இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது இரண்டு கட்டுரைகள் (10-3-2023, 11-5-2023)

     இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த எனது இரண்டு கட்டுரைகள்

நண்பர்களின் கருத்தறிய ஆவல் 

– நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

----------------------------------------------- 

(1)

உட்கார்ந்து விளையாடாதே 

பாப்பா!

(வெளியீட்டுக்கு நன்றி - இந்துதமிழ் - நாள் –மார்ச்10, 2023)

 நா.முத்துநிலவன் -

உனக்கு என்னென்ன விளையாட்டுகள் பிடிக்கும்?” என்ற ஆசிரியரின் கேள்விக்கு,  செஸ்,  கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து”   என்று அந்த 10வயதுச்  சிறுவன் சொன்னதைக் கேட்டு வியந்துபோனார்!

இத்தனை விளையாட்டா? சரி, இதெல்லாம் எங்கே விளையாடுவாய்?” என்ற அடுத்த கேள்விக்கு, ஏன்..? ஆன்-லைன் கேம்ஸில்தான்என்ற பதில் கேட்டு உறைந்து போனார்.  சிறுவன் மேலும் சொன்னான், உதைத்தல்,வெட்டுதல்,சுட்டுக்கொல்லுதல்,   ஏறி மிதித்தல் (டபிள்யூ டபிள்யூ எஃப்) எல்லாம் எனக்குப் பிடித்த விளையாட்டுகள் என்றவுடன் அவர் மயக்கம் போடாத குறைதான் போங்கள்!

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதி, இன்றிருந்தால், நீ உட்கார்ந்து விளையாடாதே பாப்பா என்றுதான் அடுத்தவரி எழுதியிருப்பார்! பதினைந்து வயதிற்கு உட்பட்ட நம் குழந்தைகள், இப்போதெல்லாம் தெருவில்போய், மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை மறந்தே போய் விட்டார்கள்!

ஓரிடத்தில் உட்கார்ந்தே கேம்ஸ் விளையாடுவதால் வரும் உடல்நலச் சிக்கல்கள், கண்கள் பாதித்து குழந்தைப் பருவத்திலேயே கண்ணாடி போடும் நிலை! வயதை மீறிய உடல்-எடை!   தூக்கமின்மை!  எப்போதும்  எரிச்சலுடன்  காணப்படுதல்! பொறுமையின்மை! படிப்பிலும் உணவிலும் கூடஅலட்சியம்எல்லாவற்றிலும் அவசரம்! வீட்டுக்கு வரும் விருந்தினரோடு பேசி மகிழாமல் ஒதுங்கியிருத்தல் மற்றும் முக்கியமாக, சிறுமிகள் பத்து வயதில் அல்லது அதற்குள்ளாகவே பருவமடைதல் என, சிந்திக்கவே அச்சமாக இருக்கிறது!  

    முறையான வயதில் பருவமடைய உணவுப் பழக்கம்வாழ்க்கை முறை மற்றும் பரம்பரையும் காரணமாகின்றன`தாய்ப்பாலை அதிக நாள் அருந்திய குழந்தைகளுக்குப்  பூப்படைதல் சரியான வயதில் நடைபெறும் பள்ளிகளிலும் வீடு திரும்பிய பின்னர் மாலை வேளைகளிலும்ஓடியாடிவிளையாடும்படிஊக்கப்படுத்துங்கள்.  என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தையின் முதல் விருப்பம், இனிப்போ, ஆசிரியரோ அம்மா-அப்பா நண்பர்களோ கூட அல்ல!  புதியன காண்பது தான்!  கிடைக்கும் எதையும்  எடுத்து வாயில்வைப்பதன் காரணம், “அது என்ன?”   என அறியும்   ஆவல்தான்

குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் கையில் செல்பேசியைக் கொடுத்துவிடுவது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம், ஆனால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு நிரந்தரமான கேடு! குறிப்பாக இருவரும் வேலைக்குச் செல்வோராக இருக்கும் வீடுகளில், பணம் இருக்குமாம், குழந்தைகளுடன் செலவிட நேரமிருக்காதாம்! அது மாதிரியான வீட்டுக்  குழந்தைகள்  செல்பேசியில்  புழங்குவது  அதிகரித்து வருகிறது.  இதற்குத்  தாயை மட்டுமே   குற்றம் சொல்வது நம் சமூக வழக்கம்! இருவருக்கும் பொறுப்புள்ளதை சாமர்த்தியமாக மறைக்கிறது நமது சமூகம்.

மெலடி எனும் மெல்லிசைக்கு மாறாக, சத்தமான குத்துப் பாட்டு கூட  குழந்தைகளின் ரசனையை மாற்றி, நடத்தையையும் மாற்றிவிடக் கூடும்  என்பது  அன்புக்குப் புரியாது, ஆனால் இது அறிவுக்குப்  புரிய வேண்டும்.  தொலைக்காட்சிகளின்   சில   குழந்தைகள் நிகழ்ச்சிகள் கூட குழந்தைமைக்கு எதிரானது தான் என்பது, நம் அறிவிற்கு எட்டாதபடி சாமர்த்தியமாக நடத்துகிறார்கள் வணிகர்கள்! பள்ளி விழாக்களில் பதிவிசைக்கு நடனம் ஆடக் கூடாது என்ற அரசாணையை எந்தப் பள்ளியும் கண்டுகொள்வதில்லை!

தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்தாமல் முன்னேற்றம் இல்லைதான். ஆனால், அது, குழந்தைகளின் வளர்ச்சியில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, கல்வித்திட்டம் வர வேண்டும்.  

ஆபாசத் தளங்களைப் பற்றிக் கவலைப்படுகிறோம் சரிதான். அதைவிடவும் ஆபத்தான, மூடநம்பிக்கை பரப்பும் தொலைக்காட்சித் தொடர்களையும், வன்முறைகள் பெருகி வழியும் திரைப்படங்களையும், அர்த்தம் கெட்ட டிக்-டாக்  உள்ளிட்ட   காணொலிகள்,   முகநூல்,  இன்ஸ்டாக் களையும் பார்க்கும் பெற்றோர்கள், “என்குழந்தை   இப்படி இருக்கிறதே!”  என்று  கவலைப் படுவதில்  அர்த்தமென்ன  இருக்க முடியும்?

செய்தித் தாள்களைக் கூட,  செல்பேசியில்  பார்க்காமல்,  வீட்டில்  வாங்கிப்  படிக்கும் பழக்கமுள்ள பெற்றோரைப் பார்த்துத் தானே  குழந்தையும்  வாசிப்பை நேசிக்கும்?   பெற்றோர்தானே   குழந்தைகளின்   முன்மாதிரி? நாம் நடக்கும் பாதையில்தான் அவர்கள் ஓடுவார்கள் என்கிற அறிவு வேண்டாமா?  

வீட்டுக்குள் விளையாடும் செஸ், தாயம், பரமபதம்,  பல்லாங்குழி, சொல் விளையாட்டு, தெருவில் ஓடி விளையாடும் கண்ணா மூச்சி, இசை நாற்காலி,  பம்பரம்,   கிட்டிப்புள்,   பச்சைக்குதிரைகபடிகோலிக்குண்டுதிருடன் போலீஸ் கிளித்தட்டு,   நொண்டி,   தட்டாங்கல்,  பூப்பறித்தல்சைக்கிள் டயர் வண்டி என எத்தனையோ தமிழ்நாட்டுச் சிறுவர் விளையாட்டுகள் உண்டு! இவற்றை மீட்டு, பள்ளிகளில் பழக்கப்படுத்தினால் வீட்டுக்குள் தானாகவே வந்துவிடும்

குழந்தையின் மூளை வளர்ச்சியில் 90விழுக்காடு, அதன் 5முதல்10 வயதிலேயே நிறைவடைந்து விடுகிறது என்பதால் ஆரம்பப் பள்ளியிலேயே வழக்கமான விளையாட்டுகளோடு நமது தமிழ்நாட்டு விளையாட்டு  களையும்,  விளையாடச் செய்தால், மொழி அறிவோடு படைப்பூக்கமும் வளரும்.

மின்-விளையாட்டுகள் தனித்தே நடக்கும், “தானே  என்றான உலகில்  குழந்தைகளைத்   தள்ளுவதுடன்,   விட்டுக்   கொடுத்தல் எனும் உயர் பண்பை அறியாமலே குழந்தைகளை வளரச் செய்துவிடும். கற்பனைக்கு இடமில்லாத வறண்ட, எந்திரத்தனமான குழந்தைமை, ஆபத்தானது. மாறாக பெற்றோருடன் வெளியில் போய்,  பூங்கா,  விளையாட்டு,  நூல்நிலையம்,  இசை  நிகழ்ச்சிகளைப்   பார்த்தல்தான்   குழந்தைக்கு நல்ல பயிற்சியாகும்.

குழந்தைகளைத் தவிர, பெரியவர் பலரும்கூட வேண்டாத இணைய இணைப்புகளில் சிக்கிச் சீரழிந்து, மதியிழந்து மானமிழந்து, பொருளிழந்து கடைசியாக உயிரும் இழந்து  வருவது தனீ கதை!  அது  எல்லாரும்  அறிந்த ரகசியம்தான்! மின்-விளையாட்டுகளில்  தொடங்கும்  நம் குழந்தைகள்  அந்த விபரீதத்தில்   போய் விழமாட்டார்கள்   என்று யாராவது உறுதிதர முடியுமா?

அமெரிக்காவில் ஆறுவயதுச் சிறுவன் தன் தந்தையின் செல்பேசியில், உணவு வழங்கும் செயலி வழியாக ஒரே இரவில் எண்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கிய அதிர்ச்சிச் செய்தி, நம் ஊரிலும் நடக்காது என்று சொல்லமுடியுமா? 

பொதுவாகவே இணையப் புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. இணைய வசதியுள்ள செல்பேசியில், மேசை மற்றும் மடிக் கணினியில் அவசியமற்ற செயலிகள்(ஆப்ஸ்),  மின்-தளங்கள்    குழந்தைக்கு   கிடைக்காத   வண்ணம் மின்-பூட்டு (சைல்டு-லாக்) போட்டு  வைப்பது அவசியம்.  பிறகு  குழந்தைகள்  வளர  வளர,  அந்த மாதிரியான  ஆபத்துகளை  அவர்களிடமே  சொல்லிப்  புரிய வைப்பது மிகமிகவும் அவசியம்.

இதில் செல்பேசி மட்டுமல்லாமல் ஆயிரம் ரூபாயிலிருந்து லட்ச ரூபாய் விலையில் விற்கும் மின்-விளையாட்டு (-கேம்ஸ்)  கருவிகள்  பணத்திற்கு  மட்டுமல்ல  உடல்நலத்திற்கும்  அதைப் பார்க்கும்  குழந்தைகளின்  எதிர்கால  வாழ்விற்கும்    பெருங்கேடு   என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்.  அரசும் கல்வித்துறையும் இதில் அவசியம் உதவ வேண்டும். 

(வெளியீட்டுக்கு நன்றி - இந்துதமிழ் - நாள் –மார்ச்10, 2023)

----------------------------------------------

(2)  

மணமுறிவுக்கு அவசரப்படலாமா?

(வெளியீட்டுக்கு நன்றி - இந்துதமிழ் - நாள் – மே11, 2023

--நா.முத்துநிலவன்

மனித நாகரிகத்தின் முக்கியமான அடையாளம் குடும்ப அமைப்பு! குடும்பம் தான் இன்றைய சமூகத்தின் அடிப்படை அலகு! அதன்பிறகே வீடு-வீதி-ஊர், அதிலிருந்தே வட்டம் மாவட்டம் மாநிலம், நாடு உலகம் எல்லாம்! இந்த அடிப்படை அலகு சிதைவதைப் பார்த்தே கவலை மிகுந்து வரும் சூழலில் 30நாளில் மணவிலக்கு பெறலாம் (இன்ஸ்டண்ட் விவாக ரத்து) என உச்சநீதி மன்றம் வழிகாட்டியிருப்பது அறிந்து பதைபதைக்கிறது நெஞ்சு!

விவாகரத்துப் பெற, இனி ஆறுமாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை, 143ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின் படி, ஒரேமாதத்தில் உடனடி விவாகரத்து” (mutual  consent  - consent divorce) பெற முடியும்.

இன்ஸ்டன்ட் காஃபி போன்றதா, இன்ஸ்டன்ட் விவாகரத்து? என்பதே சமூக அமைதியை விரும்புவோர் நெஞ்சில் எழும் நியாயமான கேள்வி.

 ஒரு மனதாயினர் தோழி! இத் திருமண மக்கள் என்றுமே வாழி!என்பார் பாரதிதாசன். திருமணம் என்பது இருவருக்கான வாழ்க்கை ஒப்பந்தம் என்றாலும் அந்த பந்தம், இருவருக்கானது மட்டுமல்ல, இரண்டு குடும்பங்கள் சம்பந்தப் படுவது! அதனால்தான் மணமக்களின் பெற்றோர்கள் சம்பந்திஆகிறார்கள்! அடுத்தடுத்த தலைமுறைக்கான நாற்றங்கால்தான் குடும்பம். மனிதக் கடமையில் முதன்மையானது மக்கள் பேறு! அது இல்லாமலே திருமணம் செய்து கொள்ளாமலோ, திருமணம் செய்தும் குழந்தைப் பேறு இல்லாமலோ, அல்லது மணவிலக்குப் பெற்றுத் தனியர் வாழ்க்கையோடும் கூட பெரும் தலைவர்கள், பேரறிஞர்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்திருப்பதும் உண்டு என்றாலும் அவர்கள் விதிவிலக்குகளே அன்றி ஒட்டு மொத்த சமூகமும் அப்படி வாழ முடியாது! வாழவும் கூடாது!   

உலகின் தலைசிறந்த வாழ்வியல் அறநூலான திருக்குறள், “அன்பும் அறனுமே வாழ்வின் பண்பும் பயனும்” (இல்வாழ்க்கை குறள்-45) என்றதன் பொருளை, மணவிலக்குக் கோருவோர் சுயமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்த பிறவியிலும் நீயே என் கணவன்“ (குறுந்தொகை-49) என்பது சற்று மிகையாகத் தோன்றினாலும் அன்பின் வழியது உயிர் நிலை அல்லவா?

சரி, மேலை நாடுகளில் குடும்பம் தனியாகவும் கோவில் தனியாகவும் இருக்க, தமிழ்நாட்டில் குடும்பமே கோவிலாக உள்ளதென்றும் அதனால்தான் நாங்கள் தமிழ்ப்பண்பாட்டை நேசிக்கிறோம்என்றும் சொல்லித்தானே நமது அறுபதாம் கல்யாண நிகழ்வை, ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் வெளிநாட்டார் என்று பெருமை பேசுவதும் நாம்தான். இப்போதெல்லாம் குடும்பநல வழக்கு அதிகரித்திருப்பதும் இங்கே தான்! புரிதல்! புரிதல் அல்லவா வாழ்க்கை!

விட்டுக் கொடுப்பதென்றால் நமது சமூகத்தில் பெண்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மனநிலையைத்தான் முதலில் மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி, காட்சி கெடுத்தகாலம் மாறி, “கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனியாகி, கல்விகற்று, தாமே சுயமாகப் பணியாற்றி குடும்பச் செலவைப் பெண்ணும் பகிர்வதில் ஆண்கள் தனது தலைமைப் பதவி பறிபோனது கண்டு ஆத்திரம் கொண்டு, பெண்ணின் சுயமரியாதையை உரசும்போது அவள் தனியாக வாழ்வதே சரிஎன முடிவுக்கு வருவதும் அதிகரித்திருக்கிறது. (மணவிலக்கு கோருவோரில் பெண்களின் விழுக்காடே அதிகம் என்பதன் சமூகக் காரணம் இதுதானே?) அறிவுரைத்து, திருத்த முடியாத சிக்கல்! புரிதல்! புரிதல் அல்லவா வாழ்க்கை? இந்தப் புரிதலை ஆண்களுக்கு அறிவுரைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது!

உலக மொழிகளிலேயே உறவுச் சொற்கள் அதிகமுள்ள மொழி தமிழ்!  Mother in-law, Father in-law போல இடையில் உருவாக்கப்பட்டவை அல்ல இன்னொரு வீட்டில் நடுவதற்காக இங்கு வளரும் நாற்று- நாற்றுஅன்னார் - நாத்தனார், இங்கு பிறந்து தனியே வளரக் காத்திருக்கும் கொழுந்த(ன்)னார் கொழுந்தியாள் போலும் குடும்ப உறவின் நுட்பம் கூறும் சொற்களின் பொருள் தரும் செய்தி என்ன? தமிழர் உறவில் இல்லாத சொற்கள் - Step mother, Step-sister போலப் பலவற்றை இப்போது காண்கிறது உலகம்! இவை பன்னாட்டு மூலதனத்தின் வணிகப் பண்பாட்டு வரவுகள்! ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் அல்லது கணவர் எனும் வாழ்வியலின் வரவே இந்தச் சொற்கள்!     

அதனால், குடும்ப அமைப்பே பெண்ணடிமைச் சேறு நிரம்பிய சாக்கடையாக இருப்பதைப் பற்றி முதலில் கவலைப்பட வேண்டும். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களைச் செய்து கொண்ட பலரும் நரகத்தில் உழலுவதைப் பார்த்தும் பாராமல் இருப்பது நல்லதல்லவே?

நமது கல்வி வாழ்வியலைப் புரிந்து கொள்ளக் கற்றுத் தரவில்லை! எனவேதான், முதல்மதிப்பெண் முதல்தரக் கல்லூரி எடுத்த எடுப்பில் ஆறு இலக்க ஊதியம், அடுத்த ஆண்டு திருமணம் அதற்கு அடுத்த ஆண்டே மணவிலக்குக் கோரி இருவருமாக- விண்ணப்பம் செய்வதும் நடக்கிறது!

சண்டையில்லாத குடும்பம் உப்புச் சப்பற்ற குடும்பம்! எனவே சண்டை போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார் திருவள்ளுவர்! உப்பு அமைந்தற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல் (குறள் –1032) சண்டை தீர்ந்து வரும் சமாதானத்தின் ருசியை உணர்ந்தவர்க்குத்தான் இதன் பொருள் புரியும்!

தாய்ப்பாசம் எனும் பாசாங்கில், சென்டிமெண்ட் வன்முறையில் பலப்பல ஆண்டுகளாகப் பெண்ணுலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இதை மேல்நாடுகளில் புரிந்து கொண்ட அளவுக்கு இந்தியாவில் புரிந்துகொள்ள வில்லை.

குடும்ப நீதிமன்றங்கள் சட்டம்-1984இல் வந்தும் கூட வழக்குமன்றம் வராத குடும்ப வன்முறைகள் அதிகம்! காரணம் பெண்களின் மன ஓட்டம், அதைக் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் ஆணாதிக்கத் தொடர்ச்சி!

நாடு முழுவதும் 763 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. குடும்பநல நீதிமன்றங்கள் இல்லாத ஊர்களில் சார்பு நீதிமன்றங்களே கூடுதல் சுமையாக குடும்ப வழக்குகளையும் நடத்தி வருகின்றன. சமரசம் செய்வதே முதற்பணி. மற்ற நீதிமன்றங்களைப் போல வழக்கு வந்தவுடன் விசாரணையை எடுத்துத் தொடங்கிவிடாமல் உளவியல் ஆலோசனை, மருத்துவ ஆலோசனைகள் என ஒரு தாயைப் போலப் பரிந்துதான் வழக்கை நடத்துகின்றன நீதிமன்றங்கள்.  

என்றாலும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இந்தியாவில் 2005முதல். மனஅளவிலோ, உடல்அளவிலோ காயப்படுத்துவதைத் தடுக்கும் சட்டம். வரதட்சணைத் தடைச்சட்டம்-1961,1968, “சாதிஒழிப்புபோலத்தான் நடைமுறையில் உள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் மணவிலக்கு ---விவாகரத்து-- வழக்கு நடக்கும்போதே, குழந்தைகளை யார்பொறுப்பில் விடுவது என்பதும் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக உள்ளது.

இதையெல்லாம் மீறி, ஓராண்டுப் பிரிவு ஓர் இயற்கை மருந்தாகவும் இருந்தது. இப்போது ஓராண்டுக் கழித்து ஒரே மாதத்தில் கிடைக்கும் எனில் விவாக ரத்துகள் அதிகமாகுமே என்ற கவலை வேண்டாமா?

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம்-2006, குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம் (போக்ஸோ)2012) போன்ற சட்டங்கள் வந்த பிறகும் குழந்தைக் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் விவாக ரத்துப் பெற்றோருக்கும் தொடர்பிருந்தால் வியப்பில்லையே?

