பத்தாம்வகுப்பு தமிழ்வினாத்தாள் 
குழப்பத்தைத் தீர்க்க
தமிழாசிரியர் கழகம் அரசுக்குக் கோரிக்கை
     கடந்த 04-04-2012 அன்று நடந்த பத்தாம்வகுப்பு அரசுப் பொதுத்தேர்வின் தமிழ் முதல்தாள் தேர்வில், சில குழப்பமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனைத் தீர்த்து வைத்து அதற்கான பாதிப்பிலிருந்து தேர்வெழுதிய மாணவர்களை விடுவிக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் தமிழகத் தமழாசிரியர் கழகம் தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
வினாத்தாள் குழப்பம் -1
      அரசுத்தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இரண்டு மாதத்திற்கு முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வினாத்தாள் வடிவமைப்பு மாற்றமேதும் இணையதளத்தில் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இறுதிப் பயிற்சிகள் தரப்பட்டன. எனவே அரசே வெளியிட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பொதுத் தேர்வு வினாத்தாள் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் குழப்பம் -2 ( எட்டு மதிப்பெண் வினா)
      அரசுத்தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்பு (BluePrint) ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு முதலான பயிற்சித் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், அரசால் தரப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக, கடந்த 04-04-2012அன்று நடந்த அரசுப் பொதுத் தேர்வில்  உரைநடை 8மதிப்பெண் நெடுவினா தமிழ் முதல்தாள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது (வினா எண்-48 மதிப்பெண்-8) 8மதிப்பெண் கொண்ட வினாஎண்கள்-47,48 நெடுவினா இரண்டில், செய்யுள்பகுதிக்குரிய வினாமட்டும் வினாத்தாள் வடிவமைப்பின் படியே இருக்க, உரைநடைப் பகுதிக்குரிய வினாமட்டும் மாறிவந்தது ஏனென்று தெரியவில்லை. இது, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வினாத்தாள் குழப்பம் -3 ( ஐந்து மதிப்பெண் வினா)
     செய்யுள் பகுதியில் “தமிழ்விடுதூது“  5மதிப்பெண் வினா ஒன்று அரசுப்பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இந்தவினா புத்தகத்தில் இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்பகுதியில் இல்லாத வடிவத்தில் “இப்பாடல் ஆசிரியரின் பெயர் யாது?”  என்று தற்போது அரசுப் பொதுத் தேர்வில் (வினா எண்45இல், உள்பிரிவு வினா எண்-2) கேட்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் குழப்பம் -4 (இரண்டு மதிப்பெண் வினா)
      வினாத்தாள் வினா-எண்29இல் “வள்ளலாரின் முழக்கம் எது?என்னும் இரண்டு மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது. இதற்கு “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை“ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதுபோல் எந்த வரியும் வள்ளலாரின் முழக்கமாகப் புத்தகப் பாடப்பகுதியில் குறிப்பிட்டுத் தரப்படவில்லை. இதற்கு ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லித்தந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே சந்தேகத்துக்குரிய வினா எதையும் பொதுத்தேர்வில் கேட்காமல் இருப்பதே மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே மேற்கண்ட காரணங்களால், முழுமதிப்பெண் பெற உழைத்துப் படித்த மற்றும் சொல்லித்தந்த ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பதே இன்றயை நிலைமை.
சந்தேகத்திற்குரிய இந்த (8+5+2) 15மதிப்பெண்களை  முழுமையாகவோ பகுதியாகவோ மாணவர்களுக்கு வழங்கிவிடுவதே இதற்கான நியாயமாக இருக்கும் என்பதோடு, இனிவரும் மீதமுள்ள ஆறு தேர்வுகளும் அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு ஏற்பவே அமைவதை அரசு உறுதிப்படுத்தி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தக் குழப்பத்திலிருந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் தமிழக அரசைப் பணிவோடு கேட்டுக்கொளகிறது.
                             
சுப.காந்தி நாதன்
மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்                              
செல்பேசி-9842864674

மேலும் தொடர்புகளுக்கு – நா.முத்து நிலவன் - 9443193293
------------------------------------------------------------  
(இந்த அறிக்கையை வெளியிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - தினமணி திருச்சிப் பதிப்பு பக்கம்-05, தினமலர் திருச்சிப் பதிப்பு பக்கம்-09, தீக்கதிர் அனைத்துப் பதிப்புகள் பக்கம்-03 - நாள்-06-04-2012 மற்றும் தினகரன் திருச்சிப் பதிப்பு பக்கம்-15, நாள்-07-04-2012)
-----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக