சிங்கமென சீறி வா! புலியெனப் புறப்பட்டு வா! மதுரை வலைப்பதிவர் திருவிழா அழைக்கிறது!





சிங்கமென 
சீறி வா!
புலியெனப் 
புறப்பட்டு வா!!
அலைகடலென 
ஆர்ப்பரித்து வா!!!
( மனுசனா மட்டும் வந்துராதே! ) -என அழைக்கும் 
அரசியல் கட்சிகளின் 
அழைப்பல்ல இது!





தமிழ் வளர்க்கும் 
வலைப் பதிவர்களே! வருக!

அறிவியல் வளர்க்கும் 
எழுத்தாளர்களே! வருக!

பொழுதுபோக்காகப் பலர்நினைக்கும் 
கலையை-இலக்கியத்தை, 
வாழ்க்கையைப்
பழுது பார்க்கும்  ஊடகமாக மாற்றும்
வல்லமை மிகுந்த 
வலை ஓவியர்களே வருக!

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”
என்பதை உண்மையாய் உணர்ந்து,
ஆறாம்திணை வளர்க்கும்
அன்புத் தமிழ் உறவுகளே வருக!!

அக்டோபர்-26 அன்று 
கூடல்மாநகராம்
கூடலில் கூடுவோம்!

1981இல் மதுரையில் நடந்த
உலகத் தமிழ் மாநாடு பற்றி
“வானம்பாடிக் கவிஞர்” மீரா அவர்கள் எழுதிய, புகழ்பெற்ற
“கூட்டம் கூட்டம் கூட்டம்,
  கூடல் நகரில் கூட்டம் பார்க்க,
  கூட்டம் கூட்டம் கூட்டம்” எனும் கவிதை      
   இப்போது நினைவிலாடுகிறது!

இந்தவிழாவில் தமது கவிதைத் தொகுப்புகளை வெளியிடவிருக்கும்.
புதுக்கோட்டை சகோதரி மு.கீதா --  http://velunatchiyar.blogspot.com/ 
பெங்களுர்  தங்கை கிரேஸ் பிரபா -- http://thaenmaduratamil.blogspot.com/ 
கரந்தை ஜெயக்குமார் அய்யா--http://karanthaijayakumar.blogspot.in/
மற்றும் இதற்கான தயாரிப்பில் இருக்கும் நம் 
இலக்கிய உறவுகளைச் சந்திக்கும் மாநாடாகவே இருக்கப் போகிறது!
(உண்மையில் இந்தப்பட்டியல் தொடரப்போகிறது!, தொடரவேண்டும்!)

இவ்விழாவில் நூல் வெளியிடவிருக்கும் நம் உறவுகளை இப்போதே வாழ்த்துவோம்.. வரவேற்போம்..உதவிசெய்வோம்! வாழ்த்துகள்!!!

இதுதொடர்பான செய்திகளுக்கும், வருகையைப் பதிவுசெய்துகொள்ளவும், இங்கே சொடுக்குக.. 

“நாங்கள்ளலாம் மொதல்லயே பதிவு பண்ணிட்டோம்ல” என்னும் முணுமுணுப்போர், அவ்வப்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்,  பதிவுசெய்ததை உறுதிசெய்து கொள்ளவும், (வாக்களிக்கப் போகும்போது, “உங்க பேரு இல்லயே!” எனும் ஏமாற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளவும்)..(?) இப்போதே சரிபார்க்க - சொடுக்குக-


திண்டுக்கல் தனபாலன் - http://dindiguldhanabalan.blogspot.com/ 

தமிழ்வாசி பிரகாஷ் - http://www.tamilvaasi.com/

அன்புடன் அழைப்பது,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
பி.கு. - புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருக்கும் வலைப்பதிவர் நண்பர்கள், வரும் அக்டோபர் 5ஆம் தேதி எனது நூல்வெளியீட்டு விழாவில் “வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருக“ என “புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம்“ சார்பாக ஒரு விளம்பரப் பதாகை (ஃப்ளெக்ஸ்) வைத்து, அந்த விழாவின் பின்னர், படைதிரண்டு(?) மதுரை செல்லத் திட்டமிடுவோம் சரியா?

சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது!

