“வரைவு தேசியக் கல்விக்கொள்கை–2016 சிலஉள்ளீடுகள்”
எனும் அறிக்கை http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf
மத்தியஅரசால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்தப் புதிய
தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. (தமிழில் 99பக்கம்) இதில் உள்ள பல அம்சங்கள்,
இன்றைய கல்வியின் மோசமான தன்மைகளை உரத்த குரலில் முழங்கினாலும், இதில் மாற்றம் செய்வதற்கான
செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை! மாறாக, வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு
அம்சங்களே இந்த வரைவுத் திட்டத்தின் பிற்பகுதியில் விரிவாக உள்ளன! அவை ஆபத்தானவை மட்டுமல்ல!
இந்திய முன்னேற்றத்திற்கு எதிரானவை! இதனை எதிர்க்கவும் இவ்வரைவை மாற்றவும் அவசியமுள்ளது. அவை என்னென்ன என்று பார்ப்போம்
“அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்னவென்றால், எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நான் முழுவதும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் கூறியவை, இப்போதும் அரசு நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்கவையாக உள்ளன”
இது, யாரைப் பற்றி, யார்பேசியது தெரியுமா?
காந்தியைப் பற்றி அன்றைய பிரதமர் நேரு பேசியது
என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை! உங்களைப் போலத்தான் நானும் முதலில் நினைத்தேன்!
ஆனால், நம்மை ஏமாற்றி விட்டு, இவ்வளவு அழகாகப் பேசியது யார் தெரியுமோ?
டெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இன்றைய பிரதமர்
நரேந்திர மோடி, டாக்டர் அம்பேத்கர் பற்றிப் பேசிய
பேச்சே இது! (தினத்தந்தி- 21-4-2015)
ஆனால்,
அப்படிப் பேசிய பிரதமரின் தலைமையில் இயங்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டிருக்கும்
“தேசியக் கல்விக் கொள்கை-2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” எனும் அறிக்கையோ, இதற்கு நேர் மாறாக இருக்கிறது!
இதுதான் எனக்கு வியப்பாக உள்ளது!
எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?
முதலில் இந்த வரைவைத் தயாரித்த குழு எத்தகையது
என்பதுபற்றி அறிந்தாலே இதன் பின்னணி புரிந்துவிடும். இதுவரையான இந்தியக் கல்விக் குழுக்கள்
அனைத்தும், கல்வியாளர்ளைக் கொண்டே அமைக்கப் பட்டிருந்தன என்பது வரலாறு.
1948இல் நேரு அமைத்தது, டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக் குழு! அவர் –பள்ளிக்கல்வியைப் பற்றிக்
கவலைப்படாதது பற்றி டாக்டர் அம்பேத்கர் விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், ராதாகிருஷ்ணன்
உலகம் அறிந்த கல்வியாளர் (ஆக்ஸ்ஃபோர்டு
பேராசிரியர்!)
1952இல் சென்னைப்
பல்கலை. துணைவேந்தரான லட்சுமணசாமி தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக்குழுவில்
ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன. இதன் படியே காமராசர் ஏராளமான தொடக்கப்பள்ளிகயைத்
தொடங்கினார் என்பதும் முக்கியம்.
1966-68 இல்
அதே நேருவால் அமைக்கப்பட்ட, டாக்டர் டி.எஸ். கோத்தாரிக் கல்விக்குழுவில் அவரே ஒரு கல்வியாளர்
என்பது மட்டுமல்ல, உலகம் முழுவதும் – இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, போன்ற பல வெளிநாட்டு
கல்வியாளர் பலரையும் உட்பட 17பேர் கொண்ட கல்வியாளர் குழு அது! (இன்று வரையான கல்விக் குழுக்களில்
பள்ளிக்கல்வியை அனைவர்க்கும் கொண்டு செல்வதற் கான பல திட்டங்களைக் கொண்டதாக விளங்கியதும்
இந்தக் குழுவே. இதனாலேயே இது தாமதப்படுத்தப் பட்டது வேறு!)
