவிட்டது. பஸ்.
     இவன் பக்கமாக வந்து இறங்கப் போன ஐயர் வீட்டுப் பாட்டியம்மா டே அம்பீ! இந்தக் குடத்தைக் கொஞ்சம் எறக்கிக் குடுத்துடேன் என்றவள் இவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு அட! குஞ்சானியோன்னோ நீ? நன்னாருக்கியோடாப்பா? இதைச் சித்த புடி என்றது. குடத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் ஏறிக் கொண்டான்.
     இந்தப் பாட்டிதான் இவன் அடி வாங்கியதற்கு அடுத்த வருசம் குஞ்சானியின் அம்மாவிடம் கேட்டது. ஏண்டீ! பொட்டூ! ஒன் ஆம்படையான் தஞ்சாவூர்ல பெரிய்ய சண்டியராய்ட்டானாமே! ஏதோ எம்.எல்.ஏ. வையே சட்டையைப் புடிச்சி ரொம்ப விவகாரமாயிடுத்தாமே!
     ஆமா! அந்தத் துப்புக் கெட்டதைப் பத்தி எங்கிட்டக் கேளுங்க! அதுக்குக் கட்டுனவள ஞாபகமிருக்கா பெத்த புள்ளையத்தான் ஞாபகமிருக்கா எவளோ ஒரு கூத்துக்காரியோடயில்ல இப்ப சவுகாசமாம்! எந்தலையில போட்ட எளுத்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இன்னமும் உசிரோட இருக்கேனேஎன்னைச் சொல்லணும் பாத்திரத்தை தேய்த்துக் கொண்டே சொல்லும் அம்மாவின் குரல் கிணற்றுப் பக்கமாய்த் தேயந்து கொண்டே போகும். பாவம் அம்மா! இவன் உடம்பிலேயே தன் உயிரையும் வைத்துக் கொண்டு பாத்திரங்களோடு தேய்ந்து கொண்டே போனது.
     அப்பனைப் பற்றிக் கடைக்காரத் தாத்தா தான் அவ்வப்போது குஞ்சானியிடம் சொல்வார்.
     எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வுடனான தகராறில் செல்லத்துரை பிரபலமாகி மறுபடியும் ஜெயிலுக்குப் போனானாம். இந்த முறை ஆளுங் கட்சியின் பெரிய வீரனாக பெயிலில் வந்தான். அப்புறம் இடைத் தேர்தல் எதிர்க் கட்சிக் கூட்டங்களில் இவன் தலைமையில்தான் சோடா பாட்டில் சைக்கிள் செயின் பறக்குமாம்.  பத்து இருபது பேர் ஆஸ்பத்திரிக்குப் போவார்கள். நாலைந்து பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவார்கள்.
     சாராயக் கடை ஏஜெண்டுகளும் காண்ட்ராக்டர்களும் கட்சிக் கரை வேட்டிகளுமாய்ப் புதிதாகக் கட்டிய வீடு தஞ்சையில் பிரபலமானது.
     அந்தப் பக்கம் வரும்போது துரையண்ணனைப் பார்க்க மந்திரிகளும் வருவார்களாம். ரெண்டு மூணு டாக்சி லாரிகளோடு சினிமாத் தியேட்டர்கூட இருக்குதாம்.
     ஒவ்வொரு சமயம் தாத்தா இதையெல்லாம் சொல்லும்போது இவனுக்கு ஆச்சரியமாயிருக்கும். திருவையாற்றிலேயே ஒரு சமயம் நடந்தக் கூட்டத்தில் பெரிய மனிதர்கள் மத்தியில் அப்பனைப் பார்க்கும்போது ஆசையாகவும் பயமாகவும் இருக்கும். எட்டியிருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவான்.
     அம்மாவுக்குப் போன வருசம் ஒரு காய்ச்சல் வந்தது.
     சத்திரம் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கிச் சாப்பிட்டும் தீரவில்லை. வேலைக்குப் போக முடியறதில்லேன்னுதான் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.
     அந்த மாமாங்கத்து மிசின் ரிப்பேராகிவிட்டது.
     திருவையாற்றுக்கே உரிய யானைக்கால் வியாதி.
     தத்தித் தப்பிளிச்சு இவன் படித்த படிப்புக்கோ பழக்கத்துக்கோ யாரும் வேலை தரவில்லை. தியாகராசர் சமாதித் துறையில் காவிரியைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நாள்தான் உட்கார்ந்திருக்க முடியும்?
     கடைக்காரத் தாத்தாதான் எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி அம்மாவுக்குத் தெரியாமல் குஞ்சானியை பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார்.
     மந்திரிக்கெல்லாம் தெரிஞ்சவர் உனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ண மாட்டாரா?
     தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினான் குஞ்சானி. அப்பன் வீட்டை விசாரித்துக் கொண்டு வருவது ஒன்றும் சிரமமாயில்லை. ஆனால் இவன் செல்லத்துரை அவுங்க வீடு எங்கிட்டு இருக்குதுங்க? என்று கேட்டதும் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே துரையண்ணன் வீடுதானே? என்ற கேள்வியோடுதான் வழி சொன்னார்கள்.
     வீடு பெரிதாகத்தான் இருந்தது.
