வகுப்புகள் தொடக்கவிழாவில் நா.முத்துநிலவன் பேச்சு
புதுக்கோட்டை – ஜூலை 3. பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப் படுவது வெறும்
தகவல் அறிவுதான், அதைவிடவும் பெரியது சிந்தனைஅறிவு. மாணவர்கள் அதனைப் பெற முயற்சி
செய்ய வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்
புதுக்கோட்டை அருகில் உள்ள
பெருங்களுரைச் சேர்ந்த, ஸ்ரீ அன்னை அபிராமி பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம்ஆண்டு
வகுப்புகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றிய அவர், மேலும் பேசியபோது
தெரிவித்தது –
வாழ்க்கையில் நேரடியாகப்
பயன்படக்கூடிய நீச்சல், இருசக்கர வாகனம் ஓட்டுதல், செல்பேசியில் குறுஞ்செய்தி
தருதல்-பெறுதல் முதலானவற்றை எந்தக் கல்லூரி, பள்ளியிலும் மாணவ-மாணவியர் கற்றுக்
கொள்வதில்லை. ஆனாலும் பெரும்பாலானோர் இவற்றைக் கற்று வைத்துள்ளது இயல்பே. ஏனெனில்,
என்ன படிப்புப் படித்தாலும், எந்த வேலைக்குப் போனாலும் வாழ்க்கையில் முன்னேற
விரும்பினால், இவற்றை இல்லாமல் முன்னேற்றமில்லை என்பது நிச்சயம்.
இதே போல, பள்ளி
கல்லூரியில் வெறும் மதிப்பெண்ணுக்காக மட்டுமே படிக்க கூடாது. ஒருவரோடு ஒருவர்
இணங்கிப் பழகுவது, நட்பை ஆக்கவழியில் நடத்திச் செல்வது, தலைமைப் பண்பை வளர்த்துக்
கொள்வது, மேலும் முன்னேற இதர பல திறன்களையும் வளர்த்துக் கொள்வது ஆகியவை முக்கியமானவை.
ஒரே மதிப்பெண் பெற்ற இருவர் ஒன்று போல முன்னேறுவதில்லை. முன்னேறியவனின் பாதையைப்
பார்த்தால் அதில் மதிப்பெண் தாண்டியும் பல திறன்கள் இருப்பது தெரியவரும்.
எந்திரங்களை இயக்கக்
கற்கும் மாணவர், எந்திரகதியான வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருள்களைத் தனது
கற்பனையினால், புதிது புதிதாக்க் கண்டுபிடிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும்
கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித்தான் பில் கேட்ஸ் பணக்காரரானார். பெரும்பெரும்
நிறுவனங்களை நிர்வாகம் செய்ய மிகுந்த கற்பனைத் திறமும் ஆளுமைத் திறமும்
தேவை. கல்லூரிக் காலத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் முயற்சியில் இவற்றை
மறந்துவிடக் கூடாது.
மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்ட வெறும் தகவல் அறிவை வைத்துக் கொண்டு
வேலையில் முன்னேற முடியாது. அதற்கான சிந்தனை அறிவு முக்கியம். “அறிவு அற்றம் காக்கும் கருவி“ என்றார் வள்ளுவர்,
புதிய கண்டுபிடிப்பாளர்களை “பிரம்ம தேவன்“ என்றார் பாரதியார். இதன் பொருளைப்
புரிந்துகொண்டு, வாழ்வில் வெற்றிபெறவும், தன் குடும்பத்தோடு, நாடு முன்னேறப்
பாடுபடுவதும் அவசியம். விஞ்ஞானிகளும், தியாகிகளும் என்றென்றும் வாழ்வதுபோலும்
வாழ்க்கையைத் திட்டமிட வகுப்பறை உதவும். இந்தியாவின் மிகஉயர்ந்த இலக்கியப் விருதான
“ஞானபீட விருது” தமிழுக்குப்
பெற்றுத் தந்த எழுத்தாளர் அகிலன் பிறந்த பெருங்களுரின் மாணவர்கள், அந்தப் பாரம்பரியப்
பெருமையைத் தொடர்ந்து கொண்டு செல்லும் வகையிலும் இக்கல்லூரிக்கும் பெருமை
சேர்க்கும் வகையிலும் இன்று தொடங்கும் வகுப்புகள் பயன்பட வேண்டும் என்று
வாழ்த்துகிறேன்.
இவ்வாறு நா.முத்துநிலவன்
உரையாற்றி வகுப்புகளைத் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்குக் கல்லூரித் தலைவர் நிலாமணியம் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி வள்ளிமணியம் குத்துவிளக்கேற்றி
வைத்தார். கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரிச் செயலர்
பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். முன்னாள் பெருங்களுர் ஊராட்சித்தலைவர் தங்கராஜ்,
ஆங்கிலப் பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதலாண்டு மாணவ-மாணவியர் அனைவரும் அவர்தம் பெற்றோருடன்
கலந்துகொண்டனர். துறைத்தலைவர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் விழா
ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கல்லூரி முதல்வர் பூப்பாண்டி வரவேற்க, துறைத்தலைவர் மதியழகன் நன்றி கூறினார்.
(செய்தி வெளியீட்டுக்கு நன்றி-தினமணி-திருச்சிப்பதிப்பு-03-07-2014)
----------------------------------------------------
மிகவும் அருமையான பேச்சு ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவிழா சிறப்புற்றமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தங்களின் பேச்சு ஒரு சிந்தனைத் துளி என்றுதான் ஐயா சொல்ல வேண்டும் இதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கல்லூரி துவங்கும் இந்த நேரத்தில்
பதிலளிநீக்குஅனைத்து மாணவர்களுக்கும் பயன்படும்படியான
அருமையான கருத்தை பதிவாக்கியும்
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் சொற்பொழிவு கருத்துக்கள் நிரம்பியவை. மாணவர்கள் மனதில் மீண்டும் அசை போட வைப்பவை.
பதிலளிநீக்குஅருமையான பேச்சு ஐயா
பதிலளிநீக்குமாணவர்களுக்கு சொன்ன நல்லுரை..... எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு// மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்ட வெறும் தகவல் அறிவை வைத்துக் கொண்டு வேலையில் முன்னேற முடியாது. அதற்கான சிந்தனை அறிவு முக்கியம். //
பதிலளிநீக்குஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டியது...
வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்க்கைக்கான கல்வியே இன்றைய தேவை என்பதைத் தாங்கள் எடுத்துக்கூறியவிதம் மாணவர்கள் மனதில் கொள்ளளவேண்டியதாகும்.
பதிலளிநீக்குமாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇக்கால மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தேவையான பதிவு சார்.நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் கூறியவை மிகவும் சரி ஐயா ! ஆனால் அதற்கு நமது பாடத்திட்டங்கள் ஒத்துழைக்க வேண்டுமே ? கட்டிடக்கலை படிப்பவர்களுக்கு வீடு கட்ட சொல்லிக் கொடுக்கிறார்களே தவிர எப்படிக் கட்டுவது என்று சொல்லித்தருவதில்லையே !
பதிலளிநீக்குஆனால் அருமையான உரை ஐயா!
மதிப்பெண்ணை நோக்கி ஓடாமல் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைத் தேடி கற்கவும் கற்பனையைத் திறனை வளர்த்து புதிது புதியதாய் ஆக்கம் செய்யவும் தூண்டும் பேச்சு..அருமை ஐயா
பதிலளிநீக்கு