சங்கஇலக்கியம் காட்டும் மனிதகுல வரலாறு
-- நா.முத்து நிலவன் --
‘தமிழ் இலக்கிய
வரலாறு’ எனும் தலைப்பில்
ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும், ‘மனிதகுல வரலாறு அனைத்தும்
வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்’ – எனும் புகழ்பெற்ற வரிகளோடு
தொடங்கி, உலகையே
மாற்றிவிடத் தக்க சமூகவியல் பார்வையைத் தந்த மார்க்சும் ஏங்கெல்சும் உருவாக்கிய ‘மார்க்சிய பார்வை’யில் முழுமையான
தமிழ் இலக்கிய வரலாறோ, தமிழ்ச் சமூக
வரலாறோ இன்னும் எழுதப்படாதது தமிழுக்குப் பெரும் குறையே!
அரசியல்-
பொருளாதாரத்தில் மட்டுமின்றி, இலக்கிய
வரலாற்றிலும் அதன் வழியான சமூகவரலாற்றிலும் மார்க்சியப்பார்வை தரும் வெளிச்சம் பலபுதிய சிந்தனைகளை
உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.
பேராசிரியர்கள்
நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இவர்களோடு, வெளிநாட்டுத்
தமிழறிஞர்களான கமில்சுவெலபில், ஜார்ஜ் உறார்ட்
போன்றோரும், நமது முன்னோடி
ஆய்வாளர்களானகே.முத்தையா, பேரா.மணிமாறன(திருச்சி),ஏ.கே.ராமானுஜன், பேரா.அருணன், ச.செந்தில்நாதன், கோ.கேசவன், ராஜ்கௌதமன், எஸ்.வி.ராஜதுரை, ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், வீ.அரசு, வெ.பெருமாள்சாமி முதலானோரும் அறிவியல் பார்வையோடு அரிய
சில நூல்களை - கட்டுரைகளைத் தந்துள்ளனர். வேறு பலரும் பற்பல ஆய்வு நூல்களைத் தமிழ்
இலக்கியங்களின் உள்நுழைந்து தனித்தனியே எழுதியிருக்கின்றனர்.
ஆயினும் இந்த
வரலாற்றுப் புள்ளிகளை இணைத்து தமிழ்ச்சமூகத்தின் முழுவரலாற்றுக் கோலத்தை யார்வரைவது? மார்க்சியத் தோய்வும், தமிழ்மரபு ஆய்வும் இணையும்
போதே இது சாத்தியமாகும்.
மன்னர் வரலாறே
நாட்டுவரலாறாக எழுதப்பட்டது போக, மக்கள் வரலாறு எப்போதுதான்
தெளிவாகும்? இதற்கு மார்க்சியம் கூறும்
மனித சமூக வரலாற்றுக் குறிப்புகளில் முதலில் தெளிவுபெறவேண்டும். மனிதகுலம் இதுவரை
ஐந்து வகை சமுதாய நிலைகளைக் கண்டுள்ளதாக மார்க்சியம் கூறுகிறது.
1.ஆதிப்
பொதுவுடைமைச் சமூகம், 2.அடிமைச் சமூகம், 3.நிலவுடைமைச் சமூகம், 4.முதலாளித்துவ
சமூகம், 5.சமத்துவ சமூகம் என, மார்க்சியம் காட்டும் இந்த
ஐவகைச் சமூகங்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பதிவுகள் உண்டு என்பதுதான்
சிறப்பாகக் கவனிக்க வேண்டியது. இதில் முதல் மூன்றுநிலைக்கான தெளிவு இருந்தாலே
தமிழ்ச்சமூக வரலாற்றை எழுதிவிட முடியும்.
1. ஆதிப் பொதுவுடமைச் சமூகக்
கூறுகள்:
இச்சமூகக்
காலத்தின் ஆரம்பத்தில், உலகில் நாடுகள், நகரங்கள், ஊர்கள், வீடுகள் என்று
ஏதும் தோன்றி இருக்கவில்லை. தனிச்சொத்து, குடும்பம், அரசு என்று ஏதும்
இருக்கவில்லை மக்கள் விலங்குகளைப் போலக் காடுகளிலும், மலைக்குகை மற்றும்
மரப்பொந்துகளிலும் வாழ்ந்து வர, அவர்களின்
கருவிகள் கல்லும் வில்லும் கற்களும் பின்னர் இரும்பாயுதங்களுமாக இருந்தன. இந்த
நிலையில் யாரும் தனித்துவாழ முடியாது. தனித்து உணவு தேடவும் முடியாது கூட்டாகவே
ஈடுபட்டனர். கிடைத்தவற்றைக் கூட்டாகவே பகிர்ந்துண்டனர்.
இது
இன்றையபொருளில் சொல்வதுபோன்ற ‘ஒற்றுமை உணர்’வன்று. வேறு
வழியில்லை. இதுதான் இச்சமுதாயத்தின் ‘உற்பத்தி-வினியோகமுறையாக’வும்இருந்தது.இதனாலேயே
இதனை ‘ஆதிப் பொதுவுடமைச்
சமூகம்’ என்றார் மார்க்ஸ்
என விளக்குகிறார் பி.ஆர். பரமேசுவரன் (மார்க்கியத் தத்துவம்-பாடக்குறிப்பு எண் 33)
இச்சமூகத்தில்
திருமண முறையோ குடும்பமுறையோ தோன்றியிருக்கவில்லை. கூட்டம் முழுவதும்
தலைவியான தாய்வழியாகவே அறியப்பட்டது. அதனால் தான் இது ‘தாய்வழிச் சமூகம்’ என்றும்
கூறப்படுகிறது. கூட்டு உழைப்பின் போது எழுப்பும் ஒசையே இசை ஒழுங்குபோல திரும்பத்
திரும்பக் கூறப்பட்டு, பிறகு மொழியாகவும், ஆடல் பாடல்களின் பரிணாமமே
கலையாகவும் வளர்ந்தது. இவர்கள் அறியாமையால் வந்த அச்சத்தின் காரணமாக நீர், மரம், நெருப்பு, காற்று, மழை போன்றவற்றை வணங்கவும்
செய்தனர்.
