சன் செய்தி
தொலைக்காட்சியில் பேராசிரியர் அருணன், கலைஞர் தொலைக்காட்சியி்ல்
பேராசிரியர் சுப.வீ அய்யா இருவரும் விமர்சனம் செய்து, அழகாக
அறிமுகப்படுத்திய நூலுக்கு எழுத்துப் பூர்வமாக வந்த முதல் விமர்சனம் எனது
அன்பிற்குரிய சகோதரி ஆலங்குடி ஆர்.நீலாவிடமிருந்து...
இவரது 'வீணையல்ல நான் உனக்கு' எனும் கவிதைத் தொகுதிக்கு நான்
தந்த முன்னுரையில் இவரை 'கிராமத்து மூலிகைச் செடிபோலும்
இயல்பான எழுத்தாளர்' என்று பத்தாண்டுக்கு முன் எழுதியது நினைவிலிருக்கிறது.
|
(இடமிருந்து) கவிவர்மன், நா.மு., ஆர்.நீலா, மு.கீதா, மைதிலி,கஸ்தூரி, தமிழ்இளங்கோ மற்றும் மகிக்குட்டி |
ஆனந்தவிகடன் பொன்விழாவை ஒட்டி நல்ல
கவிதைகளை விகடனில் தொடர்ந்து வெளியிட்டு, அறிவுமதி தொகுத்து பிறகு ஒரு சிறு
நூலாகவும் வந்த 75கவிதைகளில் ஆர்.நீலாவின் இரண்டு கவிதைகள்
உள்ளன. சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் கட்டுரைத் தொகுப்பு ஒன்றும்
வெளியிட்டிருக்கிறார்...தமுஎகச மாநிலத் துணைத்தலைவர்.
எனது 3நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆர்.நீலா பேசும்போது... என்னை, “தாய், குரு, ஆசான், தோழன்” என்றெல்லாம் சொன்னது அவரது அன்பின் மிகையன்றி வேறல்ல...
இந்த நூல்-அறிமுகம் மற்றும்
விமர்சனத்தில் அவரது அன்பின் நுட்பத்தை மட்டுமல்ல சமூகப் பார்வையின் கிண்டலையும் எழுத்தின் நுட்பத்தையும் பார்க்கலாம்... ஒரு சொல் ஒரே ஒரு சொல்... “அற்பம்” எனும் சொல்லை அவர்
பயன்படுத்தியிருக்கும் இடத்தைக் கவனியுங்கள்...
சரி இப்போது அவரது விமர்சனத்தைப் பார்ப்போம் -
---------------------------------------------------------------------------------------
“முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூல்விமர்சனம் : ஆர். நீலா.
ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரே மூச்சில்
படித்துவிடலாம். ஒரு கதைப் புத்தகத்தைக் கூட கைமாற்றாமல் படித்து முடித்துவிடலாம்.
ஒரு கட்டுரைத் தொகுப்பை படிக்கத் தொடங்கியதிலிருந்து, கீழே வைக்க மனமின்றி
படித்துவிட்டு, பின்னும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் ஒருவாரமாக
அவதிப்பட முடியுமா? முடியும் என்கிறது, கவிஞர் நா.முத்துநிலவனின் கட்டுரைத்
தொகுப்பான “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” நூல்.
மகராஜ் மகால் போகும் வழியில் உள்ள ஒரு
சுவரில், ஒரு தனியார் பள்ளி இப்படி விளம்பரம் செய்திருந்தது. “இங்கு +1 படிக்கும்போதே +2 பாடங்கள்
நடத்தப்படும்“ அதைப் படித்தவுடன், கவிஞர் நா.மு. நினைவுக்கு வருகிறார்...
பள்ளிக்கல்வி இதுவரை இல்லாத அளவிற்கு சிக்கல்களைச்
சந்தித்துக் கொண்டிருக்கிறது. சமச்சீர்க் கல்வி குளறுடிகள், போதிய வருகையின்றி ஆங்காங்கே மூடப்படும்
அரசுப்பள்ளிகள், அதே
இடத்தில் திறக்கப்படும் தனியார் பள்ளிகள், தாய்மொழிக் கல்வி புறக்கணிப்பு, ஆங்கிலக் கல்வி திணிப்பு, அதையும் சரிவர போதிக்கப் பயிற்றுவிக்காத
ஆசிரியர்கள், எகிறும்
தனியார் கல்விக் கட்டணங்கள் மதிப்பெண்ணைத் துரத்தும் மாணவர்கள், அதை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் இன்னும்...
இன்னும்...
இந்த இக்கட்டான சூழலில் தமிழகப் பள்ளிக் கல்விச்
சூழலை அதன் ஊற்றுக்கண்ணை ஆராயும் விதமாக வந்திருக்கிறது நா.முத்துநிலவன் அவர்களின் ‘முதல்
மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே...” நூல்.
கல்வி சம்பந்தமான கட்டுரைகளை இவ்வளவு
சுவராஸ்யப் படுத்தி எழுத முடியுமா என்று வியக்க வைக்கிறது அதன் உள்ளடக்கம். இனிய
நடை, எளிய பதம், அறிவார்ந்த வாதங்கள், செறிவான கருத்துகள், புதுமையான முயற்சிகள் என செழுமையான கருத்துப்
பெட்டகம். உள்வாங்கி வினையாற்றத் தூண்டும் அறிவார்ந்த ஆயுதம். அங்கொன்றும்
இங்கொன்றுமாய்ப் படித்த இக்கட்டுரைகளை ஒருசேர கோவையாக வாசிக்கும்போது பிரச்னைகளின்
ஆழ அகலம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.
மாற்றுக்கல்விச் சிந்தனைகள் நமக்குப்
புதிதில்லை. வசந்தி தேவி, எஸ்.
எஸ். ராஜகோபாலன், ச.மாடசாமி,
பேரா.மணி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, இரா. நடராஜன் ஆகிய கல்வியாளர்கள்...
மன்னிக்கவும்... முதலிய கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாய்ப்புக்
கிடைக்கும் போதெல்லாம் தங்கள் கருத்துகளை காத்திரமாகப் பதிவு செய்தும்
வருகிறார்கள். ஆனால் பிரச்னைகளின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் இதெல்லாம் போதாது.
ஆசிரிய சமுதாயமே வீறுகொண்டு எழவேண்டும்.
அவர்களுக்குப் பின்புலமாய் பெற்றோர்களும் கமூக ஆர்வலர்களும் நிற்கவேண்டும். கல்வி
குறித்த சரியான புரிதலை அரசுக்கு ஏற்படுத்துவதை முதல் இலக்காகக் கொள்ளவேண்டும்.
இன்றைய கல்விமுறையின் குழப்பங்களுக்கும் குளறுபடிக்கும் காரணமானவை என்று
கல்வியாளர்கள் சுட்டிக்காட்டும் குற்றவாளிகளில் பிரதான குற்றவாளியாக நிற்பது
அரசுதானே?
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா
சென் சொன்னார். ‘அரசுப்
பள்ளிகளில் எவ்வளவு குறைகள் இருப்பினும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக வேறு பள்ளிகளைப் பொருத்திப் பார்க்க முடியாது.”
அவர் சொல்வதில் யாருக்கேனும்
மாற்றுக்கருத்து இருக்க முடியுமோ?
ஆனால் மத்திய மாநில அரசுகள் என்ன செய்கிறது?
நாடு சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி
உரிமைச் சட்டமே வந்தது. அதை முறையாக அமுல்படுத்த முதல் ஐந்தாண்டுகளுக்கு 1,71,00,000 கோடி தேவையென வல்லுனர் குழுவால்
மதிப்பிடப்பட்டது அந்த சொற்பத் தொகையில் சரிபாதித் தொகை கூட ஒதுக்கீடு
செய்யப்படவில்லை. குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டமாக்கப்பட்ட பிறகு அந்த கட்டாய
இலவசக்கல்வி அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பது நமது கல்விக்குப் பெரிய
அளவில் பணஉதவி கடனுதவி செய்யும் யுனெஸ்கோ, யுனிசெ‡ப் அமைப்புகளின் நிர்ப்பந்தம். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமலான பிறகும்
புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்க யார் இவர்களுக்கு அதிகாரம்
கொடுத்தது?
தனியார் பள்ளிகள் புற்றீசலாய்ப் பல்கிப் பெருகி
தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலக் கல்வியை முன்னுறுத்துகின்றன.
எல்லோருக்கும் கல்வி என்பதும் தாய்மொழிக்கல்வி
என்பதும் ஒன்றுதானே? இயல்பான கற்றல் தாய்மொழியில்தானே இருக்கமுடியும்?
தாய்மொழியில் கற்பதுதானே
சுயசுந்தனையை உருவாக்கும்? சுய
சிந்தனைதானே சுயசார்பிற்கு வழிவகுக்கும்?
இத்தனை கேள்விகளையும் தன்புத்தகத்தில் எழுப்புகிறார் நா.முத்துநிலவன். அரசின் கல்வி விரோதப் போக்கு இப்படி என்றால் பாடத்திட்டங்களின்
மாணவ விரோதப் போக்கு எப்படி இருக்கிறது?
இரண்டு வரிகளில்
இப்புத்தகத்தில் உள்ள விடை -
“வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை
மருந்து போலத் தருகிறோம்.
கல்வி சுமையாகிறது.
வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை
விருந்து போலத் தருகிறோம்.
வாழ்க்கையே
சுமையாகிறது“
ஒவ்வொரு கட்டுரையுமே வித்தியாசமான தலைப்புகளோடு
கல்வியின் பல பரிமாணங்களை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அலசி ஆராய்கிறது. அது
மட்டுமல்ல கல்வித்துறைக்கு யார் ஒரு துரும்பை நல்லவிதமாகக் கிள்ளிப்
போட்டிருந்தாலும் அதைக் கவனமாகப் பதிவுசெய்து
பாராட்டுகிறது. மொழி வெறியை மொழிஅலட்சியத்தை துலாக்கோலாய் நின்று
விவாதிக்கிறது.பொருந்தாத பாடத்திட்டத்தையும் போலி ஆசிரியர்களையும் தனது இயல்பான
எள்ளலோடு கிண்டலடிக்கிறது
“பாடமே இது பொய்யடா - வெறும்
மார்க் அடைத்த பையடா“
விண்ணப்பித்து வாங்குவதா விருது? சுயமரியாதை உள்ள எவரும் லைக் போடும் கட்டுரை.
இதை இவர் எழுதாவிட்டால்தான் ஆச்சர்யம்.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை படித்த
ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள். படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம்
ஒப்படையுங்கள் என்றார் கலீல் ஜிப்ரான். இவரிடம்
கல்வி கற்ற மாணவர்களை நினைத்து ஒரு சின்ன பொறாமை ஏற்படுவதைத் தவிர்க்க
முடியவில்லை.
ஒவ்வொரு கட்டுரையிலும் சாராம்சமாய் இருப்பது
ஒரேயொரு ஒற்றை வரிதான். பூக்க வைப்பது
கல்வி. ஆம். சமூகத்தின் மீதும் எதிர்காலச் சந்ததியின் மீதும் அக்கறை கொண்ட
ஒவ்வொருவரும் சொல்வது அதுதான். இப்புத்தகத்தில் நா.மு. சொல்வது போல் தமிழ்த் தாயை
நாம் செயல் மறந்து வாழ்த்த வேண்டாம். செயல் புரிந்து வாழ்த்துவோம்.
எஸ்.எஸ்.ராஜகோபாலன் திறமையாக மதிப்பீடு
செய்திருக்கிறார். தங்கம்மூர்த்தியின் அணிந்துரை புத்தகத்தை மீறிவிடாமல் அடக்கமாக
அணிசெய்கிறது. பொருத்தமான அட்டை;படத்தோடு அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.120.
------------------------------------------
இதே நூல்குறித்து நமது பிரபல வலைப்பதிவரும் என் அன்புத் தங்கையுமான மைதிலி கஸ்தூரிரெங்கன் எழுதியதை நண்பர்கள் படித்திருப்பீர்கள் என்றாலும் அவரது அன்பிற்கு நன்றி கூறி அதை எனது வலைப்பக்கத்தில் மறுபதிவு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் - இதுதான் எனது நூல்குறித்து வந்த முதல் அறிமுகம் என்பதில் இரட்டை மகிழ்ச்சி.
------------------------------
இனி மைதிலியின் நூல்அறிமுகம் -
ஒரு ஆசிரியராக எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. தலைப்பில்
சொல்லப் பட்டிருக்கிற கட்டுரை தான் இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை.
லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய ஆசிரியர்கள் தவறாது படிக்கவேண்டிய
கடிதத்தைப் போல், நேரு தன் மகளுக்கு எழுதியதைப் போல
கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படவேண்டிய, தவிர்க்க முடியாத ஒரு கட்டுரை.
மார்க்கு
மாயை ஆட்டிப்படைக்கும் தமிழகப் பெற்றோர்கள் தவறாது படிக்க வேண்டிய கட்டுரை.
எனவே
தயவுசெய்து பெற்றோர்களே தாங்கள் இதை படித்து குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க, நடத்தப் பழகுங்கள். பாவம் அந்த மொட்டுகள்
அவை மலர வாய்ப்புக் கொடுங்கள்.
இந்த கட்டுரை மட்டும் அல்லாமல் இந்த தொகுதி
முழுக்கவே கல்வியியல் கட்டுரைகளால் நிரம்பித் ததும்புகிறது. பாடத்தைப் புகட்டலாமா? ஆசிரியர் உமா படுகொலை குறித்த கட்டுரை, கோடை விடுமுறை தேவையா ? போன்ற கட்டுரைகள் ஆசிரியப் பணி குறித்த, பள்ளிகுறித்த, இன்றைய கல்வி நிலை குறித்த, ஆழமான அலசலாக இருக்கிறது.
விண்ணப்பித்து வாங்குவதா விருது? எனும் கட்டுரை நல்லாசிரியர் விருதுகளை
வாங்கிய(!?) சிலருக்குக் கண்டிப்பாய் மனசாட்சி
உறுத்தும்படி அமைத்திருக்கிறது. கட்டுரைகள் அண்ணாவின் வலைப்பூவில் வெளிவந்தவை
என்பதால் அதன் இறுதியில் வாசகர்கள் இட்ட கருத்துக்களையும் சேர்த்துப்
பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் கற்பித்தல் தொடர்பான அற்புதமான அலசல்களும் இதில்
அடங்கியுள்ளன. மொத்தத்தில் ஆசிரியர்கள் தவறவிடக்கூடாத அற நூலாக இருக்கிறது இந்த
புத்தகம்.
-------------------------------------------------------------------------------