திருக்குறளில் தளைப் பிழையா?

முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
முதன்மைக் கல்வி அலுவலர் - புதுக்கோட்டை
--------------------------------------------- 
புதுக்கோட்டை மாவட்டத்தில் “அனைவர்க்கும் இடைநிலைக் கல்வி இயக்கம்“ சார்பில், அரசுப் பள்ளிகளில் 9,10ஆம் வகுப்புப் பாடம் நடத்திவரும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி நடந்து வருவது பற்றி முன்னமே நமது வலையில் எழுதியிருக்கிறேன். பார்க்காதவர்கள் பார்க்க-  http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post.html

அதன் நிறைவு நாளாகிய இன்று, முற்பகலில் என்வகுப்பை நடத்திவிட்டு வந்தபின், வேறொரு வேலையாக  எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் திரு நா.அருள்முருகன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். பின்னர், இன்றுதான் பணிமனை நிறைவடைகிறது என்பதை நினைவூட்டி, அவர்கள் ஏதாவது ஒரு மையத்திற்கு வந்து தமிழாசிரியர்களைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தேன். எங்கெங்கே நடக்கிறது என்று கேட்டுக்கொண்டவர், “வேறு பல வேலைகளும் இருக்கின்றன, அருகில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் பயிற்சியைப் பார்ப்போமே? என்று கூறிக்கொண்டே, நடக்க ஆரம்பித்து விட்டார்.
அவர்தான் எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...!
கடந்த மாதத்தில் ஒருநாள், என்னைப் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத்தில் பேச அழைத்திருந்தார்கள். விழா நாளைக்கு முந்திய நாள் அவர்களைப் பார்க்கப் போயிருந்த போதும், நான் அடுத்தநாள் பேசப்போவது பற்றிச் சொல்லவில்லை. ஏனெனில், வழக்கமாக 20, 30 பேர்தான் திருக்குறள் கழகக் கூட்டத்திற்கு வருவார்கள் என்பதால் அவரை அழைத்து அவருக்கு நேரவிரயம்செய்ய வேண்டாமே என்று நினைத்தே அழைப்பைத் தவிர்த்தேன் ஆனாலும், வேறு நண்பர்களின் வழியாகத் தகவல் அறிந்த அவர்கள், தனது சொந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு விழாவுக்கு வந்துவிட்டார். விழாக் குழுவினர் வேண்டியும் மேடைக்கு வராமல், “அய்யா பேச்சைக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்என்று முதல் வரிசையில் அமர்ந்து முழுப்பேச்சையும் கேட்டுவிட்டுத்தான் சென்றார். அப்படியோர் எளிமையான மனிதர்! அதோடு நல்ல தமிழறிஞரும் கூட! நேமிநாதம் பற்றி ஆய்வு செய்து தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தேர்ந்தெடுத்துப் படிக்கும் பழக்கமுள்ள நல்ல வாசகர். மிகச் சிறந்த கவிஞர்!  ஆனால், எந்த பந்தாவும் காட்டாத இயல்பான அரிய மனிதர்.
அவர் தமிழாசிரியர் பணிமனைக்கு வந்ததும், நேராக மேடையேறி, தான் பேச விரும்புவதைப் பேசிவிட்டு நடையைக் கட்டிவிடும் பிற அலுவலர் போலன்றி, 15 நிமிடத்திற்கும் மேல் கருத்தாளர் மகா.சுந்தரின் வகுப்பைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் மகா.சுந்தர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அருகிலிருந்த திருக்குறள் நூலை எடுத்துக் கொண்டு மேடை ஏறியவர் நேராகக் கரும்பலகையிடம் போனார்....
பின்வரும் 5,6 திருக்குறள்களை எழுதினார்..
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்... –குறள்-38
