தேர்வில் தோல்வி - மாணவ-மாணவி தற்கொலை என்ற செய்தி தந்த வலியில் வந்த பாடல்


                       

               பல்லவி
முட்டாள் மாணவர் யாருமில்ல - எதுவும் 
முடியாத பிள்ளைகள் எவருமில்ல 

                                      அனுபல்லவி :
தெரிஞ்சிக்கணும் இத புரிஞ்சிக்கணும் - நம்ம 
பிள்ளைகளின் படிப்ப பகிர்ந்துக்கணும் 
                                
                                      சரணம் :  
ஆசிரியர் என்பவுங்க  யாரு? - அவுங்க 
பள்ளியில் இருக்குற பெற்றோரு 
பெற்றோரு என்பவுங்க யாரு? அவுங்க 
வீட்டுல இருக்குற வாத்தியாரு              (தெரிஞ்சிக்கணும்

'படிச்சுப் பாத்தேன் புரியலையே - பள்ளிப் 
பாடம் மனசுல பதியலையே!
மதிப்பெண் எடுக்கத் தெரியலையே' - என 
மண்ட குழம்புது நம்ம புள்ளையே!            (தெரிஞ்சிக்கணும்

மதிப்பெண் எடுப்பது அவசியம்தான் - ஆனா
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லே!
இருக்குற திறமைய புரிஞ்சிக்கணும் - அத 
எப்படியும் வளர்க்க தெரிஞ்சிக்கணும் -       (தெரிஞ்சிக்கணும்

ஏ.ஆர்.ரகுமான் பத்தாவது போகல - அந்த 
பில்கேட்ஸ் கூட பி.யூ சி.தாண்டல 
டெண்டுல்கர் கூட டெண்த்த தாண்டல - ஆனா
வாழ்க்கையில் சரித்திரம் படைக்க மறக்கல   (தெரிஞ்சிக்கணும்

(ஓங்கிய குரலில்...)
தெரிஞ்சிக்கணும் இத புரிஞ்சிக்கணும் - நம்ம 
பிள்ளைகளின் படிப்ப பகிர்ந்துக்கணும் 
முட்டாள் மாணவர் யாருமில்ல- எதுவும்
முடியாத பிள்ளைகள் எவருமில்ல...
------------------------------------------------

(தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இயக்கமும் இணைந்து புதிய கல்வி பயிற்றுவித்தல் முறைகளை பொதுமக்களும் கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களும் -ஆசிரியர்களும் கூட - புரிந்துகொள்வது அவசியம் எனும் கருத்தினை பிரச்சாரம் செய்ய நான் எழுதித் தந்த பாடல். கடந்த 2011இல் 150க்கு மேற்பட்ட அறிவியல் இயக்க TAMIL NADU SCIENCE FORUM -TNSF- கலைக்குழுக்கள் இதுபோன்ற பாடல்களுடன் நாடகங்களையும் தமிழ்நாடு முழுவதும் நடத்தின.
--------------------------------------- 
இப்போது, தேர்வு முடிவுகள் வந்த கையோடு மாணவ-மாணவியர் சிலரின் தற்கொலைச் செய்திகளும் வந்த-தந்த வலியில் இதைத் தேடிப்பிடித்துப் பாடிப்பார்த்தேன். நீங்களும் படியுங்களேன்.
ஆனால் கணியில் வலையில்....என்
குரலை ஏற்றத் தெரியலையே -இந்தக்
குறைதான் இன்னும் மாறலையே-அந்த
முறைதான் இன்னும் புரியலையே!
 – நா.முத்துநிலவன்

09-05-2013)
------------------------------------------------------------------- 
இணைந்த செய்திகள் - 

வியாழக்கிழமை, 9, மே 2013 (12:32 IST) -  நன்றி - http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98932

மதிப்பெண் குறைந்ததால் கோவையில் மாணவி தற்கொலை 
கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மதிப்பெண் குறைந்ததற்கும், தேர்வில் தோல்வி பெற்றதற்கும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உடடினயாக இந்த ஆண்டே மறுதேர்வெழுதி, உயர்கல்வியைத் தொடர வாய்ப் பிருக்கும் போது, தேவையற்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது.
------------------------------------------ 
பதிவு செய்த நாள் : May 09 | 11:19 pm - நன்றி - http://www.dailythanthi.com/node/276041
சென்னை - பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்த சென்னை மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிளஸ்–2 தேர்வில் தோல்வி சென்னை கொடுங்கையூர் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மேத்யூவ்(வயது45). கொத்தனார். இவரது மனைவி மார்த்தா(36). இவர்களுக்கு டெய்சி(17) என்ற மகளும், காளிப்(13) என்ற மகனும் உள்ளனர். இதில் டெய்சி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ்–2 தேர்வு முடிவை அவர் பார்த்தார். அப்போது மாணவி டெய்சி தேர்வில் 621 மதிப்பெண்கள் பெற்று வரலாறு பாடத்தில் பெயில் ஆனது தெரியவந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை இதில் மனவேதனையுடன் வீட்டிற்கு வந்த அவர் தேர்வு முடிவு குறித்து தனது தந்தைக்கு செல்போனில் தெரிவித்தார். இதைக்கேட்ட அவர் மகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வேலைபார்த்த தனது மனைவி மார்த்தாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த டெய்சி பக்கத்து அறைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
குறைந்த மதிப்பெண் பெற்றார்  இதேபோன்று ராயபுரம் தம்பிலேன் பகுதியை சேர்ந்த செல்லதுரை மகள் வினோதினி(17). இவர் பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். தேர்வில் தான் அதிக மார்க் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவர் 988 மதிப்பெண்கள் பெற்றார். தான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என தனது தோழிகளிடமும், வீட்டில் இருந்தவர்களிடமும் கூறி வேதனை அடைந்தார்.
தூக்கில் தொங்கினார் இந்த நிலையில்  மாலை 4 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது தாயார் அலறினார். இதைக்கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------  