சாதியைக் காப்பாற்றும் சமூகம் 
முன்னேற முடியாது! 
புதுக்கோட்டை-செப்.11.
புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சியில உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் நடந்த மகாகவி பாரதி நினைவுநாள் விழாவில் சிறப்புரை யாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், “சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது, சாதிக்கெதிரான உணர்வை வளர்த்து, சாதியற்ற சமூகம் தோன்றும்வரை பாரதி  நினைக்கப்ப்படுவான், நினைக்கப்பட வேண்டும்“ என்றார்.
பாரதி கல்விக்குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமையில் நடந்த விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுக் கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசினார். தொடர்ந்து மாணவியர் உரையாற்றினர், பேராசிரியர் கவிதை வாசித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- அறிவுஎன்பதை வெறும்மதிப்பெண்ணாக மட்டுமே நினைத்துக்கொள்ள கூடாது. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்ற வள்ளுவர் மிகப்பெரிய மேதை. அதை வெறும் வேலைவாய்ப்புக்கான கருவி என்று நினைப்பது தவறு.
தேர்வில் தோல்வியுற்ற பலர் நாட்டைக் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள், அதே நேரம் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் மிகுந்த சுயநலத்துடன் ஏதாவது ஒரு நல்ல வேலையில் இருந்துகொண்டு சமூகத்தைப்பற்றிய அக்கறையில்லாமல் இருந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. இதையே நம் பாரதிதாசன்,“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ என்று பாடிச் சாடியதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னோடியாக “வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என நினைத்தாயோ?”  என்று பாரதி பாடியதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சாதாரண மனிதர்கள் வேறு, சாதனை மனிதர்கள் வேறு என்பதைப் பாரதி தெளிவாகப் புரிந்து கொண்டு சாதனை மனிதர்களை உருவாக்கவே அவன் கவிதையால் வேள்வி செய்தான்.
அதே போலப் பெண்கள் தம்மை அழகுபடுத்திக்கொள்வதே முக்கியம் என்பது போல விளம்பரம்வருவது வெறும் வணிகநோக்கம் கொண்டது என்பதை மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும். உலக அழகிப் பட்டம் பெறுவோர் எல்லாம் தற்காலிகமாகப் புகழ்பெறுவோர்தான். அன்னை தெரசா தான் நிரந்தரமான உலக அழகி என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொண்டு பள்ளியில் வளர்க்கும் அன்பையும் அறிவையும் இந்த சமூகத்திற்காகப் பயன் படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தன் அன்பால் உலகை வென்றவர்கள்தான் உலக அழகிகளைவிட நிரந்தரப் புகழ்பெற்றிருக்கிறார்கள். “பெண் அடிமைத்தனத்தின் அடையாளமே அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணம்“ என்று புதுமைப் பெண்களைப் போற்றிக் கும்மியடித்தவன் பாரதி.
அழகை-அறிவைப் புரிந்துகொண்டு, மாணவியர் தமக்குள் ஒளிந்துகிடக்கும் பன்முகத் திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓவியர், பாடகர், இலக்கிய வாதி, விளையாட்டு வீரன், சமூகத்தொண்டாற்றும் தலைவன், எனத் தமக்குள் இருக்கும் பல்வேறு வகை ஆளுமைகளைக் கண்டுபிடிப்பதுடன் அத்திறன் சமூகத்துக்குப் பயன்படுமாறும் வாழவேண்டும். வெறும் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்கள் மனித  குலத்திற்குப் பயன்தராது. அந்தக் கல்வியை “பேடிக் கல்வி“ என்றும் “ஊணர் கலைத்திறன்“ என்றும் இகழ்ந்தவன் பாரதி.
வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வியை, கிராமத்துக் கிழவி, கோவில் வாசலில் நன்று மண்ணை வாரித் தூற்றி சாபமிடுவதுபோலவே பாரதி கொதித்துப் பாடுகிறான். “நலமோர் எள்துணையும் கண்டிலேன் –இதை- நாற்பதினாயிரம் கோவிலில் சொல்லுவேன்“ என்று பாரதி சாபமிடுவதை, பயனற்ற கல்வியின்மீதிருந்த கோபம் என்றே புரிந்துகொள்ள வேண்டும். கல்வி வாழ்க்கை முழுவதும் வரவேண்டும்
“தையல்சொல் கேளேல்“ என்று பெண்களை இழிவு படுத்திய சமூகத்திலிருந்து மாறுபட்ட பார்வையுடன், “தையலை உயர்வு செய்“ என்று பாடியவன் பாரதி. அது மட்டுமல்லாமல் அதைத் தன்வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்ந்துகாட்டியவன். பெண்களைக் குருவாக ஏற்கத் தயங்கிய சமூகத்தில் தான் வெளியிட்ட நான்கு நூல்களையும் தனது ஞானகுருவான அன்னை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பித்தான்.
அதோடு, “சாதிகள் இல்லையடி பாப்பா“ என்று பாடியது போலவே, தனது வாழ்விலும் “சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியர் ஆயினும் ஒன்றே அன்றி வேறு குலத்த்வர் ஆயினும் ஒன்றே“ என்று வாழ்ந்தவன். இப்படிச் சும்மா மேடையில பேசிவிட்டு வாழ்வில் கடைப்பிடிக்காதவரை “நடிப்புச் சுதேசிகள்“ என்றும், “வாய்ச்சொல் வீரர்கள்“ என்றும் எள்ளி நகையாடி இகழ்ந்தவன் பாரதி. சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள் இடையே வரும் நடிப்புச் சுதேசிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும்.
பாரதி இப்படிச் சொன்னதை எடுத்துச் சொல்ல எனக்குத் தகுதியிருக்கிறது. என் குடும்பத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை. நான், என் மனைவி, மகள், மருமகன், மகன், மருமகள் என யாருமோ சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை இதை, இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள். எனவே சாதி ஒழிப்புக் கருத்தில் பாரதியைப் பின்பற்றுவதைப் பெருமையுடன் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சாதி பார்க்கும் சமூகம் எந்தவகையிலும் முன்னேற முடியாது. உழைப்புச் சுரண்டலின் மறுவடிவமே சாதி என்பைதைப் புரிந்து கொண்டுதான் தனது சிறுகதையான “ஆறிலொரு பங்கு“ நூலை “பள்ளர் பறையர் எனப்படும் உழைப்பாளிப் பெருமக்களுக்கு சமர்ப்பணம்  செய்வதாக“ தெரிவித்துள்ளார் மகாகவி பாரதி! இந்த உணர்வு இன்றும் தேவைப்படுகிறது. உழைப்பை மதிக்காத, உழைப்புத் திருட்டின் மறுவடிமான சாதியைப் பெருமையாகக் கருதும் சமூகத்தில் முன்னேற்றத்திற்கு சாத்தியமே இல்லை! இதை இளைய சமுதாயம் புரிந்துகொண்டு, சாதியைப் புறந்தள்ளி, அறிவால்-உழைப்பால் உலகை வெல்லவேண்டும் சாதியற்ற ஒரு சமூகம் எழும்வரை பாரதி பேசப்படுவான், பேசப்பட வேண்டும் “
இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசி மாணவியர்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிராமப் புறத்தில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவியர் விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள, மகாகவி பாரதியின் உருவச்சிலைக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் மாலையிட்டு, மலர்தூவி அஞ்சலி செய்ய, தொடர்ந்து முதல்வர் திருமதி ஜானகிசுவாமிநாதனுடன், பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கிலான மாணவியரும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.(படம்)
நன்றி - தினமணி (திருச்சிப்பதிப்பு)-12-09-2014  
செய்தி-திரு.மோகன்ராம், படம்-திரு.ஜெயச்சந்திரன்.
-------------------------------------------------------------------------------------

அக்டோபர் ஐந்தாம் தேதி அனைவரும் புதுக்கோட்டை வருக.


நண்பர்களே!
நமது 3 நூல்களின் வெளியீட்டுவிழா -
வரும் அக்டோபர் 5ஆம் தேதி அன்று நிகழவுள்ளது. 

அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறேன்.
அச்சிட்ட அழைப்பை,
 வரும் 20-09-2014க்கு மேல் 
அஞ்சலில் அனுப்புவேன். அஞ்சல் அழைப்புக் கிடைக்காதவர்கள், இந்த இணைய அழைப்பை ஏற்று வரவேண்டுகிறேன். நன்றி.

 கல்விச்சிந்தனைகள்-
19 கட்டுரைகள் - பக்கம் -157)
விலை ரூ.120-

 இலக்கியச் சிந்தனைகள்
16 கட்டுரைகள் - பக்கம்-216)
விலை ரூ.140-

கவிதைகள்
(மரபுக்கவிதைகளும்,
புதுக்கவிதைகளுமாய்   பக்-96)
விலை ரூ.70-

கிடைக்குமிடம்-
அகரம் பதிப்பகம்,
எண்-1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007, தமிழ்நாடு.
-------------------------------------

நா.முத்துநிலவன் நூலுக்கு மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் முன்னுரை

முன்னுரை- மதுக்கூர் இராமலிங்கம்.
மார்க்சியக் 
கலப்பை கொண்டு  
மண்ணை உழும் ஆய்வுகள்
"கலை, கலைக்காகவே" என்றொரு வறட்டுக்கூச்சல் கேட்டது போல இன்னமும் சிலர் ஆய்வு, ஆய்வுக்காகவே என்று வெகு மக்களோடு தொடர்பில்லாத ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். ஆய்வுகளுக்கென்றே ஒரு செயற்கையான மொழியை உருவாக்கிக்கொண்டு எழுதிவருகின்றனர். மறுபுறத்தில் பட்டங்களுக்காக ஆய்வுரை எழுதுபவர்கள் சமூகத்தில் எந்தப் பயன்பாடும் இல்லாத பல்வேறு ஆய்வுகளைச் செய்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆய்வு என்பது பட்டம் பெறுவதற்காகவே. 
ஆனால் மரியாதைக்குரிய அண்ணன் கவிஞர் நா.முத்துநிலவன், தமிழ் இலக்கியம் குறித்துச் செய்துள்ள ஆய்வுகள் அர்த்தச்செறிவுமிக்கவை. இலக்கியத்தின் அடர்த்தியை மட்டுமல்ல, அதன் ஆன்மாவையும் கண்டுணர்ந்து சொல்பவை. 
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் நன்கறிவேன். பொது வாழ்விலும், சொந்த வாழ்விலும் சேர்ந்து சிரிக்கிற வாய்களில் ஒன்றாக மட்டுமின்றி, துவண்டு விழும் போது சாய்ந்து அழும் தோளாகவும் அவர் எனக்கு இருந்து வருகிறார்.
பள்ளியில் தமிழாசிரியப் பணியை நிறைவு செய்துள்ள அவர் தன்னுடைய பணிக் காலத்தில் ஏராளமான மாணவர்களை உருவாக்கியுள்ளார். கவிஞர், நாடறிந்த பேச்சாளர், பாடகர், அறிவொளி இயக்க்க் களப்பணியாளர், ஆய்வாளர் என, பன்முகத் தன்மையோடு இயங்கி வந்துள்ளது அவரது வாழ்க்கைப் பயணம். 
"கம்பன் தமிழும், கணினித் தமிழும்" என்ற தலைப்பில் பல்வேறு காலச் சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.  தமுஎகசவின் கவிதைப் பயிலரங்குகளில் ஒரு ஆசிரியராக பங்கேற்று கவிதையின் ஆழ, அகலங்களை தெளிவாக எடுத்துச் சொல்லும் திறன் பெற்றவர் அவர்.
அந்த வகையில் “இன்றைய தமிழில் பெண் கவிகள்“, புதுக்கவிதை, வரவும்-செலவும்“, காலங்களில் அவன் வசந்தம்“,ஜெய பாஸ்கரனின் கவிதைகளில் கெட்ட வார்த்தைகளா?“, “மரபுக்கவிதையெனும் மகாநதி வற்றிவிட்டதா?, கணினியில் வளரும் தமிழ்“ உள்ளிட்ட கட்டுரைகள், தமிழ்க்கவிதை குறித்த அவரது ஆழமான ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளன. 
மார்க்சிய இயங்கியல் எனும் வெளிச்சத்தில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் அணுகுமுறை இன்றைக்கு அறிவியல்பூர்வ அணுகுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, அருணன், ஆ.சிவசுப்பிரமணியம், கோ.கேசவன், அ.மார்க்ஸ், ந.முத்துமோகன், ச.செந்தில்நாதன் என, மார்க்சிய இலக்கிய ஆய்வாளர்களின் பட்டியல் நீளமானது. அந்தப் பபட்டியலில் இடம் பெற்றுள்ள நா.முத்துநிலவன், தமிழ் மரபு அறிந்தவராகவும், மார்க்சிய அறிவு நிறைந்தவராகவும் இருப்பதால் இரு கண்களின் வழியாக ஒரே பொருளை பார்ப்பது போல தன்னுடைய ஆய்வு கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளார். 
“இன்றைய தமிழில் பெண் கவிகள்“ என்ற கட்டுரையில் தமிழகத்து ஒளவை முதல் ஈழத்து அவ்வை வரை பறவைப் பார்வையாக ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். காதல் என்பது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால், ஆண்கள் பாடுவது போல காதலைப் பெண்கள் பாடமுடியவில்லை. சங்ககாலப் பெண்பாற் புலவர்களுக்கு காதல் உணர்ச்சியை பாடுவதற்கு இருந்த சுதந்திரம் பின்னாளில் பறிக்கப்பட்டது. ஆண்டாள்கூடத் தன்னுடைய காதல் உணர்ச்சியை ஆண்டவன் மீது ஏற்றித்தான் பாடவேண்டியிருந்தது. காதல் உட்பட அனைத்து உணர்ச்சிகளையும் பாடுபவர்களாக இன்றைய பெண் கவிஞர்கள் வளர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் வளர்ச்சியாகும். தமிழை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையும் முன்னேற்றுவதில் பெண்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார் நா. முத்துநிலவன். 
"சங்க இலக்கியமும், தமிழ் சமூக வரலாறும்" என்ற ஆய்வு தனியொரு பெரு நூலாக விரிக்கத்தக்கது. தமிழ்இலக்கிய வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் பலரும் கால வரிசைப்படியே எழுதியுள்ளனர். ஆனால் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மனித சமூக வளர்ச்சியை ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம், அடிமைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவச்  சமுதாயம், சமத்துவச் சமுதாயம் என வகைப்படுத்தியுள்ளது. இந்தச் சமூக அமைப்புகளுக்கான சான்றுகள் தமிழின் சங்க இலக்கியத்தில் இருப்பதை மிக நுட்பமாக ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காவியமே மன்னர்களாக இருந்த நிலவுடைமையாளர்களுக்கும், புதிய வர்க்கமாக வளர்ந்த வணிக வர்க்கத்திற்கும் நடந்த மோதலின் விளைச்சல்தான் என்று தொ.மு.சி.தன்னுடைய 'இளங்கோவடிகள் யார்' என்ற நூலில் எழுதியிருப்பார். நிலவுடைமைசார் மதமாக சைவ, வைணமும், வணிகம்சார் மதமாக சமண, பவுத்த மதங்களும் இருந்தன. ஆதிப் பொதுவுடைமைச் சமூக எச்சங்களைச் சங்கப்பாடல் சிலவற்றில் காணமுடியும். நிலவுடைமை கெட்டிப்பட்டுப் பேரரசுகள் தோன்றிய நிலையில்தான் பெருங்காப்பியங்கள்  எழுதப்பட்டன.
க.நா.சு, ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகள் குறித்தஆய்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜனசக்தியில் துவங்கிய ஜெயகாந்தனின் பயணம், ஜெய ஜெய சங்கர வரை சென்றதை  அவருடைய படைப்புகளின் வழியாக ஆய்வு செய்துள்ளார். அதேபோன்று க.நா.சுவின் இலக்கிய மற்றும் ஆய்வுக் கொள்கை அணிநலன் பாராட்டுதல் மட்டும் சார்ந்தது அல்ல, அடிப்படையில் மக்கள் இலக்கியத்தை மறுதலிப்பது என்பதை நிறுவியுள்ளார். 
பாட்டுப் போட்டி ஒன்றில் மகாகவி பாரதியாருக்கு இரண்டாம்பரிசு மட்டுமே கிடைத்தது என்பதை ஒரு தகவலாக மட்டுமே அறிந்து வந்துள்ளோம். அப்படி என்றால் முதல் பரிசு பெற்ற பாடல் எது, அதை எழுதியவர் யார், என்று தெரியாது. முத்துநிலவனுக்கு ஏற்பட்ட அந்தக் கேள்வியும் ஆர்வமும் முதல் பரிசு பெற்ற பாடலைக் கண்டறிந்து சொல்வதோடு அது முதல் பரிசுக்குத் தகுதியுள்ளதுதானா என்ற கேள்வியையும் எழுப்புவதாக அமைந்துள்ளது. 
மனப்பாடத்தேவையோடு சேர்ந்ததுதான் மரபுக்கவிதைக்கான அவசியமும், ஆனால் இலக்கணக் கரைகளுக்குள் பாய்வதாலேயே அந்த மகாநதி வற்றிவிட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னமும் ஆற்றலோடு ஊற்றெடுக்க வேண்டியுள்ளது. மரபா,புதிதா என்பதைவிட அதன்வழி சொல்லப்படுவதுஎன்ன என்றகேள்வி மிக முக்கியமானது.
இந்த நூலில் மகுடமாக அமைந்துள்ள ஆய்வுகளில் ஒன்று "கம்பனும், கார்ல்மார்க்சும்" மார்க்சியம் என்பதே மேற்கத்திய இறக்குமதிச்சரக்கு என்று சில சனாதனவாதிகள் சாதிக்கிறார்கள்.  ஆனால் சமத்துவச் சமூகத்திற்கான ஏக்கம் தமிழ்க் கவிதைகளில் நீண்ட காலமாகவே பாலிடை நெய்யாக இருந்து வந்துள்ளது. “அறம் வெல்லும், அல்லவை தோற்கும்“ என்பதே கம்பனின் காவிய நெறியானால்,அறம் வெல்ல உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்“ என்ற மாமேதை மார்க்ஸ் சொன்னது நடந்தேற வேண்டும் என்கிறார் நா.மு. கம்பனும் கார்ல் மார்க்சும் வாழ்ந்த காலமும் சூழலும் வேறுவேறு.  ஆனால் அவரவர் காலத்திற்குகேற்ப மானுட மேன்மையையே அவர்கள் நாடியுள்ளனர். 
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இன்றைக்கு கணினியின் வழியாக கண்டங்களைத் தாண்டிப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மீது எத்தனையோ படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆனால் அந்த ஆட்சியாளர்களையும் தனக்கு சேவை செய்யவைத்த பெருமை தமிழுக்குண்டு. இன்றைக்கு கணினியும் தமிழின் முன்னால் கைகட்டி நிற்கிறது. 
தமிழ் மரபும், மார்க்சிய் ஆய்வுநெறியும் சரிவர அறிந்த நா. முத்துநிலவன், இன்னும் ஏராளமான நூல்களை எழுதவேண்டும்.அவர் தனது பணிஓய்வுக்காலத்தைத் தமிழ்ப் பணிக்கான முழு வேலைக்காலமாக கொள்ள வேண்டும். இது ஒரு தம்பியின் பணிவான வேண்டுகோள்.
அன்புடனும், தோழமையுடனும்                         
மதுக்கூர் இராமலிங்கம்           “தீக்கதிர்“-நாளிதழ் பொறுப்பாசிரியர்
14-08-2014                       மதுரை-18

