கிரிக்கெட் தோல்வி - காரணம் என்ன?


                  


 இந்திய கிரிக்கெட் அணிதான் தோல்வி
இந்தியா அல்ல!

         2023 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி! இந்தச் செய்தி, கிரிக்கெட் ரசிக  மகா உலகத்தையும் தாண்டி பெருவாரியான பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பேச வைத்திருக்கிறது.

            இறுதிப்போட்டிக்கு பிரதமர் வருகிறார் என்றும் நரேந்திர மோடி திடலில் நரேந்திர மோடி அணி வெற்றி என்ற செய்தியை 2024 தேர்தலுக்குப் பயன்படுத்தப் பார்த்த அணி தோல்வியால் துவண்டு விட்டது உண்மைதான்! - 

      ஆனால் வருமானத்தில்...?

 பெரீய்யய வெற்றி மக்கா!

            இதில் எத்தனையோ திகிடு தத்தங்கள் –

0                                 திட்டமிட்டு இறுதிப் போட்டியை குஜராத் நமோ திடலில் வைத்தது ஒன்றும் எதேச்சையாகத் தெரியவில்லை

0                திட்டமிட்டு அஸ்வின்-“ஆல்-ரவுண்டரை”- கடைசிவரை களம் இறக்காமல் வைத்த  ரோகித்தின் “ஈகோ“

0                           சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், ஆல்ரவுண்ட் வீரர் அர்திக் பாண்டியாவின் இயலாத நிலையிலும் முதல் மூன்று ஆட்டங்களில் ஷமியை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்ட ஈகோ ரோகித்தின் ஈகோ..

0                           இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை 1983இல் வென்று தந்த கபில்தேவ், மல்யுத்த வீரர்களின் நியாயமான போராட்டத்தை வாழ்த்தி வரவேற்ற ஒரே காரணத்துக்காக அழைக்கப்படாத அரசியல்!

              பாஜகவில் சேரச் சொல்லி வந்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தினாலேயே, 2011இல் தன் இறுதி சிக்ஸரால் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுதந்த மகேந்திரசிங் டோனி  இந்தப் போட்டிக்கு அழைக்கப்படாத அரசியல்..

0       சச்சினுடன் “நவராத்திரி ஆட்ட நாயகர்” சாமியாரை மற்றும் கிரிக்கெட்டுக்குத் தொடர்பே இல்லாமல் –அண்ணாமலை உள்ளிட்ட திரையிலும் வெளியிலும் நடிக்கும் நடிகர்களை அழைத்திருந்த அரசியல்..

0           இறுதிப்போட்டிக்கு 1,30,000 பேர் உட்காரக் கூடிய நமோ திடல் நிரம்பியதும், குறைந்த பட்ச கட்டணம் ரூ35,000 என்று அறிந்ததும் மில்லின் கணக்கிலான வருமானம் பற்றிய பிரமிப்புடன் கூடிய ஏமாற்று அரசியல் என்று எத்தனையோ விவாதப் பொருள் இருந்தும்,

0 பத்து ஆட்டங்களில் தோற்காத இந்தியா, இறுதிப் போட்டியில்

ஆஸ்திரேலியா அமைத்திருந்த (1) ஃபீல்டிங், (2) பேட்டிங், (3)

பௌலிங் என்ற மும்முனை வியூகத்தை எதிர்கொள்ளத் திட்டமிடாத

இந்திய அணி ஃபீல்டிங்  இயலாமை ஆல்ரவுண்டர் இல்லாமை 

காரணமாகவே தோல்வியைத் தழுவியது.

0 சச்சினின் சாதனைகளை முறியடித்த கோலியின் திறன்,

நான்காம் ஆட்டம் முதல் தெறிக்க விட்ட ஷமியின் திறன், 

எனப் பல தனிநபர் சாதனைகள் அணியின் தோல்வியால்

அடிபட்டுப் போயின.. வாழ்த்தும் அனுதாபமும்..

------------------------------------------------------------------------

        வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு வெற்றிக்கு உரிய திட்டமிடாத, வீரர்களின் திறனைக் கண்டறிந்து பயன்படுத்தாத அரசியல் அமித்ஷா மகனின் தலைமை என ஆயிரம் ஓட்டைகள் எல்லாம் தோல்வியின் பின்னணி இதை அறியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ரசிகர்!

    இதுபற்றியெல்லாம் நிறையப் பேசலாம்.. ஆனாலும் இந்த “நல்லதோல்வி”பல கண்களைத் திறக்க உதவும் என்பதால் இந்தத் தோல்வியை நான் மனமார வரவேற்கிறேன்!

இதே போன்றதொரு தோல்வியை 

ஆஸ்திரேலிய அணியிடம்  

அரையிறுதியிலேயே கண்ட 

இந்திய அணி பற்றி 

2015 இல் நான் எழுதிய கட்டுரை கீழுள்ளது.

---------------------------------------------------------------------

அன்றைய படம் மாறியிருக்கிறது,

ஆனால்

அப்போது கற்க மறந்த

பாடம் இப்போதும் மாறவில்லை!

பழசென்று நினைக்காமல்

படித்துப் பாருங்கள் தெரியும்

------------------------------------------------------ 

https://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post_5.html 

------------------------------------- 

இந்தத் தோல்வி பற்றி

கவிஞர் செ தமிழ்ராஜ் எழுதி

தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருக்கும்

அற்புதமான கவிதையை

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில்

மகிழ்கிறேன்.

---------------------------------------

            உலகக் கோப்பை!

            ஜெய் ஸ்ரீ ராம் கோசமிட்ட 

            வானரங்கள்

            பரிசாக கிடைத்த தோல்வியை 

            எந்த முழக்கமிட்டு

            வரவேற்பார்கள்.

 

            மைதானங்களை கைப்பற்றி

            பெயர் சூட்டிக்கொண்டவர்கள்

            வெற்றியை

            விலைக்கு வாங்கமுடியாமல்

           தோற்றுப்போனார்கள்.

 

            அரசியல் சூதாட்டக்காரர்களால்

            மட்டைப்பந்தாட்ட  வீரர்கள்

            பலியானார்கள்.

 

            வான் சாகசங்களில்

            பூத்தூவி மகிழ்ந்த 

            காவி முகங்களில் 

            தோல்வி 

            காரி

            உமிழ்ந்திருக்கிறது.

 

             எல்லாவற்றிலும்

             மதங் கலந்தார்கள்

            விளையாட்டும் ஒரு

            வினைப்பயனாய்மாறி 

            பாடம் நடத்தியிருக்கிறது.

 

            இந்தியாவிலிருந்து வெளியேறி

            பாரதமென்று படையெடுத்தார்கள்

            மணிமுடி யெங்கும் 

            மண் பூசி நின்றார்கள்.

 

            தோற்றாலும்

            வீரன்

            வெற்றிக்கு கைகொடுப்பான்

            கோப்பையை கொடுத்த கோழை

            "கோ"வென்று

             அழுது ஓடுகிறான்.

 

            வெற்றியும் தோல்வியும்

            வீரர்களுக்கு மட்டுமே அழகு

            அழுகுணி

            அரசியல் ஊளைகளுக்கல்ல.

 

            எமது இந்திய வீரர்கள்

            மீண்டும் ஜெயிப்பார்கள்

            அப்போது 

            விளையாட்டரங்கம் 

            இந்திய மக்கள் வசம் இருக்கும் 

            அன்றெழுப்பும் 

            ஒற்றை முழக்கத்தில் 

            எந்த மதமும் கலந்திருக்காது.

                    --செ. தமிழ்ராஜ்

                       வண்டியூர் மதுரை

           --------நன்றி- தீக்கதிர்-21-11-2023--------

------------------------------------------------ 

கிரிக்கெட் பற்றியெல்லாம் எழுதி

 நேரத்தை வீணடிக்க வேண்டுமா?

எனில்,

இந்திய சமூகத்தைப் பாதிக்கும்

எதைப் பற்றியும் கவனிக்க வேண்டும்,

நாம் சரியாக கவனிக்க - கணிக்க- வில்லை எனில்,

தவறான கணிப்புகளே உண்மைபோல் பரவும்.

எனவே... 

நன்றி.

-----------------------------------------

படங்களுக்கு நன்றி - வழக்கம் போல- கூகுளார்

-----------------------------------


தமிழ் இனிது-23 / நன்றி - 21-11-23 இந்து தமிழ் நாளிதழ்

(நன்றி -  இந்து தமிழ் நாளிதழ் -21-11-2023)

சுவறும், சுவரும்!

சுவர் விளம்பரத்தை விரும்பாத வீட்டார், “சுவற்றில் எழுதாதீர்” என்று எழுதி வைக்கிறார்கள். “சுவர்”, இடையின எழுத்தில் முடிகிறது, இதனால் சுவர் விழுந்துவிடுமோ(?) என்று, “சுவற்றில்“ என்று வல்லெழுத்துப் போடுவது தவறு! “சுவரில் எழுதாதீர்” என்றே சரியாக எழுதுவோம்.

பாரையும், பாறையும்

கடப்பாரை, இரும்புக் கோல்-கருவி. கல்லால் ஆனது  கற்பாறை, இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.  “கடப்பாரைக்கும் உடையாத பாறை, அதன் அடியில் முளைத்துக் கிளம்பும் சிறு செடியின் வேருக்கு நெகிழ்ந்து இடம் கொடுக்கும்“ என்று, வேறுபட்ட இவ்விரண்டு சொற்களைக் கொண்டு வாழ்வியலை விளக்குகிறார் ஔவையார்-

“பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசுமரத்தின்

      வேருக்கு நெக்கு விடும்”(நல்வழி 33) 

“பாறை ஓவியங்கள் காலத்தால் தொன்மையானவை“ என்கிறார், தமிழறிஞர் நா.அருள்முருகன், நூல் -“புதுக்கோட்டை மாவட்டப் பாறை  ஓவியங்கள்”

தொல்லியல் ஆய்வுகளில் கடப்பாரையைப் பயன்படுத்துவதில்லை!

முருக்கா? முறுக்கா?

      தமிழரின் பலகாரங்களில் ஒன்றான இது, முருக்கா? முறுக்கா? என்று கேட்டால், நம்மிடம் முறுக்கிக் கொள்பவர்களும் உண்டு!

இதைத் தெளிவுபடுத்த, தமிழறிஞர் கண்ணபிரான் ரவிசங்கர் (“கரச“) சிறுபாணாற்றுப் படையின், “விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி" (247) வரியையும், “பிட்டு, அவல், அடை, முறுக்கு" எனும் திருப்புகழ் வரியையும் உதாரணம் காட்டுவது சிறப்பு.

ஆக, முறுக்கு தான் தின்பண்டம். முருக்கு என்பது, “கொல்” எனும் பொருளில் வழக்கிழந்து, இப்போது தவறாகப் புழங்கி வரும் சொல்!

அரையும், அறையும்-

விரல் விரிந்த கையளவே ‘சாண்’. அவரவர் கையால் எட்டு சாண் கொண்டதே அவரவர் உயரம்! “எறும்பும்தன் கையால் எண் சாண்” என்பார் ஔவையார். உடலின் கால் பகுதியே கால் எனும் மனித உறுப்பு! உடலின் அரைப்பகுதியே அரை - இடுப்பு!  “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து”(சுந்தரர் தேவாரம்), இடுப்பில் கட்டும் அரைஞாண் கொடியே “அரணாக்கொடி”!  கால்களை அரையுடன் தொடுப்பது தொடை!

அறை என்னும் சொல்லுக்கு விளக்கம் வேண்டாம். எவ்வளவு பேரிடம் ‘அறை’ வாங்கியிருப்போம்? இது தவிர, வீடு-விடுதியில் உள்ளதும் அறை!  

ஒலியும், ஒளியும், ஒழியும்

            1991இல், இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) வந்தது. அதற்குமுன்  - தனியார் தொலைக்காட்சிகள் வருமுன் - 1980களில்  பொதிகைத் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி “ஒலியும் ஒளியும்”

            இதில், ஒற்றல் லகர ஒலி எனும் சொல் ஓசையைக் குறிக்கும், வருடல் ளகர ஒளி எனும் சொல் வெளிச்சத்தைக்  குறிக்கும். ‘ஆடியோ விஷூவல்’ எனும் ஆங்கிலத் தொடரின் தமிழாக்கமே இது! அடுத்து வரும் ஒழி எனும் சொல்லுக்கு ஒழிந்து போ என்று பொருள்.   

            இந்த வேறுபாடுகள் இருந்தும், “தமில் வால்க, சாதி ஒளிக” என்று நரம்பு புடைக்கச் சொல்லிப் பயன் என்ன? இதனால்தான் தமிழ் தனக்குரிய பெருமையோடு வாழாமலும், சாதி ஒழியாமல் ஒளிந்து கொண்டும் இருக்கிறதோ? என்று நான் நினைப்பதுண்டு!  எழுத்து, பேச்சு எனும் இருவழியில்தான் ஒரு மொழி வளர்வதும், அழிவதும் நடக்கும். இதை உணர்ந்து பேசி-எழுதினால்தான் தமிழ் வாழும்! நடந்தால் சாதி ஒழியலாம்.

---------------------------------------------------------------------------  

கட்டுரையைப் படித்த நண்பர்கள் 

தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்

மின்னஞ்சலை  FOLLOWER பெட்டியில் இட்டு, 

 நண்பராகத் தொடரவும்,

தேவையெனில் பேசவும்  வேண்டுகிறேன்

எனது செல்பேசி :   +91 94431 93293

--------------------------------------------------------

தமிழ்இனிது-22 ‘வேறுபாடு’ ‘முரண்பாடு’ என்ன வித்தியாசம்?

 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 14-11-2023)

வேறுபாடும் முரண்பாடும்

ஒரு கருத்திற்கு மாறான வேறொரு கருத்து. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அது அழகுமில்லை. ஐந்து விரலும் ஒன்றுபோல அன்றி வேறுவேறு வடிவில் இருப்பதே அழகும் பயனும் ஆகும். ‘நூறு பூக்கள் மலரட்டும்’ ஜனநாயகம். வேறுபாடுகள் பெரிதானால் முரண்பாடு வரும்!

எதிர்க்கருத்து. வேறுபாட்டைப் பேசித் தீர்க்கலாம், முரண்பாட்டை மோதித்தான் தீர்க்க வேண்டும் என்கிறது குறள்! (1077)

எத்தனை? எவ்வளவு?  

எண்ண முடியும் அளவை ‘எத்தனை?’ என்று கேட்கலாம். எண்ணிக்கை தெரியாத அளவை ‘எவ்வளவு?’ என்று கேட்கலாம். பணத்தாள்களை எண்ணலாம், அதை “எத்தனை ரூபாய்?“ என்பதே சரியான வழக்கு. தொகை தெரியாத போது “எவ்வளவு  ரூபாய்?” என்றும் கேட்கலாம்.

பொதுவாக காலம், நீர், ஒலி, ஒளியை அளக்க முடியாது என்ற பழங்காலத்தில் இவற்றைப் பிரித்துப் பார்க்க இந்த அளவை முறைகள் இருந்தன. இப்போது துல்லியமாக அளக்கின்ற கருவிகள் வந்துவிட்டதால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் வருவதில் தவறில்லை. எனினும் இப்படியான வேறுபாடு தமிழில் இருந்தது பற்றி அறிந்திருப்பது நல்லது. 

துல்லியம், துள்ளியம்

            மிகச் சரியாக அளவிட்டு, நுட்பமாகச் சொல்வது ‘துல்லியமானது’ துள்ளி ஓடும் மானை பிடிக்கமுடியாது, துல்லியமாகப் படம் பிடிக்கலாம்! அவசரத்தில் சிலர் ‘துள்ளியமாக’ என்று  எழுதுவது தவறாகும்.

நீள் வட்டப் பாதையில் சுற்றும் நிலவிலிருந்து, பூமி உள்ள தூரத்தை, அருகில் 3,64,000 கி.மீ. எனவும், தொலைவில் 4,06,000கி.மீ. எனவும், இருவகையில் ‘துல்லியமாக’ கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.  

‘மாறடித்து’ அழுவது சரியா?

          கற்பனை நலமும், சொற்புனை வளமும் கைவரப்பெற்ற நல்ல கவிஞர்கள் கூட, எழுத்துப் பிழையோடு எழுதினால் தமிழ் வருந்தாதா? அவர்கள் அறியாத தமிழல்ல, அவர்களைப் பார்த்து எழுதும் மற்றவரும் அப்படி எழுதுவார்களே? சிற்றூர்ப் பெண்கள் மாரடித்து அழுவதுண்டு! ‘மாறடித்து’ அழுவதாக நான் அறிந்த நல்ல கவி ஒருவர் எழுதியிருந்தார்.

            மாற்ற முடியாத சோகத்தை, ‘மாரடித்து’ அழுது  மாற்ற முயல்வது நம் கிராமத்துப் பண்பாடு. “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க”குறள்(293), “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா” உலகநீதி(2) மார்-மார்பகம், நெஞ்சு - உறுப்பின் மேல் ஏற்றிய அழகான கற்பனை வேலை!  

சின்ன ர’ என்பதும் தவறு!   பெரிய ற’ என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது - மரம், கரம்.

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி - மறம், அறம்.

வல்லினம் கசடதபற (வன்மையாக, நெஞ்சிலிருந்து பிறக்கும்) மெல்லினம்ஙஞணநமன (மென்மையாக,மூக்கிலிருந்து பிறக்கும்) இடையினம்யரளவழல (இடைப் பட்ட கழுத்திலிருந்து பிறக்கும்)

வலுத்த பணக்கார வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற’ நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு முயற்ச்சினு எழுதறது தப்பு!

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும் அது முயற்சிதான் !

வாழ்க்கை முறையை இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச நம்ம பெருசுக,   எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க... யோசிச்சா தமிழ் இனிது!

-------------------------------------------

-- பின் குறிப்பு--

(வலைப் பக்க வாசகர்களுக்காக)

நான் மற்றவர் கருத்துகளையோ பதிவுகளையோ

“வெட்டி ஒட்டும்” பழக்கமுடையவன் அல்ல! மேற்கோள் காட்டினால் அதற்கான ஆதாரத்தையும் எழுதுவேன்.

இக்கட்டுரையின் இறுதிப் பகுதி

“வளரும் கவிதை”எனும் இந்த நமது வலைப்பக்கத்தில்  

நான் எழுதிய பதிவின் சாரம்!  

இந்தப் பதிவு லட்சக்கணக்கான பார்வையாளரைக் கொண்டது! 

(கீழுள்ள முதற்பத்து (டாப்-டென்!) பதிவுகளைப் பாருங்களேன்!

 எளிமையான தமிழ் இலக்கணம் என்பதால்

மீளப் பயன்படுத்தினேன் அவ்வளவே

அந்தப் பதிவின் இணைப்பு இதோ - https://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html

---------------------------------------------- 

 (பதிவிட்டது -14-11-23 இரவு-8-00மணி) 

--------------------------------------------------------- 

தமிழ் இனிது-21 ஆய்த எழுத்தை நினைவு கூர்வோமா? (நன்றி- இந்து தமிழ் 07-11-2023)

(நன்றி- இந்து தமிழ் நாளிதழ் -07-11-2023 )


ஆய்தமும் ஆயுதமும்-   

            ‘ஆய்தல்’ எனில் ‘நுணுகிப் பார்த்தல்’ எனப் பொருள்(தொல்-813). ஆய்வு செய்பவர் ‘ஆய்வாளர்’.  உயிரெழுத்து மெய்யெழுத்து போலன்றி,  ‘நுணுகிய ஓசையோடு வருவதே ஆய்த எழுத்து’ இதையே, அஃகேனம் (அக்கன்னா!) தனிநிலை, முப்புள்ளி எனவும்  சொல்வர்.

            ‘ஆயுதம்’- தொழிலுக்கான கருவி. அதனால்தான் “ஆயுதபூசை“ நடக்கிறது! உயிருக்கும் மெய்க்கும் நடுவில் ஆயுதத்தை வைக்கலாமா?! முப்புள்ளி எனும் பெயரால், கேடயம்(?) என்றெண்ணி, ‘ஆயுத எழுத்து’ என எழுதுகிறார்களோ?  ஆயினும், ஆய்த எழுத்து என்பதே சரி. 

நினைவு கூர்வதா? நினைவு கூறுவதா?

           அன்பிற்கு உரியவரின் நினைவை மீண்டும் நினைத்துப் பார்ப்பதை ‘நினைவு கூர்தல்’ என்பதா? ‘நினைவு கூறுதல்’ என்பதா?

‘கூர்ந்து’ என்பது ‘மிகுந்து, குவிந்து’ என்னும் பொருளில் வரும். ‘அன்பு கூர்ந்து’ ‘கூர்ந்து கவனி’ ‘நினைவு மிகுந்து மரியாதை செய்வது” என்பதால் ‘நினைவு கூர்தல்’ என்பதே சரியானது.  “இடும்பை கூர் என்வயிறே” – ஔவையார் (நல்வழி-11). எனில், ‘நினைவு கூறுதல்’ எனும் தொடர், ‘நினைவை எடுத்துச் சொல்லுதல்’என, வலிந்து பொருள் கொள்வதாக- தவறாகவே-  அமையும்.  

வாழ்க வளமுடனா?  வளத்துடனா?

            ‘வாழ்க வளமுடன்’ என்று எழுதக்கூடாது, அத்துச் சாரியை தந்து ‘வளத்துடன்’ என்பதே சரி என்பார் சிலர்.   ஆனால், ‘வளமுடன் வாழலாம், என்பது நானல்ல,  உலகமொடு(புறம்-72), காலமொடு(தொல்-686) எடுத்துக் காட்டி, “நலமுடன் எழுதலாம்“என்பவர், தமிழண்ணல்!

தமிழ்நாடு அரசா? தமிழ்நாட்டு அரசா?

அண்ணா சொன்ன “தமிழ் நாடு அரசு“  என்பதை, “தமிழ்நாட்டு அரசு என்றல்லவா எழுத வேண்டும்?” என்று, இப்போதும் கேட்போர் உண்டு!  இதை மறுத்து, தமிழறிஞர்கள் நன்னன், வ.சுப.மாணிக்கம் போல்வாரை வழிமொழிந்து, ‘தமிழ்நாடு அரசு என்றே எழுதலாம்“ என, பொருநர் ஆற்றுப்படை “நாடு கிழவோனே“ இறுதி அடியைக் காட்டுவார் தமிழண்ணலார் (உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – பக்-111)  

அல்லன், அல்லை, அல்லர் – தேவையா?  

            மேற்கண்ட பத்தி ஒன்றில் “நானல்ல” என்று ஒரு தொடர் உள்ளது. இதைத் தவறு என்பார் இலக்கணப் புலவர். திணை, பால், எண், இடம் மாறாமல் வர வேண்டும் என்பது சரிதான்.  அதற்காக, நான் அல்லேன், நீ அல்லை, அவன் அல்லன், அவர் அல்லர் என்று எழுதச் சொன்னால் ‘இருக்கிற சிக்கல் போதாதா அய்யா?’ என ஓடுவர் இளைஞர்! 

வேறு, இல்லை, உண்டு எனும் சொற்களை திணை, பால்,  எண், இட வேறுபாடு கருதாமல் பொருத்திக் கொள்ளலாம் என்னும் முனைவர் பொற்கோ கருத்தை ‘புதியன புகுத’லாக நானும் வழிமொழிகிறேன்- (அண்ணல் தமிழ் – பக்-83). ஆக, நானல்ல, நீயல்ல  என்பன சரிதானே?

தப்பும் தவறும்

தப்பு, தவறு - இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் ஆள்வர்.   

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு!

“தவறு என்பது தவறிச் செய்வது,
 தப்பு என்பது தெரிந்து செய்வது” – வாலி ( திரைப்பாடல்)

நமது உழைப்பாளி மக்கள் ஆடும் சரியான ஆட்டத்தை, “தப்பாட்டம்” என்றது, தெரிந்தே செய்த தப்பல்லவா? ஆட்டத்தை அல்ல, போரைக் குறித்த இசைக்கருவிக்கு வைத்த பேரைச் சொல்கிறேன்.  

-------------------------------------------- 

பி.கு.

கடைசிப் பத்தியில் திரைப்பாடல் இடம்பெற்ற படம் 

நம்நாடு என்று    தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். 

பாடல் இடம்பெற்ற படம் - பெற்றால்தான் பிள்ளையா

இந்தத் தொடரை எழுத வேண்டியதன் அவசியத்தை 

உணர்ந்து கொண்டேன்! - 

இன்றுதான் பத்துக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்தன- 

இந்தத் தவற்றைத் திருத்தி! அனைவர்க்கும் நன்றி.

--------------------------------------- 

07-11-2023 பிற்பகல் 5.30

-------------------------------------