இதன் இறுதிக்
கட்டமே இனக்குழு மக்கள் சமூகம் ஆகும். உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து உணவு
பயிரிடும் நிலை, கால்நடைகளைக்
கொன்று தின்ற நிலையிலிருந்து அவற்றை வளர்க்கும் நிலைக்கு சமூகம் முன்னேறியது. கல், வில்-அம்புக்குப் பதிலாக
கத்தியும் கூர்வாளும் கோடாரியும் வந்தன ‘கோடாரி, மனிதகுல வரலாற்றில்
ஏற்படுத்திய மாறுதல் மகத்தானது’ என்கிறார்
ஏங்கெல்ஸ். புதிய ‘உற்பத்திக்
கருவிகள்’ வரவே வேளாண்மை
வளரத் தொடங்கியது. இனக்குழுச் சமூகத்தின் இறுதியில் குழந்தைவளர்ப்பும் வீட்டுப்
பராமரிப்பும் பெண்களின் பொறுப்பானது. பெண் சமூகத்தலைமையிலிருந்து சிறிது சிறிதாக
அகற்றப் பட்டாள்.
சமூகத்தில்
ஏற்பட்ட முதல் வேற்றுமை கருவிகள் உள்ளவர் இல்லாதவர் என்பதைப் போல, முதல் அடிமைத்தனம்
ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டதே. இது திருமண வாழ்வில்
தொடங்கியது. பழைய சமூக நிலையின்படி, ஒன்றாக வாழ்ந்துவிட்டு
பின் ‘இல்லை’ யென்று பொய் கூறிய ஆண்களாhல் திருமணமுறை
வந்தது! அதைச் சடங்கு முறைப்படிச் செய்து வைத்தவர் சமூகத் தலைவர் (ஐயர்) ஆனார். ‘பொய்யும் வழுவும்
தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’- தொல்காப்பியம். (கற்பியல்-4) குடும்பமும், அரசும், தனிச்சொத்தும் இவ்வாறே ‘தனியுடைமையோடு’ தோன்றின.
தமிழ் இலக்கியத்தில்
ஆதிப்பொதுவுடைமைச் சமூகப் பதிவுகள்:
உழவு தோன்றுமுன்
காய் கனி கிழங்குகளைத் தேடியபோது, உணவு சேகரிப்பின்
புனைகதையே வள்ளியின் கதையாகும் (வள்ளி – தமிழ்நாட்டுக் கிழங்கு
வகை) இது முருகளோடு சேர்ந்து, புனைகதை
புராணக்கதையானது. அதற்கும் முன்னரே தமிழ்நாட்டில் வழிபடப்பட்டு வந்த முருகனுக்கு
கி.பி.600களின் நடுவில் வாதாபியிலிருந்து வந்த கணபதி அண்ணனானார்!)
உணவு தேடிச்
சேகரித்த காலத்தில் வள்ளியின் கதையும், உணவு பயிரிடப்பட்ட
காலத்தில் சீதையின் கதையும் புனையப் பட்டிருக்க வேண்டும் என்பது சமூக வரலாற்றைச்
சரியாக யோசிப்பவர்க்குப் புரியும்.
தாய்வழிச்
சமூகத்தின் பெண்தெய்வ வழிபாடு சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளது. கான்அமர் செல்வி
(அகநூறு-345), கடல்கெழுசெல்வி(அக:370), அணங்குடைச்சாரல்(பெரும்பாண்-494), சூர்மகள்(நற்றிணை34), மழையணங்கு(புறம்151) எனப் பழந்தமிழ் இலக்கியம்
கூறும் பாலை நிலக் ‘கொற்றவை’யே பிறகு
பார்வதியாக-சக்தியாக-காளியாக --இருபதாம் நூற்றாண்டில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
திரைப்படத்தில் வரும் ஆதி பராசக்தியாக-- வளர்ந்தது என்பதையும் இங்கு ஒப்பிட்டுப்
பார்க்கலாம். ‘சிலப்பதிகாரத்தில் வரும்
பத்தினி வழிபாடும் ஐயைவழிபாடும் தாய் வழிச்சமூகத்தின் எச்சமே’ என்கிhர் நா.வா. (தமிழர்
வரலாறும் பண்பாடும்)
தாய்வழிச் சமூகம்
மறைந்து ‘பெண் ஆணைச் சார்ந்தவளே’ எனும் கருத்தின்
தொடர்ச்சியே சிவ-சக்தி ‘சிவத்தில் பாதியே சக்தி’ கதைகள்! யார் பெரியவர் எனும்
போட்டியில் சிவன் எரித்தது சக்தியை அல்ல, தாய்வழிச் சமூகத்தின்
மிச்சசொச்சத்தை! பற்றி எரித்தபின் தன்னில் பாதியைக் கொடுத்தாரம் பரமசிவன்! ‘கொடுக்கும்’நிலைக்கு
உயர்ந்துவிட்ட ஆணாதிக்க சமூக நிலையின் அடையாளமே இந்தப் புராணக்கதை.
இச்சமூகக் காலத்து
மலைவாழ் மனிதர் குன்றக்குறவர் (ஐங்குறு நூறு 251-260) எனப்பட்டனர். இவர்கள்
வேட்டைக்கருவியாக கவட்டை(அகம்-34) வேட்டைக்கொம்புகளோடு
(நற்றிணை-276) வேட்டையாடினர்.
கொண்டு வந்த விலங்குகளை அறுத்துச் சுட்டுத் தின்றபிறகு கூட்டாக கள்குடித்து
மயங்கினர் (அக-172) வேட்டையாடிக்
காட்டுப் பன்றியை குறப்பெண் அறுத்துப் பங்கிட்டு அனைவர்க்கும் தந்தாள்.
