திரு பி.பி.சீனிவாஸ் 60களில் தொடங்கி 90கள் வரையும்
கூடத் தமிழ்த்திரையுலகில் தேனாய் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். சிவாஜிக்கும்
எம்ஜிஆருக்கும் எப்படி வித்தியாசப்படுத்தி டிஎம்எஸ் பாடுகிறார் என்று
பள்ளி-கல்லூரியில படித்தபோது எங்கள் நண்பர்கள் குழு ஆச்சரியப்பட்டுப் பேசிக்கொள்வோம்.
அதே வேளையில் ஜெமினி கணேசனுக்கென்றே செய்து வந்தது போல
இருக்கும் பிபிஎஸ்சின் தனிக்குரல். பிறகு முத்துராமன்(காதலிக்க நேரமில்லை),
நாகேஷ்(பலபடங்கள்) போன்றவர்களுக்கும் அதே குரல் பொருத்தமாகவே பட்டது.
காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, அழகிய மிதிலை
நகரினிலே
எந்த ஊர் என்றவளே முதலான அவரது பாடல்கள் கண்ணதாசன் வரிகளில்
மறக்க்க்
கூடியதா என்ன?
திரு டி.எம்.எஸ்., பி.சுசீலாம்மா இருவரின் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலா தத்துவமா
எனும் தலைப்பில் நகைச்சுவைத்தென்றல் திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நான் கலந்துகொண்டு சென்னையில் பேசிய ஒரு பட்டிமன்றத்தில் பார்வையாளராக வந்திருந்த
திரு பிபிஎஸ் அவர்கள் மேடைக்கு வந்து எங்களையெல்லாம் வாழ்த்திவிட்டுப் போனது
ஆறேழு ஆண்டு ஆனாலும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
அப்போது, நானும் திரு லியோனி அவர்களுடன் இணைந்து, புகழ்பெற்ற டிஎம்எஸ் பிபிஎஸ் பாடிய ”பொன்ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை“ பாடலை பாடி பார்வையாளர்களின் கைத்தடடலை அள்ளியிருந்தோம்... அடாடா... அது மறக்கக் கூடிய நினைவா என்ன?
பார்வையாளர்களாக வந்திருந்தோர் டிஎம்எஸ், சுசிலாம்மா, பிபிஎஸ் அல்லவா?
இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று
நினைத்திருந்த நேரத்தில்,
நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ்.வி.வி. அவர்களின்
மின்னஞ்சல் வந்த்து....
”அடாடா...
இதைவிட நா என்னத்த எழுத?” என்று எனக்குள்ளேயே
சொல்லிக்கொண்டு,
அவரது கட்டுரையையே இங்குத் தருகிறேன். அவர் இன்னும் வலைப்பக்கம் தொடங்காமல் இருப்பது
ஏன் என்று அவரையே கேளுங்கள்...
நண்பர் திரு எஸ்.வி.வி. அவர்களின் மின்னஞ்சல்-
sv.venu@gmail.com
--------------------------------------------------------------------------
மௌனமே பார்வையால் ஒரு
பாட்டு பாட மாட்டாயா....
எஸ் வி வேணுகோபாலன்
அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் இன்று காலமாகிவிட்டார்.
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் என்று முணுமுணுக்காத பழைய தலைமுறை இருப்பது அபூர்வம். மெல்லிசை என்று அழைக்கப்படும் திரை இசையை அதனினும் மெல்லிய இசையாகத் தமது குரல் வழி பொழிந்தவர் பி பி எஸ்.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், கதாநாயகர்கள் இருந்த அந்த அறுபதுகளில் சிவாஜி, எம் ஜி ஆர் என்ற பெரிய நடிகர்களுக்கு டி எம் சவுந்திரராஜன் நிரந்தர பாட்டுக்காரராகத் திகழ்ந்தார். எங்கே நிம்மதி என்று வானொலியில் பாடல் புறப்படுகையிலேயே ரசிகன் சிவாஜி படம் என்று முடிவுக்கு வந்துவிடுவான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று தொடங்கும் பாடலை வாத்தியார் பாட்டுடா என்று கூத்தாடத் தொடங்கிவிடுவான்...
பி பி எஸ் அவர்களது அலை வரிசை வேறு தளத்தில் இயங்கியது. பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ , ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம். துள்ளலான காதலைக் கூட அவரது கொஞ்சும் மொழி இலக்கியப் படுத்தியதை, தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் என்னும் எதிர் நீச்சல் படத்தின் பாடலில் கேட்க முடியும். வாலியின் அருமையான வார்த்தை விளையாட்டு நிறைந்த அந்தப் பாடலில் (மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் என்று பி சுசீலா இழைக்கும் இடம் அத்தனை அழகு), நாகேஷின் சேட்டை நிறைந்த உடல் மொழிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும் சரணங்களைப் பாடியிருப்பார் பி பி எஸ்.
ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் காதல் உருக்கத்திற்கு இலக்கணம் எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே எழுத வேண்டிய சாகித்தியம். உதடுகளை அவர் எப்படிப் பிரித்து எப்படி மூடி பாடலின் சொற்களை உச்சரித்தார் என்று யோசிக்க வைக்கும் எழில் அவரது குரலில் நெளிகிறது. வீரத் திருமகன் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலிலும் சுசீலா அவருக்கு ஏற்ற இணை குரலாய் ஒலித்தார்
எம் எஸ் விஸ்வநாதன் தமது எந்த மெல்லிசைக் கச்சேரியிலும் முதல் பாடலை இசைக் கருவிகளைக் கொண்டு தான் தொடங்குவார். எண்பதுகளில் நான் பார்த்தவரையில் அது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம் என்ற இனிமை நிறைந்த பாடலாகத் தான் இருக்கும். அதில், இளைய கன்னிகை என்ற சொற்களை அத்தனை கிறக்கமாக எடுத்துக் கொடுப்பார் பி பி எஸ். அதே கதியில் சரணங்களை இசைக்கும்போதும், ஹம்மிங் செய்கையிலும் அப்படி ஒரு சுகானுபவத்தை அளிப்பார் கேட்போர்க்கு.
