கவிஞர் இளங்கோவின் கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள்


நல்ல கவிதைகள் வாழ்க்கைக்கு வழிகாட்டும்!
கவிதை நூலை வெளியிட்டு, கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!

---------------------------------------------------------------------------------------
கவிஞர் இளங்கோ எழுதிய மழையின் நிறம் பச்சை கவிதை நூலை, முத்துநிலவன் வெளியிட முதல்பிரதியைப் பெற்றுக்கொள்கிறார் வெங்கடேஸ்வராக கல்விக்குழுமத் தலைவர் கவிஞர் கதிரேசன். அருகில் வலமிருந்து இடமாக- உணவக உரிமையாளர் சங்க மாவட்டத்தலைவர் சண்முக.பழனியப்பன், தமுஎகச மாவட்டச் செயலர் ரமா ராமநாதன், கவிஞர் இளங்கோ, பூபாளம் பிரகதீஸ்வரன் சாகித்திய அகாதெமி குழுஉறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, , மீராபதிப்பக உரிமையாளரும் ஆனந்தஜோதி ஆசிரியருமான மீராசுந்தர் கவிஞர் ராசி.பன்னீர்ச்செல்வன் முதலானோர் உள்ளனர்
------------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை-ஏப்.1
       புதுக்கோட்டையில் நடந்த கவிஞர் இளங்கோவின் மழையின் நிறம் பச்சைகவிதைநூல் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்து நிலவன், “கண்தானம் ரத்ததானம் போல, புத்தக தானமும் செய்வீர் என, இலக்கிய ரசிகர்களையும் எழுத்தாளர்களையும் கேட்டுக்கொண்டார்.
       சர்வேயர் கூட்ட அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்- மீரா பதிப்பகம் சார்பில் நடந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு பூபாளம் பிரகதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் கவிஞர் ரமா. ராமநாதன் வரவேற்புரையோடு விழாத் தொகுப்புரையும் ஆற்றினார்.
       கவிதை நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நா.முத்து நிலவன் மேலும் பேசியதாவது-
       கவிதை என்பது சொற்களைச் சேர்த்து எழுதுவதிலோ, படிப்பதிலோ இல்லை, அது உணரப்படுவது. எதுகை மோனை இல்லாமலும் கவிதை வரும். தேமா புளிமா சரியாக இருந்தால்மட்டும் கவிதையாகாது. மாபெரும் கவிஞன் புரட்சிக் கவிஞன்- பாரதிதாசன் எழுதிய 2 வரியை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. அதனால் அந்த வரிகள் புகழ்பெறவும்இல்லை. ஆனால், அதே 2வரியை உள்ளடக்கி, எதுகை மோனை இல்லாமலே அதற்குமுன் பெயர்வெளியில் தெரிந்திராத ஒரு புதியவர்- எழுதிய 2வரிகள், புதுக்கவிதை வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டு விட்டன. ஆமாம், “இரவில் வாங்கிய இந்திய விடுதலை என்று விடியுமோ யார் அறிகுவரே! என பாரதிதாசன் எழுதி நாள் மலர்கள்தொகுப்பில் உள்ள வரிகளை விட இரவில் வாங்கினோம், விடியவே இல்லை என சேலம் ம.அரங்கநாதன்  எழுதியது புகழ்பெற்று விட்டது. இதுதான் கவிதையின் நுட்பம். உண்மையை நேரடியாக மிகுந்த அலங்காரமில்லாமலும் அதே நேரம் அளவான அழகோடும் சொலவதுதான் சிறந்த கவிதையாகும். அந்த வகையில் கவிஞர் இளங்கோவின் பல கவிதைகள் அழகாகவும் சமுதாயப் பார்வையோடும் இருப்பது பாராட்டுக்குரியது.
      சமூகக் கோபத்தைக் கிளறிவிட ஒரு சிறுபொறிகூடப் போதுமானது. ஒன்றுமில்லாததை ஊதிஊதிப் பார்த்தாலும் பற்றவைக்க முடியாது. இரண்டாம் உலகப்போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்ததில் ஒரு சிறு புகைப்படத்திற்குப் பெரும் பங்குண்டு. ஒரு சிறுமி வெற்று உடலோடு ஓவென அலறிக்கொண்டு ஓடிவரும் அந்தப் புகைப்படம் இன்றுவரை போருக்கு எதிரான பிரச்சாரத்தை அமைதியாகச் செய்துவருகிறது. அதேபோல, இப்போது தமிழகத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தை யாரும் தூண்டிவிட வில்லை. அந்தச் சிறுவன் பாலச்சந்திரன், அப்பாவியான முகத்தோடு மார்பில் குண்டுதுளைத்துக் கிடக்கும் காட்சியைப் பார்க்கும் யாருக்கும் சொல்லொணாத் துயரும் கோபமும் வருவதை யாரால் தடுக்க முடியும்? அதுபோல, இந்தக் கவிதைத் தொகுப்பில் சில பொறிகள் கோபத்தைத் தூண்டுவதுடன் நாம் யார்பக்கம் இருக்க வேண்டும் என வழிகாட்டவும் செய்கின்றன. ரூபாய்த் தாளில் எழுதப்பட்டது எனது சாதகம் என, திருமணம் பற்றிய ஒரு பெண்ணின் அவலத்தைச்சுட்டும் கவிதை நம்நெஞ்சைச் சுடுகிறது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள், இல்லையில்லை திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று வேறுசிலர் சொல்கிறார்கள்.ஆனால் உண்மையில் திருமணம் வர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் இதுபோலும் –வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய- சிறந்த கவிதைகள் கொண்ட “மழையின் நிறம் பச்சைகவிதைத் தொகுப்பை அனைவரும் வாங்கிப ப்டிக்க வேண்டும்.
கண்தானம், ரத்ததானம் போல, புத்தக தானமும் செய்வீர்!
ரத்ததானம், கண்தானம் போலப் புத்தக தானமும் சிறந்த தானம்தான். அண்மையில் புதுக்கோட்டையில் உள்ள கவிஞர் கந்தர்வன் நூலகத்திற்கு நான் எனதுசொந்தப் பொறுப்பில், ரூ.10,000 மதிப்புள்ள அய்யா ஆனைமுத்துவின் தந்தைபெரியார் சிந்தனைகள்“, தியாகு மொழிபெயர்த்த காரல் மார்க்சின் மூலதனத் தொகுதிகள்“, பேராசிரியர்அருணனின் காலந்தோறும் பிராமணியம்எட்டுத்தொகுதிகள், மற்றும் கம்பராமாயணம்உரையுடன் கூடிய 9 நூல்கள் முதலான - 54 புத்தகங்களைக் கொடுத்தேன். புத்தகங்களை வாங்கிப் படிப்பதோடு, குழந்தைகளையும் படிக்கச் செய்யுங்கள். குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். தன்னை அறிய வைப்பதோடு, உலகத்தையும் அறியச் செய்யும் புத்தகங்களே புதிய உலகத்தைப் படைக்கத் தூண்டும்
           இவ்வாறு கவிஞர் நா.முத்து நிலவன் பேசியதோடு, கவிஞர் இளங்கோவின் மழையின் நிறம் பச்சை  கவிதைத் தொகுதியை வெளிட, முதல்பிரதியை ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்விக்குழுமத் தலைவர் கவிஞர் ஆர்.எம்.வீ. கதிரேசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, சிறப்புப் பிரதிகளைப்பெற்றுக்கொண்ட கவிஞர் கவிவர்மன், சிறுதொழில் அதிபர்கள் சங்கத் தலைவர் பிரிதிவிராஜன், ஜேஸீஸ் முன்னாள் தலைவர் “கோடீஸ்வரா“ அழகப்பன், நல்நூலகர் விருதுபெற்ற திருமங்கலம் இளங்கோ, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சொக்கலிங்கம், மதுரை சிலப்பதிகார மன்றத்தலைவர் சீனிவாசன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து நூலுக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் தங்கம்மூர்த்தி நூலை வெளியிட்ட  மீரா சுந்தர் ஆகியோர் வாழ்த்துரைக்குப்பின் கௌரவிக்கப்பட்டனர்.  
விழாவில் வர்த்தகர் கழகக் கௌரவத் தலைவர் சேவியர், தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் ஆர்.நீலா, அறிவியல் இயக்கத்தைச் சேர்நத சிவராம கிருஷ்ணன், நல்லாசிரியர் பொன்.கருப்பையா, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்சங்கப் பொதுச்செயலர் சாமி.சத்தியமூர்த்தி, பொன்மாரி கல்விக்குழுமச் செயலர் ராமுக்கண்ணு, பட்டிமன்றப் பேச்சாளர் மகா.சுந்தர், இடைநிலை ஆசிரியர்சங்கத்தலைவர் குமரேசன், தமிழாசிரியர்கழகத் தலைவர் திருப்பதி, இலக்கியப் பேரவைத் தலைவர் முத்து.சீனிவாசன், கவிஞர்மன்றத் தலைவர் நிலவை.பழனியப்பன், கவிஞர்கள் முத்துப்பாண்டியன், ஸ்டாலின் சரவணன், கீதா, சுவாதீ, முகிலரசு, புதுகைப் புதல்வன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் கவிஞர் இளங்கோ ஏற்புரையாற்ற,  தமுஎகச கவிஞர் சு.மதியழகன் நன்றி கூறினார்.  
---------------------------------------------------------------------------------------
நன்றி-தினமணி(01-04-2013),தீக்கதிர்(02-03-2013),தினமலர்,திஇந்து(03-04-2013)நாளிதழ்-திருச்சிப் பதிப்புகள் – செய்தி, புகைப்படம் திருவாளர்கள் மோகன்ராம்,  மதியழகன்,  ஆரோக்கியராஜ், ராஜ்குமார், ஜெயச்சந்திரன்,  
---------------------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. கண்தானம், ரத்ததானம் போல, புத்தக தானமும் செய்வீர்!