உணவு சேகரிக்கும்
நிலை சங்கஇலக்கியத்தில் மிகத்தெளிவாக உள்ளது. உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு
மண்ணைத் தோன்டி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டு உயரமான மண்புற்றுகளை உடைத்து
அங்குள்ள ஈசலை வாரிக்கொண்டு முயலினைக் கொண்டுவந்த வேடனைப் பற்றிக் கூறுகிறது: ‘உடும்பு கொளீஇ
வரிநுணல் அகழ்ந்து நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கொண்டி எல்லுமுயல் எறிந்த
வேட்டுவன்’….-(நற்றிணை 59)
நால்வகை நிலப்பிரிவில்
தமிழ்ச் சமூக வரவாறு:
மனிதன், உணவுசேகரிக்கும்
நிலையிலிருந்து உழவு செய்யும் நிலைக்கு உயர்ந்தது ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டம். இது
தமிழ் இலக்கியத் தொகுப்பில் மட்டுமல்ல இலக்கணப் பகுப்பிலும் பதிவாகியுள்ளது.
தானே விளையக்கூடிய
வரகு, கொள், தினை, அவரையைத் தவிர
உணவு வேறு இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்(புறம்-335), உழவர் உழவு செய்யாத
காலத்திலும் பாரியின் மலையில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக்கிழங்கும், மலைத்தேனும்
நிறையக் கிடைத்ததாக மகிழ்ச்சியடைகிறார் கபிலர்(புறம் 109)
மலையிலும்
காட்டிலும் உணவுதேடி அலைந்த மனித இனம் ஆடு,மாடுகளின் பயன்கண்டு உழவு
செய்யத் தொடங்கியதும் சமவெளிக்கு வந்தது என்பதில் எந்தக்குழப்பமும் இல்லை. குறிஞ்சி, முல்லையிலிருந்து மருதம்!
மலையிலும் காட்டிலும் இயற்கை கண்டு அஞ்சிய மனிதன், வயலில் இயற்கையை ஒட்டி
வாழக் கற்றுக்கொண்டு இயற்கையை இணைத்துக் கொள்ளவும் முடியும் என்பதே கடல்பகுதி-
நெய்தல் நிலம்.
பழந்தமிழ்
இலக்கியத்தில் பெரும்பகுதியான அகப்பாடல் காட்டும் குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்
எனும் நானிலப் பகுப்பில் மனிதக்கூட்டம் உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து உணவுப்
பயிர் செய்யும் சமூக மாற்றமே அடிப்படையாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
தொல்காப்பியர்
முல்லை(காட்டுப்பகுதி), குறிஞ்சி(மலைப்பகுதி), மருதம் (வயல்பகுதி)
அதன்பின்னர் நெய்தல் என்றே வைக்கிறார்(தொல்.புறத்.நுற்பா1-6). என்றாலும் மலை-காடுகளில்
கிடைக்காத நிலையான வாழ்க்கை, மருத-வயலில்
கிடைத்தது என்பதில் மாறுபாடில்லை. இரண்டு நிலப்பகுதி மக்களின் அடுத்த
கட்டவளர்ச்சியே உணவுப்பயிர் செய்யும் நிலைக்கு வந்ததில் தொல்காப்பியருக்கும்
மாறுபாடில்லை.
பழந்தமிழில் இனக்குழு
மக்கள் வாழ்க்கை நிலை:
இனக்குழுத்தலைவனிடம்
--அச்சமுதாய அமைப்பிற்கேற்ப-- கையில் பொருள் ஏதும் இல்லை (புறம் 141) ‘விருந்தினர்
யாரும் வந்தால் கூட உபசரிக்க முடியாத நிலையில் கை வாளை அடகு வைப்பவன்’ ஆயினும் அவனும்
அடிமையில்லை அவனுக்கு யாரும் அடிமையில்லை. அவன் நிலவுடமையாளனும் அல்லன்! வளமை
வறுமை இரண்டையும் தன்கூட்டத்துடன் பகிர்ந்து கொண்ட அவனே இனக்குழுத் தலைவன்!
இனக்குழுத் தலைமை
நிரந்தமானதல்ல. கூட்டத்தினரை விட
உயர்ந்த வாழ்க்கையை இனக்குழுத் தலைவர்கள் வாழவில்லை. வேட்டையின் போதும், அடுத்த கூட்டத்துடன் மோதல்
வரும்போதும் மட்டுமே தலைமையேற்று, மற்ற காலங்களில்
தம்கூட்டத்தில் ஒரு சாதாரண உறுப்பினராகவே இனக்குழுத் தலைவர்கள் வாழ்ந்தனர். ஆதிப்பொதுவுடமைச்
சமூகத்தின் இயல்புக்கேற்ப ‘கிடைத்தபோது
வளமையிலும் கிடைக்காதபோது வறுமையிலும்’ இவர்களும் பங்கேற்றனர். ‘தலைவருக்கு’த் தனிச்சலுகை
ஏதும் தரப்படவில்லை என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. எனவேதான், ‘கள்ளுண்ட
மயக்கத்தில் கிடக்கும் எம் தலைவனுக்குப் படுக்கப் பாய் எதையாவது கொடுங்கள்’ என்கிறார் வேம்பற்றூர்க்
குமரனார்.(புறம் 317)
ஆனால் சமுதாயம்
மாறி அடுத்தகட்டத்துக்கு வந்தபோது குழுவுக்குத் தலைமையேற்று, முடி’வேய்ந்த’வர் வேந்தர்(சிறுமன்னர்) ஆனார். குறுநில மன்னராகப்
பரிணமித்த வேந்தரிடம் ‘எனக்கு உன்னைப் படிக்கவில்லை ஏனெனில் நீ
(இனக்குழுத்) தலைவனைப்போல இல்லை’ என்று இனக்குழு மக்கள் கூறியதாகக் கூறுகிறார் பெருந்தலைச் சாத்தனார்!
(புறம் 151)
‘தொன்மைக் கிரேக்க
ரோமானிய பிரதேசங்களைப் போன்றே இந்தியாவிலும் சமூகம் வர்க்கங்கள் அற்ற
நிலையிலிருந்து அரசுக்கு வளர்ச்சியடைந்தது’ –எனும்குறிப்பு (இந்தியாவின் வரலாறு’-மாஸ்கோ-பக்:145) சரியானதே.
அடிமைச் சமூகத்தில் மக்கள்
வாழ்க்கை நிலை :
வில் வாள் வேல்
போன்ற சண்டைக் கருவிகளோடு உழவுக் கருவிகளும் சேரச்சேர இந்த ‘உற்பத்திக்
கருவிகள்’ உள்ளவர்க்கும்
இல்லாதவர்க்குமான மனிதசமுதாயத்தின் முதல் முரண்பாடு தோன்றியது. இல்லாத பலர்
அடிமையானார்கள, இருந்த சிலர் ஆண்டை ஆனார்கள் இதுதான் மனித சமூத்தின்
தெளிவான முதல் வர்க்க வேற்றுமை.
அடிமைகளைக்
கொல்லவும் விற்கவும் ஆண்டைகளுக்கு உரிமை இருந்தது. இருப்பவன், இல்லாதவர்களை பலவந்தமாக
வேலை வாங்கினான். இதன் ஒருபக்கம், கடுமையான அடக்கு முறை.
மறுபக்கம் உற்பத்தி உபரி, அதிக விளைச்சல், குடியிருப்பு, கைத்தொழில் வளர்ச்சி, பண்டப் பரிவர்த்தனை
முறைகளும் தோன்றின ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பலர் உடல் உழைப்பிலிருந்து
விடுபட்டு அறிவுத்துறையில் ஈடுபட்டனர். தொழில் வளர்ந்தது. தத்துவங்களும்
இலக்கிய-இலக்கணமும் சமயச் சடங்குகளும் தோன்றின.
‘சிறுபான்மையினரான
ஆண்டைகள் பெரும்பான்மையான அடிமைகளை அடக்கி ஒடுக்க அரசின் அடக்குமுறை மட்டுமே
போதவில்லை அவர்களை மயக்கி வைக்கும் ‘அபின்’ தேவைப்பட்டது புதிய புதிய
மதங்கள் கடவுள்கள் தலைஎழுத்து முற்பிறப்பு மறுபிறப்பு நாகம்-சொர்க்கம் ‘எல்லாம் அவன் செயல’; போன்ற அனைத்தும்
இக்காலத்தில் சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த அறிவாளிகளால் சொல்லப்பட்டன’ என்கிறார் பி.ஆர்.
பரமேசுவரன் (முன்நூல்- பக்: 37-38)
இந்த அடிமைச் சமுதாயநிலை
தோன்றிய ஓரு சில நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் வேறுபட்ட வடிவங்களில் பரவியது
இந்தியாவில் ‘வருணாசிரமதர்மம்’ எனும் ‘நான்கு வர்ண முறை’ அதன் வடிவமாக அமைந்தது.
இது நிலப்பிரபுத்துவ காலத்தில் எண்ணற்ற சாதிகளாகப் பரிணமித்தது என்கிறார்.
பி.ஆர்.பி. உழைப்பை அடிப்படையாகக் கொண்டே நால்வகை வருணப் பிரிவுகள்
திணிக்கப்பட்டன. ‘துடியன் பாணன் பறையன்
கடம்பன்’ என்போரே
பழங்குடியினர் (புறம்-335). ஆனால், நால்வகை வருணப் பிரிவுகளை ‘ஆண்டவன் விதி’த்ததாக ஆள்பவன் துணையுடன் ஏற்க வைத்தனர்
பார்ப்பனர்.
அடிமைச் சமூக நிலையைக்
காட்டும் தமிழிலக்கியக் குறிப்புகள்
முதலில் ஒன்றைச்
சொல்லிவிட வேண்டும் மார்க்ஸ்கூறும் மற்ற சமுதாய அமைப்பு களைக்கூட
ஒத்துக்கொள்ளும் தமிழறிஞர் பலரும் அடிமைச் சமூகநிலை தமிழகத்தில் இருந்ததை
ஏற்பதில்லை ‘சங்ககாலம் பொற்காலம்’ எனச் சொல்லிச்சொல்லிப்
பழகியவர்களுக்கு இந்தச் சமூகநிலையை ஏற்பதில் சங்கடம்! ஆனால் இதில்
சங்கடம் ஏதுமில்லை, உலகம் முழுவதும்
பரிணமித்த சமுதாயக் கூறுகளிலிருந்து தமிழகம் மட்டும் தனித்து நிற்க முடியுமா என்ன?
பழந்தமிழகத்தில்- “கரும்பு தின்னக்
கைக்கூலி கொடுக்கவும் காதில் கிடந்த பொன் தோட்டைக் கழற்றி நெல்லைக் கொத்தவந்த
கோழியை விரட்டவும், விளைவும்
செல்வமும் விஞ்சி நின்றன” என்று தேவநேயப்
பாவாணர் (பழந்தமிழாட்சி-கழகவெளியீடு:1972-பக்:169) சொல்வதில் பிழையில்லை. “நெல்லும் நீரும்
எல்லார்க்கும் எளியனவாக நிறைந்து செழித்தமையால் வேண்டியோர்க்கு வேண்டும் உணவைக்
கொடுத்து அவர்கள் உண்டு மகிழ மக்கள் கண்டு மகிழ்ந்தனர்’ என்று சு.வித்தியானந்தம்
(தமிழர் சால்பு-சங்க காலம்-பாரி-1985-பக்:52) சொல்வதிலும் தவறில்லை அதுவும் நடந்திருக்கக் கூடியதுதான்.
ஆனால் இது
ஒருபக்கம் மட்டுமே! மறுபக்கத்தையும் பார்க்க வேண்டாமா? அடிமைச் சமதாயத்தில்
உழைப்பாளி மக்கள் ஆளும்வர்க்கத்திடம் சிக்கிச்சீரழிந்தனர் என்பது தமிழிலக்கியக்
குறிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. பழந்தமிழகத்தில் மலை போல உயர்ந்த பல
நெல்கூடுகளை ஒன்றாகக் கட்டிவைத்திருந்த சிலரும் இருந்திருக்கிறார்கள், மற்றவர்களைப்போல மாடுகளைக்
கொண்டு தாளடிக்க முடியாத ஏழை உழவன் ஒருவன், தன் பிள்ளைகளோடு
கால்களாலேயே தாளடித்து வரகு தானியத்தைப் பிரித்து முடித்ததும் அவனைக் கடன்காரர்கள்
சூழ்ந்த நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. இரண்டுக்கும் சங்க இலக்கியம் சாட்சியாக
இருக்கிறது: “மலைகண் டன்ன நிலைபுணர்
நிவப்பின் பெருநெல் பல்கூட்டு எருமை உழவ!”–நற்றிணை “எருதுகால் உறாஅது
கிளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த
மிச்சில்’ --இது முரண்பாடுதானே? கடன்வாங்கும் அளவுக்கு
அவனுக்கு ‘உரிமை’ இருந்த சமுதாயத்தில்
அடிமைத்தனம் இருந்திருக்க முடியாது எனில் அடிமைகளைப் பற்றியே நேரடியான செய்திகள்
உண்டா? உண்டு
‘கி.பி.3ஆம்நூற்றாண்டைச்
சேர்ந்த பல்லவச்சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும்
தானமளிக்கப் பட்டதாகத் தெரிகிறது’ - ‘இந்தியாவின்
வரலாறு’- (2ஆம்பாகம்)
இன்னும் குறிப்பாக
-அடுத்த நாட்டுடன் சண்டையிட்டு வெற்றிகொண்ட பிறகு ஆடு, மாடு களைக் கொள்ளையடித்து
வந்ததோடு பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்துவந்த செய்திகளும்
கிடைக்கிறது--வென்றவர் பெருமை கூறும்போது. பட்டினப்பாலை(வரி:246) கூறும் ‘கொண்டி மகளிர்’ எனும் தொடருக்கு ‘தோற்றார்பால்
பிடித்துவந்த மகளிர்’என்று பழையஉரையாசிரியரே பொருள் கூறுகிறார்.மதுரைக்காஞ்சி(வரி:583) பதிற்றுப்பத்து(ஏழாம்பத்து-பா.எண்:3-வரி-9) மணிமேகலையிலும்
இப்பொருளில் வருவதைப் பார்க்கலாம்(காதை-18 வரி-119)
ஆக, செய்திகள் இலைமறை காயாக
சிலவே இருந்தாலும் தமிழகத்திலும் அடிமைச் சமூகம் இருந்ததைக் கவனித்தே தமிழ்ச் சமூக
வரலாறு எழுதப்படவேண்டும். கல்வெட்டுகளும் சாசனங்களும் வேறுபல குறிப்புகளும்
இன்னும் கூடுதலான தகவல்களைத் தரமுடியும்
நிலவுடமைச் சமூக மக்கள்
வாழ்க்கை நிலை:
பண்ணைகளில்
குடும்பத்தோடு பண்ணைஅடிமைகளாக இருக்கும்போதே துண்டு துக்காணி நிலத்தில் சொந்தமாகப்
பயிரிடவும்செய்யலாம் எனும்நிலை பலநூறு போராட்டங்களுக்குப் பிறகே வந்திருக்க
முடியும். அவர்களின் பிள்ளைகள் பண்ணையில் வேலை செய்ய வேண்டுமென்ற
(அடிமைச்சமுதாயகால) கட்டாயம் நிலப்பிரபுத்துவ காலத்தில் தளர்ந்தது. அவர்கள்
பல்வேறு தொழில்களில் ஈடுபட உரிமைபெற்றனர் இது வரலாற்றில் ஏற்பட்ட முன்னேற்றம்.
நிலப்பிரபுக்களில்
பலர் குறுநிலமன்னர் முடிமன்னர் மாமன்னர் ‘ராஜராஜனாக’- வளர்ச்சி யடைந்தனர் நாடுகள் ‘சாம்ராஜ்யங்களாக’ விரிவடைந்தன. விவசாயமும்
கைத்தொழிலும் வளர்ந்தபோது உற்பத்திப் பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதற்கே வணிகத் தொழில் தோன்றியது
உற்பத்தியாளர்களும் வணிகர்களும் இணைந்து நாளாவட்டத்தில் பெரும் அளவில்
விற்பனைக்கென்றே உற்பத்தி செய்யும் மக்கட்பகுதி உருவானது. ‘நிலப்பிரபுத்துவ
அமைப்பில் ஒரு புதிய பிரிவு பிறந்தது’ என்கிறார் பி.ஆர்.பி.
இந்த வளர்ச்சி
தமிழ் இலக்கியத்திலும் பிரதிபலித்ததைக் கவனிக்க வேண்டும். இனக்குழு, குறுநில மன்னர் காலத்தில் 5அடி, 8அடி என்றிருந்த
ஆசிரியப்பா, மன்னர்
வளர்ச்சிக்கேற்ப – 40அடி, 50அடி என்று
புறநானூற்றில் வளர்கிறது! அந்த வகைகளும் மாமன்னர்காலத்தில் போதாமல்தான் விருத்தங்கள்
தோன்றின. பேரரசுக் காலமும், பேரிலக்கியத்
தோற்றமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருப்பதையும் கவனிக்க.
இதேகாலத்தில், அரசர்களைச் சார்ந்து
புரோகிதர் மற்றும் புலவர்கூட்டம் வளர்ந்தது. இதை இனக்குழுக் காலக் கருத்துக்கு
எதிராக, மன்னனை மிக
உயர்ந்தவனாக-- அவனே உலகைக் காக்கும் இறைவனின்
அவதாரமாக-- ‘ரகுவம்ச’மாகக் கூறியது.
தத்துவ- சமயங்களை அதற்கு சார்பாகவே உருவாக்கி மக்களை அச்சுறுத்தியும்
ஆசைகாட்டியும் மயக்கி புனைவு இலக்கியங்களை உருவாக்கியது. உழைக்கும் மக்களை ஒன்றுபட விடாமல், சாமி, மதம் சாதிகளால்
கூறுபோட்டது. அதற்கு நிலவுடைமை-அரசனிடம் பெரிய அன்பளிப்புகளையும் பெற்றுக்கொண்டது. இதில்
புரோகிதர்களும் புலவர்களும் இணைந்தே பணியாற்றினர்!
அரசனின்
நாடுபிடிக்கும் ஆசைக்குத் துணையாக போர் உணர்வை நாட்டு உணர்வோடு கலந்து, ‘போரிடுவது
அரசனுக்காக’ என்பதை மறைத்து, ‘நாட்டுக்காக’ என்று பொய்கூறி அரசர்களின்
பேராசைக்காக ‘நாட்டுப்பற்றின் பேராலும், வீரத்தின் அடையாளமாகவும்
இளைஞர்கள் பலியிடப் பட்டனா.; வீரர்களுக்கு
நடுகல் நட்டு விழாஎடுத்து அப்படிச்சாகும் ஆசைக்கு இளைஞர்கள் தூண்டப்பட்டனர். ‘களிறுஎறிந்து
பெயரும் காளையின் கடமை’(புறம்:312) என இவர்கள் வகுத்த ‘சமுதாயக் கடமைகள்’ ஆளும் வர்க்க
நலன்சார்ந்ததே!
அப்படித் தொடங்கிய ‘வீரச்சாவுக்கான’ நடுகல் வழக்கம்
மதச்சார்பற்றதாகவே தொடங்கியது: ‘கல்லே பரவின்
அல்லது, நெல்லுகுத்துப்
பரவுமார் கடவுளும் இலவே!’ சிறு தெய்வ
வழிபாட்டின் இந்தக் கூறுகளை இப்போதும் காணலாம். ஆனால், பின்வந்த பெருந்தெய்வ
வழிபாட்டுக் காலத்தில் இந்தச் சிறுதெய்வங்கள் பலவற்றை விழுங்கியே மதங்கள்
படிப்படியாக நிறுவன மயமாகி வளர்ந்தன. பெருமையான வளம்ஒருபுறம்
கொடுமையான வறுமை மறுபுறமாக முரண்பாடும் வளர்ந்தது. வர்க்கமுரண்பாடு சமூகப்
போராட்டங்களின் வழியாக அடுத்த கட்டத்துக்குச் சமூகத்தைச் செலுத்தியது.
தமிழ் இலக்கியத்தில்
நிலவுடைமைச் சமூகப் பதிவுகள்:
உண்மையில்
நிலவுடமைக்கால இலக்கியங்களே இன்று நமக்குக் கிடைக்கும் ஏராளமான பழந்தமிழ்
இலக்கியத் தொகுப்புகள். கலை காசுக்காக என வளர்ந்த சுரண்டல் வர்க்கக் குரலுக்கு மாறாக
கலை கலைக்காகவே எனும் புதிய குரலே அன்றைய பழந்தமிழ் இலக்கிய-இலக்கணப் பகுப்புகள்
எனலாம்.
இனக்குழு மக்கள்
சமுதாயத்தில் குழு உறுப்பினர்களில் ஒருவனாக சாதாரணமாக இருந்த தலைவன், நிலவுடமைக்காலத்தில்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாக, ஆண்டவனின் அவதாரமாக உயர்த்திகாட்டப்பட்டான். ‘திருவுடை மன்னனைக்
காணின் திருமாலைக் கண்டேன்’ (திருவாய்மொழி:4:8) என்றதும், ‘நெல்லும் உயிரன்றே
நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ (புறம்:186) என்றதும் அதனால்தான்.
இப்படிப்பட்ட புலவர்க்கு கவரி வீசிய அரசன் செயலில் வியப்பென்ன?! தன் பெருமையை
காலகாலத்துக்கும் நிலை நிறுத்தப் போகும் பெரிய கோவிலை எழுப்பிய சிற்பிக்கு எச்சில்
பணிக்கம் ஏந்திய ராஜராஜ சோழனின் ‘பணிவில்’ ராஜகௌரவம் உயர்ந்ததே!
வர்க்கப் பெருமை பாடுவோனுக்கு வணக்கம் சொல்வதும் ஒருவகை வர்க்க பாசமன்றி வேறென்ன?! அரசகட்டிலில் அறியாது
தூங்கிவிட்ட புலவனுக்குத் தண்டனை தராமல் ‘தமிழுக்காகக் கவரி
வீசினான்’ என்பது சரியல்ல, அவன் கவரி வீசியது தமிழ்ப் பாசத்தினாலன்று, வர்க்க பாசத்தினால்! இன்று ‘ஆமாம் சாமிகளுக்கு
அரசு-விருது’ போல!
முந்திய
சமூகத்தின் இனக்குழுத் தலைவர்களை, உருவாகி வந்த
அடிமைச்சமுதாய நிலவுடமைச் சமுதாய குறுநில மன்னர்கள் போரில் அழித்தனர். குமண வள்ளலின் தம்பி தான் தலைவனாகக் கருதிய
அண்ணனின் தலைக்கு விலை வைத்தான் எனப் பெருந்தலைச்
சாத்தனார் பாடுகிறார். ‘அண்ணன் தம்பியான
நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் ஒருவருக்கொருவர் போரிடலாமா?’ எனக் கோவ+ர்கிழார்
சமாதானம் பேசுகிறார்(புறம்:44,45)
பிசிராந்தையாருடன்
கொண்ட நட்புக்காக இன்றளவும் நிற்கும் கோப்பெருஞ் சோழன் மகன் களுடனே
போரிட்டான்! மயிலுக்குப் போர்வை தந்த பேகன் மனைவியைப் பிரிந்தது தவறு என்று, நான்கு புலவர்கள் ஐந்து
பாடல் எழுதியிருக்கிறார்கள்!
இவ்வளவு ஏன்? ‘முல்லைக்குத்
தேர்தந்த பாரி’என்று இன்றும்
மேடைகளில் புகழப் படும் பாரியைக் கொன்று
அவனது பெண்கள் இருவரையும் மணம் கொள்ள முடியாமல் ஊர்ஊராக அலையவிட்ட கொடுமையும் இதே
மண்ணில்தானே நடந்தது! சிறியமீன்களை விழுங்கிப் பெரியமீன் வளர்ந்தது, சிற்றரசுகளை
வென்று பேரரசு உருவானது.
சேர பாண்டிய
சிறுமன்னர்களோடு 17 வேளிர்களையும்
வென்று கரிகால் சோழன் பெருமன்னன் ஆனான்-நிலவுடமைச் சமூகம் உறுதிப்பட்டது.
நால்வகைப்படைகள் உருவாயின பெருங்கோயில்கள்- பெருங்காவியங்கள் உருவாயின. ‘இடம்சிறிது
என்னும் ஊக்கம் செலுத்த’ (புறம்-8) சண்டை தொடர்ந்தது. ‘பசுப்போன்ற பாhப்பனரும்
பிணியாளரும் குழந்தையில்லாதவரும் பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடுங்கள்’ என்று அறவழியில் அறிவித்து
நடந்ததாகக் கூறப்படும் போர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள்தாம் எத்தனை எத்தனை!
இதில்என்ன
வேடிக்கை எனில் இந்த அழிவுப் போர்களையே வீரப்போராகப் புகழ் பாடிய புலவர்க்கு பொன்
பொருள் நிலத்தோடு பெண்களையும் வாரி வழங்கினர் மாமன்னர். தன்னைப் புகழ்ந்து பாடிய
கபிலர் எனும் புலவர்க்கு ‘சிறுபுறமென
நூறாயிரம் காணம் பொன்கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று, தன் கண்ணிற்கண்ட
நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனும் மன்னன் (பதிற்றுப்பத்து ஏழாம்பத்து
அடிக்குறிப்பு) இந்தப் புலவர்தான் 2381 பாடல்கொண்ட -எட்டுத்தொகை
பத்துப்பாட்டு எனும் இரண்டு தொகுப்புக் கொண்ட- சங்க
இலக்கியத்திலேயே தனியொரு புலவராக அதிகப்பாடல்களை (235) எழுதியவர்.
‘நாடெனும்பேர்
காடாக ஆசேந்தவழி மாசேப்ப ஊரிருந்தவழி பாழாக’ சண்டையிட்ட மன்னனே, தன் நாட்டில் ‘அரசியல் பிழையாது
அந்நெறிகாட்டிப் பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது’ ஆள்வானாம்! இதுகுறித்து ‘ஈவு இரக்கம் தயவு
தாட்சணியம் அன்பு அறம் என்ற தமிழனின் பண்புகள் என்று கூறப்படுபவையெல்லாம்
பேரரசுகளின் வளர்ச்சிக்கான தேர்ச்சக்கரத்தில் நசுங்கித் தூள் தூளாயின’ எனும் கே.முத்தையா
அவர்களின் கருத்தே தெளிவானது (குறள் கூறும் வர்க்க சமுதாயம்- சிகரம் வெளியீடு)
இந்தளவுக்கு
வெறிய+ட்டப்பட்ட போர்களிடையே மக்கள் என்னபாடு பட்டிருப்பார்கள்! ‘சோறு வாக்கிய
கொழுங்கஞ்சி ஃஆறு போலப் பரங்தொழுகிஃ ஏறு பொரச் சேறாகி தேரோடத் துகள்கெழுமி’ -- சோழன் கரிகாலனின்
உயர்குடிவளம் இது (பட்டினப்பாலை-வரி:44-47) ‘ஆடுநனி மறந்த
கோடுஉயர் அடுப்பில் ஃ ஆம்பி பூப்ப தேம்புபசி உழவா பால் இன்மையின் தோலொடு திரங்கி ஃ
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத் தொறும் அழும் தம் தன் மகத்து முகம் நோக்கி’ -- சமைத்தல் தொழிலையே மறந்து
போன தேயாத அடு;ப்பு காளான் பூத்துக்கிடக்க, பசி பொறுக்க முடியாமல்
பால் சுரக்காத அம்மாவின் வற்றிய மார்பைச் சுவைத்து அழுது கொண்டிருக்கும் குழந்தை – (புறநானூறு-164) ‘உணவு இல்லாமல்
குப்பைக்கீரை உப்பில்லாமல் வேகவைத்து மற்றவர் காண வெட்கப்பட்டு வாசல்கதவை
மூடிக்கொண்டு சாப்பிட்ட பெண் (சிறுபாண்-129) இதுபோல நீண்டு கொண்டேயிருக்கும். ஒடுக்கும் வர்க்கத்திடம்
உபரி சேரச்சேர உழைக்கும் வர்க்கம் மேலும்மேலும் ஒடுக்கப்பட்டது.