மூத்தோர்களின் எதிர்காலம் என்னாகுமோ என்பதும் அச்சம் தருகிறது. வீட்டின் பெயரோ அன்னை இல்லம், அன்னை இருப்பதோ அனாதை இல்லம்என்பது, பன்னாட்டு வணிகப் பண்பாட்டின் அடையாளம் தானே? “பயன்படுத்து, தூக்கி எறி”! தன் கணவரிடம் (அ) தன் மனைவியிடமே விட்டுக் கொடுத்து வாழத் தெரியாதவர்களால் தனது கணவரின் (அ) மனைவியின் பெற்றோருடன் வாழ்ந்துவிடுவார்களா என்ன? இதிலும் ஆண் தன் பெற்றோர் பற்றிப் பொறுப் பெடுக்கும் அளவுக்குப் பெண் தனது பெற்றோரைப் பற்றிப் பொறுப்பெடுக்க முடியாத சமூகம் இது அல்லவா? சட்டத்தைத் தாண்டி சமூக நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?

தன்பாலினத் திருமணங்களுக்குப் பல நாடுகள் சட்ட அனுமதி தந்திருக்கின்றன. தன் கணவன் (அ) மனைவியிடம் பெறாத உறவைத் தன் பாலினத்திடமே பெறும் ஒருவர் அதுவும் கசந்துபோனால்  - மிருகங்களுடன் உறவு கொள்வார்களா?  சட்டம் அனுமதிக்கிறது என்பதற்காக சமூகம் அனுமதிக்காத காரணம் இது எனில் சட்ட அனுமதியைவிட சமூக அனுமதி முக்கியமாகப் படுவது சில நேரங்களில் சரிதானே?

ஏனைய சிவில் வழக்குகள் போல குடும்பச் சிக்கலுக்கான தீர்வு வேண்டி வரும் ஒரு மனுவை ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றம், உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யவோவிசாரணையை விரைவு படுத்தவோ கோருவதில்லை. இருதரப்பினருக்கும் மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர் களைக் கொண்டு முதலில் ஆலோசனை வழங்கப்படுகிறது. அது பலனளிக்காத போது தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படும். எனினும் ஒரு மாதத்தில் மணமுறிவு கிடைக்கும் என்பது ஆபத்தான முடிவு. தவிர்க்க முடியாத சூழல், பெண்ணே கேட்கிறார் எனில் அதற்குச் சிறப்புப் பிரிவு சேர்க்கலாமன்றி மனமொத்துக் கேட்டால் ஒரே மாதத்தில் கிடைக்கும் என்பது குழந்தை விளையாட்டாகி விடாதா? அதிலும் எல்லாவற்றிலும் அவசரம் காட்டும் இந்தத் தலைமுறைக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து, தலைசொறியக் கொடுத்த கதையாகிவிடும்.

எல்லா நேரங்களிலும் மூளை சொல்வதையே கேட்டு வாழ முடியாது. சில நேரங்களில் இதயம் சொல்வதையும் கேட்டுத்தானாக வேண்டும். உச்சநீதிமன்றம் மணமுறிவு தருவது பற்றி, மூளையால் யோசிப்பதைவிடவும் இதயத்தால் யோசித்து முடிவுக்கு வரவேண்டும் 

(வெளியீட்டுக்கு நன்றி - இந்துதமிழ் - நாள் – மே11, 2023

-----------------------------------------------

இடம் கருதி, என்னிடம் பேசி, கட்டுரையின் மையக் கரு மாறாமல், சுருக்கி வெளியிட்ட இந்து தமிழ் ஆசிரியர் குழுவினர்க்கு நன்றி.

நண்பர்களின் கருத்தறிய ஆவல் – நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

----------------------------------------------- 

3 கருத்துகள்:

  1. கருத்தாழம் மிக்க மிக அருமையான பதிவு. இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு ஐயா. காலத்துக்கு தகுந்த அறிவுரை. தாத்தா பாட்டி இல்லாமல் வளரும் குழந்தைகளின் நிலை காரணமாக அவர்கள் உலகில் கால்களை கட்டிபோட்டி உள்ளது கொடுமை தான். சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு