இணைய அரங்கில் (webinar) இணைய வருக!



“கரோனா” காலத்தில் ஏற்கெனவே
4இணையக் கருத்தரங்குகள் பேசிவிட்டேன்.
இப்போது 5,6ஆவது நிகழ்வுகள்!

01-06-2020 அன்று மாலை 6மணிக்கு
திருச்சி இந்திய மாணவர் சங்கத்தினரும் 
02-06-2020 காலை 10.30மணிக்கு
திருச்சி அறிவியல் இயக்க நண்பர்களும் 
நடத்துகிறார்கள்

வாய்ப்பிருப்போர் வருக!
இணைய அரங்கில் சந்திப்போம்
விவரம் கீழுள்ளது


-------------------------------- 

பாலிமர் தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் (8-5-20 முற்பகல்)


பாலிமர் தொலைக்காட்சியில் 
எங்கள் பட்டிமன்றம்
தலைப்பு
மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்த
பாடலாசிரியர் யார்?

08-5-2020 வெள்ளிக் கிழமை
முற்பகல் 11-00 மணி
--------------------------------------
வாய்ப்புள்ள நண்பர்கள் 
காண, கேட்க வருக!
(கரோனா கால மறுஒளிபரப்பு)
யார் யார் பேசியிருக்கான்னு
எனக்கே மறந்து போச்சு!
பார்த்துத் தெரிஞ்சுக்குவோம்
வாங்க
வணக்கம்.
-----------------------------------

கந்தர்வன் கவிதைகள் சில நினைவுகள்

“கந்தர்வன் படைப்புலகம்” என, கரோனா ஊரடங்கில் ஓர் இணையக் கருத்தரங்கம் வைக்கிறோம். அதில் நீங்கள் கந்தர்வன் கவிதைகள் பற்றிப் பேசணும் தோழர்” என்று அழைத்தார் தேனி தோழர் அ.உமர்பாரூக்.
ஏற்கெனவே இந்தக் கரோனாக் காலத்தில் மூன்று கருத்தரங்குகள் பேசிவிட்டேன். மேலும் இரண்டு வாய்ப்பை மறுத்துவிட்டுப் படிப்பில் மூழ்கியிருந்த எனக்கு, உமர் தோழரின் வேண்டுகோளை மறுக்க மனம் வரவில்லை! ஏனெனில் அவரது பணிகள் அப்படித் திட்டமிட்டு, பங்கேற்போர் இழக்கக் கூடாததாகவே இருக்கும். எனது இரண்டு அனுபவங்கள் அப்படி!

எனது நினைவுகள் 
சுழல்வதை நிறுத்த முடியவில்லை!

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாதவர்கள் என்று ஒருசிலராவது இருக்கத்தான் செய்வர்

அப்படி என் வாழ்வில் 
ஒரு பட்டியல் எடுத்துப் பார்த்தேன்-
(1)  பாரதி,
(2)  வள்ளுவர்,
(3)  காரல் மார்க்ஸ்,
(4)  அம்பேத்கர்,
(5)  பெரியார்,
இவர்கள் என் சிந்தனையை மாற்றிச் செயலூக்கம் தருவோர் எனில், என் வாழ்க்கையை நேரடியாகப் பாதித்து, திருப்பியவர்களும் சிலர் உண்டு
(6)  திருக்காட்டுப் பள்ளி சி.அறிவுறுவோன்,
(7)  திருவாரூர் ந.விஜயரங்கன்,
(8)  செந்தலை .கவுதமன் ஆகியோருடன்
(9)  என் பேரா. தமிழ்க்கடல் தி.வே.கோபாலையர்,
(10)  எங்கள் முதல்வர் பாரதிப் பித்தன்
(11)   புதுக்கோட்டையில் அறிமுகமான கவிஞர் பாலா
(12)    கவிஞர் கந்தர்வன்.
(13)எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்து, “எனக்குத் தெரியாத எனது திறமை(?)”யை எனக்கே அறிமுகப் படுத்திய ஷீலாராணி சுங்கத் 
(14)என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய திண்டுக்கல் ஐ.லியோனி
(15)என்னை “அன்பாலும் அறிவாலும்” கவர்ந்த கல்வி அலுவலர் தமிழறிஞர் நா.அருள்முருகன்

இந்தப் தினைவரோடு, என்னிரு இணையர், அபிராமி-மு.மல்லிகா ஆகிய இருவரும் ஒருவரே என்பதை நான் மட்டுமே அறிவேன். 
இவர்கள் இன்றி நா.முத்து நிலவன் இல்லை!  இவர்களே நான்பெற்ற 16 பேறுகள்!

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பல கட்டுரைகள் எழுதலாம். சிலருக்கு என் நூலை சமர்ப்பித்தேன். இனி வரும் நூல்களில் மற்றவர்கள் பற்றியும் எழுதுவேன்.

அதுவும் மற்றவர்களை யெல்லாம் விடவும், என் பொதுவாழ்வில் கந்தர்வனின் பாதிப்பே அதிகம்.  கந்தர்வனுடன் சுமார் இருபதாண்டுக் காலம் (1983-2003) நெருக்கமாக இருந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரிக் காலத்தைவிடவும் அதிகம் கற்றுக் கொண்ட காலமும் இதுவேநான் எழுதுவது, பேசுவது, தொடர்ந்து இயங்குவது மட்டுமல்ல, வயது வித்தியாசமில்லாமல் பழகுவது முதல், முழுக்கைச் சட்டை போட்டு, அதையும்இன்செய்து, காலில் வித்தியாசமான காலணி அணிவதும் கூட அவரிடம் கற்றதுதான்!
என்னைப் புதியவர்க்கு அறிமுகப் படுத்தும்போது, “தமிழ்ல புலவர் பட்டம் வாங்கி, எம்ஏ படிச்சவரு! ஆனா பேண்ட் போட்டு இன் பண்ணி வர்ர நவீன தமிழ்ப்புலவர், நமக்குப் புரியிற மாதிரி பேசுவார்!” என்று சிரித்த வண்ணம் சொல்வார். அது எனக்கொரு கல்விதானே?!
எழுதிய மை காய்வதற்கு முன், இவரது பல கவிதைகளை, கதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தவன் நான். அனேகமான படைப்புகளை அவர் மகள் –என்றும் என்னை மாமா என்று வாய்நிறைய அழைக்கும் மருமகள்- மைதிலி கையெழுத்தில் அடித்தல் திருத்தலில்லாமல் இருக்கும்! (இவர் அடித்துத் திருத்தி எழுதியதை நகலெடுத்துத் தருவது அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மைதிலியின் ஆசையென்று மகிழ்ந்து சொல்வார்!) எல்லாம் பச்சை மையில், இவரெழுத்துப் போலவே சாய்வாக இருக்கும்.
என் மூத்த மகள் அ.மு.வால்கா திருமணத்தில்
தன் பேத்தி நவீனாவுடன் வாழ்த்தும் கந்தர்வன் (2003)
அந்தக் கவிதைகளை எத்தனை முறை படித்திருக்கிறேன் எனும் கணக்கெல்லாம் கிடையாது. எழுது முன்னே பேசியது, எழுதியதும் படித்தது, அவர் குரலில் கேட்டது, அச்சிலும் பார்த்தது, அதை அவரே தன் கைப்பட கையொப்பமிட்டு தந்தது என, எல்லாம் மறக்க முடியாத வாழ்க்கைப் பதிவுகள்.
1984இல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தோன்றிய போது அவர் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர், நான் துணைத் தலைவர்! பின்னர் தமுஎசவில் அவர் தலைவர் நான் மாவட்டச் செயலராக சுமார் பத்தாண்டுகள்! 
அதுபற்றிப் பேசப் போகிறேன் –
என்ன…, என் நெஞ்சில் முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கும் ஒரு செய்தியைத்தான் என்னால் பேச முடியாது. மாவட்ட அரசுக் கருவூல அலுவலராக இருந்த அவர்,தனது ஒரே மகனைத் தமிழ்வழியில் படிக்கவைக்க அரசுப்பள்ளியே ஏற்றதென நினைத்து, என்மேல் உள்ள அன்பால், நான் பணியாற்றிய அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் கொண்டு வந்து சேர்த்த ஒரே மாதக் கொடுமைக்குள் அந்த 11 வயதுப் பாலகன் வெங்கட் ... பள்ளியை ஒட்டிய குளத்தில் மூழ்கி..  
அன்றிரவு நானிருந்த நிலையை என் வீட்டுக்கு வந்த ச.தமிழ்ச்செல்வனும் வீ.அரசுவுமே அறிவார்கள்.
இன்றுவரை அவரது ஒரே மகனை நானே கொன்று விட்டதாக சிலர் சொல்ல, நானே என்னை இழிந்தவ னாகப் பார்த்துக் கொள்ளும் நிலையில், இறக்கும்வரை அவரோ, இப்போதுவரை அவரது இரு மகள்களோ, அவரது துணைவியார் சந்திரா அக்காவோ, “ஏம்பா இப்படிப் பண்ணி எங்கள் ஒரே பிள்ளை வெங்கட்டை…” என்று ஒரு வார்த்தை கேட்டதில்லை!
கேட்டிருந்தால் 
ஒருவேளை 
அப்போதே செத்திருப்பேன்.
-------------------------------------------------------------------------------------------
அவரது கவிதைகளைப் பற்றி நான் பேசணும்.
முயற்சி செய்கிறேன். 
வாருங்கள் நண்பர்களே!
அந்த மகத்தான கலைஞனின் 
நம்மோடு வாழ்ந்த
மாமனிதனின்
பேசித் தீராத
கவிதைகளைப் பேசுவோம்!