1986இல் ராஜிவ்
அரசின், தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் தந்த கல்விக்குழு, பில்கேட்சுக்கான
இந்தியப் பணியாளர்களைத் தயாரித்தது.
2009இல் பேராசிரியர்
யஷ்பால் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு தேர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
தொடர் -முழு மதிப்பீட்டு முறை எட்டாம் வகுப்புவரை வந்தது இதனால்தான்.
இதுவரையான கல்விக்குழுக்களில் கல்வியாளர் யாரும் இல்லாத கல்விக்குழு என்றால்
அது 2016-இல் மோடி அரசால் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான IAS குழுதான்!
இதன் தலைவர்
சுப்பிரமணியம் மட்டுமல்லாமல் ஏனைய 4பேரில் மூவர் --அதாவது குழுவில் ஐந்தில் நால்வர்
– ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்! டெல்லி குஜராத் போலும் –சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்த- உள்துறை
மற்றும் தலைமைச் செயலர்கள் என்பதும் அதில் குறிப்பிடத்தக்கதாகும்! எஞ்சிய நாலாமவர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர் என்பதோடு முன்னால் என்சிஇஆர்டி தலைவரும் ஆவார்.
அதாவது, தமிழ்நாட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண்டல் செய்த, அம்பேத்காரை நேரு
சாட்டையால் அடித்து வேலை வாங்குவதுபோலும் ஆபத்தான பாடத்திட்டக்காரர் இவர்!
ஆயிற்றா? இக் குழு முன்வைக்கும் திட்டம் எப்படி நமது
அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்பது முக்கியமான கேள்வி!
ஆக, இது எதிர்க்க
வேண்டிய மாற்றவேண்டிய குழு என்பது சரிதானே?
(இந்தக் குழுவில்
ஐந்தில் நான்குபேர் ஐ.ஏ.எஸ் இருப்பதால்தான், புதிய கல்வியில் ஐ.இ.எஸ். என்றொரு அதிகார
வர்க்கத்தினருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.)
அடுத்து -
இந்தக் கல்விக்குழுவை
அமல்படுத்த, கல்வியமைச்சர் என்பதன் புதிய பெயரான மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக
இருந்தவர் ஸ்மிருதி இராணி என்னும் பெண் அமைச்சரைவிடவும் திறமையானவர் தற்போது இத்துறையைப்
பார்த்துவரும் ஜவடேகர்தான் என்பதற்கும் ஒரு பின்னணி உண்டு!
அந்தம்மா பாவம்
படித்த படிப்பு என்ன என்பதில் ஊர்சிரித்துவிட்டது. அதை விட ஆர்.எஸ்.எஸ்.பின்புலமுள்ள
ஜவடேகர்தான் பொருத்த மானவர் என்பதில் என்ன ஒரு தெளிவு! புரிகிறதா? புரியவேண்டும்!
இவர்கள் முன்வைத்த
வரைவின் முதல் பத்தி இப்படித் தொடங்குகிறது – “இந்தியா கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம்
கொடுத்து வந்துள்ளது. பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்த
கல்விமுறை என்று அறியப்படுகிறது”
எவ்வளவு பச்சைப்
பொய் அல்லது வரலாற்றை மறைக்கும் வஞ்சகமிது? வேதகாலத்திற்கும் முந்திய சிந்துவெளி நாகரிகம்
திராவிட நாகரிகம் -நகர நாகரிகம் என்பதும், அதில் திராவிட மொழிப் பயன்பாடு இருந்திருக்கிறது என்பதும்
அதிலும் குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியை சாதிய ஏற்றத் தாழ்வு பாராமல் கற்பித்த
–மதச்சார்பற்ற- சமூகம் தமிழ்பேசிய மக்களிடம் நிலவியது என்பதும் ஏன் மறைக்கப்படுகிறது? மறைப்பின் அரசியல் என்ன?
