‘நீங்களும் வெல்லலாம் ஒருகோடி” – விஜய் டிவியின் அபத்தப் போட்டி!

பொதுஅறிவுப் போட்டி ‘போல’ இருக்கே?ன்னு அவ்வப்போது பார்த்தேன்!

நாகை-காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் எனும் மீனவர்பகுதிப் பெண், தன் கணவரோடு வந்து அசத்தினார். அசராமல் நல்லவிதம் பதிலளித்தார்.
அதோடு, “மீனவ மக்களின் வாழ்க்கைக் கொடுமையை மற்றவர் அறியச் செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும்“ எனும் தமது கோரிக்கையையும் வெளிப்படுத்தியபோது அவர்மீது மரியாதை எழுந்தது. 

அவரது கணவர் “அப்பப்ப சிங்களப் போலிஸ் பிடிச்சுக்கிட்டு போய்டுவாங்க சார்! திரும்பி வந்தாத்தான் உண்டு!” என்று பரிதாபமாகச் சொன்னதும், நெஞ்சில் அறை விழுந்தது! இவர்தான் அதிகபட்சமாக 25லட்சம் வென்றார் என்பது மகிழ்வளித்தது!

பரவாயில்லையே இந்தப் போட்டி இப்படிக்கூட உதவுகிறதே என்று நேரம் கிடைக்கும்போது நானும் பார்க்கத் தொடங்கினேன்… ஆனா… இப்ப..?

சூர்யா நடத்திய அளவுக்கு உற்சாகமாக அர்விந்த் சாமி நடத்தவில்லை என்றாலும், இவரது இயல்பான பேச்சு, கவனிக்க வைக்கிறது!

22-06-2016 இன்று அருள்பிரகாசம் என்றொரு ரஜினி ரசிகர் வந்தார் இடையே, தம்மை ரஜினிரசிகர் அல்ல ரஜினிவெறியர் என்பதாகச் சொல்லி எரிச்சலூட்டினார். ரஜினிபற்றிச் சொன்னபோதெல்லாம் தலைவர் தலைவர் என்றே உருகினார்! ரஜினி பற்றிய ஒரு கேள்வி வந்தபோது (படம்) இவர் அதற்குப் பதில் சொல்லாமல், “நானே 5,000 கேள்விகளை தலைவர் பற்றித் தயாரித்து வைத்திருக்கிறேன்!” “தலைவரப் பத்தி ஆயிரம் கேள்வி கேட்டுப் பாருங்கள், அனைத்துக்கும் சரியாகச் சொல்வேன்!” என்று சவால்விட்டார்! 
குடியாத்தம் அரசு மே.நி. பள்ளித் தலைமைஆசிரியராம் இவர்(?) அடடா! “வாத்தியார் நின்னுக்கிட்டுப் பேஞ்சா, பயலுக ஓடிக்கிட்டே பேய்வாய்ங்கெ” எனும் பழமொழி ஏனோ எனக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது! 

“இவுரு சொல்லிக்கொடுத்து யாருமே ஃபெயிலானதில்ல… ட்யூஷனுக்கு 50,100க்கு மேல நாங்க வாங்குறதில்ல” என்றது வீட்டம்மாவின் ஒப்புதல் வாக்குமூலம்!  (கவனியுங்கள்.. கணித ஆசிரியர் தலைமை ஆசிரியர்.. வீட்டில் ட்யூஷன்!) 

அடுத்த கேள்வியே, அவருக்குச் சவால்விடுவதாக வந்தது! (படத்தில் உள்ள கேள்வி!)
பதில் தராமல் சரியான விடையைக் கண்டுபிடிக்க, வந்திருந்தவர்களின் உதவியை (ஆடியன்ஸ் லைஃ ப்லைன்) நாடி, ஒருவழியாகச் சொன்னார்!

பொதுவாகவே, தொலைக்காட்சிப் போட்டிகளில் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் தருவார்கள்… (அவர்கள் பிழைப்புத் தொடரணும்ல?) அதுவொரு பொதுஅறிவு என்பதான கருத்தைப் பார்வையாளரிடம் விதைத்துவைப்பது எப்படியும் தங்களுக்கு உதவும் என்னும் நினைப்பை இதுவரையிலும் சரியாகவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்! ஆனால்-

இது ஒரு லூசுத்தனமான போட்டி! வணிகநோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பொதுஅறிவு எனும் பெயரில் நடக்கும் ஊடக மோசடி என்பதை எப்போது மக்கள் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

அறிவு எனும் பெயரில் --உழைக்காமல் வருவதால்-- அந்த இடத்தில் அமர்வோர், அனேகமாக எல்லாருமே “டென்ஷனாயிருக்கு!”என்கிறார்கள் (பணம் போயிருமாம்!)

அட மட ஜென்மங்களே! அறிவென்பது சினிமாவில் இல்லை! அது நம் மக்களின் அறிவை அழிப்பதற்கே வந்திருக்கிறது! வெறும் பொழுது போக்கை இப்படி அறிவாகவும், அரசியலாகவும், அடுத்த முதல்வராகவும் பார்ப்போர், உலகிலேயே –முதல் குரங்கான- தமிழ்க் குரங்குகளைத் தவிர வேறு யாரிருக்க முடியும்? 

“மற்ற நாடுகளெல்லாம்
வரைபடத்தில் இருக்கின்றன!
தமிழ்நாடு மட்டும்தான்
திரைப்படத்தில் இருக்கிறது!” என்று எழுதிய 
நெல்லை ஜெயந்தா பெரிய கவிஞர்தானே?

எப்பேர்ப்பட்டவன் தமிழன் தெரியுமா?
சேரனுக்குப் பேரன்!
சோழனுக்குத் தோழன்!
பாண்டியனுக்கு வேண்டியவன்!
பல்லவர்க்கு நல்லவன்!


“வாழ்த்துதுமே…வாழ்த்துதுமே!                               செயல்மறந்து வாழ்த்துதுமே!”

11 கருத்துகள்:

 1. நா இப்போலாம் தொலைக்காட்சியே பாக்கிறதில்லைங்க அய்யா

  பதிலளிநீக்கு
 2. Cinema verum pozhudhupokkillai...adu arasiyal..puththgangalin parinamam...inga paadhi per pant poda kathukitadhe cinemava pathudan...jaathi thalaivan pinnadu pora kootathavida nadigar pinnadi pora kootam abayagaramanadu illai...nichayam cinema oru arivudan...

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எவ்வளவு எழுதினாலும் மக்கள் மனதில் பதியாது ஐயா. ஒரு புறம் வணிகநோக்கு. மறுபுறம் தம் அபிலாஷைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அமைகின்ற பலியாடுகள். என்ன செய்வது? வேதனையே.

  பதிலளிநீக்கு
 4. "பிள்ளிய குசி விட்டா கேள்வியாம், வாத்தியார் குசி விட்டா கேள்வியில்லையாம்" எனக்கு இந்த மொழி நினைவில் வந்தது.

  திரைப்படம் எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதை நாம் எப்போது புரிவமோ.

  பதிலளிநீக்கு
 5. நீங்க எழுதிட்டீங்கன்னு இப்பதான் பார்த்தேன்...அரசுப்பள்ளி தலைமையாசிரியர் தனிப்பயிற்சி நடத்துகிறார்...ச்சும்மா கொஞ்சமா பீஸ் வாங்குகிறார்...
  ரஜினி பற்றிய மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்...
  உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம்... உங்கள் பொன்னான நேரம் கோடியினும் மேலல்லவா?

  பதிலளிநீக்கு
 6. அந்த நிகழ்ச்சியில் அவர் அலட்டிக் கொண்ட விதம் ஆசிரியர் பண்பாட்டிற்கு அந்நியப்பட்டு பார்வையாளர்களை முகம் சுழிக்க வைததது.

  பதிலளிநீக்கு
 7. இது போன்ற நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை... பார்ப்பதற்கும் இங்கு தொலைக்காட்சியும் இல்லை...

  பதிலளிநீக்கு
 8. கொடுமை.... பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்வுகள் பார்ப்பதே இல்லை.....

  பதிலளிநீக்கு
 9. //அப்பப்ப சிங்களப் போலிஸ் பிடிச்சுக்கிட்டு போய்டுவாங்க சார் திரும்பி வந்தாத்தான் உண்டு என்று பரிதாபமாகச் சொன்னதும்....//
  அப்போ இலங்கையை சேர்ந்த தமிழ் போலிஸோ, அரபு வம்சாவளி போலிஸோ இவர்களை பிடித்து கொண்டு போனா பரவாயில்லையா?மீன் பிடிக்க புறப்படும் போதே இலங்கைக்கு தான் செல்வது என்று புறப்படுவார்கள்ளாக்கும்!
  வேற்றுநாட்டு எல்லைக்குள் சட்ட விரோதமாக சென்று மீன் பிடிக்காமல், அவர்கள் தமது நாட்டில் தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அரசுதான் அவசியம் உதவி செய்ய வேண்டும்.ஆனால் தமிழக அரசியல்கட்சிகள் இதை உணர்ச்சிகரமாக அரசியல் செய்ய தமக்கு கிடைத்த பெரும் அதிஸ்டமாக பயன்படுத்துவதே மீனவர்கள் துன்பத்திற்கு காரணம்.

  பதிலளிநீக்கு
 10. பெரும்பாலும் தொலக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை

  பதிலளிநீக்கு