காட்டை அழித்து
வயல்செய்த (அகம்-140)–முல்லை, அருவிநீரால்
ஐவனநெல் விளைய வைத்த(புறம்159)குறிஞ்சி, மீன்பிடித்து
பசித்தவர்க்கு வாரிக்கொடுத்து எஞ்சியதையே விலைக்கு விற்ற(அகம்-30)நெய்தல் என, எல்லாப் பகுதி உழைக்கும்
மக்களும் நிலவுடமைச் சமூகத்தின் மருதநிலத்தில் சுரண்டப்பட்டனர்.
‘உண்டாயின்
பதங்கொடுத்து இல்லாயின் உடன்உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் (புறம்-95) இனக்குழுமக்கள் காலத்தோடு
மலையேற, “மக்கள் வரிதர முடியாமல் தவிக்கிறார்கள், மூவேந்தரிலும் சிறந்த எம்
மன்னா! வரியைக் குறைத்து மக்களைக் காப்பாற்று(புறம்-35)” எனும் வெள்ளைக்குடி
நாகனாரின் குரல் பரிதாபமாகக் கேட்கிறது. மக்களின் குமுறலைச் சமாளிக்க நீதிபோதனைகள்
நிகழ்த்தப்பட்டன. ஆண்டவனையும் ஆள்பவனையும் நம்பும்படி கலை-இலக்கியங்களும், சமயங்களும் மக்களை
வடிவமைத்தன.
‘அச்சம் மடம் நாணம்
பயிர்ப்பு எனும் நான்கு குணமே பெண்ணுக்கு அணிகலன்’ என்று இலக்கணம்
(தொல்-பொருள்-களவியல்--நூற்பா:8)வரைந்த தொல்காப்பியம,; ஆணாதிக்க உணர்வு மிகுந்து ‘காதற் பரத்தை
காமப்பரத்தை இற்பரத்தை சேரிப்பரத்தை இவர்களோடு ஆடிக்களிப்பது ஆடவர்க்குத் தவறல்ல’என்றது.
உழுதுண்பவர்--உழுவித்துண்பவர் வேறுபாடும் தெளிவாகப்பட்டது.
முடிவாகச் சில சொற்கள் -
மார்க்ஸ் கூறும்
சமூகமாற்றங்களை தனித்தனியே ஆய்வு செய்து தொகுக்கும் போது நூல்களின் பெயர்ப்
பொருத்தத்தைவிட காலப் பொருத்தமே சரியாக அமையும். அது தனிஒருவர் தனி ஒரு நிறுவனம்
கூடச் செய்து முடிக்கக் கூடிய செயலன்று. மார்க்சியம் அறிந்த, வரலாறு புரிந்த தமிழறிஞர்
குழு பல ஆண்டுகள் ஈடுபட்டு முடிக்கக் கூடிய அரும்பெரும் பணியாகும்.
மூவகைச்
சமூகங்களின் 2000 ஆண்டுக்கால
வரலாற்றை எழுதிவிட்டால், முதலாளிய மற்றும்
சமத்துவ சமூகத்தின் நிகழ் வரலாற்றை எழுதுவது அதன் தொடர்ச்சியாக அமையும்.
கிடைத்திருக்கும்
இலக்கியங்களுக்குள் வர்க்க முரண்பாட்டு வரலாற்றுப் பதிவுகளோடு, அவ்வக்காலப் ‘பொதுப்புத்தி’யை மீறிய ‘பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்’ ‘தேரா மன்னா’ ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்பன போலும் பலநல்ல / அழகியல்
பதிவுகளும் ஏராளமுண்டு! அவற்றை இனங்கண்டு எழுதவும் வேண்டும்.
இலக்கிய-இலக்கணத்
தமிழறிவும், மார்க்சியப் பார்வையும் கொண்ட
தோழர்களே! இன்றைய சமுதாய மாறுதலுக்கான வேர்களைத் தமிழ் மரபில் தேடி எடுத்துப்
புதியதோர் உலகம் செய்வோம்! இன்றைய
உடமை-உரிமை-உணர்வில் ஏற்றத் தாழ்வு மிகுந்த சமூகத்தை மாற்றி, சமத்துவ சமூகத்தைப் படைக்க
உழைக்கும் வர்க்கத்திற்கு உறுதுணையாக நம் ஆய்வுகளை மேற்கொள்வோம்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளருடன் பேச: 94431
93293.
மின்னஞ்சல் : muthunilavanpdk@gmail.com
From: Puthiyamaadhavisankaran puthiyamaadhavi@hotmail.com
பதிலளிநீக்குDear friend,
Marxist view on tamil history with the help of literature and other manual
Scripts will broke the golden era sentiment and take the tamil society
Into the realistic sociology path of human history.
Well done.
U just gave the sketch and it may develop further from u with ur strong team.
My best wishes .
anbudan
Puthiyamaadhavi
Mumbai
16-10-2012
அனுப்புனர் haiku.mumu@gmail.com
பதிலளிநீக்குவணக்கம் தோழர்,
இவ்வள்வு செறிவும் ஆழமுமான
உங்களின் கட்டுரைகளைப்
படிக்கும் போதெல்லாம் -
”ச்சே... தோழர் ஏன் இப்போதெல்லாம்
கட்டுரைகளே எழுதுவதில்லை” என்கிற
ஆதங்கமே மேலெழுந்தது.
நாங்கள் பார்த்து வியந்த உங்கள்
மேடைத் தமிழை இன்று தமிழகமே
கண்டு ம்கிழ்வது எங்களுக்கும் பெருமையே.
காலையிலிருந்து தூறிக் கொண்டேயிருக்கும்
இந்த மழைநாளில்
எங்களின் பார்வைக்கு
உங்களின் கதையொன்றோ, கவிதையொன்றோ
இந்நேரம் வாசிக்கக் கிடைத்தால்
நன்றாக இருக்குமே என மனம் ஏங்குகிறது...
உங்களுக்கும் புரிகிறதுதானே தோழரே.
-மு.மு