“கீழ்ப்பால்
ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே?” என்ற புறநானூறும், இன்றுவரையான
உலகம் முழுவதுமான கல்வியை அப்போதே இரண்டாகப் பகுத்துத் தந்த வள்ளுவன் கல்வியாளனல்லவா?
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என்னும் குறள்வழிப்
பிறந்ததுதானே இன்றைய “கலை-அறிவியல்” பாடம்?
அப்படியானால்
இதில் இரண்டு தவறான முன்மொழிவுகள் உள்ளன. (1)வேதக்கல்விதான் இந்தியக்கல்வியின் முன்னோடிக்
கல்விமுறை என்னும் தவறு (2)வேதக் கல்வி முற்போக்கானது எனும் பெருந்தவறு!
பிராமண-சத்திரிய-வைசிய-சூத்திர
நால்வர்ணத்தினரில், பிராமணர்க்கு மட்டுமே கல்விகற்பிக்கும் உரிமைய இருந்தது. சத்திரியர்
தவிர்த்த இருவர்ணத்தினர்க்குக் கற்கும் உரிமையும் கிடையாது என்பதுதானே ஏகலைவன், கர்ணன்,
போன்றோர் தரும் மாபாரதக் கதைகளின் கரு? இதிலும் கூட 'மேல்சாதி'ப் பெண்களுக்கும் இந்த
உரிமை இல்லை!
இதற்கு மாறாக,
வேதகாலத்திற்கும் முந்திய “சங்க இலக்கியம்” எனும் தமிழின் பழந்தமிழ்ப் பெட்டகத்தில்,
சுமார் 40பெண்கவிஞர்களோடு, பிராமணர் அல்லாத நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்களும் இருந்ததை
இவர்கள் மறைக்கிறார்களா? அல்லது ஞாபகமாக மறக்கிறார்களா?
அந்த
வேதக் கல்வியில் அறிவியல் இருந்தது என்பது அடுத்த பொய்! இதைநமது பிரதமர் திருவாளர் மோடி அவர்களே
விஞ்ஞானிகள் மாநாட்டில் போய்(?) ஆற்றிய உரையில் திருவாய் மலர்ந்தாரே? அதாவது அந்த வேதக்காலத்திலேயே
–புராணக் கதைகள் தரும் சாட்சியத்தோடு- இராவணன் சீதையைத் தூக்கிச்சென்ற புஷ்பக விமானம்,
இன்றைய ஆகாய விமானத்தின் முன்மாதிரி என்றும், பிள்ளையாரின் மனித உடல் யானைத் தலையே
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையின் முன்னோடி என்றும் அவர் பேசிய புகழ்பெற்ற பேச்சு ஏதாவது
ஒரு வகுப்பில் ஒரு பாடமாக இடம்பெற்றால் வியப்பில்லை!
தாய்மொழிக்கு அவசியமில்லை! சமஸ்கிருதம் படி!
ஐந்து வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி என்பது
கூட அழுத்தமாகச் சொல்லப்படவில்லை! அதை அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்யலாமாம்! (தமிழ்நாட்டிலதான்
–அரசரை விஞ்சிய அரச விசுவாசிகள்- ஏற்கெனவே தமிழ் இல்லாமலே பட்ட மேற்படிப்புவரை படிக்கலாம்
என்கிறார்களே!) அதற்கும் மேல் அதாவது 6ஆம் வகுப்பிலிருந்து மும்மொழித்திட்டமாம்! ஆயிற்றா..
இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைவரும் இனி இந்தியை ஏற்றே ஆகவேண்டும்! (வரலாறு திரும்புமா
உடன்பிறப்புகளே?) அதோடு, “இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான“ சமஸ்கிருதம் படிக்க
“தாராள நிதிஉதவி” அனைத்துக் கல்விநிறுவனத்திற்கும் உண்டாம்!
திவசம் நடத்தும்போது
மட்டுமே கேட்டறிந்த சமஸ்கிருதத்தை இனி வாழ்நாள் முழுவதும் கேட்கலாம் அல்லது வாழ்நாளே
திவசமாகலாம்!