    விழாவின் சிறப்பு மகிழ்வளிக்கிறது
    வாழ்த்துக்கள்//

    பதிலளிநீக்கு
  2. கவிஞர் இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல புத்தகம் வெளியிட்டு புகழ்பெரும்படியும் வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி கவியன்பர்களே!
    உங்கள் வாழ்த்தை இளங்கோவிடம் சொன்னேன். இயலுமெனில் அவரிடமே தொடர்பு கொண்டு பேசுங்கள். நூல்பெற்று விமர்சனம் தர முடியுமானால் அவரும் நானும் பெரிதும் மகிழ்வோம்.
    அவரது செல்பேசி - 91 9443173311
    அன்புடன்- நா.மு.

    பதிலளிநீக்கு
  4. "கவிதை என்பது சொற்களைச் சேர்த்து எழுதுவதிலோ, படிப்பதிலோ இல்லை, அது உணரப்படுவது. எதுகை மோனை இல்லாமலும் கவிதை வரும். தேமா புளிமா சரியாக இருந்தால்மட்டும் கவிதையாகாது. மாபெரும் கவிஞன் –புரட்சிக் கவிஞன்- பாரதிதாசன் எழுதிய 2 வரியை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. அதனால் அந்த வரிகள் புகழ்பெறவும்இல்லை. ஆனால், அதே 2வரியை உள்ளடக்கி, எதுகை மோனை இல்லாமலே –அதற்குமுன் பெயர்வெளியில் தெரிந்திராத ஒரு புதியவர்- எழுதிய 2வரிகள், புதுக்கவிதை வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டு விட்டன. ஆமாம், “இரவில் வாங்கிய இந்திய விடுதலை என்று விடியுமோ யார் அறிகுவரே!” என பாரதிதாசன் எழுதி “நாள் மலர்கள்“ தொகுப்பில் உள்ள வரிகளை விட “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை” என சேலம் ம.அரங்கநாதன் எழுதியது புகழ்பெற்று விட்டது. இதுதான் கவிதையின் நுட்பம். உண்மையை நேரடியாக மிகுந்த அலங்காரமில்லாமலும் அதே நேரம் அளவான அழகோடும் சொலவதுதான் சிறந்த கவிதையாகும்." என்றவாறு

    தாங்கள் விவரித்த கவிதை, கவிதை அழகு என்பன சிறந்த, ஆழமான கருத்துத் தெளிவு என்று நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இது ஆய்வுக்கட்டுரையல்ல, சாதாரணமான ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசியது. எனினும் எனது இயல்புக்கேற்பக் கவிதை பற்றிய எனது புரிதலைச் சொன்னேன். இதையே செய்தியாகப்படித்து கவனிக்கிறீர்கள் எனில் நீங்கள் பெரிய கவிதாரசிகராக இருக்கவேண்டும். எனது -தமிழ்க்கவிதைகள் பற்றிய- ஏனைய கட்டுரைகளையும் படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன். ஏனெனில், அருமை சூப்பர் எனும் வார்த்தைகளில் அடங்குவதல்ல ரசனை என்பது என் தனிப்பட்ட கருத்து... சரிதானே?
    (உங்களைப்பற்றியும் அறிய ஆவல்)
    அன்புடன், நா.மு.

    பதிலளிநீக்கு