---------------------------------------------------------------------------------------------

நா.முத்துநிலவன் நூலுக்கு முனைவர் பா.மதிவாணன் அவர்களின் அணிந்துரை

முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.
நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும்  கம்பன் தமிழும் கணினித் தமிழும்’ இலக்கியச் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை     
------------------------------ 
       நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் மனம் அசை போடுவதைச் சற்றேனும் பதிவு செய்யாமல் இந்த அணிந்துரையை எழுத இயலாது.
                ஒன்றன் அருமையை நெருக்கடியில் தான் உணர முடியும்.  இந்திய வரலாற்றில் சனநாயகத்தின் அருமையை நெருக்கடி நிலைக் காலத்தில் (நுஅநசபநnஉல 1975-1976) உணர முடிந்தது.  அப்போது எனக்கு வயது பதினெட்டு. அரசியல் செய்திகளில் அடங்கா ஆர்வம் பிடர்பிடித்து உந்தியது.  மறுபுறம் என் இலக்கியக் கல்விவழித் தேடலில் நா. வானமாமாலை, க. கைலாசபதி, கோ. கேசவன் முதலியோரின் ஆய்வுப் போக்கிற்கு ஆட்பட்டேன்.  இவற்றால் அன்றைய இடதுசாரி இயக்கம் சார்ந்தேன்.
                1980களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டபோது அதில் இளைஞர்களின் ஈடுபாட்டையும் விறுவிறுப்பான செயலாற்றலையும் உளந்திறந்த தோழமையையும் ஏக்கத்தோடு எண்ணிப் பார்க்கிறேன்.
                புறத்தும் அகத்தும் நேர்ந்த பெருத்த மாறுதல்களால் தோழர்பலரும் வௌ;வேறு கிளை வழிகளில் பிரிந்தனர்.  சிலர் வேறு அமைப்புகளில் இணைந்தனர்.  சிலர் புதிய அமைப்புகளை உருவாக்கினர்.  சிலர் புதிய கருத்து நிலை சார்ந்தனர்.  சிலர் ஒதுங்கிப் போயினர்.  என்றாலும் அன்றைய கட்சி வறட்டுத்தனமுடையோர் சிலர் தவிர்ந்த தோழர் பலரிடம் இன்றும் தொடரும் நட்பின் அடையாளம் இந்த அணிந்துரை.
                ஆசிரியப் பணியைத் தொண்டாக மேற்கொள்ளுதல், சமூக அக்கறையோடு அழகியல் நயங்குன்றாக் கவிதையாக்கம், நுட்பமானவற்றையும் சுவைபட எளிமையாய் இயம்பும் பேச்சாற்றல், பாடுதற்கமைந்த குரல்வளம், எழில்மிகு ஓவியத் திறன், இயக்கப் பணிகளில் இடையறாது உழைத்தல், அரவணைப்போடு அமைப்புகளை உருவாக்கி நடத்துதல், கணினியின் புதிய தொடர்புச்சாத்தியங்களை உள்வாங்கி உலகளாவிய நிலையில் உலவுதல் இத்தனைக்கும் இடையே இன்முகம் மாறாதிருத்தல் - இவையனைத்தும் இயைந்த அரிய ஆளுமையாளர் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள்.
                அகவையால் மட்டுமன்றி வேறுபல வகைகளிலும் மூத்தவராகிய முத்துநிலவன் தம் நூலுக்கு அணிந்துரை தரும் வாய்ப்பை எனக்கு நல்கியிருப்பது அவரது அன்பின் பொருட்டேயாகும்.  நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.
                தமிழறிந்தோரின் வசதிகளுள் ஒன்று, செவ்வியல் இலக்கியம் முதல் இடையறாமல் தொடரும் இலக்கிய வகைகள் பலவற்றைத் தமிழ் வழியாகவே துய்க்க முடிவது.  இதுவே தமிழின் தலையாய சிறப்பென்பேன் நான்.
                மரபுவழித் தமிழ்க் கல்வி ஒரு காலத்தில் - நவீன இலக்கியங்களை அலட்சியமாகப் பார்த்தது.  நவீன இலக்கியப் படைப்பு ஃதிறனாய்வுகளில் ஈடுபட்டவர்கள் மரபிலக்கியங்களைப் பண்டிதச் சரக்கென்று ஒதுக்கினார்கள்.  மிகச் சிலர் விதி விலக்காயிருந்தனர்.  இவ்விதி விலக்குகளின் விரிவுக்குத் தமிழக மார்க்சியரே அடித்தளம் அமைத்தனர் என்பது வரலாற்றுண்மை.  இவ்வழியில் இயங்கும் முத்துநிலவன் மோனை கருதி, ‘கம்பன் தமிழும் கணினித் தமிழும்எனத் தலைப்பிட்டிருந்தாலும் கபிலர் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தோய்ந்த தம் சிந்தனைகளைக் கட்டுரையாக்கியிருக்கிறார்.
                ‘காலத்தை மீறிய கவிதைகள்எனும் கட்டுரை தமிழ்க் கவிதை உள்ளடக்க உருவ மாற்றங்களைச் சமூக மாற்றப் பின்னணியில் வைத்துச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
                ‘சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரை, சங்க இலக்கியங்கள் கொண்டு மார்க்சிய நோக்கில் வரலாற்றை எழுதும் வாய்ப்பைச் சான்றுகளால் புலப்படுத்துகிறது.
                திருக்குறள் முற்றிலும் காலங் கடந்த நூலில்லை என்றாலும் இன்றளவும் ஏற்றிப் போற்றப்படுவதற்கான நியாயங்களை, ‘திருக்குறளில் தமிழும் இல்லை தமிழ் நாடும் இல்லை ஏன்?’ என்கிற கட்டுரை குறள் கூறாமல் உணர்த்தியவை எனும் நோக்கு நிலையில் நின்று - விளக்குகிறது.
                ‘திருக்குறளில் பாடபேதம்!?’ எனும் கட்டுரை கல்விப்புலம் சார்ந்த விவாதக் கட்டுரை.  சீர்களை எழுத்தளவில் காண்பதும் ஓசையளவில் உணர்வதுமாகிய வேறுபாடும் கருதப்பட வேண்டுமென்று தோன்றுகிறது.
                ;கம்பனும் கார்ல் மார்க்சும்’, ‘செம்மொழி மாநாடும் கம்பனும்;’ ஆகிய கட்டுரைகளில் கம்பனை முற்போக்காளர் காண வேண்டிய கோணம் காட்டப்பட்டுள்ளது.  ஜீவா, ரகுநாதன், எஸ்.ஆர்.கே., க.வீரையன் நூல்கள் இவ்வகையில் படிக்கத் தக்கன.
                தமிழில் இலக்கிய விருதுகள்ஃபரிசுகள் பெரிதும் விவாதத்திற்குரியனவாகவே இருந்து வந்திருக்கின்றன் வருகின்றன.  அரசாதரவு பெற்ற கவிச்சக்கரவர்த்திகள் மக்கள் மனத்தில் இடம் பெறவில்லை.  கம்பனுக்கே அந்த இடம் நிலைத்தது.  விவாதமற்ற சாகித்திய அகாதெமி விருது தமிழில் அரிது.  பாரதிக்கு முதல் பரிசு கிட்டாமை பற்றிய ஆய்வில் பொதுவாகத் தமிழ்ச் சமூக மனப்பான்மையையும் புலப்படுத்துகிறார் முத்துநிலவன்.
                திரைப் பாடல்கள் கவிதைகளல்ல என்போரையும் திகைக்க வைத்தவர் கண்ணதாசன்.  படத்தின் பகுதியாகவன்றித் தனிக் கவிதைகளாகக் கண்ணதாசன் பாடல்கள் பல, தம்மைத் தக்கவைத்துக் கொண்டன.  முத்துநிலவன் கண்ணதாசனின் வெகுசன ஈர்ப்பு எழுத்தாற்றலையும், அனுபவம் பதிந்த பாடல்;களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
                ‘புதுக் கவிதை வரவும் செலவும்என்கிற கட்டுரையில் ஒருபுறம் புதுக்கவிதையைப் பழம் பண்டிதம் மறுதலித்ததையும் மறுபுறம் புதுப் பண்டிதம் அகமன இருட்டுக்குள் தள்ளியதையும் விமரிசிக்கும் முத்துநிலவன் புதுக் கவிதை வடிவத்தை முதலாளித்துவச் சனநாயகத்தின் விளைவாகவும் அதன் உச்சக் கட்டத்தில் சமூகச் சமத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகவும் காண்கிறார்; வரவேற்கிறார்.  அதே வேளையில் மரபுக் கவிதை எனும் மகாநதி?’  என்கிற கட்டுரையில் மரபுக் கவிதைகளின் உயிர்ப்பையும், தொடர்ச்சியையும் அடுக்கடுக்கான சான்றுகளால் புலப்படுத்தியிருக்கிறார்.
                ‘இடக்கரடக்கல்தமிழுக்கு மட்டும் உரியதன்று. ஆங்கிலம் போன்ற மேலை மொழிகளிலும் இம்மரபு உண்டு.  இலக்கியத்தில் - குறிப்பாகக் கவிதையில் - இடக்கரடக்கற் சொற்கள் அவ்வப் படைப்பைப் பொறுத்து ஆற்றல் பெறும்.  அதே வேளையில் வலிந்து புகுத்தும் அதிர்ச்சிகளும் பொறுப்பற்ற அள்ளித் தெளிப்புகளும் தரமாகவே காலாவதியாகிவிடும்.  (இடக்கரடக்கல் அல்லாத சொற்களுக்கும் இது பொருந்தும்
                ஜெய பாஸ்கரன் கவிதையொன்றில் மயிரான்என்ற சொல் வருவதைத் தவிர்த்து மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் என்கிற திருப்பூர் கிரு~;ணனின் கருத்தை மறுத்துச் சான்றுகள் பல காட்டி விவாதிக்கிறார் முத்து நிலவன்.
                இன்குலாபின் மனுசங்கடாபாட்டைக் கே.ஏ. குணசேகரன் குரலில் கேட்டபோது நாங்க எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்கஎன்கிற அவலமும் ஆவேசமும் எங்களை உலுக்கின.  இங்கே வேறு எந்த சொல்லும் பொருந்தாது.  முத்து நிலவனும் இதனைச் சுட்டியுள்ளார்.  இத்தொடர்பில் மேலும் ஆர்வமுள்ளோர் பெருமான் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம்எனும் நூலைப் படிக்கலாம்.
                ‘இன்றைய தமிழில் பெண் கவிகள்என்று தலைப்பு இருந்தாலும் சங்ககால ஒளவையை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த காலகட்டத்துப் பெண் கவிகளின் போக்கையும் சுட்டிக் காட்டிய பின்பே தலைப்புக்கு வருகிறார் முத்து நிலவன் ; ‘பெண் கவிஞர்எனும் அடைமொழியின் நியாயத்தை முதலியேயே சொல்லி விடுகிறார்.
                பெரிதும் 1980களில் எழுச்சி பெற்று இரண்டாயிரத்தை யொட்டித் தொகுப்புகள் மிகுந்து வரும் பெண் கவிஞர் படைப்புகளில் அவர்தம் தனித்த அடையாளங்கள் மிளிர்வதைக் கவிதைச் சான்றுகளால் நிலுவியுள்ளார் முத்துநிலவன்.
                ‘ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்என்கிற கட்டுரை ஜெயகாந்தனின் மணிவிழாக் கால மதிப்பீடு.  அதற்குப் பின் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்க எதையும் எழுதாமையினால் அது முழுமையான மதிப்பீடாகக் கொள்ளத் தக்கது.  வணிகஃவெகுசன இதழ் உலகில் எழுத்தாளனின் கம்பீரத்தை நிறுவியவர் ஜெயகாந்தன்.  வெகுசன இதழ்களால் புகழ் பெற்று, அவற்றுக்கேற்ப தமக்கெனத் தனித் தன்மையையும் தக்க வைத்துக் கொண்டு எழுதிய ஜெயகாந்தனின் சாதனைகளையும் சமரசங்களையும் சீர்தூக்கிக் காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரையின் உள்ளடக்கச் சிறப்பு ஒருபுறமிருக்க, ஜெயகாந்தன் பாத்திரங்கள் தமக்குள் உரையாடுவது போல் தொடங்கி, இடையில் தாம்புகுந்து பேசி, நிறைவாக அப் பாத்திரங்களின் உரையாடலோடு முடிக்கும் உத்தி சுவையும் பொருத்தமும் புதுமையும் மிக்கது. 
                தமிழிலக்கிய விமர்சன வரலாற்றில் க.நா.சு.வுக்குத் தவிர்க்க முடியாத தனியிடமுண்டெனினும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்.
                தம் பரந்த படிப்பால் பயமுறுத்தி, பட்டியல்களையே அவ்வப்போது மாற்றி விமர்சனமெனக் காட்டியவர் க.நா.சு. என்கிற முத்துநிலவனின் மதிப்பீடு உணர்ச்சி வயப்படாதவர்கள் கணக்கில் கொள்ள வேண்டியதாகும்.  க. நா. சு. கருத்துநிலை எதனையும் சாராத தூய இலக்கிய வாதியுமல்லர் என்பதைக் க.நா.சு.வின் எழுத்திலிருந்தே காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரை குறித்து சுபமங்களாவில் வந்த ஏற்பு எதிர்ப்புகளையும் தொகுத்துத் தந்திருப்பது நாகரிகம் மட்டுமன்று; சனநாயக முறையுமாகும்.
                தமிழ்ச் சிறுகதைகள் வகைமைவளம் (varients) மிக்கவை.  சில கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எதிரும் புதிருமான விமர்சகர்களாலும் ஏற்கப்பட்ட உண்மை.  இந்த வரலாற்றில் முற்போக்கான நடப்பியக் கதைகளால் தமக்கென ஓரிடம் பெற்றிருப்பவர் மேலாண்மை பொன்னுசாமி என்கிறார் முத்துநிலவன். என்றாலும்  குழு மனப்பான்மை கடந்து விமர்சனமாகக் குறை சுட்டவும் அவர் தயங்கவில்லை.
                ஊடக மாற்றங்களுக்கேற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கு அண்மைக் காலச் சான்று கணினித் தமிழ்.  இது மேலும் செம்மையும் செழுமையும் உற வேண்டுமென்பதைக் கணினியில் வளரும் தமிழ்என்கிற கட்டுரை காட்டுகிறது.
                உள்ளடக்கத்தால் மட்டுமன்றி உணர்த்து முறையாலும் இக்கட்டுரைகள் வாசகனை இன்முகம் காட்டி அழைத்துச் செல்கின்றன.
                ஜெயகாந்தன் மதிப்பீட்டுக் கட்டுரை உத்தி பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
                “அறிவியலின் படி வேண்டுமானால் ஆலமரம்தான் விழுதுவிடும் என்று கூறலாம்.  ஆனால் தமிழ் இலக்கியவுலகில் அரச மரம்தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறதுஎன்று ஒரு கட்டுரை தொடங்குகிறது.  எப்படி? படித்துப் பாருங்கள்.
                “கம்பனை மட்டுமல்ல ஆண்டாளையும் ஓவியர் உசேனையும் நாடு கடத்துவதும் அல்லது ஏடு கொளுத்துவதும் ஒன்றுதானேஎனும் வாக்கியத்தில் இயல்பாக நடைபோடுகிறது எதுகை.
                இன்னும் பல இடங்களைக் காட்டலாம்.
                ஆய்வாழமும் நுட்பமும் மிக்கவற்றை வெகு மக்களிடம் அநாயாசமாகக் கொண்டு செல்லும் எழுத்தாற்றல் கைவரப் பெற்றவர் கவிஞர் முத்து நிலவன் என்பதற்கு இக்கட்டுரைகள் சான்று பகர்கின்றன.  அதே வேளையில் அடுத்த கட்டத்திற்கு வாசகனை உந்தித்தள்ளவும் வேண்டும்.  இந்தத் தெளிவும் இவரிடம் இருக்கிறது என்பது சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரையின் இறுதியில் புலனாகின்றது.
                மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்பவர்கள் - தமிழிலக்கிய ஆராய்ச்சியாளவில், எனக்கு எட்டியவரை மார்க்சிய அணுகுமுறை தந்த தெளிவைத்தாண்டிப் பெரிய அளவில் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்களிடம் தமிழ் உலகம் மேலும் எதிர்பார்க்கிறது.
நட்பார்ந்த தோழமையுடன்
பா.மதிவாணன்,                                  
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி - 620 024
------------------------------------------------------------------------------ 

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை



நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை -
(“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்)
--------------------------------------------------------
எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்
       கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.
ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார்.தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப்பரிசு  என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அதுவும்மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசுஎன்பதை அவர் சொல்லவில்லை ,நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.
        புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது.புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது.அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை.அவர்களின் ஊக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.
         சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேசும் கட்டுரை ஓர் அரிய வகைக்கட்டுரை.சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது.சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்த்து என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் “கொலை“ சிறுகதையை முன் வைத்து அவர் நட்த்தும் கருத்துப்போர், ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.
       இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சு.வை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்வி கேட்கும் கட்டுரை. க.நா.சு.  பிறநெது நூற்றாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கநாசு அளித்துள்ள  கொடைகளையும் அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும் அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்ட்த்தக்கது.
        இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது.தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார்.முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயக நாயகிகள் கங்காவும் சாரதா மாமியும் கௌதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார்.விமர்சன்ங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
         கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிர புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.
         இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச்செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.சிறு சிறு செய்யுள்களாகத்துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும் காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாக்க் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில்  ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும் இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும்  ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள்தாம். 
         இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.
பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
15.08.2014
சிவகாசி
------------------------------------- 
என்ன செய்ய? வெளியீட்டு விழா தள்ளிப்போய்விட்டது. அடுத்தடுத்து முகவுரை, அணிந்துரைகளை எடுத்துப் போட்டு ஒரு மாசத்தை ஓட்டணும்ல..? படிக்கிறவங்க அப்படியப்படியே கருத்தைப் பதியலாம். ஏற்கெனவே சில வலைப்பக்கக் கட்டுரைகளுக்கான பின்னூட்டக் கருத்துகளை நூலில் சேர்த்திருக்கிறேன்.. அதெல்லாம் யார்யாருன்னு இப்பச் சொல்லக்கூடாதில்ல...? புத்தகம் வரட்டும். தெரிஞ்சிக்கலாம்
----------------------------------நா.மு.-- 04-09-2014---- 

விருந்து தயாரா இருக்கு.. கொஞ்சம் பொறுங்க..



அழைப்பிதழ் வந்தாச்சு..
புத்தகங்களும் வந்தாச்சு..
அனுப்பத் தயாரான போது 
வந்தது ஒரு தகவல்!
இவற்றோடு எங்கள் ஊரில் 
நகராட்சித் தேர்தலும் வந்ததாக...





ஆக, செப்டம்பர்-7ஆம் தேதி நமது 
புத்தக வெளியீட்டு விழா இல்லை!

சிறிதுநாள் காததிருக்க வேண்டி உள்ளது

அதே அழைப்பிதழின்படி, (நாள்மட்டும் மாற்றி) 
நமது விழா உறுதியாக சிறப்பாக நடக்கும்.

தேர்தல் திருவிழா முடிய ஒருமாதம் எடுக்கும்.
எனவே நமது விழாத் தேதியை விரைவில் தெரிவிப்பேன்.
நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------