இடஒதுக்கீடு, கல்விஉதவிநிதி பற்றிய பேச்சு எங்கே? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தெரியும். மூன்று மாங்காய் அடிக்கலாம்
என்று இந்தக் கல்வித்திட்ட வரைவு கற்றுத் தருகிறது! அதாவது, சமஸ்கிருத வளர்ச்சியில்
மூன்று நோக்கமுண்டு. 1.அதைத் தற்போது தெரிந்துவைத்திருக்கும் ஒருசில ஆயிரம் உயர்சாதி யினர்க்கும்
உடனடி வேலைவாய்ப்பு 2.அதை வளர்ப்பதன் வழியே இந்தியையும் வளர்க்கலாம். 3.வேறென்ன? உயர்சாதி
மேலாதிக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம். இதன் வழியே இந்துத்துவா-ஏக இந்தியா-ஒரே பண்பாடு-ஒரே
தலைமை! எப்புடீ?
இந்த
வரைவுக் கல்வித்திட்டத்தின்படி, 60ஆண்டுகளாகப் போராடியும் சேராத இடஒதுக்கீட்டை
ஒழித்துக் கட்டுவது, அதன்வழி சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவது, தகுதித் தேர்வு எனும்
பெயரில் உழைக்கும் மக்களை ஓரங்கட்டுவதை நடைமுறைப்படுத்தி விடலாம்!
6ஆம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து, பெரும்பாலான பெண் குழந்தைகளைக் கிராமத்திலேயே
அடைத்துவிடலாம். அதிலும் மீறிப்படிக்க நினைப்போரை 9,10ஆம் வகுப்புகளில் ஏ, பி என்ற
பிரிவில் பிரித்து, தொழிற்கல்வி எனும் பெயரில் குலக்கல்வியைக் கொடுக்கலாம். அதிலும்
மீறி மதிப்பெண் எடுத்தாலும் கல்லூரிக் கல்விக்குச் செல்ல உதவித்தொகை வேண்டுமானால்,
அகில இந்தியத் தகுதித் தேர்வுமுறை இருக்கவே இருக்கிறது! இதில் அகில இந்திய அளவில் பத்துலட்சம்
பேருக்கு உதவித் தொகையாம்! சுமார் பத்துக்கோடிப் பேர் எழுதக்கூடிய பன்னிரண்டாம் வகுப்புத்
தேர்வில் பத்துலட்சம் என்பது எப்படியான வடிகட்டல் என்பதைச் சமூகநீதிக்கண்ணோட்டத்தில்
பார்த்தால் இதன் ஆபத்தும் அதனுள் கிடக்கும் இந்துத்துவ ஆபத்தும் புரியும்!
இந்திய நாடாளுமன்றத்தில்
தோழர் சீதாராம் யெச்சூரி சொன்ன மூன்று “சி” ஆபத்துத்தான் இதன் மையம் என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும்
கம்யூனலைசேஷன்,
கமர்ஷியலைசேஷன் சென்ட்ரலைசேஷன் எனும் மூன்று சி க்கள் அதாவது - மதமயம், வணிகமயம், மத்தியமயம் எனும் ஆபத்துகளை
உள்ளடக்கியதான இந்தப் புதியகல்வி வரைவுக்கொள்கை மிகவும் ஆபத்தானது. மாற்றப்பட
வேண்டியதுஎன்று அவர் சொன்னதை மனதில் கொண்டு, இந்தப் புதியகல்விக் கொள்கை முற்றிலும் மாற்றம் செய்யப்படவேண்டும். கல்வியாளர்கள் முன்வைக்கும் மாற்றங்களோடு புதிய கல்விக்குழுவே அமைக்கப்பட வேண்டும். அதுதான் புதிய இந்தியாவுக்கான முன்மொழிவாக இருக்கும்.
