உலகத் தாய்மொழி தினவிழாபழமை மட்டுமல்ல தமிழின் பெருமை!
தொடர்ச்சியான பயன்பாடே உண்மையான பெருமை!
கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச்-1.     
     பழம்பெருமை மட்டுமல்ல தமிழின் பெருமை! மூவாயிரம் ஆண்டுக் காலத் தொடர்ச்சியான பயன்பாட்டுப் பெருமையே தமிழின் உண்மையான பெருமைஎன்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை அருகிலுள்ள கைக்குறிச்சியில், ஸ்ரீபாரதி கல்வி யியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து புதன்கிழமை நடத்திய உலகத் தாய்மொழி தினவிழாவுக்கு கல்லூரி தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். 

கல்லூரி அறங்காவலர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பிரசன்னகுமார் வரவேற்புரை யாற்ற, முனைவர் மு.பாலசுப்பிர மணியன் வாழ்த்துரை வழங்கினார். புதுக்கோட்டை வாசகர் பேரவையின் ஒருங்கிணைப் பாளரும், மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் சா.விசுவநாதன் அறிமுகவுரையாற்றினார். ஆசிரிய மாணவியர் நால்வர் உரையாற்றியபின் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, “ஒருகாலத்தில் ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது. தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ் இப்போது, பில்கேட்ஸ் நடத்தும் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் வளர்ந்து வருகிறது.  ஏசுபேசிய ஈபுரு மொழியும், புத்தர் பேசிய பாலிமொழியும் இப்போது வழக்கில் இல்லை. மூவாயிரம் ஆண்டுக்கு முன் தொல்காப்பியன் பேசிய நம்தமிழ் இன்றும் வழக்கில் இருப்பதுதான் அதன் உண்மைப் பெருமை! சமற்கிருதம், கிரேக்கம்,லத்தீன், ஈபுரு, சீனம் எனும் ஆறு மொழிகளில் சீனமொழியும் தமிழ்மொழியும் மட்டுமே கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக வழக்கில் பயன்பாட்டு மொழியாக இன்னும் உள்ளன.
அண்மையில் கடந்த பிப்ரவரி21அன்று உலகத் தாய்மொழி தினம்- அன்று, உலகப்புகழ்பெற்ற இணையத் தேடுபொறியானகூகுள்தளம் தன் அங்கீகரிக்கப்பட்ட (ஆட்சென்ஸ்) வணிகமொழிகளில் 41ஆவது மொழியாக தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது இப்போது குறிப்பிடத் தக்கது.
ஆனால், நாம் நம் தமிழ்நாட்டில் அதன் பெருமையை அறியாமல், தமிழில் பேசுவதை அவமானமாக்க் கருதுவது யானை தன் பலமறியாமல் பிச்சையெடுப்பது போன்றதாகும். தமிழில் கல்வி, கணினி, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி , இசை உள்ளிட்ட கலைகள், வழிபாடு, நீதிமன்றப் பயன்பாடு, அரசு அறிக்கைகள், உள்பட அனைத்து நிலையிலும் தமிழையே பயன் படுத்துவதோடு, கையொப்பமிடுவதிலும், வங்கியில் பணமெடுக்கும் ஏடிஎம் எந்திரத்திலும் தமிழையே பயன்படுத்த வேண்டும்.
அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில், நான்கு இளைஞர்களும் ஒரு சிறுவனும் தமது இன்னுயிரைக் கொடுத்து, 1952இல் தம் தாய்மொழிக்காக நடத்திய மொழிப்போர்தான் பின்னாளில் வங்கதேசம் எனும் ஒரு தனிநாடு உருவாக அடிப்படையாக அமைந்தது. அதன் நினைவாகவே ஐக்கிய நாடுகள் சபை உலகத் தாய்மொழிதினத்தை உலக முழுவதும் கொண்டாட வைத்திருக்கிறது. ஆனால், 1930களில் நடராசன், தாளமுத்து முதலான தமிழ்த்தியாகிகளும், 1965இல் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் தம் இன்னுயிரை நீத்த தமிழ்நாட்டில் இன்று தமிழ் எந்த நிலையில் உள்ளது என்பது நினைக்க மட்டுமல்ல சரியாகச் செயல்படவும் வேண்டித்தான் தாய்மொழிதினம் கொண்டாடப் படுகிறது.
தமிழ் பெரும்பாலோர் நினைப்பது போல இலக்கிய இலக்கண வளம் மட்டுமே கொண்ட சாதாரண மொழியல்ல. பழந்தமிழ் இலக்கியங்களில் இன்றைக்கும் தேவையான வாழ்வியல் சார்ந்த அறிவியலும், சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையும், அறம்சார் அரசியலும் பாடப்பட்டுள்ளது! நாம் இப்போதும் அவற்றை இளைய தலைமுறைக்கும் பயன்படுத்த முடியும்.
உலகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர், தமது நண்பர் காந்தியிடம் திருக்குறள் பற்றிச் சொல்ல, அதுகேட்டு வியந்த காந்தி, மூலமொழியில் திருக்குறளைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ்மொழியைக் கற்க ஆரம்பித்து, கற்றுமுடித்து, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழில் கையொப்பமிடச் செய்தது நம் திருக்குறளின் அறம்சார் வாழ்வியல் எனும் செய்திகளை பள்ளிப்பாடங்களில் நாம் சொல்லித்தரவில்லை. ஆனால், இதுபோலும் பொது மேடைகளில் இவற்றைச் சொல்வதும் நம் கடமை!
அம்மா என்றது மாடு, மம்மி என்றது குழந்தைஎன்று கவிஞர் காசி.ஆனந்தன் வருந்திப் பாடும் இன்றைய நிலை மாறவேண்டும். தமிழ் பேசுவதை எழுதுவதை அவமானமாய்க் கருதும் நிலையே தமிழ் அழிவின் தொடக்கம்! அது நம் இனம், சாதி, மதம் கடந்த அடையாளம் என்பதைத் தமிழர் உணர்ந்து அனைத்திலும் தமிழிலிலேயே புழங்கவேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும். நாம் இதில் கவனமாக இருப்பதே தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவதன் அர்த்தமாகும். இதற்கு 1930, 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தது போல உணர்ச்சி வசப்பட்டு அல்லாமல், அறிவு வயப்பட்டு அனைத்துத் துறைகளிலும் முன்னேறத் தமிழையே நம் கை ஆயுதமாக ஏந்தவேண்டிய நேரம் இதுஎன்று பேசினார்.
நிறைவாக, கல்லூரித் துணைமுதல்வர் சுப.தாரகேஸ்வரி நன்றிகூற, ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி மற்றும் கலை-அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்களுடன் சுமார் 500மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-------------------------------------------------------------------------------------------
வெளியிட்டமைக்கு நன்றி – 02-03-2018, தீக்கதிர், புதுகைவரலாறு
செய்தியாளர்கள் - திரு சு.மதியழகன், திரு ஜெயச்சந்திரன்.
---------------------------------------------------------------- 


12 கருத்துகள்:

 1. விழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. அருமையான விழா நிகழ்வுப் பகிர்வு. நாங்களும் உடன் இருந்து பேச்சினைக் கேட்பதுபோல இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம்.
   தாங்கள் இருந்து கேட்டிருந்தால் இன்னும் மகிழ மட்டுமல்ல இன்னும் சிறப்பாகப் பதிவும் செய்திருப்பீர்கள். நன்றி அய்யா.

   நீக்கு
 3. அருமையான பேச்சு! நறுக்குத் தெறிக்கும் கருத்துக்கள்!

  //ஒருகாலத்தில் ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது. தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ் இப்போது, பில்கேட்ஸ் நடத்தும் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் வளர்ந்து வருகிறது// - மிகவும் கவர்ந்த வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே!
   ஒப்பீடுகள் எப்போதும் நெஞ்சில் நிற்கும் எனும் உளவியல்தான் நன்றி

   நீக்கு
 4. சிறப்பான உரைவீச்சு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எழுத்துகளிலிருந்தே ஒலிப்பின் மேன்மையை ஈர்த்துக் கொண்டது சிந்தை.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  தங்களது தாய்மொழிதினப் பேச்சானது அடியேனின் கண்களில் கண்ணீர் சிந்தவைத்து விட்டது, அருமை.
  அடியேனின் சிறு திருத்தம்
  "ஒருகாலத்தில் ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது"
  இதில் அனைத்துக் கண்டங்களிலும் என்பதற்குப் பதிலாக "ஐந்து" கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது எனக் கூறினால் மேலும் பொருத்தமாகும்.
  "சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஈபுரு, சீனம் எனும் ஆறு மொழிகளில் சீனமொழியும் தமிழ்மொழியும் மட்டுமே"
  இங்கு ஐந்து மொழிகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன,
  பின்வருமாறு குறிப்பிடின் மேலும் சிறப்புடையதாகும்
  "தமிழ், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஈபுரு, சீனம் எனும் ஆறு மொழிகளில் சீனமொழியும் தமிழ்மொழியும் மட்டுமே"
  வாழ்த்துக்கள்
  அன்புடன் மின்மினி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். தங்கள் திருத்தங்களை ஏற்கிறேன். நன்றி.
   ஆனால்,ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, அண்டார்ட்டிகா, ஆஸ்திரேலியா என ஐந்து கண்டங்கள்தான் ஒலிம்பிக் கொடியில் உள்ளன என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தொப்புதல் பெற்றது என்றாலும், அமெரிக்காவை இரண்டாகப் பிரித்து ஆறுகண்டம் என்றொரு கருத்தும், ஆர்க்டிக் பனிப்பகுதியைச் சேர்த்து ஆறுகண்டம் என்றொரு கருத்தும் இவை இரண்டையும்சேர்த்து, ஏழுகண்டங்கள் என்றொரு கருத்தும் இருக்கின்ற குழப்பம் வேண்டாம் என்றே அனைத்துக் கண்டங்கள் என்று நான் பேசினேன். இப்போதும் “கண்டம்” என்று கூகுளில் போட்டுப் பாருங்கள் இந்தக் குழப்பத்தை அறியலாம்.
   ஆறு செம்மொழிகளில் தமிழை விட்டது ஏனெனில் அதுதான் நாமறிந்ததாயிற்றே என்பதால்தான் எனினும் தங்கள் அன்பான திருத்தத்தை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி அய்யா.

   நீக்கு
 6. தமிழ் படும் பாடு,தறி படும் பாடு.
  நம் வீட்டுப் பிள்ளைகளேஆங்கிலத்தில் எழுதி பின் தமிழை உச்சரிக்கிறது.திருத்தம் வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
 7. அருமையான நிகழ்ச்சி தங்களின் உரையை நேரில் கேட்ட மகிழ்ச்சி, இன்றைய தேவை, நன்றி ஐயா

  பதிலளிநீக்கு