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை  அஃதும்... – குறள்-49
அறத்திற்கே  அன்பு... மறத்திற்கும் அஃதே துணை –குறள்-76
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு – குறள்-80
விழுப்பேற்றின் அஃதொப்பது - குறள-162    எழுதியபின் தமிழாசிரியர்களைப் பார்த்துக் கேட்டார்... “இந்தக் குறள்களில் வரும் ஆய்த எழுத்து எத்தனை மாத்திரை பெறுகிறது?”  தமிழாசிரியர்கள் பலரும் பள்ளி மாணவர்களைப் போல உற்சாகமாக, “அரைமாத்திரை“ என்று சத்தமாக-சரியாகச் சொன்னார்கள்.
சரிதான் அப்போதுதான் வெண்பாவுக்கு உரிய வெண்டளை பிழையாது“ என்ற அய்யா, அடுத்து ஒரு குறளைச் சொல்லி என்னை எழுதச் சொன்னார்கள். அய்யா ஏதோ ஆய்வு நோக்கில் சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நானும், அவர்கள் சொன்ன குறளைக் கரும்பலகையில் எழுதினேன்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில் – குறள்-363
இப்போது அய்யா மீண்டும் கேட்டார்கள், “இந்தக் குறளில் ஆய்த எழுத்துக்கு அரைமாத்திரை கொடுத்தால் நேரொன்றாசிரியத் தளை அல்லவா வருகிறது? இந்தக் குறளில் வள்ளுவர் தளைப் பிழை செய்துவிட்டாரா?
“ஒருவேளை ஆய்தக் குறுக்கம் என்றும் கால் மாத்திரை அளவு தான் என்றும் வைத்துக்கொண்டால் மற்ற இடங்களில் அந்தக் குறுக்கம் வராதது ஏன்? என்று ஆய்வு செய்யுங்கள் என்று சொன்னதும் தமிழாசிரியர்கள்  அசந்து போனார்கள்... 
இதுவரையிலான மாவட்ட அலுவலர்களிடமிருந்து, “நோட்ஸ் ஆப் லெசன் எங்கே?”  ”தாமதமாய் ஏன் வருகிறீர்கள்?முதலான கேள்விகளையே  கேட்டுப் பழகிய ஆசிரியர்களின் காதுகளில், ஓர் அலுவலர் “திருவள்ளுவர் வெண்டளையில் பிழை செய்துவிட்டாரா? அல்லது ஆய்த எழுத்துக்கு வேறு வடிவம் இருந்திருக்கிறதா? இதுபோல மாத்திரை மாறுமிடங்கள் வேறு எங்கெங்கு வந்திருக்கின்றன? ஆய்வு செய்யுங்கள்“ எனக் கேட்ட கேள்வி இது வரை விழுந்ததில்லை தானே?
அய்யா சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்.
எனக்கும் இதற்கு விடை தெரியவில்லை, இரவுத் தூக்கமும் வரவில்லை.
எங்கள் மாவட்டத்தில் இருந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றிருக்கும் தம்பி –இலக்கணப் புலி, இலக்கணத்திலேயே ஊறிக்கிடந்து ஆய்வுகள் செய்துவரும்- கொ.சுப.கோபிநாத் இருந்திருந்தால் பதிலும் சொல்லி தொல்காப்பிய மற்றும நன்னூல் நூற்பாவையும் சொல்லியிருப்பார் அய்யா என்று நான் சொன்னேன். அவரும் ஆமோதிப்பது போலத் தலையாட்டினார்.
அல்லது,
தமிழறிஞரும் கோவை சர்வசன மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தமிழாசிரியருமான அண்ணன், செந்தலை ந.கவுதமன்  அவர்கள்தாம் இதுபற்றிய இலக்கண விளக்கத்தைக் கொடுக்க வல்லார் என்றும் நினைத்துக் கொண்டேன்.
இந்த இலக்கண விளக்கத்தை யாரிடம் கேட்பது?
வள்ளுவர் கால வழக்கு எப்போது மாறியது? ஏன் மாறியது?
வள்ளுவரே வழக்கானது எப்படி?
“மாறுவது மரபு இல்லையேல் மாற்றுவது மரபு“ என்பது சரிதான்.
ஆனால், வெண்பா இலக்கணமோ, ஆய்தக் குறுக்க இலக்கணமோ மாறுமா?  
திருவள்ளுவர் தளைப் பிழை செய்துவிட்டாரா? 
------------------------------------------------ 
இந்த ஆய்வின் தொடர்ச்சியைக் காண  http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_5.html  வருக நண்பர்களே... - நா.மு.
--------------------------------------------------