-----------------------------------------------------------------------
சென்னையில் இன்று -08-10-2016- நடக்கும்
“கல்வி-உரிமைப் பாதுகாப்பு மாநாடு” நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை
இக்கட்டுரையை வெளியிட்ட தீக்கதிர்,
புதுகை வரலாறு ஆகிய
புதுகை வரலாறு ஆகிய
(08-10-2016)
நாளிதழ்களுக்கு நன்றி
----------------------------------------------------------------------------------------------------
புதிய
கல்விக்கொள்கை பற்றிய
எனது
முந்திய கட்டுரையைப் படிக்க-
-----------------------------------------------------
தங்களது விரிவான கட்டுரை பல விடயங்களைத் தந்தது
பதிலளிநீக்குஎல்லோருமே சுயநலவாதிகளே... நாட்டைப்பற்றியோ... நாட்டு மக்களின் நலன்பற்றியோ யாருக்கும் சிந்தையில்லை
மீண்டும் சுதந்திரப் போராட்டம் செய்ய வேண்டியநிலை நமது அடுத்த சந்ததியினருக்கு கண்டிப்பாக வரும்
வாழ்க தமிழ்
த.ம.1
தங்களின் உடனடிப் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே
நீக்குவிரிவாக விளக்கியமைக்கு நன்றி ஐய்யா . நாட்டை குட்டிசுவராக இந்த காவி கும்பல் துடிக்குது கல்வியாளர்கள் அனைவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து இந்த காவி கும்பலை ஓட ஓட விரட்டவேண்டும் .
பதிலளிநீக்குM. செய்யது
Dubai
tha.ma 1
கல்வியில் அரசியல் செய்யும் இவர்களை, அரசியல் ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும், வேறுவழியில்லை. கருத்துக்கு நன்றி நண்பரே!
நீக்குகல்வியாளர் இல்லாத கல்விக்குழு என்ற ஒன்றிலேயே அனைத்தும் அடங்கிவிடுகின்றதே. இன்னும் எவ்வளவை அனுபவிக்கப் போகின்றோமோ?
பதிலளிநீக்குகல்வியாளர் அல்லாத எழுத்தாளர்கள் பலரும் நல்ல கல்விக்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். என்றாலும் இவர்களுக்குக் கல்வியின்மேல் அக்கறை என்பது அரசியலாகவே தெரிகிறது. நன்றி அய்யா
நீக்குமுதலில் எல்லோருக்கும் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும் உயர்வு தாழ்வு என்னும் மனநிலை சிறு வயதிலேயே வளர்க்கப்பட்டு வருகிறது இதனை அழிக்க அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச சீருடை அனவருக்கும் இலவச உணவு போன்றவைகள் கட்டாய மாக்கப் பட வேண்டும் இம்மாதிரி கட்டாயப்படுத்துவதால் இளம் பிஞ்சுகள் மனதில் ஏற்ற தாழ்வு உணர்ச்சி வராது அனைவரும் சமம் என்னும் நிலை இளம் நெஞ்சுகளில் பதிக்கப்படும் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது உயர்வு தாழ்வு பற்றி சிந்திக்க மாட்டார்கள் இப்போதைஒய கல்வி சீரமைப்பு முறைகள் இம்மாதிரி ஏற்றதாழ்வுகளை perpetuate செய்யும் கல்வி சீரமைப்பு என்பது கல்வியாளர்களால் எந்த காலத்துக்கும் உகந்ததாக இருக்கவைக்கவேண்டியதாக்க இருக்க வேண்டும்
பதிலளிநீக்குஇன்னும் விரிவான விவாதங்கள் தேவை அய்யா. தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி
நீக்குசிறப்பான அலசல் புதிய கல்விக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத அம்சங்கள் அதிக அளவில்இருப்பது கவலைக்குரியது. இந்தியா முழுதும் இதற்கு எதிர்ப்பலை எழும்பும் என்பதில் அய்யமில்லை
பதிலளிநீக்குஏற்கெனவே ஒரு கட்டுரை எழுதினேன். இது இரண்டாவது இன்னும் எழுத நிறைய இருக்கிறது நண்பரே! எழுதுவேன். நன்றி
நீக்குமிகவும் விரிவான விவரங்கள் அடங்கிய கடடுரை ஐயா... யாருக்கும் மற்றவர் நலனில் அக்கறையில்லை.
