பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானதல்ல! சமமானது!



ரோட்டரி பெண்கள் விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு
புதுக்கோட்டை-ஜூலை 5. பெண்ணுரிமை என்பது பலரும் நினைப்பது போல் ஆணுக்கு எதிரானதல்ல, மாறாக ஆண்-பெண் சமம் எனும் கருத்திலானது என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை நேரு பள்ளியில் நடைபெற்ற ரோட்டரி மகாராணி அமைப்பின் ஐந்தாம் ஆண்டுவிழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியது –
பெண்களை அழகுப்பதுமைகளாகவே பார்த்தும் நினைத்தும் வருவது இன்றும் தொடரத்தான் செய்கிறது. நீண்ட காலமாகப் படிப்பு மறுக்கப்பட்டிருந்த பெண்கள் இப்போது கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறி வருகின்றனர். இதனை பள்ளியிறுதி மற்றும் மேல்நிலைத் தேர்வுகளில் மாணவர்களைவிட மாணவிகளே அதிக சதவீத்த்தில் –கடந்த பல்லாண்டுகளாக- வெற்றிபெறுவதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
அப்படியிருந்தும், பெண்களின் அறிவை வளர்க்க நினைக்காமல் அவர்களை அழகுப்பதுமைகளாகவே வைத்திருக்கவே இந்தச் சமூகநிலை விரும்புகிறது. இதை பெண்கள் புரிந்துகொண்டு பாரதி சொன்னது போல, “பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
யானை தன் பலம் தெரியாமல் பாகன் சொல்வதைக் கேட்டு, வீதிகளில் பிச்சையெடுப்பது போல, பெண்களும் தங்கள்திறமையைத் தாமே புரிந்துகொள்ளாமல் அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடப்பதில் அமைதிகாணும் நிலை மாறவேண்டும். இதைத்தான், தந்தை பெரியார் தமது பாணியில், “பெண்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிக்கொண்டு, புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், ஆண்கள் பெண்களுக்கான உரிமையைச் சுதந்திரத்தைத் தந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல, “உரிமை என்றும் எங்கும் தரப்படுவதில்லை, போராடி எடுத்துக் கொள்வது” என்பதைப் புரிந்து பெண்கள் தமக்கான உரிமைக்குப் போராட வேண்டும்.
ஆறுநாட்களில் சிவப்பழகு, ஜாக்கெட்டுக்கு மேட்ச் எடுப்பது என்பன போலும் சாதாரண விஷயங்களில் பெண்கள் தம் சக்தியைத் திசைதிரும்ப விடக்கூடாது. இந்த நிர்வாகிகள் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உண்மையிலேயே உதவி தேவைப்படுவோரை அறிந்து, உதவி செய்ய வேண்டும். இதனைத்தான் திருவள்ளுவர் “உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து“ என்றார்.
இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார்.
மகாராணி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் விழாவில் பதவியேற்றனர். தலைவராக அருணோதயம் ஜெயராமன், செயலாளராக எம்.சசி, பொருளாளராக மீனாள் கதிரேசன் ஆகியோருடன் இதர நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
முன்னாள் தலைவர் பவானி சொக்கலிங்கம் பொறுப்புகளை மாற்றித்தந்தார். பானுமதி கண்ணன், கமலா கருப்பையா, ராஜேஸ்வரி, கலைச்செல்வி திருநாவுக்கரசு, மீனாள் கதிரேசன், குப்பாள் நாகப்பன், ஃப்ளாரன்ஸ் ஜெயபரதன், நாகம்மாள் சுந்தரம், தேவிஅருண், கவிதா, பவானி, வாசுகி நடராஜன், சூர்யகலா முதலான ரோட்டரி பெண்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
பதவியேற்பு நிகழ்வை, ரோட்டரி சங்க ஆளுநர் ஜி.கோபால் நடத்திவைத்தார. உதவி ஆளுநர் நாகப்பன், முன்னாள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மச்சுவாடி டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. ரொட்டேரியன்கள் பிஎஸ்கருப்பையா, சொக்கலிங்கம், செந்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்வுகளை வள்ளியம்மை சுப்ரமணியம் தொகுத்து வழங்கினார்.
-----------------------------------------
நன்றி - செய்தியாளர் திரு மோகன்ராம், தினமணி நாளிதழ்
புகைப்படங்கள் - திரு டீலக்ஸ் சேகர் புதுக்கோட்டை

14 கருத்துகள்:

  1. வணக்கம்.உண்மை சார்.பெண் தன் திறம் அறியாமல் உள்ள நிலை தான் இன்றும் படித்த பெண்கள் கூட அழகின் பாதையில் தன் நேரத்தை செலவிட்டு வீணாகும் நிலை.சமுதாயத்துக்கு பயன்படா எந்த பிறவியும் வீண் தான்

    பதிலளிநீக்கு
  2. சிறந்த நற் கருத்துக்களைத் தாங்கி வந்த இவ்வாக்கத்தினைக் கண்டு
    மகிழ்ந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

    பதிலளிநீக்கு
  3. சிறந்த கருத்துகள்
    வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு ஐயா.. வணக்கம்..

    சொற்ப்பொழிவின் நடுவே பாரதி, பெரியார், அம்பேத்கர், வள்ளுவர் எனும் அறிஞர்களை மேற்கோடிட்டுக் காட்டியது படிக்கும் போது சுவையாய் இருந்தது ஐயா.. பெண்களின் முன்னேற்றத்தில் ஆண்களின் பங்கு என்பது நீண்ட வருடங்களாய் விவாதத்துக்கு உட்பட்டு வருகிறது .. தனக்கு வாய்த்த ஆண் துணையாலேயே இன்றும் பல வீடுகளில் பெண்கள் அடிமைபடுத்தப்பட்டு வருகின்றனர் என்பதை மறுக்கவும் முடியாது ஐயா..

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்துக்களை திறம்பட சொல்லியிருக்கிறீர்கள் ஐயா,,, தங்களை நான் வாழ்த்தமுடியாது,,, காரணம் நான் கத்துக்குட்டி.

    பதிலளிநீக்கு
  6. பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளத்தான் வேண்டும். கேட்டுப் பெறுதல் என்பது இந்த சமுதாயத்தில் இயலாத ஒன்று.

    தங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லி யிருகின்றீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான உரை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உங்களின் உரை மிக அருமை ஐயா.

    "//பள்ளியிறுதி மற்றும் மேல்நிலைத் தேர்வுகளில் மாணவர்களைவிட மாணவிகளே அதிக சதவீத்த்தில் –கடந்த பல்லாண்டுகளாக- வெற்றிபெறுவதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.//"

    உண்மை தான் ஐயா, நானும் ஒவ்வொரு வருடமும், மாணவர்கள் பள்ளித் தேர்வுகளில் மாணவிகளைக் காட்டிலும் அதிக சதவீதத்தில் வெற்றி பெருவார்களா என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் ஒரு வருடமும் அம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்படவேயில்லை .

    பதிலளிநீக்கு
  9. சரியாகச் சொன்னீர்கள் ஐயா !! ஆணின் முன்னேற்றத்திற்கு பெண்ணும், பெண்ணின் முன்னேற்றத்திற்கு ஆணும் சம பங்கு என்பது மிகவும் உண்மை ஐயா..

    பதிலளிநீக்கு
  10. sசிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு யானை தான் பலம் தெரியாது பாகன் சொற்கேட்டு பிச்சை எடுப்பது என்பதுஎவ்வளவு கொடுமை. எத்துணை பலம் முட்டாள் தனத்தால் அடிபட்டுப் போகிறது இல்லையா. யானைக்கு எப்படி புத்தி புகட்ட முடியும். ஆனால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  11. படித்த பெண்கள் கூட அழகு சாதனங்களைத்தானே விரும்புகிறார்கள்... அருமையான விழிப்புணர்வு பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா,
    அன்றே கருத்திட்டேன்..அப்பொழுது ஏற்பட்ட இணையக் கோளாறில் பதிவானதா இல்லையா என்று சந்தேகம், விட்டுவிட்டேன்.
    பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற உங்கள் அருமையான பேச்சிற்கு நன்றி ஐயா. பெண்கள் இன்று படித்து வேலை பார்த்தாலும் ஏதோ ஒரு நுகத்தடி இருக்கிறது...சமூகத்தின் அனைத்து தரப்பினரும் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்..அது உங்களைப் போன்றோரின் பேச்சால் உறுதியாக நடக்கும் என்று நம்புகிறேன். நன்றி ஐயா


    பதிலளிநீக்கு