15 கருத்துகள்:

 1. எனது சிற்றறிவுக்கு எட்டிய பதில் இது:
  1. தொல்காப்பியம் செய்யுள் 11,12 ஆகியவற்றின்படி, எம்ய்யெழுத்தானாலும், ஆய்தமானாலும் ஒலிக்கும் மாத்திரையளவு அரை தான்.
  2. ஆனால், செய்யுள் 6 இன் படி, ‘நீட்டி ஒலிக்க வேண்டினால் எந்த அளபு நீட்டி ஒலிக்க வேண்டுமோ அந்த அளபு இயல்புடைய ஒலியைக்கூட்டி ஒலித்துக் கொள்க’ என்று வருகிறது. (தமிழண்ணல் உரை).
  எனவே, வழு அமைதி மாதிரி, ’மாத்திரை அமைதி’யும் தொல்காப்பியமே கூறுகிறது என்பதைப் புரிந்துகொண்டால், கேள்வியே தவறு என்பது புலனாகும். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  பதிலளிநீக்கு
 2. மேலும், தொல்காப்பியம் செய்யுள் 1312, 1315 ஆகியவற்றையும் கருத வேண்டும்.
  1312 கூறுவது: “தன்சீர் உள்வழித் தளை வகை வேண்டா”.
  1315 கூறுவது: “அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய, தளைவகை ஒன்றாத் தன்மை யான.” –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  பதிலளிநீக்கு
 3. பின் வரும் தனியஞ்சலை எனக்கு அனுப்பியிருக்கும் நண்பர், எழுத்தாளரும் சென்னை வங்கிஊழியர் சங்கத் தலைவருமான திரு எஸ்.வி.வேணுகோபால் அவர்களுக்கும், இரவோடிரவாகத் தனது கருத்தை முதலில் எழுதிய நண்பர் நியூஜெர்சிக் கவிஞர் இராய.செல்லப்பா அவர்களுக்கும் எனது நன்றி. இவற்றைப் பற்றி மேலும் பேசுவோம்... நா.மு.
  ---------------
  7:48 AM
  sv.venu@gmail.com இன் படங்களை எப்போதும் காண்பி


  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

  திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்[தொகு]

  திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது.
  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)
  நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)
  அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014)
  இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம்.
  அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226)
  வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363)
  கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)
  இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுகொள்கிறோம்.
  இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
 4. nalla vivatham payanulla thamizharivinai petrukkonden. nandri

  பதிலளிநீக்கு
 5. Murugesh Mu
  பெறுநர்: "நா.முத்துநிலவன் MUTHUNILAVAN"
  தேதி: 26 ஜூலை, 2013 10:21 AM
  தலைப்பு: Re: [வளரும் கவிதை] திருக்குறளில் தளைப் பிழையா?

  இனிய தோழருக்கு,
  அன்பின் வணக்கம்.

  மிகச் சிறந்த தமிழ் ஆர்வலரை
  முதன்மைக் கல்வி அலுவலராக
  புதுக்கோட்டை மாவட்டம் பெற்றிருப்பதில்
  பெருமகிழ்வி கொள்கிறேன்.