பதிலளிநீக்குஇன்னும் எழுதவேண்டிய விடயங்கள் உள்ளன நண்பா! எழுதவேண்டும்.. நன்றி
நீக்குதனி மின்னஞ்சல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள் தெரிவித்த பின்வரும் கருத்திற்கு நன்றியும் வணக்கமும் -
பதிலளிநீக்கு(1)எந்த ஒரு கல்விக் கொள்கையும் இந்திய அரசில் சட்டதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் அது ஏற்புடைது அல்ல.
(2) அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்பு தரவேண்டும் (இட ஒதுக்கீடு உட்பட) சுப்பிரமணியன் கமிட்டி RSS கல்வி கொள்கை.
(3) சிறுபான்மை கல்வி உரிமைகளை பறிப்பது
(4) தின்தயாள் உபாத்தியாயா கருத்து படி சிறுபான்மை மக்கள் தனி சலுகை கிடையாது.
இவைகளை விரிவாகப் பேசலாம் என்பது என் கருத்து. போகாத ஊருக்கு வழி. கலகம் வரும் நல்லது நடக்கும் - -T.K.R.
முதலில் நான் ஒரு ஆசிரியனாக அதுவும் கேரளத்தில் ஆசிரியனாக இருப்பதால் ...
பதிலளிநீக்குவிரிவானக் கருத்துகளுடன் கூடிய பதிவு. நல்ல அலசல்.
நான் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில்தான் முதுகலைப்பட்டம் வரை என்பதால் உங்கள் கருத்துகளை ஏற்க முடிகிறது. கல்விக் கொள்கை வரைவுத்திட்டக் குழுவில் கல்வியாளர்கள் இல்லாதது மிக மிக ஆச்சரியமாக உள்ளது. உங்கள் கருத்துகளைப் பார்க்கும் போது இந்தக் கொள்கை சரிப்பட்டுவருமா என்பது கேள்விக்குறியே. எல்லோருக்கும் சமமானக் கல்வி அளிக்கப்பட வேண்டும். கடைக்கோடிக்கிராமத்துக் குழந்தைகளுக்கும். ஏற்றுக் கொள்ள முடியாத பல இருக்கின்றது.
கேரளத்தில் மலையாளத்தில் வடமொழிக் கலப்பினால் அதன் ஆட்சி அதிகம்தான். இங்கு ம் அதனால் இங்கு புதியகல்வி முறைக் கொள்கை பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை.
எங்கள் மாநிலத்தில் மும்மொழிக் கல்வி முறையே. நெடுங்காலமாக. ஹிந்தியும் உண்டு. மலையாளம் இரண்டாம் மொழி. எங்கள் மாநிலத்தில் மக்கள் ஹிந்தி கற்றுக் கொண்டாலும், தாய்மொழியினைப் புறக்கணிப்பது இல்லை. என் குழந்தைகளும் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள். அரசு சார்ந்த தனியார்ப்பள்ளி. நான் வேலை செய்வதும் அரசு சார்ந்த தனியார்ப்பள்ளி.
புதிய கல்விக் கொள்கை நிறையவே யோசிக்க வைக்கிறதுதான்.
வணக்கம் அண்ணா.
பதிலளிநீக்குஉங்கள் கட்டுரை வழியாகப் பல தகவல்கள் அறிந்துகொண்டேன். ஞாபகமாக மறைத்து ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை... அரசியல் சதி நடந்து கொண்டிருக்கிறது..அதைப் புரிந்துகொள்ளாமல் மக்கள் தொலைந்து போயிருக்கிறார்கள் என்று வருத்தமாக இருக்கிறது..மேல்சாதி ஆதிக்க உணர்வு அதிகமாவதைக் காண்கிறேன்.. சமஸ்கிருதம் படிக்க ஆர்வம் தூண்டப்படுவதையும் பார்க்கிறேன்..சில முகநூல் குழுக்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் நடக்கும் விவாதங்களில் இரத்த அழுத்தம் எகிறுமோ என்ற கவலை தான் வருகிறது...
எங்கு போய் முடியுமோ தெரியவில்லை!! :(
உங்கள் கட்டுரைகள் விழுப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் அண்ணா..நன்றி!
மாறவேணும் புதிய கல்விக் கொள்கைங்க - அதில்
பதிலளிநீக்குமக்கள்நலம் கொஞ்சம் கூட் இல்லேங்க
தங்களின் கருத்துகளை வழிமொழிந்தே எனது கருத்துகளை
ஒரு இசைப்பாடலாகத் தங்களுக்கு மின்னஞ்சலிட்டுள்ளேன்.
உங்கள் கட்டுரை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇன்றைக்கு இந்தியாவில் வழங்கப்படும் கல்வி நோயுற்றக் கல்வி என்று சாடுகின்றார் புதிய கல்விக் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் அவர்கள். மேலும் அலங்கோலமாகக் கிடக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். அனைவரையும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இல்லை என்பது அவருடைய குற்றச் சாட்டு. தரமிக்கக் கல்வி என்பது காலத்தின் கட்டாயம். இவற்றை ஒட்டிய செய்திகளை Education in Disarray-Need for Quality, Up gradation and Inclusivity என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை Economic and Political weekly dated 27.8.2016 என்னும் வார இதழில் வந்துள்ளது.
அதே இதழில் புதிய கல்விக் கொள்கை குறித்து அனில் சடகோபால், சத்திஷ் தேஷ்பாண்டே, ஆய்ஷா கிட்வாய், தீஷா நவானி, எல்.என்.வெங்கட்ராமன் ஆகிய அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள அருமையான அலசல் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. படிக்கவும் விவாதிக்கவும் ஏற்ற களங்களாக அனைத்துக் கட்டுரைகளும் திகழ்கின்றன.
புதிய கல்விக்கொள்கையில் பல விஷமம் இருக்கிறது என்பது அரசல் புரசலாக பேசப்பட்டாலும் தங்களின் கட்டுரை மூலம் தெளிவடைந்தேன்! இத்தகைய நயவஞ்சக முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது மிக அவசியம்!
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா.. வணக்கம். உங்கள் கட்டுரையை இன்றுதான் பார்த்தேன். அதனை திரையிலேயே வாசித்தேன். மேலும் ஆழமாக வாசிக்க அச்சிட்டு எடுத்துள்ளேன். உங்கள் கருத்தில் முழு உடன்பாடு எனக்கு. புதிய கல்விக்கொள்கை ஏழைகளுக்கும் உண்மையில் படிக்க விழைவோருக்கும் பொருந்துவதில்லை. இன்னும் ஒருமுறை வாசித்துவிட்டு விரிவாக நான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன் என் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
பதிலளிநீக்குதிரையில் படிப்பதால் கண் வலிக்கிறது. ஆகவே அச்சில் படித்துவிட்டு எழுதுகிறேன் ஐயா.
பதிலளிநீக்குஇன்று தான் உங்கள் கட்டுரையைப் படித்தேன். நல்ல விழிப்புணர்வூட்டும் கட்டுரை.
பதிலளிநீக்குகல்வியாளர் இல்லாத கல்விக்குழு என்பது வியப்பாயுள்ளது. இது மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
முதன்முறையில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்தது என்பது இவர்கள் திட்டமிட்டுச் செய்யும் பரப்புரை. தாய்மொழிக்கு அவசியமில்லை என்பதும் எதிர்க்கப்பட வேண்டியது.
எல்லாத்தட்டு மக்களும் கல்வியின் பயனைப் பெறும்வகையில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிய குழு அமைக்கப்பட வேண்டும்.
புதிய கல்விக்கொள்கையின் தீய அம்சங்கள் பற்றி இன்று தான் விளங்கிக்கொண்டேன் அண்ணா. மிகவும் நன்றி!