அவருக்கே உரித்தான வெல்வெட் குரலில் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய போலீஸ்காரன் மகள் படத்தின், பொன் என்பேன் சிறு பூ என்பேன் என்ற கீதம், வித்தியாசமான திரை இசைப் பாடல்களைத் தொகுத்தால் அதில் முக்கிய இடத்தில் இருக்கும்.
சொற்களை அவர் கொஞ்சம் நகாசு வேலை செய்து சொகுசாக்கி உருட்டி விடுவது போல் வந்து நமது இதயத்தைத் தொடும்....சோகப் பாடல்களோ இதயத்தை வருடும். ஜெமினி கணேசனுக்கென்றே அவர் குரல் கொடுத்த கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள் இரவின் தனிமையில் நம்மை வேறு ஒரு கிரகத்திற்குக் கொண்டு போய்க் குடியமர்த்தும். அப்படியான பாடல்களில் மயக்கமா கலக்கமா ஒரு தினுசான வித்தை காட்டும் என்றால் அசர வைக்கும் வேறொரு பாடலான யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன என்பது கற்பனையான ஒரு சோகத்தைக் கேட்பவருள் உருவாக்கி அதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நிறைவுறும்
டி எம் சவுந்திரராஜனோடு இணைந்து பி பி எஸ் கொடுத்த அருமையான பாடல்களில், மறக்க முடியாதவை, பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை என்பது தனி ராகம். புல்லாங்குழல் இசையின் ஒத்த கதியில் மிகவும் அமைதியான பரஸ்பர காதல் பகிர்வின் இரண்டு வெவ்வேறு குரல்கள் கலந்து மிதக்கும் அந்தப் பாடலில், ஸ்ரீநிவாஸ் அழுத்தமான டி எம் எஸ் குரலினூடே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போல மென்சிதறலாய்த் தமது குரலைப் பொழிவார். அவள் பறந்து போனாளே பாடல் வேறொரு பாவத்தில் இதே இருவரின் குரல்களை இணைக்கும் பாடல். எம் எஸ் வி தேர்ச்சியான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கத்திய சூழலை மனத்திற்குள் படரவிடும் அழகே தனி.
தவப் புதல்வன் படத்தில், சிவாஜிக்காக உலகின் முதலிசை தமிழிசையே என்று டி எம் எஸ் பாடுவதற்குப் போட்டியாக, திக்குரிசி சுகுமாரன் நாயர் என்ற நடிகர் பாடுவதற்கு பி பி எஸ் பாடிய, சங்கீத குலோமினி பஹியாகே என்ற சங்கீதம் ருசியானது
என்ன சொன்னாலும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய தத்துவப் பாடல்களில், கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்றான காட்டு ரோஜாவில் வரும் எந்த ஊர் என்றவனே பாடல் ரசனைக்கு ஏற்ற சரக்கு. அதில் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்,
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்,
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்....
என்று ஓர் இழு இழுத்து ஒரு நொடி pause கொடுப்பார்....இசையி ன் அழகு, இடைக்கு நடுவே கடந்து போகும் ஓசையற்ற மவுன இடங்கள் என்பதன் இலக்கணம் அந்த இடம்...
'அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை' விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்?
கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.
இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை...இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற இரத்தினத்தை பி பி எஸ் வழங்கியது
மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்....கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டாலும் அவரது கவிதை ஒன்று தயாராக இருக்கும்....ஆங்கிலத்திலும் தமிழிலும் தம்மை சிறப்பித்த மனிதரின் பெயரில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து அத்தனை வரிகளில் ஒரு கவிதை எடுத்து விடுவார் அல்லது அந்த அமைப்பின் பெயரில்.! இந்தியன் வங்கியில் ஒரு பாடல் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டபோது வங்கியைப் பெருமைப் படுத்தி அப்படியான ஒரு கவிதையை வாசித்தார் அவர்.
தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.
அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்... .சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.
சில மாதங்களுக்குமுன் பாண்டி பஜாரில் ஓர் ஓட்டலில் இருந்து அவர் வெளியே வருவதைப் பார்த்தேன்...உடன் வந்த குடும்ப உறுப்பினர்களில் இளைய தலைமுறைக்கு அவர் பெயரைச் சொல்லத் தெரியாமல் திணறிய போது வருத்தமாக இருந்தது...அவரைத் தெரியும் என்றால் அருகே போய்ப் பேசுங்களேன் என்றார்கள். எனக்குத் தான் அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. .இந்த முதிய வயதில் அவர் தேடித் தேடி அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் அற்ப ரசனையுடன் குறுக்கிட எனக்கு தயக்கமாக இருந்தது....வழக்கமாக இத்தனை யோசிக்கவே மாட்டேன்.
அவரை இனி ஒரு போதும் அருகே சென்று பார்த்துப் பேசவோ அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று நடுங்கும் அவரது கைகளை எடுத்து எனது இதயப் பக்கத்தில் அழுத்தியவாறு பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று இன்று நினைக்கும்போது அன்றைய தயக்கம் இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது.....
வணக்கம் பி பி எஸ்.....எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் - தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என நீங்கள் ஒலித்த அத்தனை மொழிகளிலும்.....
*************************
நண்பர் திரு எஸ்.வி.வி. அவர்களின் மின்னஞ்சல்-
sv.venu@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------