கம்பனுக்கு, ஸ்ரீராமன் விண்ணப்பம்


கவிதை - நா.முத்துநிலவன்

கம்பா கவியரசே! – என்
கதையெழுதித் தந்தவனே!
உம்பாடு தேவலைப்பா – இப்ப,
என்பாடு திண்டாட்டம்

மனிதர்களாய் வாழ்ந்தவரில் - நல்ல
மனசோடு வாழ்ந்தவரை
புனிதர்களாய்ப் போற்றுகிறார் – கோவில்
பூசையெல்லாம் நடத்துகிறார்!

நானும் அப்படித்தான் – நபிகள்
நாயகமும் அப்படித்தான்!
வாழும் வழிதேடி – தத்தம்
வழிகண்டார் வழிபட்டார்

இப்ப என் பெயராலே – மசூதிய
இடிங்கிறாக, அடிங்கிறாக
அப்படியா நான்சொன்னேன் –என்
அருங்கவியே பதில்சொல்லு!

சகமனிதர் இன்பதுன்பம்- கூடச்
சார்ந்திருக்கும் மனிதருடன்
பகிர்ந்துகொள்ள வேணுமல்லோ! –இது
பாமரனும் செய்வதல்லோ!

சகோதரத் துவமிருந்தால்
சங்கடங்கள் ஏதப்பா?
இதைத்தானே என்கதையில்
எடுத்தெடுத்து நீசொன்னே?

“குகனொடும் ஐவரானோம்  
முன்பு, பின் குன்றுசூழ்வான்
மகனொடும் அறுவரானோம்
நின்னொடும் எழுவரானோம்”

என்று நான் வேடனொடு
குரங்கினமும், அசுரர்களும்
ஒன்றுதான் மனிதநேய
உணர்விருந்தால் என்றுசொன்னேன்

அனுமனின் உளம்போன்ற
அன்புள்ளம் என்கோவில்
மனிதரிடை அன்பிருந்தால்
மட்டுமே நான்மகிழ்வேன்

என்நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
எடுத்துக் கொடுத்தவன்நான்
என்கோவில் கட்டுதற்கா - மசூதியை
இடியென்று நான்சொல்வேன்?

“மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்,
இத்திருத் துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகம்…”
உடையவன் நானென்றால், நீ
உரைத்தது மெய்தானென்றால்
உடையென்றா நான்சொல்வேன், அட
உயர்கவியே பதில் சொல்லு!
 -------------------------------------------------------------------------
( 1992ஆம் ஆண்டு நான் எழுதிய இக்கவிதையும் இடம்பெற்ற எனது “புதியமரபுகள்” கவிதைத் தொகுப்பு, மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில், எம்ஏ தமிழ்வகுப்புக்கு 1995முதல், 15ஆண்டுக்கும் மேலாகப் பாடநூலாக இருந்தது குறித்து மகிழ்கிறேன், ஆனால், இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது குறித்து வருந்துகிறேன் - நா.முத்துநிலவன் )

2 கருத்துகள்:

  1. மனிதநேயமும் இன்று "கிலோ" எவ்வளவு...?

    பதிலளிநீக்கு
  2. கம்பனுக்கு ஸ்ரீராம் அயோத்திய அரசியல் எல்லாம் தெரியாது. மை லார்ட்.. தேவையில்லாமல் இந்த வழக்கில் கம்பனை இழுக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு