தமிழை விழுங்கும் ‘தமிங்கிலம்!’
--நா.முத்துநிலவன்--
( இந்து தமிழ் நாளிதழில் 04-01-2023 வந்த எனது கட்டுரை)
பேச்சு வழக்கும், எழுத்து வழக்கும் உள்ள மொழிதான் வளரும். அடுத்த தலைமுறை மொழி எப்படி இருக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் மொழியின் வடிவில் கண்டு கொள்ளலாம்.
தமிழ்பேசும் அனைவரிடமும் எழுத்து வழக்கு
ஒன்றாகவே உள்ளது. ஆனால் இளைஞர் செல்பேசி வழக்காக “தமிங்கிலம்” இருப்பதை, கண்டும் காணாமல் இருப்பது தமிழுக்கும்
தமிழர்க்கும் நல்லதல்லவே!
தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், உயர் அலுவலர்களின் செல்பேசித் தொடர்புப்
பெயர்கள் (Contact Names) பெரும்பாலும்
ஆங்கிலத்தில்
இருப்பதைக்
காணலாம். அவர்தம் குறுஞ்செய்திகள், புலனத் தொடர்புகள் மிகப் பெரும்பாலானவை தமிழாங்கிலம் எனும் (தமிங்கிலம்?) கலப்புமொழியில் இருப்பதையும் காணலாம்! “Nee
ippa Enna Thaan da Solla varra? Enakku Puriyala da” எனத் தொடரும் உரையாடல் தமிழ் எழுத்து அழிவின் தொடக்கம்!
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்
சிலர்
எழுதிவைத்த
கடிதங்கள்,
நெஞ்சைச்
சுட்டாலும், அவர்கள் பயன் படுத்தியிருந்த “தமிங்கில” நடை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதே!
தமிங்கிலப் பயன்பாடு அதிகரிக்க, சொற்சுருக்கம் மட்டுமே காரணமல்ல, பன்னாட்டுப் பண்பாட்டுக்கே உரிய “பயன்படுத்து, தூக்கிஎறி” எனும் அலட்சியமும் ஒரு காரணம்! இதில் தாய்மொழியும் தப்பவில்லை! நூறாண்டுமுன் “மணிப்பிரவாள”
நடையை மாற்ற மறைமலை எனும் தமிழ்மலை எழுந்தது! மொழிப்போர்
வரலாற்றையே அறியாதவர்க்கு தமிழியக்க வரலாறு எப்படித் தெரியும்? திரும்பும் வரலாற்றின் முதல்படியாக எழுத்தில் வந்திருக்கும் ஆபத்தை இப்போது யோசிப்போம்.
உலக மொழிகள் பலவற்றின் எழுத்துகளை விழுங்கிய ஆங்கிலம்
உலகில் ஏறத்தாழ
நூறு மொழிகள்,
ஆங்கில
எழுத்துகளையே
பயன்படுத்துகின்றன. வளமான மொழிகளான லத்தீன், ஜெர்மன், பிரஞ்சு,
முதலிய பல - பலகோடி மக்கள் பேசிவரும் - மொழிகளின் சொற்களை மட்டுமின்றி அவற்றின் எழுத்து வடிவங்களையும் எடுத்துக்கொண்டு,
ஒரு கலப்பு எழுத்து வடிவில் அவர்கள் மேலேயே ஆங்கிலம் உட்கார்ந்து சில
நூறாண்டுகள் ஆகின்றன. (இதன் விளக்கத்தை, இணையத்தில் சென்று how
many languages use english alphabet எனும்
இணைப்பில் காண்க)
மலேசிய நாட்டின் மலாய் மொழி, 20ஆம் நூற்றாண்டு வரை அரபு மொழியோடு தொடர்புடைய ‘ஜாவி’ எழுத்துகளில் எழுதப்பட்டது. பின்னர், ஆங்கில எழுத்து வடிவமே அதிகாரப் பூர்வ எழுத்தாக மலேசிய அரசால் அறிவிக்கப் பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தத் தலைமுறை மலேசியர்கள் மலாய் எழுத்தை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுகின்றனர்.
