தீரர் சத்தியமூர்த்தி பிறந்தநாள் - கல்லூரிவிழா சிறப்புரை

நாட்டுக்காக மட்டுமல்ல, பாரதி பாட்டுக்காகவும் 
போராடியவர் தீரர் சத்தியமூர்த்தி!
புதுக்கோட்டை-ஆகஸ்ட்.19. நாட்டுக்காக மட்டுமல்லாமல், மகாகவி பாரதியின் பாட்டுக்காகவும் போராடியவர் திருமயம் தந்த தீரர் சத்தியமூர்த்தி என்று அவரது பிறந்தநாள் விழாவில் புகழாரம் சூட்டினார் கவிஞர் நா.முத்துநிலவன்.
மாட்சிமை தங்கிய மன்னர்கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மீ.வீரப்பன் தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது-
நூற்றி இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன், இன்றைய நமது திருமயத்தில் பிறந்த சத்தியமூர்த்தி, சென்னைக் கிறித்துவக்கல்லூரியில் வரலாறும், சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்துவிட்டு, தமிழக வரலாற்றை மாற்றப் பாடுபட்டவர்.
தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரைத் தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமலல், அவரது தலைமையின்கீழ்  செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்! அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால், பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம்என்றே பெயரிட்டார்.
நாட்டுக்காகப் பாடுபட்டதோடு, பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, நமது பாரதி பாடல்களைத் தடைசெய்ததோடு, பாடல் நூல்களைப பறிமுதல் செய்யவும் ஆணையிட்டதைக் காரணம் காட்டி அன்றைய நம் சென்னை ராஜதானிபாரதி பாடல்களைத் தடைசெய்து, பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லைஎன்று தன் பேச்சைத் தொடங்கினார்.
எல்லாரும் அதிர்ந்து போனார்கள்... தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம்! நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம்.. மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்து கொள்ளவோ எரிக்கவோ கூட ஆணையிடலாம்...ஆனால் அது வீணான வேலை என்பதை கனம் சர்க்கார் புரிந்து கொண்டால் நல்லது”  என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாநில அரசு கைவிட்டது என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.
பதவிகளைத் துறந்து தனிநபர் போராட்டங்களில் ஈடுபட்டு, “வெள்ளையனே வெளியேறுஎன்னும் போரை இந்திய விடுதலை இயக்கத்தினர் நடத்திய போது, சிறைப்பிடிக்கப் பட்ட தீரர் சத்தியமூர்த்தி, தனது ஐம்பத்தைந்தாம் வயதிலேயே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிறைக் காவலர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காலமானார். அந்த வகையில் சிறைவாசத்தின்போது காலமான சத்தியமூர்த்தியின் தியாகம் மிகப்பெரிது.
அவரது பேச்சு வன்மையினாலேயே ரவுலட் சட்டம் மற்றும் மண்டேகு செம்ஸ் போர்டு சட்டங்களைப் பற்றி விவாதிக்க இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார். அவரிடம் அரசியல் பாடம் படித்த காமராசர், இந்தியா விடுதலை பெற்றபோது முதல் தேசியக் கொடியைத் தனது குருவின் வீட்டிலேயே ஏற்றிவைத்தார். முதலமைச்சரானதும் அந்த மாவீரரின்  துணைவியாரிடமே முதல் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டார்
அவரோடு, தேவதாசி ஒழிப்பு மசோதாவின்போது சட்டமன்றத்தில் வாதிட்டு வென்ற அன்னை முத்துலட்சுமியும் இதே மாமன்னர் கல்லூரியின் அந்நாள் மாணவி என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய வரலாற்றுத் துறை மாணவ-மாணவியர் நாளைய வரலாற்றில் இடம்பெறுவோராகவும், எழுதுவோராகவும் இருக்க வேண்டும்
மேற்கண்டவாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். அடுத்து உரையாற்றிய பாரதி இலக்கியக் கழகத்தின் அமைப்பாளர் ஜெயச்சந்திரன், சத்திய மூர்த்தியின் தேச பக்தியையும் தியாக வாழ்க்கையையும் மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார்.
விழாவிற்கு வந்திருந்தோரை வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் இரா.குமரன் வரவேற்றார். இணைப்பேராசிரியர்கள் முனைவர்ச.நந்தீஸ்வரன் அறிமுகவுரையும், துணைப்பேராசிரியர் முனைவர் செ.பனிதாசன் நன்றியுரையும் வழங்கினர்.
மன்னர் கல்லூரிக் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் முனைவர் விஸ்வநாதன், தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் உள்ளிட்ட பேராசிரியர் பலருடன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  
-----------------------------------------------
(செய்திக்குநன்றி-திரு.இரா.மோகன்ராம், தினமணி செய்தியாளர்            வெளியீட்டுக்கு நன்றி- தினமணி-திருச்சிப்பதிப்பு-21-08-2014)

7 கருத்துகள்:

 1. பாரதி பாடல்களைத் தடைசெய்ய முயன்ற செய்தி இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..நன்றி அண்ணா.
  அருமையான பேச்சு அண்ணா.

  பதிலளிநீக்கு
 2. புதுகையின் பெருமைக்குரியவர்களை மாணவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.நல்லபதிவு நன்றி சார்..

  பதிலளிநீக்கு
 3. பாரதியின் பாட்டுக்காகப் போராடிய செய்தி அறியாதது ஐயா
  அறிந்தேன், அறிந்து மகிழ்ந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. அறியாத தகவல்கள் அறிந்து கொண்டோம்! நல்ல உரை!

  பதிலளிநீக்கு
 5. I changed my browser, first internet explora.
  Now Google chrome.....

  பதிலளிநீக்கு