7 கருத்துகள்:

  1. /// மதிப்பெண் எடுப்பது அவசியம்தான் - ஆனா
    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லே!
    இருக்குற திறமைய புரிஞ்சிக்கணும் - அத
    எப்படியும் வளர்க்க தெரிஞ்சிக்கணும் ///

    முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்...

    அருமையான பாடல்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பெற்றவரை உணரவிடாமல், செய்வதில் ஆங்கில வழி ம்ற்றும் தனியார் பள்ளிகள் வெற்றி பெற்றிருப்பதன் வெளிப்பாடே இந்தச் செய்தி... என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு செயற்கையான பதற்றத்தை உருவாக்கிய இந்தப் பள்ளிகளை அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை

    பதிலளிநீக்கு
  3. சரக்கு உள்ளவன் ஒன்று, சரக்கை விளம்பரப்படுத்தவேண்டும், அல்லது தன்னை விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வளவு ஆழ்ந்த கருத்துள்ள, மாணவர் வாழ்க்கைக்குப் பயனுள்ள, பாடலை எழுதிவிட்டு, நீங்கள் வாடலாமா? உங்கள் மாணவர்களை விட்டுப் பாடச்சொல்லி, அலைபேசியில் பதிவு செய்தீர்களானால் வலைதளங்களில் சேர்த்துவிடுவது மிக எளிது.

    பதிலளிநீக்கு
  4. செல்லப்பா சார் உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், “மாணவர்களை விட்டுப் பாடச்சொல்லி, அலைபேசியில் பதிவு செய்து வலைதளங்களில் சேர்ப்பது“ என்னும் தொழில் நுட்பம்தானே தெரியமாட்டேங்குது? எனக்கு என் பாட்டையே கணினியில் ஏற்றத் தெரியலையே! உங்களால் சொல்லித் தர முடியுமானால் எழுதுங்கள் செய்கிறேன்
    நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  5. தேர்வு என்பதும் ரிசல்ட் என்பதும் முடிவல்ல.

    பதிலளிநீக்கு
  6. கல்வித்திட்டங்களில் பெரிய மாற்றங்கள் மாற்றங்கள் வரவேண்டும்.

    கல்வி கற்பதின் முதல் படி.

    கற்பது வாழ்னாள் முழுவது, தொடரும் ஒரு பயணம்.

    கற்பதின் பயன் அறிவை அடைய வழி செய்யும். அது எப்படி நிகழும் என்று கல்வித்திட்டத்தில் பலருக்கு அறிய வாய்ப்பில்லை.
    பல கல்வியாருக்கு இதைப் பற்றி தெரியாது. ஆசிரியர் பயிற்சி முறையும் அப்படி. உபல ஆசிரியர்கள்,தங்களால் இயன்றவரை,
    முயற்சி செய்து மாணவர் மனதில் இடம்பிடிக்க, மாணவர் ஒரு நிறுவனத்தில் இடம் பிடித்து வளமாகிறார்கள். இடம் பிடிக்காத ஆசிரியர்களும் மாணவர்களும் பிடித்தவரைவிட பல மடங்கு. இதற்கெல்லாம் காரணம்? தீர்வு??
    'யாருக்கும் கவலை இல்லை.
    http://sprituality-is-knowledge.blogspot.in/2011/09/stories-that-explain-knowledge.html;
    http://education-a-pain.blogspot.in/2011/12/blog-post.html
    படிச்சுப் பாருங்க. பிடிச்சா பெற்றொர், மாணவர், ஆசிரியர்களுக்கு சொல்லுங்க்கள்.
    நடராஜன்

    பதிலளிநீக்கு
  7. அய்யா நடராஜன் அவர்களே, தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால், உள்ள குழப்பம் போதாதென்று நீங்கள் வேறு ஸ்பிரி்ச்சுவல் அது இது என்று கல்வியை மேலும் குழப்ப வேண்டாம். ஆன்மீகக் கருத்தெல்லாம் ஆண்டவனிடம்தான் போய் முடியும், ஆண்டவன் மதத்தால் பிரிந்து கிடக்கிறான், மதம் சாதிகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கிறது. என்பதைத் தாங்கள் அறிந்திருக்க வேண்டும். வெறும் மனமாற்றம் எல்லாம் கற்பனைதான். ”தானா எல்லாம் மாறும்என்பது பழைய பொய். நான்வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்”-கந்தர்வன்.

    பதிலளிநீக்கு