  அய்யாவுக்கு என் வாழ்த்தைப் பரிமாறுங்கள்.
  -மு.மு

  பதிலளிநீக்கு
 6. அது தளைப் பிழை இல்லை என்றும் அதற்கான காரணத்தையும் எங்கள் அய்யா அப்போதே சொல்லித் தமிழாசிரியர்கள் உறைந்துவிடாமல் தொடர்ந்து வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்று கூறிச் சென்று விட்டார். நண்பர்கள் கருத்தறிந்து அதைச் சொல்லலாம் என்று இருந்தேன். நாளை (27-07-2013) புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையில் ஒரு பெரிய விழா... அதில் நாங்கள் பிஸி... நாளை அவசியம் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆய்தமும் குறளும்
  திருவள்ளுவர் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். இவரா தளை தட்டுமாறு கவிதை யாத்தார்? நம்ப இயலவில்லை. கற்றிலனாயினும் கேட்க அ தொருவற்கு, வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அ தொப்ப தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அ தொருவன் குறள்களில் தளை தட்டியுள்ளது எனும் கேள்வி நம்மை யாப்பிலக்கணத்தில் நீந்தச் செய்தது.
  “தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே, அளபெடை அல்லாக் காலை யான”(யாப்பருங்கலம்), “அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் அலகியல் எய்தாது என்மனார் புலவர்” (அவிநயம்), “ஒற்று அளபாய்விடின் ஓர் அலகாம்”(யாப்பருங்கலக்காரிகை).
  இச்சூத்திரங்களை அரணாகக் கொண்டு பார்க்கும்போது ஓருண்மை புலனாகிறது. யாப்பில் ஒற்றுக்கு அலகு இல்லை. ஆனால், அதே ஒற்று அளபெடுத்தால் மட்டும் அலகு பெறுகிறது. ஒருவேளை குறட்பாக்களில் ஒற்றளபெடை இருந்திருக்குமோ என்ற ஐயப்பாடும் எழுகிறது..
  இது ஒற்றளபெடை குறித்த இலக்கணப் புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
  பொதுவாக எழுத்துகள் தன் மாத்திரை அளவில் இருந்து பாதியாகக் குறைவதைச் சுட்ட புள்ளி இட்டனர் போலும்! க – ஒரு மாத்திரை. க் – அரை மாத்திரை. ம் – அரை மாத்திரை ம் (உள்ளே புள்ளி இட்டால்) – கால் மாத்திரை. குற்றியலுகரமும் குற்றியலிகரமும் புள்ளி பெற்றன. தொல்காப்பியமும் சங்கயாப்பு எனும் இலக்கண நூலும் இத்தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால், ஒற்றளபெடைபற்றிய வரிவடிவம் நன்னூலில் மட்டும் இடம்பெறுகிறது. இது காலத்தால் பிந்தியது.
  வள்ளுவர் காலமோ ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்டது.
  வரி வடிவம் பற்றிய ஆய்வும் பதிப்புப் பற்றிய ஆய்வும் நம்மை உந்துகின்றன.
  எப்படியோ திருக்குறளில் வந்துள்ள அந்த ஆய்த எழுத்து அலகு பெற்றுவிட்டது. அக்குறட்பாக்கள் இலக்கணம் கடந்து காலம் கடந்து கோலோச்சி நிற்கின்றன.
  ஆய்த எழுத்தே ஒருசில வேளை
  அலகு பெறுதல் அறி --
  கொ.சுப. கோபிநாத், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.

  பதிலளிநீக்கு
 8. மதிப்பிற்கு உரிய அய்யாவிற்கு வணக்கம் . மிக பெரிய தமிழ் ஆர்வலரான முதன்மை கல்வி அலுவலரின் கீழ் பணி புரிவதை பெருமையாக கொள்கிறேன். அய்யாவின் பணிவு அவரை மேன்மேலும் உயரத்திற்கு இட்டு செல்கிறது . இந்த செய்தியை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் உலகம் அறிய செய்த உங்கள் மனம் எத்தனை பேருக்கு வரும் என்பது கேள்வி குறியே ! புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டேன். உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் உங்கள் வலைப் பூ வை தவறாமல் படித்து வருகிறேன். உங்கள் பேச்சு என்னை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை . உங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் .

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்.நல்ல இலக்கண அறிவுள்ள தம்பி கோபி தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
  நல்ல கருத்துப்பகிர்வு. இத..இத..இதத்தான் நா எதிர்பாரத்தேன். பண்டித நடையில் விவாதிப்பதை விடவும்,எல்லார்க்குமான நடையில் இலக்கண-இலக்கிய ஆய்வுகள் தொடரவேண்டும். நான் முன்பே சொன்னது போல இன்றைய விழாவில் என் பங்கும் சிறிது உள்ளது. இரவு வந்து எழுதுகிறேன்.. இணைந்திருங்கள்... நா.மு.27-07-2013 காலை 8.20