     சுற்றிலும் தென்னை மரம். பூஞ்செடிகள் ஏழெட்டுப் பேர் வெளியிலும் ரெண்டு மூணு பேர் வீட்டு வராந்தாவிலும் நிற்பது தூரத்திலேயே தெரிந்தது. காம்பவுண்டுக்குள் வராந்தாவை ஓட்டி ரெண்டு கார் நின்று கொண்டிருந்தது.
     தயங்கித் தயங்கி வீட்டை நெருங்கினான் குஞ்சானி.
     அப்பா இருப்பாரோ இல்லியோ? இருந்தாலும் என்ன சொல்லுவாரோ? அவரைப் பார்த்துப் பேசிப் பத்துப் பன்னண்டு வருசமாச்சே!ஹீம்!
     ஒரு வேலைக்காக அப்பனைப் பாக்கப் போவது தெரிந்தால் அம்மா என்ன சொல்லுமோ என்ற குழப்பங்கள் அவனை மேலும் சங்கபட்படுத்தின.
     அட துப்புக் கெட்டவனே! என மனசுக்குள் வந்து திட்டியது அம்மா.
     வேட்டி அண்டராயரில் மிச்சக்காசு பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப் பாத்துக் கொண்டாள். காசு பத்தலயின்னா மேலத் தெரு மதிகிட்டத்தான் போய்க் கேக்கணும் தருவான்.
     வராந்தா பெஞ்சியில் உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். வீட்டுக்குள்ளேயிருந்து இரண்டு பேர் வந்தார்கள். படியிறங்கிக் கார்க் கதவைத் திறந்து ஒரு காலை காருக்குள் வைத்துக்கொண்டு திரும்பிப் பேசியவர் முகத்தைக் குஞ்சானி கவனித்தான். இதே வீட்டுக் காம்பவுண்டுச் சுவர் போஸ்டரில் இவர் முகம் இருக்கிறதே!
     கூடப் பேசிக் கொண்டிருந்தவர்தான் அப்பா! படபடத்துப் போனான் குஞ்சானி. தொப்பையும் முகமெல்லாம் பிதுங்கிய சதையுமாய் உருவமே மாறியிருந்தது. கண்ணுக்கருகே அந்தப் பழைய தழும்புதான் அப்படியே இருந்தது.
     கார் கிளம்பியதும் உள்ளேயிருந்தவருக்கு டாட்டா காட்டியது அப்பன்! இவனுக்குத் திக்கென்றது. இவனையும் எல்லோரோடும் பார்த்துச் சிரித்துக் கொண்டே துரையண்ணன் உள்ளே போனதும். அதுவரை வெளியே நின்றிருந்த கூட்டம் வராந்தாவுக்குப் போக முனைந்தது.
     குஞ்சானியோடு இன்னொரு அழுக்கு வேட்டிக்காரனையும் வெளியே நிறுத்திவிட்டான் வாசலில் நின்றிருந்தவன்.
     ப்ச்! முனையில் கிழிந்திருந்த வேட்டித் தலைப்பையாவது மாத்திக் கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்
     அண்ணே! நான் அய்யாவைப் பாக்கணுமுன்னே மன்னார்குடியிலேர்ந்து வாரேன்…” அந்த அழுக்கு வேட்டிக்காரன் தொடங்கியதுமே வாசல்காரன் இவனைப் பார்த்தான். அலட்சியப் பார்வை.
     குஞ்சானி அவனிடம் நானும் அய்யாவை வந்து துரையண்ணனை இல்ல வந்து…” வார்த்தை தட்டித் தடுமாறி நின்று போனது.
     அப்புறம் அந்த மன்னார்குடிக்காரனும் உள்ளே போய் வந்து பிறகு ரெண்டு மூணு பேரோடு பேசிக் கொண்டே வெளியே வந்து காரில் ஏறிய துரையண்ணன் கதவை அறைந்து சாத்திக் கொள்ளத் தூசியைக் கிளப்பி விட்டுக் கார் கிளம்பியது.
     நின்றிருந்தவர்களுக்குக் காரிலிருந்து கை அசைந்து டாட்டா காட்டியது. எட்டத்தில் தனித்து நின்ற இவன் கையும் தொங்கிய வண்ணமே மெதுவாக அசைந்தது!
---------------------------------------------------  
கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1986 
இரண்டாம் பரிசுக் கதை 
வெளிவந்த கல்கி இதழ் -10-08-1986
(இந்த எனது முதல் சிறுகதைக்கு கல்கியில் 
இரண்டாம் பரிசு கிடைத்தது!! 
அந்தப் போட்டியில் முதல் பரிசு யாருக்கு தெரியுமில்ல? நம்ம மேலாண்மை பொன்னுச்சாமி! அவர் தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கிறார். நான்? நாவால் நாடுமுழுவதும் நடந்து திரிந்து நாசமாய்ப் போனதாய் நெருக்கமான நண்பர்கள் அவ்வப்போது அர்ச்சனை தூவுவார்கள்! அதன் பிறகும் எழுதிய மொத்தச் சிறுகதையே 4தான்! ஒவ்வொன்னா நம்ம வலையில போடுவோம். வேறென்ன செய்ய?)