அழிந்து வரும் எழுத்து மொழிகளின் பட்டியலில்…
இந்திய அட்டவணையில் உள்ள இருபத்திரண்டு மொழிகளில் ஒன்றான கொங்கணி, கோவா மாநிலப் பேச்சுவழக்கில் உள்ளது. எனினும், தேவநாகரி, அரபி, கன்னடம், மலையாளம், லத்தீன்-ஆங்கிலம் என –-மக்கள் வாழும் இடத்துக்கேற்ப-- ஐந்துவகை எழுத்துகளில் எழுதப்படுவதால், கொங்கணி சுய எழுத்து வடிவத்தை இழந்துவருகிறது. இப்படி, தமது சொந்த எழுத்து வடிவத்தை இழந்த பல மொழிகளின் பட்டியலில் நம் அன்னைத் தமிழும் சேர்ந்து, அழியத்தான் வேண்டுமா?
பள்ளிக்கல்வியில் செல்பேசிப் பயன்பாடு பற்றிய பாடம் தேவை
கணினியில் கிடைக்கும் அனைத்தும் செல்பேசியிலும் கிடைக்கிறது. செல்பேசி-கணினியில், எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக் கூடாது (Do’s and Don’ts) என்பது பற்றி, நம் பள்ளிக் கல்வியில் பாடம் வைக்க வேண்டும்.
“பேரு வச்சியே சோறு வச்சியா? என்பது போல கணினியைத் தருகிறோம், அதைத் தமிழில் பயன்படுத்தக்
கற்றுத் தருகிறோமா?” எனும் கேள்வி எழுகிறது. “இணையத் தமிழ்” கட்டாயப் பாடமாக வேண்டும். (மாணவர்க்கு மடிக்கணினி தரும்போது, ஆங்கிலத்துடன் தமிழ் ஒருங்குறி “UNICODE” எழுத்துருவும் தரவேண்டும். “ர” எழுத்தை, துணைக்கால் போல அச்சிடும் சில தமிழ் எழுத்துருக்களைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்)
ஆங்கிலத்தில் GHOTI என்பதை FISH என்று படிக்க முடியும் என்பது வேடிக்கை அல்ல! ஆனால், தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பை அவ்வாறு மாற்ற முடியாது. வீரமாமுனிவர், தந்தை பெரியார் உள்ளிட்ட பலர் செய்த மாற்றங்களோடு இன்றைய தமிழ் எழுத்து எளிதாகி நிலைத்து நிற்கிறது. அப்படிக் கட்டமைக்கப்பட்ட எழுத்து வடிவைத்தான் இப்போது சிதைத்து வருகிறோம் என்று சொன்னால் இளைஞர்கள் புரிந்து நடப்பார்கள்!
இங்கிலாந்து போல தமிழ்நாடு அரசும் ஆணை வெளியிட வேண்டும்
மன்னர் இரண்டாம் ஜார்ஜ் (1733இல்) அரசு ஆணை இட்டபின்னரே லத்தீன் கலவாத ஆங்கிலத்தைப் பரவலாகப் பேசுவதும் எழுதுவதும் இங்கிலாந்திலேயே வந்ததென்று, தமிழியக்கத் தலைவராக இருந்து, மறைந்த எங்கள் பேரா. இரா.இளவரசு, ஒரு சிறு நூலே எழுதியிருக்கிறார்.
மக்கள் தலைவர்கள், அலுவலர்கள், பேசும்போதும், செல்பேசி-கணினித் தகவலிலும், தமிங்கிலத்தை
அறவே தவிர்க்க அரசுஆணை வெளியிட வேண்டும். தமிழ் வலைப்பக்கப் படைப்புகளுக்கும்,
தமிழ்-விக்கிப்பீடியா பங்களிப்பாளர்க்கும், காணொலி, செல்பேசி, புலனம் முதலானவற்றில் தமிழிலேயே பங்களிப்போர்க்கும் பரிசுகள் வழங்கவும், பாராட்டவும், தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம் தோறும் செயல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும்படி உரிய சான்றிதழ்களும் தரலாம்.
செல்பேசியின் தொடர்புப் பெயர்களைத் தமிழில் வைத்திருப்போரை மாவட்ட வாரியாகப் பாராட்டி
சான்றளித்து ஊக்குவித்தால்
தமிழ்ப் பயன்பாடு உயர
வாய்ப்புள்ளது. செல்பேசிப் பயன்பாடு, குறுஞ்செய்தி, புலனம், முகநூல், சுட்டுரை, வலைப்பக்கம் என இணையத் தொடர்புகள் அனைத்தும் தமிழிலேயே தொடர ஊக்குவிக்கலாம்.
தமிழ் எழுத்திற்கு வந்திருக்கும்
ஆபத்து, தமிழ் அழிவிற்கும் தமிழர்கள் அழிவிற்கும் வழிகோலும் என்பது முதலில் அரசுக்குப் புரிய வேண்டும். இல்லையேல், உலகமே வியக்கும் நமது பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கக் கூடத் தெரியாத அடுத்த தலைமுறை தமிழ்நாட்டிலேயே வளரக் கூடும்! உண்மை, வெறும் இகழ்ச்சியல்ல!
தமிழ் எழுத்து வடிவத்தைக் காக்க, தமிங்கிலத்திலிருந்து இளைஞர்களைத் திருப்ப, உரிய அறிஞர்களைக் கொண்டு ஆலோசிப்பதும், பள்ளிக் கல்வியிலிருந்தே செயற்படுத்த அரசாணை கொண்டு வந்து சிற்றூர் வரை
கண்காணிப்பதுமே
தமிழ் எழுத்துகளைக் காப்பாற்றும் தலையாய பணி. இல்லையேல், தமிங்கிலம் எனும் திமிங்கிலம் நம் தாய்த்தமிழை விழுங்கிவிடக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க முடியாது!
“அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச்
செம்மை செய்து செழுமை ஆக்கி
இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்
ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்” – பாரதிதாசன்.
--------------------------------------------------------------------------------------
--நா.முத்துநிலவன், தமுஎகச மாநிலத் துணைத்தலைவர், தொடர்பிற்கு - muthunilavanpdk@gmail.com செல்பேசி-
94431 93293
----------------------------------------------------------------------------------------
நன்றி - இந்து தமிழ் நாளிதழ் இன்று (04-01-2023)
செய்தித்தாள் இடப்பற்றாக்குறை காரணமாக சற்றே சுருக்கினாலும் கட்டுரையின் சாரம் குறையாமல் வெளியிட்ட இந்து தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றி
------------------------------
அருமையான கட்டுரை . சீரிய சிந்தனை. காலத்திற்கேற்ற அறிவுரை .
பதிலளிநீக்குநானும் அரசை வலியுறுத்துகிறேன்....அரசாணை வெளியிட்டு தமிழை காக்க முன்வரவேண்டும்
பதிலளிநீக்குஅருமையான உண்மையான உணர வேண்டிய தகவல்கள் ஐயா...
பதிலளிநீக்குகாலத்தில் வந்த எச்சரிக்கை மணியென முழங்கும் கட்டுரை. மிக மிக நேர்த்தியாகப் பின்னிய முத்துநிலவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செல்பேசியும்,கணினியும் நம் வசதிக்காக வந்தவை. தமிழர்களும் தமிழ்நாட்டரசும் தமிழ் வாழ்க என முழக்கமிட்டால் மட்டும் போதா. மிகுந்த கவனத்தோடு கண்முன்னே அச்சுறுத்தும் சவாலை அறிவார்ந்த வகையில் எதிர்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் விற்பனையாகும் கணினிகள்,கைபேசிகள் தமிழ் உள்ளீட்டு மொழியாக வர உத்தரவிட வேண்டும்.
பதிலளிநீக்குநாம் எடுக்கும் சிறு சிறு முயற்சிகள் குட அனைத்தும் தமிழுக்கு வளம் சேர்ப்பதாய் அமையட்டும்.
தேவை மீண்டுமோர் தமிழியக்கம்.
தங்க்ளிஷ் ..தமிங்கிலம்..என்ன ஆனாலும் நம் அன்னை மொழி அழியாது..கட்டுரை சிறப்பு
பதிலளிநீக்குஉண்மை தான் ஐயா. செல்லிடப் பேசியில் நன்னடைத் தமிழ் வந்தால் தான் தமிழ் தொடர்ந்து வாழும். உணர வேண்டிய ஒன்றை நடைமுறைப் படுத்தலின் அவசியத்தை உணர்த்திய திறம் நனிநன்று ஐயா.
பதிலளிநீக்கு