  பதிலளிநீக்கு
 10. athanal than avar ceo aga uyarthu irukirar. pdkt teachers romba koduthu vaithavrhal than

  பதிலளிநீக்கு
 11. நல்ல சிந்தனைக்குரிய விவாதம்.தமிழாசிரியருக்கு தேவையான செய்திகள் .தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி.நாங்கள் வளம் பெற.ஆசிரியர்களுக்கு சிறந்த முதன்மைக் கல்வி அலுவலர் கிடைத்திருக்கிறார்கள்.25வருட ஆசிரியப்பணியில் 27.7.13 அன்று நடந்த விழா தான் முதன் முதலாக ஆசிரியர்களை ஊக்கப்படுத்த கொண்டாடிய விழா.மிகவும் பெருமையாக இருந்தது.நன்றி இவ்விழா நிகழ காரணமாக இருந்த அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. இதுவரை அறிந்திராத தமிழ்த் தகவல். உங்களையே தடுமாற வைத்துவிட்டாரே முதன்மைக் கல்வி அலுவலர். நிச்சயம் இதற்கான விடை யாரேனும் வைத்திருப்பார்கள் இது போன்ற அரிய செய்திகளை வழங்குவதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. பள்ளிக் காலத்துடன் யாப்பிலக்கணம் குறித்து சிந்திப்பதை நிறுத்திய பின்னர், ஐயாவின் ஆர்வம் தூண்டும் கேள்வியாலும், அதனைப் பதிவாக்கி கவனமீர்த்த உங்கள் பதிவாலும் யாப்பிலக்கணத்தையும் வள்ளுவரின் வாய்மொழி தனையும் கற்க அவா ஏற்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்!
  முன்உயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி
  மன்னல் வேண்டும் அல்வழி யான - தொல்.எ.423
  அஃது, இஃது, என்பன எழுவாயாக வரும்மொழி முதலில் உயிர் வந்தால் மட்டும் அச்சொல்லில் உள்ள ஆய்தம் நிலைபெறும் என்பா் தொல்காப்பியனார்.

  வீழ்நாள் படாஅமைநன் றாற்றின் அஃதொருவன்... – குறள் 38
  அன்பின் வழியது உயிர்நி லைஅஃதிலார்க்கு – குறள் 80
  விழுப்பேற் றின்அஃதொப்ப தில்லையார் மாட்டு - குறள் 162
  அற்றார் அழிபசி தீா்த்தல் அஃதொருவன் - குறள் 226
  யாண்டும் அஃதொப்ப தில் – குறள் 363
  கற்றிலன் ஆயினும் கேட்க! அஃதொருவற்கு - குறள்- 414
  அற்றால் அளவறிந்து உண்க! அஃதுடம்பு - குறள் 943
  இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்

  மேல் உள்ள இடங்களில் ஆய்தம் ஓசையில் ஓங்கி ஒலிப்பதை உரைத்து உணரலாம், இவ்விடங்களில் நிரையசையாகக் கொள்க.

  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்... – குறள் 49
  அறத்திற்கே அன்பு... மறத்திற்கும் அஃதே துணை – குறள் 76
  நுனிக்கொம்ர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் - குறள் 476
  அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல்
  ஆகிய இடங்களிலும்
  வெஃகாமை அதிகாரத்தில் வருகின்ற பத்துக் குறள்களிலும் ஆய்தம் தன் ஓசையையை அப்படியே பெறுவதால் நேரசையாகக் கொள்க!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 15. அய்யா பாரதிதாசன் அவர்களின் தமிழறிவிற்கு என் தலைதாழ்ந்த வணக்கம். இந்தப் பின்னூட்டத்திற்கும் நன்றி. இந்தக் கருத்தை நமது தளத்தின் “திருக்குறளில் தளைப்பிழை இல்லை, பாடபேதம் உண்டு“ எனும் கட்டுரையின் பின் இட வேண்டும் என்று நினைக்கிறேன். எனினும் நன்றி. ஆய்வுகள் தொடரட்டும். நானும் தொடர்வேன். கருத்துரைத்த நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்.
  தங்கள் - நா.மு.

  பதிலளிநீக்கு